ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 21, 2023
பார்வையிட்டோர்: 3,179 
 

‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப் போட்டிருப்பார்கள். அவரின் மீசை பயமுறுத்தும். கீழே, ‘மசானக் காளி துணை’ என்று எழுதி, பில்லி சூனியம் வைக்கக் கற்றுத் தருகிறார் திரு.கருப்புசாமி வெள்ளை வீரன், உடனே ரூபாய் 8500 மணியார்டர் எடுத்து அனுப்பவும். வீட்டிலிருந்தே கற்றுக் கொள்ளலாம்…

பில்லி சூனியம் சொல்லித்தரும் எல்லாரும் அது ஏன் பேசிவைத்தாற்போல் ரூபாய் 8500 வாங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கட்கென்று ஏதாவது சங்கம் இருக்கலாம்!

மன்னிக்கவும்,நான் சொல்ல வந்த விடயத்தை விட்டுவிட்டு ஏதேதோ பேசுகிறேன். இதுதான் என்னிடம் இருக்கும் பிரச்சனை. என்னிடம் மட்டுமில்லை, என்னைப் போன்ற பலருக்கும் இருக்கும் பிரச்சனை.

உதாரணத்திற்கு, என் நண்பன் என்னிடம் கடன் கேட்டால், நான் ‘மிசல் பூகோ’, ‘லார் பத்தார்’ என்று அந்நிய எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்ப்பேன். பின்நவீனத்துவம், எக்ஸ்டேன்ஸ்சியலிசம் என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றுவேன். என் நண்பனும் என்னவென்று புரியாமல் புரிந்தது போல் நடிப்பான். தெரிகிறதோ இல்லையோ தெரிந்தது போல் பேச வேண்டும். புரிகிறதோ இல்லையோ புரிந்தது போல் நடிக்க வேண்டும். அப்போது தான் இந்தச் சமுதாயம் மதிக்கும். நான் இயங்கும் துறையில் வாய் இருந்தால்தான் பிழைத்துக் கொள்ள முடியும். சொல்ல வந்ததை விடுத்து, சொல்லத் தேவையற்றதைப் பேசிக்கொண்டிருக்கவேண்டும். நீங்களும் இந்தத்துறைக்கு வந்தால் அப்படித்தான் பேசுவீர்கள். தேவையற்ற விடயங்களைப் பேசி உங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வீர்கள்.

கலைத்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது…

இங்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதையிருக்கும். வாழ்க்கைக் கதையைப் பற்றி சொல்லவில்லை. படம் இயக்குவதற்காக வைத்திருக்கும் கதையைப் பற்றிச் சொல்கிறேன். வடபழனி ஸ்டுடியோவில் சேனைக் கிழங்கு வறுவல் சமைக்கும் தவசிப்பிள்ளை சண்முகநாதனிடம்கூட (அவர் பிள்ளை வகுப்பைச் சார்ந்தவரன்று) ஒரு ‘டபுள் ஆக்சன்’ கதை இருக்கிறது. இயக்கினால் நடிகர் சுஜித்தை வைத்துதான் இயக்குவேன் என்று அவர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார். (அந்தக் கதையை எனக்கு பாதிதான் சொன்னார். அடுப்பில் வைத்த சேனைக் கிழங்கு தீய்ந்துவிடுமென்று ஓடிவிட்டார். முழுக்கதையைச் சொன்னால், நான் திருடிவிடுவேன் என்ற பயத்தினால்தான் ஓடிவிட்டார் என்பது எனக்குத் தெரியும்).

இங்கு யாரைக் கேட்டாலும் நடிக்கப் போகிறேன், படம் இயக்கப் போகிறேன் என்பார்கள். சினிமாவில் முப்பத்திரெண்டு கலைகள் இருப்பதை யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. இயக்குனராகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் என் நண்பனிடம் வினவினேன்,

“இயக்குனரின் வேலை என்ன?”

“நல்ல கதை பண்றது.. “

“அது கதாசிரியனின் வேலை… உன் வேலை?”

“ம்ம்ம்… திரை… இல்ல… கேமரா ஆங்கில்!”

“அது கேமராமேன் வேலை… உன் வேலை?”

“போடா… பா(Beep)… எச்ச த் (Beep)…”

என் சட்டையைக் கசக்கின அவன் கைகள். அதன்பின் என் நண்பனை நான் பார்க்கவில்லை. பழைய நண்பன். இப்போது ஏதோ படம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

இங்கு பலர் உண்டு. அவர்கள் யாருக்கும் இயக்குனரின் வேலை என்னவென்று சொல்லத் தெரியாது. எந்தப் பொறுப்பை ஒளிப்பதிவாளர் சுமப்பது, எந்தப் பொறுப்பை இயக்குனர் வகிப்பது என்றும் பகுத்து விவரிக்கத் தெரியாது. ஆனால் அவர்கள் எப்போதும் சொல்வது, “நான் இயக்குனர் ஆகப் போறேன்…”

“முதல கேமராமேன் ஆகிட்டு, அப்பறம் அப்படியே டைரக்டர் ஆகிடலாம்” இதுபோல் திரியும் கூட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சினிமாவினுள் நுழைந்தால் போதும் என்று ஏதேதோ வேலை செய்பவர்களுமுண்டு. (கொசுரு செய்தி: நடிகர் சுஜித்தின் கார் டிரைவர் அவரை வைத்து படம் இயக்கப் போகிறாராம். (இப்படித்தான் ஆவி இயக்குனர்கள் உருவாகிறார்கள்) ஒரு சாதாரண கார் டிரைவர் எப்படி சினிமாவில் பெரிய ‘தலை’யாகிறார் என்பதுதான் கதைக்கருவாம். வாழ்த்துக்கள்.)

தட்டுங்கள் திறக்கப்படும் எனும் கூற்று சினிமாவிற்குப் பொருந்தாது. சினிமாவின் கதவுகள் என்னதான் தட்டினாலும் சாமானியர்களுக்கு, அவர்கள் மிகுந்த திறமைசாலிகள் எனினும் திறக்காது. இந்த ஏதேதோ வேலை செய்யும் கூட்டம் சினிமாவின் கதவுகளை இன்னும் துருப்பிடிக்க வைக்கிறது.

என்னுடைய இன்னொரு பழைய நண்பனும் அப்படித்தான். சினிமாவின் conventional விதிகளைப் பின்பற்றி உதவி இயக்குனரானவன்.conventional விதிகள்.

1.குறைந்தது ஐந்து முதல் பதினைந்து நாட்கள் வரை ஏதாவது ஒரு இயக்குனரின் வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும். (பதினைந்து நாட்களில் அவர் பார்வை உங்கள் மீது படவில்லை எனில், வேறு இயக்குனர் வீடு நோக்கிச் செல்லவும். பதினைந்து நாட்களுக்கு மேல் காத்திருப்பது வீண். மீண்டும் ஆறு மாதம் கழித்து அதே இயக்குனர் வீட்டு வாசலில் வந்து நிற்கலாம்.)

2.இயக்குனர் வீட்டின் முன் நிற்கையில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தக் கூடாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆது. (மழைக்காலத்தில் போவது புத்திசாலித்தனம். மழையில் நனைந்து கொண்டே காத்திருந்தால், அந்த இயக்குனரை மேலும் கவர முடியும்)

3.என்னதான் பசித்தாலும் டீயும், பட்டர் பிஸ்கெட்டும் தான் சாப்பிட வேண்டும். (கையில் இருக்கும் காசிற்கு அது மட்டும் தான் கிடைக்கும் )

இந்தக் conventional விதிகளை எண்ணினால் எனக்குக் குமட்டிக் கொண்டு வரும்.

“நீ ஏன்டா இப்படிப் போய் அசிங்கப் படுற. திறமைய மதிக்கிறவங்ககிட்ட போய்ப் பார்ப்போம்…” என்றேன் என் நண்பனிடம். திறமையை மதிப்பவர்களும் சினிமாவில் உண்டு என்ற நம்பிக்கையில்.

“நீ இப்படிப் பேசிக்கிட்டே இருந்தா யாருக்கிட்டயும் அசிஸ்டண்டா சேர முடியாது” அவன் சொன்னது சரிதான். நான் இது வரை யாரிடமும் உதவி இயக்குனராகச் சேரவில்லை.

(எங்கு போனாலும் சிபாரிசு. ‘நீ இவர் புள்ளையா?’, ‘அவர் புள்ளையா?’, ‘அந்த நடிகையோட தம்பியா?’. நான் மார்லன் பிராண்டோ பேரனாக இருந்தால், உங்களை ஏன் தேடி வரணுமென்று அவர்களைக் கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க இயலாது. கேட்க முடியாது.கேட்கக் கூடாது )

“அது இல்லடா, தன்மானத்தை அடகு வைத்துட்டு… இப்படிச் செய்யணுமா ?” இது நான்.

“இதுல என்னடா தன்மானம். நம்ம டைரக்டர் சாரதி பெட்ரோல் பங்குல வேலை பாத்திருக்கார். இப்படிப் போராடித்தான் பல பேர் மேல வந்திருக்காங்க”

“அவங்க வந்த காலம் வேற. இப்ப திறமைய மதிக்கணும், யாரா இருந்தாலும். மதிக்கலனா மதிக்க வைக்கணும். அதை விட்டுட்டு, இப்படி அவர் செஞ்சாரு இவரு செஞ்சாருனு நம்மளும் ஒருத்தன் வீட்டு வாசல்ல போய் அசிங்கமா நிக்கணுமா?” இதோடு நான் நிறுத்தி இருக்கலாம். ஆனால் என் வார்த்தை சற்று தடித்துவிட்டது. “ஒரு காலத்தில ஆடை இல்லாம அம்மணமா திரிஞ்சாங்களே! அது மாதிரி நீயும் திரிய வேண்டித்தானே…!” அது ஒரு டீ கடை. எல்லாரும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த நண்பன் ரொம்ப நாகரிகமானவன். அவன் திட்டியது எனக்குப் புரியவில்லை. ஊர் கெட்ட வார்த்தைகள். ஆனால் என்னை அடிக்க வரவில்லை. அதனால் தான் சொன்னேன் நாகரிகமானவனென்று. அவனும் பழைய நண்பன் ஆகிப்போனான்.

conventional விதிகளை என்னால் பின்பற்ற முடியாத சூழ்நிலையில், புதுத் திறமைகளை மதிக்கிறாரென்று கேள்வியுற்று தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும் ஒரு இயக்குனரைச் சென்று பார்த்தேன். என்னை ஒரு எழுத்தாளன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். தமிழ் எழுத்தாளன் என்று தெரிந்ததும் அவர் தேவாங்கு போல் முகத்தை வைத்துக் கொண்டார். (என் தமிழ் நண்பர்களே என்னை மதிப்பதில்லை. அங்கீகரிப்பதில்லை. அவர் தமிழரன்று. அதனால் நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை )

என்னை மதியாததைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் தமிழ் எழுத்தாளன் என்றால் எதற்கும் லாயக்கற்றவன் என்று இவர்கள் எண்ணுவதைத்தான் நான் எதிர்க்கிறேன்.வெறுக்கிறேன்.

“அப்ப நீ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன் கதைகளெல்லாம் படிச்சதில்லை?” வினவினார், அந்த தேவாங்கு முகப் பாவனையை மாற்றிக் கொள்ளாமலே.

‘அப்ப இல்ல… எப்பவுமே நான் படித்ததில்லை.’ டான் பிரவுன், சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம் மட்டுமே ஆங்கில எழுத்தாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆங்கிலப் பெயர் உதிர்க்கும் பலரும் இந்த மூவரின் பெயரைத்தான் உதிர்ப்பார்கள். என்னைப் பொறுத்தவரை மேற்குறிப்பிட்ட அனைவரும் பல்ப் (pulp) எழுத்தாளர்கள். இலக்கியவாதிகளன்று. ஆங்கில இலக்கியவாதிகளான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், சார்லஸ் ரைட், தெட் ஹூஸ் போன்ற பலரை மிகத் தீவரமாக நான் வாசித்திருக்கிறேன். மேலும் லத்தின் அமெரிக்கக் கவியான பாப்லோ நெருடா, ஜெர்மன் படைப்பாளியான பெர்டோல்ட் பிரெக்ட் போன்ற பலரைப் பின்பற்றியிருக்கிறேன். ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்வது வீண். ஏனெனில் அவரைப் பொறுத்த வரையில் நான் ஒரு தமிழ் எழுத்தாளன்.

“மார்டின் ஸ்கார்சிஸே படம் ஏதாவது பார்த்திருக்கியா?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவரின் நடு நெத்தியில் சுத்தியலால் அடிக்கவேண்டுமென்றிருந்தது. ஆனால் அடிக்க முடியவில்லை. அடிக்க இயலாது. அடிக்க முடியாது. அடிக்கக் கூடாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் வெறும் மார்டின் ஸ்கார்சிஸேவும், குப்பாலாவும். எனக்கு இவர்களையும் சேர்த்து ப்ருஸ் ராபின்சன், வூடி ஆலன், டெரன்ஸ் மாலிக் போன்று இன்னும் பலருடைய சினிமாவைப் பற்றி ஆழ்ந்த புரிதல் இருக்கிறது.

நம்பினால் நம்புங்கள். நான் வாரம் முப்பத்தியாறு படங்கள் பார்த்த காலமெல்லாம் உண்டு. தமிழில் ஆங்கிலம் பேசிப் படம் எடுக்கும், ஒரே கதையைத் திரும்பத் திரும்ப வேறு நடிகர்களை வைத்துப் படம் எடுக்கும் இவரை விட நான் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன், ஆங்கில இலக்கியங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் நான் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையோடு அந்த இடத்தை விட்டு விலகிவிட்டேன், அந்த இயக்குனர் மீது நான் நிறைய மரியாதை வைத்திருப்பதால்…

மேற்கூறிய இயக்குனரைப் பின்பற்றி நிறையபேர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு வகைக் கூட்டம் உண்டு, மாற்று சினிமா எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள்.

அவர் ஒரு பிரபல இயக்குனர். மன்னிக்கவும் மாற்று சினிமா இயக்குனர். வடபழனி பஸ் ஸ்டாண்டில் இறங்கி, பிரபல ஸ்டுடியோக்களைக் கடந்து, வலது புறத்தில் உள்ள பெரிய சாலையில் (சிக்னல் அருகில்) திரும்பி, மீண்டும் வெகுதூரம் சென்று மூன்றாவது குறுக்குத் தெருவில் திரும்பினால் அவர் வீட்டை அடைந்துவிடலாம்.

அவரின் முதல் கேள்வி, “ஈரான் படம் எத்தனை பார்த்திருக்க?”

அவரின் வீட்டின் பின்னாடி அமைந்திருக்கும் அலுவலகம் அது. (ஏ.சி இருந்தும் வேர்த்தது. பின்தான் தெரிந்தது ஏ.சியை அணைத்து வைத்திருக்கின்றனர்). சத்தியமாகச் சொல்கிறேன் அது மட்டும் நான்காவது மாடியாக இருந்திருந்தால் நான் ஜன்னல் வழியாக வெளியே குதித்திருப்பேன். (மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர், குறைந்தது நான்காவது மாடியிலிருந்தாவது குதிக்கவும். முதல் மூன்று மாடியிலிருந்து குதித்தால் மரணிக்க முடியாது. பெருத்த காயம் ஏற்படும். ஆறுமாதமாவது வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் பல லட்சங்கள் செலவாகும். ஆனால் நான்காவது மாடியில் இருந்து குதிக்கும் போது, எலும்புகள் சுக்கு நூறாக உடைவதால் வலி தெரியாது. உடனே மரணம். அப்படி இல்லையெனினும் மருத்தவமனையில் நிச்சயமாக மரணம். ஒருநாளைக்கு மேல் உயிர் தங்காது. பி.கு. நான்காவது மாடியிலிருந்து குதிப்பவர்கள், ’நான் பிழைக்கமாட்டேன்… என்னை மருத்துவமனையில் சேர்க்காதீர்கள்’ என்று எழுதி வைத்து விட்டுக் குதிக்கவும். மருத்துவச் செலவு மிச்சம்.) ஆம் குதித்திருப்பேன். மாற்று சினிமா என்றால் ஈரான் படமென்று சொம்படிப்பவர்களைக் கண்டால் எனக்கு அருவருப்பாக இருக்கும். குறைந்த செலவில் எடுக்கப்படும் ஈரான் படங்கள் அருமையான படங்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அப்படங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடமுடியாது. காரணம், அது போன்ற யதார்த்தமான கதைகளை 1950களிலேயே இங்கு கரிச்சான் குஞ்சு எழுதிவிட்டார். 1930களில் மௌனி இயற்றிவிட்டார், 1960களில் தீ.ஜா விவாதித்துவிட்டார். (ஆனால் அந்தக் கதைகளை படமாக எடுக்க யாரும் தயாராகயில்லை) நவீன தமிழ் இலக்கியத்தைச் சிறிதும் படிக்காமல், ஈரானிய படங்களைக் கண்டு பிரமித்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமன்று.

அடுத்த கேள்வி, “பிடித்த இயக்குனர்?”

“செர்ஜியோ லியோன்”

அவர் அருகிலிருந்த தன் உதவியாளர்களைப் பார்த்துக் கொண்டார். அவர்கள் தெரியாது என்பது போல் தலையாட்டினர்.

“என்னப்பா மாற்று சினிமாவெல்லாம் பார்க்க மாட்டியா?”

“நான் மாற்று சினிமாவும் பார்த்திருக்கேன். நீங்க தமிழ்ல பல படங்கள் எடுத்தீங்களே, அந்தப் படங்களோட ஒரிஜினல் வெர்ஷனையும் பார்த்திருக்கேன்” என்று சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை. சொல்ல இயலாது. சொல்ல முடியாது.சொல்லக் கூடாது…

எனக்கு நன்றாகத் தெரியும். நான் அங்கு சத்ய ஜித்ரே என்று சொல்லியிருந்தால் அவர் என்னை அரவணைத்திருப்பார். ஆனால் சத்ய ஜித்ரேவின் பெயரை உதிர்க்க எனக்கு விருப்பமில்லை. சத்ய ஜித்ரே ‘இந்திய புது அலை’ சினிமாவின் தந்தை, பல தரமான படங்களை இயக்கியவர் என்று நான் அறிவேன். எனக்கும் அவர் படங்கள் பிடிக்கும். அதனைக் கொண்டாடுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால் சத்ய ஜித்ரே படைப்புகளை ஆராய்ந்து அவரின் ஆளுமை இந்தக்காலத்திற்கு எப்படிப் பொருந்தும் என்று சிந்திப்பதை விடுத்து, சத்ய ஜித்ரே சத்ய ஜித்ரே என்று பெயர் உதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ‘பதேர் பாஞ்சாலி’ மட்டுமே தலை சிறந்த படம் என அறைகூவல் விடுக்கும் கூட்டத்தில் நான் சேர விரும்பவில்லை. விளைவு இறுதி வரை என்னால் உதவி இயக்குனர் ஆகமுடியவில்லை.

என்னிடம் இருந்த கதைகளையெல்லாம் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, மீண்டும் ஏதாவது ஒரு கார்ப்பரேட் கம்பனியில் நவீன கொத்தடிமையாகி விடலாம் என்று எண்ணியபோது வந்து சேர்ந்தார் அந்தப் புது நண்பர். சினிமாவில் நண்பர்கள் எளிதாகக் கிட்டி விடுவார்கள். எதிரிகள் மிகவும் எளிதாகக் கிட்டிவிடுவார்கள்.

அந்த நண்பர் இயக்கப் போகும் குறும்படத்திற்குக் கதை வேண்டும் என்றார். வெகு நாட்களாக யாரும் பிரசுரிக்க முன்வராத ‘நிரஞ்சனின் நாய்’ என்ற என் சிறுகதையை அவரிடம் கொடுத்தேன். (என் கதைகளைப் பலரும் பாராட்டி இருந்தாலும் யாரும் பிரசுரிக்க முன்வரவில்லை). அதை வைத்து அவர் இயக்கிய குறும்படம் பலரால் பாராட்டப்பட்டது என்று கேள்வியுற்றேன். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டவில்லை. ஏனென்று பின் ஒருநாள் விளங்கியது, அந்தப் படத்தின் கதைக்கு அவன் (இனிமேல் அவனுக்கு என்ன மரியாதை!) தன் பெயரைப் போட்டுக் கொண்டான். அவனுடைய நண்பர் என்று சொல்லிக் கொண்டு இன்னொருவர் என்னைத் தொடர்பு கொண்டார். “அவன் பண்ணுனது தப்புதான் ப்ரோ…” இன்னும் ஆதரவாக நிறைய வார்த்தைகள் சொன்னார். “மீட் பண்ணலாமா ப்ரோ ?”

மின்விசிறியின் சப்தம் தலைவலியைத் தந்தது. மிகப் பழைய மின்விசிறி. “ப்ரோ… கொஞ்சம் ஃபேன ஆஃப் பண்றீங்களா… குளுருது” என்றேன். ஒருவழியாக மின்விசிறி நின்றது. டீ வந்தது. குடித்து முடிக்கும் வரை காத்திருந்தான். மேஜையில் இருந்த ஒரு நாவலைக் கையில் எடுத்து பின் அட்டையைப் பார்த்தேன்.

“எப்டியும் இதப் படிச்சிருப்பீங்க?”

இல்லை என்று தலை அசைத்தேன். “ஐயோ” பதறினான். “இப்ப இந்த நாவல் இண்டஸ்ட்ரில ரொம்பப் பிரபலம் ஆச்சே… நீங்க படிக்கலனு சொல்றது ஆச்சர்யமா இருக்கு.

“மேஜிகல் ரியலிசம் ப்ரோ… பின்னியிருக்காரு…”

மேஜிகல் ரியலிசம் என்றால் என்னவென்று கேட்டிருந்தால், நிச்சயம் அவனுக்கு விளக்கத் தெரிந்திருக்காது. பெயர் உதிர்க்கும் பட்சிகள். நான் எதுவும் பேசவில்லை.

“நான் இவரோட ரைட்டிங்ஸ தொடர்ந்து ஃபாலோ பண்றேன். இவர் மாதிரி யாரும் எழுத முடியாது… நீங்க இவரோட மத்த புக்ஸ்லாம் படிச்சி இருக்கீங்களா?”

“இல்ல”

மீண்டும் அவன், “ஐயோ”

எனக்குப் பழைய ஞாபகம் வந்துவிட்டது. வேலையை விட்டுவிட்டு வந்த புதிதில், ஒரு பிரபல பதிப்பாளரிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தது. என் கதையைப் பதிப்பிக்க முடியுமா என்று கேட்டேன்.

“என்னலாம் படிச்சிருக்கீங்க?”

“நவீன தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். படிச்சுக்கிட்டு இருக்கேன்…”

“அதான்… என்னலாம் படிச்சிருக்கீங்க?”

“பிரதாப முதலியார் சரித்திரத்துல இருந்து, அஞ்ஞாடி வரைக்கும் படிச்சிருக்கேன்… நகுலன், கரிச்சான் குஞ்சு…” இன்னும் நான் படித்த ஏகப்பட்ட எழுத்தாளர்களைப் பற்றிப் பேசினேன்.

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். சிறிது நேர மௌனம். உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம். குறிப்பிட்ட எழுத்தாளரைப் படித்தால் தான் ஒருவனால் எழுத்தாளனாக முடியும் என்று கருதுகிறார் அவர். சர்வாதிகார மனப்பாங்கு அவருடையது. இன்று மீண்டும் அதே பெயரை இந்தப் பட்சி சொல்கிறது.

“என்ன ப்ரோ யோசிக்கிறீங்க ?”

சுதாரித்துக்கொண்டேன். “ஒண்ணுமில்ல… இதுவரை படிச்சதுல்ல. படிக்கணும்”

மீண்டும் நான் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினேன்.

“அவன் உங்களுக்குக் கிரெடிட் கொடுத்திருக்கணும் ப்ரோ… இல்லனா ஒரு அமெளண்ட்டாவது கொடுத்திருக்கணும்” நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் தலையைக் குனிந்து கொண்டான். தொடர்ந்து பேசினான், என் கண்களை நிமிர்ந்து பார்க்காமலேயே.

“இல்ல. கஷ்டப்பட்டுக் கதை எழுதுறீங்க… எதுவுமே கொடுக்கலனா எப்டி?”

நான் அமைதி காத்தேன். “ஆனா. நான் அப்டி இல்ல ப்ரோ” வேகமாக டிராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தான்.

“வாங்கிக்கோங்க… ப்ளீஸ்…”

வாங்கி, பிரித்துப் பார்த்தேன். உள்ளே காசோலை இருந்தது. ஒன்றிற்குப் பக்கத்தில் நான்கு பூஜ்ஜியங்கள் இருந்தன. அதுவரை யாரும் கொடுக்காத பணம்.

“இது அட்வான்ஸ் தான் ப்ரோ… என் கூட நீங்க தைரியமா வர்க் பண்ணலாம். நான் ப்ரொஃபஷனல்…”

நான் மீண்டும் நிமிர்ந்து பார்த்தேன்.

“ஓ! என்னனு சொல்லல இல்ல. ஒண்ணுமில்ல ப்ரோ. இன்னும் எத்தனை நாள் அசிஸ்டண்ட் டைரக்டராவே இருக்கிறது. ப்ரொடியூசர் கிடச்சிட்டாரு. ஸ்கிரிப்ட் தான்…உங்கக்கிட்ட ஏதாவது ஸ்கிரிப்ட் இருக்கா ப்ரோ?” என்னைப் பேசவிடாமல் அவனே பேசினான்.

“இல்லாம இருக்குமா… வேலையெல்லாம் விட்டுட்டு ரைட்டர் ஆகியிருக்கீங்க…”

‘விட்டா பேசிக்கிட்டே இருப்பான்’. நான் காசோலையை மீண்டும் அவன் கையில் கொடுத்தேன். அவன் முகத்தில் சோகம் குடிகொள்ள ஆரம்பித்துவிட்டது.

“இன்ட்ரஸ்ட் இல்லயா ப்ரோ?”

நான் புன்னகை செய்தேன். “என் பேர்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு” ஸ்பெல்லிங்கைச் சொன்னேன். புதியதொரு காசோலையை எடுத்துப் பிழையின்றி என் பெயரை எழுதிக் கொடுத்தான்.

அவன் கொடுத்த காசுக்கு ஒரு கதையைச் சொல்லவேண்டும். என் கதையை ஏன் சொல்ல வேண்டும்? எப்படியும் அவன் கிரெடிட் தரப் போவதில்லை. முந்தைய நாள் இரவு ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். நான்கு நண்பர்கள் சேர்ந்து குடிப்பார்கள். போதை தலைக்கேறிடும். பின் ஒரு நாள் முழுக்க என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. இந்தக் கதையை அப்படியே தலைகீழாக மாற்றினேன். நான்கு வழிப்போக்கர்கள் சேர்ந்து குடிப்பார்கள். பின் நண்பர்களாவார்கள். கதையை மதுரைப் பின்னணியில் அமைத்தேன். அவனுக்குக் கதை பிடித்திருந்தது. ஆவி எழுத்தாளானாக அவதாரம் எடுத்தேன். ஒருவாரத்தில் திரைக்கதையை எழுதி முடித்தேன். படம் சூப்பர் ஹிட். 120 ரூபாய் டிக்கெட் கொடுத்து தாம்பரத்தில் ஒரு திரையரங்கில் படத்தைப் பார்த்தேன்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- கதிர்க்குமரன்

அது என்னுடைய பெயர் இல்லை. அது அவனுடைய பெயருமில்லை. சினிமாவிற்காக பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறான். என் கதைதான். நான் சொன்ன இடத்தில் பாடல்கள் வந்திருந்தன. ஆனால் க்ளைமாக்ஸிற்கு முன் வரும் குத்துப் பாட்டிற்கு நான் பொறுப்பல்ல. அந்தப் பாடல், மூலத்திரைக்கதையில் இடம்பெற்றிருக்கவில்லை. படத்தோடு பொருந்தாமல் தனித்துத் தெரிந்தது. ஆனால் மக்கள் ஆரவாரம் செய்தனர். ஒரு ஹிந்தி நடிகை ஆடிக்கொண்டிருந்தாள். பாடலில் ‘செழிப்பம்’என்ற வார்த்தை மட்டும் ஐந்து முறை வந்தது. தேசிய விருது பெற்ற கவிஞர் எழுதிய பாடல். ஒரு வழியாகப் பாடல் முடிந்தது. அதற்கு பின் என்னால் படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அங்கே பாடல் வந்திருக்கக்கூடாது. அவன் ஒரு நல்ல இயக்குனர் அன்று. நல்ல இயக்குனராக இருந்திருந்தால், அங்கே அந்த பாடலை வைத்திருக்க மாட்டான். அவன் என்ன செய்வான் பாவம்? ஒருவேளை தயாரிப்பாளர் ஐட்டம் பாடல் வைக்கச் சொல்லி அவனை வற்புறுத்தியிருக்கலாம். ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன்தான் தயாரிப்பாளர். அவன் அவரைப் பகைத்துக்கொள்ள விரும்பியிருக்க மாட்டான். நானும் அவன் இடத்தில் இருந்திருந்தால் அப்படிதான் செய்திருப்பேன்.

அந்தப் ப்ரொஃபஷனல் அதன்பின் என்னை அழைக்கவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். ஆனால் அவனுடைய உதவி இயக்குனர் ஒருவன் அழைத்தான். பிரசுரமாகாத என் நாவலைத் திரைக்கதையாக்கிக் கொடுத்தேன். படம் ஓடவில்லை. ஆனால் அவன் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த வரம் என்று அனைவரும் பாராட்டினார்கள். இப்படிதான் நான் முழுநேர ‘ஆவி எழுத்தாளன்’ ஆகி போனேன். அதாவது, கிரெடிட் கிடைக்காது என்று தெரிந்தும் பிறருக்காக, வெறும் பணத்திற்காக எழுதும் ‘நிழல் எழுத்தாளன்’ ஆகிப்போனேன். என் வங்கிக் கணக்கில் பணம் அதிகமாகத் தொடங்கிற்று. நிறைய பேர் என்னை அழைப்பார்கள். நிறைய எழுதிக் கொடுத்திருக்கிறேன். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், போன தீபாவளிக்கு, அந்தப் பிரபல மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ஆறு படங்கள் வெளியாயின. அதில் ஒன்று தெலுங்கு படம். அந்த ஆறு கதைகளும் என்னுடையதுதான். பெரிய தலைகளுக்கெல்லாம்கூட கதை எழுதி இருக்கிறேன். அந்தப் பிரபல நடிகன் பல வேடங்களில் நடித்த, அந்தப் படத்தின் கதையைத் தான் தான் எழுதியதாக ஒரு உதவி இயக்குனர் புகார் தெரிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் அது பொய். ஏனெனில் அந்தக் கதையை எழுதியவன் நான்தான்… அந்தப் பிரபல நடிகனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு வந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். (அவர் இப்போது இல்லை. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்). அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இறுதி வரை அவரை வசனகர்த்தா என்றே தமிழ் சினிமா அழைத்தது. ஆனால் அவர் வசனகர்த்தா அன்று. சிறந்த திரைக்கதை ஆசிரியர். அவர் ஏராளமான படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியிருந்தாலும், அவருக்கு வசனகர்த்தா என்ற கிரெடிட் மட்டுமே மிஞ்சியது. அந்த எழுத்தாளரே அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.

ஆனால் அலட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. காரணம், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களாக நான் கருதும் இருவரில் இவரும் ஒருவர். இன்னொருவர் அசோகமித்திரன். ஆனால் இறுதி வரை தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.

அவருக்கும் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பிரபல நடிகன் திரைப்படத்தின் உண்மையான கதாசிரியர் நான் தான் என்று. ஆனால் இதற்கெல்லாம் நான் அலட்டிக் கொள்ளக் கூடாது. என் கதையைத் திருடிவிட்டார்கள் என, யாரையும் எதிர்த்துக் கொடிபிடிக்க முடியாது. இருக்கும் ‘ஆவி எழுத்தாளன்’ வேலையும் போய்விடும். என் தந்தை ஒண்ணும் பிரபல தயாரிப்பாளர் அன்று. என் பாட்டன் மார்லன் பிராண்டோ அன்று. என்னால் வேறு எப்படியும் திரைத்துறையில் நுழைய முடியாது. நீந்த முடியாது. யாராவது ஒருவருடைய உதவியோடு, என்றாவது ஒருநாள் படம் இயக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், நான் யாரையும் பகைத்துக்கொள்வதில்லை. குறைந்த விலைக்கு என் கதைகளை விற்றுக் கொண்டிருக்கிறேன். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என்னைப் போல் பலருண்டு. அவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை.

– July 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *