கிழவியின் நிழல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 17,510 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெயில்; படை பதைக்கும் வெயில். அந்த வெயிலில் கொத்தர்களும், கல் தச்சர்களும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு வேலை யிலே கண். வெயிலின் வெம்மையை அவர்கள் அவ்வளவாக உணரவில்லை. ஆயிரக்கணக்கான கூலி யாட்கள் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான சிற்பியர் தங்கள் கலைத்திறனைக் காட்டினர். சிவபாதசேகரன், சோழ சக்கரவர்த்தி, இராஜராஜ சோழன் நெடுநாட்களாக எண்ணி எண்ணிச் சங்கற்பம் செய்து கொண்ட காரியம் ; ஒரு பிரும்மாண்டமான ஆலயத்தைத் தஞ்சைமாநகரில் நிருமிக்க வேண்டுமென்று ஆர்வத்தோடு தொடங்கிய முயற்சி அது.

சோழ நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளும் பிற நாட்டிலிருந்து வந்த சிற்பிகளும் அந்தப் பெரிய கோயிலின் நிருமாணத்திலே ஈடுபட்டிருந்தனர். சக்கரவர்த்தி நர்மதா நதியிலிருந்து பிரும்மாண்ட மான பாணலிங்கத்தைக் கொணர்ந்து ஜலவாஸம் செய்வித்திருந்தான். தஞ்சைக்கு மூன்று மைல் தூரத்திலிருந்து அந்த ஆலய விமானத்திற்குச் சாரம் கட்டியிருந்தார்கள். அந்த இடத்துக்குச் சாரப்பள்ள மென்னும் பெயர் இப்பொழுதும் வழங்குகிறது.

கிழவியின் நிழல் நாளுக்கு நாள் ஆலயம் உருப்பெற்று வந்தது. அதைக் கண்ட இராஜராஜன் உள்ளம் பூரித்தான்.

ஆலயவிமானத்தைச் சாத்தியமானால் வானளாவ நிருமித்து விடவேண்டுமென்பது அவன் ஆவல். அவன் மனம் அப்படி ஒரு கோபுரத்தைக் கற்பனை செய்து பார்த்தது. அதன்படியே செய்வதென்பது மனிதனால் ஸாத்தியமா? மனம் கற்பனை செய்யும் வண்ணமே கை செய்துவிட்டால் அப்பால் தேவ லோகமென்று ஒன்று இருக்கவே நியாயமில்லை. அது பூலோகத்துக்குத் தாழ்ந்து பணிந்து வாழவேண்டியது தான். கடவுள் அப்படி அமைக்கவில்லை. மனிதனை நினைக்கப் பண்ணினார். நினைக்கும்படி யெல்லாம் செய்ய அவனுக்குச் சக்தி கொடுக்கவில்லை.

தன்னுடைய ஆவல் முழுவதும் நிறைவேறாவிடி னும் அதிற் சிறிதளவாவது நிறைவேற்ற முயல் வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டான் அரசன். சிற்பிகள் ஆலய விமானத்தை நிருமிக்கத் தொடங் கினர். அடிப்பீடத்திலே அவ்விமானத்தின் உயரத் திற்கு ஏற்ற பரப்பை அமைத்தார்கள். இராஜராஜ னுடைய புகழ்போல, தமிழ் நாட்டுக் கலைச் செல் வத்தின் எழுச்சி போல , கோபுரம் வானை நோக்கி நிமிரத் தொடங்கியது.

விமானத்தின் மேல் வெயிலில் கருமமே கண்ணாக வேலை செய்துவந்த சிற்பியர்கள் சோழ சக்கரவர்த்தியின் அன்புக்குப் பாத்திரரானார்கள். உணவு முதலிய சௌகரியங்களிற் சிறிதும் குறை வின்றி அவன் ஏற்பாடு செய்திருந்தான். கலைஞர் களின் பெருமையை அவன் நன்கு உணர்ந்தவன். அந்த வெயிலில் அவர்களுக்குத் தாகம் உண்டாகுமானால் யாரேனும் சிற்றாள் வந்து நீர் கொடுப்பான். அது மிகவும் இனிமையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். குளத்திலிருந்து எடுத்து வந்த நீரானால் அவ்வளவு தண்மை இராது. சிற்பிகள் அந்தத் தண்ணீர் அவ்வளவு குளிர்ச்சியாகவும், விளாமிச்சை வேரின் மணமுடையதாகவும் இருப்பதை உணர்ந்து, “இது எங்கேயிருந்து வருகிறது?” என்று விசாரிக்கத் தொடங்கினர்.

ஒரு கிழவியின் கைங்கரியம் அது. ‘மகாராஜா எவ்வளவோ அன்பாக இந்தக் கோயிலைக் கட்டுகிறார். இவர்களெல்லாம் மிகவும் சிரத்தையாக வேலை செய்கிறார்கள். நாமும் இந்தக் கைங்கரியத்திலே கலந்து கொள்ள வேண்டும்’ என்று எண்ணினாள் அவள். ‘நம்மால் இயன்றது இதுதான்’ என்று நினைத்துத் தினந்தோறும் விடியற்காலையிலே எழுந்து பெரிய மிடாக்கள் நிறையத் தண்ணீரை நிரப்பி விளா மிச்சை வேர் முதலியன போட்டு வைத்திருப்பாள். வேலைக்காரர்கள் அங்கே வந்து தாகம் தீர்த்துக் கொள்ளுவார்கள். விமான வேலையில் ஈடுபட்டவர் களுக்குச் சிற்றாட்கள் கொண்டு போய்க் கொடுப்பார்கள்.

“இவ்வளவு சிரத்தையாக நமக்குத் தாகத்திற்குத் தண்ணீர் தரும் இந்தக் கிழவி யார்?” என்று சிற்பிகள் ஆச்சரியப்பட்டார்கள். அவளை வந்து பார்த்துச் சென்றார்கள். ஒவ்வொரு நாளும் மாலையில் வேலை முடிந்தவுடன் அந்தப் பாட்டியிடம் வந்து பேசிவிட்டுச் செல்வார்கள். அவளும் மிக்க அன்போடு அவர்களுக்கு ஏதேனும் சிற்றுண்டி தருவாள்.

இவ்வாறு பாட்டியின் பால் ஈடுபட்டவர்களுள் சிற்பியர் தலைவனும் ஒருவன். விமான வேலை நிறை வேறும் தறுவாயில் இருந்தது. அப்போது அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. இந்த ஆலய நிர்மாணத்திலே உண்டாகும் புண்ணியத்தில் ஒரு பங்கு இந்தக் கிழவிக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டு மென்று அவன் எண்ணினான்.

“பாட்டீ , நாளையோடு விமான வேலை முடிந்து விடும். மேலே கும்பம் வைக்க வேண்டியது தான் பாக்கி. இவ்வளவு நாள் நீ மிகவும் சிரமப்பட்டு எங்க ளுடைய தாகத்தைத் தீர்த்து வைத்தாய். உனக்கு அதனால் எவ்வளவோ புண்ணியம். உன்னுடைய பொருளாக அந்த ஆலயத்தில் என்றென்றும் நிலைத் திருக்கும் ஒன்றை வைக்க வேண்டுமென்பது என் ஆசை. ஏதாவது கொடு” என்றான் சிற்பியர் தலைவன்.

“நான் என்ன பெரிய காரியம் செய்துவிட்டேன்!! குளத்து ஜலத்தைக் குடியென்று சொன்னேன். அவ்வளவுதானே! நீங்களெல்லாம் எவ்வளவோ புண்ணியவான்கள். இந்த உலகம் உங்களைப் பாராட் டிப் புகழும். மகாராஜாவின் கீர்த்தி உலகம் உள்ள ளவும் நிற்கும்” என்றாள் பாட்டி.

சிற்பியர் தலைவன் பாட்டியை லேசில் விடவில்லை. ஏதாவது கொடுத்துத்தான் ஆகவேண்டுமென்று வற்புறுத்தினான். “என்னிடம் தங்கம் வெள்ளியா இருக்கின்றன? இந்த வாசலிலே படியாக இருக்கிறதே, இந்தக் கல் தான் சிறிது உபயோகமாக உள்ளது. இதை வைத்துக்கொண்டு நீ என்ன செய்வாய்!” என்று அந்தக் கிழவி கூறினாள்.

“இதுவே போதும்; உன்னுடைய புண்ணியம் நிலைகொள்வதற்கு இதுவே அடையாளக் கல்லாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு அவன் ஓர் ஆளைக் கொண்டு அந்தக் கல்லைப் போர்த்து எடுத்துச் சென்றான்.


வானளாவ நிமிர்ந்து நின்றது கோபுரம். இராஜ ராஜன் வணங்காமுடி வீரன். அவன்கூடக் கழுத்து வலிக்க நிமிர்ந்து பார்த்தான். அவனுக்கு உண்டான உவகைக்கு அளவேது? தன்னுடைய வாழ்விலே முக்கியமானதொரு காரியத்தை ஸாதித்துக்கொண்ட வன் ஆனான். விமானத்தின் சிகரத்திலே கலசம் பதிக்கப்பெற்றது. ஆலயத்திலே மூர்த்திகளின் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நிகழ்ந்தது. சோழ நாட்டுக் கலைச் செல்வத்தின் கூம்பு , இராஜராஜ சோழனின் அன்புச்சிகரம், இராஜராஜேசுவரமென் னும் அத்திருக்கோயிலின் விமானம் தேவலோகத்தை எட்டிப் பிடிக்கவில்லையே யொழிய அது மனிதனுடைய செயற்கையின் உயரத்தை எட்டிப் பிடித்தது. பிருகதீசுவரருக்கு ஏற்ற பெரிய விமான மாக அது அமைந்தது.

கும்பாபிஷேகம் நடைபெற்றது. இராஜராஜ னுடைய பட்டாபிஷேகங்கூட அவ்வளவு சிறப்பாக நடைபெறவில்லை. அவன் முடிபுனைந்தது சோழ அரசின் உரிமையைப் பெற்றதற்கு மாத்திரம் அடை யாளம். அதன்பின் அவன் பெற்ற வெற்றி, அவன் உள்ளத்துள் வளர்ந்து வந்த சிவபக்தி, அவனுக்குக் கலைளின் பால் இருந்த பேரன்பு இவ்வளவுக்கும் அடையாளமாக ஓங்கிநிற்கும் அத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம், சோழசக்கரவர்த்தியின் வெற்றிப் பிரதாபத்தையும் பக்தியையும் புகழையும் உலகம் அங்கீகரிக்கும் திருவிழாவாக அமைந்தது. ஜன சமுத்திரத்தின் இடையிலே அந்தக் கோபுரம் ஒரு கப்பலின் கூம்பு போல நின்றது.

இராஜராஜன் அன்று ஆனந்தக்கடலில் மூழ்கி யிருந்தான். இறைவன் தான் எண்ணியதை நிறை வேற்றியருளினான் என்ற கர்வம் அவன் நெஞ்சி னுள்ளே ரீங்காரம் செய்தது. ‘நாம் கிருதார்த்த மடைந்தோம்’ என்ற திருப்தியோடு நில்லாமல், நாம் நம் ஆற்றலால் இதை ஸாதித்தோம்’ என்ற அகங்காரமும் அந்த அன்புள்ளத்திலே தலைகாட்டியது.

இரவிலே அவன் பள்ளிக்கட்டிலிலே படுத்தான். உறக்கம் வருமா? உள்ளம் ஆனந்த அலை மோதிக் கொந்தளித்துக்கொண்டிருந்தது. அந்தக் கொந்தளிப் பிலே சிறிது அமைதி ஏற்பட்டது. கொஞ்சம் கண் அயர்ந்தான்.


“பிரபோ! இந்த ஏழையின் ஸங்கற்பத்தை நிறைவேற்றிய திருவருளை நான் பன்னிப் பன்னிப் பாராட்டுவதையன்றி வேறு என் செய்யவல்லேன்” என்று மனமுருகக் கண்ணீர் வழிய இராஜராஜன் கூறினான்.

அவன் எதிரிலே சைவத் திருவேடம் பூண்டு பிருகதீசுவரர் நின்றார். “நீ செய்ததெல்லாம் நல்லதே. உன்னுடைய அன்பினால் நிருமிக்கப்பட்ட ஆலயத் திலே ஒரு கிழவியின் நிழலிலே நாம் சுகமாக இருக் கிறோம்.” இதுதான் அவர் பேசிய திருவார்த்தை. அப்பால் அவர் மறைந்துவிட்டார்.

அரசன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். அவன் மேனி முழுதும் மயிர்க்கூச்செறிந்தது. வேர்வை துளித்தது. ‘இறைவன் கனவில் எழுந்தருளினான். நம் ஆலயத்திற் குடி கொண்டான். இது நான் பெற்ற பாக்கியம்!’ என்று அவன் குதூகலித்தான். ஆனால்

அந்தக் குதூகலம் முழுசாக இல்லை; அதிலே ஒரு குறை இருந்தது : ‘கிழவியின் நிழலிலே இருப்பதாகப் பரமேசுவரன் வாய் மலர்ந்தானே; அது என்ன?” என்று யோசிக்கலானான். நாம் நிருமித்த ஆலயத்தில் கிழவியின் நிழல் எங்கே இருக்கிறது? கிழவியின் நிழலென்றால் என்ன? கிழவி யார்? அவள் எங்கே இருக்கிறாள்?’ என்ற கேள்விகள் அவன் உள்ளத்தே எழுந்தன. ‘அவள் யார்?’ என்று பல தடவை வினவிக்கொண்டான். யார் சொல்வார்கள்?

அரசன் கண்ட கனவு மந்திரிகளுக்குத் தெரிந்தது. அவர்கள் விசாரிக்கத் தொடங்கினார்கள். அரசனுக்கு இருந்த உத்ஸாகம் திடீரென்று தடைப்பட்டு நின்றது. “இறைவன் திருவுள்ளத்திலே இருக்கும் அந்த முதிய புண்ணியவதி யார்? யார்?’ என்று அரசன் உசாவிக் கொண்டே இருந்தான்.

சிற்பியர் தலைவனுக்குத்தான் ரகசியம் தெரியும். அரசன் பெருங் கவலைக்கு உள்ளாகியிருப்பதை உணர்ந்த அவன் அரசனை அணுகினான். விஷயத்தை வெளியிட அவன் மனம் துணியவில்லை. தான் செய்த காரியம் நன்றியறிவுக்கு அடையாளமாக இருப்பினும் அரசன் அதைப் பெருங் குற்றமாக எண்ணி விடு வானோ வென்று அவன் நடுங்கினான். பிறகு ஒரு வாறு துணிந்து கூறத் தொடங்கினான்:

“மகாராஜா, நாங்கள் விமான வேலை செய்த காலத்தில் எங்களுக்கு மிகவும் குளிர்ந்த தண்ணீர் தந்து எங்கள் தாகத்தை ஒரு கிழவி போக்கினாள். அவளுக்குக் கைம்மாறாக எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவளுடைய பொருள் ஒன்றை இந்த ஆலயத்திலே சேர்த்து விடவேண்டுமென்று எண்ணி அவளைக் கேட்டேன். அவள் தன் வீட்டு வாயிலில் இருந்த படிக்கல்லைத் தந்தாள். விமானம் நிறை வேறும் தருணத்தில் இருந்தமையின் விமானத்தின் உச்சிக்கல்லாக அதை வைத்தேன். அது அங்கே நன்றாகப் பொருந்திவிட்டது” என்று அவன் கூறி முடிப்பதற்கு முன் அரசன், “ஹா! ஹா!” என்று விம்மிதனானான். அவன் கண்ணில் நீர் துளித்தது. சிறிது நேரம் அவன் தன்னையே மறந்திருந்தான். அவனுடைய கர்வம் பங்கப்பட்டு விட்டது. அவ்வளவு முயன்று செய்தும், அவன் நிருமித்த ஆலயத்திலே இறைவன் இருந்தும், பயனை நினையாமல் அன்பு செய்த கிழவியே இறைவனுக்கு நிழல் தரும் பாக்கியத்தைப் பெற்றாள்.

“அப்படியா! உங்களுக்கு நீரும், பகவானுக்கு நிழலும் தந்த அந்தப் புண்ணியவதியை நான் தரிசிக்க வேண்டும்” என்றான் அரசன்.

கிழவி வந்தாள். “தாயே, உன் பெருமையே பெருமை. எங்கள் மனத்திலே இறைவன் இருக் கிறான். அவன் திருவுள்ளத்திலே நீ இருக்கிறாய். உன் அன்பின் நிழலிலே அவன் வசிக்கிறான். நான் நிருமித்தேனென்று இறுமாந்திருக்கும் அந்தப் பெரிய கோயிலிலே, எனது அகங்காரத்தின் வெம்மையே சூழ்ந்திருக்கிறது. அதனிடையில் உன்னுடைய தன் னலமற்ற உபகாரத்தின் அடையாளமான கல்லின் நிழலிலே, உன்னுடைய அவ்யாஜமான பிரேமைக் குடையின் கீழ் என் குலதெய்வம், சோழகுல மூர்த்தி, விசுவமே தன்னுடைய உருவமான பிருகதீசுவரன் உளமகிழ்ந்து கோயில் கொண்டிருக்கிறான். நீ வாழ்க!” மன்னன் இவ்வாறு தன் உள்ளத்தைத் திறந்துவிட்டான். யாவரும் பிரமித்துப் போயினர்.


கிழவி பழைய கிழவியாக இருக்கவில்லை. அவள் அரச குடும்பத்துள் ஒருத்தியைப்போல வாழலானாள்.

– கலைஞன் தியாகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 1941, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *