கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 1,594 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“திட்டம் தீட்டாமல் ஆண்களும் பெண்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் கூறுவது குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தையல்ல. அது வேறு, இது வேறு, இல்லற வாழ்க்கை இனிது நடை பெற வேண்டுமெனில், ஒவ்வொரு ஆண் மகனும் பெண் மகளும் தத்தம் திருமணத்திற்கு முன்னர், இந்தத் திட்டத்தை வகுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், குடும்பம் நடத்தும்போது அதனை அமல் படுத்த வேண்டும்.

“நான் திட்டம் தீட்டித்தான் அமைதியாக, ஆனந்தமாகக் குடும்பம் நடத்தி வருகிறேன். தாங்களும் தயவு செய்து என் திட்டத்தை ஏற்றுக் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று என் நண்பர் இராமநாதனை வேண்டிக் கொண்டேன்.

நாங்கள் இருவரும் அன்று மாலை காதோங் கடற்கரையில், ஒரு தனி இடத்தில் அமர்ந்து, நண்பரின் பிரச்சினைக்கு முடிவு காண முயன்றோம்.

அன்று, கடல்கூட சீற்ற முற்றது போல் தோன்றிற்று. கடலலைகள் ஆரவாரித்து மேலெழுந்து, சுருண்டு விழுந்தன. என் நண்பர் இராமநாதனின் உள்ளமும் இவ்வாறுதான் குமுறிக்கொண்டிருந்திருக்கும்.

இராமநாதனுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. தம்மைப் போலவே படித்துப் பட்டம் பெற்ற அழகிய மனைவியையே அவர் காதல் புரிந்து, கைத்தலம் பற்றினார்.

பொதுநல சேவையில் அடங்கா ஆர்வம் கொண்டவர் இராமநாதன். மணம் முடிந்த மறு நாளே தொற்று நோய் பரவியிருந்த அயலூருக்குப் புறப்பட்டுப் போய், ஒரு வாரங்கழித்து வீடு திரும்பியதிலிருந்தே அவருடைய சமூக சேவையின் ஆர்வத்தை ஒருவாறு அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக, மணமான புதிதில் தங்களைத் தனியே விட்டு விட்டுத் தீடீர் என்று பிரிந்து செல்லும் கணவர்களை இளம் மனைவிகள் விரும்பமாட்டார்கள். இந்தச் சாதாரண விஷயம் நண்பருடைய மூளைக்கு எட்டாமற் போனதால்தான் பிரச்சினை இவ்வளவு முற்றிவிட்டது.

அவர் மனைவி சரோஜா பொறுத்துப் பார்த்தார். கணவர், வீட்டில் தங்குவது அரிதாயிற்று. பட்டும் படாமலும் சொல்லிப் பார்த்தார். பலன் கிட்டவில்லை. கண்டித்துச் சொன்னார். அது, “செவிடன் காதில் ஊதிய சங்கா”யிற்று.

பிறகு, அவரும், தோழிகள் இல்லம், லேடீஸ் கிளப், அது இது என்று ஊர் சுற்றலானார். சம உரிமை கோரும் இந்தக் காலத்துப் படித்த பட்டினத்துப் பெண்ணல்லவா?

விரைவில் அவர்கள் இருவர்க் கிடையில் பேச்சு வார்த்தைகளும் நின்று போயின. வேலையாள் தான் நடுவில் நின்று இருவர் நலங்களையும் கவனித்துக் கொண்டான்.

என்னைப் போலவே இராமநாதன் தம்பதிகளும் தனிக் குடித்தனம் நடத்தினார்கள். அவர்கள் பிணக்கைத் தீர்த்து வைக்க அவர்களுக்கு உற்றார் பெற்றார் ஒருவரும் இல்லை.

இந்த நிலையில் தான் இராமநாதன் என்னைத் தேடி வந்தார். எதற்காக? தம் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்துகொள்ள வேண்டுமாம்! நான் அதற்கு ஆதரவு தர வேண்டுமாம்!

“பொதுநல ஆர்வமில்லாத பெண்ணும் ஒரு பெண்ணா?” என்று சீறினார், இராமநாதன்.

நண்பனின் கடமையை ஆற்ற நான் முனைந்தேன். எனக்குத் தெரிந்த பல தர்ம நியாயங்களைக் கூறி, வாதாடினேன். நண்பர் கேட்பதாக இல்லை.

அலுத்துச் சலித்துப் போன நான் என் சொந்தக் குடும்ப இரகசியங்களையே சொல்லத் துணிந்தேன். இது ஒன்றே என் இறுதி ‘ஆயுதம்’.

“நண்பரே! இந்த நவ நாகரிக அணுயுகத்தில் நம்பிகளும் நங்கைகளும் எவ்வாறு காதல் புரிகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். தொலைபேசியில் அல்லது ஏதோ ஒரு வகையில் அறிமுகமாகி, சந்தித்துக் குலாவி, தொட்டுப் பழகுகிறார்கள். அதன் விளைவாக இக்கட்டான நிலை ஏற்பட்டு விடுகிறது. அதிலிருந்து மீள முடியாமல் மணம் புரிந்துகொண்டு தம் வாணாளை வீணாளாக்கும் தம்பதிகள் சிலரை நான் அறிவேன். மணமான பின்னரே ஒருவருடைய உண்மை உருவம் மற்றவர்க்குத் தெரிகிறது. இந்த அவல நிலை எனக்கு வரவேண்டாமென்றுதான் ஓர் அற்புதமான திட்டம் தீட்டினேன். எத்தகைய நரக வாழ்க்கையாக இருந்தாலும் சொர்க்கமாக மாற்றும் திட்டம்.

“என் திருமணப் பேச்சு அடிபட்டது. அப்பா என் அபிப்பிராயத்தைக் கேட்டார். அவருக்குச் சுருக்கமாகவே என் முடிவைத் தெரிவித்தேன். அப்பா! நீங்கள் எந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் எனக்குச் சம்மதமே.”

“அப்பா இதை எதிர்பார்த்தவரல்ல. ‘இந்தக் காலத்து இளைஞர்கள் பேசுகிற பேச்சா இது?’ என்று அவர் வியந்திருக்கலாம். ‘என்ன சொல்லுகிறாய்?’ என்று கேட்டுத் தம் ஐயத்தைப் போக்கிக் கொண்டார். அவருக்குப் பெரு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டது பழங்கதைகளை உற்சாகத்துடன் சொல்லத் தொடங்கிவிட்டார்.”

‘தம்பீ, (இப்படித்தான் என்னை அவர் அழைப்பது வழக்கம்) நீ பிறந்தது பேரா மாநிலத்தைச் சேர்ந்த டெலுக்கான்சன். அங்கே எனக்குத் தணிகாசலம் என்னும் நண்பரொருவர் இருக்கிறார். அவருக்கு மணமாகிப் பத்து ஆண்டுவரை பிள்ளைப்பேறு கிட்டவில்லை. பிள்ளைப் பித்துப் பிடித்த அவரும் அவருடைய மனைவியாரும் உன்னைத்தான் தம் பிள்ளைபோல் பாவித்துப் போற்றி வளர்த்தார்கள் பிறகே, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று அப்போதே ஆசைப்பட்டார்கள்.

“இப்போது 18 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த ஆசை சிறிதும் குறையவில்லை. இதனைப் போன மாதம் அவர்கள் இல்லத்திற்குச் சென்றிருந்த போது கண்டு கொண்டேன். திருமணப் பேச்சை எடுத்தார்கள். பெண்ணைப் பார்த்தேன். அடக்கவொடுக்கமாக நமது குடும்பத்திற்கு ஏற்ற குத்துவிளக்கு போல் இருக்கிறாள். என்ன சொல்கிறாய்? அவளையே முடித்து விடட்டுமா?”

“நான் தான் முதலிலேயே என் முடிவைச் சொல்லி விட்டேனே, அப்பா!” என்றேன் நான்.

“என் திட்டத்தின்மீது நான் கொண்டிருந்த தீவிர நம்பிக்கையினால் பெண்ணைப் போய்ப் பார்க்கக் கூட மறுத்துவிட்டேன்.” என் மனைவி எப்படியிருந்தால் என்ன?

“திருமண நாளும் குறிக்கப்பட்டது. அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களைப் பார்த்தேன். முதல் ஏமாற்றம் தோன்றிவிட்டது! ஆம். என் பெயருக்குப் பக்கத்தில் அழகாக அச்சடிக்கப்பட்டிருந்த மணப் பெண்ணின் பெயர்தான் என் கண்களை உறுத்திற்று. பச்சையம்மாள் என்ற பெயரைத்தானா என் மனைவிக்குச் சூட்டவேண்டும்? (அப்பெயர் கொண்ட தெய்வத்தின் வரத்தால் அவள் பிறந்தாளாம்.) என் வாழ்க்கைத் துணைவியின் பெயர், இந்திரா, சந்திரா, மல்லிகா, மேனகா, அமுதா, குமுதா என்றெல்லாம் இருக்கு மென்று நினைத்து, அந்தப் பெயர்களைச் சொல்லிச் சொல்லி, என் மனத்திற்குள்ளேயே ஆசையோடு அழைத்துக்கொண்டிருந்தேன். இது என்ன, பச்சையும் சிவப்பும்!

“என் முக வாட்டத்தைக் கண்ட தந்தையார், “தம்பீ, பெண்ணின் பெயரைப் பற்றியா கவலைப்படுகிறாய்? இப்போது உனக்கு எந்தப் பெயர் இருந்தாலும், ஜாதகப்படி உனக்கு நாங்கள் வைத்த பெயர் பாவாடைசாமிதான். பாவாடை என்றுதான் அழைப்போம் வெளியூரிலிருந்து வந்த நண்பரொருவர், ‘இது என்ன, பாவாடை, தாவணி?’ என்று பரிகசித்தார். அதன்மேல் உன்னைச் சாமி என்று சுருக்கமாக அழைப்போம். ஆனால், பாவாடைசாமி – பச்சையம்மாள் பெயர் பொருத்தம் சரியாக இருக்கிறது. பெயரில் என்ன இருக்கிறது? விட்டுத் தள்ளு!” என்று ஆறுதல் கூறினார். அவர் கூறியது நான் வகுத்த திட்டத்திற்கு உட்பட்டதாதலால் அந்தக் கவலையைச் சட்டென்று விட்டொழித்தேன்.”

“அது என்ன திட்டம்?” என்று இராமநாதன் ஆவலோடு கேட்டார்.

நான் சொல்லிவருவதை நண்பர் இப்போது கவனத்துடன் கேட்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். எனக்கு உற்சாகம் பிறந்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். எனவே, “இருங்கள், இராமநாதன்! அதைப் பிறகு சொல்கிறேன். இன்னும் கேளுங்கள் என்று அவர் ஆவலைத் தூண்டிவிட்டுத் தொடர்ந்தேன்:-

“மனோரஞ்சிதம் பூவுக்குள் தன் தலையை விட்டுக் கொண்டு, அதன் நறுமணத்தில் மயங்கிக் கிடக்குமாம் நல்ல பாம்பு அதே போல் எனக்கு மலர் மணத்தில் ஒரு பித்து. எனக்கு வாய்க்கும் மனைவி அன்றாடம் தலை நிறைய மணங்கமழும் மலர்களைச் சூடிக்கொண்டு, என் முன் அழகிய கலாப மயில்போல நடை பயிலவேண்டும். அந் நறுமணத்தில் நான் சொக்கவேண்டும் என்று ஆசை. கொண்டிருந்தேன். ஆனால், பச்சையம்மாளுக்கோ திருமண மேடையிலேயே மயக்கம் வந்துவிட்டது. விசாரித்ததில், பூ மணத்தைத் தாங்கமாட்டாளாம் அவள்!

இதுதான் போகட்டுமென்றால், அவள் பஞ்சு மெத்தையில் படுக்க மாட்டாளாம்! மெத்தையில் படுத்தால், அவள் உடலெல்லார் பற்றியெரியுமாம்! வெறுந்தரையே ‘குளு குளு’ வென்றிருக்கிறதாம்! ம்.. அவளுடைய பெயரைப் போலவே உடலும் தேர்ந்த கறுப்பு.

“கற்பனைக் கதைகள் எழுதுகிறவன்; கவிதைகள் புனைகிறவன் நான் என்பது உங்களுக்குத்தெரியும். எழுத்தோவியங்களை கற்பனைக் காவியங்களை (நான் அப்படித் தான் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்) என் மனைவி விழுந்து விழுந்து படித்து ரசிக்கவேண்டும், என்னைப் பலவாறு புகழ்ந்து பாராட்டவேண்டும்; ஆலோசனை கூற வேண்டும்; ஐடியா தரவேண்டும்; இப்படிப்பட்ட மேதை எனக்குக் கணவராக வாய்த்தாரே என்று தன் தோழிகளிடம் பீற்றிக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் பகற் கனவு கண்டுகொண்டிருந்தேன். ஆனால், பச்சையம்மாளோ? சலவைத் தொழிலாளிக்குத் துணிகளைக் கணக் கெழுதிப் போடுவதைக்கூட சரியாகப் பிழையில்லாமல் எழுதமாட்டாள். கோட்டுக்கு “கொட்டு” என்றும், வேட்டிக்கு “வெட்டு” என்றும் எழுதித் தீர்த்துவிடுவாள்…”.

இப்போது இராமநாதன் என்னை இடைமறித்தார்.

“ஐயா! போதும். போதும். மேலும் கூறவேண்டாம். நான் ஒருவாறு உங்கள் மனைவியாரைப் பற்றி அறிந்துகொண்டேன். அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, சரோஜா எவ்வளவோ மேலானவளாகத்தான் எனக்கு இப்போது தோன்றுகிறது. என்றாலும், நீங்கள் எவ்வாறு இத்தனை குறைகளையும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்துகிறீர்கள்? நீங்கள் தீட்டிய திட்டந்தான் என்ன?” என்று ஆவலுடன் கேட்டார்.

“நண்பரே! நான் புதிதாக எதையும் யோசித்துத் திட்டம் தீட்டவில்லை. புதுமணத் தம்பதிகள் இல்லற வாழ்க்கையை இனிது நடத்த என்னென்ன நெறிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதைப் பல புத்தகங்களில் படித்து அறிந்து கொண்டேன். அவைகளை என் குடும்ப வாழ்க்கையில் தவறாமல் கடைப்பிடிப்பதென்றும் உறுதி பூண்டேன். அதில் ஒன்று மனைவியின் நல்லியல்புகளை அறிந்து பாராட்டுவது. பச்சையம்மாள் ஒருபோதும் என் வார்த்தைகளைத் தட்டி நடக்கமாட்டாள். கோபம் என்பது அவள் அகராதியிலேயே இல்லை. அறுசுவை உணவை ஆக்கிப் படைப்பதில் அவளுக்கு நிகர் அவளே தான். அவளின் நெளி நெளியான சுருண்ட கேசத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துப் பார்த்து ஆனந்திக்கலாம். இது போதும் எனக்கு. கிடைத்துள்ள நல்லவைகளை ஏற்று, தீயனவற்றை மன்னித்து மறந்து, விட்டுக் கொடுத்து, மனைவிமேல் கொண்ட அன்பில், அரவணைப்பில் சிறிதும் மாறாமல் இருப்பதுதான் என் திட்டம். நம் மனக்குறையை எவ்வாற்றானும் வெளிக்காட்டாமல், நம் மனைவி எள்ளளவும் நம்மீது ஐயுறாமல் நடந்துகொள்வதே இதன் அடிப்படை அம்சம். ஆம். இந்த ஒரு விஷயத்தில் நாம் சிறந்த நடிகரைப்போல் நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

“தங்கள் மனைவியாருக்கோ சற்றுமுன் நான் என் மனைவி பற்றிய குறைகள் எதுவும் இருக்காதென்றே நம்புகிறேன். அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளத் தாங்கள்தான் தவறிவிட்டீர்கள் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இனிய கனவு உலகில் சஞ்சரிப்பவர்கள் இளம் மனைவிகள். அவர்களின் அந்த இன்ப உணர்ச்சிகளுக்குத் தடை போடலாமா? கணவன் – மனைவியரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாவிடில் இல்வாழ்க்கை என்பது எதுவும் இல்லாத வாழ்க்கையாகத்தான் மாறிவிடும்.

“ஆதலால், நண்பரே, விவாகரத்து என்ற பேச்சை உடனடியாக மறந்துவிட்டு, உங்கள் மனைவியாருடன் ஒற்றுமையாக வாழுங்கள். கூடுமானால், உங்கள் பொது நலச் சேவையில் உங்கள் மனைவியாரையும் துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவர்கள் உங்கள் அனுமதி பெறாமல் எங்கும் போகமாட்டார்கள். எதுவும் செய்யமாட்டார்கள். அடிக்கடி அவர்களைப் புகழ்ந்து பாராட்டுங்கள். அதன்பிறகு பாருங்கள், உங்கள் இல்லற வாழ்க்கை எவ்வாறு ஒளி வீசித் திகழுகிறதென்று.” என்று ஒரு சிறிய சொற்பொழிவோடு நிறுத்தினேன்.

எங்கட்கு எதிரே இதுகாறும் பொங்கிக் குமுறிக் கொண்டிருந்த கடலும் திடீரென ஓய்ந்து, அமைதியடைந்தது. குழப்பமுற்றிருந்த என் நண்பரின் முகமும் தெளிவுபெற்றது.

“மெத்த நன்றி, ஐயா! முன்பின் யோசியாமல் தவறான நடவடிக்கையை மேற்கொள்ளத் துணிந்தேன். ஆண்டிலும், அறிவிலும், அநுபவத்திலும் முதியோரான தாங்கள் அதைத் தடுத்து என்னைக் காப்பாற்றினீர்கள். இனி, தங்கள் அறிவுரைப்படியே நடப்பேன்.” என்று நா தழுதழுக்கக் கூறி விடைபெற்றார், இராமநாதன்.

புகழ்ச்சியை விரும்பாதார் யார்? என் தலை என் கழுத்தில் தரிகொள்ளவில்லை. யாரும் சாதிக்க முடியாத காரியத்தைச் சாதித்துவிட்டவன்போல் நெஞ்சை நிமிர்த்தி எனதில்லம் திரும்பினேன்.

ஆறு மாதங்கள் ஓடி மறைந்தன. நண்பர் இராமநாதன் தம் மனைவியுடன் ஒற்றுமையாக இல்லறம் நடத்துகிறார் என்பதைக் கேள்விப்பட்டு உள்ளம் பூரித்தேன். இதற்கு – இந்த நல்ல விளைவுக்கு – நாம்தானே காரணம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, பெருமையாகவும் இருந்தது

இதற்கிடையில், என் மனைவி பச்சையம்மாளின் நடவடிக்கைகளிலும் சிறுகச் சிறுக மாறுதல்கள் தோன்றிக் கொண்டே வந்தன. வெறுந்தரையில் படுத்தவள், மெத்தை கட்டிலில் படுக்கத்தொடங்கினாள். நாள் தவறினாலும், அவள் தலைமுடியில் மல்லிகை, ரோஜா, போன்ற மணமிக்க மலர்கள் கொலு வீற்றிருக்கத் தவறுவதில்லை. ஆர்வத்துடன் ஆரம்ப வாசகம், முதற்பாட புத்தகம், இரண்டாம்பாட புத்தகம் என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அக்கறையோடு பாடங்களை எழுதி எழுதிக் குவித்துக் கொண்டிருந்தாள்.

இது எனக்கு வியப்பை யூட்டிற்று. இந்த இந்த “முன்னேற்ற”த்தை இராமநாதனிடம் தெரிவித்து, மேலும் பெருமைப் பட்டுக்கொள்ளத் துடித்தேன்.

அதன்படியே ஒரு நாள் அவரைச் சந்தித்து, இந்த விவரங்களைக் கூறினேன். அதற்கு நண்பர் கூறலானார்.!

“என்னை மன்னித்து விடுங்கள் ஐயா! என் மனைவி சரோவைச் சமாதானப்படுத்த தாங்கள், அன்று தங்கள் மனைவியாரைப் பற்றிக் கூறிய அனைத்தையும் அவருக்கு எடுத்துக்கூற வேண்டியதாயிற்று. அவள் தங்கள் மனைவியாரிடத்தில் இதனைத் தெரிவித்திருப்பாள் போலிருக்கிறது. பெண்களிடத்தில்தான் இரகசியம் தங்காதே – தம் “குறைகளை” உணர்ந்த தங்கள் மனைவியார் அவைகளைப் போக்க முயல்கிறாரென்று நினைக்கிறேன்.”

“ஓகோ! அப்படியா? என் மனைவியும் என்னைப்பற்றி ஏதேனும் தங்கள் மனைவியாரிடம் தெரிவித்திருப்பாளே?”

“ஆமாம். தெரிவித்தார்களாம். ஆனால், அவற்றை உங்களுக்குச் சொல்வது நன்றா…யிருக்…காது” என்று மென்று விழுங்கினார்.

“பாதகமில்லை. சொல்லுங்கள். நான் வருத்தப்பட மாட்டேன்.”

இப்படி ஒப்புக்குச் சொன்னாலும் நெஞ்சம், “பக்கு – பக்”கென்று அடித்துக்கொண்டது.

“தங்கள் மனைவியார் தெரிவித்தது இதுதான்:-

தாங்கள் தூங்கும்போது நன்றாகப் பேரொலியுடன் குறட்டை விடுவீர்களாம். அதனால் பக்கத்தில் படுத்திருக்கும் அவர்களுக்கு நித்திரையே வாராதாம். அதைத் தங்களிடம் சொல்வதற்கு அஞ்சி, “மெத்தையில் படுத்தால் உடம்பு எரிகிறது” என்று பொய் புகன்றிருக்கிறார்கள். “மலர் மணம் காம இச்சையைத் தூண்டிவிடக் கூடியது என்று யாரோ அவருக்குத் தவறான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். குடும்பப் பெண்களுக்கு அது கூடாது என்று அவர் முடிவு கட்டிவிட்டாராம். இப்போது என் கணவரே விரும்பும்போது, எனக்கு மலர் சூடிக்கொள்ள என்ன தடை?” என்றாராம். “நான் கறுப்பாய் இருப்பதாகக் குறைப்பட்டால் அவர் தலைமுடி இப்போதே நரைத்துவிட்டதே!” என்று சொல்லிச்சிரித்தாராம். “பெண்களுக்கு அதிகப் படிப்பு எதற்கு?” என்று என் தாய் தந்தையரே என்னைத் தமிழ் முதல் வகுப்புடன் நிறுத்திவிட்டதற்கு நான் என்ன செய்வேன்?” என்று வருந்தி, இப்போது தாமாகவே எழுத்தறிவு பெறுவதில் ஈடுபட்டிருக்கிறார்களாம். “என் குறைகளை அவர் அப்போதே என்னிடம் தெரிவித்திருந்தால் நானும் அவர் குறைகளைத் தெரிவித்திருப்பேன். இதற்குள் எங்கள் இருவர் குறைகளும் ஒருவாறு நீங்கியிருக்குமே? எதற்காக இத்தனை நாளும் அவைகளை மூடி மறைத்தார்?” என்று சொல்லி வருத்தப்பட்டாராம் தங்கள் இல்லக்கிழத்தியார்.” என்றார் என் நண்பர் இராமநாதன்.

– 1964, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *