ஒரு முடிவின் துவக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 4,304 
 

“ஒரு ஆணிலியிடம் உதவி கோரி அரசப் பட்டத்திற்கு வருமளவிற்கு, அத்துணை தரம் தாழ்ந்து விட்டதா, பாண்டிய குலத்தின் வீரமும், மானமும்?” என்ற வீரபாண்டியன், மருத மரத்தின் பெரிய அடிமரத்தண்டில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அருகே ஆயிரத்தவர் படையின் தலைவன் கந்தசேனன் நின்று கொண்டிருந்தான். அவர்களுக்கெதிரே கொள்ளிடம் ஆற்றின் நீரோட்டம், மாலைக் கதிரொளியில் பொன்னிறத்தில் நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது.

வீரபாண்டியன் அமர்ந்திருந்தது ஒரு தீவு. கொள்ளிடம் ஆறு கடலில் சேருவதற்கு முன், இரண்டாக பிரிந்து ஒரு மேட்டுப் பாங்கான நிலத்தை சுற்றிக் கொண்டு ஓடியதால் உருவான ஆற்றிடைத் தீவுப் பகுதி. தீவு முழுமையும் மரங்களும், குற்றுச்செடிப் புதர்களும், புற்களும் அடர்த்தியாக வளர்ந்து, பசுமை போர்த்தி நின்றது.

ஆற்றிலிருந்து தீவில் கரையேரும் பகுதி, சதுப்பாகவும், பின்பு நீர் மருது, நாவல்,வேம்பு போன்ற மரங்கள் உயர்ந்து வளர்ந்தும் நின்றன. மரங்களின் கிளைகள் நீண்டு, கொள்ளிடம் ஆற்றுக்கு மேலே பரவியிருந்தன. இல்லம் திரும்பும் பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் கொஞ்சிப் பேசும் ஒலிகள், தீவு முழுக்க கலவையான இசையை, இனிமையாய் பரவ விட்டது.

“இல்லை அரசே, மானத்திற்கும், வீரத்திற்கும் குறைவில்லை. அரச பதவியின் பால், தங்கள் உடன் பிறந்தவர் கொண்ட வெறி, அவர் கண்களை திரை போட்டு மறைத்துவிட்டது. நமக்குள் இருக்கும் பூசலை நம்மிடையே முடித்துக் கொள்ளாமல், அந்த நரியிடம் சென்றிருக்கிறார்.” என்றான் கந்தசேனன்.

“வழியில் இருந்த தேயங்களில் அவனும், அவனது படைகளும் செய்த வெறியாட்டங்கள், நாச காரியங்கள் மறந்து போய்விட்டது போலும். இவைகளை செய்வதால், அவனும் ஒரு ஆண் என நிரூபணம் செய்ய விழைகிறான், கில்ஜியின் அடிமை. ஆலயங்களில் இறை ரூபங்களை சிதைத்து, புனிதமான கோவில் செல்வங்களை கொள்ளையடித்த இழிசெயலை, கனவிலும் நினைத்துப் பார்க்க இயலவில்லை நம்மால். ஆனால், அவனுடன் கூட்டுச் சேர முயற்சி செய்கிறான் என் அருமை உடன்பிறந்தவன்”, என்ற வீரபாண்டியன் குரலில் வேதனையும், வெறுப்பும் பிரிக்கவியலாதபடி ஒன்றிணைந்திருந்தது.

“தாங்கள், உடன் பிறந்தவர் என்று மனதில் வைத்து எண்ணுகிறீர்கள். ஆனால், அவர் உங்களை மாற்றாந்தாய் மகனாகத் தானே நினைக்கிறார் அரசே. இத்துணை பூசல்களுக்கும், அது தானே காரணம்” என்ற கந்தசேனனை நிமிர்ந்து நோக்கிய வீரபாண்டியன்,

“ஆம். உண்மைதான். மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருப்பார் தந்தை. ஒழுக்கமின்மையால் அல்லவா அதை இழந்தான். ஆற்றும் வினைகளுக்கு ஏற்ற பலனைத் தானே இறைவன் வழங்குவான்”.

தீவில் இருள் முழுவதும் கவிழ்ந்திருக்க, பறவைகளின் கொஞ்சல்கள் அமைதியடைந்திருந்தது. சில்வண்டுகள் தங்கள் கம்பிக் குரல்களை மீட்டத் தொடங்கியிருக்க, தீவு முழுவதும் நிலவொளி பரவிக் கொண்டிருந்தது. கருமை பூசிக் கொண்டிருந்த இலைகள், குளிர்க் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

எதிர்க் கரையில் தீப்பந்தம் ஒன்று கொளுத்தப்பட்டது. அந்த திசையில் “அரசே”, என்று கரையை காண்பித்தான், கந்தசேனன். தீப்பந்தம் இருளில் இரண்டு முறை வட்டமாக சுழண்டது, பின்னர் கீழிருந்து மேலாக ஒருமுறை அசைந்து கொண்டே, நேர்க்கோட்டில் சென்றது. பதிலாக கந்தசேனன் கை விரல்களை வாயில் வைத்து, சீழ்க்கை ஒலி இரண்டு முறை எழுப்பினான். தீப்பந்தம் ஆற்றில் போடப்பட்டு அணைந்தது. பின் நீரில் ஒருவர் குதிக்கும் ஓசை கேட்டது.

சிறிது நேரத்தில், ஒரு குட்டையான உருவம் தீவில் கரையேறியது. அந்த உருவம் மருத மரத்தின் அருகே நெருங்கி,
“வணங்குகிறேன், அரசே!” என்று பணிந்து நின்றது. அவன் அதியன் நல்லான். முதிர்ந்த வயது, ஆனால் உடல் அமைப்பை காண்கையில் அவ்வாறு தோன்றவில்லை. பல்வேறு மனிதர்களாக தோற்றத்தை மாற்றிக் கொள்வதில் தேர்ந்தவன். சிறந்த ஒற்றன். அறிவாற்றல் நிறைந்தவன்.

தலையை அசைத்து அதியனின் வணக்கத்தை பெற்றுக் கொண்டான் வீரபாண்டியன்.

“செய்திகள் என்ன, அதியரே”, என்றான் கந்தசேனன்.

அதியன் ஆடைகள் நனைந்து, உடல் முழுவதும் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. கண்களில் வழிந்த நீரை துடைத்தான்.
“நம் அரசரைத் தேடி வந்த மாலிக் கபூரின் படை, தற்போது திசை திரும்பி தில்லையம்பலத்தை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டது. தில்லை ஆலயத்தின் பொற்கூரையும், அதனில் பதிக்கப்பெற்ற மாணிக்க, மரகதக் கற்களும் அவர்கள் சிந்தையை மாற்றியது” என்றான்.

வீரபாண்டியன் நிமிர்ந்து அமர்ந்தான். பின் அதியனை நோக்கி,
“இந்நாள் தொட்டு நம் செல்வங்கள் அவர்களின் கண்களை கவர்ந்தாலும், நம் வீரம் கண்டு அடங்கி, தென்திசை பாராமல் இருந்தனர். இன்று நாம் பிளவுண்டு கிடப்பதால், தொலைவில் நின்று நோக்கியவர்களுக்கு, தற்போது நம் ஆலயங்கள், செல்வங்களை நோக்கி கரங்கள் நீளுகின்றன. மூவேந்தர்களும் வடதிசை நாடுகளை வென்று வந்து, தமிழின் புகழ் பாடினார்கள். இன்று வடக்கிலிருந்து துணிவுடன், படை நடத்தி வருகிறார்கள், ஆனால் நாம் எதிர்க்க முடியாமல், இங்கே மறைந்திருக்கின்றோம்”, என்றான்.

“மலையக சேரர், காவிரிச் சோணர்களும் நம் மூத்தோரின் வீரத்தால் வெல்லப்பட்டனர். தமிழ் நிலம் முழுவதும் பாண்டியர் குடையின் கீழ் வந்தது. இன்று உடன்பிறந்தார் பூசலால், அதை இழக்கும் காலம் வந்துவிட்டதோ என்று, மனதில் அச்சம் தோன்றுகிறது. இதை எண்ணிப் பார்க்கையில், மூத்தவனிடம் நாடு முழுவதும் ஒப்படைத்து விட நினைக்கிறேன்” என்று, வேதனையுடன் கூறினான்.

“நற்சிந்தனை தான் அரசே, ஆனால் குடிமக்களின் நிலையையும் சற்று எண்ணிப் பாருங்கள். உங்கள் தமையன் சுந்தரபாண்டியர், ஈன்ற தந்தையையே சதிச் செயல் புரிந்து கொன்றவர். குடிமக்களை பேணுவதில் என்ன அறத்தை அவரிடம் நாம் எதிர்பார்க்க முடியும்? என்று கூறிய அதியன் மேலும் தொடர்ந்தான்.

“யுகங்கள் மாறிக் கொண்டிருக்கிறது அரசே. மூவேந்தர்களில் தொன்மையான மூத்தக் குடி நாம். இன்று எஞ்சியுள்ளது நாம் மட்டுமே. அறத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மன்னர்களே அறம் பிழைக்கிறார்கள். இதுவரை தென்னாட்டின் வரலாற்றில் அரச பட்டத்திற்காக, ஈன்ற தந்தையை கொன்ற பழிச் செயல் எவரும் புரிந்ததில்லை. அது நடந்து விட்டது. தங்கள் தமையன் செய்தார். இது மாபெரும் அறப்பிழை. அவ்வாறு செய்த அரச குடிகள் முற்றாக அழிந்ததை, பாரதம் நடந்த காலம் முதல் கண்டு வருகிறோம். அறம்பிழைத்த நம் மீன்கொடியின் முடிவு எவ்விதமோ? என்று, வானத்தில் மிதக்கும் சந்திரனை வெறுமையுடன் நோக்கினான் அதியன். வீரபாண்டியனும், கந்தசேனனும் சொல்லிழந்து அமைதி காத்தனர்.

பின் குறிப்பு :

தமிழக வரலாற்றில் கி.பி. 1311 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாகும். இந்த ஆண்டில் தான், மாலிக் கபூர் படையெடுப்பு நிகழ்ந்தது. காஞ்சிபுரம், திருவரங்கம், சிதம்பரம் மற்றும் மதுரையின் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டன. தமிழ் நாட்டின் பல்வேறு செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, தில்லிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. வடக்கிலிருந்து படையெடுத்து வந்தவர்களை வலுவாக எதிர்க்க எவருமில்லை. இதனால் பல நூற்றாண்டுக் காலப் புகழ்மிக்க, பண்டைய சேர, சோழ, பாண்டியர் மரபின் வரிசையில் வந்த, தமிழ் மன்னர்களின் ஆட்சி, தமிழ்நாட்டில் முடிவுக்கு வந்தது. இறுதியாக தமிழ் நிலத்தை ஆண்ட பாண்டியர்கள் குறுநில மன்னர்களாக ஒடுங்கினர். பின்னர் தில்லி சுல்தான்களின் ஆட்சி துவங்கி, சிறிது காலத்திற்குப் பின்பு விஜயநகர, நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் தமிழகம் வந்தது. அதன் பின்னர் ஐரோப்பியர் வசம் சென்றது தமிழகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *