ஹவுஸ் புல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 5,761 
 

இந்த கதையில் உங்களையும் ஒரு கதாபாத்திரமாக்கலாம் என நினைத்துள்ளேன்.

இந்த சாதாரண எழுத்தாளன் உங்களை கதாபாத்திரமாக்குவதால் சாதாரணமான கதாபாத்திரமாக, ஆக்குவேன் என நினைத்து விடாதீர்கள். பெரிய இடத்து பிள்ளைகள் நீங்கள். உங்களுக்கு வயது இருபத்தி இரண்டு அல்லது ஒன்றாக இருக்கலாம், பெண்ணாக இருந்தால் ஏராளமான அழகை வைத்து இளைஞர்களை கிறங்கடித்து கொண்டிருக்கிறீர்கள், ஆணாக இருந்தால் கட்டுமஸ்தான, “ரொமான்ஸ்” பாய் என்று இளைஞிகளால் செல்லமாக அழைக்கப்படும் இளைஞனாக இருக்கிறீர்கள். இப்படி இருக்கும் நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்று சொன்னால் வாசகர்கள் நம்ப போவதில்லை. உங்களுடைய செல்போன் கிளுகிளுக்கிறது.,எடுத்து பார்க்கிறீர்கள், உங்கள் பாய் பிரண்டு, அல்லது பாய் பிரண்டியாக இருக்கலாம். என்னவென்று காது கொடுத்து கேளுங்கள். இன்னைக்கு நைட்டு நம்ம ஹீரோ நடிச்ச படத்துக்கு போலாமா? பிளாசாவுல போட்டுருக்கான். உடனே என்ன சொல்லி இருப்பீர்கள்? இப்பவே கிளம்பிட்டேன் என்று சொல்வது கேட்கிறது. வேண்டாம் நைட்டு பத்து மணி ஷோவுக்கு போலாம்.உடனே உங்களுக்கு உற்சாகம் தொற்றி கொள்கிறது. இரவு பத்து மணிக்கு மேல் என்பது அந்த வயதில் உள்ளவர்களுக்கு அனுபவிப்பதற்கு சொல்லி தர வேண்டியதில்லை. நீங்கள் சாதாரணமானவர்களும் இல்லை. கையில் ஏராளமான பணமும், போக வர எல்லாவற்றிற்கும் விலை உயர்ந்த கார் இருக்கிறது. அப்புறம் என்ன?

மற்றொரு இடத்தில் இவர்கள் ரொமாண்டிக்காக நினைத்துக்கொண்டிருக்கும் நடிகர் மகேஷ் கொஞ்சம் சோகமாக உட்கார்ந்திருக்கிறார். வயது இருபத்தி ஐந்துக்குள் இருக்கலாம். அதற்குள் ஆறு சில்வர் ஜூப்ளி படங்கள் கொடுத்திருக்கிறார். இளம் பெண்கள், ஆண்கள், அவர் படத்துக்கு அடிமை என்று சொன்னால் கூட மிகையில்லை. உங்களையும் சேர்த்துத்தான்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை, அதன் பின் வரிசையாக மூன்று படங்கள் தோல்வி. ஆடிப்போய் விட்டார். அவ்வளவுதானா? என் சினிமா வாழ்க்கை. இந்த கூட்டம், அனைத்தும் காணாமல் போய் விடுமா? பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துள்ளார்.

நல்ல போதையுடன் உட்கார்ந்திருந்த மகேஷ் தன் காலடியில் உட்கார்ந்திருந்த முனியாண்டியிடம் மகேஷ் அருகில் முனியாண்டியா?) இந்த கேள்வி தேவையில்லை,

மகேஷ் மாதிரி ஆட்களுக்கு உள் இரகசிய வேலைகளுக்கு இந்த மாதிரி ஆட்கள்தான் தேவை.

என்னடா முனியாண்டி, படம் எப்படி போகுது? இதுவும் படுக்கறமாதிரிதான் இருக்குது,

போதையோடு இருந்தாலும் உண்மையை சொன்னான் முனியாண்டி.

ஏண்டா எனக்கு மட்டும் இப்படி சோதனை, இதுவும் ஓடலையின்னா, நான் இந்த பீல்டுல காலி ! ஓவென அழுதார் மகேஷ்.

அழாதீங்க அழாதீங்க, சமாதானப்படுத்தினான் முனியாண்டி.

இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். ஒரு குழு உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறது. அவர்களில் கொஞ்சம் விவரம் உள்ளவன் போல் காணப்பட்டவனின் செல் போன் கிணி கிணிக்கிறது. “ஹலோ” சொல்லுங்க இவனின் கேள்விக்கு பதில் அங்கிருந்து வருகிறது.

பிளாசாவில், குளிரூட்டப்பட்ட அறையில் இரவு காட்சிக்கு படம் பார்க்க நூறு பேர் வந்திருக்கலாம்,. படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் பார்ப்பதை விட வந்திருந்த ஜோடிகள்

தாங்கள் வந்த வேலையை கவனித்து கொண்டிருந்தனர். தனித்து வந்தவர்கள் மட்டும் பெருமூச்சுடன் படத்தை கவனிப்பது போல் இவர்களை கவனித்து கொண்டிருந்தனர்.

சட்டென ஒரு இருள் வந்து.அதன் பின் படம் நின்று அந்த அறைக்கு வெளிச்சம் வந்த்து. திடீரென திரை மேடை அருகே ஒருவன் தோன்றினான். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. “ஒருவரும் அசைய கூடாது. அசைந்தால் அங்கேயே சுட்டு போட்டு விடுவேன்”

குரல் கர்ண கடூரமாய் வந்தது. அதுவரை தங்களுக்குள் இரசித்து கொண்டிருந்த

ஜோடிகள் தன்னிலை வந்து நிமிர்ந்து உட்கார்ந்தன. படம் பார்க்காமல் தூக்க கலக்கத்தில் இருந்தவர்கள் கூட இவனின் சத்தத்தை கேட்டு படக்கென விழித்து உட்கார்ந்தனர். மற்றவர்களை கேட்கவே வேண்டாம். ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவனையே பார்த்து கொண்டிருந்தனர்.

என்ன நான் சொல்வது புரியவில்லையா? நீங்கள் அனைவரும் இப்பொழுது எங்களுடைய கைதிகள் சொன்னவன் நால் புறமும் பார்க்க நான்கு பக்கமிருந்தும் இவனை போலவே கையில் துப்பாக்கியுடன் நால்வர் இவனருகில் வந்தனர்.

இப்பொழுதுதான் இவர்களுக்கு நிஜம் புரிய ஆரம்பித்த்து.தாங்கள் கைதிகளாக்கப்பட்டிருக்கிறோம். இந்த கூட்ட்த்துக்குள் நீங்களும் உண்டு என்பது ஞாபகம் இருக்கிறதா? உடனே நீங்கள் எழுந்து, (இளம் பெண்ணாக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும்) அவர்களிடம் எதிர்த்து வாதாடுகிறீர்கள்.

யார் நீங்கள்? என் அப்பா யாருன்னு தெரியுமா? இந்த மாதிரி பிளாக்மெயில் பண்ணற வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம், அப்புறம் என்ன நடக்குமுன்னு தெரியுமா?

கேள்வி கேட்ட உங்களை நோக்கி ஒருவன் வருகிறான். அப்பொழுதே உங்கள் உடம்பு நடுங்க ஆரம்பிக்கிறது. வந்தவன் “ரப்பென்று ஒரு அறை விடுகிறான்” உங்களுடைய தலை கிர்ரென்று சுழல ஆரம்பிக்கிறது. கால்கள் தடுமாற ஆரம்பிக்கிறது.

ஒழுங்கு மரியாதையா போய் உட்காரு, அடுத்த முறை அடிக்க மாட்டேன், இந்த துப்பாக்கியால உயிரை எடுத்து விடுவேன். உறுமினான்.

இதை பார்த்த அனைவரும் அப்படியே திகிலடித்து போயினர். ஐயோ நாம் வசமாக மாட்டிக்கொண்டோம். ஒரு சிலர் அழுக ஆரம்பித்து விட்டனர். அதில் இளைஞர்களும் அடக்கம்.

பாதிப்பேர் வீட்டுக்கு தெரியாமல் வந்தவர்களாகவும் இருக்கலாம்.

மறு நாள் காலை அந்த தெருவே அல்லோகல்லப்பட்டு விட்டது, தெரு மட்டுமல்ல, தமிழ் நாடே ஆச்சர்யமும் வியப்பும் அடைந்து விட்டது. டெல்லியில் இருந்து மத்திய அரசு இது ஏதாவது அயல் நாட்டு சதியா என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டது.

எதிர் கட்சிகள் எல்லாம் ஆளுங்கட்சியை குறை சொல்ல ஆரம்பித்து விட்டது. முதல் மந்திரி போலீஸ் அதிகாரிகளிடம் சலித்து கொண்டார். “எப்படா ஆட்சியை கவுத்தலாமுன்னு

பாத்துகிட்டு இருக்காங்க” இந்த நேரத்துல இது என்னயா புது தொல்லை? அவரின் கேள்விக்கு போலீஸ் கொஞ்சம் தடுமாறியது. இன்னைக்குள்ள இந்த பிரச்சினையை முடிச்சிடறோம் சார்.

சமாளித்தனர். வழக்கம் போல் முக நூல் விமர்சகர்கள் தங்கள் மனம் போனபடி விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.பத்திரிக்கைகள் அதற்கும் மேலே போய் யார் கடத்தி இருப்பார்கள் என கதைகளாக போட்டு வாசகர்களுக்கு கொடுக்க ஆரம்பித்திருந்தனர்.

அன்று இரவு முழுவதும் இந்த ஐவரால் அசையாமல் உட்காரவைக்கப்பட்டிருந்த அந்த கூட்டம் வாடி வதங்கி போய் சுருண்டு விட்டனர். வெளியே பிளாசாவை சுற்றி போலீஸ்

வளைத்து கொண்டது.அந்த திரைப்பட அறையை தவிர மற்ற அறைகளில் போலீஸ் தன் வசம் வைத்துக்கொண்டது.

உள்ளே எத்தனை பேர் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்? மானேஜரிடம் படம் பார்க்க எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்ற கணக்கிற்காக, டிக்கட் வாங்கி சென்றவர்கள் கணக்கை கேட்டு வாங்கிக்கொண்டனர். அதே போல் அவர்களை பிடித்து வைத்துள்ளவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? இதையும் அலசி ஆராய ஆரம்பித்து விட்டது போலீஸ்.

மதியம் மகேஷிடமும் சில பத்திரிக்கைகள் கேள்விகளை கேட்க ஆரம்பித்து விட்டனர்.

“ஏன் சார் உங்க படம் பார்க்க வந்தவங்க இப்படி மாட்டிகிட்டாங்களே, உங்களுக்கு வருத்தமாயில்லையா?

மகேஷ் உண்மையிலேயே வருத்த்த்துடன் என் படம் பார்க்க வந்தவங்களுக்கு இப்படி பட்ட துன்பம் வந்த்துக்கு நான் ரொம்ப வருத்தப்படறேன். திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவன் நான் ஒரு முடிவு பண்ணியிருக்கேன், நானே நேர்ல போய் அவங்களை கடத்தி வச்சிருக்கறவங்க கிட்ட பேசப்போறேன்.

எப்ப போகப்போறீங்க?

இப்ப இப்பவே கிளம்பறேன், நீங்களும் எனக்கு ஒத்துழைச்சா ரொம்ப சந்தோசப்படுவேன். அங்கிருந்து அந்த பிளாசா இருக்குமிடத்துக்கு கிளம்பினார்.கூட்டமும் அவரை பின் தொடர்ந்த்து.

மகேஷ் அந்த கடத்தல் கும்பலிடம் பேச்சு வார்த்தை நடத்த போகிறார் என்னும் செய்து தீ ஜூவலையாய் தமிழ்நாடு முழுவதும் பரவி விட்டது.

போலீஸ் அவரை எச்சரித்தனர். இதனால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொன்னார்கள். மகேஷ் அதெற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை.என் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் என்னால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு அந்த கடத்தல் கூட்டத்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்த அனுமதி கேட்டார். அந்த கடத்தல் குழுவும் பலவிதமாய் யோசனை செய்து ஒரு மணி நேரம் கழித்து மகேஷை உள்ளே அழைத்தனர். போலீஸ் மகேஷை வைத்து ஏதாவது செய்ய நினைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று மிரட்டலும் விட்டனர்.

தமிழ்நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து இந்த பேச்சு வார்த்தையை உற்று நோக்குவது போல் ஒரு பிரமை ஏற்பட்டது, இந்த மகேஷுக்கும், அந்த தீவிர வாதிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தை.

மாலை ஐந்து மணி அளவில் கடத்தல்காரர்கள் ஒரு வழியாக சரணடைய ஒத்துக்கொண்டனர். அதற்கு முன்னர் பிடித்து வைத்துள்ளவர்கள் அனைவரையும் விடுவித்து விட்டனர்.

பேச்சு வார்த்தை முடிந்து கடத்தல்காரர்களுடன் வெளி வந்த மகேஷ் ஒரு உண்மையான கதாநாயகனாக அன்றைய செய்திகளுக்கு ஆகி விட்டார்.

நீங்கள் கூட அவருக்கு அவரை சுற்றி இருந்த கூட்டத்தால் நன்றி சொல்ல முடியாமல் வீட்டுக்கு பறந்து விட்டீர்கள்.

மறு நாள் விடியற்காலை மூன்று மணிக்கு மேல் நடிகர் மகேஷ் கைது செய்யப்பட்டு விட்டார். குற்றம் என்னவெனில் அவரும் அவர் கூட்டாளிகளும் நேற்று இரவு திரைப்படம் பார்க்க வந்தவர்களை பிடித்து வைத்து இருந்ததற்காக இந்த கைது என்று தெரிவிக்கப்பட்டது.

இது எப்படி போலீசுக்கு தெரிந்தது என்று கேட்கிறீர்களா? வீட்டுக்கு சென்ற முனியாண்டி அன்று இரவு பத்து மணிக்கு தன் ஆட்களுக்கு போன் மூலம் இந்த திட்டத்தை சொல்லி விட்டு,

மறு நாள் திட்டம் வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சி தாங்காமல், போதை ஏற்றிக்கொண்டு தன் மனைவியிடம் மகேசின் படம் தொடர் தோல்விகளால், மனம் பாதித்து இருந்த்தாகவும், தான்தான் இந்த திட்டத்தை போட்டு கொடுத்து அவருக்கும், அவர் படத்துக்கும் விளம்பரம்

ஆவதற்கு உதவி செய்ததாக பெருமையுடன் சொல்லி விட்டான்.

அவன் மனைவி தன் கணவன் செய்த இந்த மாபெரும் திட்டத்தை தன் தெரு பெண்களிடம் “ஒருவரிடமும் சொல்லவேண்டாம்,” என்று எல்லாரிடமும் சொல்லி விட்டாள்.

“எது எப்படியோ மகேஷ் சிறைக்கு சென்றால் என்ன? தொடர் தோல்விகளால் பாதிப்பில் இருந்த அவர் படம் இப்பொழுது “ஹவுஸ்புல்” ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *