கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 15, 2023
பார்வையிட்டோர்: 1,031 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஒரு பயிர்த் தொழிலாளி. வேளாண் மகன். அப்போது ஊரிலுள்ள வயல்களில் வரகுப் பயிர் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்தது. அங்கங்கே வயல்களிலிருந்து கருநிற வரகின் தாள்களை அரிந்து களத்துக்குக் கொண்டுவந்து கொண்டிருந்தார்கள். இந்த அறுவடை வேலையில் ஈடுபட்டுக் கூலி பெறுவதற்காகப் பலர் வந்திருந்தனர். அவர்களில் அவனும் ஒருவன்! வயல்களிலிருந்து அறுத்துக் கொணர்ந்திருந்த தானிய மணிகளோடு கூடிய தாள்களை வட்டமாகப் பரப்பி ஏழெட்டு எருதுகளைப் பூட்டி மேலே மிதிக்க விட வேண்டும். எருதுகள் திரும்பத் திரும்ப மிதிக்கும்போது கதிர்களிலுள்ள தானிய மணிகள் உதிர்ந்து அடியில் தங்கிவிடும். 

சில நாழிகைகள் இப்படி எருதுகளை மிதிக்கவிட்டபின் வரகுத்தாள்களைத் தனியே உதறிப் பிரித்துவிட்டால் அடியில் உதிர்ந்திருக்கும் தானிய மணிகளைக் கூட்டித் திரட்டிக் குவிக்கலாம். குவியல் குவியலாகக் கிடைக்கப் போகும் அந்தத் தானியத்தின் சொந்தக்காரர் யாரோ? எவரோ? அவனுக்கு அதைப் பற்றி என்ன கவலை? அவர் செல்வர்? அனுபவிக்கக் கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும். 

அவன் வெறும் உழைப்பாளி! கூலிக்கு வேலை செய்பவன்! வேலை முடிந்ததும் கூலியாக அளந்து போடுகிற நாழி வரகை முந்தியை விரித்து ஏந்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான் அவன் வேலை. 

மாடுகள் மிதித்து முடித்துவிட்டன. மாடுகளை ஒதுக்கிக் கட்டிவிட்டுத் தாளை உதறினான். எல்லா வைக்கோலையும் உதறி ஒதுக்குவதற்குச் சிறிதுநேரம் பிடித்தது. வைக்கோலை உதறி ஒதுக்கியபின் தானியத்தைத் திரட்டினான். குவியல் குவியலாகத் தானிய மணிகள் ஒன்று சேர்ந்தன. 

வேலை முடிந்தது! நிலத்துச் சொந்தக்காரர் வந்தார்! அவனுக்குக் கூலியாகச் சேரவேண்டிய ‘வரகு தானியத்தை’ அளந்து போட்டார். அவன் முந்தானையை விரித்து வாங்கிக் கொண்டு கிளம்பினான். வீட்டில் அவன் மனைவி உலையை ஏற்றி வைத்துவிட்டுத் தயாராகக் காத்துக் கொண்டிருப்பாளே? அவன் விரைவாக வரகைக் கொண்டுபோய்க் கொடுத்தால் தானே குத்திப்புடைத்து உலையில் இட்டுச் சோறாக்குவதற்கு வசதியாயிருக்கும்! 

அவன் விரைவாக நடந்தான். 

“ஐயா! சாமி, எழை முகம் பாருங்க…” 

அவன் திரும்பிப் பார்த்தான். யாழும் கையுமாக ஒருபாணன். அவன் மனைவி. பசியால் வாடிப்போன குழந்தைகள். எல்லோரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஒருகணம் மேலே நடந்து செல்லத் தோன்றாமல் தயங்கி நின்றான் அவன். 

“சாப்பிட்டு எட்டு நாளாகிறது! தருமவான் போலத் தோணுறீங்க…”

“நீங்களெல்லாம் யார்?” 

“செழிப்பாக இருந்த பாணர் குடும்பமுங்க… இப்போ ஆதரிக்க ஒருவரு மில்லாமல் சோத்துக்குப் பிச்சை எடுக்கிறோம்!” 

“ஐயோ பாவம்!” 

“ஏதோ! நீங்க மனசு வச்சா இன்னிக்காவது இந்தக் குழந்தைகள் வயிறு குளிறும்..” 

அவன் ஒரு விநாடி தயங்கினான். நின்று யோசித்தான். 

“ஐயா! நீங்க ரொம்ப நல்லவங்களைப் போலத் தோன்றீங்க. உங்களுக்கு நிறைய புண்ணியம் உண்டு. ஏழை முகம் பார்த்து உதவுங்க…” 

“இந்தாரும் பாணரே! இதை முன்தானையில் வாங்கிக் கொள்ளும்.” 

பாணர் ஆவலோடு முன்தானையை விரித்தார். தனக்குக் கூலியாகக் கிடைத்த அவ்வளவு வரகையும் அந்த ஏழைப் பாணனின் முன்தானையில் உதறிவிட்டு மேலே நடந்தான் அவன். மனத்தில் பட்டதைச் செய்தான். அவன் வள்ளலில்லை, கொடையாளி இல்லை, கருணை இருந்தது. கையிலிருந்ததையும் மனத்திலிருந்த கருணையையும் சேர்த்துக் கொடுத்துவிட்டு நடந்தான். 

ஏழைக்குப் பணக்காரனின் உள்ளமும், பணக்காரனுக்கு ஏழையின் உள்ளமும் இருந்தால் என்ன செய்வது? அவன் ஏழைதான்! ஆனால் அவனுடைய உள்ளம் பணக்கார உள்ளமாக இருந்து தொலைத்ததே. அதற்கென்ன செய்யலாம்? உலகத்தில் இப்படி ஒரு முரண் இயற்கையாக விழுந்து கிடக்கிறதே? 

வெறுங்கையோடு வீட்டில் போய் நின்றான். “வரகு கொண்டு வரவில்லையா? நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று நம்பி உலையைப் போட்டு வைத்திருக்கிறேன்?” அவள் ஏமாற்றத்தோடு கேட்டாள். 

“கொண்டுதான் வந்தேன்…” 

“இப்போது எங்கே? வழியில் தவறிப் போய்க் கொட்டிவீட்டீர்களா?” 

“தரையில் கொட்டவில்லை! ஒரு ஏழையின் முந்தானையில் கொட்டி விட்டேன்..” 

“என்ன? பிச்சை போட்டு விட்டீர்களா?” 

“பிச்சை அல்ல! பசித்தவனுக்கு உதவி..” 

”நல்ல உதவி! நல்ல பசித்தவன்! இப்போது உங்களுக்கு யார் உதவப் போகிறார்கள்?” 

“உஸ்ஸ்! இரையாதே! அந்த ஓலைப் பெட்டியை எடு!”

“எதற்காக?” 

“அடுத்த வீட்டில் நாழி வரகு கடன் வாங்கிக்கொண்டு வருகிறேன்!” 

”நன்றாக இருக்கிறது நியாயம்! யாராவது கேட்டால் சிரிக்கப்போகிறார்கள். உங்களுக்கென்று அளித்த கூலியை எவனிடமோ உதறிவிட்டு இப்போது நீங்கள் கடனுக்குப் பிச்சை எடுக்கப் போக வேண்டுமாக்கும்?” 

“கொடு என்றால் கொடு! உனக்கு ஏன் இந்தக் கவலை! நான் வாங்கி வருகிறேன்.” 

அவன் ஓலைப்பெட்டியை வாங்கிக்கொண்டு கடன் கொடுப்பாரைத்தேடி நடந்தான். அவன் மனைவி எண்ணுவதைப் போலவே நாமும் அவனை ஓர் அசடனாகத்தான் எண்ணுவோம்! 

அவனை மட்டும் என்ன? தர்ம நியாயத்துக்கு அஞ்சிக் கருணை கொள்ளும் எல்லோருக்குமே இந்த உலகம் அசட்டுப் பட்டம்தான் கட்டுகிறது! ஒரு பெரிய அரசாட்சியை அப்படியே தூக்கிக் கொடுத்தால் ஆளுகின்ற அவ்வளவு பெரிய வல்லாளன்தான் அவன்! அந்த வல்லாளன் இப்போது கால்குறுணி வரகரிசிக்காக வீடு வீடாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான்! தர்மத்தின் பயனைப் பற்றி அவனுக்குத் தெரியாது! தர்மம்தான் தெரியும்! 

உண்மைதான்! நாமாவது ஒப்புக் கொள்ளலாமே, அவன் ஓர் உலகு புரக்கும் வல்லாளன்தான் என்று! 

எருது காலுறா அது இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென குப்பை 
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை தப்பலின்
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்ஊர்ச் 
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி 
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே!  (புறநானூறு-327) 

கொன்ற = அடித்த, சில்விளை = சிலவாக விளைந்த, தொடுத்த கடவர் = வினைஞர்கள், ஒற்கம் = சுற்றம், சொலிய = போக்க, சிறு புல்லாளர் = கேவலமானவர்களிடம், கடன் இரக்கம் = கடன் கேட்கும், நெடுந்தகை = ஆண்மகன்.

– புறநானூற்றுச் சிறுகதைகள், இரண்டாம் பதிப்பு, டிசம்பர் 2001, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *