கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 13,232 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி – 1 – 14 | காட்சி – 15 – 28

காட்சி – 1

இடம்: அரண்மனை

[மதுராபுரியில் வசந்தவிழா கொண்டாடு கின்றனர். அரண்மனையில் இளவரசன் காந்த ரூபனையும், அவன் மனைவி மங்கையர்க்கரசி யையும் தோழிகள் வாழ்த்துப்பாடி ஆரத்தி எடுக்கின்றனர். அப்போது காந்தரூபனின் தந்தை மதுராங்கதன் அங்கே வருகிறான் அவனைக் கண்டு இளந்தம்பதிகள் இருவரும் வணங்குகின்றனர். அவர்களைப் பார்த்து]

மதுராங்கதன்: காந்த ரூபா! நீ மகாபாக்கியசாலி. உன் வாழ்க்கைத்துணைவி மங்கையர்க்கரசி…நம் அரண்மனைக்கே ஒரு அணையாத விளக்கு. உங்கள் மங்களகரமான வாழ்க்கைக்கு..அம்பிகை என்றும் அருள்புரியட்டும். நீங்கள் என்றென்றும் நீடூழி வாழ்வீர்களாக!

[என்று வாழ்த்துகிறான். பிறகு காந்தரூபனும் மங்கையர்க்கரசியும் அவ்விடத்தைவிட்டுத் தான மண்டபத்துக்கு வந்து, குடிமக்களுக்குப் பரிசுகளை வழங்குகின்றனர். இதை உப்பரிகையிலிருந்து மன்னன் மதுராந்தகனும் மந்திரியும் பார்க்கின்றனர்.]

மந்திரி: கொடுப்பதில் கர்ணனையும் மிஞ்சிவிட்டார் நம் இளவரசர்.

மதுராங்: அதையும் வெல்கிறதல்லவா மங்கையர்க்கரசியின் தியாகம். அமைச்சரே! காந்தரூபனும் மங்கையர்க்கரசியும் என் இரு கண்கள். அதில் ஒன்று வானம்…

மந்திரி: மற்றொன்று….அதில் தோன்றும் வர்ணவில்

[என்று புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது தான மண்டபத்துக்கு கவி வித்தியாபதி, கையில் ஒரு வெள்ளித் தொட்டிலுடன் வந்து காந்தரூபனை வணங்கியபடி]

கவி வித்தியாபதி: இளவரசே!

காந்த: ஓ! கவி வித்தியாபதியா! வா வா!

கவி: கண்ணாடி நதிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் காஷ்மீரதேசம் சென்றிருந்தேன். அதனால் தான் உங்கள் கல்யாணத்துக்கூட வரமுடியாமல் போய்விட்டது.

காந்த: பரவாயில்லை. வித்தியாபதி! நீ வெகு தூரத்தில் இருந்தாலும்…உன் வார்த்தைகள் என் பக்கத்திலேயே இருக்கின்றன.

[என்று கூறிப் பிறகு தன் மனைவியைப்பற்றிக் கவிஞனிடம்]

காந்த: நண்பா … இவள் தான் என் மனைவி மங்கையர்க்கரசி. இந்த மகுடத்தின் வெளிச்சத்தை வளர்க்கும் மாணிக்கம்.

[என்று கூறிப் பிறகு கவிஞரைப்பற்றி தன் மனைவியிடம்]

காந்த: மங்கையர்க்கரசி!…இவர் என் பால்ய நண்பர். பள்ளித்தோழர். கவிஞர் திலகம். காவியங்களின் தந்தை.

[என்று கூறி அறிமுகப் படுத்திவைக்க, அப்போது]

மங்கை: மகிழ்ச்சி. இவர் காவிய ஞானத்தைக் கேட்க எனக்குப் பிரியமாக இருக்கிறது இளவரசே!

கவி: அதற்கென்ன எப்பொழுது வேண்டுமானாலும் சித்தமாயிருக்கிறேன்.

[என்று கூறிக்கொண்டே தான் கொண்டுவந் திருக்கும் தொட்டிலை இளவரசனிடம் நீட்டியபடி]

கவி: இது இளவரசிக்கு.

[என்று கொடுக்க காந்தரூபன் வாங்காமல்]

காந்த: இதை நீயே கொடுக்கலாம்.

[என்று சொல்ல, கவி உடனே இளவரசியிடம், கொடுக்க, இளவரசி அதை வாங்கிக் கூர்ந்து பார்த்து ஆச்சரியத்தோடு]

மங்கை: சிங்காரமான தொட்டில். இதில் ஒரு சித்திரக்குழந்தை. என்ன விசித்திரமான வேலைப்பாடு. இதைப் படைத்தவன் இதன் அழகுக்கு அதிகமான வாலிபத்தை உண்டாக்கிவிட்டான் இளவரசே! இந்த வெள்ளிச் சிலைக்கு உயிர் இருந்தால், இந் நேரம் என்னை அம்மா என்று அழைத்திருக்கும்.

[என்று கூற, கவிஞன் இளவரசியின் காவிய உள்ளத்தை ரசித்து, மகிழ்ச்சியோடு]

கவி: இளவரசே! இளவரசி ஒரு அழகு ராணி மட்டு அல்ல. வித்தையிலும் ஒரு வாணிதான். இவர்களை அடைந்தது தங்கள் பாக்கியம்.

காந்த: கவிஞனே! ஓய்வான நேரங்களில், அடிக்கடி இங்கே வந்து போ.

கவி: ஆகட்டும்.

[என்று கூறி அவ்விடத்தைவிட்டுப் போக, பிறகு இருவரும் தோட்டத்துக்கு வந்து மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருக்கின்றனர். பாட்டின் இடையில், மேக மண்டலத்தில் தன் தோழிகளுடன் போய்க் கொண்டிருந்த சசிகலா காந்தரூபனைக்கண்டு மோகமடைந்து ரவிதா என்பவளைப் பார்த்து]

சசிகலா: ஆஹா! அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார்.

ரவிதா: கந்தர்வலோகத்தில் கூட இப்படியொரு சுந்தர புருஷனைப் பார்க்கமுடியாது.

சசி: ஆம், அவரை அடைந்தே தீரவேண்டும்.

[என்று கூறி, சசிகலா தன் தோழிகளைப் பிரிந்து தனியாக காந்தரூபனிடம் வருகிறாள். அப்போது அவர்கள் பாடிக்கொண்டிருந்த பாட்டு முடிய இளவரசி அவனைப் பார்த்து]

மங்கை: இளவரசே! உங்களுக்கு நான் ஒரு பரிசுப் பொருள் வைத்திருக்கிறேன்.

காந்த: என்ன பரிசுப் பொருள்?

மங்கை: இதோ கொண்டு வருகிறேன் பாருங்களேன்.

[என்று கூறிப் பக்கத்தில் இருந்த ஒரு. பூமாலையை எடுத்துவந்து அவன் கழுத்தில் போட]

காந்த: ஓ! இதுதானா அந்தப் பரிசுப் பொருள். நம் சந்தோஷமான நேரத்துக்கு ஏற்ற சரியான பரிசு.

மங்கை: இளவரசே! நம்மை நட்சத்திரங்கள் தாலாட்டும் இந்த இனிமையான நேரத்தில்….

காந்த: தென்றலைச் சந்தோஷப்படுத்த அதோ நாட்டியமாடும் மலர்களைப் பார்த்துக்கொண்டு…

மங்கை: நான் மட்டும் சும்மா இருப்பேனா? இதோ உங்களை சந்தோஷப்படுத்த நான் நாட்டியமாடப் போகிறேன்.

காந்த: எங்கே?

மங்கை: இளவரசே கொஞ்சம் பொறுங்கள். நாட்டிய உடை அணிந்து கொண்டு இதோ வந்துவிடுகிறேன்.

காந்த: மங்கையர்க்கரசி….இது என்ன விளையாட்டு ஆடை அணிந்து அதற்குள்ளாகவா வந்து விட்டாய்?

[என்று சொல்லிக்கொண்டே அவள் கையை விலக்கிப் பார்க்க அவள் சசிகலாவாக இருப்தைக்கண்டு]

காந்த: ஆ! நீ யார்?

சசிகலா: நான் கந்தர்வப் பெண். என் பெயர் சசிகலா

காந்த: நீ இங்கே வரக் காரணம்?

சசி: காரணத்தோடுதான் வந்தேன்.

காந்த: யாரிடம் இப்படிப் பேசுகிறாய்? மரியாதையாகப் போய்விடு.

சசி: என்னுடன் கந்தர்வ லோகத்துக்கு வாருங்கள் இளவரசே!

காந்த: நீ போகமாட்டாயா?

[என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, மங்கையர்க்கரசி வருவதைக்கண்ட சசிகலா உடனே காந்தரூபனை மாலையாக மாற்றி எடுத்துக்கொண்டு மறைந்துவிடுகிறாள். பிறகு மங்கையர்க்கரசி வந்து பார்க்க, கணவன் இல்லாததைக்கண்டு]

மங்கை: இளவரசே …. இளவரசே …. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் இளவரசே!

[என்று கூற ஒரு பதிலும் வராதது கண்டு, மறுபடியும்]

மங்கை: பேசமாட்டீர்களா? ஆ! என்ன இது…என் மன்னர் எங்கே?

[என்று கூறிக் கலங்கிக் கொண்டிருக்கும். போது தோழிகள் அங்கேவர அவர்களைப் பார்த்து]

மங்கை: ரூடலேகா….ரேவதி….இளவரசரைப் பார்த்தீர்களா?

ரேவதி: இல்லையே!….

மங்கை: ஆ!

[என்று அலறியபடி அவ்விடத்தைவிட்டு ஓடுகிறாள்.]

காட்சி – 2

இடம்: மதுராங்கதள் அறை

[மதுராந்தகன் படுக்கை அறையை இரண்டு தோழிகள் சரிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மதுராந்தகன் உலவிக் கொண்டிருக்கிறான். அப்போது ராணி வசந்தவதி மன்னர் மதுராங்கதனைப் பார்த்து]

வசந்தவதி: நீங்கள் என்ன சொன்னாலும் முடியாது. காந்தரூபனையும் மங்கையர்க்கரசியையும் பிறந்த இடத்துக்கு…நாளைக்கே அழைத்துக்கொண்டு போகவேண்டும்.

மதுராங்கதன்: வசந்தவதி…அவசரப்படாதே! புதிய தம்பதிகள் மக்களின் வாழ்த்துக்களை…சில மாதங்கள் இருந்து காது குளிரக் கேட்கட்டும். பிறகு நீ அவர்களை அழைத்துக்கொண்டு போவதில் எனக்குத் தடை இல்லை.

வசந்த: அப்போது ……

[என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ஒரு தோழி வேகமாக அவ்விடம் ஓடிவந்து வணங்கியபடி]

தோழி: மஹாராஜா! மஹாராஜா! இளவரசர் மாயமாக மறைந்துவிட்டார்.

மதுராங்: என்ன!

வசந்த: மறைவதா! என்ன விளையாடுகிறாயா?

தோழி: இல்லை. உண்மையாகவே இளவரசரைக் காணோம்.

மதுராங்: என்ன!

வசந்த: காணோமா!

[என்று கூறி விதிர்விதிர்ப்புடன் அவ்விடத்தை விட்டு விரைந்து செல்கின்றனர்.]

காட்சி – 3

இடம்: அரண்மனையின் ஒருபுறம்

[மந்திரி பணியாட்களைப் பார்த்து]

மந்திரி: இளவரசர்…மாயமாக மறைந்துவிட்டாராம். எட்டுத் திக்குகளிலும் சென்று தேட ஏற்பாடு செய்யுங்கள்.

[என்று கூறி பணியாட்கள் மந்திரியை வணங்கியபடி வெளியேறுகின்றனர்.]

காட்சி – 4

இடம்: கந்தர்வ லோகம்

[கந்தர்வப் பெண்கள் சுற்றிலும் நிற்க, இருவர் ஆண் பெண் வேஷம் போட்டு நடிக்கின்றனர்.]

ஆண் நடிகை: மாதரசே…மடப்பிடியே மாங்குயிலே..மௌனமேனோ…எங்கே எனக்கொரு…

[என்று கூறிப் பெண் நடிகையை முத்தமிடப் போகையில் அவள் நகர்ந்து சென்று]

பெண் நடிகை: என்னை விடுங்கள். இந்த ஆண்களையே நம்பக்கூடாது. அதிலும் நீங்கள் நரர்.

ஆண்: ஏன்? என்மீது கோபமா? கண்ணே! உன்னைக் கண்டது முதல்… நான் கிறுகிறுத்துப் போனேன்.

[என்று கூறிக்கொண்டிருக்கையில், பக்கத்திலிருந்த பெண்கள் சிரித்து, மலர்களை அவர்கள் மீது விட்டெறிந்தபடி]

பெண்கள் : மங்களமுண்டாகட்டும்.

[என்று கூறி அவர்கள் அருகில் வருகின்றனர். அவர்களில் ஒருத்தி]

ஒருபெண்: என்ன அழகான தலைப்பாகை.

[என்று ஆண் நடிகையின் தலைப்பாகையை எடுக்க, மற்றொருத்தி]

அடுத்தபெண்: உங்கள் மீதுதான் எனக்கு ஆசை.

[என்று அவள் ஒட்டியிருக்கும் மீசையை எடுக்கிறாள். அப்போது சசிகலா தோன்றி]

சசிகலா: இது என்ன நாடகம்?

மற்றொரு பெண்: இதுவா…காதல் நாடகம்.

சசி: என்ன?

ஒருத்தி: அவரை எப்படிக் காதலிப்பதென்று..

சசி: எவரை?

ஒருத்தி: அவரைத்தான். எங்கே அவரைக் காணவில்லை. இது என்ன மாலை?

[என்று சசிகலா அணிந்திருக்கும் மாலையைத் தொடுகிறாள். சசிகலா தடுத்து]

சசி: உஸ்…தொடாதே.. இதுவா…

[என்று சொல்லிப் பக்கத்தல் உள்ள மஞ்சத்தில் எறிகிறாள். மாலை காந்தரூபனாக மாறுகிறது. இதைக்கண்டு]

ஒருத்தி: நம் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்.

சசி: இல்லை. இது என் அதிர்ஷ்டம்.

[என்று சொல்லித் தன் தோழிகளுடன் நாட்டிய மண்டபத்தில் இருந்தபடி கையைக்காட்ட, காந்தரூபன் மயக்கம் தெளிந்தவனைப்போல்]

காந்தரூபன்: எனக்கு…மனமயக்கமா?

சசி: ஆம். மதுரமான பொருளைக் கண்டால்…மயக்கந்தானே உண்டாகும்.

[என்று கூறி எழுந்து சசிகலாவைப் பார்க்கிறான். அவன் கண்களுக்குச் சசிகலா மங்கையர்க்கரசியாகத் தெரிய, மகிழ்ச்சியோடு பாடுகிறான். தேவகன்னிகைகள் ஆடுகின்றனர். பிறகு காந்தரூபன் அவளைத் தழுவுகிறான். அப்போது அவள் சசிகலாவாக அவன் கண்களுக்குத் தெரிய, இதைக்கண்டு திகிலடைந்தபடி]

காந்த: நீயா! என் மங்கையர்க்கரசி எங்கே?

சசி: க்ஷணத்து க்ஷணம் சஞ்சலத்தை உண்டாக்கும் மனித பூமியில் இருக்கிறாள்.

காந்த: அப்போது…நான் இருப்பது!

சசி: கேள்விப்பட்டாலே இனிக்கும்…கந்தர்வலோகத்தில்

காந்த: ஆ…அந்தப்புரத்திலிருந்த எங்களை…இப்படி அநியாயமாகப் பிரிப்பதா? கொடியில் விளையாடிக் கொண்டிருந்த மலரை கொய்துவிட்டாயே!

சசி: அப்படிச் செய்ததும்…அலங்காரமாகச் சூடி ஆனந்தமாக இருக்கத்தானே?

காந்த: பிரித்தது…பாபமல்லவா?

சசி: பாபமா? கண்ணுக்குப் பிடித்தமான கட்டழகனைப் பெண்ணின் பருவஜாலம் திருடியது பாபமா? ஹும்…காதல் மந்திரம் கற்றுக் கொள்ள…உங்களைக் களவாடி வந்ததா பாபம்? ஸ்வாமி…உல்லாசமாக இருப்போம் வாருங்கள்.

காந்த: கைப்பிடித்த மனைவி இருக்க….கண்ட பெண்களை இச்சிப்பது . காமுகனின் செய்கையல்லவா?

சசி: நீங்கள்…என் பதிதானே ஸ்வாமி.

காந்த: பதியா…! தெய்வ பூமியில் வாழும் தேவமகள் நீ எங்கே? பூமண்டலத்தை ஆளும் பட்டத்து இளவரசன் நான் எங்கே? நான் உனக்கு புருஷனா? இது பொருந்தாது.

சசி: ஆம்! மலரே கூப்பிட்டும்…வண்டு வாய்மூடிக் கொண்டிருப்பது பொருந்தாதுதான்.

காந்த: உனக்குச் சரியான மயக்கம்.

சசி: உங்களைக் கண்ட பிறகுதான்! ஸ்வாமி…என் உதட்டில் உங்கள் உருவத்தைப் பாருங்கள். என் சிரிப்பில் நெளியும் சித்திரத்தைப் பாருங்கள். நான் அழகாக இல்லையா?

காந்த: நெருப்புக்கு அழகில்லை என்று யார் சொன்னது?

சசி: பிறகு ஏற்றுக்கொள்ளுங்களேன். பந்தங்கள் வெளிச்சம் கொடுக்கவும்; ஆபரணங்கள் – அணிவதற்கும்; அழகு – அனுபவிக்கவுந்தானே இருக்கிறது.

காந்த: விநோதமான வார்த்தைகள்.

சசி: இதை உங்களிடம் பேசினால் தானே தித்திக்கும்!

காந்த: இதென்ன கிரஹசாரம்! உனக்குப் புண்ணியமுண்டு. என் மனைவி என்னைக் காணாது…ஏங்கித் தவிப்பாள். தயவு செய்து…என்னை மங்கையர்க்கரசியிடம் சேர்த்துவிடு.

சசி: அப்போது…உங்கள் வாலிபத்தையும்…என் வசந்த பருவத்தையும்…அனுபவிக்காமலே அழித்துவிடுவதா?

காந்த: என்னைத் தொந்தரவு செய்யாதே. என் அன்பில் விளைந்த அமுதத்தைப் பார்க்காமல்…நான் அரைக் கணம்கூட இருக்க முடியாது. நான் பூலோகத் துக்குப் போகவேண்டும்.

சசி: என் புஷ்ப ரூபத்தைக் கண்டுமா…என்னைவிட்டுப் போக மனம் வருகிறது. ஸ்வாமி…இதோ இந்த தீபத்தின் நாக்கு…உங்கள் கனவுக்குங்கூட கதை சொல்லிக் கொண்டிருக்கும்…இந்த ஜீவாம்ருதம் உங்களைச் சிரஞ்சீவியாக்கும்…பாருங்களேன்! போகிறேன் என்கிறீர்களே…எங்கே உல்லாசமாக இருப்போம்…வாருங்கள்.

காந்த: வானத்துக்கு..ஒரே சந்திரன். என் வாழ்க்கைக்கு…ஒரே மங்கையர்க்கரசி. என் ராஜபத்தினியைத் தவிர…என் இதயத்தில் வேறு யாருக்குமே இடமில்லை.

சசி: உங்கள் கோபங்கூட ஒரு அழகுதான்! இளவரசே!

காந்த: இப்படி அழைக்க…நீ என் பட்டத்து ராணி அல்லவே!

சசி: உண்மைதான். இருந்தாலும்…உங்கள் மன்மத சுகத்துக்கு…நான் மஹாராணி அல்லவா?

காந்த: ராணி – மஹாராணி. சரியான சாஹசம்.

சசி: உங்கள் நடிப்புக்குத்தானே!

காந்த: சதிகாரி….என் எதிரில் நிற்காதே. போய்விடு.

[என்றுக் கூறிக் கோபத்தோடு அவ்விடத்தை விட்டுப் போய்விடுகிறான்.]

காட்சி – 5

இடம்: மங்கையர்க்கரசியின் அறை

[மங்கையர்க்கரசி ஒரு ஆசனத்தில் அமர்ந்து கண்கலங்கியபடி இருக்க, அப்போது கவி வித்தியாபதி அங்கே வர, அவனைப் பார்த்து]

மங்கை: என் கணவர் என்னைப் பிரிந்து எங்கோ போய் விட்டாரே! என் ஸ்வாமி இருக்குமிடம் உங்களுக்காவது தெரியுமா? அதைச் சொல்லத்தானே வந்தீர்கள்?

கவி: இல்லை தேவி…உங்களுக்கு ஆறுதல் கூறிப்போகத்தான் வந்தேன். கணவனைப் பிரிந்த உங்களுக்கு – அம்பிகைதான் அருள் செய்ய வேண்டும்.

மங்கை: உண்மைதான். திக்கற்றவர்க்கு தெய்வம் தான் துணை. அம்பிகை எனக்கு அருள் செய்வாளா?

கவி: நிச்சயம் உதவி செய்வாள். சுக்ரவார விரதம் அனுஷ்டித்து வாருங்கள். கட்டாயமாக உங்கள் கணவனைக் காண்பீர்கள். விரதம் இருக்க முடியுமா?

மங்கை: என் அண்ணலை அடைவதற்கு எந்த நோன்பையும் ஏற்கச் சித்தமாயிருக்கிறேன்.

கவி: நல்லது!. நான் வருகிறேன்.

[என்று கூறி அவ்விடத்தைவிட்டுப் போகிறான்.]

காட்சி – 6

இடம்: கந்தர்வலோகம்

[கந்தர்வப் பெண்கள் சசிகலாவைப் பார்த்து]

ஜனி: என்ன…வெற்றிதானே?

உல்கா: மேனி குளிர்ந்ததா?

ஹேமா: அவர்…. உம்…

[என்று கேலி செய்ய, சசிகலா மனங்கலங்கியபடி]

சசிகலா: ஜீவரேகா…என்னடி அவர்…மங்கையர்க்கரசியைப் பார்த்துவிட்டுத்தான் மறுகாரியம் என்று ஒரே பிடிவாதம் செய்கிறார். எவ்வளவு வயனமாகப் பேசியும்…அவரை வசப்படுத்த முடியவில்லையே…இதற்கு என்ன செய்வது?

மல்லிகா: சங்கீதத்துக்கு மயங்காத சர்ப்பம் உண்டா! இதோ பார் அவரை…

[என்று எழுந்திருக்க அப்போது மஹாபிரஜா அவளைத் தடுத்து]

மஹாபிரஜா: மல்லிகா…மலரைக் கசக்கியா முகர்வது?..பொறு.

சுஜாதா: அவர் மங்கையர்க்கரசியைத்தானே பார்க்க வேண்டும் என்கிறார். ஒரு முறைதான் கொண்டு வந்து காட்டிவிட்டால்?

சசி: மங்கையர்க்கரசியையா?

பத்மினி: நம் காரியம் நிறைவேற வேண்டுமானால்…நாம் அவளை இங்கு கொண்டுவந்துதான் ஆக வேண்டும்.

[என்று கூற, சசிகலா அவ்விடத்தைவிட்டு காந்தரூபன் இருக்கும் மஞ்சத்துக்குவந்து அவன் பின் பக்கத்தில் இருந்தபடி]

சசி: ப்ரபு…உங்களுக்குத் திருப்தி ஏற்பட நான் என்ன செய்யவேண்டும்?

காந்தரூபன்: வேறொன்றும் செய்யவேண்டாம். நீ இவ்விடத்தைவிட்டு போய்விட்டாலே போதும்.

[என்று கூறி நகர்ந்து உட்கார, சசிகலா அவனை நெருங்கிப்போய் அவன் தோளைத் தொட, அப்போது]

காந்த: தொடாதே. நீ தொட்டால் விஷங்கூட இறந்து விடும்.

சசி: நான் அவ்வளவு துரோகியா?

காந்த: இதைப் பாபத்திடம் கேள். அது பதில் சொல்லும்.

சசி: என்னை வெறுப்பதில் பிரயோஜனமில்லை. விதி நம்மைச் சொந்தமாக்கிவிட்டது. நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

[என்று கூற காந்தரூபன் அவ்விடத்தைவிட்டு எழுந்து ஒரு பக்கத்தில் நின்றபடி அவளைப் பார்த்துக் கோபமாக]

காந்த: உன் அக்ரமங்களை விதியின் பெயரால் மறைக்கப் பார்க்கிறாயா? த்ரோகி! உன் மோகவிகா ரத்துக்காக…என்னை மங்கையர்க்கரசியிடமிருந்து பிரித்த மஹாபாபி. நீயும் ஒரு பெண்ணா? பெண் ரூபத்தில் வந்த பேய். உன்னைக் கொன்றால் தான் என் ஆத்மா திருப்தியடையும்.

[என்று கூறியபடி ஒரு வாளை எடுத்து அவளை வெட்டுவதற்கு ஓங்க, அந்த வாள் உடனே மலராக மாறுகிறது. இதைக்கண்டு மன்னன் மலைக்கிறான். சசிகலா சிரித்தபடி அவனைப் பார்த்து]

சசி: இந்த தெய்வ பூமியில் என் சக்தியை மீறி நீங்கள் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது!

காந்த: உனக்குக் கோடி புண்ணியம். என் பட்டத்து ராணியை…நான் பார்க்கவேண்டும் தயவு செய்து இந்த உதவியையாவது செய்யக்கூடாதா?

சசி: இப்போது..உங்கள் மனைவிதானே வேண்டும்?

காந்த: ஆம்!

சசி: உங்கள் மனைவியைக் காண்பிப்பேன். அவளைப் பார்த்து பிறகு…நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காந்த: சரி.

சசி: எங்கே சத்தியம் செய்து கொடுங்கள்.

காந்த: அம்பிகைமீது ஆணை. உன்னை ஏற்றுக்கொள்கிறேன். இருக்கட்டும். மாயாஜாலத்தால் நீயே மங்கையர்க்கரசி ரூபத்தில் வந்தால்?

சசி: நான் தெய்வ ஜாதி! சத்தியம் தவறமாட்டேன்

{என்று கூறி இரண்டு கந்தர்வப் பெண்களைப் பார்த்து]

சசி: மங்கையர்க்கரசியைக் கொண்டு வாருங்கள்.

[என்று கூற, அவர்கள் மறைகின்றனர். பிறகு அவனைப் பார்த்து]

சசி: தங்களுக்கு இப்போது மகிழ்ச்சிதானே!

[என்று கூறி அவனை மறுபடியும் மஞ்சத்துக்கு அழைத்து வந்து, ஜீவாம்ருதத்தைக் கொடுத்தபடி]

சசி: இந்த ஜீவாம்ருதத்தைச் சாப்பிடுங்கள்.

காந்த: எனக்கு எதற்கு?

சசி: எதற்கா? வசந்தகாலம்…விருஷங்களை வாலிபமாக்கும். இந்த மதுரமான மது – உங்கள் வாழ்க்கையை வாலிபமாக்கும்.

[என்று கூறிக் கொடுக்க, அவன் அதைக் குடிக்கிறான்.]

காட்சி – 7

இடம்: தீவு

(காந்தரூபனைத் தேடச் சென்ற பலர், கிரவுஞ் தீவில் தேடுகின்றனர்.]

காட்சி – 8

இடம்: கந்தர்வலோகம்

[சசிகலாவிடம் இரு கந்தர்வப் பெண்கள் வந்து]

தவகன்னி: மங்கையர்க்கரசியைக் கொண்டுவந்து, விட்டோம்.

[என்று கூறிச் செல்ல, உடனே சசிகலா காந்தரூபனிடம் வந்து]

சசி: ஸ்வாமி

காந்த: என் மங்கையர்க்கரசி வந்துவிட்டாளா?

சசி: ஹூம்.

காந்த: எங்கே?

[என்று கேட்க, பக்கத்தில் பஞ்சணையில் படுத்துத் தூங்கும் மங்கையர்க்கரசியைக் காந்தரூபனுக்குக் காண்பிக்க, உடனே அவன் அவளிடம் போக எத்தனிக்கிறான். சசிகலா அவனைத் தடுத்து]

சசி: இதோ பாருங்கள். நீங்கள் இப்போது இருக்குமிடம்; நீங்கள் இங்கே வந்தவிதம், இங்கே நடக்கும் ரகஸ்யங்கள்; இதைப் பற்றியெல்லாம் உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாது. சொன்னால் அவள் உயிருக்கு ஆபத்து வரும்.

[என்று கூற, பிறகு அவன் தன் மனைவியிடம் வந்து]

காந்த: கண்ணே! கண்ணே!

[என்று கூப்பிட, அவள், விழித்துப்பார்க்க, எதிரே தன் மணாளன் இருப்பதைக்கண்டு ஆச்சர்யத்தோடு]

மங்கை: இளவரசே! நிஜமாகவே நீங்கள் தானா?

[என்று கூறி, அவனைத் தொட்டுப் பார்த்து, தெளிவடைந்து, அவன் தன் கணவன் தான் என்பதை உணர்ந்து, மறுபடியும்]

மங்கை: இல்லை இல்லை…நீங்கள் என் இளவரசேதான் ஸ்வாமி! நான் அலங்கரித்துக்கொண்டு உங்கள் ஆசை முகத்தைப் பார்க்க ஆவலாக ஓடிவந்தேன். அப்போது உங்களைக் காணவில்லையே. அந்நியர்களால் ஏதாவது ஆபத்து நேர்ந்ததா? இல்லை என்னை வேதனைப்படுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா? இது உங்கள் விருப்பமானால் என்னைத் தவிக்கவிடுவது தர்மமா ஸ்வாமி? சொல்லுங்கள்.

காந்த: உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன! இப்போதுதானே அலங்கரித்துக் கொள்ளச் சென்றாய். திரும்பி வருவதற்குள் இந்தத் தடுமாற்றமா? ஒருவேளை, கண்ணாடியில் மின்னும் உன் பிரதிபிம்பத்தைக் கண்டு மயங்கிவிட்டாயோ?

மங்கை: வேதனைப்பட என்னை விட்டுப் பிரிந்துபோகவில்லையா?

காந்த: இது வெறுங்கனவு.

மங்கை: உண்மையாகவா?

காந்த: உண்மையாகவே நீ சொல்லுவது சொர்ப்பனங்தான். நானாவது உன்னைவிட்டுப் பிரிவதாவது உன் இன்பத்துக்கு எவ்வளவு நேரமாக இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன்.

மங்கை: அப்போது, உங்களைக்காணாமல் நான் கண்ணீர்விட்டுக் கதறிய அந்தக் கசப்பான நாட்கள் இன்னும் என் நினைவில் இருக்கிறதே அதை நம்புவதா? இல்லை உங்கள் மன்மத ரூபத்தைப் பார்க்கும் என் மான் விழிகளை நம்புவதா?

காந்த: நீ எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் இந்நேரம் என்னைக் கால் கடுக்கத் தனியே நிற்கவைத்தாயே; இந்த தண்டனையையாவது நம்பு.

மங்கை: அது எப்படியோ போகட்டும்; நான் உங்களைப் பார்த்ததே போதும். சந்திரனோடு குளிர்ச்சியும், சத்தியத்தோடு தர்மமும், உருவத்தோடு நிழலும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கின்றன. அதைப்போல் நீங்களும் இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல இனி எந்த ஜன்மத்திலும் என்னை விட்டுப் பிரியமாட்டீர்களே இளவரசே

காந்த: உன்னையா…கண்ணே ! நீ கடவுள் எழுதிப் பார்க்கும் காமச்சித்திரம். மேகந்தராத மின்னல்!

மங்கை: ஸ்வாமி!

காந்த: அன்பே உன் சிவந்த மேனியில் தோன்றும் சிற்பங்களைக் கண்டால்; மதுவுக்கும் அல்லவா மயக்கம் வந்துவிடும்

மங்கை: ப்ரபு!

காந்த: ராஜவதி

(என்று கூறி இருவரும் சயனசுகம் அனுபவித்துப் பிறகு விழிக்கின்றனர். அப்போது மங்கையர்க்கரசி பக்கத்தில் இருக்கும் ஜீவாம்ருதத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு, இளவரசனைப் பார்த்து)

மங்கை: ஆஹா! என்ன இனிமை இப்படிப்பட்ட சுவையான வஸ்துவை நான் இதுவரையிலும் அருந்தியதே இல்லை!

காந்த: கண்ணே! இதுதான் ஜீவாம்ருதம். சாகாத வாழ்வுக்கு சஞ்சீவி. இதைச் சாப்பிட்டவர்களுக்குச் சாவு கிடையாது. அழகு அழியாது. இளமை மாறாது.

மங்கை: என்ன! என் இளமை மாறாதா?

காந்த: ஆம்

மங்கை: ஸ்வாமி இப்போது நாம் எங்கிருக்கிறோம்?

காந்த: நம் அரண்மனையில் உள்ள அந்தப்புரத்தில் தான் இருக்கிறோம்.

மங்கை: பார்க்கும் இடமெல்லாம் ஒரே புதுமையாகத் தெரிகிறதே.

[என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, சசிகலா தன் மந்திர சக்தியால் மங்கையர்க்கரசியைப் பூலோகத்துக்கு அனுப்பிவிடுகிறாள்]

காட்சி – 9

இடம்: மதுராங்கதன் அறை

[மதுராங்கதன் தன் அறையில் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கையில், இளவரசனைத் தேடச் சென்ற ஆட்களில் மூவர் அவ்விடம் வந்து]

ஆள்: மஹாராஜா!

மதுராங்கதன்: என் கண்மணி வந்து விட்டானா?

ஆள்: வேந்தே! கலிங்க தேசம், கடாரம், காடு, மலைப்பிரதேசம், பாலைவனங்கள் எங்கும் அலைந்தோம். எங்கள் கால்படாத இடமே இல்லை. எங்கு தேடியும் இளவரசர் தென்படவில்லை மஹாராஜா.

மதுரா: என் ராஜமகன் இன்னும் தென்படவில்லையா? இந்த சாம்ராஜ்யத்தின் உப்பின் சாமர்த்தியம் இவ்வளவுதானா? மீண்டும் போய்த் தேடுங்கள். என் ராஜதிலகத்தை எங்கிருந்தாலும் கண்டு பிடியுங்கள் போங்கள் போங்கள்.

[என்று சொல்ல, பணியாட்கள் வெளியேறு கின்றனர். அப்போது அந்தப்புரத்திலிருந்து அந்த மங்கையர்க்கரசி மன்னனிடம்]

மங்கை: மஹாராஜா! என் ப்ரபு இருக்கிறார். என் மன்னர் அகப்பட்டுவிட்டார் மஹாராஜா. என் வாழ்க்கை மலர்ந்து விட்டது! இனிமேல் மேகத்தையும் என் ஆனந்தக் கண்ணீரால் ஈரமாக்குவேன்.

மதுரா: என்ன! மங்கையர்க்கரசி நீ உன் மணாளனைப் பார்த்தாயா? உண்மையாகவா?

மங்கை: ஆம்! நான் அவரைப் பார்த்தேன், பேசினேன்.

மதுரா: எப்போது பார்த்தாய்?

வசந்தவதி: நாதா! மங்கையர்க்கரசிதான் தன் நிலையில் இல்லை, தங்களுக்குமா இக்குழப்பம்.

மதுரா: வசந்தவதி! ஒருவேளை மங்கையர்க்கரசி சொல்லுவது உண்மையாக இருக்கலாம். அம்மா! உன் மகுடபதியைப் பார்த்தாயா? அவன் எங்கிருக்கிறான்?

மங்கை: எந்தப் பெயராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத ஒரு இன்பமான இடத்தில் இருக்கிறார் என் கணவர்.

மதுரா: அப்படியா!

வசந்த: மங்கையர்க்கரசி கவலையினால் உன்மனம் அதிகமாகக் குழம்பிவிட்டது. வாம்மா.

[என்று மங்கையர்க்கரசியை அழைத்துக் கொண்டு போகிறாள்.]

காட்சி – 10

இடம்: கந்தர்வலோகம்

[சசி சந்தனச் சந்திரனைப் பார்த்து காம மயக்க மடைந்து, பக்கத்தில் இருக்கும் காந்த ரூபனிடம்]

சசி: ஏன்? இந்த தெய்வ ராஜ்யம் உங்களுக்குத் திகட்டுகிறதோ?

காந்த: உன்னால் எனக்கு ஒரே வேதனையாக அல்லவா இருக்கிறது.

சசி: பத்தினியைப் பார்த்தபிறகு என்னை ஏற்றுக் கொள்ளுவதாகச் சொன்னீர்களே?

காந்த: உண்மைதான் இருந்தாலும் என் மனமெல்லாம் மங்கையர்க்கரசியின் மீதல்லவா செல்கிறது. நான் என்ன செய்யட்டும்.

சசி: அப்போது ஆணையிட்டுக் கொடுத்தது இப்படி என்னை ஏமாற்றத்தானோ?

காந்த: சசிகலா இப்போது என் மனோநிலை சரியில்லை. என்னை விட்டுவிடு.

[என்று சொல்ல, சசிகலா மந்திரசக்தியால் அவன் மனதை மாற்றுகிறாள். அவன் பாடுகிறான். பாவை ஆடுகிறார்கள்.]

காட்சி – 11

இடம்: மதுராங்கதன் அறை

[மதுராங்கதன் சோகத்துடன் உலவிக் கொண்டிருக்கிறான். அப்போது]

மந்திரி: பஹாராஜா!

மதுரா: என்ன! என் கண்மணி வந்து விட்டானா?

மந்திரி: இல்லை மஹாராஜா! எங்கு தேடியும் இளவரசர் கிடைக்கவில்லையாம்!

மதுரா: என்ன! ஒரு வருஷமாகப் போகிறது. இன்னும் என் கண்மணி அகப்படவில்லையா? காந்தரூபா! வேந்தர்க்கெல்லாம் வேந்தனாக வீற்றிருப்பாய் என்றல்லவோ கனவு கண்டேன். ஐயோ! ஏற்கெனவே புண்பட்டிருக்கும் மங்கையர்க்கரசிக்கு இந்த சஞ்சலமான செய்தியை; நான் எப்படி தெரிவிப்பேன்.

[என்று சொல்லி அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறான்.]

காட்சி – 12

இடம்: பூஜை அறை

[மங்கையர்க்கரசி அறையில் தேவி விக்ரகத் தின் முன் கண்ணீர்விட்டபடி]

மங்கை: லோக மாதா! என் ப்ரபுவைக் காணாமல் நான் படும் அவஸ்தையை உன்னையன்றி வேறுயாரால் உணரமுடியும். என்னை வேதனைப்படுத்துவது உனக்கு ஒரு விளையாட்டா? என் மீது கருணை கிடையாதா? தாயே! ஏன் இந்த மௌனம்? கல்லுக்கு மௌனத்தைப் படைத்த நீ; உன் இதயத்தையும் ஊமையாக்கிக் கொண்டாயா? தேவி.

[என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மதுராங்கதன் அங்கே வருகிறான். அப்போது]

மங்கை: என் நாதன் வருவாரா? நான் கர்ப்பிணி. என் கதி என்னவாகும்?

[என்று சொல்வதை மறைவிலிருந்து மன்னன் கேட்டு, மனக் கொதிப்புடன் அரண்மனைக்குச் சென்று பணிப்பெண்களைப் பார்த்து]

மதுரா: மங்கையர்க்கரசிக்கு யார் அலங்காரம் செய்வது? யார் உடை உடுத்துவது? யார் ஆகாரங் கொடுப்பது?

[என்று கேட்க, பணிப்பெண்கள் மௌனமாக இருப்பதைக்கண்டு]

மதுரா: ஏன் தயக்கம்? என் கோபத்துக்கு வேலை கொடுக்க வேண்டாம். கூறுங்கள்? அந்தப்புரத்துக்கு அந்நியர் யாராவது வருவதுண்டா?

[என்று கேட்க ஒருத்தி மிகவும் நடுங்கியபடி]

பணிப்பெண்: கவி ஒருவர் அடிக்கடி வந்து போகிறார்.

மதுரா: கவி! அவன் வந்தால் எனக்கு. உடனே தெரிவியுங்கள்.

(என்று கூற, அவர்கள் போகின்றனர்.)

காட்சி – 13

இடம்: கந்தர்வலோகம்

(சசிகலாவும் காந்தரூபனும் சல்லாப போதையில் இதழோடு இதழ் ஊன்றி-மாணிக்க மஞ்சத்தில் ஆலிங்கன மந்திரம் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.]

காட்சி – 14

இடம்: மங்கையர்க்கரசியின் அந்தப்புரம்

[கவி அந்தப்புரத்துக்கு வருவதைக் கண்ட தோழி ஒருத்தி, மன்னனிடம் தெரிவிக்க ஓடுகிறாள். இளவரசி கவிஞனைக் கண்டு]

மங்கை: அம்பிகை, வைதாரையும் வாழவைப்பாள் என்று எனக்கு ஆறுதல் கூறினீர்களே. என்னிடம் இரக்கங்காட்ட ஏன் தயங்குகிறாள். இதுவரை என்நாயகனைக் கனவிலாவது கண்டு களித்து வந்தேன். இப்போது அதுவும் கலைந்துவிட்டதே!

கவி: விரதத்தை மட்டும் விக்னமின்றி நடத்தி வாருங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும். இது உறுதி.

மங்கை: அந்த உறுதிதானே என்னை உயிருடன் வைத்திருக்கிறது. இன்று வருவார் நாளை வருவார் என்று; நாட்களை எண்ணிய விரல்கள் ஓய்ந்தன. மறு வசந்தமும் வரப்போகிறது. என் கணவர் இருக்கும் இடங்கூடத் தெரியவில்லை! நான் பழிச் சொல்லுக்கு ஆளாகி, என் வாழ்க்கை இப்படியே பாழாக வேண்டியதுதானா?

கவி : பழிச்சொல்லுக்கு பயப்படாதீர்கள். நேரத்துக்கு ஒரு நினைவு மாற்றும் உலகந்தானே! இளவரசர் நிச்சயமாக வந்துவிடுவார். உங்கள் பிரார்த்தனையோடு இந்த ஸ்லோகங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

[என்று தன்னிடம் உள்ள ஓலைச்சுவடியை மங்கையர்க்கரசியிடம் கொடுக்க; அதை அவள் வாங்குகிறாள். செய்தி அறிந்து அந்தப்புரத்துக்கு வந்து கொண்டிருந்த மன்னன் மதுராங்கதனும் மந்திரியும் இதைப் பார்த்து மறைவாக ஓரிடத்தில் நின்றுகொண்டு இருக்க, அப்போது கவிஞனைப் பார்த்து]

மங்கை: உங்களுக்கு என்னிடம் எவ்வளவு அன்பு! உங்களை சந்திக்கும் போதுதான் – நான் சாந்தமடைகிறேன். உங்கள் கருணைப் பார்வையால்… என் வாழ்க்கை வசந்த புஷ்பமாகிறது.

கவி: சிக்கிரத்தில் அந்த புஷ்பம்; தென்றலை முத்தமிட்டு மணம் வீசி மகிழ்ச்சி தரப்போகிறது.

மங்கை: என்னமோ…உங்களைத் தவிர எனக்கு உற்ற துணை வேறு யார் ? நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது வந்து சந்தித்து போங்கள்.

கவி: ஒரு தடவை என்ன…அடிக்கடி வந்து சந்திக்கிறேன்.

(என்று கூறிக்கொண்டிருக்கும்போது, மதுராங்கதன் கோபத்தோடு உள்ளே நுழைந்து)

மதுராங்கதன்: அட துரோகி. சற்று நேரத்தில் உன் மரணத்தைச் சந்திப்பாய். அயோக்யா.

கவி: தாங்கள் கோபிக்க நான் ஒரு குற்றமும் செய்ய வில்லையே மஹாராஜா.

மதுரா: கயவனே!…அந்தப்புரத்தில், அதுவும் பட்டப்பகலில், துராக்கிரமம் செய்ய உனக்கு எவ்வளவு துணிச்சல்.

கவி: மஹாராஜா…நான் இந்நாட்டுக் கவி. நெஞ்சில் வஞ்சமறியாதவன்.

மதுரா: கவி. படித்த ஏடுகளைப் பாழாக்கிய பாதகன். ராஜத் துரோகி. யாரங்கே…இவனைக் கைது செய்யுங்கள்.

[என்று கட்டளையிட சேவகன் கவியைக் கைது செய்து அழைத்துப் போக, அதைக் கண்டு]

மங்கை: மஹாராஜா!….அவர் நிரபராதி. ஒரு பாபமும் அறியாதவர்.

மதுரா: மதுராங்க நன் யார் என்பதை….நீ அறியமாட்டாய். என் ராஜரீகத்தின் கொக்கரிப்பு… நீதியற்ற உன்னை….நிர்மூலமாக்கிவிடும்.

மங்கை: என் நாதனைப் பெற…அவர் விரதந்தானே இருக்கச் சொன்னார். அது குற்றமா? சஞ்சலத்தைப் போக்க.. மந்திரம் உபதேசித்தது குற்றமா?

மதுரா: என்ன உன் நெஞ்சழுத்தம்! பரபுருஷனுக்குப் பரிந்து பேச வந்துவிட்டாய். நல்லநாள் பார்த்து….மன்னரெல்லாங்கூடி விண்ணதிர முரசுகொட்டி…உன்னை மாலையிட்ட மன்னனுக்கு…நீ காட்டும் நன்று இதுதானா? அந்தக் காமாதுரனோடு; விவஸ்தையற்று விநோதம் புரிய…உனக்கு எவ்வளவு துனிச்சல். கையைப் பாத்திரமாக்கிப் பிச்சை எடு போரும்…இந்த நீச்சத் தொழிலைச் செய்ய அஞ்சுவார்களே!

மங்கை: மஹாராஜா..நீங்கள் தவறான முடிவுக்கு வந்துவிட்டீர்கள். நான் தீண்ட முடியாத நெருப்பு. பரிசுத்தங்கெடாத பரம்பரையில் பிறந்து வளர்ந்தவள் என்பதை உணருங்கள். என் உடல் களங்கத்தை ஏற்க ஒருபோதும் சம்மதிக்காது.

மதுரா: மறுதினத்தில் மகவைப் பெற்று…மகிழப் போகும் இவள்…தன்னை மாசற்றவள் என்கிறாள் விபசாரி.

மங்கை: ஹ!…விபசாரி..சண்டாளத் தெய்வமே. இப்பட்டத்தை ஏற்கவா என்னைப் படைத்தாய் என் கதி … இப்படியா முடிய வேண்டும்.

மதுரா : உண்மையை மறைத்து..என் கண்களை மூடப் பார்க்கிறாய். கணவனும் காதலியுமாகப் பேசியதை…காற்றில் பறக்கவிடுகிறாய். விபசாரி.

மங்கை: விபசாரி என்று கூறிய நாக்கு….இந்நேரம் என் பதியிருந்தால்….துண்டாகிக் கீழே விழுந்து. துடித்திருக்கும். ப்ரபு! இக்கொடுமைக்குள் ஆளாககவா…என்னை விட்டுப் பிரிந்தீர்கள். இனி நான் ஏன் உயிரோடிருக்கிறேன்.

மதுரா: என்ன சாகஸம். கிராதகி. உலகத்தில்…சத்தியம் நிலைக்க வேண்டுமானால்…தர்மம் தலை தூக்க வேண்டுமானால்..உன் போன்ற விபசாரிகள் ஒழிய வேண்டும். அமைச்சரே…இச்சண்டாளி யைத் துண்டாக்குங்கள்…அஸ்தமனம்…இவள் பாபரத்தத்தைக் கண்டு பரிகசிக்கட்டும்.

மந்திரி: அரசே! சற்றுப் பொறுங்கள். கொலை ஒன்றல்ல – இரண்டு. கர்ப்பிணியைக் கொலை செய்வது மஹா பாபம்.

மதுரா: இத்துராத்மாவிடமா…பாப புண்ணியம். களங்கத்தால் உண்டான கரு. இதனிடமா கருணை காட்டுவது? ஹும்…. இச்சண்டாளியைத் துண்டாக்குங்கள்.

[என்று கட்டளையிட, கொலைஞர்கள் மங்கையர்க்கரசியைக் கொலை செய்யக் காட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்கின்றனர்]

– தொடரும்…

– மங்கையர்க்கரசி, முதற் பதிப்பு: பிப்ரவரி 1950, சுரதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *