கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்  
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 14,369 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வண்ணதாசனின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நான் சின்னு முதல் சின்னுவரை தேர்வு செய்வேன்.. அத்தனை நுட்பம். செறிவு மற்றும் கவித்துவம். கதையை அவர் சொல்லும்போது கூடவே நாமும் அந்தக் காட்சிகளை, மனிதர்களை அறிமுகம் செய்துகொள்ளத் துவங்குகிறோம் – எஸ்.ராமகிருஷ்ணன் (சின்னு எனும் சங்கீதம்)

பாகம் ஒன்று | பாகம் இரண்டு

ஆயிரமாயிரம் சொல்லட்டும். அவள் அப்படி, இப்படி என்று வண்டி வண்டியாய்க் கேவலமாய்ப் பேசட்டும். ‘இந்தத் தந்தி போஸ்ட் தாண்டி, அந்த முடுக்குக்குள் ஒரு எட்டு எடுத்து வைத்தால் கூடப் போதும். நாளைக்கும் பின்னைக்கும் உங்களுக்கு மரியாதை என்கிறது இருக்காது தெருவில்’ என்று எச்சரிக்கை பண்ணட்டும்.

அதற்காக எல்லாம் சின்னுவைப் பார்க்க முடியாமலிருக்க முடியுமா? அதுவும் எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவிலேயேதான் அவள் இருக்கிறாள் என்று தெரிந்தபோது அப்படி இருந்து விடமுடியுமா.

ஏதோ ஒரு பேச்சு வருகையில் ஹைஸ்கூலில் ஒன்றாகப் படித்த ஜவஹர் ராஜ் மருந்து குடித்துச் செத்துப்போனது, அவனுடைய அக்கா (எங்களுக்கெல்லாம் அல்ஜீப்ரா தெரிகிறது என்றால் அது அந்தத் திலகா அக்கா புண்ணியம். கணக்கை வெறும் கணக்காகச் சொல்லிக் கொடுத்தால் சிரமம்தான். திலகா அக்கா ஒரு பாடல் போலச் சொல்லிக் கொடுப்பாள். ‘நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா’ என்று திருப்பிச் சொல்வது போல அவ்வளவு எளிதாக இருக்கும். சின்ன வயதில் கண்ணாடி போடுவதே அந்தக் காலத்தில் அபூர்வம். அதுவும் பெண்பிள்ளைகள் கண்ணாடி போட்டு நாங்கள் பார்த்ததேயில்லை. திலகா அக்கா தங்க பிரேம் கண்ணாடி அணிந்திருப்பாள். கண்ணாடி அணிந்து ரிங்டென்னிஸ் அந்த வாசலிலேயே ஆடும் போதும் சரி, ஒரு நியமம் போல முகம் கழுவுவதற்கு முன் கழற்றி வைத்துவிட்ட பிறகும் சரி, முகம் அழகாகவே இருக்கும். தலைவாரி, ஒற்றைச் சடை போட்டு, பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு முடிப்பாள்.

இதோடு கண்ணாடியை அணிந்து கொள்ளலாம். அணியமாட்டாள். டக்கென்று ரேடியோவைப் போடுவாள். சிலோன் ரேடியோவில் மயில்வாஹனன் சத்தம் கேட்கும். அல்லது இசையும் கதையும் நிகழ்ச்சியில், ‘கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ ‘, ‘உன்னைக் கண்டு நான் ஆட, என்னைக் கண்டு நீ ஆட’ என்ற பாட்டுக் கேட்கும். முதலில் அதிக சத்தம் வைத்து, அப்புறம் முள்ளை அங்கே, இங்கே சுழற்றி, கரகரப்பையெல்லாம் சுத்தமாக அகற்றி, மறுபடி ஒலி அளவைக் கச்சிதமாக குறைப்பாள். குறைந்த பிறகு அமிர்தமாகக் காதில் இறங்கும் எல்லாம். அப்படிக் குறைந்த அளவில் ரேடியோவைப் பாட வைப்பதும், சன்னமான தீர்க்கத்துடன் குத்து விளக்குச்சுடரை முத்துப்போல் ஏற்றுவதும் ஒரு பெரிய கலை. திலகா அக்காவால் அது முடிந்தது. அப்படி ரேடியோவைப் பாடவிட்ட கையோடு, கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு திலகா அக்கா வருவாள். கட்டு மரத்தை எப்போது கடலுக்குள் தள்ளுகிறார்கள், அதில் எப்போது ஏறுகிறார்கள் என்ற மாயத்தைச் சொல்ல முடியாதது எப்படியோ அப்படியே திலகா அக்காவின் கண்ணாடிச் சட்டம் முகத்தின் பக்கவாட்டில் பொருந்துவதும் அவர்கள் சிரிப்பதும். அந்தச் சிரிப்பைப் பார்த்ததும் அல்ஜீப்ரா எல்லாம் தூசு. ஊதி விடுவோம்…) வீட்டைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா போய்விட்டதாகவும் அந்த வீட்டில்தான் சின்னு வாடகைக்கு இருப்பதாகவும் சொன்னார்கள்.

சின்னுவைப் பற்றி ஒரு வரி யோசிப்பதற்குள் ஜவஹர் ராஜ் வீட்டு திலகா அக்கா ஞாபகத்தில் இவ்வளவு ஓடி விட்டது. வாழ்க்கை , வயது, மனம் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. நேர்த்தியான சிற்பங்கள் தூண் தூணாகச் செதுக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபமாக அது இருக்கையில், ஒரு தூணிலிருந்து இன்னொரு தூணுக்கு நகர்வதற்கு முடியாமல் ஒவ்வொரு இணுக்கிலும், இழைவிலும் புல்லரித்து நிற்கும்படி மனிதர்கள் இருக்கிறார்கள். அடித்தூண் பார்த்து, நடுத்தூண் பார்த்து அப்புறம் அண்ணாந்து பார்ப்பதற்குள் ஆயுசு இருட்டிவிடுகிறது. இதற்குள்தான் படையெடுப்பு, இடிபாடு, தேய்மானம், மூளியானது!, தூசுதும்பு துடைத்து புனருத்தாரணம். எல்லாவற்றுக்கும் மத்தியில் எந்த முகம் அலுத்தது, எதைத் தாண்டிப் போக முடிகிறது, எதை ஒதுக்கி வைக்க முடிகிறது. அலை ஒதுக்கின கிளிஞ்சலை விடவா கடல் அழகு.

சின்னுவும் அப்படியொரு அழகு. மூக்கால், கண்ணால், பல் வரிசையால் எல்லாம் பத்துக்கு இரண்டு பேர் அழகாய் இருப்பார்கள். கல்யாணப் பந்தலில் லஸ்தர் கட்டினது மாதிரி ஒரு சமயத்தில் இருந்த அழகு இன்னொரு சமயம் இல்லாமல் போகும். சில சமயம் ‘ஈ’ என்று அசட்டு இளிப்பை இளிக்கவும் செய்யும். சின்னுவுக்கு அப்படியொரு அழகுண்டு. பிலுபிலுவென்று முன்வரிசை பூராவும் நெற்றியில் சுருண்டு நிற்கும். அவ்வளவு ஈரமும் மினுமினுப்பும் அகலமுமாகக் கண் உருளும். சற்றுக் கூர்மையில்லாத மூக்குத்தான். ஆனால் அதை அந்த ஒற்றை மூக்குத்தி சாப்பிட்டு விடும். சிரிப்பு என்கிறது மேலே எட்டு, கீழே எட்டு என்று காட்டுகிற பல் வரிசை மட்டுமா? காரை, கருப்பு, பழுப்பு இல்லாமல் இருக்கிற ஆரோக்யம் மட்டுமா? அது ஊற்று மாதிரி மனதிலிருந்து பொங்கிப் பூப்பூவாகப் புல்லில் விழுந்து குளிரவைக்கிற விஷயம். தான்மட்டும் ஒற்றையாய்ச் சிரிக்காமல், பக்கத்தில் இருப்பவர், எதிரில் இருப்பவர் எல்லோரையும் தொற்றிக் கொள்ள வேண்டும். சடசடவென்று பெய்கிற மழை மாதிரி ஜன்னல் வழியாக வீட்டுக்குள் தெறிக்கவேண்டும். தூங்குகிற குழந்தை மேல் விழுகிற நிலா வெளிச்சம் மாதிரி, தானும் அழகாகித் தான் விழுமிடத்தையும் மேலும் அழகாக்க வேண்டும். சின்னு அப்படித்தான் செய்தாள். சின்னு சிரிப்பும் அப்படித்தான் இருந்தது.

உலகத்தில் மனைவிமார்களின் உடனடித் தங்கைகளின் அழகும் பிரியமும் இருக்கிறதே அது இன்னொரு அற்புதமான விஷயம். ஒரு அற்புதத்தைப் பற்றிப் பேசுகையில் இன்னொரு அற்புதத்தின் பேச்சு வரக் கூடாது என்று கட்டாயமா என்ன? சற்று நேரமாவது ஒன்றுடன் ஒன்று நெருக்கியடித்துக் கொள்கிற அற்புதவரிசையாக வாழ்க்கை இருக்குமெனில் அற்புதம்தானே.

என்னுடைய கொழுந்தியாளுக்கு ஒரு வீடு வாடகைக்குத் தேடும்போதுதான் சின்னுவைப் பார்க்க முடிந்தது. சின்னு என்கிற இந்தச் ஸ்ரீனிவாச லட்சுமி வேறு யாருமல்ல. ஆறாவது வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி வரை என்னுடன் ஒன்றாகப் படித்த ஆர். கண்ணனின் மனைவி. ஆர். கண்ணன் தான் ஆறாம் வகுப்பில் இன்ஸ்பெக்ஷனுக்காக மீரா வேஷம் போட்டான். டூ, ஃபோர், சிக்ஸ், எய்ட் என்று ரெசிட்டேஷன் சொல்லிப் பரிசு வாங்கினான். நான் எப்போதும் முதல் ராங்க் வாங்கிக் கொண்டு, நவம்பர் மன்த்லி டெஸ்ட்டை விட அரையாண்டுத் தேர்வில் அரைமார்க் தமிழில் குறைவாக வாங்கினதற்காக, அப்பாவிடம் கன்னா பின்னாவென்னு அடிவாங்கிவிட்டு, முனிசிபல் பார்க்கில் தன்னந்தனியாக இட்லிப்பூ பறித்துக் கொண்டிருந்தேன். புல் கற்றைக்கிடையில் அணில்கள் ஒடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாதாங்கொட்டை ருசியை விட, வாதாம் பழ நிறமும், வாதாம் பழ நிறத்தைவிட, வாதாம் மர இலையின் நிறமும் அழகு என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதும், வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததன் அழகு எல்லாம் இப்போதுதான் தெரிகிறது என்பதும் உண்மை .

அப்புறம் ஹைஸ்கூல் போன பிறகும் கூட ஆர் கண்ணன் தாவீதும், கோலியாத்தும் நாடகத்தில் தாவீதாக நடித்தான். எனக்கு என்ன வேலை என்கிறீர்கள். தொடர்ந்து ஆங்கிலத்தில் முதல் மார்க்கும், ஞாபக சக்திக்குப் பெரிய பெயரும் வாங்கியிருந்ததால் ஸ்டேஜின் ஒரு ஓரத்திலிருந்து வசனத்தை மறந்தால் எடுத்துத் தருகிற ப்ராம்ப்ட்ட ர் வேலை. முழு வசனமும் அத்துபடியாகி வீட்டில் நான் மட்டும் நடித்துக் கொண்டிருக்க, படிக்காமல் எதையோ உளறிக் கொண்டிருப்பதாய் பிடரியில் அடி. வேறு யார் அடிப்பார்கள். அப்பாதான். அந்த ராத்திரியில் முனிசிபல் பார்க்கிற்கா போக முடியும். தலையணையைப் போட்டுப் படுத்துக் கொள்வேன். சுவர் ஓரம் பிள்ளையார் எறும்பு போய்க் கொண்டிருக்கும். வெவ்வேறு காலங்களில் மெழுகப் பட்ட சாணிப் பொறுக்குகள் தளச் செங்கல்களிலும், சுவர் ஓரங்களிலும் விரல் விரலாக எடுக்க, எடுக்கக் கிளம்பும். இந்த வினாடியில் கூட அந்த ராத்திரியில் நுகர்ந்த சாணிப் பொறுக்கின் மணம் நாசிக்கு வருகிறது.

அப்படியிருக்க ஏழெட்டு வருஷங்களுக்குள் அறிமுகமான சின்னுவின் முகம் எப்படி மறக்கும். சின்னுவைப் பார்த்த இடம் வினோதமானது.

இந்தக் காலம் மாதிரி காலனிகளோ, தனித்தனி வீடுகளோ அந்தக் காலத்தில் ஏது. கிடைத்த இடத்தில் தோன்றினது மாதிரி அல்லது தோன்றின இடத்தில் கிடைத்ததை வைத்துக் கட்டின வீடுகள். தெருவை ஒட்டி ஒரு வீடு. அப்புறம் கல்யாணம் காட்சி நடத்த என்று ஒரு வாசல். அப்புறம் இரண்டு வரிசையாக வீடு. அப்புறம் தொழு. குத்துப்புரையாக இருந்து இப்போது அந்த இடத்திலும் ஒரு சிறு அறை. அதற்கப்புறம் வியாபாரத்திற்குத் தோதுவாக சரக்குகளை அடுக்க ஒரு பெரிய அறை. இதை ஒட்டி ஒரு சந்தில் ஆற்றுத் தண்ணீர் குழாய், அதையும் தாண்டிப் போனால் வாடகைக்கு விடுகிற திட்டத்தோடு கட்டப்பட்ட மூன்று சிறு வீடுகள்.

தாங்கள் சின்னுவைப் பார்த்தது அந்தச் சந்தில்தான். மிகவும் நுணுக்கமாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாகி விடாத கவனத்துடன், சின்னு குனிந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள்.

இந்த வீடு பிடிக்கிற, ஊர் விட்டு வேறு ஊர் போகிற சங்கடங்கள் எல்லாம் கோடை காலங்களில்தானே நேர்கின்றன. கிட்டத்தட்ட ஆறுமணியான சமயத்திலும் வெயில் சுவரில் மடங்கி விழுந்து கொண்டிருக்க, சுருள் சுருளான முடிகளை ஒதுக்கிவிட்டுக் கொண்டு சின்னு, நிரம்பிய குடத்தை ஒரு வீசு வீசி இடுப்பில் வைத்துக் கொண்டு நிமிர்ந்த நேரத்தின் அழகைப் பார்த்தால்தான் தெரியும்.

முதலில் ஆர். கண்ணன் பனியனும் வேட்டியுமாக, அப்புறம் நான் மிக ஒழுங்காகத் தலை சீவி, வாடகைக்கு வீடு தேடுகிறவர்களுக்கு இருக்க வேண்டிய பவ்வியத்துடன். பின்னால் என் வீட்டம்மா.

பார்த்த உடனே சின்னு முகத்தில், இடுப்பில் வைத்த குடத்தோடு, பெரிய சிரிப்பு. ஆர். கண்ணன் அந்தச் சிரிப்பிடம், ‘இது நம்ம அண்ணாச்சி!’ என்று சொல்லிவிட்டுப் போனான் ‘வாங்க!’ என்று சொல்லும்போது என்னைத் தாண்டிவிட்டு, ‘இருங்க, குடத்தை இறக்கிவிட்டு வந்திருதேன்’ என்று சொல்லும்போதே என் மனைவியின் கையைப் பிடித்துவிட்டுப் போனாள்.

இப்படிக் கையைப் பிடித்தவுடனேயே என் மனைவிக்குக் குளிர்ந்துவிட்டது. அவளுக்கும் இப்படித்தான். பேசினால் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். மிகவும் என்னிடம் கோபப்பட்ட சமயத்தில் கூட என் இரண்டு கைகளையும் கூப்பினது போலத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு ‘சொல்லுங்க சொல்லுங்க’ என்று உலுக்கின ஞாபகம்.

புத்தம் புதிதாகச் சிமெட்டி வாசனை, மரவாசனை, சுண்ணாம்பு வாசனை, ஹோமம் நடத்தின புகைத்தடம். அலமாரியில் சார்த்தின பிள்ளையார் படம், வெங்கடாசலபதி படம் என்று சாவிக்கு உடனே திறக்காத பூட்டும், தச்சு ஆசாரியின் மூச்சுப்பட்ட வெப்பம் தணியாத ஜன்னல் கதவுமாக இருந்தது வீடு.

மனிதர்கள் பிடித்த பிறகு இடம் , வசதி, வாடகையெல்லாம் ஏறக்குறைய இருந்தாலும் பெரிதாகத் தெரியவா செய்யும். ஆர்.கண்ணனும் நானும் ஆறாம் வகுப்பிலிருந்து பேசத் தொடங்கினோம். பெண்கள் என்ன அப்படி ஒரே இடத்தில் நின்று விடுகிறார்களா? சின்னுவும், என் வீட்டுக்காரியும் இரண்டாவது நிமிஷம் அக்கா, தங்கை மாதிரி ஆகிவிட்டார்கள். காப்பி போடுகிறேன் என்று சின்னு கிளம்ப, ‘வேண்டாம் இப்போதுதான் குடித்தோம்’ என்று இவள் மறுக்க, ‘நீங்க குடிக்காவிட்டாலும் அண்ணாச்சி குடிப்பாங்க’ என்று சின்னு என்னைப் பார்க்க, ‘அதெந்த அண்ணாச்சி மானத்லே இருந்து குதிச்ச அண்ணாச்சி’ என்று அடுக்களைக்குள் போய் காப்பிப்பொடி டப்பாவை இவள் பிடுங்க –

காப்பி சாப்பிட மாட்டோம் என்று சொல்லிவிட்டு, அப்புறம் ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்புகிற அளவுக்கு அன்றைக்கு நேரமாகிவிட்டது. சரியான தளத்தில் இறங்கி, சரியான முகங்களும் தென்பட்டுவிட்டதெனில் சம்பிரதாயங்களும், ஊடு திரைகளும், சல்லாத் துணிகளும், முகமூடிகளும் எப்போது கழன்று எங்கே போய் விடுகின்றன என்பது தெரிவதில்லை. இப்படிப் போய் நிற்கிற இடம் சட்டென்று தென்படுவதில்லையே தவிர, இதே போன்று அங்கங்கே எவ்வளவோ இருக்கத்தானே செய்கின்றன. நெற்றியின் மத்தியிலும், கண்களின் ஓரத்திலும் கன்னங்களிலும் விழுந்து கிடக்கிற சுழிப்புகளையெல்லாம் நீவி நீவி அப்புறப்படுத்தி மலர வைக்கிற முகங்களே எதிர்ப்படுவதில்லை என்று எப்படிச் சொல்லிவிட முடியும்.

சின்னுவுக்கு அப்படியொரு முகம் இருந்தது. அப்படி மெத்தென்று நீவி விடும் விரல்கள் இருந்தன. சின்னுவின் நெற்றிப் பொட்டு, சின்னுவின் காது ஜிமிக்கி, சின்னு உட்கழுத்தையொட்டி அணிந்திருக்கும் அட்டிகை போன்ற ஒரு நகை. அவள் உடுத்தும் சேலைகள் எல்லாம் சின்னுவிடம் இருக்கும் அடிப்படையான அந்த பிரபையைத் தூண்டிக் கொண்டிருக்கவே உதவின. ஒரு பெரிய வெண்கலத்தில் வார்க்கப்பட்ட அகல் விளக்கை ஏற்றிவிட்டு வாடாமல் பார்த்து ரசிப்பது போல ஆர்.கண்ணன் நின்றுகொண்டிருப்பதாகத் தோன்றயது.

அப்பாவுக்குப் பிறகு அப்பா நடத்தின கடையை அதே விமரிசையோடு ஆர்.கண்ணன்தான் நடத்திக் கொண்டு வருகிறான். வரிசையாக நாலைந்து தம்பிகள், மூன்று தங்கைகள், அவர்களின் கல்யாணம் காட்சி, கொஞ்சம் அரசியல் பிரபலம் என்று தலை நரைத்துப் போயிருந்தது.

‘முதலாளிக்கு ஒரு முடி நரைக்கலையே’ என்று ஆர். கண்ணன் என்னைப் பார்த்துச் சொன்னான். ‘முதலாளி கவனிச்சுக்கிடுங்க! என்று அப்புறம் சொல்ல ஆரம்பித்தான். ஒருவேளை ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறவர்கள், என்னைப் போன்ற மாதச் சம்பளக்காரர்களைப் பார்த்து ஒருவிதக்குத்தலும், நக்கலுமாகச் சொல்கிற வழக்கம் இருக்கலாம். நான் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. சின்னுவை மத்தியில் வைத்துக்கொண்டு எதையுமே தப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.

சில சமயம் பார்த்துக்கொண்டு நிற்க மாத்திரம்தான் முடிகிறது. ஆபிசிலிருந்து திரும்பும்போது போகும்போது, ஒரு நோட்டுப் புத்தகமோ, மாத்திரையோ, இங்க் பாட்டிலோ வாங்கச் செல்லும்போது நடைபாதையில் நின்றுகொண்டு எத்தனை ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டு நின்றாயிற்று. காய்கறிப் பையையும், இலைக் கட்டையும் உள்ளே கொண்டு வந்து வைத்த கையோடு ‘எவ்வளவு சனம், எவ்வளவு கூட்டம், ரதவீதி அடைச்சுப் போகுதே’ என்று உட்கார்ந்த தினகரியின் அம்மா சொன்னதும் அப்படி பார்த்துக்கொண்டு நின்றதைத்தானே. ‘அம்மி கொத்துகிறதோய்… ஆட்டுரல் கொத்துகிறதோய்..’ என்று தெருத் தெருவாக, வெயிலோடு வெயிலாக இந்தத் தள்ளாமையிலும், வேர்வை ஒழுக சாக்குப் பையில் சுற்றின உளியும், சுத்தியலுமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே இப்படியே அவ்வளவு சைக்கிளும், அவ்வளவு கொடியும், அவ்வளவு கோஷமும் தாண்டிப் போகிறவரை நின்றாரே அவராலும் பார்த்துக் கொண்டுதானே நிற்க முடிந்தது.

ஆர்.கண்ணன் குடும்பத்துக்குள் சொத்துக்குத் தகராறோ மனஸ்தாபமோ வந்து வீட்டை விட்டு வெளியே வந்து தனியாக வீம்புக்கு கடை போட்டு, வெளிச்சமும், விஸ்தாரமுமாக அலங்கரித்ததில் ஏகப்பட்டது செலவாகி, இங்கே அங்கே வாங்கினதைத் திருப்பிக் கொடுக்கிற அளவுக்கு அப்படி வியாபாரம் இல்லாமல் போய் தவங்கிக்கொண்டு இருந்தபோது எங்களால் என்ன செய்துவிட முடிந்தது.

ஆனாலும் ஆர்.கண்ணன் நின்ற இடம் உயரம்தான். தொண்டர் சன்னதியில் ஒரு கல்யாணத்திற்குப் போய்விட்டு வந்தபோது, புதுக்கடையில் உட்கார்ந்திருந்தவன் எங்களைப் பார்த்ததும் இறங்கி வந்தான். அண்ணாச்சி என்றான். மதினி என்றான். ‘ஏட்டி என்ன கல்யாண வீடா,பட்டுப் பாவாடையில் அசத்துதியே’ என்று தினகரின் கன்னத்தை நிமிண்டினான். இன்னும் கொஞ்சம் நரைத்திருந்தது.

கன்னம் வாடியிருந்தது புதிதாக நெற்றியில் அகலக் குங்குமப் பொட்டு வந்திருந்தது. கண்களில் ஒரு திகைப்பு சதா இருந்தது. ‘வீடு ரொம்பக் கிட்டத்தில்தான் இருக்கு. இவ்வளவு தூரம் வந்த பிறகு அண்ணாச்சி வீட்டுக்கு வராமல் போகக்கூடாது. சின்னு ஆட்களேயில்லாமல் தவிச்சுப்போய்க்கிடக்கிறாள்’ என்று கடைப் பையனைக் கூடவே அனுப்பினான். தட்டமுடியவில்லை.

டயோசீசன் பள்ளிக்கூடம் தாண்டி, சர்ச் தாண்டி, வாய்க்கால் தாண்டி, இறைச்சிக்கடை எல்லாம் தாண்டி, தைக்காத்தெரு பள்ளிவாசல் தாண்டி ஒரு சந்துக்குள் போக வேண்டி இருந்தது. இவள் ‘சை..சை’ என்று மூக்கைப் பிடித்துக் கொண்டே வந்தாள். கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குப் போகிற கைப்பிள்ளைக் காரிகளையும், வயசாளிகளையும் தினகரி பார்த்துக் கொண்டே வந்தது. குடை மாதிரி ஒரு மா மரத்தின் கீழ் ஏகப்பட்ட பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மரத்தின் உச்சியில் பச்சைக் கொடி கட்டின கம்பு ஒரு பக்கம் சாய்ந்து அசைந்தது. அதற்குமேல் வானத்தில், வாய்க்காலுக்கு மறுகரையில் உள்ள கட்டடத்திலிருந்து இரண்டு மூன்று பேர் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள். துல்லியமான ஆகாயத்தில் இவ்வளவு வெயிலுக்கும் மத்தியில் அந்த இரண்டு பட்டங்களும் மிக லேசான சலனங்களுடன் பறந்து கொண்டிருந்தவிதம் அப்படியே மனதை ஏதோ செய்தது.

சின்னுவும் மனதை ஏதோ செய்கிறபடிக்கே இருந்தாள். தன்னுடைய பெண்ணை தலைக்குக் குளிப்பாட்டி விட்டு ஜட்டியோடு அதை நிற்க வைத்து தலையைச் சிக்கல் எடுத்து வாரிக்கொண்டிருந்தாள். எட்டு ஒன்பது வயதுதான் என்றாலும் உந்தியும் உடம்பும் மறையாமல் ஈரம் கோர்த்துத் தொங்குகிற நீண்ட தலைமுடியுடன் அது மாந்தளிர் மாதிரி மினுமினுவென நின்றுகொண்டிருந்தது. எங்களைப் பார்த்ததும் சின்னு ‘வாங்க’ என்றாள். மளுக்கென்று கண் நிறைந்து நீர் கட்டி சின்னுவின் பார்வை மிதந்தது. அந்தச் சுருட்டை முடி, ஜிமிக்கி, மூக்குத்தி எல்லாம் இருந்தாலும் ஏதோ இல்லாமலிருந்தது. முக்கியமாக சின்னு என்னிடம் முகம் பார்த்து பேசாதது போலிருந்தது. நகர்ந்து நின்று கொண்டது போலிருந்தது. சின்னுவின் பெண் நேர்த்தியாக ஒரு கவுன் மாட்டிக்கொண்டு என்னிடம் வந்து தண்ணீர் குடிக்கக் கொடுத்தது. அவளிடம் மட்டும் பேசிக்கொண்டு இருங்கள் என்பது போல் என்னையும், மகளையும் மட்டும் விட்டுவிட்டு சின்னு உள்ளே போய்விட்டாள். என் மனைவி, என் மகள் எல்லோரும் சின்னுவுடன் பேசிக்கொண்டிருக்க, நான் மட்டும் நைலான் வயர் பின்னிய அந்த இரும்பு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சின்னுவின் மகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

ஒரு சிறுபெண் நம்மிடம் எவ்வளவு நேரம் பேசிவிட முடியும். சற்று நேரத்தில் அது உள்ளே போய்விட்டது. இதற்குள் வீட்டை அடையாளம் காட்டிக் கொண்டு வந்து விட்ட கடைப் பையன், சைக்கிளைக் கொண்டு வந்து நிறுத்திப் பொட்டலம், பொட்டலமாக எடுத்துக்கொண்டு உள்ளே போனான். மறுபடியும் ஒரு எவர்சில்வர் தூக்கில் ‘டீ’ வாங்கிக்கொண்டு வந்தான்.

இந்தப் பொட்டலம், இந்த டீ, இந்தக் கடைப்பையன் உபசாரம் எல்லாம் அதிகப்படியாகப் பட்டது. நான் விழுந்துவிடவில்லை என்று ஆர்.கண்ணன் எங்களிடம் ருசுப்பிக்க முயற்சித்தது போலிருந்தது. என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் ருசுப்பிப்பதற்கும், நிரூபித்துக் கொள்வதற்கும் எந்த அவசியமும் இல்லை. ஒரு கட்டத்தில் இந்த ருசுப்பித்தலையும் நிரூபணத்தையும் மீறி எல்லாம் புரியக் கூடிய எளிமையுடனேயே இருக்கின்றன. புரிந்த பிறகு புரியாதது போல் நடந்து கொள்வதற்கு யாரும் ஒன்றும் செய்துவிடமுடியாது. கெட்டிக்காரத்தனத்திற்கு ஆர்.கண்ணணின் வியாபாரத்தில் வேண்டுமானால் இடம் இருக்கலாம். இங்கே இந்த வீட்டுக் கூடத்தில் சின்னுவும், குழந்தையும் நாங்களுமாக இருக்கையில் அதற்கு எந்த இடமும் இல்லை .

துக்கமடைந்தது போல் ஒரு மனநிலை கூடி விட்டது. சின்னுவின் வீட்டு வாசலில் ஒரு மூலையில் கிடந்த முட்டைத் தோட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு உடைந்த முட்டைத் தோட்டில் ஆயுள் முழுவதும் பார்ப்பதற்கும், யோசிப்பதற்கும் உண்மையிருப்பது போலிருந்தது. ஒரு சின்னஞ்சிறு பாம்பு அரணை தன் ஆரஞ்சு வாலுடன் சுவர் ஓரமாய் இருக்கிற பொந்துகளில் புகுந்து விடுவது போல் முகத்தை வைத்து நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு தபால்காரர் அந்த வழியாகப் போவது போலக் கற்பனை எப்படி வந்தது என்று தெரியவில்லை. தினசரி வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத புலிகளும் யானையும் எப்படி வருகின்றன என்பது தெரியாதது போல வரிசை வரிசையான டாங்கிகளும், பீரங்கி வண்டிகளும் உறுமிப் பெரிய பெரிய கட்டடங்கள் தங்களுடைய நூற்றாண்டுக் கட்டுமானங்களைப் பெயர்த்துக்கொண்டு கீழே விழ, பெண்களும் குழந்தைகளும் என் பக்கமாக அலறியடித்துக் கொண்டு வருகிற வீதியில் கிடக்கும் ஆண்களின் காலணி ஒன்றில் அப்பியிருக்கிற ரத்தம் கண்டு பதறுகிற காட்சிகள் மனதில் உருவாக என்ன காரணம் என்பது தெரியாதது போல, இந்தச் சமயத்தில் தபால்காரரின் ஞாபகத்தையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆழ்ந்த கடலின் அடியில் வளர்ந்து மண்டிக்கிடக்கிற நீர்த்தாவரங்களின் நாடாக்கள் போன்ற பச்சை இலைகள் அசைவதாகவும், நீரின் வெவ்வேறு அடர்த்திகளைத் தாண்டிக் கீறிக் கொண்டு உள் இறங்கும் உச்சிச் சூரியனின் ரேகைகளைப் பிடித்து விடுவது போல இந்த நீர்த்தாவரங்களின் இலைக் கீற்றுகள் அசைந்தசைந்து மேற்செல்வது போலவும் கற்பனை செய்து கொள்ள வாழ்க்கை எப்படி இடம் அளிக்கிறது. நான் இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கையில்.

‘நேரம் ஆகிவிட்டது. போகலாமா’ என்று தினகரியுடன் இவள் வந்தபோது சின்னுவின் முகமும், முழு உடம்பும் மறைந்திருந்தது. எனக்குச் சின்னுவைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு பார்க்கவேண்டும். பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. மணிக்கட்டுக்கு மேலுள்ள உள்ளங்கைப் பகுதியில் கண்களைக் கன்னம் அதுங்கத் துடைத்துக் கொண்டு சின்னு முகத்தை நிமிர்த்தும்போது கண்ணாடி வளையல் சத்தம் கேட்டது. ஒரு நைந்த ஓலை விசிறி ஒன்று பின்னால் செருகப் பட்டிருக்கிற முகம் பார்க்கும் கண்ணாடியில், சின்னுவின் தலையின் பின்பாகமும், முதுகும் தெரிந்தது.

‘என்ன அண்ணாச்சி உங்களத் தனியா விட்டுட்டு நாங்க உள்ள போயிட்டோமோ’ என்று கேட்டுக்கொண்டே சின்னு சிரித்தாள். எது சிரிப்பு எது அழுகை என்று தெரிந்து கொள்ள முடியாத வயதா நமக்கு. எல்லாம் தெரிந்தது. சின்னு சொல்லச் சொல்ல இவளும் கையைப் பிடித்துக் கொண்டு அழுதிருப்பாள் போல. இவளுடைய அசைவுகளிலும் ஈரம் இருந்தது. அழுகை இருந்தது. இதற்கு முந்தின வினாடிவரை அழுதுவிட்டு, இந்த வினாடி சிரிக்கிற சிரிப்பு இருந்தது. தீவிரமான சோகத்துக்கும், உண்மையான பிரியத்திற்கும் இடையிலான அடர்த்தியினூடே வனங்களில் வைர ஊசியாக இறங்குகிற சூரியக்கற்றை போன்ற ஒரு தாங்க முடியாத பிரகாசம் சின்னுவின் முகத்தில் இருந்தது. சின்னுவின் மகளோ, சின்னுவின் வீட்டில் முன்பு இருந்தவர்களோ, சுவர்களில் எழுதியிருந்த ஆப்பிள் என்ற கோணல் மாணலான ஆங்கில எழுத்துக்களில் கூட அது இருந்தது.

சின்னு என் கையைப் பற்றிக் கொள்ளட்டும். சின்னு நாற்காலியில் நான் இதோ உட்கார்ந்திருக்கிற வசத்திலேயே என் மடியில் மடங்கிப் படுத்து அழட்டும். சின்னு அப்படியே வேண்டுமானால்கூட உறங்கட்டும்.

இப்படியெல்லாம் தோன்றியது. ஆனாலும் தோன்றியவாறு எல்லாம் நிகழ்ந்தால்தான் வாழ்க்கையின் மீது மரியாதை போய்விடுமே. நாம் பாம்புப் பிடாரன் மகுடி ஊத மாட்டானா என்று நினைத்தால் அது ஐஸ்காரன் தடதடவென்று தட்டுவதையும், ஹாரன் அடிப்பதையும் கேட்கச் செய்யும். 5ம் நம்பர் பஸ் வராதா என்று நினைத்தால் 11ம் நம்பர் பஸ்ஸை வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்தும். உத்தரக் கட்டையில் குருவி குஞ்சு பொரித்துச் சத்தம் போடாதா என்றால் மின் விசிறியில் அடிபட்டு மூலையில் விழும்.

நுட்பத்தின் இடத்தில் அற்பம் போய் உட்கார்ந்து கொள்கிறதும் மிக உன்னதம் என்று நினைத்துப் போற்றுகிற கணத்தை உப்புப் பெறாத காரியத்திற்காக விட்டுக்கொடுக்க நேர்வதும் எல்லாம்தான் சராசரியாகிவிட்டதே. இதற்கெல்லாம் ஈடு கொடுத்துக்கொண்டு, ஜனசந்தடிக்கும், நெரிசல்களுக்கும் இடையே தன் வழியை உண்டாக்கிக்கொண்டு ஏற ஏற கல்லும் மண்ணுமாகச் சரிகிற ஏற்றங்களில் புதர்களைப் பற்றியும், நெஞ்சும் அடிவயிறும் சிராய்க்கச் சிராய்க்கவும் மேலேறி, குகைகளை மூடின பாறையை அப்புறப்படுத்திவிட்டு, நெருப்பும் பந்தமும் கையிலேந்தி, ‘ஹோ’வெனக் கூச்சலிட்டு அப்புறம் சென்று, மக்கிக் கிடக்கிற எலும்புகளைக் காலால் புறந்தள்ளிக் கொண்டு அதற்கும் அப்பால் உறுத்தாத வெளிச்சத்தில், இதமான மஞ்சும் மேகமுமான தளத்தில் சூரியனின் கீழ் மலர்ந்த பூவைத் தொடுபவர்களின் குறைந்த எண்ணிக்கையும் ஒரு பக்கம் இல்லாமலில்லை. சின்னுவும் அப்படியொரு பூவாகத்தான் இருக்கவேண்டும்.

இந்தப் பூவோ, இந்தத் துக்கமோ, இந்த ஞாபகமோ எதுவோ சின்னுவை இப்படிப் பார்த்துவிட்டுப் போன இரவில் அப்படியே கரைத்துக் கொள்வது போல, மீண்டும் மீண்டும் ஏதோ மலைச்சரிவுகளில் ஏறிச் சறுக்குவதைப் போல, ரகசியங்களின் வெப்பமும், தீராத வாயில் நாக்குலர்ந்து தவித்து பாறைகளில் கசிந்த ஈரத்தில் முகம் ஒற்றி அப்படியே நழுவி விழுந்து இறந்தவர்களின் மூச்சின் திக்குமுக்காடல்களும் நிறைந்த குகைகளில் நுழைந்து அப்புறம் செல்ல முயல்வது போல, பூவும் புடவையும் கசங்கக் கசங்க ‘சாமி வந்துட்டுதா’ என்று பல் கிட்டின குரல் காதடியில் கேட்கக் கேட்க, வியர்வை அப்பிக் கிடந்தேன். நிசி அறியாமல் நட்சத்திரம் அறியாமல ஒரு நீலக்கடலின் அலை ஒதுங்கினது போல் அவள் கிடக்க, தினகரி அயர்ந்து கிடக்க, நான் மட்டும் தூக்கம் வராமல் ஜன்னல் பக்கமாகவே நின்றுகொண்டிருந்தேன்.

ஆர்.கண்ணன் இறந்து போனது ரொம்பப் பிந்தித்தான் தெரியும். ‘இன்று வெயில் ஜாஸ்தி’ என்பது போல ஒரு அன்றாடத் தகவலாக இதை என்னிடம் தெரிவித்தார்கள், நான் இந்த ஊரைவிட்டுப் போய் இரண்டு, மூன்று வருஷம் ஆகிவிட்டது என்றாலும் ‘உனக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன் என்றார்கள். எனக்குத் தெரிந்திருக்கும்’ என்று நினைத்துக்கொண்டே என்னிடம் தெரிவிக்கப்படாத, நான் அறியாத, நான் மிகக் கடைசியில் அறிந்து கொண்ட விஷயங்கள் நிறைய. அதிலும் முக்கியமாக மரணங்கள். நான் நெருக்கமாக உணர்ந்தவர்களின் திடீர் திடீர் என்ற மறைவுகள்.

பாப்பாவின் மறைவை ரொம்ப காலம் கழித்துத்தான் தெரிந்து கொண்டேன். பாப்பாவுக்கு முத்துராமனின் நடிப்பு என்றால் உயிர். ‘வாழ்க்கைக் படகு’ம், ‘போலீஸ்காரன் மகளு’ம் எத்தனை தடவை வந்தாலும் அத்தனை தடவை பார்த்திருப்பாள். மில்லு பெரியம்மா (மில்லில் வேலை பார்த்ததால் மில்லுப் பெரியம்மா, பேங்கில் வேலை பார்த்ததால் பேங்குத் தாத்தா) வீட்டு அவரைப் பந்தல் பக்கம் இருந்து, எங்கேயிருந்தாலும் ஓடுகிற தையல் மெஷினை அப்படியே நிறுத்திவிட்டு, தங்கச்சியுடன் வந்து அமர்ந்து பேசின பேச்சு எல்லாம் சட்டென்று பொய்யாய்ப் போனது. நான் காலேஜில் இரண்டாவது வருடம் வாசித்துக்கொண்டிருக்கையில்தான் மில்லுப் பெரியம்மா வீட்டுக்கு லீவில் அடிக்கடிப் போய்க் கொண்டிருந்தேன். பாப்பா அப்பா பல்லடத்திலிருந்து இங்கே உள்ள மில்லுக்கு மாறி வந்திருந்தார். தங்கச்சிக்கும் ரொம்ப நாளாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னவோ இவளிடம் ஒரு பிரியம். இவளை வைத்து இவள் சினேகிதியான பாப்பாவிடம் ஒரு பிரியம். இதைத் தவிர வேறு எந்தக் கற்பனையுமில்லாது பொங்கல் வாழ்த்துக்கள் அனுப்பிக் கொண்டிருந்த என்னிடம் மில்லுப்பெரியம்மை வீட்டுத் தங்கச்சிக்கு, ‘அண்ணே நீ பாப்பாவைக் கட்டிக் கொள்கிறாயா’ என்று எப்படிக் கேட்கத் தோன்றிற்று என்று தெரியவில்லை. அந்தக் கேள்வி எவ்வளவு நுட்பமானது ஆழம் நிரம்பியது என்று பாப்பாவின் மரணம் உண்டாக்கின அலைக்கழிப்பில் இருந்து தெரிந்தது. அவளும் மருந்து குடித்துத்தான் செத்துப் போனாள். ஆர்.கண்ணனும் அப்படித்தான் துள்ளத் துடிக்கச் செத்திருக்கிறான். ‘ஒரு பாவியும் எனக்குத் தகவல் சொல்லவில்லையே’ என்றுதான் முதல் குரல்என்னிடமிருந்து வந்தது. இதில் என்ன சிரமம் எனில் என்னிடம் இந்தத் தகவலை சொன்னவர் அவருடைய தகவுலில் அவரே லயித்தது போல் எப்படி ஆர். கண்ணனை ‘டாக்ஸியில் தூக்கிப்போட்டுக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்குப் போனார்கள் என்பதையும், திருக்கிப் பிழிந்ததுபோல் அவன் எப்படிக் கிறங்கிக் கிடந்தான் என்பதையும் இவ்வளவும் செய்துவிட்டுக் கடைசி நேரத்தில் ‘என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று ஆர்.கண்ணன் கதறியதையும், விடியக்காலம் மூன்று மூன்றரை மணிக்கு எல்லாம் முடிந்து போனதையும், அவனை இவனை சரிக்கட்டி முழு உடம்பாக வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட பாட்டையும் அவர் சொல்லிக்கொண்டே போனார்.

சில சிமயம் தான் இன்னாருடன் நெருக்கம் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக, அந்த சூழ்நிலைக்குப் பொருந்தாத நிறைய தகவல்களைச் சொல்லத் துவங்கி விடுகிறார்கள். ஆர்.கண்ணனின் சாவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவர் ஆர். கண்ணன் மட்டுக்கு மிஞ்சி ஓவராக செலவழித்ததாகவும், பெண்டாட்டியைத் தாங்கித் தாங்கிக் கெடுத்து விட்டான் என்றும், காணும் காணாததற்கு கட்சி அது இது என்று ஏகப்பட்டதுட்டை விட்டு விட்டதாகவும் சொல்லிக் கொண்டு போனார். சின்னு என்ன ஆனாள். அவள் எப்படி இருக்கிறாள் என்று ஏதாவது சொல்வார் என்றால் ஒன்றும் சொல்லக் காணோம். இவ்வளவு ஆன பிறகு சின்னு எங்கேயிருக்கிறாள் என்றாவது தெரிந்துக் கொள்ளக்கூட முடியவில்லை. தாங்கமுடியாமல் கேட்டேன்.

”அப்ப, இப்ப எல்லோரும் மறுபடியும் பெரிய வீட்டில ஒண்ணாதான் இருக்காங்களா?”

“எல்லாரும்னா?” – கிண்டலும், எகத்தாளமுமாக, நீ யாரைக் கேட்கிறாய் என்று தெரியும், ஆனாலும் உன் வாயால் கேள் என்பது போலச் சிரித்து கேட்பதில் என்ன இருக்கிறது. இந்தச் சிரிப்புக்கு பயந்து எல்லாம் சின்னுவின் கதி எப்படியும் போகட்டும் என்று விட்டுவிட முடியுமா? கேட்டேன்.

“அதுதான் கண்ணன் சம்சாரம், பிள்ளைக்குட்டி எல்லோரும்தான்”

ஒன்றும் சொல்லாமல், என்னையும் பாராமல், விறகுக் கட்டையையே பார்த்துக் கொண்டு நின்றார். மற்ற நேரம் என்றால், அவருக்கு மேல் நான் விறகு கடையை, ஆப்பின் தலையில் சம்மட்டி விழுந்து உச்சி பிரிந்து பனம்பழம் மாதிரி வெடித்து எல்லாப் பக்கமும் மடங்கி இரும்பு மினுங்க, மேலுக்கு மேல் விழுகிற விசைக்கு ஏற்ப நறநறவென்று விறகு வழிவிட்டுப் பிளப்பதையும் விறகு கடை மூப்பனார் வளர்க்கிற ஆட்டுக்கிடா கட்டிப் போட்டிருக்கிற பூவரச மரத்தையும் பூவரசம் பூவையும் பார்த்துக்கொண்டு நின்றிருப்பேன்.

நடந்தது நடந்து போச்சு. இன்றைக்குக் காதில் விழுந்த பிறகாவது பாவி இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டானே என்று அந்தப் பிள்ளையைப் பார்த்து இரண்டு வார்த்தை ஆறுதலாகச் சொல்ல வேண்டாமா? இப்படித் தவித்துக் கொண்டு நிற்கிற வயதா அதுக்கு. ரொம்ப ஒட்டுதலான சமயத்தில் படித்த படிப்பு தைத்து போட்ட சட்டை முதலியவற்றால் இடையில் வந்து சேர்ந்த நாகரீகமான பேச்செல்லாம் கழன்று போய்விடும் போல. கிராமத்திலிருந்து துக்கத்திற்கு வந்த மாரியப்பனோ, மாடசாமியோ பேசுகிறமாதிரி இருந்தது என் குரல். எனக்கே நெகிழ்வாகவுமிருந்தது. இப்படிப் பேசுவது எனக்கே ரொம்பப் பிடித்தது. மேலும் மேலும் அப்படியே பேச முடிய வேண்டும். பேசிக் கடைசியில் சின்னுவின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட தெரிந்து கொண்டேன்,

”அதுக்கு இந்த வெயில்லே நீங்க ரொம்ப நேரம் அலைந்து விடக்கூட அவசியமில்லாமல், உங்களுக்குப் பக்கத்துத் தெருவிலேயேதான் இருக்கா. நடை மிச்சம்”

“தனியாகவா இருக்காங்க…’ “பத்திரமாகவே இருக்கா” தனியாக இருப்பதற்கும், பத்திரமாக இருப்பதற்கும் என்ன வந்தது. ஒன்றைக் கேட்டால் ஒன்றைச் சொல்லவும், அப்படிச் சொன்ன ஒன்றிலிருந்து இன்னொன்றை யூகித்துக் கொள்ள இடம் கொடுப்பதுமாகவே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சின்னுவைப் பற்றிக் கேட்டால் சின்னுவைப் பற்றிச் சொல்லிவிட்டால் என்ன?

”அப்ப… வரட்டுமா” என்று சொல்லிக்கொண்டே போனார். ஆர்.கண்னன் இறந்த விஷயமும், சின்னு எங்கோ இருக்கிறாள் என்பதும் இப்படி வெற்றிலைக் காவியும், தங்கப்பல் சிரிப்புமாக சொல்லிக் கொண்டு போகிற விஷயமா? சில பேர் அப்படியே இருக்கிறார்கள். எதிராளியைப் பற்றிக் கவலைப்படாமல், தான் உண்டு தன் காரியம் உண்டு என்றே இருக்கிறார்கள். அப்படி இருக்கவே படைக்கப்பட்டது போல அவர்கள் நினைத்துக் கொள்வது இன்னொரு துக்கம்.

இப்படித் துக்கத்தின் மேல் துக்கமாகச் சம்பாதித்துக்கொண்டு வீட்டுக்குப்போய், சாப்பாட்டுத் தட்டுமுன் உட்கார்வதற்குள் அவளிடம் சொல்ல ஆரம்பித்தேன். சிப்பலில் இருந்து வெள்ளைக் கரண்டியால் சாதத்தைப் பொலபொலவென்று குனிந்து தள்ளுகிற நேரத்தில், சற்று ஆவியடிக்கிற அந்த மணத்தின் ஆரம்பத்தோடு சொல்ல ஆரம்பிக்கிற பழக்கம் அவளிடமிருந்துதான் எனக்கே வந்தது.

ஆர்.கண்ணன் இறந்து போனதைச் சொன்னேன். ‘என்ன இப்பிடிச் சொல்லுதீங்க. எனக்கு வயிற்றைக் கலக்குதே’ என்று அப்படியே சுவர் ஓரமாக உட்கார்ந்தாள். சேலைத் தலைப்பை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டாள். கரகரவென்று அழ ஆரம்பித்திருந்தாள். கீற்றுப் போன்ற அவளுடைய கண்கள் என்னைப் பார்த்தபடியேவும் அழுதபடியேவும் இருந்தன. நான் சொல்லிக்கொண்டே வரவர கூடுதலும் குறைவுமாக அவள் குலுங்கிக்கொண்டிருந்தாள்.

‘இப்படிப் பண்ணிவிட்டுப் போவாரா அம்மா அந்தப் பாவி’ என்று இடையில் சொன்னாள். ‘தாங்க முடியலையே’ என்றாள். ‘குடலைத் திருகுகிறதே’ என்றாள். ‘எப்படி இருப்பா அவ. லட்சுமின்னா லட்சுமியாக அல்லவா இருப்பா’ என்றாள். ஸ்ரீனிவாச லட்சுமி என்ற சின்னு எவ்வளவு தூரத்துக்கு அவளுக்குச் சிநேகிதியாக இருந்திருக்கிறாள் என்பதை வெளிப்படுத்துவதுபோல் சிறுசிறு சொற்களாகச் சொன்னாள்.

‘எங்கன கண்டாலும் ஓடிவந்து கையை பிடித்துக்கொள்வாளே’ என்றாள்.

‘கண் மையும் கண்ணுமா அவ உருட்டி உருட்டிப் பேசுகிறதைப் பார்த்துக்கொண்டே நிற்கலாமே’ என்றாள்.

‘மூத்தப் பொண்ணு அப்படியே அவளைப் புட்டு வச்ச மாதிரி இருக்குமே’ என்றாள்.

‘நெளிவு நெளிவா ஒதுக்க ஒதுக்க முகத்துல வந்து விழுமே முடி ஒரு அழகு. அதை அவ சீவிக்கிறது ஒரு அழகு’ என்றாள். நானும் இத்தனையையும் மனதில் கொண்டிருப்பேன். எனினும், இவளைப் போல அப்படி அப்படியே நான் சொல்லிவிட முடியவில்லை. சந்தோஷத்தையும், துக்கத்தையும் அந்த சந்தோஷத்திற்கும் துக்கத்திற்கும் மத்தியிலேயே சிறுசிறு வார்த்தைகளில் வெளிப்படுத்திவிட இவர்களால் எப்படி முடிகிறது. மிகச் சுருக்கமான கோடுகளில் மிக நேர்த்தியான சித்திரங்களை வரைந்து விடுகிற சாத்தியம் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது.

மிக உன்னதமான ஓவியத்தின் மீதான அத்தனை கற்பனைகளும், இன்னின்ன இடத்தில் இன்னின்ன வர்ணங்களும் என்று சதா மனத்தில் தீர்மானித்துக்கொண்டு, தீர்மானங்களின் மேல் தீர்மானங்கள் எடுத்து சதா அவற்றைப் புதுப்பித்துக் கொண்டு, ஆனால் கடைசி வரை வெற்றுத் திரைச் சீலைக்கு முன் திகைத்து நிற்பதைவிட. இது சரியான காரியம் என்று படுகிறது.

சின்னு அடுத்த தெருவில்தான் இருக்கிறாள் என்றதும் சாயந்திரமே பார்த்து விடலாம் என்றாள். “தினகரியும் வரட்டும், வந்த பிறகு போகலாம்’ என்றாள். தினகரியைப் பார்க்க சின்னு பிரியப் படுவாளாம். தினகரியும் ‘அத்தை எவ்வளவு அழகா இருக்காங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாளாம்.

சாப்பிட்ட மாதிரித் தெரியவில்லை . என் தலையணையில் ஒண்டித் தலை வைத்துக்கொண்டு படுத்திருந்தாள். பேசிக் கொண்டிருந்தாள். நான்தான் சின்னு போலவும், சின்னுவின் மகள் போலவும் என் தலையை வருடிக்கொண்டேயிருந்தாள். காதோரம் ஒற்றிக்கொண்டாள். முதுகு புரட்டித் திரும்பி அணைத்துக் கொண்டாள். விரல் புதைகிற இறுக்கம். என் தோள்பட்டை இறுகியது. முதுகுச் சதை இறுகியது. பின்பக்கத்து சிகை இறுகியது. நான் தட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தேன். நன்றாகத் தூங்கியிருந்தாள். தலையணையைப் பின்னுகிற கால் மாதிரி இடது கால் மட்டும் என் வேட்டியின் மேல் கரண்டைக் கால் கரைப் பக்கம் கிடந்தது.

எங்கள் தெரு இப்படியொரு கோடு போட்டமாதிரி. இதன் இடுப்பிலேயிருந்து பிரிகிறது இன்னொரு முடுக்கு. அது போய்ச் சேர்கிற தெருதான் சின்னு இருக்கிறதாகச் சொல்லப்படுகிற தெரு. எங்கள் வீட்டு நடையிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்ல ஐந்து நிமிடம் ஆகும். ஆனால் பந்தயத்தில் ஓடுகிற மாதிரியும், நடப்பது மாதிரியும் தெருவில் நடக்க முடியுமா? தெரு எவ்வளவு அருமையான விஷயம். அதுவும் என்னைப்போல மூன்று வருஷம், நான்கு வருஷம் வெளியூர் போய்விட்டு லீவில் வருபவனுக்கு தெருவில் நடப்பது புதையல் கிடைப்பது மாதிரியல்லவா? தசராச்சப்பரம் வரும்போது வீட்டுக்கு வீடு நின்று, ஒவ்வொரு காம்பௌண்டிற்குள் குடியிருக்கிற அத்தனை பேரும் வெளியே வந்து சாமி கும்பிடும் வரை நின்று நின்று, நிற்க நிற்க மேலும் அழகாகி நகர்வது போல அல்லவா அது.

நான், என் மனைவி, பெண் மூவருமே அந்தச் சப்பரத்துக்கு நிகழ்வது மாதிரி ஒவ்வொருவர் நின்று நின்று பேசப் பேச அழகாகிக் கொண்டே போனோம். பாட்டையா வீட்டு ஆச்சியைத் தாண்டி இந்தத் தெருவில் யாராவது போய்விட முடியுமா? ஊசித்தட்டான் மாதிரித்தான் உடம்பு. அவள் இருக்கிற வீட்டுக் கதவுகூட அனேகமாக ‘ஒஞ்சரித்து’ச்சாத்தின மாதிரியிருக்கும். எங்கே பார்க்கப் போகிறாள் என்று போய்விட முடியாது. ‘அய்யா’ என்பதை அவள் ‘யய்யா’ என்றுதான் சொல்வாள்.. ‘யய்யா… நீ எப்ப வந்த’ என்று கரெக்டாக வந்து கையைப் பிடித்துக்கொள்வாள். இதில் என்ன கூச்சம் என்றால் அப்படித் தெருவில் நின்ற இடத்திலேயே கன்னத்தைத் தொட்டு, தொட்ட இடத்திலேயே முத்திக் கொள்வாள். ‘பேத்தி சௌக்கியமா இருக்கியா’ என்று என் மனைவியைக் கட்டி முத்தம் கொடுத்துவிடுவாள். கூச்சப்பட்டு ஓடுகிற தினகரியை ‘நீ எங்கே ஓடுதே’ என்று இழுத்துக் கொள்வாள். அப்படியேதான் இன்றைக்கும் நடந்தது. எழுபதா எண்பதா என்று தெரியவில்லை. சின்ன வயதில் பார்த்த மாதிரியே இருக்கிறாள். ஈயமோ வெள்ளியோ மூக்குக் கண்ணாடியிலும் மாற்றமேயில்லை. அப்படியே இருக்கிறது. குரல் இங்கே இருமினால் சந்திப் பிள்ளையார் கோவிலுக்குக் கேட்கும். பொறாமை, புகைச்சல் எல்லாம் இருந்தால் குரல் கம்மியிருக்கும். தெரிந்தது உழைப்பும், பிரியமும்தான். தாத்தா இருந்த காலத்திலும் மூன்று வேளை சாப்பிட்டிருக்க மாட்டாள். இப்போது வருகிற தியாகி பென்ஷன் மட்டும் என்ன உடகார்த்தி வைத்தா பருப்பும் சோறும் போட்டுவிடப் போகிறது.

இப்படியே ஒவ்வொரு ஆளாகப் பேசிக்கொண்டே போனோம். சின்னுவின் வீட்டிற்குப் போவது ஒருபுறம் தள்ளிக்கொண்டே இருந்தாலும் அவளோடு இருக்கப்போகிற நேரத்தை இது குறைக்கிறது என்று நாங்கள் உணர்ந்து போவோமா… போவோமா’ என்று சமிக்ஞைகள் மூலம் விடைபெற்று நகர்ந்தாலும் இதுவும் மனதிற்குப் பிடித்தே இருந்தது. ஒருவர் ஒருவராக சுருதி சேர்த்து வைத்த முகத்தோடு எல்லோருமாகப் போய் சின்னுவின் முன்னால் உட்கார்வது பொருத்தமாகத்தான் இருக்கும். கிளிகள் பக்கவாட்டில் அப்படியே நகர்ந்து, ஒரு சிறு படபடப்பில் மேல் கிளைக்குப் போய், இங்கு திரும்பி, அங்கு திரும்பி ரொம்பவும் யோசனைக்குப் பிறகு கீச்.. கீச்… என்று சத்தம் போட்டுக் கொண்டு எவ்வுமே அதுமாதிரியெல்லாம் நாங்கள் உணர்ந்தோம்.

எல்லோரும் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவளிடம் பேசுகிறார்கள். ‘கெட்டிக்காரியில்லா…’ என்று தினகரியை இழுத்துக்கொள்கிறார்கள். இவ்வளவு பேரைச் சம்பாதிக்க எப்படி இவளுக்கு முடிந்தது. அடுக்களைக்கு வெளியே நடமாடின நேரம் போக, என்னுடன் எப்போதாவது வெளியே வந்த நேரம் போக எப்படி இவளுக்கு இவ்வளவு பேர் தெரியும். மார்க்கட் ஏலக்கார வீட்டு அம்மாள் சரி, சரஸ்வதி டீச்சர் சரி, இந்த ஆவுடையப்பனுக்கு என்னுடன் பேசுவதற்கென்ன. அவனை எத்தனை தடவை ஆர்மோனியம் வாசிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். புல்புல்தாராவில் உன்னை அடிப்பதற்கு ஆளேயில்லை என்று சத்தியமே பண்ணியிருக்கிறேன். அவன் என்னடாவென்றால் ‘வாங்க மதனி. எப்ப வந்தீங்க’ என்று அவளுடன் பேசுகிறான். எல்லாம் சந்தோஷமாகவே இருந்தது.

வெறும் ஜலதாரை வீச்சமும், சாக்கடை நெடியுமாக மட்டும் இருந்த இடம் சற்று மாறியிருப்பது தெரிந்தது. ஆனால் அற்புதமான சிறு வயது ஞாபகங்களாக நின்று கொண்டிருந்த இடது பக்கத்துக் காரைச் சுவர்கள் அங்கங்கே இடிக்கப்பட்டு தொண்டு வாசல்கள் விடப்பட்டிருந்தன. வாதா மரங்களும், முருங்கை மரங்களும் ஒரு இனம் புரியாத கிளர்ச்சியூட்டிய பம்பளிமாஸ் மரமும் கூட சரஸ்வதி டீச்சர் வீட்டிலிருந்து வெட்டப்பட்டிருந்தன. வாடகை வீடுகளில் வாடகைக் குழாய்களில் வாடகை மனிதர்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதோ இந்தத் தந்திக் கம்பத்திற்கு கீழ்தான் என்னுடைய சிறு வயதின் பெரும் புதிர்களில் ஒன்றாகப் பதிந்திருக்கிற அந்தக் காட்சி நிகழ்ந்தது. ஒரு வெள்ளை நாயும், கறுப்பில் புள்ளியிட்ட வெள்ளையாக இன்னொரு நாயும் எதிர்மாறாகப் பிணைந்து பிரிய முடியாமல் அப்படியே அசையாமல் நின்றன. மிக நல்ல வெயில் பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக, தெப்பத்துக்காக இருக்கலாம், லீவு விட்டவுடன் நான் என்கூடப் படிக்கிற இன்னொரு பையனுடன் அவனுடைய அப்பாவைத்திருக்கிற தையற்கடைக்குப் போய் – (முதன் முதலாக ரோஸ் மில்க் குடித்தது அந்த அருமையான மனிதர் கையால்தான்) அவனை விட்டு விட்டு குறுக்குப் பாதையாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன்.

அந்த மத்தியானமே ஒரு திகிலும், திகிலுக்குட்பட்டு வெளி வரும் நேரத்தின் சந்தோஷங்களுடனும் இருந்தது. அந்தத் தையற்கடையிலிருந்து புறப்படுகையில், ப்ரெண்டுடைய அப்பா கடையை விட்டு இறங்கி, ஒரு தெருவரை கூட்டிவந்து ‘வெயிலாக இருக்கிறது இப்படிப் போ. சீக்கிரம் போய்விடலாம். போய்விடுவாயல்லவா’ என்று கேட்டார். மற்ற நேரமென்றால் என்னால் போய்விடமுடியாது என்று பட்டிருக்கும். அவர் சொன்ன விதம், என் தோளிலிருந்து இறங்கிய பைக்கட்டை மேலே ஏற்றிக்கொண்டு சிரித்த விதம், நெற்றி மத்தியில் வைத்திருந்த பொட்டு எல்லாம் சேர்ந்து போய்விடலாம் என்று தைரியம் கொடுத்துவிட்டன.

ஆரம்பத்திலேயே பச்சைக் கதவு போட்ட ஒரு அம்மன் கோவில் இருந்தது. கண்மலர் வெள்ளியில் சாத்தியிருந்தார்கள். அப்போது ரொம்பப் பயம் அந்த கண்களுக்கு. அப்படியே நேரே போனால் நிழலுக்கு ஒதுங்கியது போல இரண்டு கழுதைகள். அந்தத் தெரு ஒரு வாய்க்காலில் முடியும் என்று தெரியாது, வாய்க்காலில் பிடித்த வலையும் கையுமாக மேலே வந்து, சற்று அகலமாக இருக்கிற இடத்தில் வலையை உதறும்போது சேலைக்குக் கொசுவம் வைப்பது மாதிரி அதை அதே நேரத்தில் மடித்துக்கொண்டு, மறுபடி உதறிக்கொண்டு என்று ஒரு சீரான விதத்தில் செய்து கொண்டிருந்தார். என்னைப் பார்க்கவேயில்லை. வலையில், கீழே பொடிசு பொடிசாகத் துள்ளும் மீன்களை உதறும் வலையில் செருகித் துள்ளி அவரின் மறு உதறலில் விழுந்த மீனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிமிஷம் கூட வலையிலிருந்து ஈயக் குண்டுகள் மாதிரி எழுந்த ஒரு சப்தத்தினூடே அந்தக் குஞ்சு மீன்கள் வெயிலடித்த தரையில் துடிப்பது தெரிகிறது. கூட்டி அள்ளினால் ஒரு குத்து இருக்காது. அள்ளிக் குடுவையில் போடுவதும் பெரிய சிரமமில்லை என்றாலும் அவர் அப்படித்தான் இருக்க முடிந்தது. அப்படியே சைடில் திரும்பி கோட்டை மாதிரி இருந்த வீட்டின் குளிர்ந்த நிழலுள்ள கல் பாவின தாழ்வாரங்களினூடே ரொம்ப தூரம் நடந்தேன். ஒரு இடத்தில் குதிரை கட்டியிருந்தார்கள். குனிந்து புல்லைச் சாப்பிடுகிற குதிரை வண்டிக் குதிரைகளையே தேரடியில் பார்த்திருந்த எனக்கு, அப்படியெல்லாம் இல்லாமல் நிமிர்ந்து நிற்கிற ஒரு குதிரையைச் சினிமாவில் வருகிறது போலப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. அதையும் தாண்டி இன்னொரு இடத்தில் நாலைந்து பெண்கள் கால்நீட்டி உட்கார்ந்து அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். புடைத்துக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி புடைப்பதை நிறுத்தி பக்கத்திலிருந்த சொம்பை அண்ணாந்து ‘கடகடவென்று குடித்தாள். தண்ணீர் வழிந்து மேலெல்லாம் சிந்தி சேலை நனைந்தது. அந்தப் பச்சைச் சேலை நனைய நனைய கறுப்பாக மாறிய விதம் இன்னும் மறக்கவில்லை . அவள் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில் யாரும் என்னைப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்ற அவசரத்துடன் அவளைத் தாண்டும்போது அவள் அண்ணாந்து குடிப்பதை நிறுத்தி மூச்சு வாங்கிக் கொண்டு என்னைப் பார்த்தாள். தண்ணீர் வேண்டுமா என்பது போல செம்பையும், கையையும் ஆட்டிச் சிரித்தாள். கன்னங்கரேர் என்ற அந்த முகத்திற்கு அந்தச் சிரிப்பு எவ்வளவு ஒட்டுதலாக இருந்தது. பயந்து செத்துக்கொண்டு இருக்கும்போது தண்ணீரா குடிக்க முடியும்.

ஒன்றுக்குத்தான் வந்தது. அடக்கிக் கொண்டே இந்த முடுக்கு வரை வந்தபோதுதான் இந்த நாய்கள் இரண்டும் நின்றன. அசையாமல் அவை நின்ற விதம் துக்கம் கொடுக்கும் ஞாபகமாகவே ரொம்ப நாட்கள் இருந்தன. என்ன, ஏது என்று விபரம் தெரிந்த பின்னும், இவ்வளவு காலத்துக்குப் பிறகு இப்போதும்கூட அந்த இரண்டு நாய்களின் பார்வையிலிருந்த துக்கத்தை என்னால் அகற்றிவிட முடியவில்லை .

யாருடைய துக்கத்தை யார் அகற்றிவிட முடிகிறது. அப்படியெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். சின்னுவை இப்படி ஓடி ஓடி, இத்தனை ஆள்தாண்டிப் பார்க்கப் போகிறோம். இது சின்னுவின் துக்கத்தை அகற்றவா? எங்களுடைய துக்கத்தை அகற்றவா. அப்படியெல்லாம் பலசரக்குக் கடையில் மொத்த சாமான் வாங்கிவிட்டுக் கை நீட்டினால் கொடுக்கிற, முந்திரிப் பழம் மாதிரி, இரண்டு துண்டுக் கல்கண்டு மாதிரி எல்லாவற்றுக்கும் பிறகு நாங்கள் பார்த்துச் சரிபண்ணி விட முடியுமா? மூடி முழிப்பதற்குள் எவ்வளவு நிகழ்ந்துவிடுகிறது வாழ்க்கையில், தண்டோராப் போட்டது காதில் விழுந்து, மூட்டை முடிச்சை எடுத்துக்கொள்வதற்குள் தொட்டில் பிள்ளையை எடுத்துத் தோளில் போடுவதற்குள், வெள்ளம் அடித்துக்கொண்டு போகிற குடிசைகள் மாதிரி எவ்வளவு காணாமல் போய்விடுகின்றன விடிந்து பார்க்கும் போது. ஆர்.கண்ணன் காணாமல் போனது அப்படியில்லாமல் வேறு என்ன, வெள்ளத்துக்கு மத்தியில் தைப்பூச மண்டபத்தின் உச்சியில் நிற்கிற வெள்ளாட்டுக் குட்டி மாதிரி சின்னு இருப்பாள். சின்னுவின் மகள் இருக்கும்.

இதற்குள் மங்காயி அத்தை வீடு வந்து விட்டது. இந்த வீட்டைத் தாண்டினால் நேரே சின்னு வீட்டிக்குப் போய்விடலாம். ஆனால் மங்காயி அத்தையை எப்படிப் பார்க்காமல் போக? அந்தப் பெரிய குடும்பத்தில் மட்டுமல்ல, அத்தனை பெரிய வீட்டில் இப்போது மங்காயி மட்டுமே இருக்கிறாள். மங்காயி அத்தைக்கும், அந்த வீட்டு மாமாவுக்கும் மாடுகள் இல்லாமல் தீராது. தொழுவில் பசு மாடுகள் குறைந்தது மூன்று எண்ணிக்கையாவது நிற்கும். இரண்டு கறந்து கொண்டிருக்கும். ஒன்று சினையாக இருக்கும். இதையெல்லாம் தவிர பருவத்துக்கு வருகிற மாதிரி லட்சணமான இரண்டு ஈற்றுக்கு முந்தின பசுங்கன்றுக்குட்டி ஒன்று வளர்ந்து கொண்டிருக்கும்.

வீட்டை வைத்துக் கொள்வது ஏறக்குறைய இருந்தாலும், தொழுவை வைத்துக்கொள்வதற்கு மங்காயி அத்தையிடமும், மாமாவிடமும் கற்றுக் கொள்ள வேண்டும். ‘அது லச்சுமி இருக்கிற இடம் அல்லவா!’ என்றுதான் அத்தை சொல்வாள். மாமாவும் அதையே சொல்வார். மனதாரச் சொல்கிற மாதிரி இருக்கும். சொல்கிறது போலவே மாமா இருந்தார். சுழி சுத்தம் பார்க்கத் தெரியும். மாட்டுவாகடம் தெரியும். ஒன்றுக்கு ரெண்டு புத்தகம் இருக்கிறது. வெற்றிலையில் இரண்டு மிளகாயை மாமா கையால் மடக்கி கொடுத்தால் அடுத்த வினாடி எருக்கல் எடுப்பது நிற்கும். யார் வீட்டுத்தொழுவுக்காவது மாமா வந்து சினைமாட்டைப் பார்த்து விட்டு, ‘தொழுவை விட்டு அவிழ்த்து உரலில் கட்டிப் போடுங்க’ என்று சொன்னால் மறுநாள் தாயும் பிள்ளையுமாக இருக்கும். மாமா கன்றுக்குட்டி பிறந்த தகவல் கேட்டதும் அப்படியே வருவார். கன்றுக்குட்டியைத் தடவிக் கொடுப்பார். தடவின கையை, பூவை முகர்ந்து பார்க்கிற மாதிரி ‘கம்’ மென்று உறிஞ்சி முகர்ந்து கொள்வார். பசு நின்று கொண்டிருந்தால் அப்படியே சுற்றி வருவார். படுத்திருந்தால் ‘எழுப்பட்டுமா’ என்பதுபோல வீட்டுக்காரர்கள் ஒரு எட்டு எடுத்து வைப்பார்கள். ‘இருக்கட்டும்… இருக்கட்டும்’ என்று அவர்களை அமர்த்திவிட்டு, அதனுடைய மடியையே பார்ப்பார். மறுபடி கொஞ்ச நேரம் பிறந்த கன்றுக் குட்டியை பார்த்துவிட்டு, முதல் எட்டு நாளைக்கு எந்தக் காம்பில் கறக்கக் கூடாது, அடுத்த எட்டு நாளைக்கு எந்தக் காம்பில் கறக்கக் கூடாது என்று சொல்வார். அதாவது அந்தக் காம்பு பால் எல்லாம் பிள்ளைக்காம். மாமா சொன்னபடியே செய்தால், அடுத்த பௌர்ணமி அமாவாசை வருவதற்குள் கன்றுக்குட்டி திடமாக ஆண்பிள்ளை மாதிரி இருக்கும். தோட்டத்தில் காலை உதைத்து ஓடினால், எட்டிக் கழுத்துக் கயிற்றைப் பிடிக்க முடியாது. மாமா தொழுவில் இதையெல்லாம் சொல்லிவிட்டு, காலை மாற்றி மாற்றிக் கழுவி விட்டு நேராக அடுப்படிக்குப் போவார். இருக்கிற பெண் பிள்ளைகளிடம் ‘கடம்பு கிண்டினாயா’ என்பார்.

முதல் நாள் சீம்பாலில்தான் மாமாவுக்குக் கடம்பு கிண்ட வேண்டும். ‘அது அம்ருதம் தாயி’ என்று சொல்லிக் கொண்டு அண்ணாந்து ஒரு விள்ளல் போடுவார். சின்னச் சம்படம் ஒன்றில் கடம்புவை வைத்து மூடி ரொம்ப மரியாதையாக நீட்டிக் கொண்டிருப்பார்கள். ‘அடஹ்’ என்று வெட்கப்பட்டார் போல மாமா எடுத்துக் கொள்வார். மங்காயி அத்தைக்குக் கடம்பு பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே மாதிரி, ‘பகடைக்குச் சொல்லியிர வேண்டியதுதான்’ என்று சொல்லிவிட்டுப் போனால் அந்தக் கன்றுக் குட்டியை ஊதின வயிற்றோடு கக்கூஸ் வண்டியில் தூக்கிப் போட்டிருப்பதைத்தான் மறுநாள் பார்க்கலாம்.

இத்தனையிருந்தும் மாமா தரகுக்கு வரமாட்டார். மாடு பார்த்து வாங்கித்தர மாட்டார். ‘உங்க கையால பிடிச்சுக் கொடுத்துத் தொழுவில் கட்டணும்’ என்றால் ஏற்றுக் கொள்வதேயில்லை. ‘அவ சீதேவி அல்லவா. அவளாக அல்லவா உங்க வீட்டுக்குப் படியேறி வரணும். நான் யாரு இவள் கையைப் பிடித்துக் கூட்டி வருவதற்கு?’ என்பார். அது மாதிரியே அவர் யாருக்கும் மாடு பிடித்துக் கொடுத்ததே இல்லை, கடைசி வரை.

தாத்தாவும், மங்காயி அத்தை வீட்டு மாமாவும் இந்தப் பசு மாட்டு வளர்ப்பு விவகாரத்தில் கூட்டாளிகள், தாத்தாவுக்கு நான் செல்லப் பேரன். தாத்தா சொல்வார் மங்காயி அத்தை வீட்டு மாமாவிடம் ‘மாப்பிள்ளை உம்ம பட்டா புஸ்தகத்திலே எவ்வளவு நிலம் இருக்கும்னு பார்த்தா என் பிள்ளையைக் கொடுத்தேன். தொழுவத்தைப் பார்த்துட்டில்லா கொடுத்தேன்’ என்று கேலி பண்ணுவார். மங்காயி அத்தை தாத்தாவின் சொந்த மகளும் இல்லை, மாமா அவருடைய பெண்ணைக் கட்டின மருமகனும் இல்லை. ஆனாலும் அந்தப் பிரியம் எல்லாம் அபாரமாக இருக்கும்.

தாத்தா எங்கள் வீட்டுப் பசுவைக் குளிப்பாட்டப் போவதெல்லாம் மாமா வீட்டுக்குப் பின்னால் ஓடுகிற வாய்க்காலில்தான். மாட்டிற்குப் பின்னால் கன்றுக்குட்டி போவது போல, தாத்தா பின்னால் நானும் போவேன். ஒரு தடவை நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்படி நாங்கள் போகும்போது பந்தல் எல்லாம் போட்டிருந்தது. தெரு வாசலில் மட்டுமில்லை . வாசலிலும் பந்தல் போட்டிருந்தது. பின்வாசல் நடை தாண்டித் தோட்டத்திற்குப் போனாலும் அப்படித்தான். மங்காயி அத்தையைக் காணோம். தொழுவிலுள்ள மாடுகளைக் கூடக் காணோம். தொழுவைத் தூத்துப் பெருக்கிப் போட்டு அதில் பெரிய பெரிய தண்ணீர் அண்டாக்களை வைத்திருந்தார்கள். தாத்தா என்ன ஏது என்று ஒன்றும் சொல்லாமலேயே போனால் எப்படி?

இதற்குள் வாதா மரம் வந்துவிட்டது. வாதா மரத்துக்குக் கீழ் சிவப்புச் சிவப்பாக இலைகள் உதிர்ந்து கிடக்கும். ரொம்ப வருஷமாக உதிர்கிற இலைகளெல்லாம் காலண்டர் தாள் மாதிரி சேர்த்துக்கொண்டு வருகிறது போல அவை மரத்தடியிலேயே கிடக்கும். இலையைக் காலால் கெந்திப் பார்த்தால் ஒன்றிரண்டு வாதாம் பழமாவது இல்லாமல் போகாது. இது தவிர மங்காயி அத்தை எந்தச் சின்னப் பிள்ளைகள் வந்தாலும் கொடுக்க என்று ஓவல்டின் டப்பாவில் போட்டு வைத்திருப்பாள். இன்று பெரிய ஏமாற்றமாக இருந்தது. விசேஷ வீடு என்றால் வாதா மரத்து மூடுவரை யார் சுத்தம் பண்ணச் சொன்னார்கள். வாதாங்கொட்டை ஒன்றுகூட இல்லை. அப்புறம் ஒன்று இரண்டு இலை உதிர்ந்து அதன்மேல் வெயிலடிக்காமல் இப்படி மொட்டையாக இருந்தால் இந்த இடம் நல்லாவே இல்லை அல்லவா?

இதற்குள் மாட்டையும், கன்றுக்குட்டியையும் தாத்தா தண்ணீரில் இறக்கியிருப்பார். ஓடியே போனால் அடுத்தது நெட்டிலிங்கக் கொட்டைகள். இவ்வளவு லேசாக ஆஸ்பத்திரி சீஸா மூடி மாதிரி அவ்வளவு கனமில்லாமல் அவற்றை டிராயர் பை முட்டைச் சேகரித்துக் கொண்டு, வாய்க்காங்கரைப் படியில் உட்கார்ந்து ஒவ்வொன்றாகத் தண்ணீரில் வீசுவேன். மிதந்து மிதந்து அது தண்ணீரோடு போய்க்கொண்டேயிருக்கும். என் கையிலுள்ள கொட்டைகள் முழுவதையும் தண்ணீரில் வீசுவதற்கும், தாத்தா இரண்டையும் குளிப்பாட்டிக் கரையேறுவதற்கும் சரியாக இருக்கும். சற்று வெயில் படும்படியாக, மாமரத்து வேரில் கட்டுவார். மாடு கட்டுவதற்கு என்றே தண்டியாக வேர்விட்டுப் படர்ந்து நிற்பது போலத் தரைக்கும், மரத்துக்கும் இடைவெளி இருக்க ஒரு வேர் போயிருக்கும்.

பசு அவ்வளவு பெரிய பசுவாகப் பிறந்து அப்போதுதான் ‘நிற்பதுபோல் வெயிலில் மினுமினுவென்று நிற்கும். பின்னால் பிட்டிப் பக்கம் எல்லாம் ஒரு பொட்டுச் சாணிக்கறையைப் பார்க்க முடியாது. தாத்தாவுக்கு அப்படியொரு கை. அப்புறம் தாத்தா குளிப்பார். ஏதோ உடுத்தின வேட்டியை நனைப்பதற்குக் குளித்த மாதிரியிருக்கும். கடைசியாக என்னைக் கூப்பிடுவார். கன்றுக் குட்டியைத் தூக்குகிறது மாதிரித் ‘தூக்கி, என் மூக்கை அவரே பொத்திக்கொண்டு முக்குவார். வயிற்றுக்கடியில் கை இருக்கும். நீச்சலடிக்க வேண்டும். தடாபுடாவென்று தாத்தாவின் மேலெல்லாம் தண்ணீரை இறைப்பதோடு சரி.

தலையைத் துவட்டி ஈரத்துண்டோடு நான் கிடுகிடுவென்று விரைத்துக் கொண்டிருக்கையில், கடைசியாக ஒரு பத்தடி தூரம் நீச்சலடித்துப் போன கையோடு ஒரு முங்கு முங்குவார். இரண்டு தாமரைப் பூவைப் பறித்துக் கொண்டு கரையேறுவார்.

நன்கு உழைத்து இறுகி மறுபடியும் தளர்ந்து கொண்டிருக்கிற அறுபது வயது உடம்போடு, வாய்க்காலில் தணிந்த நீர் மட்டத்தி லிருந்து கரையின் உயர்வான பகுதிக்கு, ஈரம் சொட்டச் சொட்ட, வெறும் கோவணத்துடன் கையில் பறித்த தாமரைப் பூக்களுடன் வருகிற காட்சியின் அற்புதம் இப்போது மட்டுமல்ல அப்போதும் எனக்குப் பிடித்திருந்தது. தாத்தாவை அந்த நேரத்தில் அப்படியே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளத் தோன்றும்.

இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வியைத் தாத்தாவிடம் கேட்டேன். ‘தாத்தா, மங்காயி அத்தையை எங்கே, அத்தை வீட்டு பசுவையெல்லாம் எங்கே’ என்று. தாத்தா சிரித்துக்கொண்டார். சிரித்துக்கொண்டே இரண்டையும் அவிழ்த்து, புறவாசல் வழியாக இருக்கிற இன்னொரு இடுக்கமான சந்து வழியாக மாட்டைப் பற்றிக்கொண்டு போனார். கன்றுக்குட்டிகூடப் போய்விட்டது. நான் சிரமப்பட்டு அந்த மண்ணில் சற்றுச் சறுக்கி அப்புறம் போனேன். தாத்தா நான் ஏதோ இமய மலையில் ஏறிச் சாகசம் பண்ணியது போலச் சந்தோஷமாகப் பார்த்தார். சறுக்கிய சமயம் கை ஊன்றியதில் தாமரைப் பூ ஒடிந்து விட்டிருந்தது. இன்னொன்று அழகாக அப்படியேயிருந்தது. தாத்தா சிரித்துக் கொண்டே தலையில் கை வைத்து வெயில் சுடுகிறதா என்று பார்த்தார்.

தாத்தா ஏன் சிரித்துக்கொண்டே வந்தார் என்பது வீட்டுக்கு வந்தால்தான் தெரிந்தது. மங்காயி அத்தை வீட்டுப் பசுக்கள் எங்கள் தொழுவில் நின்றன. மங்காயி அத்தை வீட்டில் வைத்து யாரோ கல்யாணம் பண்ண வேண்டும் என்ற சொன்னார்களாம். அதுக்கென்ன என்று கொடுத்துவிட்டு மங்காயி அத்தை இங்கே வந்துவிட்டாள்.

இன்னொன்று வாதாங்கொட்டை சேகரித்து வைத்திருக்கிற டப்பாவும் வந்துவிட்டிருந்தது.

இதுபோல் இன்னும் எவ்வளவோ நீண்ட ஞாபகங்களின் ஆதாரமாய் இருக்கிற இந்த அத்தை வீட்டில் நுழையும்போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது. இருட்டைவிட இப்படிக் கிட்டத்தட்ட இருட்டுகிற நேரத்துக்கு எப்போதுமே உரிய அழகுடன் எல்லாமே இருந்தது. மிகச் சிக்கனமாக ஏற்றப்பட்ட விளக்குடன் இருந்த அந்த வீட்டுக்குள்ளேயே சின்னுவும் இருக்கலாகாதா என்று எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு இருட்டில், இப்படி ஒரே ஒரு விளக்கை ஏற்றிக் கொண்டு தானே சின்னு தனியாக இருப்பாள் பாவம்.

– தொடரும்…

– 1991, சந்தியா பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *