கனவின் எதிரொலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 2,352 
 

1

தேவியின் சிலம்பணியாத கால்களைப் பார்க்கும். போதெல்லாம் மாங்கல்யம் இழந்த கழுத்தின் ஞாபகம் தான் நெடுஞ்செழியனை உறுத்திக்கொண் டிருந்தது.. அரசியின் கையில் ஒற்றைச் சிலம்பின் தொங்கணிகள் உராய்ந்து சப்திக்கும் போது அந்த ஒலி கணவனை இழந்து தவிக்கும் ஸதி அலறுவது போல் இருந்தது. சிலம்புக்காக வருந்தித் தன்னை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் இருக்கும் அரசியின் ஒளி குன்றிய முகம் தன் அதிகார ஒளி மங்குவதற்கு ஸூசகமோ என்று கலங்கினான். பாண்டிய நீதி முறையில் நடந்த இந்த முதல் திருட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லையே என்று ஏங்கினான். தன் முகம் பார்த்து அரசி கூறும் ஓர் இன்ப வார்த்தைக்காகத் தவித்துக்கொண் டிருந்தது அவன் மனம்.

சிலம்பின் உருவத்தையே கண்முன் நிறுத்திக் கொண்டிருந்த அரசிக்கோ அரசனின் காதல் வார்த்தைகள் கூட இன்பம் தரவில்லை.

ஊடல் அலை மோதும் மனசுடன் பாண்டியன் அந்தப்புரம் வந்து கொண் டிருந்தான். தாபத்தால் அவன் அங்கங்கள் துடித்துக் கொண்டிருந்த நிலைமையில் வேறு ஒருவிதமான சிந்தனையும் இல்லாமல் பார்வை கீழ்நோக்கியே இருந்தது.

அந்தப்புரத்தை அடுத்து இருக்கும் நடைபாதையில் வந்துகொண் டிருக்கையில் சூரியனே அங்கே வந்து குதித்தது போன்ற ஒரு பிரகாசம் பளீரென அந்த இடத்தில் திடீரென்று தோன்றியது. அரசன் கண்கள் கூசிப் பின் வாங்கின. மறு விநாடி அந்த ஒளி என்ன வென்று ஆராய அவன் கண்கள் சுற்றி விழித்தன. தனக்குச் சமீபத்தில் அரண்மனைத் தட்டான் பவ்யமாக நின்று கொண் டிருப்பதை அரசன் பார்த்தான். அதே சமயம் அவன் கைவிரல்களுக்கு இடையே பிடித்திருந்த ஒரு சிலம்பின் ஒளி மறுபடியும் அரசன் முகத்தில் பட்டது. அது பாண்டியனின் மங்கிய கண்களுக்குச் சோபை தந்ததுபோல் இருந்தது.

“சிலம்பா!” என்று வாய்விட்டுக் கூவிக்கொண்டே வெடுக்கெனத் தட்டான் கையிலிருந்து சிலம்பைப் பிடுங்கினான் அரசன். பிடுங்கிய வேகத்தில் தொங் கணிகள் பலமாகச் சப்தித்தன. பாண்டிய சிம்மாசனமே ஆடிக் கலகலத்துச் சப்தித்ததுபோல் இருந்தது அந்த ஒலி.

“ஏது இது? எங்கிருந்தது? சீக்கிரம் சொல்லு” என்று அவனை அவசரப்படுத்தி அரசன் கேட்டான். எல்லை மீறிய வியப்பும் சந்தோஷமும் அவன் குரலில் தொனித்தன.

தட்டானுக்கு வார்த்தைகள் வேகமாக வரவில்லை. அவசரத்திலோ அல்லது தன் மனச் சாக்ஷியின் தவிப்பிலோ சிதறின வார்த்தைகளைத் திரட்டிக் குவித்துக் கூறலானான் :

“அரசே, சிலம்பைத் திருடியவன் என் வீட்டில் வந்திருக்கிறான் விற்பதற்கு…”

“என்ன! பாண்டிய நாட்டில் திருடி அங்கேயே விலைபேசத் துணிந்தா?”

தட்டான் மௌனமாகத் தலை அசைத்தான். பின், “இந்தச் சிலம்பு அரசிக்குத்தான் தகும்; பொருத்தமானது; காட்டி வருகிறேன்!” என்று ஒரு போக்குக் காட்டி வந்திருக்கிறேன்” என்றான்.

அரசியின் பிரஸ்தாபம் மன்னனுக்கு அந்தப் புரத்தை ஞாபக மூட்டியது. கண்கள் அந்தப்புரத்தை ஒருதரம் பார்க்கும்; கைச்சிலம்பின் மேல் ஒரு பார்வை; மறுபடி அந்தப்புரம் ஒரு பார்வை. ஒரு க்ஷணம் அவனால் அங்கே நிற்க முடியவில்லை.

தட்டான் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அரசன் அந்தப்புரம் நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்துவிட்டான். “சரி, சரி. இந்தக் காவலாளியை அழைத்துப் போய் அவனைக் கொன்று விடு. அதுதான் தண்டனை” என்ற வார்த்தைகளே சுருக்கமாக அரசன் வாயிலிருந்து எழுந்தவை. தட்டானுக்கு அது போதும்.

அரசன் அந்தப்புரம் போய்விட்டான்.

2

“தேவி, பாண்டிய நீதி நிலைத்துவிட்டது. இந்தா சிலம்பு!” என்று பலக்கக் கூவிக்கொண்டு அரசியின் படுக்கையில் தாவினான் அரசன்.

அதே சமயம், “ஐயோ! வேண்டாம்! வேண்டாம்!” என்று அலறிப் புடைத்துக் கோப்பெருந்தேவி படுக்கையிலிருந்து பதறி எழுந்து தடுமாறினாள். அரசன் திடுக்கிட்டுப் போனான். அரசி கீழே விழுந்துவிடாமல் அவளைச் சட்டென ஏந்திப் பிடித்துக்கொண்டு, “தேவி, ஸ்வப்னம் கண்டாயா? நான் இதோ இருக் கிறேன். பயப்படாதே. இந்தா சிலம்பு . கண்ணை விழித்துக்கொள்’ என்று அணைத்துக்கொண்டே சிலம்பைத் தேவியின் கைகளில் வைத்தான்.

தேவியின் ஸ்வப்ன மயக்கமும் பீதியும் இன்னும் கலையவில்லை. சிலம்பு என்ற வார்த்தையைக் கேட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தாள். ஒரே பிரகாசமாக இருந்தது அறை. கையில் ஏதோ கனப்பது போல் இருந்தது. உண்மையை அறியும் நிதானம் இன்னும் ஏற்படவில்லை அவளுக்கு. “ஐயோ, நெருப்பா! எனக்கு வேண்டாம்” என்று கூவிக் கையிலிருந்த சிலம்பை நழுவ விட்டு விட்டாள். சிலம்பு படுக்கையில் பொத்தென விழுந்தது.

அரசன் பதறி, “தேவி, நெருப்பு அல்ல. உன் சிலம்பின் பிரகாசந்தான். பயப்படாதே! கண்களைத் திறந்து பார்” என்று தேவியின் கண்களைத் துடைத்தான். அரசி பயத்தினால் அரசனை இறுகப் பற்றிக் கொண்டாள்.

தேவிக்குத் தெளிந்த நினைவு வந்ததும், “அம்ம! என்ன பயங்கரமான கனவு! நினைக்கவே பயமாக இருக்கிறதே! என்ன கோரம்!” என்று கூறினாள்.

அப்போது அவள் தேகம் நடுங்கியது. “சிலம்பு கிடைத்து விட்டதா?” என்று அரசன் முகம் பார்த்துக் கேட்டாள். அவள் குரலும் நடுங்கியது.

“அசடே, கனவுக்கா இவ்வளவு பயம்! கனவு காண்புது சகஜந்தானே! சிலம்பு இந்தா” என்று மறுபடியும் அதைக் கையில் எடுத்துக் கொடுத்தான்.

அதைப் பார்க்கும் போதே அரசிக்குப் பயமாக இருந்தது. நடுங்கிக்கொண்டே கையில் பிடித்துப் புரட்டிப் பார்த்தாள். அதன் ஜ்வலிப்பினால் கையில் சுடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது அரசிக்கு.

அரசன் வார்த்தைகள் தேவியின் மனத்தில் அவ்வளவாகப் பதியவில்லை. தான் கண்ட பயங்கர ஸ்வப்னத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். போதாததற்குக் கையில் இருந்த சிலம்பு திகிலை அதிகரிக்கச் செய்தது. மறுபடியும் அரசனிடம் அந்தக் கனவைப்பற்றிப் பிரஸ்தாபிக்க வாயெடுத்தாள். சிலம்பினிடத்தில் முன் இருந்த ஆசையின் தீவிரம் அப்போது அரசிக்கு இல்லை.

அரசன் தேவியை இடைமறித்து, “தேவி, திரும்பத் திரும்ப அதையே நினைத்து நினைத்து வீண் பயம் கொள்ளாதே. திரும்பக் கிடைத்த இந்தச் சிலம்பைக் காலில் போட்டுக்கொள்” என்று கண்களில் காதல் ததும்ப, ஊடல் உறுத்தக் கூறினான்.

தேவி கொஞ்சம் அதிருப்தியுடன் அரசனைப் பார்த்தாள். “மன்ன, அதை நான் எப்படி மறக்க முடியும்? என் கண்முன் சித்திரம் போல் நின்று உறுத்திக்கொண்டே இருக்கிறதே! என் மனம் அமைதியே கொள்ளவில்லை. பீதி தணியவாவது உங்களிடம் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்றாள்.

அரசன் சிரித்துக்கொண்டே தேவியின் கனவைக் கேட்டான்.

“தேவ, நான் எந்த இடத்தில் இருந்தேன் என்பதே தெரியவில்லை. ‘சிலம்பு , சிலம்பு’ என்று பைத்தியத்தைப்போல் போய்க்கொண்டிருந்தேன். எனக்குக் சற்றுத் தூரத்தில் சிலம்பு உருவமான பிரகாசம் தெரியவே ஓடினேன். ஆசையோடு அதை எடுப்பதற் காகக் கிட்ட நெருங்கவும் அங்கே பெரிய ஜ்வாலை ஒன்று கிளம்பிக்கொண்டிருந்தது. பயந்து பின் வாங்கினேன். நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜ்வாலை மளமளவெனக் குறைந்து கொண்டே வந்து ஓர் அனல் வளையமாகிவிட்டது” என்று சொல்லிக்கொண்டே வந்த போது அரசியின் முகம் விகாரம் அடைவதைக் கண்டு அவளைத் தேற்றினான் அரசன்.

தேவி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு மேலும் கூறினாள்:

“யாரோ அதைக் கையில் எடுத்துக்காட்டி, இந்தா உன் சிலம்பு” என்று கையில் வைக்க வருவது போல் இருந்தது; கனல் வளையந்தான் என் கண்களுக்குத் தெரிந்தது; உருவம் தெரியவில்லை. ஆனால் குரல் மட்டும் ஒரு பெண்ணின் தீர்க்கமான குரலாக இருந்தது. இப்போது கூட என் காதுகளில் அந்தச் சப்தம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் பயந்து பின் வாங்கிக் கொண்டிருக்கையிலேயே அனல் வளையம் என் மீது மோதிவிட்டது.

“ஐயோ, சிலம்பு வேண்டாம், வேண்டாம்” என்று அலறித் துடித்தேன். கண் விழித்துப் பார்த்த போது அறை பிரகாசமாக இருந்தது. உங்களைப் பார்க்க முடியவில்லை. அறை தீப்பிடித்துவிட்டது என்று பட்டது. பயத்தினால் அலறிக் கையில் இருந்த சிலம்பையும் அனல் வளையம் என்று கீழே போட்டு விட்டேன் போல் இருக்கிறது” என்று கூறி முடித்தாள். மறுபடியும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

அந்த ஸ்வப்னம் பாண்டியனுக்கு வேடிக்கையாக இருந்தது. சிரித்துக்கொண்டு, “தேவி, சிலம்புப் பிரமையின் விளைவு இந்தக் கனவு. நீ விழிக்கவும் அதே சமயம் சிலம்பின் பிரகாசம் தோன்றவும் நீ பயந்து விட்டாய். அவ்வளவு தான்” என்றான்.

இந்த விளக்கம் அரசிக்குச் சரியாகப் படவில்லை. “அரசே, இவ்வளவு கோரக் கனவு இதுவரை நான் கண்டதே இல்லை. பகலில் காணும் கனவு – அதுவும் தீக்கனா, ஏதோ கெடுதலுக்கு அறிகுறி என்று என் மனசுக்குத் தோன்றுகிறது. ஐயோ! அந்தப் பெண் குரல்!” என்று சஞ்சலத்துடன் கூறினாள்.

அரசன் ஸ்வப்னத்தில் கொஞ்சமும் நம்பிக்கை வைக்கவில்லை. பேச்சை மாற்றி அரசியின் பீதியைத் தெளிவிக்க நினைத்து, “தேவி, நெடுநாளாகக் காணாமற் போயிருந்த சிலம்பு கிடைத்திருக்கிறது. அதைப் போட்டுக்கொள்ள வேண்டாமா? நானே போட்டு விடுகிறேன்” என்று முதலில் பழைய சிலம்பைப் போட்டு விட்டுப் புதுச் சிலம்பையும் போடப் போனான்.

அரசி சிலம்பை உற்றுக் கவனித்தாள். என்ன தோன்றியதோ : பாண்டியன் கையைத் தடுத்து, “அரசே , எனக்கே புரியாத வகையில் மனசு என்னவோ போல் இருக்கிறது. இன்று வேண்டாமே இந்தச் சிலம்பு” என்று சொல்லிக்கொண்டே சிலம்பை அவனிடம் நீட்டினாள். அரசன் அந்த வார்த்தைகளை ஏற்கவில்லை. அரசியின் பயம் தெளிய அதை அணிவதுதான் சரியென நினைத்துப் பலவந்தமாகப் போட்டுவிட்டான். அரசியின் தேகம் ஒரு தரம் நடுக்கமுற்றது. அந்த ஸ்வப்ன நினைவுடன் இரண்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம்! புதுச் சிலம்பு கனிந்து எரியும் தழல் போல் ஜ்வலித்துக்கொண்டிருந்தது. பழைய சிலம்போ அவிந்துபோன சாம்பல் நிறம் கொண்டிருந்தது.

3

பகல் சாய்ந்து மாலை நேரம் நெருங்கியது. நெடுஞ்செழியன் தேவியுடன் அந்தப்புரமாடியின் வெளிமுற்றத்திலே வந்து நின்று கொண் டிருந்தான். இளம் வெயில் அவர்கள் மீது சோபிதம் இன்றி விழுந்து கொண்டிருந்தது. இன்னும் அந்த ஸ்வப்ன ஞாபக மாகவே அரசி இருந்தாள் என்பதை அவள் அமைதியற்ற முகக்குறி காட்டியது. அரசனின் மனமும் ஏதோ ராஜாங்க யோசனையில் ஆழ்ந்திருந்தது.

திடீரெனக் கிளம்பிய ஓர் அதிர்ச்சியொலி அவர்கள் இருவரையும் ஏக காலத்தில் தூக்கிவாரிப் போட்டது. “ஐயோ, ஆராய்ச்சிமணி!” என்று அரசி வாய் விட்டுக் கத்திவிட்டாள். அரசன் ஒரு விநாடி கூடத் தாமதிக்கவில்லை. “இதென்ன விபரீதம்? இதுவரை கேட்டதில்லையே!” என்று பதறிக் கொலுவை நோக்கி ஓடினான். அரசியும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள். அரண்மனைச் சேவகர், தாதிகள் எல்லோரும் ஆராய்ச்சி மணியின் சப்தத்தைக் கேட்டு மருண்டு போய் விட்டார்கள்.

அரசன் பாதி தூரம் போகு முன்னரே ஆராய்ச்சி மணியைக் காப்போன் ஓட்டம் ஓட்டமாக வந்தான்.

“அரசே! யாரோ தெரியவில்லை. தலைவிரி கோலமாக ஒரு பெண் அரண்மனை வாசலுக்கு வந்து, ‘பாண்டியன் எங்கே? எங்கே?’ என்று கத்திக்கொண்டு வந்தாள். ஆராய்ச்சி மணி அவள் கண்களில் நேராகப் பட்டது. அதை நோக்கி ஓடினாள். சீ, நியாயம் வழங்கத் தெரியாத அரசனுக்கு ஆராய்ச்சிமணி வேறா?’ என்று ஓங்கி அதை இழுத்து வீசிவிட்டாள் கயிற்றோடு. மணி பளிங்குச் சுவரில் தாக்கிப் பொடிப்பொடியாகச் சிதறிப்போய் விட்டது” என்று பதற்றத்துடன் கூறினான்.

அரசன் ஒரு க்ஷணம் ஸ்தம்பித்து நின்றான். “என்ன! ஆராய்ச்சி மணி நொறுங்கி விட்டதா? அப்படி என்ன விபரீதம் வந்துவிட்டது அவளுக்கு?” என்று துடித்துக்கொண்டே கொலுவுக்கு ஓடினான்.

அரசன் சிம்மாசனத்துக்கு நேராகச் சற்றுத் தள்ளி அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். மோஹினியின் அழகில் துர்க்கையின் உக்ரம் கலந்தது போலத் தோன்றினாள் அவள். தன்னை மதியாத தகப்பனின் யாகாக்னியின் முன் நின்ற ஸதியின் கண்கள் போல் அவள் விழிகள் அனல் கக்கின. ரத்தம் பூசியது போல் முகம் சிவப்பேறிக் கிடந்தது. நெருப்பிலிருந்து கிளம்பி அடர்ந்து சுருண்டு சுருண்டு செல்லும் புகைச் சுழல்கள் போல் பரந்து விரிந்து சுருள் சுருளாகக் காற்றில் மிதந்து கொண்டிருந்த அவள் கூந்தல் அந்தச் சித்திரத் துக்குப் பகைப்புலமாக அமைந்து இருந்தது. அந்த உருவத்தைப் பார்த்த பாண்டியன் மலைத்து நின்று விட்டான்.

“பாண்டிய! தன் மகனென்றும் பாராமல் நீதிக்குப் பலியிட்ட மனுச்சோழன் நாட்டிலிருந்து வருகிறேன் நான்” என்று ஓங்கிய திடமான குரலில் அந்தப் பெண்மணி கூறினாள், அவனைப் பார்த்ததும்.

அந்த வார்த்தைகள் அரசனுக்குச் சுரீலெனப் பட்டன. தன் மலைப்பைச் சமாளித்துக்கொண்டு, “அப்படியா! தன் சிறு பிழைக்குத் தண்டனையாகக் கையைத் துண்டித்துக் கொண்ட பொற்கைப் பாண்டியன் நாட்டுக்குத்தான் நீ வந்திருக்கிறாய். நீதிக்குப் பங்கம் ஏற்படாது” என்று பாண்டிய குலப் பெருமையை விட்டுக் கொடுக்காமல் பதில் அளித்தான்.

அதற்கு அந்தப் பெண் ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தாள். “அநீதி என்னைப் பூரணமாக விழுங்கி விட்ட பிறகு இனி நீதிபங்கம் வேறு என்ன இருக்கிறது?” என்று அந்தச் சிரிப்பிடையே கூறினாள்.

“நீ குறிப்பது எனக்கு விளங்கவில்லையே!” என்றான் அரசன்.

“பாண்டிய, அரசியின் சிலம்பைத் திருடியதாக நீ கொலை செய்துவிட்ட கோவலன் மனைவி கண்ணகி நான்.”

அச்சமயம் கொலுவுக்கு வந்த கோப்பெருந்தேவி அந்தக் குரலைக் கேட்டு ஸ்தம்பித்துப் போனாள். கனவில் கேட்ட அதே பயங்கரக் குரல். “இந்தா உன் சிலம்பு” என்ற தீர்க்கமான பெண் குரல்!

கண்ணகியின் வார்த்தைகள் அரசனுக்குக் கொஞ்சம் துணிவு தந்தன. “நீ அந்தக் கள்வன் மனைவியா? மனுச்சோழன் பிரஜைகள் இங்கே திருடிப் பிழைக்கவா வந்தீர்கள்? பாண்டிய நாட்டில் அதற்கு அனுமதி கிடையாதே. என்ன செய்வது?” என்று ஏளனமாகச் சிரித்தான்.

கண்ணகி அவனை ஒரு தரம் வெறிக்கப் பார்த்தாள். அரசன் சிரிப்பு அதில் மறைந்துவிட்டது. “என்ன சொன்னாய்? நாங்கள் திருடர்கள் என்றா? பிரஜைகள் சொத்தையெல்லாம் தனதெனப் பொய் சொல்லிப் பஹிரங்கமாகப் பிடுங்கிவிடும் நீயா, நாங்களா? யார் திருடர்கள் ? பாண்டிய! புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று ஆங்காரத்துடன் சீறினாள்.

“மீனைத்தான் கவ்வியதாக்கும்!” என்று அரசன் மறுபடியும் ஏளனமாகக் கேட்டான்.

“நிச்சயமாக!”

“ஏன், மீன் உருவம் செதுக்கிய அந்தச் சிலம்பு என் அரசியுடையது தானே?”

“விசாரணையில் ருசுவுடன் ஏற்பட்ட முடிவு தானே அது?”

அரசனுக்குத் திடுக்கென்றது அந்தக் கேள்வி. தன் தவறு அப்போது எடுத்துக் காட்டிய பிறகுதான் அவன் ஞாபகத்துக்கு வந்தது. மனத்தில் எழுந்த கலக்கத்தை மறைத்துக்கொண்டு, “நிச்சயமெனத் தெரிந்த பிறகு விசாரணை எதற்கு?” என்றான்.

ஒரு ராக்ஷஸச் சிரிப்புச் சிரித்தாள் கண்ணகி. அரண்மனையையே கலகலக்கச் செய்தது அந்தச் சிரிப்பு. அரசனுடன் தர்க்கித்துக்கொண்டிருக்கும் பொறுமையை மீறிவிட்டது அவள் ஆத்திரம். “பாண்டிய! புதுச் சிலம்பில் மீன் உருவம் செதுக்கி இருந்ததா? புலிக்கும் மீனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை உனக்கு, அரசி மீதுள்ள மயக்கத்தில்” என்று தன் இடையில் செருகியிருந்த சிலம்பை உருவி எடுத்தாள். அந்த இடம் முழுவதும் பிரகாசமடைந்தது.

அரசனும் அரசியும் திகைத்து விட்டார்கள். கண்டு பிடிக்கப்பட்டதெனத் தாங்கள் கருதிய அந்தச் சிலம்பைப் போன்ற பிரகாசம்! அதே விதத் தொங்கணிகள் உராயும் நாதம்! கண்களைப் பறிக்கும் அதே ஜ்வலிப்பு!

அரசன், அரசி இவர்களின் வியப்பு அடங்கு முன்னமேயே கண்ணகி, “பாண்டிய! உன் அரசியின் ஒரு சிலம்பு தானா காணாமற் போனது? ஆசை அவ்வளவு தானா? இந்தச் சிலம்பையும் அதோடு ஜோடி சேர்த்து உன் அரசிக்குப் போட்டு அழகு பார்!” என்று கத்திக்கொண்டே தான் நின்ற இடத்திலிருந்தே சிலம்பை வீசி எறிந்தாள். சிலம்பு உயர்ந்து விழுந்து அதற்குள் இருந்த மாணிக்கப் பரல்கள் தூள் தூளாகச் சிதறின, எரிமலைகள் வெடித்து அனற் கற்கள் சிந்துவது போல்.

“ஐயோ, நம் சிலம்பில் இருப்பவை முத்துப் பரல்களல்லவா?” என்று பாண்டியனை உலுக்கிக் கிலிபிடித்த முகத்துடன் கேட்டாள் அரசி. மாணிக்கங்கள் சிதறும் போதே அரசன் ஓடிப்போய் நொறுங்கிய சிலம்பைக் கையில் எடுத்துப் பார்த்தான். “ஆ” என்று அலறிப் பின் பாய்ந்தான் பாண்டியன். அரசியும் குனிந்து தன் கால் புதுச்கிலம்பைப் பார்த்தாள். அதிலும் புலி உருவங்கள்! அரசன் ஊடல் மயக்கத்தினாலும் அரசி ஸ்வப்ன மயக்கத்தினாலும் கண்ணைப் பறிக்கும் சிலம்பின் பிரகாசத்திடையே புலி உருவத்தைக் கவனிக்க மறந்து விட்டனர்.

அரசன் பதில் சொல்லவில்லை. காளிஸ்வரூப மாகத் தோற்றும் கண்ணகியையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் சித்தம் கலங்கிப் போய்விட்டது.

“அரசி, அதுவும் உன் சிலம்பு தான். எடுத்துக் கொள்!” என்று மறுபடியும் கோரச் சிரிப்பிடையே கண்ணகி கத்தினாள். கோப்பெருந்தேவி அலறினாள். ஸ்வப்னத்தில் கேட்ட அதே வார்த்தைகள்! தன்னைச் சுற்றிச் சிதறிக் கிடந்த மாணிக்கங்கள், காற் சிலம்பு ஒவ்வொன்றும் ஜ்வாலை கிளம்பி எரிந்து தகிப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது அரசிக்கு. காற் சிலம்பைக் கழற்றிக் கற்களை மிதிக்காமல் பயந்து கண்ணகியின் பக்கமாகப் பாய்ந்தாள்.

“தேவி! தப்புச் செய்துவிட்டோம். உன் கணவனைக் கொன்று நீதியையும் கொன்று விட்டோம்” என்று கதறிக் கண்ணகியின் காலடியில் வீழ்ந்தாள். கண்ணகியின் வெறிப்பார்வை புருஷனைக் கொன்ற கொலைகாரன் மீதே பதிந்து இருந்தது. “நீதி அறியாத உனக்கு இனி இங்கே வேலை இல்லை!” என்று ஆத்திரத்துடன் கர்ஜித்தாள்.

நின்ற இடத்திலிருந்தே அரசன் ஏதோ பேச வாயெடுத்தான். வார்த்தை கிளம்பவில்லை. அவன் முகம் கறுத்து விகாரம் அடைந்தது. அரசி அதைக் கவனித்துவிட்டாள். பாய்ந்து வந்து கணவனைத் தாங்கிக் கொண்டாள். அரசனைக் கூப்பிட்டாள். அரசன் பேசவே இல்லை. அவன் கண்கள் நிலையாகக் கண்ணகியையே பார்த்தன. குபீரென்று அவன் நாசியிலிருந்தும் தொண்டையிலிருந்தும் ரத்தம் கொப்புளித்து வெளியேறியது. அவன் அரசியின் கைகளிலிருந்து நழுவிக் கீழே சாய்ந்தான், ரத்தம் பீறிட்டு. அரசன் மீது மூர்ச்சித்து விழுந்த அரசியின் உடை அதனால் நனைந்து விட்டது.

கண்ணகியின் உதடுகளில் மீண்டும் ஒரு கோர நகை கிளம்பியது. நீலக் கம்பளத்தில் படிந்திருந்த ரத்தத் தேக்கத்தைப் பார்த்துவிட்டுப் பார்வையை ஜன்னலுக்கு வெளியே திருப்பினாள். அந்தி வானத்தின் செந்நிறம் அவள் கண்களை இழுத்தது. “என் ஆத்திரம் தீர மதுரையைச் செந்நிறமாக்குவேன்” என்று புலியின் கர்ஜனை செய்து கொண்டே ஸம் ஹார தேவதை போல் திரும்பி வெளியே பாய்ந்து சென்றாள்.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *