ஏழு நாள் எச்சரிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 3,075 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அஸ்தினாபுரத்து அரசனின் பெயர் பரீட்சித்து. அவன் வேட்டையாடுவதிலே மிகவும் வல்லவன். வேட்டையாடும் போது உள்ளக் கிளர்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் என்பதற்காக மட் டுமே அவன் வேட்டையாடுவதில்லை. காட்டுப் பகுதியில் வாழும் மக்கள் நலமாக, மகிழ்ச்சியோடு இருப்பதற்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி வந்தான்.

ஒருநாள் அரசன் வேட்டையாடும் போது, ஒரு மான் மீது அம்பு எய்துவிட்டான். அடிதான் பட்டதே தவிர, அது இறந்துவிடவில்லை. வேட்டை விதிகளின்படி மிருகங்களைக் கொல்லலாமே தவிர, அவற்றை முடமாக்கக் கூடாது. ஒரு மிருகத்தைக் காயப்படுத்தி, அது வேதனையால் துடி துடிக்கும் படி செய்வது மனிதத் தன்மையற்றது, பாவம் என்றே கருதப் பட்டது. ஆகையால் அரசன் அந்த மானை கொன்று, அதன் வேதனையைத் தீர்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்தான். அதைத் துரத்திக்கொண்டு காட்டுக்குள் சென் றான். காட்டுக்குள் அவன் வெகுதூரம் சென்றதால், அவனுடன் வந்த மனிதர்களை விட்டுப் பிரிந்துவிட்டான். அவனுக்கு ஒரே களைப்பு, தாகம், பசி. ஆனாலும் அந்த மானைக் கொன்று அதன் வேதனையைப் போக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் தொடர்ந்தான்.

திடீரென்று அடர்ந்த மரங்களிடையே ஒரு திறந்த வெளி யைக் கண்டான். அங்கே ஒரு பெரியவர், பசுக்களுக்குத் தீனி வைத்துக்கொண்டிருந்தார். அரசன் அவர் அருகே சென்றான். “ஐயா, நான் அபிமன்யுவின் மகன். இந்த நாட் டின் அரசன். அடிபட்ட மான் ஒன்றைத் தேடி வருகிறேன். அது இந்த வழியாக வந்ததா? நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

அந்தப் பெரியவர் ஒரு மாமுனிவர். தவவலிமை மிக்கவர். பெயர் சமிகர். அன்று அவருக்குப் பேசா விரதம். அதனால் அவர் அரசர் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. ‘ஏன் இப் படி மௌனமாய் இருக்கிறார் இந்த முனிவர்’ என்று அரசனுக்கு முதலில் புரியவில்லை. ‘ஓகோ. இவருக்குக் காது கேளாது போலிருக்கிறது’ என்று நினைந்து, உரத்த குரலில் விசாரித் தான். அப்போதும் முனிவர் பதில் எதுவும் கூறாமல் மௌன மாக அரசனைப் பார்த்தார். அப்போது ஒரு பசு, பால் குவ ஊளயை உதைத்தது. அந்த ஒலி கேட்டு முனிவர் சட்டெனத் திரும்பி, பால் கீழே ஊற்றாதபடி தடுத்தார். அதனால் அவர் செவிடு இல்லை என்பதைத் தெரிந்துகொண்டான் அரசன்.

அரசனுக்கு ஒரே கோபம். “காட்டில் வாழ்பவர்களுக்கு என்ன திமிர்?” என்று ஆத்திரப்பட்டான். கடைசியாகக் கேட்போம்’ என்று எண்ணி மறுபடியும் உரத்த குரலில் மானைப் பற்றி விசாரித்தான். “உடனே தகுந்த பதில் சொல்லாவிட்டால் அரசனாகிய நான் என்ன செய்வேனோ தெரியாது” என்றும் எச்சரித்தான். சமிகர் தெரியாது என்று தலை அசைத்தார். ஆனால் அரசனோ அதைத் தவறாகப் புரிந்துகொண்டான். முனிவர் பதில் சொல்ல மறுக்கிறார் என்று நினைத்துவிட்டான். முனிவர் கண்களில் இருந்த பரிவையும் அவன் கவனிக்கவில்லை. ‘ஐயோ , உதவ முடியவில்லையே என்ற அவரது ஏக்கத்தையும் உணரவில்லை.

குழந்தைத்தனமான ஆத்திரம் கொண்டான் அரசன். உடனே அவரை எப்படியாவது அவமானப்படுத்தவேண்டும் என்று சுற்றுமுற்றும் பார்த்தான். அருகிலே ஒரு பாம்பு செத் துக் கிடந்தது. உடனே தன் வாளை உருவினான். கூர்மை யான அதன் நுனியால் அதைச் சரேலென்று எடுத்தான். அப்படியே அதை முனிவர் மீது வீசினான். அது அவர் கழுத் தில் ஒரு மாலை போல விழுந்தது. அரசன் ஏளனமாகச் சித்தான். உடனே முனிவர் சீறி விழுவார், ஒருவேளை தன் னைச் சபித்துவிடுவார் என்றே அவன் நினைத்தான்.

சமிக ரிஷி ஒன்றுமே செய்யவில்லை. மன்னனைப் பெரும் கருணையுடன் பார்த்தார். அரசன் வெட்கமடைந்து, தலை குனிந்து, அவ்விடம் விட்டு அகன்றான்.

அரசனுக்கும் முனிவருக்கும் தெரியாமல் இதையெல்லாம் ஒரு வன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் கிருஷா . அரசன் அவசர அவசரமாகத் திரும்பிச் சென்ற தும் கிருஷா நேராகத் தன் தோழன் சிருங்கியிடம் சென்றான். சிருங்கி வேறு யாருமல்ல. முனிவர் சமிகரின் குமாரனேதான்.

சிருங்கி அப்போது பச்சிலைகளைப் பறித்துக்கொண்டிருந்தான். கிருஷா அவனிடம் பேச்சுக் கொடுத்தான்: “சிருங்கி, காட்டில் வாழும் நாம் அனைவரும் கடவுளுக்கு அடுத்தபடி அரசருக்குத்தான் கடமைப்பட்டவர் என்று ஒரு நாள் சொன்னாயல்லவா?”

“ஆமாம்” என்றான் சிருங்கி , பச்சிலைகளைப் பறித்துக் கொண்டே.

“அந்த அரசன் நம்மைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் கூட , நம்மை அவமதித்தாலும் கூட , அவனுக்கு நாம் மரியாதை காட்டவேண்டுமா?’ என்று கேட்டான் கிருஷா .

“அரசன் – பரீட்சித்து அரசனையா சொல்கிறாய்? அந்த அரசன் காட்டிலே வாழ்ந்து வருகிறவர்களை அவமதிக்கமாட் டானே. அப்படி ஏன் செய்யப் போகிறான்?”

கிருஷா ஒரு குறும்புக்காரன். எனவே குறும்புடன் சொன் னான்: ”நானே பார்த்தேன் என்று வைத்துக்கொள்ளேன். என் எதிரே, முனிவர் ஒருவரை அவன் அவமதித்தான் என்கிறேன்.” ”நான் நம்பமாட்டேன்” என்றான் சிருங்கி. “சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது. காட்டட்டுமா?” “ஆதாரமா?” சிருங்கி பொறுமை இழந்தான். “ஏன் புதிர் போடுகிறாய்? விஷயத்தைச் சொல்லு. நீ அளக்கும் கதை யைப் புரிந்துகொள்கிறேன்.”

“கதையா? நீயே வந்து பார்த்துக்கொள்”, என்று அவனைக் கையோடு அழைத்து வந்தான். தியானத்தில் அமர்ந்திருந்த சமிகரைக் காட்டினான். செத்த பாம்பு அப்போதும் அவர் கழுத் தில் இருந்தது.

“ஆ. என் தந்தையின் கழுத்திலே ஒரு பாம்பு” என்று பதறிக்கொண்டே ஓடினான் சிருங்கி. ஆனால் தோழன் கிருஷா அவனைப் பிடித்து இழுத்தான்.

“அது வெறும் செத்த பாம்புதான். நமது மாமன்னர் நம்மை யெல்லாம் காப்பாற்று பவர், கடவுளுக்கு அடுத்தபடி யாக இருப்பவர் என்றெல்லாம் நீ சொல்லுவாயே , அந்த பரீட் சித்துவே சற்று முன்பு உன் தந்தையின் கழுத்தில் அணி வித்தார் இந்தச் செத்த பாம்பை இப்படி அவமானப் பட உன் தந்தை செய்த பிழை என்ன தெரியுமா? அடிபட்ட ஒரு மானைப் பற்றி அரசர் கேட்டார். உன் தந்தை பதில் சொல்லவில்லை. நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அரசர் இரைந்து கத்தினார். பிறகு, இந்தச் செத்த பாம்பை வாளால் எடுத்து இவர் மீது வீசினார். ஆகா, அரசர் வாள் வீச்சில் வல்லவர் தான் அந்தப் பாம்பு அப்படியே மாலை போலே இவர் கழுத்தில் விழுந்திருக்கிறது. இவ்வளவையும் நான் என் கண்களால் பார்த்தேன்.”

“ஏண்டா , பார்த்தேன் என்கிறாயே. அரசரிடம் இன்று அப்பாவுக்கு மௌன விரதம் என்று சொல்வதற்கு என்ன?”

“என்னது! அரசர் உருவிய வாளுடன் நின்று கொண் டிருக்கிறார், முகத்தில் ஒரே கோபம். அவர் எதிரே நான் போவதா? என் கழுத்தைச் சீவியிருப்பார்” என்றான் கிருஷா.

சிருங்கி தன் தந்தையையே ஒரு கணம் பார்த்தான் தந்தை மீது அவனுக்கு மிகவும் பாசம். அவரது மகிமை பற்றி ஒரு பெருமை. “என் தந்தையை அவமதித்துவிட்டானே அந்த அரசன்! இவரது முகத்திலே பளிச்சிடும் கண்ணியத்தை அவனால் காணமுடியவில்லையா? இவரது கண்களில் தவழும அமைதி அவனுக்குத் தெரியவில்லையா?” என்று நினைத்தான்.

“அரசர்களுக்குக் கண்ணிருக்கிறதே தவிர, நல்லவற் றைப் பார்க்கும் பார்வை இல்லை” என்றான் கிருஷா ஆத்திரத் தோடு. அவனுக்கு அரசர்கள் என்றாலே பிடிக்காது.

தனது தந்தையின் கழுத்திலே செத்த பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பார்க்க சிருங்கிக்குக் கோபம் கோபமாக வந்தது. அவனால் கோபத்தைத் தாங்க முடிய வில்லை. அது ஒரு சாபமாக வெடித்தது.

“அவன் அரசனாக இருக்கட்டும். வணக்கத்துக்குரிய என் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைப் போட அவனுக்கு என்ன துணிச்சல்! இதனால் என் தந்தையை மட்டும் அவன் அவமதிக்கவில்லை. காட்டில் தவம் புரியும் முனிவர்கள் அனை வரையுமே அவமதித்துவிட்டான். அவனுக்கு முனிவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவனை நான் இப்போது சபித்து விடுகிறேன். தன் இழி செயலால் அஸ்தினாபுரத்து அரசவம்சத் துக்குப் பழி தேடிக்கொண்ட இந்த அரசன் இன்றிலிருந்து ஏழு நாட்களில் மரணமடையட்டும். அதுவும் தட்சகன் என்ற பாம்பு மன்னனால் நாகலோகம் செல்லட்டும்!”

சிருங்கி இவ்வாறு கடுமையாகச் சபிக்கவும், தியானத்தில் ஆழ்ந்திருந்த அவன் தந்தை திடீரென்று கண்விழித்தார். பதறிப்போய் தன் மைந்தனைப் பார்த்தார். விபரீதம் நேர்ந்து விட்டதே என்ற கவலையில் தம் மௌனவிரதத்தையும் மீறிப் பேசினார் : “குழந்தாய், சிருங்கி, என்னடா செய்துவிட்டாய்! பரீட்சித்து அரசனை சபித்துவிட்டாயே. அவன் எவ்வளவு நல்லவன், நம்மையெல்லாம் பாதுகாப்பவனல்லவோ அவன்? இந்தக் காட்டில் நாம் அமைதியாக வாழ வகை செய்தவனல்லவா அவன்? அவனைச் சபிக்கலாமா? உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? தவசீலர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? உன் கோபத்தாலும் சாபத்தாலும் என்னென்ன விபரீதங்கள் நேருமோ தெரியவில்லையே! பரீட்சித்தைச் சபித்தாய். அதனால் அவனுக்கு மட்டுமா அழிவு நேரும்? இந்த நாடே நிலைகுலைந்து போகுமே! சூழ் நிலை எதுவாயிருந்தாலும் இது தவறுதான். அதுவும் அத்தினா புர அரசன் பரீட்சித்துக்கு இப்படி ஒரு சாபமா? இது மிகப் பெரிய தவறல்லவா?” என்றார். சிருங்கி தலைகுனிந்தான்.

“ஐயோ. இந்தச் சாபத்தை நீ மாற்றவும் முடியாதே. உனக்கு உள்ள சக்தியின்படி, நீ சொல்வது எல்லாம் பலித்து விடுமே! அதனால் தான் நீ பொறுமையாக இருக்க வேண்டும், உன் வாயைத் திறக்கு முன்பு நூறு முறை யோசிக்க வேண் டும் என்று நான் அடிக்கடி எச்சரித்து வருகிறேன்” என்று, வருத்தப்பட்டார் அவன் தந்தை.

சமிகர் சற்று நேரம் சிந்தனை யில் ஆழ்ந்தார். பிறகு சரேலென எழுந்தார். “குருமுகியை என் னிடம் உடனே அனுப்பு. அவனை நான் உடனே அரண்மனைக்கு அனுப்பி அரசனுக்கு இந்தச் சாபத்தைப் பற்றி அறிவிக்க வேண்டும். அரசனை முன்ஜாக்கிர தையாக இருக்கும்படி எச்சரிக்க வேண்டும்” என்றார்.

குருமுகி என்பவர் சாப விவ ரத்தை வந்து கூறவும் பரீட்சித்து அரசன், “அடடா. அன்று முனி வரது மௌன நாளா? தெரியாது போனேனே” என்று வருந்தினான். “இதை நானே ஊகித்துக் கொண்டிருக்க வேண்டும். தவறு என்னுடையது தான். ஆகா. சமிகர் தான் எவ்வளவு கருணை யுள்ளவர். இந்தச் சாபத்தைப் பற்றி எனக்கு முன்னதாகத் தகவல் அனுப்பியிருக்கிறாரே. அவருக்கு என் வணக்கத்தை யும் நன்றியையும் தெரிவியுங்கள்” என்றான்.

இவ்வாறு கூறி குருமுகியை அனுப்பிவிட்டான். உடனே தன் மந்திரிமாரை அழைத்து, என்ன செய்வது என்று ஆராய்ந்தான். அதற்கு முன் காசியபர் என்பவருக்கு உடனே வரச்சொல்லி ஆள் அனுப்பினான். அவர் மிகக் கொடிய விஷப் பாம்புக் கடியையும் குணப்படுத்தும் சக்தி பெற்றவர்.

அமைச்சர்கள் முடிவுப்படி சிற்பிகளும் கட்டிடக் கலைஞர் களுமாக அரண்மனைக்கு வந்தார்கள். ஒரே நாளில் அற்புத மான ஒரு கட்டிடம் கட்டினார்கள். அரண்மனை வெளித் திடலில் ஒற்றைத் தூண் ஒன்றை உயர எழுப்பினார்கள். அதன் உச்சி யில் ஒரு தனி அறையைக் கட்டிக் கொடுத்தார்கள். அங்கே அரசன் வசிக்கத் தொடங்கினான். தூணைச் சுற்றிக் கீழேயும் மேலே அறை வாயிலிலும் ஆயுதம் தாங்கிய பல வீரர்கள் காவல் இருந்தனர். அரசன் அருகே ஒரு புழு கூடச் செல்ல முடியாதபடி பார்த்துக்கொண்டார்கள். அரசனின் குடும்பத் தாரையும், மந்திரிகளையும் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

அரசன் உத்தரவுப்படி காசியபர் அரண்மனை நோக்கி விரைந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு கிழவன் சோர்ந்து பரிதாபமாகக் கிடப்பதைக் கண்டார்.

“யாரப்பா நீ? ஏன் இவ்வாறு வாடியிருக்கிறாய்?” என்று விசாரித்தார்.

“ஐயா, வாழ்விலே அநியாயத்தைப் பாருங்கள். தாங்கள் அரண்மனைக்குப் போகிறீர்கள். உங்களுக்கு உபசாரத்துடன் வரவேற்புக் கிடைக்கும். ஆனால், நானும் தான் அங்கே போக விரும்புகிறேன். ஆனால் என்னை உள்ளே விடமாட்டார் களே’ என்று கிழவன் பெருமூச்சுவிட்டான்.

“நீ அரசனைப் பார்க்க வேண்டுமா?”

“ஆமாம்.”

“என்னை அங்கு அழைக்கக் காரணம் உண்டு. பாம்பு அரசனாகிய தட்சகன் இருக்கிறானே அவன் அரசனைக் கடித்து விடுவான் என்ற பயம் இருக்கிறது. அப்படிக் கடித்தால் அரச னைக் காப்பாற்றவேண்டும். அதற்காகவே என்னை அழைத் திருக்கிறார்கள். ஆமாம், உனக்கு என்னப்பா அங்கே வேலை”

“எனக்கா? அவனைக் கொல்வதுதான் என் வேலை!” என்று கூறி அந்தக் கிழவன் தன் உண்மை உருவத்தை வெளிப்படுத்தினான். அவன் யார் தெரியுமா? அவன் தான் பாம்பரசன் தட்சகன்!

என்ன இது சங்கடம்?” என்று கூறினார் காசியபர். நீயே அரசனைக் கொல்லப்போகிறாய் நானோ அரசன் உயிரைக் காப்பாற்றப்போகிறேன். நாம் ஒன்றாகப் போவதா , தனித் தனியாகப் போவதா?”

“உன்னால் அரசனை எனது விஷக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்றா நினைக்கிறாய்?” என்று கேட்டான் தட்சகன். “ஆமாம்” என்றார் காசியபர் தயக்கமின்றி.

“எங்கே பார்ப்போம், இதோ இந்தச் செடியில் நான் விஷம் ஏற்றுகிறேன். அது உடனே பட்டுப்போகும். அதை மறுபடி துளிர்க்கச் செய்ய உன்னால் முடியுமா பார்ப்போம் என்றான் தட்சகன்.

உடனே பாம்பரசன் தன் விஷ நாக்கால் அந்தச் செடியை தீண்டினான். சில நொடிகளில் செடி கருகிச் சாம்பலாயிற்று.

“பார்க்கலாம் உன் திறமையை என்று காசியபரைப் பார்த்துச் சொன்னான் தட்சகன்.

காசியபர் ஒரு பிடி சாம்பலைக் கையில் எடுத்துக் கண்ணை மூடித் தியானம் செய்தார். பிறகு எடுத்த இடத்திலேயே அதை வைத்து மண்ணைப்போட்டு மூடினார். சில நிமிடங் களில் அந்த இடத்தில் முளை கிளம்பியது. அதில் இரண்டு கொழுந்து இலைகள் தெரிந்தன. பிறகு மெல்லிய தண்டு நேராக எழுந்தது. இலை குலுங்க வளர்ந்து, முன்பு இருந் ததைப் போல அவர்கள் எதிரே அது அதே அளவுச் செடி யாகி நின்றது !

தட்சகன் இதை ரசித்துப் பார்த்தான். ஆயினும் அவ னுக்கு இது ஒன்றும் பெரிய விந்தையாகத் தோன்றவில்லை . இதைப்போல் பல விந்தைகளையும் அற்புதங்களையும் நிகழ்த் தும் சித்தர்களை அவன் பார்த்திருக்கிறான்.

“இந்த வித்தையில் உன் திறமையைப் பாராட்டுகிறேன். ஆனால் பரீட்சித்து மன்னன் விஷயத்தில் மட்டும் எனக்கு எதிராக ஒன்றும் செய்யாதே” என்று காசியபரிடம் கேட்டுக் கொண்டான். “ஏன்?” என்று காசியபர் விசாரித்தார். “முதலில் இதற்கு பதில் சொல். விதியை எதிர்ப்பது நமக்குச் சரியா?” என்றார் காசியபர் உடனே. “ஆனால் பரீட்சித்து விதியை முடிக்க ஒரு சாபம்தானே வந்திருக்கிறது?”

“நீ நினைப்பது தப்பு” என்றான். “அரசன் அற்பாயுளில் இறந்து போவதற்காக என்னை யாரும் இங்கே அனுப்பவில்லை.

விதிப்படி எல்லாம் நடக்கவே நான் வந்திருக்கிறேன். யமனே என்னை அனுப்பியிருக்கிறான். யமனது கணக்குப் படி அரசன் இப்போது இறக்க வேண்டும். சமிகரின் மகன் சிருங்கியின் சாபம் என்பது, வரப்போகும் முடிவை முன்ன தாகவே தெரிவிக்கிறது. அவ்வளவுதான்.”

காசியபர் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

“பரீட்சித்து இன்னும் ஏழு நாளில் இறந்தாக வேண்டுமா? அப்படியானால், சிருங்கி சபிக்காமல் இருந்தால் கூட அவனுக்கு மரணம் நிச்சயம் தானா?”

“சந்தேகமில்லாமல்.”

“அப்படியானால் எனக்கு ஏன் வம்பு?” என்று சொல்லி காசியபர் தமது ஆசிரமத்துக்குத் திரும்பிவிட்டார்.

தட்சகன் நெடுநேரம் யோசித்து, அரசனின் அறைக்குள் செல்ல திட்டம் ஒன்று தீட்டினான். சிருங்கி சாபமிட்ட ஏழாவது நாள் தான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. அவன் அவசரமாகச் சில நாகலோகவாசிகளை அழைத்து, அவர்களுக்குச் சில கட்டளைகளிட்டான்.

“அரசனை நன்கு பாதுகாத்து வருகிறார்கள். நாம் தந்திரத் தால்தான் நமது நோக்கத்தை நிறைவேற்ற முடியும்” என்று எச்சரித்தான்.

இதனிடையில் பரீட்சித்து மன்னனும் அவன் குடும்பத் தாரும் மந்திரிமார்களும், ஏழு நாளில் ஆறு நாள் நல்லபடி யாகக் கழிந்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஏழாவது நாளும் இதோ முடியப்போகிறது. இன்று மாலை சூரியன் மறைந்ததும் ஏழு நாள் பூர்த்தியாகிவிடும். அதற்கும் சில நாழிகைப் பொழுதுதான் இருக்கிறது. காசியபர் ஏன் வரவில்லை என்று அரசனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் நல்ல காலமாக , ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் திருப்பதால், காசியபர் வந்து தானாகவேண்டும் என்பதில்லை. இப்படி அரசன் நினைத்துக்கொண்டிருக்கையில் மாலை மங்கும் நேரத்தில் ஏழெட்டு துறவிகள் ஒற்றைத் தூண் அருகே வந் தார்கள். “நெடுந்தூரத்திலிருந்து வருகிறோம். அரசனுக்குப் பழமும் மலர்களும் கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்கள்.

காவலாளிகள் அந்தத் துறவிகளின் உடலிலோ உடை யிலோ பூச்சி புழு ஒன்றும் இல்லையே என்று கவனமாகப் பார்த்த பிறகு அரசனிடம் அனுப்பினர்.

“சாபக்கெடு அநேகமாக முடிந்துவிட்டது. துறவிகளை உள்ளே விடுவதால் என்ன நேர்ந்துவிடப் போகிறது. இவர்கள் அரசனை ஆசீர்வதிப்பார்கள்” என்று நினைத்தனர் காவலாளிகள். காவி அணிந்த துறவிகள் அரசனிடம் பழங்களை அளித்துவிட்டு உடனே புறப்பட்டுவிட்டார்கள். தமது உண்மை உருவமான பாம்பு வடிவத்தை அடைந்து, பாதாளத்துக்குச் சென்றுவிட்டனர்.

சூரியன் மறையும் நேரம் நெருங்கியதும் அரசனது அறை யிலே யாவரும் ஒரே மகிழ்க்சியுடன் இருந்தனர். “இதோ சாபம் முடியும் நேரம் வந்துவிட்டது. அரசர் ஆபத்திலிருந்து தப்பிவிட்டார்’ என்று மகிழ்ந்தார்கள்.

அரசன் மந்திரிகளையும் குடும்பத்தாரையும் அழைத்தான். “சூரியன் மறைந்து கொண்டிருக்கிறான். துறவிகள் கொடுத்த பழங்களை எல்லாருமாகத் தின்ன வாருங்கள்” என்றான்.

எல்லாருமாகப் பழத்தட்டைச் சூழ்ந்தனர். அவரவருக்குப் பிடித்தமான பழத்தை எடுத்துக்கொண்டனர். அரசன் ஓர் அழகிய மாம்பழத்தை ஒரு கடி கடித்தான். இனிப்பாக இருந் தது. இன்னும் ஒரு கடி கடித்தான். மாங்கொட்டையருகே ஒரு புழு இருப்பதை அப்போது பார்த்தான். நல்ல பழத்தில் புழு இருப்பது வழக்கம்தானே! அதனால் அதைப் பெரிதாகப் பாராட்டாமல், அரசன், தன் கையில் அந்தக் கடித்த மாம்பழத் துடன் சூரியனைப் பார்த்தபடி நின்றான்.

“இனி தட்சகனாவது இங்கே வருவதாவது.” என்றான் அரசன். அப்படியே புழுவைப் பார்த்தான். விளையாட்டாக, “என்ன புழுவே, உங்கள் பாம்பரசன் வரவேண்டுமே, ஏன் வர வில்லை? உனக்குத் தெரியுமா? உனக்கு எங்கே தெரியப்போகி றது. தட்சகன் அல்லவா இதற்கு பதில் சொல்லவேண்டும்!”

பரீட்சித்து அரசன் இப்படிச் சொன்னானோ இல்லையோ, அவன் கண் பிதுங்கும்படி ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அந்தச் சிறு புழு கிடுகிடு என்று பெரிதாக வளர்ந்தது. நாகராசனாகிய அந்தப் பாம்பு தன் நீண்ட படத்தை எடுத்து ஆடியது. சூரியனின் கடைசிக் கிரணம் மறையும் நேரத்தில் தன் விஷ நாவால், மின்னலைப் போல் அரசனைத் தீண்டிவிட்டது!

– எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள், முதற் பதிப்பு 1977, சாந்தா ரங்காச்சாரி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *