கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 22,046 
 

சோழ நாட்டுக் கோநகராகிய உறையூர் அழகும் வளமும் மிக்க காவிரியாற்றின் கரை.

மேடும் பள்ளமுமாகத் தென்படுகிற வெண் மணற் பரப்பின் நடுவே பலர் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவ்வளவுபேர் முகங்களிலும் சோகம் குடி கொண்டிருந்தது. அது எத்தகைய சோகம் தெரியுமா? பிரிய முடியாததை பிரியும் போது, இழக்க முடியாததை இழக்கும் போது ஏற்படுகின்ற சோகம்.

கூட்டத்திற்கு நடுவே அரசருக்கு அரசரான கோப்பெருஞ்சோழன் எளிய உடையுடுத்து வடக்கு நோக்கி வீற்றிருந்தான். அவனைச் சுற்றி சதுரமாக ஒரு சிறிய பள்ளம் தோண்டப் பட்டிருந்தது. வெண்மையான மணல் மேல் தர்ப்பைப் புற்கள் பரப்பப் பட்டிருந்தன. எதுவும் பேசத் தோன்றாமல் சுற்றி நின்றவர்கள் கோ.சோழனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நேற்றுவரை அரச வாழ்வில் இன்புற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த ஓர் அரசன், இன்று வாழ்வை வெறுத்துச் சாகின்றவரை உண்ணா நோன்பு இருக்கத் துணிந்து விட்டான். வடக்கு நோக்கி அமர்ந்தே வாழ்க்கையை முடித்துக்கொள்ளக் கருதிவிட்டான்.

சோழனோடு உயிருக்குயிராகப் பழகிய நண்பர்கள், புலவர்கள் எல்லோரும் அவனைப் பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள்.

“பொத்தியாரே… நீர் ஓர் ஏற்பாடு செய்யும்…”

கூட்டத்திலிருந்த பொத்தியார் என்ற புலவர் முன்னால் ஓடிவந்து சோழனுக்கு அருகே வந்து நின்று கைகூப்பி வாய் புதைத்து வணக்கமாக நின்றுகொண்டு, “என்ன வேண்டும் அரசே? தங்களின் கட்டளை எதுவோ அதை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்..” என்றார்.

“என் உயிர் நண்பர் பிசிராந்தையார் யான் வடக்கே இருப்பதைக் கேள்விப்பட்டுத் தாமும் வடக்கிருந்து உயிர் நீப்பதற்காக இங்கே வருவார்.”

“அப்படி வந்தால் என்ன செய்ய வேண்டும்?”

“வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். இதோ இங்கே எனக்கு அருகில் அவரும் வடக்கிருப்பதற்கு ஓர் இடத்தை ஒழித்து வைக்க வேண்டும்.”

சோகம் நிறைந்த அந்தச் சூழ்நிலையிலும் கூட்டத்தில் சிலருக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவர்களின் சிரிப்பிற்குக் காரணம் சோழனுடைய அந்தப் பேச்சுத்தான். பொத்தியாருக்கே சிரிப்பு வந்தது. வலிய அடக்கிக் கொண்டுவிட்டார்.

ஆனால் எப்படியோ சோழன் செவிகளில் இரண்டொரு சிரிப்பொலிகள் விழுந்து விட்டன. சிரித்தவர்களை முறைத்தான்.

“தாங்கள் கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லை அரசே. பிசிராந்தையார் தாங்களுக்கு உயிர் நண்பர் என்று சொல்லுகிறீர்கள்! அனால் தாங்களும் பிசிராந்தையாரும் இன்றுவரை ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்டதுகூட இல்லை. ஒருவரையொருவர் நேரில் காணமல் பழகியிருக்கும் இந்தச் சின்ன நட்புக்காக அவர் தங்களோடு வடக்கிருக்க வருவாரா என்ன..?.”

“ஆம் அரசே… நட்பு வேறு உயிர் வேறு. மனத்தளவில் நிற்கின்ற நட்புக்காக ஏதோ ஒரு பாண்டியச் சிற்றூரில் வசிக்கும் பிசிராந்தையார் சோழ நாட்டுக்கு வந்து எப்படி தங்களுடன் வடக்கிருப்பார்? கண்ணால் காணாமலே பழகியதற்காக எவரும் உயிரைக் கொடுக்க முன் வரமாட்டார்கள்.”.

“நான் சொல்வதை அரசர் நிச்சயமாக நம்பலாம். பிசிராந்தையார் உறுதியாக வரமாட்டார்…”

சோழனைச் சுற்றியிருந்த சான்றோர்கள் எல்லோருமே பிசிராந்தையார் வரமாட்டார் என்றே உறுதியாகக் கூறினர். சோழன் அவர்கள் கூறியதை எல்லாம் மறுமொழி கூறாமல் அமைதியாகக் கேட்டபடி இருந்தான். . ஆனால் அவன் மனத்திலிருந்த நம்பிக்கை உறுதி மட்டும் குன்றவே இல்லை.

‘பிசிராந்தையார் வந்தே தீருவார்’ என்று சோழன் உள் மனத்திலிருந்து எழுந்து ஏதோ ஒரு உணர்வு அடிக்கடி வற்புறுத்திக்கொண்டே இருந்தது. உடல்கள் இறுகக் கட்டித் தழுவுகின்ற நட்பைக் காட்டிலும் கண்ணால் காணாமலே மனங்கள் தழுவுகின்ற நட்புக்கு அதிக வலிமை உண்டென்று அவன் நம்பிக்கை கொண்டிருந்தான்.

“பொத்தியாரே, பிசிராந்தையார் கண்டிப்பாக வருவார். அவர் மனம் எனக்குத் தெரியும். என் மனம் அவருக்குத் தெரியும். நீர் மட்டும் நான் சொல்கிறபடி அவருக்கு இடம் ஒழித்து வைத்தால் போதம். வேறொன்றும் செய்யவேண்டாம்.”

“கண்டிப்பாக இடம் ஒழித்து வைக்கிறேன் அரசே! மாட்டேனென்று சொல்லவில்லை. ஆனால் தங்கள் நம்பிக்கைதான் எங்கள் அனைவருக்கும் வியப்பை அளிக்கிறது.”

“வியப்போ வியப்பில்லையோ… இன்னும் சிறிது நேரம் பொறுத்துப் பாருங்கள், எல்லாம் தெரியும்.”

கோப்பெருஞ்சோழனுக்கு கடைசி காலத்தில் சித்தப் பிரமை உண்டாகியிருக்க வேண்டும். இல்லை என்றால் இப்படி ஒரு அசட்டு நம்பிக்கை ஏற்படுமா? யாரோ பிசிராந்தையாராம், அவர் பாண்டி நாட்டில் இருக்கிறாராம்! இவருக்காக அவர் உயிர் விடுவதற்கு இங்கே வருவாராம். புலவர்கள் தங்களுக்குள் முணு முணுத்துக் கொண்டனர். அவநம்பிக்கை கொண்டனர்.

எனினும் அரசன் கட்டளையை மறுக்க முடியாமல் பொத்தியார் இடம் ஒழித்து வைத்ததும், அங்கு யாரும் வெயிலில் நிற்க விரும்பவில்லை.

நாழிகைகள் கழிந்து கொண்டிருந்தன.

சோழன்தான் வடக்கிருந்து சாகப் போகிறான். அவர்களும் அவனோடு அங்கே அந்த வெயிலில் நின்றுகொண்டு வருந்த வேண்டுமா என்ன? எனவே அவர்கள், பொத்தியார் உட்பட, சோழனிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்கள்.

அப்போது கொதிக்கும் வெயிலில் சுடுகின்ற ஆற்று மணலையும் லட்சியம் செய்யாமல், யாரோ ஒருவர் எதிரே மிக வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

வெகு தொலைவு நடந்து வந்தவரைப் போன்ற அவரைத் திரும்பிச் சென்று கொண்டிருந்த புலவர்களும் பொத்தியாரும் வழியில் கண்டனர். அவர் யார்? அந்த வெயிலில் எங்கே போகின்றார்? என்பதை அவர்களால் உய்த்துனரக்கூட முடியவில்லை.

“ஐயா இங்கே காவேரிக் கரையில் கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கி உண்ணா நோன்பு இருக்கின்றானாமே? அது எந்த இடத்தில்? உங்களுக்குத் தெரியுமானால் சொல்லுங்கள். நான் இந்த ஊருக்குப் புதியவன். நீங்கள் சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.” வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்தவர் பொத்தியாரை நோக்கிக் கேட்டார்.

பொத்தியார் அந்த மனிதரை மேலும் கீழுமாக ஏற இறங்கப் பார்த்தார். பின்பு மறுமொழி உரைத்தார். “ஏன் கோப்பெருஞ்சோழனிடம் உமக்கு என்ன காரியம் ஆகவேண்டும்? நீர் எங்கிருந்து வருகிறீர்?”

“ஐயா நான் பாண்டிய நாட்டிலிருந்து வருகிறேன். என் பெயர் பிசிராந்தையார். கோப்பெருஞசோழனுக்கு உயிருக்கு உயிரான நண்பன். அவனை உடனே பார்க்க வேண்டும்.”

பொத்தியாருக்கும் உடனிருந்த புலவர்களுக்கும் பெரும் திகைப்பு ஏற்பட்டது. பொத்தியாருக்கு வந்தவரை மேலும் ஆழம் பார்க்கத் தோன்றியது.

“ஓ தாங்கள்தான் பிசிராந்தையரோ! இப்போது சோழனைக் கண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?”

“அவனோடு சேர்ந்து வடக்கிருந்து நானும் என் உயிரை விடப்போகிறேன்.”

பொத்தியாரும் மற்றவர்களும் அப்படியே பிசிராந்தையாரின் கால்களில் வீழ்ந்து வணங்கினர்.

“பிசிராந்தையாரே, நட்பு என்ற வார்த்தைக்கே நீர் ஒரு புதிய மதிப்பளித்து விட்டீர் ஐயா! உம்மால் அந்தப் பதமே ஒரு அமரகாவியமாகி விட்டது” என்றார் பொத்தியார்.

உடனே அவரை அழைத்துச்சென்று சோழனிடம் பத்திரமாகக் கொண்டு சேர்த்தார். நட்பின் கதையை விளக்கும் நிகழ்ச்சியாகக் காவிர்க் கரையில் இரண்டு உயிர்கள் வடக்கிருந்து ஒன்றாயின.

ஒன்றாகிய ஈருயிர்களும் உலகுக்கு ஓர் அரிய உண்மையை இன்றளவும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

புறநானூற்றுச் சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *