கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 25, 2022
பார்வையிட்டோர்: 2,998 
 

மதியச் சாப்பாட்டின் பின்னர் வழக்கம்போல கண்ண யர்ந்தேன். மாசி மாதப் பின்பனிக் காலம் ஆரம்பித்து விட்டாலும் இன்னமும் வாடைக்காற்று ஓயவில்லை. வாடைக் கூதல் மத்தியான வேளையையும் இதமாக்கிக் கொண்டிருந்தது. சுக நித்திரையில் இருந்த என் காதுகளில் கனவிற் கேட்பதுபோல பல குரல்கள் கேட்கவே எழுந்து உட்கார்ந்தேன். ‘லோஞ்ச் கடலில் தாண்டு போச்சாம்’ என்ற பல அவலக் குரல்கள். நான் படுக்கையை விட்டு எழுந்து வீதிக்கு ஓடினேன். இதுவரையிலும் என் சீவிய காலத்தில் லோஞ்சோ வத்தையோ கடலில் அமிழ்ந்ததாக நான் கேள்விப் படவில்லை. நான் வீதிக்கு வந்தபோது ஊரே ஜெட்டியை நோக்கி அவலக் குரல் எழுப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.

“எந்த லோஞ்ச் ஆழ்ந்தது? திருகோணமலையில் இருந்து மூதூருக்கு வந்த லோஞ்சா? அல்லது இங்கிருந்து திருகோண மலைக்குப் போனதுவா?” எவருக்குமே இது தெரியவில்லை. எல்லாரும் அவசர அவசரமாக ஓலமிட்டவண்ணம் ஜெட்டியை நோக்கி ஓடுகிறார்கள். நான் வீட்டுக்கு வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு ஜெட்டியை நோக்கிப் பறக்கின்றேன்.

உள்நாட்டுக் கலவரங்களால் ஊரிலே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சுமுகமான உறவில்லை. ஜெட்டி முஸ்லிம் வட்டாரத்தில் இருக்கிறது. திருகோணமலைக்குச் செல்லும் தமிழ்ப் பிரயாணிகள் கூட்டமாகத்தான் ஜெட்டிக்குச் செல்வார்கள். ஆனால், இன்று எல்லோருமே ஜெட்டியை நோக்கி ஓடுகிறார்கள். தமிழர், சிங்களவர், முஸ்லிம் எல்லாருமே ஓடுகிறார்கள்.

நான் ஜெட்டியை அடைந்து விட்டேன். ஜெட்டி அமைந்திருக்கும் கடற்கரை முழுவதும் ஒரே சனக்கூட்டம். எல்லார் கண்களும் கண்ணீருடன் கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறது. திருகோண மலைக்கு இரண்டு மணிக்கு புறப்பட்ட லோஞ்ச்தான் பாதாள மலையருகில் ஆழ்ந்து விட்டதாம் என்ற திட்டவட்டமான செய்தி எனக்குக் கிடைத்தது. லோஞ்சில் யார் யாரெல்லாம் வந்திருப்பார் கள்? திட்டவட்டமாக எவருக்குமே தெரியாது. காலையில் திருகோண மலைக்குச் சென்றவர்கள் தங்கள் வேலையை முடித்துக் கொண்டு இந்த லோஞ்சில் வந்திருக்கலாம். அவர்களின் உறவினர்கள் எம் மகன் வந்தானோ? வாப்பா அதில் வந்தாரா? என்று எண்ணிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.

கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு பஸ்ஸில் வந்தவர்கள். புகையிரதத்தில் வந்த கொட்டியாரப்பற்று மக்களும் இந்த லோஞ்சில் வந்திருக்கலாம் என்று அங்கலாய்த்தார் ஒருவர்.

‘என்ற மகன் இண்டைக்கு கொழும்பிலிருந்து வாரேன் என்று எனக்குக் கடிதம் எழுதியிருந்தான்’ என்று கண்ணீர் வடிக்கிறார் ஒரு தந்தை. நான் செய்வதறியாமல் கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடலிலே மூதூர் மீன்பிடி வள்ளங்கள் எல்லாமே பாதாள மலைக்கருகே அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. பொழுதும் சாய்ந்து கொண்டிருந்தது. அயற் தமிழ்க் கிராமங்களில் இருந்து சாரிசாரியாக அங்கே தமிழ் மக்களும் கூடத் தொடங்கினர். ஜெட்டியில் ஐந்தாறு தேனீர்க் கடைகள் இருந்தன. எல்லாமே முஸ்லிம் கடைகள். ஆனால், இழவுச் செய்தி கேட்டதும் எல்லாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. கடைகளின் மேலே வெள்ளைக் கொடிகள் பறந்தன.

முஸ்லிம் இளைஞர் கோஷ்டி ஒன்று மூடப்பட்ட கடைகளைத் திறக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. கடைகள் திறக்கப்படுகின்றன. தாகம் தீர்க்க கடைகள் திறந்திருக்க வேண்டுமே என்ற கவலை அவர்களுக்கு.

நான்கு மணிக்கு மேலாகி விட்டது. வாடைக் காற்று வெடு வெடென்று அடிக்கின்றது. குளிரில் உடலெல்லாம் நடுங்குகின்றது. கூதலைப் பொருட்படுத்தாமல் சனக்கூட்டம் கடற்கரை வெண்மணற் பரப்பில் அமர்ந்து கொண்டு கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறது. கடலிலே மீன்பிடி வள்ளங்களைத் தவிர வேறு லோஞ்சோ படகுகளோ இல்லை .

“பாருங்கள் கிராமத்திலிருந்து வந்த தமிழ் மக்கள் எல்லாம் பகல் முழுக்க பட்டினியாய்க் கெடக்காங்க. இங்க கடைகளிலும் சாப்பிடுவதற்கு ஏதுமே இல்லை. அதை மொதலிலே கவனியுங்க….” என்கிறார்கள் பொலிசாரிடம் இளைஞர்கள். இளைஞர் கூட்டம் கலைந்து அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் சென்றது. அரை மணித்தியாலத்தினுள் பாண், பணிஸ், வடை, ரோஸ் பாண், பிஸ்கற் போன்ற உணவுப் பொருட்களுடன் வந்தார்கள். கடற்கரை மணலிலே சோர்வாக அமர்ந்திருந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகவே அவற்றை விநியோகித்தார்கள். சோடாவும், தேனீரும்கூடக் கொடுத்தார்கள். குடம் குடமாகத் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

அதைக் காண அத்தனை சோகத்திலும் எனக்கு ஆனந்தமாக இருந்தது. ஓரிரு வருடங்களாக இப் பிராந்தியத்திலே முஸ்லிம் களுக்கும் தமிழர்களுக்கும் சுமுகமான உறவில்லை . ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன்தான் நோக்கினார்கள். ஆனால், இன்று அந்த வன்மம் எங்கே போயிற்று. எத்தனை மன மாற்றம். ஆனால், இந்த நல்லுறவுக்காக நாம் கொடுத்த விலை!

நான் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். வாக்கிடோக்கியைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொலிஸ் அதிகாரியை நோக்கிக் கூட்டம் கூடுகிறது. என்னால் கூட்டத்தை

கடற்படைப் படகுகள் இருபது பிரயாணிகளைக் காப்பாற்றிக் கரை மீட்டன. “அந்த இருபது பிரயாணிகளும் கடற்படை ஆஸ்பத்திரியில் தற்போது இருக்கிறார்கள்” என்ற பொலிஸ் அதிகாரி சொன்ன செய்தியைத் தெரிந்து கொண்டேன்.

அந்த இருபது பிரயாணிகளும் யார்? அதைத் தெரிந்து கொள்ள சனக்கூட்டம் ஆசைப்பட்டது.

“அது எனக்குத் தெரியாது. ஆனால், கடற்படையினர் அந்த இருபது பேரின் பெயரை இனித் தெரிவிக்கக்கூடும். தெரிந்ததும் அதை நான் கூறுகிறேன்” என்ற பொலிஸ் அதிகாரி, “கிண்ணியா படகுக்காரர்கள் சிலரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். சிலரைப் பிணமாகவே மீட்டிருக்கிறார்கள். மீட்கப்பட்டவர்களையும், மீட்ட சடலங்களையும் அவர்கள் இங்கே கொண்டு வருகிறார்கள்” என்றார்.

மாலையாகி விட்டது. கடற்கரையிலே காகங்கள் குளித்து கடலோரத்துப் புன்னை மரங்களில் ஒதுக்கிடம் தேடின. இருள் கவிந்து கொண்டு வந்தது. கடைகளில் மின் விளக்குகளைத் தவிர வேறு ஒளியே இல்லை. இளைஞர்கள் எங்கிருந்தோ பெற்றோ மெக்ஸ் விளக்குகளைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

இருள் படியும் நேரத்தில் கிண்ணியா மீன்பிடிப் படகுகள் சில வந்து சேர்ந்தன. சனம் முண்டியடித்துக் கொண்டு அந்தப் படகுகளை நோக்கி ஓடியது. பொலிஸும் இளைஞர்களும் சனக் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தினர். படகுகளில் கொண்டு வந்தவர் களை பொலிஸ் ஜீப் ஏற்றிக் கொண்டு மூதூர் வைத்தியசாலைக்கு விரைந்த போது, அவ்வாகனத்தைத் தொடர்ந்து சனக்கூட்டத்தில் ஒரு பகுதி வைத்தியசாலைக்கு விரைந்தது.

வைத்தியசாலையிலேயே மூவர் மரணமாகி விட்டார்கள். அவர்களில் ஒருத்தி பெண். மல்லிகைத்தீவைச் சேர்ந்தவள். மூதூர்ப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்ப்பவள் என்ற செய்தி என் காதில் விழுந்தது.

‘அடடா ராசமணியா?’ என்று என் மனம் வருந்தியது. நான் அவளுக்காக வேதனைப்பட்டேன்.

இரவு எட்டு மணிக்கு மேலாகி விட்டது. சனக்கூட்டம் கடற்கரை யிலேயே படுத்து விட்டது. அயற்கிராமத்தில் இருந்து வந்த தமிழ் மக்களால் இனிமேல் தங்களது ஊருக்குப் போக முடியாது. அன்று பிரயாணம் பண்ணியவர்களாகத் தாங்கள் நினைத்துக் கொண்டிருக் கும் தங்கள் உறவினர்கள் இந்த லோஞ்சில்தான் பிரயாணம் செய்திருப்பார்கள் என எண்ணிய அவர்கள், முடிவை அறியுமட்டும் அசைவதில்லை எனத் தீர்மானித்துக்கொண்டவர்களாக கடற்கரை மணலில் தூங்கிவிட்டார்கள்.

என்னால் வாடைக் கூதலைப் பொறுக்க முடியவில்லை. ஆனால், அல்லாடும் சனங்களை விட்டுப் போகவும் முடியவில்லை. நான் தயங்கிக்கொண்டு நிற்கையில், “வாருங்க மாஸ்டர்” என்று என் கையைப் பிடித்து அழைத்தான் றபீக், என் பால்ய காலத்துச் சிநேகிதன். நான் அவனோடு சென்றேன். ஜெட்டிக்குப் பக்கத்தில்தான் அவனது வீடு. வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த மன்சூர் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு தேம்பி அழுதார்.

அவர் யாருக்காக அழுதார் என்பது எனக்குத் தெரியவில்லை .

அழுதவர் தம் விம்மல்களுக்கிடையே சொன்னார். “மகன் றெஸீன் காலையில் கல்விக் கந்தோரிலே விஞ்ஞான உபகரணங்கள் எடுக்கப் போனான். அவனும் ஒண்ணரை மணி லோஞ்சில்தான் வந்திருப்பான்” என்று சொல்லிக்கொண்டே அழுதார்.

அவர் அழுகை சற்றுக் குறைந்தபோது, “றெஸீன் இந்த லோஞ்சில வந்திருக்க மாட்டான். நானும் ஒரு வாத்தியார். கல்விக் கந்தோருக்குப் போனா ஒடனே இந்தாண்டு சயன்ஸ் சாமான்களைத் தூக்கிக் கொடுத்திருக்க மாட்டாங்க. அதுகளைக் கணக்கெடுத்து நாலஞ்சு புத்தகத்தில் பதிஞ்சு நம்ம கையில் ஒப்படைக்குக்கல அதிகமாகக் கந்தோர் பூட்டிடுவாங்க. அதனால் றெஸீன் இந்த லோஞ்சில வந்திருக்க மாட்டான்” என்றேன் நான்.

“இல்ல மாஸ்டர். நான் சாமான்கள் எடுத்தா என்ன? எடுக்காட்டி யென்ன? ஒண்ணரை மணி லோஞ்சிக்கு வந்திருவேன் எண்டு சொல்லிப் போனான்.”

“எண்டாலும் இந்த லோஞ்சில வந்திருப்பான் எண்டு நான் நம்பலை. நீங்க ஏன் அவன் இதுலதான் வந்திருப்பானெண்டு நினைக்கிறீங்க?”

மன்சூர் தனது கண்களைத் துடைத்துக்கொண்டு இருக்கையில், நான் அவர் கைகளைத் தொட்டு;

“மௌத்து ஒண்ணும் நம்ம கையில இல்ல. அது இறைவனு டைய சித்தம். றெஸீன் இந்த லோஞ்சில வந்தான் என்பதுக்கு எந்த சாக்கியும் இல்ல. இறைவனை நம்பிக்கொண்டு கலவரப் படாமல் கொஞ்சம் அமைதியாயிருங்க” என்று மீண்டும் அவருக்கு ஆறுதல் சொன்னேன்.

மன்சூர் சற்றே அமைதியானார். “வாருங்கள் ஊட்டுக்குப் போவோம். இந்த வாடைக் கூதல் உங்களுக்குப் பிடிக்காது.”

“இல்ல மாஸ்டர். நீங்க ஊட்டுக்குப் போங்க. நான் இங்க இரவைக்குத் தங்கப் போறன்” என்றார் மன்சூர்.

நான் அவரைவிட்டு என் சைக்கிளில் வீட்டுக்குக் கிளம்பினேன்.

பழைய நினைவுகள் என் மனதில் விரிகின்றன.

***

மன்சூரின் சகோதரர் மஸ்ஹுர் மௌலவி எமது பாடசாலை யில் மௌலவி ஆசிரியர். அதன் காரணமாக அவர் நாநா மைசூரையும் நன்றாக அறிவேன். ஊரிலே சிறுசிறு ஈயோட்டு யாபாரம்’ செய்துகொண்டு வாழ்க்கையை ஓட்டினார்.

ஆனாலும், வறுமையிலும் தம் பிள்ளைகளைப் படிப்பிப்பதில் மிகக் கருத்தாக இருந்தார். மூதூரில் படித்த அவரது மூத்த மகன் றெஸீன் பின்னர் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஏ.எல் படித்து விஞ்ஞானப் பட்டதாரியானார்.

ஒரு நாள் என்னைச் சந்தித்த மன்சூர், “மாஸ்டர் உங்கட்ட வர எண்டுதான் இருக்கன். நேரங் கிடைக்கல்ல. இண்டைக்கு மகரிப்புக்குப் பொறவு கட்டாயம் வருவன்” என்றார்.

“நீங்க எப்ப வேணுமானாலும் வாங்க. நான் எப்பவும் ஊட்டுலதான் இருப்பன்” என்று சொல்லிப் பிரிந்தேன்.

அன்றிரவு அவர் சொன்னதுபோல வீட்டிற்கு என்னைத் தேடிக் கொண்டு வந்தார். தேனீர் உபசாரத்தின் பின்னர் நான் கேட்டேன்.

“என்னோடு என்னமோ கதைக்க வேண்டுமிண்டு சொன்னீர் களே ?”

“எல்லாம் என் மகனைப் பத்தித்தான்.”

“றெஸீன் தானே! அவனுக்கென்ன. அருமையான புள்ள. நம்ம ஊரில் சைன்ஸ் பட்டதாரியான ரெண்டு மூணு பேரில் அவனும் ஒருத்தன். இது நமக்கெல்லாம் பெருமை.”

“பெருமைதான் மாஸ்டர். ஆனால், அவன் அந்தப் பெருமை யெல்லாம் கெடுத்திடுவான் போலயிருக்கு.”

“என்ன நீங்க சொல்றீங்க. நான் நேத்துக்கூட அவனைக் கண்டேன். என்னோட கதைத்திட்டுத்தான் போனான். அவனுக்கென்ன குறை?”

“மாஸ்டர் நான் கஷ்டப்பட்டு சின்னச் சின்ன யாவாரம் செஞ்சி குடும்பத்தையும் காப்பாத்தி அவனையும் படிப்பிச்சேன்.”

“உங்க கஷ்டம் எனக்குத் தெரியுமே. கஷ்டப்பட்டதுக்குத் தக்கதாக சுகத்தையும் கண்டிருக்கிங்க. மகன் சைன்ஸ் பட்டதாரியா வந்திட்டான்.”

“மாஸ்டர் அவன் பட்டதாரியா வந்து நம்ம ஊர்ப் புள்ளை களுக்கும் படிப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனா அவன் அக்கரைப்பத்திலே கலியாணம் முடிக்கப் போறேன் என்கிறான்.”

“அப்படியா?”

“ஓம் மாஸ்டர். அங்க கலியாணம் முடிச்சா அங்கேயே குடி யிருந்திடுவான். அதனால் நம்ம ஊருக்குப் பிரயோசனம் இல்லாமப் போயிரும். மாஸ்டர் நீங்க அரிவரியிலயிருந்து அவனுக்குப் படிச்சிருக்கீங்க. உங்களில் அவன் மரியாதை வச்சிருக்கான். அவன்கிட்ட நீங்க கதைச்சி என்ர ஆசையையும் விருப்பத்தையும் சொல்லிப் பாருங்க. அவன் நம்ம ஊரில கலியாணம் முடிச்சு நம்ம ஊரிலேயே வாழ்ந்து நம்ம ஊர்ப் புள்ளைகளுக்குப் படிப்பிக்க வேணும்…. அதுதான் என்ர ஆசை.”

“பொண்ணை எங்கே சந்திச்சான்?” “ரெண்டுபேரும் பேராதனையில் ஒன்றாகச் சந்திச்சாங்களாம்.”

“சரிதான் காதல் போல இருக்கு. எதுக்கும் நான் அவன்ட கதைச்சிப் பார்க்கிறேன்.”

“நீங்க சொன்னா அவன் கேப்பான். அவன் மனசைத் திருப்பணும்.” என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு அவர் கெஞ்சினார். அடுத்த நாளே நான் றெஸீனைச் சந்தித்து என் வீட்டுக்குக் கூட்டி வந்து அவனிடம் கேட்டேன்.

“என்னப்பா றெஸீன். நீ அக்கரைப்பற்றிலே கலியாணம் முடிக்கப்போறியாமே?”

“ஆர் சேர் உங்களுக்குச் சொன்னது. வாப்பாவா?” “இல்லையில்லை நான் கேள்விப்பட்டேன்.”

“வாப்பா தான் சொல்லியிருப்பார்.”

“இல்ல அவர் சொல்லல்ல. நான் வேற எடத்தால் கேள்விப் பட்டேன். ஆனா விசயம் பொய்யல்ல என்பது உன்ர பதட்டத்தைப் பார்த்தாலே விளங்கியது. பொண்ணை எங்கே கண்டாய்?”

“பேராதனையில ஒன்னாத்தான் என்னோட படிச்சவ.”

“ஓஹோ அப்ப காதல் எண்டு சொல்லு.” நான் சிரித்தேன். றெஸீனும் சிரித்தான். நான் சொன்னேன்.

“எனக்கு வாப்பாவை சின்ன வயசிலேந்து தெரியும். வாப்பா நிச்சயமாக ஒன் விருப்பத்திற்கு எதிராக இருக்க மாட்டார், ஆனா நீ இந்த ஊரை உட்டுட்டுப் போயிருவா எண்டுதான் அவர் கவலைப் படுரார். நீ இந்த ஊரில் நம்ம புள்ளைகளுக்கு சைன்ஸ் படிப்பிச்சி நம்ம ஊரை முன்னேற்ற வேணும் எண்டுதான் அவர் கனவு கண்டார். அவர்ர கனவு, அவர்ர ஆசையை பாழாக்கிப் போடாதே.”

“வாப்பாட அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேத்துவேன் சேர். அதுக்காக வேண்டியும் தான் இந்தக் கலியாணத்தைப் பண்றேன்.”

“நீ சொல்லுவது விளங்கலியே றெஸீன்.”

“சேர் என்ர மனிசியும் என்னைப்போல ஒரு சைன்ஸ் பட்டதாரி தான். நான் கலியாணம் முடிச்ச கையோட அவவையும் இங்க கூட்டி வந்திருவன். எண்ர சேவையை மட்டுமில்ல எங்க ரெண்டு பேர்ட சேவையும்கூட இந்த ஊருக்குக் கெடைக்கும்.”

“அதெப்படி? நம்ப முடியலையே றெஸீன். நம்ம கிழக்கு மாகாணத்தில் கல்யாணம் பண்ணினவன் அவன் தமிழனோ, முஸ்லீமோ அவன் பெண் வீட்டுல தான் வாழ வேணும். இதுதான் நம்மட சம்பிரதாயம். அதை மாத்த ஏலுமா?”

“நிச்சயமாக வருவாள் சேர். கெம்பசில விரும்பியபோது நான், என்ர வாப்பாட ஆசையை நல்லா அறிஞ்சிருந்தேன். அதனால கல்யாணம் ஆனதும் என்ர ஊருக்கு வந்தால் தான் உன்னைக் கலியாணம் முடிப்பேன் என்று கண்டிப்பாகச் சொன்னேன். அவள் வருவதாகச் சத்தியம் பண்ணித் தந்திருக்கிறாள்.”

“காதலிச்சவள் சத்தியம் பண்ணித் தந்திருக்கலாம். ஆனா அது நடைமுறையில் சாத்தியப்படுமா? என்பது எனக்குச் சந்தேகம் தான்.”

“நிச்சயமாகச் சாத்தியப்படும் சேர், அந்த நம்பிக்கையில் தான் நான் கலியாணத்துக்குச் சம்மதிச்சேன். கலியாணமான கையோட நான் மனுசியை மூதூருக்குக் கூட்டி வந்திடுவன். இதை நீங்க நம்புங்க.”

“நான் நம்புறது இருக்கட்டும். ஆனா நீ வாப்பாட ஆசையை மட்டும் கெடுத்துப் போடாத.”

“நிச்சயமாக அவர்ர ஆசை நிறைவேறும். ஊருக்கு என்ர சேவை மட்டுமல்ல என்ர மனுசியோட சேவையும் கிடைக்கும். வாப்பா ரெட்ட சந்தோசப்படுவார்.”

றெஸீன் இதை முற்று முடிவாகச் சொல்லிவிட்டுப் போய் விட்டான். அடுத்த நாளே அவன் சொன்னவைகளை நான் மன்சூரிடம் சொன்னேன். மன்சூர் சொன்னார்,

“அவன் விரும்பிய பொண்ணை அவன் கலியாணம் முடிக்கட்டும். அதை நான் எதிர்க்கல. ஆனா அவன் சொல்ற மாதிரி கலியாணம் முடித்த பொறவு நம்மட ஊருக்கு வந்து படிப்பிக்க வேணும் என்பதுதான் எனது ஆசை.”

“உங்க ஆசை நிறைவேறும்” என்று நான் அடித்துச் சொன் னேன். றெஸீன் சொன்னதுபோலவே மட்டக்களப்பில் கலியாணத்தை முடித்து தன் மனைவியையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு வந்தான்.

தற்போது அவனும் மனைவியும் மூதூர் மத்திய கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியர்கள். மன்சூர் மகன் பிறந்தபோது அடைந்த சந்தோசத்தை விட பன்மடங்கு ஆனந்தத்தை அனுபவித்தார்.

அந்த றெஸீன் கடலிலே ஆழ்ந்து போனதுக்காக இன்றைக்குக் கலங்குகிறார். என்னால் இரவு நித்திரை கொள்ள முடியவில்லை. ஆழ்ந்து போன அந்த லோஞ்சில் றெஸீன் வந்திருப்பானா? அந்த இளைஞனின் சேவையை ஏன் அவனது மனைவியின் சேவையைக் கூட என் ஊர் இழந்துவிடுமா? என் மனது எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியது. என் மகன் வந்து என்னை எழுப்பினான்.

“வாப்பா சைக்கிள் ரிப்பேர் கடை நிசாரும் இந்த லோஞ்சில தான் வந்திருக்கான். இப்ப தப்பி வந்திருக்கானாம். லோஞ்ச் கடலில் அகப்பட்டதாம். அதைப் புடிச்சிக்கிட்டு நீஞ்சியிருக்கான். கடலில் மிதந்து கொண்டிருந்த அவனை கிண்ணியா போட்காரர்கள் காப்பாத்தி அவனை இங்கே கொண்டு வந்து விட்டிருக்காங்க.” என் மகன் சொல்லியதை முழுவதும் கேட்காமலே நான் சைக்கிள் கடைக்காரன் வீட்டுக்கு ஓடினேன்.

அங்கே சனக்கூட்டம். கூட்டத்தோடு கூட்டமாக நானும் நின்றேன். “நீங்க உள்ளே போங்க -மாஸ்டர்.”

“நான் போறது இருக்கட்டும். கடலில் ஆண்டவன் துணையால தப்பி வந்தவனை கொஞ்சம் ஆறுதலா இருக்க விடுங்க.” வீட்டு முற்றத்திலே படங்குச் சாய்கதிரையிலே நிசார் இருந்து பேசிக் கொண்டு இருந்தான்.

“இங்க இருந்து பதினொரு மணிக்குப் புறப்பட்ட லோஞ்சி, பன்னண்டு சொச்சத்துக்கு திருகோணமலைக்கு வந்திச்சு. அதுக்குப் பொறவு அந்தக் கொக்சனுக்கு லீவு. அவன் ஊட்ட போற வழியில நல்லாக் குடிச்சிருக்கான். அண்டைக்கெண்டு ஒன்றரை மணிக்கு வாரதுக்கிருந்த லோஞ்சி ரிப்பேராகப் போக இவனைப் பிடிச்சி இழுத்து வந்து லோஞ்ச விடச் சொல்லியிருக்காங்க. கொக்சன் மாட்டேன் எண்டிருக்கான். ஆனா நம்மாக்கள் எல்லாரும் தெண்டிச்சதால அவன் வந்திருக்கான். அவனுக்கு வெறி. சரியான சனம். நூத்தியிருபத்தைஞ்சி பேர் மட்டில இருக்கும். அதில் இருபத் தஞ்சி பேர் மட்டில ஆமிக்காரன். அவங்க எல்லாருமே மேல் தட்டுல. நானும் மேல் தட்டுலதான் இருந்தேன்.”

“நம்ம ஆட்கள் யாரெல்லாம் லோஞ்சில இருந்தாங்க?” என்று யாரோ கேட்கிறார்கள்.

“லோஞ்சிக்குள்ள இருந்த எல்லாரையும் நான் காணல. ஆனா நம்ம றெஸீன் மாஸ்டர் லோஞ்சில ஏறி உள்ள போனதை நான் கண்டன்.”

எனக்கு இதயம் நின்றுவிட்டதுபோல தோன்றிற்று. ஸ்தம்பித்து நின்றேன். மேலே அவன் பேசிக்கொண்டிருந்தான்.

“லோஞ்ச் சரியான லேட்டாக வருகிறது. பாதாள மலைக்குக் கிட்ட வந்திட்டு. வெளியில் நிண்ட கொக்சன் சுக்கான் கம்பை காலால்தான் தள்றான். லோஞ்ச் தத்தளிச்சுப் போகுது. திடீரென மடார் எண்டு கடல் அடிக்கிது. வானம் இருண்டுக்கிட்டு வந்து சொழண்டு வீசிச்சி. லோஞ்ச் சின்னங்க மலைப்பக்கமாக சாயுது. சனமெல்லாம் ‘என்ட அல்லாஹ்’ எண்டு கத்துது. சிலது ‘முருகா’ எண்டு கத்துது. பாத்திருக்கக்குள்ள லோஞ்சிக்குள்ள தண்ணி ஏறிக் கொண்டது. ‘காப்பாத்துங்க’ ‘காப்பாத்துங்க’ எண்டு சனம் கத்தியது. நான் சாரனையும் சேட்டையும் கழட்டிட்டு கால்சட்டையோட மட்டும் நிக்கேன். லோஞ்சி குத்தலுக்கே இருந்து ‘காப்பாத்துங்க’ ‘காப்பாத்துங்க’ எண்டு சத்தந்தான் கேக்குது. லோஞ்ச் தாண்டிட்டுப் போவுது. போவக்குள்ள நம்ம வீடமைப்பு அதிகாரி தோப்பூர் அபுல்குதா மேலே வந்து நீந்திறார். அவர் மனுசி உள்ளுக்க. அவளையும் வெளியே இழுக்கிறார். இந்த இழுபறியில் அவரையும் காணல. எண்ட கைக்கு றெஜிபோம் பெட்டி ஒன்னு கெடைச்சிது. அதைப் புடிச்சிக்கிட்டு நான் நீஞ்சுறன். கிண்ணியாக்கார மீன்பிடி போட் கடலில் கசனாத்தான் வருவுது. அதுல ஒரு போட் என்னைத் தூக்கி உள்ள போட்டிச்சி. அதுக்குப் பொறவுதான் நேவி லோஞ்சும் வந்தது.”

நிசார் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறான். அர்த்த சாமத்திற்கு மேலாகி விட்டது. என்னால் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை. வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுகிறேன். ஆனால், அன்று எனக்கு சிவராத்திரி.

அடுத்தநாள் விடிந்ததும் விடியாததுமாக ஜெட்டிக்குப் போகிறேன். இன்னமும் சனங்கள் கடற்கரை மணலிலே படுத்துக் கிடக்கிறார்கள். சிலர் எழுந்து ஒப்பாரி சொல்லி அழுகிறார்கள். எல்லா முகங்களிலும் சோகம் எழுதி ஒட்டியது போல் இருக்கிறது. இறந்து போனவர்களுள் றெஸீனும் ஒருவன். அவனது உற்றார் உறவினர்கள் எல்லாரும் கடற்கரையிலேயே நிற்கிறார்கள். அன்று மட்டுமல்ல அதற்கு அடுத்த நாள், அடுத்த நாள். பத்து நாட்களுக்கு மேலே சனம் கடற்கரையில் நின்றது.

கடலிலே இறந்து போன சடலங்கள் மிதந்து வாடைக் காற்றுக்கு கொட்டியாரக்குடா கடலின் கரைகளில் ஒதுங்கும் என்று அவர்கள் தேடிக்கொண்டே இருந்தார்கள்.

லோஞ்ச் ஆழ்ந்ததால் ஐம்பது பேருக்கு மேல் இறந்திருக்கலாம் என்று மதிப்பீடு. ஆனால் எந்தச் சடலமும் கரையொதுங்கவில்லை . கடலில் மிதக்கவுமில்லை . ஆச்சரியந்தான்.

கடற்போரிலே ஈடுபடும் மாலுமிகள் இறந்து போனாலோ அல்லது கப்பலில் பிரயாணம் செய்யும் பயணிகள் இறந்து விட்டாலோ அவர்களின் சடலங்களைப் பெட்டியிலோ அல்லது பெட்டி போன்ற ஏதாவது ஒன்றிலோ வைத்துக் கடலிலே சமாதி யாக்குவார்களாம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், பாதாளமலைக் கடல் மனித முயற்சி எதுவுமே இல்லாமல், தன் மடியில் மரித்தவர்களையெல்லாம் தன் உதரத்தின் ஆழத்தில் ஜலசமாதி ஆக்கிக் கொண்டது.

இப்போதும் லோஞ்ச் பிரயாணத்தின்போது பாதாளமலை அடியைத் தாண்டிக் கொண்டு செல்கையில் அங்கே ஜல சமாதியாகிவிட்ட றெஸீனை நினைத்துக் கொண்டு அவனது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன்.

– தினகரன் வாரமஞ்சரி 1999 நவம்பர் 21 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *