கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 3,986 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரான் மலை என்று ஒரு மலை இருக்கிறது. அதற்கு மிகப் பழைய காலத்தில் பறம்பு மலை என்று பேர். அங்கே பாரி என்ற சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். இப்போது ஜமீன்தார் என்று சொல்லுகிறோமே, அவர்களைப் போன்றவர்களே அந்தச் சிற்றரசர்கள். அந்தக் காலத்தில் அவர்களை வேளிர் என்று சொல்வார்கள். மகள் என்றால் ஒருத்தியையும் மகளிர் என்றால் பலரையும் குறிக்கும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? அந்த மாதிரியான பெயர்களே வேள், வேளிர் என்பவையும்.

பாரி வேளுடைய நாட்டுக்குப் பறம்பு நாடு என்று பேர். அந்த நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு மலை நல்ல வளப்பமுடைய மலை. அடர்ந்த காடுகளே உடையது. பாரியினுடைய பெருமைக்கு அவன் நாடு காரணம் அன்று. அவன் தன்னிடம் வருகிறவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறவன். அந்தப் பழங்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிந்த கொடையாளிகள் சிலர் இருந்தார்கள். அவர்களை வள்ளல் என்று சொல்வார்கள். ஏழு வள்ளல்களைப்பற்றிப் புலவர்கள் பாராட்டிக் கவி பாடியிருக்கிறார்கள். அந்த ஏழு பேருக்குள் பாரியும் ஒருவன்.

பாரி வேளின் புகழ் பரவியதற்கு அவனுடைய அரசாங்கப் புலவராகக் கபிலர் என்ற பெரியவர் இருந்தது முக்கிய காரணம். புலவர்கள் யாவரும் ஒருங்கே போற்றும் பெருமை கபிலருக்கு இருந்தது. பெரிய அறிவாளி கல்விக் கடல் அற்புதமான கவிஞர்; குணமலை. அவர், மதுரை, உறையூர் முதலிய இடங்களில் பாண்டியனிடமோ சோழனிடமோ புலவராக இருந்திருக்கலாம், அவருக்குப் பாரி வேளிடம் அளவற்ற அன்பு உண்டாகிவிட்டது. அதனால் பறம்புமலையில் பாரியின் அவைக்களப் புலவராகவே இருந்துவிட்டனர். பாரியும் கபிலரும் உடல் இரண்டு, உயிர் ஒன்றாகப் பழகினார்கள்.

பாரிக்கு அங்கவை, சங்கவை என்று இரண்டு பெண்கள் இருந்தார்கள். நல்ல குணமும் அழகும் உள்ளவர்கள். அவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து, இனிய கவிகளைப் பாடும் படி செய்தார் கபிலர். தமிழில் ஆர்வம் உடையவர்கள் யாராக இருந்தாலும் கபிலரைக் கண்டு வணங்கிவிட்டுச் செல்வார்கள்.

Kabilarஒரு சமயம் பாண்டியனுக்குப் பாரி மகளிரைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ஒரு தாதுவனை அனுப்பினான். பாரி, கபிலருடைய யோசனையைக் கேட்டான். “அரசருடைய அந்தப்புரத்தில் பல அரசிகளோடு ஒருத்தியாக வாழ்வதஞல் பயன் இல்லை” என்று அவர் கூறினார். பாரிக்கும் அது சரியென்றே பட்டது. என் பெண்களைக் கொடுக்க மாட்டேன் என்று மறுத்துச் சொல்லிவிட்டான். அதைக் கேட்டுப் பாண்டியனுக்குப் பாரியின்மேல் கோபம் உண்டாயிற்று.

சில நாள் கழித்துச் சோழனுக்கும் பாரி மகளிரின் மேல் விருப்பம் உண்டாயிற்று. அவனும் பாரியினிடம் ஆளே அனுப்ப, அவனுக்கும் பாரி மறுத்துக் கூறிவிட்டான். இப்படியே சேரனும் பாரி மகளிரைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினபோது அவனுக்கும் மறுத்துச் சொல்லியனுப்பினான் பாரி.

இப்போது சேர சோழ பாண்டியர் என்ற மூன்று பெரிய அரசர்களுக்கும் பாரியின்மேல் கோபம் வந்துவிட்டது. மூன்று பேர்களும் ஒன்றாகக் கலந்து பேசிக்கொண்டார்கள். “இந்தச் சின்ன அரசனுக்கு என்ன திமிர்! இவனை அடக்கிவிட வேண்டும்” என்று தீர்மானித்தார்கள்.

மூன்று பேர்களுடைய படையும், பறம்பு மலேயைச் சூழ்ந்து கொண்டன. மேலே கோட்டையை அடைத்துக்கொண்டு பாரி உள்ளே இருந்தான். மலையைச் சுற்றிக் காவல் வைத்துவிட்டால் கீழே இருந்து மேலே ஒன்றும் செல்ல முடியாது. சோற்றுக்கு இல்லாமல் பாரியும் அவனைச் சேர்ந்தவர்களும் வாடிக் கடைசியில் வழிக்கு வருவார்கள்” என்று மூன்று அரசர்களும் எண்ணிப் படைகளைக் கீழே நிறுத்தியிருந்தார்கள். ஆனால் விசாலமான பறம்பு மலையில் பாரியின் ஆட்களுக்கு வேண்டிய பொருள்கள் கிடைத்தன. இதைக் கீழே முற்றுகையிட்டிருந்த மன்னர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று எண்ணினர் கபிலர். ஒரு பாட்டை எழுதி அனுப்பினார். நீங்கள் பறம்பு மலையைப்பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. நீங்கள் எத்தனை நாள் கீழே சுற்றி அடைத்திருந்தாலும் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. கீழேயிருந்து நெல் வர வேண்டும் என்பது இல்லை. இங்கே வளரும் நெடிய மூங்கில்களில் நெல் விளைகிறது. அந்த அரிசியைக் கொண்டு நாங்கள் சமைத்துச் சாப்பிடுவோம். இங்கே எத்தனையோ பலாமரங்கள் இருக்கின்றன. அவற்றில் கனிந்து தொங்கும் பழங்கள் வேறு இருக்கின்றன. வள்ளிக் கிழங்குகள் நிறைய உண்டு. அவற்றைச் சுட்டுச் சாப்பிடுவோம். பறம்பு மலைக் காட்டிலே தேனுக்குப் பஞ்சமே இல்லை. சுனைகளில் தெளிந்த நீரும் இருக்கிறது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு எவ்வளவு ஆண்டுகளானாலும் சுகமாக இருக்க முடியும். உங்கள் படைப் பலத்தைக் கொண்டு பாரியை வெல்ல முடியாது. ஆனாலும் ஒரு தந்திரம் செய்தால் இவன் காட்டைப் பெறலாம். பாட்டுப் பாடக் கற்றுக்கொண்டு நீங்கள் வாருங்கள். உங்கள் மனைவிமாருக்கு ஆடல் பாடலைக் கற்றுக்கொடுத்து அவர்களையும் அழைத்து வந்து பாடுங்கள். அப்போது பாரி, பறம்பு காட்டைக் கேட்டாலும் கொடுப்பான், பறம்பு மலையையும் கொடுப்பான்!” என்று அந்தப் பாட்டிலே இருந்தது.

அதைப் பார்த்த அரசர்கள் மிகவும் நாணம் அடைந்தனர். ஒன்றும் செய்ய முடியாமல் ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்; ஆயினும் அவர்களுடைய கோபம் திரவில்லை.

வஞ்சகமாக, பாட்டுப் பாடத் தெரிந்த சிலரை அனுப்பிப் பாரியைக் கொலை செய்யும்படி அம்மன்னர்கள் ஏவிவிட்டார்கள். அவர்கள் பாரியினிடம் வந்து, தனியே அழைத்துச் சென்று கொன்று விட்டு ஓடிவிட்டாாகள்.

பாரியின் பிரிவால் கபிலர், எல்லை இல்லாத துயரத்துக்கு ஆளானர். தம்முடைய உயிரையும் மாய்த்துக்கொள்ளத் துணிந்தார். ஆனால் பாரியின் பெண்கள் இரண்டு பேரையும் எண்ணியபோது அந்தக் கருத்தை விட்டொழித்தார். அவர்களை நல்ல இடத்தில் சேர்ப்பதே முதல் கடமை என்று தீர்மானித்தார். அதன்மேல் அவர்களை அழைத்துக்கொண்டு திருக்கோவலூருக்கு அருகில் ஒரிடத்தில் பாதுகாப்பாக இருக்க வைத்துச் சென்றார்.

சில சிற்றரசர்களிடம் சென்று பாரியின் பெண்களை மணந்து கொள்ளும்படி கேட்டார். அவர்கள் மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். தாம் அவர்களை மணந்துகொண்டால் சேர சோழ பர்ண்டியர்களின் விரோதம் தமக்கு ஏற்படுமோ என்ற பயம் அவர்களுக்கு. பாரி இருந்தபோது அந்தப் பெண்கள் இருந்த செல்வ நிலையையும் இப்போது இருக்கும் நிலையையும் எண்ணி, அவர் உருகினர். எப்போதும் பாரியுடன் இருந்து, பொழுது போக்கி இன்புற்ற அவருக்கு, அவன் இல்லாத உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை. அவர் நினைத்த காரியமும் நிறைவேறவில்லை. அதனால் பின்னும் உலக வாழ்க்கையில் வெறுப்பு உண்டாயிற்று. சேர அரசனிடம் சென்று அவனைப் பாடிப் பொன் பெற்று வந்து, அங்கவை சங்கவைகளிடம் அளித்தார். பின்பு ஒளவையாரைக் கண்டு அவரிடம் அப்பெண்களை ஒப்படைத்து விட்டுக் கையை உதறிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

எங்கே? அவர் பாரி இருக்கும் இடத்துக்குப் போகவேண்டும் என்று துடித்தார். இந்த உடம்புடன் போக முடியுமா? திருக்கோவலூருக்கு அருகில் ஓர் இடத்தில் தியை மூட்டி அதிலே பாய்ந்து உயிரை நீத்தார். அவ்விடத்தில் இன்றைக்கும் கபிலக் கல் என்ற ஒரு கல் இருக்கிறது.

பாரிக்கும் கபிலருக்கும் இடையே இருந்த நட்பின் உயர்வைத் தமிழுலகம் முழுவதும் பாராட்டியது. பாரியின் சிறந்த குணத்தில் ஈடுபட்டு அவனுக்கே தம் தமிழையும் உயிரையும் கொடுத்த கபிலரைத் தமிழ்ப் புலவர்கள் தெய்வத்தைப்போல் போற்றினார்கள்.

– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *