‘ஓ’ போடு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 21, 2012
பார்வையிட்டோர்: 8,903 
 

நில அதிர்வு பற்றி ஒரு கட்டுரையை நான் எழுதியபோது ஓரிடத்தில் எங்கள் ஊர் பெரிசுகள் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் படம் வரைந்த நண்பர் மாத்து பெரிசுகள் என்று எழுதுவதில் ஒருவித எள்ளல் தொனி இருப்பதாகச் சுட்டிக்காட்டவே அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அதனை வயசாளிகள் என்று மாற்றி எழுதினேன். பெரிசு என்பது ஆரம்பத்தில் மரியாதையாக ஒலித்த சொல்தான். நாளாவட்டத்தில் அர்த்தம் தேய்ந்து உருமாறி விட்டது. அதில் இப்போது எள்ளல் தொனி தெரிவதற்கான காரணம் பற்றி சற்று யோசித்தபோது ஒரு விஷயம் தோன்றியது. அது பொதுவாகவே வயோதிகர்கள் பால் இளைய தலைமுறை கொண்டிருக்கிற ஒருவிதமான அசட்டையும், எள்ளலும் கலந்த மனோபாவம். அதனை பல இடங்களில் கவனிக்க முடிகிறது.

பஸ்ஸில் ஏறுகிற வயோதிகரை டிக்கெட் எடுக்கச் சொல்லும் கண்டக்டரில் துவங்கி, அந்த வயசாளி ஸ்டாப்பிங் பற்றி விசாரிக்கையில் எரிச்சலுடன் பதில் சொல்லும் அருகாமை இளைஞன் மற்றும் ‘ஒத்திப் போப்பா பெரிசு. கண் தெரியலையா?’ என்று கூவுகிற ஆட்டோ நண்பர் என் யாவருமே வயதானவர்களை நடத்தும் விதம் மகிழ்வளிப்பதாக இல்லை.

வயதானவர்களென்பது ஓர் அம்சம். அது தவிரவும் வயதானவர்கள் என்றில்லாமல் பொதுவாகவே நமது சிறிய செய்கைகள் அடுத்தவரை எவ்விதம் பாதிக்குமென்பதைப் பலரும் பல சமயங்களில் உணர்வது இல்லை. எனது கல்லூரி நாட்களில் ஒரு காரியத்தை தொடர்ந்து நாங்கள் செய்து வந்தோம். எங்கள் கல்லூரி போடி நாயக்கனூர் டவுனிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தது. கல்லூரிக்குச் செல்லும் பிரத்தியேக டவுன் பஸ்ஸில் நாங்கள் செல்லும்போது வழியில் ஒரு அம்மாள் பணியாரம் சுட்டு விற்பார்கள். காலை ஒன்பது மணிக்கு எங்களது பஸ் அந்த அம்மாள் பணியாரம் விற்கிற இடத்தைக் கடக்கையில் “ஓய்!…பணியாரம்!” என்று மொத்தமாக கத்துவது பல மாணவர்களின் கடமையாக இருந்தது. யார் இதனைத் துவங்கி வைத்தது என்று யாருக்கும் தெரியாது. முதலாமாண்டு சேரும் மாணவன் சீனியர்களைப் பின்பற்றி கத்துவான். பிறகு இவன் சீனியராக, அடுத்து வருபவன் இவனைப் பின்பற்றிக் கத்துவான். இப்படியாக சங்கிலித் தொடர்போல பணியாரம்… பணியாரம் என்று ஆண்டுக்கணக்கில் கத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். இது பற்றி எங்களில் யாருக்கும் பெரிதாக எவ்வித அபிப்ராயம் இல்லை. எனக்கும் கூடத்தான். அது அந்த இடத்தைக் கடக்கையில் ஒரு நிமிட நேரக் கிளர்ச்சி. அவ்வளவே! எல்லோரும் கத்துவது கிடையாது. அப்பாவிகள், பயந்தவர்கள் சற்றே அமைதியானவர்கள் தவிர்த்த எண்பது சதவீதம் பேர் கத்துவார்கள்.

முதல் முறை எனக்குத் தயக்கமாக இருந்தது. பிறகு ஊரோடு ஒட்ட ஒழுகினாலும் சுபாவம் காரணமாக நான் வாய் திறந்து கத்துவது கிடையாது. ஆனால் பசங்கள் கத்துகையில் உடன் சேர்ந்து சிரித்துக் கொண்டுதானிருந்தேன். தினம் பஸ் கடக்கையில் பணியாரம் என்று பயல்கள் கத்த அந்தம்மா எழுந்து நின்று கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டும். அந்த வசவுகள் மாணவர்களை எவ்விதத்திலும் பாதித்தது கிடையாது. மாறாக அது முன்னிலும் உற்சாகம் தந்து மேலும் உரக்க அவர்கள் கத்தும்படி தூண்டியது. இது தவிர, அவ்வப்போது மண்ணை அள்ளித் தூற்றுவதும் உண்டு.

இப்படியாகப் போய்க் கொண்டிருந்து ஒரு நாள் உச்சகட்டமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்தப் பெண்மணியின் வேதனை பெருங் கோபமாகத் திரண்டு, ஒரு வாளி நிறைய சாணியைக் கரைத்து வைத்துக் கொண்டு காத்திருந்து, எங்கள் பஸ் கடக்கையில் உள்ளே அந்தம்மாள் விசிறி அடித்தது. கணிசமானவர்கள் ‘பச்சை நிறமே பச்சை நிறமே’ என்று ஆனார்கள் பையன்களின் இத்தனை நாள் விடாமுயற்சிக்கு கிட்டிய பலன். பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் அப்பாவிகள் என்பது வழக்கம் போல விதியின் விளையாட்டு.

ஆனால் பயல்கள் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. கல்லூரி பக்கத்தில் பம்ப் செட் உண்டு. அங்கே போய் உடைகளோடு குளித்து விட்டு ஈரமாக வகுப்புகளுக்குப் போய் விட்டனர். அடுத்த நாள் பஸ்ஸில் வழக்கம் போல கத்துகிற மாணவர்களை ஜன்னலோர மாணவர்கள் தடுத்ததாகவும், “தைரியமிருந்தா நீங்க ஜன்னல் கிட்ட உக்காந்து கத்துங்கடா’ என்று சொன்னதாகவும்… அதையொட்டி மாணவர்களிடையே பிளவு தோன்றியதாகவும் கேள்விப்பட்டேன்.

அது தவிர சாணத்தைக் கரைத்து ஊற்றுகையில் அந்தம்மாள் இனிமேலும் மாணவர்கள் திருந்தாவிட்டால் சாணத்தை விடவும் வீரியமான ‘மேட்டரை’ (மனிதர்களுடையது) கரைத்து ஊற்றப் போவதாகவும்… தற்போது ஊற்றியது அதற்கான முன்னோட்டம் எனவும் கூறியிருக்க மாணவர்கள் மத்தியில் அது பலத்த விளைவை ஏற்படுத்திவிட்டது. இந்தத் தாக்குதலின் விளைவாக அடுத்த சில தினங்கள் பஸ்ஸில் கூட்டம் குறைந்திருந்தது. பல மாணவர்கள் கல்லூரிக்கு நடந்தும் சைக்கிளிலும் சென்றனர். ஆனால் அதிலும் ஒரு அபாயமிருந்தது.

அந்த அம்மாவின் இடத்தைக் கடந்துதான் கல்லூரி செல்ல வேண்டும். திரும்ப வரவேண்டும். அந்தம்மா கையில் விளக்குமாற்றுடன் நின்றிருந்தது. அக்கம்பக்க நபர்கள் வேறு அந்தம்மாவிற்கு ஆதரவாக சேர்ந்து நின்று இருக்க, நிலைமை உணராது சென்ற மாணவர்களின் நிலை ‘அந்தோ பரிதாபம்’ ஆகி விட்டது… ‘பணியாரம்’ என்று உற்சாகமாக கோரஸாக ஓங்கி ஒலித்த ஒற்றை வார்த்தைக்குப் பதிலாக சரமாரி வசவுகள் மற்றும் விளக்குமாற்றை ஆட்டி எச்சரிக்கை; ஏதாவது பேசினால் உதை விழும் சாத்தியங்கள். நிமிர்ந்து கூடப் பார்க்காமல் பசங்கள் கடந்து ஓடினார்கள்.

பலரது முகங்களில் அவமான ரேகைகள். சில பயல்கள் பாதுகாப்பான தூரம் தாண்டியதும் தமக்குள் சிரித்துக் கொண்டு எதிரே வரும் மாணவர்களை, “மாப்ளே அந்தப் பக்கம் போகாதீங்கடா பணியாரம்மா சவுண்டு குடுக்குது” என எச்சரிக்க நாங்கள் வெகு தூரம் சுற்றிக் கொண்டு டவுனுக்குப் போக வேண்டியதாயிற்று. அடுத்தடுத்த நாட்களின் வகுப்புகளின்போது இதுவேதான் முக்கிய பேச்சாக இருந்தது.

நான் கூட நினைத்தேன். பணியாரம் விற்கும் அம்மாவின் நடவடிக்கை மிகச் சரியானதுதான். பயல்கள் அடங்கி விட்டார்களே என்று. ஆனால் அதிகம் போனால் பத்து நாட்கள். எல்லாம் பழையபடி ஆகி, மறுபடி பணியாரம் என்கிற கத்தல்; வழக்கம் போல அந்த அம்மாவின் திட்டுகள் என்று காலச்சக்கரம் பழையபடியே சுற்ற ஆரம்பித்து விட்டது. பயல்கள் எக்காளத்துடன் சிரித்தபடி ‘நம்மளையெல்லாம் அடக்க முடியுமாடா?’ என்றனர்.

அதன் பின்பு சில நாட்கள் கழித்து ஒரு நாள், வகுப்புக்கு ஆசிரியர் வரவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நண்பர்களும் அங்கங்கே போய்விட நான் தனியாக கல்லூரியிலிருந்து திரும்பி வந்தேன். மதிய நேரம். பணியாரக்கடை அதிகபட்சம் காலை பத்து மணிக்கே முடிந்துவிடும். ஆதலால் பயமின்றி நடந்து வந்தேன். பணியாரக் கடைக்கு சற்றே தள்ளி இருந்ததொரு கடையில் டீ சாப்பிட்டபடி நின்றிருந்தேன்.

பணியாரக்கார அம்மாள் அடுத்த கடையில் நின்று ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை சற்று தாமதமாகத்தான் கவனித்தேன். கண்களில் நீர் பொங்க பயல்களின் கத்தல்களால் தான் அனுபவிக்கும் வருத்தத்தையும், வேதனையையும் தனது எளிமையான மொழியில் சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தார்கள். கேட்கக் கேட்க என்னுள் வேதனையும், கழிவிரக்கம் ஊற்றெடுத்தன. அந்த மாதிரியானதொரு சங்கடத்தை நான் அதற்கு முன் உணர்ந்ததில்லை. எனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். குற்ற உணர்வு என்னைத் திணறடித்தது.

ஆனால் வேறு எதுவும் மாறவில்லை. பஸ்ஸின் பணியாரக் கத்தல்கள் தொடரத்தான் செய்தன. நமது சாதாரணமான நிமிஷ நேரக் கிண்டல்கள் எப்படி ஒருவரை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கியபடி இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்து கொண்டேன். அவ்வளவே, இப்போதும் எங்காவது ‘டீஸிங்’ பற்றிய செய்தி பார்க்கையில் அந்த அம்மாவின் வேதனையான முகம்தான் நினைவுக்கு வருகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *