கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 11,877 
 

காலை மணி 8.05

“நான் என்ன வேணும்னேவா வர மாட்டேன்னு சொல்றேன், மீட்டிங் இருக்கும்மா புரிஞ்சுக்கோ”

“என்னைக்கு இல்லைன்னு சொல்லுங்க பார்க்கலாம், எப்போ கேட்டாலும் இதே பதில்தான். நான் என்ன தினமுமா சீக்கிரம் வர சொல்றேன், வருஷத்துக்கு ஒரு நாள், அதுவும் கல்யாண நாள் அப்படிங்கறதால, அன்னைக்கு கூட லீவ் போட முடியாதுன்னு சொன்னா என்ன பண்ண”

“மறுபடியும் மறுபடியும் சொன்னதையே சொல்லி ஆபீஸ் கிளம்பும்போது எரிச்சல் கிளப்பாத சத்யா, ஒரு வாட்டி சொன்னா புரிஞ்சுக்கோ. இன்னைக்கு Client Meeting இருக்கு, கட்டாயமா வர முடியாது”, உச்ச பட்ச கோவத்தில் சத்யாவும், மகேஷும் சண்டை இட்டு கொண்டிருந்தார்கள்.

“ஓகே விடுங்க, நீங்க என்னைக்கு நான் ஒண்ணு கேட்டு உடனே ஓகே சொல்லி இருக்கீங்க. இப்போ டிபன் சாப்பிட வாங்க. நான் சாயங்காலம் அம்மா வீட்டுக்கு போயிட்டு அப்படியே கோவிலுக்கு போயிட்டு வரேன். நீங்க டின்னர் சாப்பிட வருவீங்கன்னா முன்னாடியே சொல்லுங்க, அதுக்கேத்தாமாதிரி நான் டைம் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்”

“டின்னர் வீட்டுலதான், ஆனா எத்தனை மணின்னுதான் தெரியாது. நான் ஆபீஸ்ல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி உனக்கு போன் பண்றேன். நீ எதுவும் சமைக்க வேண்டாம், நான் வரும்போது வாங்கிட்டு வந்துடறேன். உன்னோட பிளான்படி நீ ப்ரோசீட் பண்ணிக்கோ. சாரிம்மா, இது ஏற்கனவே schedule பண்ணின மீட்டிங், கான்செல் பண்ண முடியாது. உடனே நமக்கு இன்னைக்குத்தான் கல்யாண நாள் அப்படிங்கறது முன்னாடியே தெரியாதான்னு ஆரம்பிக்காத, நிஜம்மாவே மறந்து போச்சு”, சத்யாவின் முறைப்பை பொருட்படுத்தாது, செய்த தவறை முழுமையாக ஒத்துக்கொண்டு சரணாகதி அடைந்தான் மகேஷ்

காலை மணி 8.15

“அபு எல்லா டாகுமென்ட்சும் எடுத்து வச்சுக்கிட்டியா. உனக்கே தெரியும் உன்னை படிக்க வைக்க அப்பா எத்தனை கஷ்ட பட்டிருக்கேன்னு. திரும்பி திரும்பி சொல்றேன்னு நினைக்காத. இந்த வேலைலயானும் நிலைச்சு இருக்க பாருப்பா. உனக்கு கீழ ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு அடுத்து கல்யாணத்துக்கு சேக்கணும். “, ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலை மாறும் தன் மகனிடம் ஆற்றாமையில் பொரிந்து கொண்டிருந்தார் அபுவின் அப்பா

“இல்லப்பா கவலை படாதீங்க, இந்த முறை கண்டிப்பா வேலையை விட மாட்டேன். எத்தனை கஷ்டம் வந்தாலும் சமாளிக்க பார்க்கிறேன்”, எப்பொழுதும் செய்யும் சமாதானத்தை இம்மி பிசகாமல் இம்முறையும் செய்தான் அபு. பேசிய பிறகு அங்கு நின்றால் அடுத்து அம்மா வந்து ஆரம்பிப்பார் என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டு புதிய வேலைக்கு கிளம்பினான் அபு.

“என்னப்பா அண்ணன் எங்க, நான் அவனுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லணும்.”, என்று கேட்டபடியே குளியறையிலிருந்து வெளியே வந்தாள் அபுவின் தங்கை

“அவனுக்கு மணி ஆகிடுச்சுன்னு கிளம்பிட்டாம்மா, நீ வேணும்ன்னா அவன் போனுக்கு பேசு”

“இல்லப்பா வேணாம், அண்ணன் வண்டி ஓட்டிட்டு இருக்கும். அப்பா அடுத்த வாரம் அண்ணனுக்கு பிறந்த நாள் வருதில்ல. நானு, நீங்க, அம்மா மூணு பேரும் கடைக்கு போய் அவனுக்கு டிரஸ் வாங்கிட்டு வரலாமா”

“சரிம்மா நீ அம்மாட்ட கேட்டுடு. நீ வேலைக்கு போயிட்டு நேரா கடைக்கு வந்திடு, நானும், அம்மாவும் இங்க இருந்து வரோம்”

“சரிப்பா, நானும் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பறேன்”. அண்ணனுக்கு என்ன விதமான உடை பிடிக்கும் என்ற யோசனையுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.

காலை மணி 9

“வாங்க அபு. கரெக்ட் டைம்க்கு ரிப்போர்ட் பண்ணிடீங்க. குட். உங்க அசைன்மென்ட் பத்தி தெரியும் இல்லையா. உங்களோட இன்னும் ரெண்டு பேர் ஜாயின் பண்றாங்க. அவங்களும் வந்தவுடனே இன்னொரு வாட்டி எல்லாத்தையும் கிளியரா பேசிடலாம். நீங்க வெளில வெயிட் பண்ணுங்க”

“Thank you Sir. எல்லாம் கிளியரா இருக்கு சார். ஒன்னும் ப்ரோப்லம் இல்ல. மத்தவங்க வந்தவுடனே ஆரம்பிச்சுடலாம்”

“ஓகே அபு. See you after they come”

மதியம் மணி 12

“என்னங்க நாளைக்கு நம்ம பொண்ணுக்கு பத்தாவது வருஷ கல்யாண நாள், நம்ம இன்னிக்கு கடைக்கு போய் அவங்க ரெண்டு பேருக்கும், குழந்தைகளுக்கும் துணி எடுத்துட்டு வருவோமா.“, மதியம் உணவருந்தி விட்டு ஆசுவாசமாக உட்கார்திருந்த கணவரிடம் கேட்டாள் கமலம்

“அதுக்குள்ள பத்து வருஷம் ஆகிடுச்சா, காலம் எத்தனை சீக்கிரம் ஓடுதில்ல. இப்போ கொஞ்ச நேரம் கண் அசரறேன். நாம சாயங்காலமா கிளம்பி கடைக்கு போலாமா. அப்படியே நைட் வெளில சாப்பிட்டு வந்துடலாம். உனக்கும் வேல மிச்சம்”,

“சரிங்க, நீங்க அவகிட்ட போன் பண்ணி நாளைக்கு எப்போ வந்தா வசதிப்படும்ன்னு கேட்டுடுங்க. அவ ஏதோ எல்லாரும் லீவ் போட்டுட்டு வெளில போக போறோம்ன்னு சொன்னா”

“ஒ சரி கமலம் நான் பேசறேன்”

“கமலம் நான் பேசிட்டேன், அவங்க கார்த்தால கோவில் போயிட்டு அப்படியே MGM போறாங்களாம், அதனால காலைலேயே நம்ம வீட்டுக்கும், அவங்க மாமியார் வீட்டுக்கும் போகலாம்ன்னு இருக்காங்களாம். கோவிலுக்கு நம்மளையும் கூட வர சொல்றா. ஒரு ஏழு மணிக்கா இங்க வராங்களாம்”, தன் பெண்ணின் திருமண நாள் நிகழ்ச்சி நிரலை சந்தோஷத்துடன் மனைவியிடம் ஒப்பித்தார்.

“ஒ அத்தனை கார்த்தால வராங்களா. அப்போ எதுவும் சாப்பிட மாட்டாங்களே. என்னங்க இந்த பொண்ணு இப்படி பண்ணுது. கல்யாண நாளும் அதுவுமா, என்கையால சாப்பிட மாட்டாளா, கஷ்டமா இருக்குங்க”

“அச்சோ கமலம் எதுக்கு இப்போ விசனப்படரே, நீ ச்வீட் ஏதானும் பண்ணு. அவங்க கையில கொடுத்து விடலாம். எப்படியும் புள்ளைங்க விளையாட விளையாட பசிக்குதுன்னு ஏதானும் கேட்டுக்கிட்டேதான் இருப்பாங்க. முடிஞ்சா ஏதானும் காரமும் சேர்த்து பண்ணி வைய்யி. உனக்கு ஏதானும் வாங்கிட்டு வரணும்ன்னா சொல்லு. நான் கடைக்கு போயிட்டு வரேன். “, மனைவியின் மறுகலுக்கு சுலபமான தீர்வை கூறினார்.

“இல்லைங்க கேசரி கிளறி, முறுக்கு சுட்டுடறேன், அதுதான் பசங்களுக்கு பிடிக்கும். நீங்க மாத்திரையை போட்டுட்டு கொஞ்சம் படுத்து எந்திரிங்க. நான் அதுக்குள்ள வேலை முடிச்சுடறேன். நாம ஒரு அஞ்சு மணிக்கா கடைக்கு கிளம்பலாம்”

“சரிம்மா, நீயும் நிறைய எல்லாம் பண்ணாதே, அவங்க நாலு பேர் வரைக்கும் பண்ணு போரும் சரியா”. தன் பேரன், பேத்தியுடன் நாளை வெளியில் செல்வதை பற்றிய சந்தோஷ கனவுகளுடன் தூங்க ஆரம்பித்தார்.

மாலை மணி 4.30

“ஹலோ குட்டி, உன் பர்த்டேக்கு பிரண்ட்ஸ் எல்லாம் விஷ் பண்ணினாங்களா. என்ன எல்லாம் பண்ணினீங்க ஸ்கூல்ல.”, பள்ளி வேனிலிருந்து இறங்கிய மகனிடம் கேட்டவாறே உள்ளே அழைந்து சென்றாள் மதி.

“எல்லாருமே விஷ் பண்ணினாங்கம்மா. மிஸ் கிளாஸ் ரூம் புல்லா எல்லாரையும் எழுந்து நிக்க வச்சு எனக்காக பர்த்டே சாங் பாட சொன்னாங்க. அப்புறம் நான் நீங்க கொடுத்த chocalates, pencils எல்லாம் பிரண்ட்ஸ்க்கு கொடுத்தேன். எல்லாரும் செம்ம ஹாப்பி ஆகிட்டாங்க. அதுவும் மிக்கி பென்சில் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சுதும்மா”, ஒரு நாள் ஹீரோவாகிய பெருமையை அம்மாவிடம் அளந்து கொண்டே டிபன் சாப்பிட வந்தான் கௌதம்.

“சூப்பர்டா குட்டி. ஹோம்வொர்க் ஏதானும் இருக்கா உனக்கு. அப்பா இன்னிக்கு சீக்கிரமே வரேன்னு சொல்லி இருக்காங்க, நாம மூணு பேரும் முதல்ல toy shop போய் உனக்கு பிடிச்ச toy வாங்கிட்டு அப்படியே madagaskar III cinema போகப்போறோம். அதுனால சீக்கிரம் உன்னோட வொர்க் எல்லாம் முடிச்சுடு சரியா”

“ஹே, தேங்க்ஸ்மா, My sweet Mummy. 2 வொர்க்தான். கடகடான்னு முடிச்சுடுவேன்” , என்ன toy வாங்கலாம் என்ற சந்தோஷ கனவுகளுடன் டிபன் சாப்பிட ஆரம்பித்தான் கெளதம்.

மாலை மணி 5

“என்னடா மச்சி, இத்தனை சீக்கிரம் கிளம்பற, மீட்டிங் என்ன ஆச்சு”

“தலக்கு வயித்து வலி. அதனால வீட்டுக்கு போய்ட்டார். மீட்டிங் கான்செல் ஆகிடுச்சுடா. அதான் சீக்கிரம் கிளம்பறேன்”, மிக சந்தோஷத்துடன் தன் பாஸ் வாயிற்று வலியை பற்றி கூறினான் மகேஷ்.

“அது சரி. அப்போ இரு. கீழ காபி ஷாப் போய் காபி குடிக்கலாம்”

“இல்லடா சங்கர். இன்னைக்கு எங்க கல்யாண நாள். கார்த்தாலையே ஏன் லீவ் போடலைன்னு ஒரே சண்டை. அட்லீஸ்ட் சாயங்காலமானும் சீக்கிரம் போய் சத்யாவை தாஜா பண்ணனும். அவ வேற அவங்க அம்மா வீட்டுக்கு போக போறேன்னு சொன்னா. போன் பண்ணி நேர அங்க இருந்து கடைக்கு வர சொல்லணும்”

“ஹே, Happy Anniversary-டா மகேஷ். தங்கச்சிக்கும் விஷ் பண்ணினேன்னு சொல்லு. மத்யானம் ரெண்டு பெரும் ஒண்ணாதானே கொட்டிகிட்டோம். அப்போ கூட சொல்லலை. எங்க treat கேட்டுடுவேன்னா?

“ச்சே ச்சே இல்லடா, அவகிட்ட சண்டை போட்டதே மண்டைல ஓடிட்டு இருந்ததுடா, பாவம் எதுவுமே கேக்க மாட்டா, அவ கேக்கறதே இந்த ஒரு நாள் லீவ் மட்டும்தான். அதுவும் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். அந்த வருதத்தில இருந்தேனா. அதுதான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்”

“சரி, சரி அதுக்காக வருத்தப்படாதே. நம்ம ஊருலதான் கல்யாணம் மூணு நாள் நடக்குமே. அதுனால நாளைக்கு எனக்கு treat கொடுத்துடு சரியா”

“அடப்பாவி, ஏன்டா கல்யாணம் மூணு நாள் பண்ணினா, Anniversary-யும் மூணு நாள் கொண்டாடுவாங்களா. என்ன லாஜிக்டா உன்னோடது. உங்கிட்ட பேசினேன் நான் இன்னைக்கு போட்ட பிளான் எல்லாம் சோபிளான் ஆகிடும். நான் கிளம்பறேன்”, மனைவியுடன் கழிக்க போகும் சந்தோஷமான நிமிஷங்களை நினைத்துக்கொண்டே கார் பார்க்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான் மகேஷ்.

இரவு 8

“அப்பா அண்ணனுக்கு இந்த ப்ளூ கலர்தான்ப்பா பிடிக்கும், அதுவே எடுக்கலாம்ப்பா”

“நீ சொன்னா சரிதான்ம்மா. அதுவே எடுத்துடலாம். நீயே சொல்றே, அம்மாக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டியா”

“எனக்கும் பிடிச்சிருக்குங்க. இந்த நீல சட்டையே எடுக்கலாம்.”

“சரி கொண்டா, நீங்க இங்கயே நில்லுங்க, நான் போய் பில்லுக்கு பணம் கொடுத்துட்டு வரேன். அப்புறம் போய் எதிர்க்க இருக்கற ஹோட்டல்ல சாப்பிடலாம். சரியா”

“அப்பா, அங்க பாருங்க, பைக் ஸ்டான்டுல அண்ணன் நிக்குது. வாங்க போய் பேசலாம்”

“ஏய் வேண்டாம் நில்லு. அவனுக்கு தெரியாம வாங்கனும்ன்னுதானே அவன் இல்லாதப்போ வந்தோம். இங்கயே இன்னும் ஒரு அரை மணி நேரம் சுத்திட்டு அப்புறம் வெளில போலாம். சரியா, இப்போ வாங்க அவன் பார்க்கறதுக்கு முன்னாடி நாம கடை உள்ளார போய்டலாம்”

இரவு 8.05

டமார்……. டமார்………. டமார்………..

நகரில் அடுத்து அடுத்து வணிக வளாகம், திரை அரங்கு, துணிக்கடை ஆகிய மூன்று இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். முன்னூறுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

அபுவைப் போன்றவர்களை ஏன் படைத்தாய் இறைவா, அத்தனை பேரின் ஆசைகள், பாசங்கள், கனவுகளை அவலப்படுத்துவர்க்காகவா????? எத்தனை மரணங்கள், எத்தனை எத்தனை ஓலங்கள், ஏன் எதற்கு இத்தனை பெரிய தண்டனை. என்ன தவறு செய்தார்கள் இந்த அப்பாவி மக்கள். எத்தனை மக்களின் இன்பக்கனவுகள் இன்று வெடித்து விட்டது.

என்று தணியும் இந்த அரக்கரின் தாகம்
என்று மடியும் இந்த வன்முறை மோகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *