அப்பாவும் சிவாஜிகணேசனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 11,927 
 

அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும். அப்பவெல்லாம் அரசாங்க பேருந்துகள் இல்லை.

மத்தியானம் ரெண்டு மணிக்கு வரும் அரசாங்க பெர்மிட் பெற்ற தொழிலாளர் கம்பெனி பஸ்ஸில் தான் அங்கிருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கு ஹிந்து பேப்பரே வரும். அதுவும் பல நாட்கள் கழுதை கட்டி மேடு வரை வந்து திரும்பிவிடும்.அங்க இருந்து ஐந்து மைல் மலைப்பாதையில் மேடுகளில் நடந்து அல்லது வாச்சர் கார்டுகளின் உதவியோடு சைக்கிளில் தான் வரவேண்டும்.

சுற்றியுள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட மலைக்கிராமங்ளுக்கு ஜமுனாமரத்தூர் தான் மையம். நெல்லையின் நெரிசலான ஊர்களில் இருந்து வந்த என் அப்பாவுக்கு அந்த இடத்தின் அமைதி ஆச்சரியத்தை தந்தது. வறண்டு காய்ந்து போன நிலங்களும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையே காணாத கரிசல் மண் பரப்புகளும், அந்த வறட்சியை இன்னும் அதிகரித்து காண்பிப்பது போல நிற்கும் பனை மரங்களும் தண்ணீருக்காக ஆற்று மணற்பரப்பில் ஊற்றுக்கள் தோண்டி நீண்ட கைப்பிடிகள் கொண்ட அகப்பைகளில் மண் நிறத்தில் இருக்கும் நீரைக் கோரி ஊற்றும் மக்களையுமே பார்த்த கண்களுக்கு எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்களும் புதர்களும் கொடிகளும் பறவைகளின் ஓசைகளும் பூச்சிகளின் ரீங்காரங்களும் நிறைந்து ,பகலில் கூட பனியின் மெல்லிய ஊதக்குளிர் வீச பெருங்காடுகளும் பள்ளத்தாக்குகளுமாய் படர்ந்திருந்த ஜவ்வாது மலையின் பேரெழில் அத்தனை மகிழ்வை அளித்தது.

திருநெல்வேலி தூய யோவான் கல்லூரியில் பட்டம் பெற்று வேலை தேடி இத்தனை தொலைவு வந்த துடிப்பான இளைஞனான என் தந்தையின் ஆசிரியப்பணிக்கு அன்றிருந்த ஜவ்வாது மலை மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.

“எந்த சின்ன நிகழ்வையும் சுவாரசியமா சிரிச்சிக்கிட்டே சொல்ல அப்பாவால மட்டுந்தான் முடியும். அந்நாட்களில் எங்க மலைக்கிராமங்களில் கொல்லி வேல, சிமிட்டி வேல செய்யும் வேலையாட்களுக்கு சாப்பாட்டு இடைவேளை, வேலை முடியற டைமெல்லாம் ரொம்ப கரெக்டா தெரியாது.“முல்லா புடிச்சிட்டாங்க மசான்(மச்சான்) ஒரு மணி ஆவிடுச்சு அப்பிடின்னு சொல்லுவாங்க. மசூதில பாங்கு சொல்றதைத்தான் அப்பிடி சொல்றது .முல்லா ஓதற அக்பரு அவருக்கு தோணற நேரத்துல குத்து மதிப்பா தான் ஓதுவாரு.

நான் நாலாங்கிளாஸ் படிக்கும்போது தான் எங்க ஊர் பஞ்சாயத்துல சங்கு ஊதற மெஷின் வந்துச்சு. காலையில எட்டு மணி,மதியம் ஒரு மணி, சாயந்தரம் ஆறு மணி என மூன்று முறை சங்கு ஊதுவார்கள்.

ஒருநாள் நாங்க டீச்சர்ஸ் குவார்ட்ஸில் இருந்தபோது “எட்டுமணி சங்கு ஊதியாச்சு கொழாவுல தண்ணி வரும்னு எல்லாம் அவசர அவசரமா கொடத்த தூக்கிட்டு போறதப் பாத்துட்டு “ஓஹோ சங்கு ஊதறத வச்சுதான் வேல செய்றீங்களா? அப்பவெல்லாம் நானும் பட்டரும் போடற குசு தான் இந்த ஊருக்கே சங்கு சத்தம்னு அப்பா சொன்னதைக் கேட்டு நாங்க எல்லாம் அந்த அவசரத்திலயும் அப்படி சிரிச்சோம். பட்டர் அப்பாவின் ஆத்மார்த்தமான சிநேகிதர்.அவர்கள் தோழமை பற்றி தனி அத்தியாயமே எழுதலாம்.அப்பாவுக்கு மாணவர்களால் வைக்கப்பட்ட மீசைக்கார வாத்தியார் பாட்டு வாத்தியார் பட்டங்களுடன் குசு வாத்தியார் என்பதும் ரகசிமாகப் புழங்கிய பட்டம்.

வேறு பெரிய பொழுதுபோக்குகள் இல்லாத மலைப்பகுதியில் அப்பா கூறிய கதைகளால் நிறைந்ததே எங்கள் சிறுவயது வாழ்வு. எண்ணும் போதே மனம் மலர்ந்து இனிமையைத் தரக்கூடிய நினைவுகள் தான் என்னளவில் அழகியவை. அப்படி எனக்கு பேரழகான உணர்வுகளைத் தருவது என் தந்தை மட்டுமே.

அந்நாளுல விருதுநகர் தூத்துக்குடின்னு பிரிக்கப்படாத ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்துல ஒரு காளி கோவிலில் சாமியாடியாக இருந்தவர் காளிமுத்து பூசாரி. அன்றைய மக்களைப் போலவே அவர்களின் தெய்வங்களும் எளிமையானவை. ஆண்டுக்கொரு முறை தரப்படும் கொடையில் தான் மாலைகளும் தோரணங்களும் அவைகளுக்கு கிடைக்கும். பெரிய வாழைக்குலைகளையும் முற்றிய நெத்து தேங்காய்களையும் அவை பார்ப்பதே விஷேஷங்களிலும் நேர்த்திக்காக யாராவது படைக்கையிலும் தான். பங்குனி மாதக் கொடையில் தான் அவை ஆட்டு ரத்தத்தையும் கோழிக்கறியையும் ருசிக்கும்.

அவ்வாறு பலி கொடுத்து இரத்தகாவு தருவது அந்த ஊரில் காளிமுத்து பூசாரி தான்..அம்மை வார்த்தவர்களுக்கும் காயல் கண்டவர்களுக்கும் பிசாசுகளைக்கண்டு பயந்தவர்களுக்கும் வேப்பிலை கொண்டு மந்தரிப்பதும் நாட்டு மருந்துகள் தருவதும் அவர் தான். நல்ல ஆறடி ஒசரமா கட்டுக் குடுமியும் பெரியமீசையும் நெத்தியில குங்குமப் பொட்டுமாக வாயில் சுருட்டோட அவர் நடந்து வருவதே சங்கிலிபூதத்தான் வர்ராப்புல தான் இருக்கும்.யாராயிருந்தாலும் கொஞ்சம் ஒதுங்கிக் தான் போவாங்க. அது போக பூசாரிக்கு நல்ல குரல் வேற.ராப்பொழுதுகளில் கொஞ்சம் சாராயம் உள்ள போனா போதும், நெறய பாட்டுங்கள சொந்தமா இட்டுக்கட்டி அற்புதமா பாடுவாரு. காளி கோயில் திருநாவுல பத்துநா அரிச்சந்திரன் கூத்து நடக்கும். அதுல மயானத்துல உக்காந்து “ஏ சொடல மாடா உனக்கு இரக்கமில்லியோ “அப்பிடின்னு அவர் வேசங்கட்டி ஆடிப்பாடறது பக்கத்து ஊர் வரைக்கும் கேக்கும்.அவருக்கு அந்த கால வழக்கப்படி நெறய பசங்க இருந்தாங்க. பொட்டப் பிள்ளைங்கள தாயின்னு தான் கூப்பிடுவாரு.சந்தைக்கு போகயில ஆம்பளப் புள்ளைங்க ரெண்டு பேத்தை தோளில் உக்கார வச்சிகிட்டு சாதாரணமா பத்து மைல் நடப்பாரு. என்ன பெத்தாருன்னு கொஞ்சிகிட்டே கெடப்பாரு.எத்தன பாசமானவரோ அதே அளவு கோவமும் அவர்கிட்ட இருந்துச்சி.

ஊர் பெரிய மனுசங்க சொக்காருங்க எல்லாமே அவர்கிட்ட ஏ காளி உங்கோவத்த கொறச்சிக்கோடா நல்லதில்லன்னு அடிக்கடி சொல்வாங்க. அந்த வருசம் பங்குனி தேர் இழுக்கறதுல மேலத்தெருவுக்கும் கீழத்தெருவுக்கும் பெரிய தகராறு. இவங்க தெருவுக்கு தேர் வராதுன்னு சொல்றாங்க. சண்டயில கையில் வீச்சறுவா வச்சிகிட்டு காளிமுத்து பூசாரி முன்னாடி நிக்கறாரு. அப்ப ஒருத்தன் கெட்ட வார்த்தை சொல்லி இவர வஞ்சான். காளி பூசாரிக்கு எங்க இருந்து அந்த ஆவேசம் வந்துச்சோ அவனை அப்புடியே அமுக்கி ஆட்ட அறுக்கற மாறி கழுத்தை கறகறன்னு அறுத்து ரத்தத்த வாயில் விட்டுக்கிடாரு. அது வெள்ளைக்காரன் காலம். இவர புடிச்சி செயிலுல போட்டுட்டாங்க.ஊரே கலவரத்துல செதறிடுச்சி.

அந்த நேரத்துல அங்க வெள்ளைக்கார மிஷனெரிமாருங்க வந்து சாதிக் கலவரத்துல வீடு பொருளை இழந்தவங்களுக்கு ரொட்டி துணிமணி மருந்துங்க எல்லாம் கொடுத்தாங்க. ஜரோப்பாவிலிருந்து வந்திருந்த ரெவரண்ட் பிஷப் ஸ்டீபன் நீல் அப்பிடின்னு ஒரு வெள்ளைக்கார தொரை அங்க அழுதுகிட்டே நின்னுகிட்டு இருந்த காளிமுத்து பூசாரியின் அஞ்சு வயசு மகன் ஞானமுத்துவைப் பார்த்தார். அடர்ந்த குடுமியும் மருண்ட கண்களுமாய் அக்குழந்தையின் வெள்ளந்தியான தோற்றம் அவரை ஈர்த்தது. உறவினர்களிடம் விசாரித்து அவனை தன்னுடன் பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து விட்டார். மிஷன் ஸ்கூலில் சேர்த்து சொந்த மகனைப் போல படிக்க வைத்தார். ஞானமுத்துவுக்கு அவன் தகப்பனாரின் அநேக குணங்கள் இருந்தன. அவனை கண்டிக்கும் வாத்திமார்களிடம் கோபப்பட்டு எகிறுவான். மிஷன் விடுதி கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அடிக்கடி தப்பி தன் ஊருக்கு ஓடிவிடுவான். ஆனாலும் பிஷப் நீல் என்ற அந்த ஜரோப்பிய ஆயர் அவனை நேசித்து அழைத்து வந்து அவனை ஐந்தாம் பாரம் வரை படிக்க வைத்து ஹையர் கிரேட் வாத்தியாராக உருவாக்கினார். டீச்சர்ஸ் டிரைனிங் படித்து மிஷன் பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கர்த்தருக்கு பயந்த பக்தியான ஒரு பெண்ணையும் மணமுடித்து வைத்தார்..ஞானமுத்து உபதேசியாரும் எஸ்தரம்மாவும் ஆசிரியர்கள் மட்டுமல்ல‌. ஆண்டவரின் ஊழியக்காரர்களாகவும் இருந்தனர். குருவார்பட்டி நாகலாபுரம் என்று பல ஊர்களில் உள்ள கிறித்தவ ஆலயங்களில் எங்க தாத்தா ஞானமுத்து உபதேசியார் பிரசங்கம் செய்வார். அவர் தன்னுடைய பிள்ளைகளுக்கெல்லாம் தன்னை எடுத்து வளர்த்த குருவானவர், தன்னுடைய ஆசிரியர்கள், பேராயத்தின் மிஷனரிமார்கள் பெயர்களை சூட்டினார்.அக்கால முறைப்படி அது ஒரு மரியாதை, அன்பு, நன்றி செலுத்தும் முறைமை. அப்படித்தான் அவர்களின் மூன்றாவது மகனான எங்கள் தந்தைக்கு பிரின்ஸ் நீல் என்று பெயரிடப்பட்டது.

அவர்கள் குடும்பத்தில் முதன்முறையாக கல்லூரிக்கு சென்றது பிரின்ஸ் தான். பைபிளைத் தவிர வேறெந்த புத்தகமும் வாசிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தவன். கதைப்புத்தகங்கள் வாசிப்பதும் சினிமா பார்ப்பதும் மிகப்பெரிய பாவங்களாக திருச்சபைகளில் கூறப்பட்ட சூழலில் இருந்தவனுக்கு நெல்லை செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி வேறோரு உலகத்தை அறிமுகப்படுத்தியது. இயல்பாகவே நல்ல ரசனை கொண்ட இளைஞனான அவன் கவிதைகளிலும் இலக்கியங்களிலும் ஆர்வங்கொண்டான்.அன்றிருந்த திராவிட இயக்க அலையும் அதற்கு உறுதுணையானது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றான்.அன்று வளர்ந்து கொண்டிருந்த பட்டிமன்ற பேச்சாளர்களுடன் சாலமன் பாப்பையா குன்றக்குடி மடாதிபதிகள் தலைமையில் பல பட்டிமன்றங்களில் பேசினான். அன்றைய டிரெண்ட் படி நெல்லை ஞா இளவரசு என்று பெயரை தமிழ்படுத்தி மாதிதா இந்துக்கல்லூரியிலும் பல்கலைக்கழக அளவிலும் நடந்த பல கவியரங்கங்களில் கலந்து கொண்டான். பாரதி ஷெல்லி கீட்ஸ் கம்பன் எனக் கவிதைகளில் கரைந்தான். தாவரவியல் மாணவனாக இருந்தாலும் ஷேக்ஸ்பியரையும் கம்பனையும் முழுமையாக கற்றான். புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் வாசித்து நவீன இலக்கியத்திற்குள் நுழைந்தான். அதே போன்று சிவாஜிகணேசனின் பெரும் ரசிகனானான். ஹேர் ஸ்டைல், ஆடைகள் என்பதிலெல்லாம் ஆர்வங்கொண்ட பிரின்சுக்கு சிவாஜி ஓர் ஆதர்சம்.மிகச்சிறந்த பாடகனான அவனுக்கு அன்றைய டிஎம்எஸ் குரல் அப்படியே இருந்தது. டிகிரி முடித்து பிறகு தன் தாயின் விருப்பப்படியே பிஎட் படித்தான்.

அந்தக்கால கட்டத்தில் நெல்லை டையோசிஸ் பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அறச்சீற்றமும் கோபமும் அந்த குடும்பத்தின் இயல்புகள். வேலையில்லா மன விரக்தியில் அவன் தன் சர்ட்டிபிகேட்டை எடுத்துக் கொண்டு வீட்டில் யாருக்கும் சொல்லாமல் தன் கல்லூரி நண்பனான ராஜ்குமாரைத் தேடி அப்போதைய வடஆற்காடு மாவட்டம் ராணிப்பேட்டைக்கு வந்துவிட்டான்.

வேலூர் சாயிநாதபுரத்தில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நண்பர்கள் இருவரும் அலைந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாள் காலையிலும் வேலூரின் புகழ்பெற்ற பேலஸ் கஃபேயில் சாப்பிடும் இரண்டு இட்லிகளும் ஒரு வாளி சாம்பாரும் தான் அவர்களுக்கு முழு நாளுக்குமான உணவு.

அப்போது வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் வட ஆற்காடு மாவட்ட வனத்துறை அலுவலகமும் இருந்தது. தினமும் அங்கு வரும் இவர்களைப் பார்த்து விசாரித்த வனத்துறையில் டிஎப்ஓவாக இருந்த திரு.நாச்சிமுத்து ஐஎப்எஸ் அவர்கள் பிரின்ஸை ஜவ்வாது மலையிலுள்ள காட்டிலாக்கா பள்ளிக்கு வேலைக்கு வருகிறாயா என்று கேட்டார்.அன்றைய மனநிலையில் ஆப்பிரிக்காவில் வேலை தந்தாலும் கும்பிடு போட்டு செல்வதற்கு அவன் தயாராக இருந்தான்.

மறுநாள் அவருடன் ஜீப்பில் மலைக்கு சென்று விட்டான். தன் வாழ்நாளின் இறுதி வரையிலும் தனக்கு வேலை கொடுத்த அந்த அதிகாரியை தன் தெய்வமாக எண்ணினான். ஊழலும் சோம்பலும் நிறைந்த வனத்துறையில் மிகவும் அரிதாக நேர்மையான அதிகாரியாக இருந்த அவருக்கு நல்லவர் நாச்சிமுத்து என்பது அடைமொழி.

இத்தனை இடர்களைத் தாண்டி அரசாங்க வேலையினை பெற்ற பிரின்ஸ் அப்பணியினை முழு அர்ப்பணிப்புடன் செய்தான்.அம்மலை மக்களுக்கு உண்மையாக உழைத்தான். அவனுக்கு கிடைத்த தனித்துவம் என்பது அவன் நேரடியாக பொறுப்புத் தலைமை ஆசிரியராக ஜமுனாமரத்தூர் வனத்துறை உயர்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தது. அவன் எவரின் தலைமையின் கீழும் பணியாற்றவில்லை.

இந்தக் கதைகளையெல்லாம் தன் பிள்ளைகளான எங்களுக்கு அப்பா அத்தனை அருமையாக சொல்வாங்க.

சிவாஜி எம்ஜிஆர் காலகட்ட தமிழ் சினிமாவில் சமத்துவம் இலட்சியம் நியாயத்திற்கு போராடும் கதாநாயகன், அம்மாவின் மீதும் உறவுகள் மீதும் பாசங்கொண்ட கதாபாத்திரங்கள் என்றே இருந்தனர்.விடுதலைக்கு பின்னான அக்காலகட்டமே இலட்சியவாதம் மிக்க இளைஞர்களைக் கொண்டது தான்.

அதேபோல கோபமும் பெருந்தன்மையும், நண்பர்களையும் உறவுகளையும் உண்மையாக நேசிக்கும் இயல்பும் கொண்டவராக அப்பா இருந்தார்.

அப்பாவுக்கு நல்ல சுருள் முடி . எம்ஜிஆர் சிவாஜி மாதிரி மே முன்பக்கம் குருவிக்கூடு போல உயர்த்தி தலையை சீவியிருப்பார். சிவாஜி போல பெரிய மயக்கும் கண்கள். பெரிய மீசை வைத்திருப்பார். எப்பவும் இன் பண்ணி பெல்ட் போட்டு ஷூ அணிந்திருப்பார். பின்னர் தொப்பை கூடிய காலங்களில் புல் கோட் சூட் அல்லது சபாரி சூட் அணிந்திருப்பார். நல்ல ஓங்குதாங்கான உருவத்தில் சபாரி உடையில் பெரிய மீசையுடன் இருக்கும் அவரைப் பார்க்கும் எவருமே பெரிய போலீஸ் அதிகாரி என்றுதான் நினைப்பார்கள். இரயில் பயணங்களிலும் பொது இடங்களிலும் எல்லா செக்யூரிட்டியும் நிறைய போலீஸ்காரர்களும் அவருக்கு சல்யூட் அடிப்பார்கள்.

அவருக்கும் சிவாஜிக்கும் உருவ ஒற்றுமை மட்டுமல்ல அப்பாவின் பல குணங்களே சிவாஜி நடித்த கதாபாத்திரங்கள் போன்றவையே.

“பூமணம் கொண்டவள் பால் மணம் கொண்டாள் பொங்கிடும் தாய்மையின் சேயுடன் நின்றாள்” என்று ஜாய்ஸ் அத்தையை நினைத்து பாடுவார்.

அச்சிறிய மலைக்கிராமப்பள்ளி ஆண்டு விழாவில் சிவாஜியின் தாக்கத்தால் ஒத்தல்லோ வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்களையெல்லாம் மாணவர்களை வைத்து நடிக்க வைத்தார்.பசுமை நிறைந்த நினைவுகளே பாடலை ஒவ்வொரு பேட்ச் எஸ்எஸ்எல்சி மாணவர்கள் பிரிவு உபச்சார விழாவிலும் உணர்ச்சிகரமாகப் பாடுவார்.

திங்கள் கிழமைகளில் பள்ளிக்கு கொடியேற்ற வொயிட் அண்ட் ஒயிட் பேண்ட்டில் கருப்பு பெல்ட் அணிந்தோ அல்லது கோட் அணிந்தோ தான் வருவார். பள்ளியின் இறைவணக்க கூட்யங்களிலும் விழாக்களிலும் அப்பாவின் மேடை பேச்சுக்களுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. கணீர்க் குரலில் உணர்ச்சிகரமாக அக்கால வைகோவைப் போல, இன்றைய சீமானைப் போல பேசுவார்.பாரதியின் பாடல்களை அற்புதமாக பாடுவார்.

பள்ளிப் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளையும் முற்போக்கு எண்ணங்களும் தைரியமும் கொண்டவர்களாக வளர வழிநடத்தினார். அந்த சிறு மலைப்பகுதியில் வளர்ந்த போதிலும் எண்பதுகளிலே எங்களுக்கு வண்டி ஓட்டவும் சிறு சிறு மெக்கானிக் வேலைகள் மின்சார ரிப்பேர் எல்லாம் சொல்லித் தந்திருக்கிறார். ஜீன்ஸ் மிடி என மாடர்னாக உடுத்தச் சொல்வார். எங்களது இலட்சியங்கள் கனவுகள் எல்லாமே உயர்ந்த அறிவார்ந்தவையாக இருக்க வழிகாட்டினார்.

ஜெயகாந்தனுக்கு வாசகனாக கடிதங்கள் எழுதி அறிமுகமாகி பின்னர் அவரது நெருங்கிய சஹ்ஹிருதயர்களில் ஒருவரானார்.ஸ்டைலாக ஜேகேவைப் போல சிவாஜி கணைசனைப் போல பைப் பிடிப்பார்.

சிவாஜியைப் போல குழந்தைகளை குடும்பத்தை நேசித்தார்.எங்களையெல்லாம் ஆறாம் வகுப்பு படிக்கிற வயது வரையிலும் கையில் தூக்கிக்கொண்டு டண்டண்டப்பு ஆடுவார். பல ஆண்டுகள் புதூர் நாடு என்ற மற்றொரு மலையில் பணிபுரிந்தார்.திங்கட்கிழமை காலையில் சென்று வெள்ளி மாலைதான் வருவார்.

எங்கள் வீட்டில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நடக்கவும் வாய் பேசவும் இயலாமல் எங்கள் மூத்த சகோதரன் ஸ்பென்சர் இருந்தான்.மிகுந்த கடவுள் பக்தி கொண்ட என் பெற்றோர் அவன் என்றாவது ஒருநாள் எழுந்து நடந்துவிடுவான் என்றே உளமாற நம்பினர்.

வெள்ளி மாலையில் அப்பாவின் வருகையை எதிர்பார்த்து நாங்கள் காத்திருப்போம்.எங்க டீச்சர்ஸ் குவார்ட்டர்ஸ் பகுதியிலிருந்து சற்றே உயர்ந்த மேற்குப் பகுதியான யூகாலிப்டஸ் மரக் கூப்பைத் தாண்டி அவரது புல்லட் வரும் போதே வீட்டில் சத்தம் கேட்டுவிடும்.

“கேதுரு மரங்களையும் லீபனோனின் மலர்களையும் அவர் சத்தம் பிளக்கிறது “என்று அப்பா சத்தமாக பாடிக்கொண்டே தான் வண்டி ஓட்டி வருவார்.அந்த வண்டி சத்தத்தையும் பாடலையும் கேட்டு ஸ்பென்சர் படுக்கையிலே துள்ளி குதித்துச் சிரிப்பான்.அவர் வந்து ஸ்பென்சர் ராஜா என்று அவனை அழைக்கும் குரலையும் அத்தகப்பனின் வருகைக்கு அவன் தரும் உற்சாக சத்தத்தையும் பார்க்கையில் எவருக்குமே உலகின் அத்தனை தெய்வங்களையும் கூப்பிட்டு “ஏ கடவுள்களே இத்தனை அன்புகொண்ட இந்த குடும்பத்தில் போய் இப்படி ஒரு கொடுமையைச் செய்யறீங்களே “ என்றே முறையிடத் தோன்றும். நடக்க இயலா தன் மூத்த மகனை எண்ணி சோகமான பழைய கிறித்தவ பாடல்களையும் சினிமாப் பாடல்களையும் பாடுவார்.ஸ்பென்சர் படுத்த பிறகு பிறந்த எங்க சின்ன தம்பியை கடவுள் தமக்கீந்த பெரும் வரமாகவே என் பெற்றோர் கருதினர். அப்பா அவனை குட்டி அரசர் என்றே கூப்பிடுவார்.

“சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்” பாடலை ஸ்பென்சரையும் குட்டி அரசரையும் எண்ணி அப்பா பாடும்போது கேட்கும் எவருக்குமே கணகலங்கும்.

“முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம். ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்”

பாழும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால் நீந்துவதால் பயனேது” போன்ற பாடல்களையெலாலாம் தன் மூத்த மகனை எண்ணி கண்ணீர் விட்டு அவர் பாடுகையில் ஜாஞ்சகஸ் எனும் திருவாசகம் மணக்கும்.

கடவுள் வாழ்வில் எத்தனை துன்பங்களைத் தந்தாலும் எங்களையெல்லாம் இளவரசர்களாகவும் மகாராணிகளாகவுமே எண்ணி வளர்த்தார்.

அப்பாவுக்கு சில பலவீனங்களும் பழக்கங்களும் உண்டு.அதனால் என்ன? எந்த கெட்ட பழக்கங்களுமற்று வஞ்சகங்களும் , மிக அற்ப மனங்களும் கொண்ட எத்தனையோ பேர் அப்பாவின் காலடிக்கு இணையாக மாட்டார்கள்.

உயர்ந்த உள்ளத்தையும் கபடமற்ற நேசத்தையும் கொண்ட தந்தையின் பேரன்பில் வளர்ந்த எங்களுக்குத்தான் அந்த அருமை தெரியும்.

பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும்

“சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்ந்த கதை சொல்லவா”

“மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி முல்லை மல்லிகை மெத்தையிட்டு”

“பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்”

என்றெல்லாம் தாலாட்டி வளர்த்த அந்த பாசத்தைப் போல உலகில் எதுவுமில்லை.

சிவாஜியின் நடிப்பின் மீது அப்பாவிற்கு அத்தனை ஈடுபாடு.சிந்து நதியின் மிசை நிலவினிலே என்று தலைப்பா கட்டிக்கொண்டு அப்பா கண்களை உருட்டி பாடினால் அச்சாக சிவாஜியைப் பார்க்கலாம்.

எங்கே நிம்மதி பாடலில் திரும்பி நடக்கும் சிவாஜியைப் பார்த்து அப்பா, சிவாஜிக்கு நல்ல மாம்பழக்குண்டி என்பார்.நாங்களெல்லாம் அப்படி சிரிப்போம்.அதிலிருந்து எங்கள் வீட்டில் சிவாஜிக்கு மாம்பழம் என்றே பெயராகி விட்டது. மாம்பழம் நடிப்பை பிழியறாறு பாரு என்று சிரிப்போம்.

அப்பாவும் சிவாஜியைப் போல ஒவ்வொரு வயதில் ஒரு தோற்றத்தில் இருந்தார். ஆனால் எல்லா வயதிலும் அந்த கம்பீரம் அப்படியே இருந்தது. ஒரு சுதந்திர தினத்திற்கு வசந்த மாளிகையில் வரும் சிவாஜியைப் போல வெள்ளை ஜிப்பாவில் கழுத்தில் எம்ப்ராய்டரி போட்ட சட்டையை அப்பா தைத்து போட்டிருந்தார். நான் பேச நினைப்பதெல்லாம் பாட்டில் வருவதைப் போன்ற தொப்பியை போடுவார். உள்ளே இருக்கும் பனியன் தெரிவது போன்ற ட்ரான்ஸபரண்ட் ஸ்லாக் சட்டைகளை சிவாஜி போலவே அணிவார்.திடீரென சிக்கல் சண்முக சுந்தரமாக பட்டு வேட்டி சட்டையில் தோளில் துண்டுடன் போவார். தான் அணிவதைப் போலவே ஜிப்பா சபாரி கோட் என் தம்பி குட்டி அரசுவுக்கும் எடுப்பார்.அது சாதாரணமானது தான்.ஆனால் படுக்கையில் இருக்கும் ஸ்பென்சருக்கும் அதே போன்று உடைகளை எடுப்பார்.அதுதான் அப்பா.

எம்ஜிஆருக்கு நடிக்கவே வராது என்பது அப்பாவின் வாதம்.

“ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வோரு நாளும் துயரம்”

என்று பாடும்போது எம்ஜிஆருக்கு சோகமே வராது என்பார்.ஆனால் அப்பாவுக்கு எம்ஜிஆர் பாடல்கள் மீது தனி ஈர்ப்பு உண்டு.

ஒருமுறை வனத்துறையில் அவருக்கு கட்டாய டிரான்ஸ்ஃபர் தந்தபோது “ எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என அப்பா குடித்துவிட்டு இரவெல்லாம் பாடவும், அந்த கும்பல் போய் டிஎப் ஓவிடம் இவர் சாட்டையால் தங்களை அடிக்கப்போவதாக கம்ப்ளயிண்ட் பண்ண கூத்தெல்லாம் நடந்திருக்கிறது.ஆனால் அதையெல்லாமே அவர் காமெடியாகத்தான் டீல் பண்ணுவார்.

“அதோ அந்த பறவை போல”

“அச்சம் என்பது மடமையடா”

என பல பாடல்களை அருமையாக பாடுவார்.

அப்பாக்களின் ரசனைக்கு எதிர்ப்பாகவே பிள்ளைகள் இருப்பார்கள் என்பதற்கு நானே அடையாளம்.நான் சின்ன பிள்ளையில் இருந்தே தீவிர எம்ஜிஆர் ரசிகை. அதற்கு காரணங்களே தேவைப்படவில்லை.

மாறாக சிவாஜி படங்களை விலக்க காரணங்கள் இருந்தன.எங்க ஊர் ஜமுனாமரத்தூர் டெண்ட் கொட்டாயில் நிறைய பழைய படங்கள் போடுவார்கள். நான் அங்கு முதலில் பார்த்தவை சிவாஜியின் கர்ணகொடூரமான ராஜரிஷி திரிசூலம் தராசு பந்தம் போன்ற படங்களையே. பெரிய தொப்பையுடன் சிவாஜி கண்களை உருட்டி கன்னச்சதை அசைய உதடுகள் துடிக்க பேசும் வசனங்களைப் பார்த்தாலே எட்டு அல்லது ஒன்பது வயதில் எனக்கு பயமாக இருக்கும்.

ஆனால் கருப்பு வெள்ளையில் காதில் குண்டலங்கள் அசைய “கனியக் கனிய மழலை பேசும் கண்மணி” என்றோ நல்ல கிளிபச்சை கலர் சட்டை போட்டு “பூமழைத்தூவி வசந்தங்கள் வாழ்த்த “என்றோ, எம்ஜிஆர் எப்படி பாடினாலும் எனக்கு பிடிக்கும்.

அப்பா எங்களுக்கு சிவாஜியின் நடிப்பை காட்ட வேண்டும் என்று விசிஆரில் வசந்த மாளிகை பாசமலர் பாகப்பிரிவினை போன்ற கேசட்டுகள் வாங்கி போட்டு காட்டுவார். ஆனாலும் “யாருக்காக இது யாருக்காக என்று சிவாஜி கூப்பாடு போடுவதையெல்லாம் அப்பவே எஸ்எஸ்.சந்திரன் போன்றவர்கள் கிண்டலடித்து விட்டதால் நானெல்லாம் அந்த படத்தை பார்த்து சிரிக்கத் தான் செய்தேன்.

அப்பாவிற்கு சிவாஜியின் நடிப்பும் எம்ஜிஆரின் பாடல்களும் பிடிக்கும்.

எனக்கு எம்ஜிஆரின் நடிப்பும் அதே வேளையில் சிவாஜியின் பாடல்களும் பிடிக்கும். சின்ன பிள்ளையில் தான் அப்படி என்றில்லை. நாற்பது வயதிற்கு பிறகும் கூட சிவாஜி ஸ்டைலாக நடக்கும் எஸ்.பி.சௌத்ரி, பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் சிகரெட் பிடிப்பது மதுக்கோப்பையை கையில ஏந்துவது ராஜபார்ட் ரங்கதுரையாக என மிகச்சில படங்கள் மட்டுமே பிடிக்கும்.மற்றபடி சிவாஜி நடிப்பில் பிழிவதெல்லாம் எனக்கு அலர்ஜி.

ஏபி நாகராஜன், பீம்சிங் கேஎஸ்ஜி பந்துலு பாலச்சந்தர் என அத்தனை இயக்குநர்களைப் பற்றியும் எம்எஸ்வி கண்ணதாசன் வாலி பட்டுக்கோட்டை எஸ்.வி.ரங்காராவ்,வி.நாகையா. ஒளிப்பதிவாளர் கர்ணன் என தமிழ் சினிமாவைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசுவார். எனக்கெல்லாம் சினிமா பற்றிய அறிவு அப்பா தந்தது தான்.

“கட்டளையா தந்தையே கரைகாண முட்யாத தங்கள் ஆசைக்கு”

“வானம் பொழிகிறது” வசனங்களைப் யெல்லாம் குரல் ஏற்றத்தாழ்வுகளுடன் அற்புதமாக பேசிக்காட்டுவார்.

அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்” பாடலை அப்படியே சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடுவார்.

அதேபோல அப்பாவும் நானும் எம்.எஸ்.விஸ்வநாதனிடமிருந்நு நேரடியாக ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு வந்தவர்கள். நடுவில் பல ஆண்டுகள் அப்பா சினிமா பார்ப்பதையே விட்டுவிட்டார்.ஆகவே நான் கல்லூரிக்கு வந்தவுடன் என்னுடன் சேர்ந்து விஜய் அஜித் கவுண்டமணி வடிவேலு என்று மாறிவிட்டார். அத்தனை மாடர்னாக அப்பா அவர்.

“சமரசம் உலாவும் இடமே “ பாடலை ரசித்தவர் எங்களுடன் சேர்ந்து

“சின்ன சின்ன ஆசை”

“யார் சொல்வதோ யார் சொல்வதோ”

“வெண்ணிலவே வெண்ணிலவே”

“விண்ணைத்தாண்டி வருவாயோ”

என்று ரசித்தார்.

“டே தகப்பா” என்றே நாங்கெல்லாம் கூப்பிட வேண்டுமென ஆசைப்படுவார்.

சிவாஜியின் திரைப்படங்களில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் துரோகம் செய்வார்கள் காதலிகள் ஏமாற்றி விட்டு சென்று விடுவர் சொந்த பிள்ளைகளே ஊதாரியாகச் சுற்றுவார்கள் . அவரோ எல்லோர் மீதும் பாசத்தை பொழிவார். தன் கொள்கைக்காக உயர் அதிகாரிகள் தொடங்கி உறவுகள் வரை பக்கம் பக்கமாக வசனம் பேசுவார். அவரை எல்லாரும் கைவிட்டுக் கதற வைப்பார்கள். அவரும் தோளில் சால்வையைப் போட்டுக்கொண்டு சோகமா பாட்டு பாடி, சிவப்பு மசியைத் துப்பி செத்துப் போவார்.

எங்க அப்பாவின் வாழ்வும் அது போன்றதே. அத்தனை சிறந்த ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்தாலும் கூட அவருக்கு அநேக சத்துருக்கள் இருந்தனர். அவரைப் பற்றி மொட்டை பெட்டிஷன் எழுதிய அனைவருமே அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தாம். உறவுகளில் அவரைப்பற்றி புறணி பேசாத எவரையும் நான் கண்டதில்லை. எத்தனையோ பேர் பல ஆயிரம் பணத்தை ஏமாற்றி இருக்கிறார்கள். வாங்கிய நிலத்தை ஏமாற்றி இருக்கிறார்கள். எவருக்கும் இரங்கும் அவரது கவியுள்ளத்தை கேலி செய்திருக்கிறார்கள்.அவரின் பக்கத்தில் நிற்கக்கூட அருகதை அற்றவன்களெல்லாம் சொத்து சேர்ப்பதைப் பற்றி பேசி அவரிட்ம் கெட்ட வார்த்தைகளில் ஏச்சு வாங்கியிருகிறான்கள்.

பிள்ளைகள் அனைவருமே நன்றாகப் படித்தும் எவரும் பெரிய வேலைகளில் இல்லை. பெண்மக்களை மருத்துவர்களாகவும் பிள்ளையை பெரிய அரசாங்க அதிகாரியாகவும் பார்க்க ஆசைப்பட்டார். அவரது மனதை நாங்கள் காயப்படுத்தினோம் என்பதே நிஜம். என் தந்தை மிகப்பெரிய கெசட்டட் ஆபீசராக பெரும் ஆளுமையாகப் பணியாற்றிய பள்ளிக்கல்வித் துறையிலேயே நான் ஒரு சிறு பணியில் இருக்கிறேன். ஆனாலும் அதையும் கடவுளின் சித்தம் என்றே சொல்வார். கொடுக்கப்பட்ட சிறு தாலந்திற்கும் உண்மையாக உழைக்க வேண்டும் என்ற விவிலிய வாசகங்களை எனக்குச் சொல்வார். அந்த நேர்மறையான சிந்தனை தான் அப்பா. எந்த சூழலிலும் மகிழ்வாகச் சிரித்து கொண்டே தான் இருப்பார்.

ஜவ்வாது மலையின் பட்டரைக்காடு காட்டில் ஒரு மேட்டிலிருந்து பார்த்தால் திருவண்ணாமலை தீபம் தெரியும். அப்பா எங்களை சின்ன பிள்ளையில் அங்கு கூட்டிச்சென்று தீபத்தை காண்பித்து அண்ணாமலையாருக்கு அரோகரா என்று வணங்குவார். அப்பாவிற்கு தெய்வங்களில் வேறுபாடெல்லாம் கிடையாது.

“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக கிடைக்கும். கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவு படாது”என்று பைபிள் வசனம் சொல்லி ஜெபித்து ஆமென் சொல்லிவிட்டு தன் குருநாதர் ஜெயகாந்தனைப் போல இன்ஷா அல்லாஹ் என்பார்.

“தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை” என்ற பார் மகளே பார் பாடலை அப்பா சிவாஜி போலவே உணர்ச்சி பொங்க பாடுவார்.

அதே போலவே உடல் நலமின்றி எங்கள் தாயார் மறைந்த ஆறு மாதங்களில் அவளுக்கு பிறகு நான் எதற்கு? என்று வலுக்கட்டாயமாக மரணத்தை வரவேற்று, தன் இஷ்ட தெய்வங்களில் ஒருவரான அண்ணாமலையாரின் கார்த்திகை தீபத் திருநாளில் தன் செல்ல மகன் குட்டி அரசுவின் கைகளிலேயே உயிரை விட்டார்.

எந்த சிவாஜியை வாழ்நாளெல்லாம் நான் கிண்டலடித்துக் கொண்டிருந்தேனோ அவரின் பாடல்களையும் வசனங்களையுமே அப்பா இறந்த நாளிலிருந்து தேடித்தேடி பார்த்து கொண்டிருக்கிறேன். அவரும் பிரின்ஸ் நீலாக மாறி என்னுடன் சேர்ந்து “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே” என்று உணர்ச்சிகரமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *