வெறுப்பும் வெற்றியும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 3,762 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் சம்பந்தப்பட்ட வகையில் நிகழ்ந்துவரும் ஒவ்வொரு சம் பவங்களும் அவனுக்கு உலகத்திலிருந்த பாசத்தை மென்மேலும் தகர்த்தெறிப்பவையாயிருந்தன. அவனுடைய உறவினர்களில் அநேகர் வெறுஞ் சுயநலமிக்கவர்களாகவும் வஞ்சகர்களாகவும் இருப்பதை மிக இளவயதிலேயே அவன் உணர்ந்து கொண்டான் மற்றவர்கள் கஸ்டப் படுவதில் ஒரு திருப்தி ஒரு இன்பத்தைக் காணும் மனித சமூகத்தைப் பார்த்து வெறுப்புடன் நகைத்தான்.

சந்திரனுடைய இந்த விபரீத மனப்பான்மை மேலும் வளர்ந்து முதிர்வதற்கு அவன் மாமனார் ஒரு தடையாக இருந்தார். கூரிய முட்கள் நிறைந்த ரோஜாச் செடியில் மலர்ந்திருக்கும் அழகிய மென்மையான புஸ்பம் போல் சூழ்ச்சியும் வஞ்சனையும் நிறைந்த மனிதர்களுள் அவன் மாமனார் ஓர் அபூர்வ பிறவியாக விளங்கினார். இது சந்திர னுக்குப் பெரும் ஆச்சரிய மட்டுமல்லாமல் அவனுடைய கலங்கிய ஆறு தலற்ற உள்ளத்திற்கு ஒரு நிம்மதியாகவுமிருந்தது.

மிகப் பால்யத்திலேயே சந்திரன் தாய் தந்தையரை இழந்து விட்டான் இறந்தவர்கள் மற்றவர்களைப் போல சாதாரணமாக இறந்திருக்கப்படாதா. குழந்தை சந்திரனுக்கு ஓர் பேரதிச்சியை உண்டாக்கும்படியாக அவ்வருடத்தில் நேர்ந்த பெரிய வெள்ளத்தில் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்தபோது அதன்கீழ் அகப்பட்டு நசுங்கி இறந்தனர். ஈமக்கிரிகைகள் நிறைவேறுகையில் பெற்றோர்களின் உருக்குலைந்து சிதறுண்ட பிரேதங்களைப் பார்த்துச் சந்திரன் அறிவு கெட்டு விழுந்தான்.

அன்றுதொட்டே அவனுடைய ஏழை மனம் பேதலித்துவிட்டது. அந்தச் சம்பவம் நிகழ்ந்து எத்தனையோ காலமாகிவிட்ட போதிலும் சந்திரனுடைய உள்ளத்தை மட்டும் சிறிதும் விட்டகலாது நேற்று நடந்தது போல் அவனை வதைத்துக் கொண்டிருந்தது. இத்துடன் ஊரவர்களின் பழிச்சொல் ஒருபுறம், பத்து வயதுக்கிடையில் இரண்டு மலைகளை விழுங்கிய பாவிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் பல்லவி பாடுவர் ஊர்ச்சனங்கள். அவன் மனமுடைந்து ஓடிவரும் கண்ணீ ரைப் பார்ப்பதிலும் ஒரு சந்தோசமா அவர்களுக்கு?

இந்தச் சமயத்தில்தான் சந்திரனுடைய மாமனார் அவனை ரட்சித்தார். சந்திரனுடைய தாயும் இராமநாதரும் சகோதரர்கள். தாய் தந்தையற்ற சந்திரனைப் பார்த்து மனமுருகி மிகவும் வருத்தப்பட்டார். ஆகவே அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்று சொந்தப் பிள்ளைபோல் பராமரித்து வந்தார். அவருக்கு ஆண் குழந்தை ஒன்று இல்லாத குறையும் சந்திரனால் நிவர்த்தியடைந்தது.

காந்திமதியும் சந்திரனும் ஒருவர் பேரில் ஒருவர் உண்மையான அன்பு கொண்டிருப் பதைக் கண்டு இராமநாதரும் உள்ளுரச் சந்தோசப்பட்டார்.

காந்திமதியின் படிப்பு ஆங்கில எட்டாம் வகுப்புடன் முடிவடைந்தது. காரணம் அவள் மங்கைப்பருவம் எய்தியதுதான். ஏதோ உலக சம்பிரதாயத்துக்காக ஆங்கிலம் படிப்பித்தோம். இனிமேல் வீட்டிலிருந்து கொண்டு நன்றாகத் தமிழைப் படிக்கட்டுமேன் என்பது இராம நாதரின் எண்ணம். ஆனால் சந்திரன் மேலே தொடர்ந்து படித்தான். அவனை நன்றாகப் படிக்கவைத்துப் பட்டதாதரியாக்க வேண்டுமென்று இராமநாதர் விரும்பினார். இதற்கு முற்றிலும் மாறாகச் சந்திரனுடைய மனப்பான்மை இருந்தது. இந்தப் படிப்பு எப்போ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

ஆங்கிலம் அரசாங்க பாசையாயிருப்பதினாலும் பொதுவாக உலகத்தில் ஊடாடுவதற்கு அது உதவியாக இருப்பதினாலும் அதனை ஓரளவுக்குக் கற்றிருத்தல் நல்லது என்னும் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே சந்திரன் “மற்றிக்குலேஷன்” வகுப்புவரை படித்தான். அதை மேலும் தொடர்ந்து படித்துப் பட்டதாரியாகி அந்நியர் காலில் விழுந்து மன்றாடுவதை அவன் விரும்பவில்லை. இந்த வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தியது அவனுக்குச் சூன்யமாயிருந்த ஒரு பாடம்.

கணிதம் என்றால் சந்திரனுக்குப் பெருத்த தலையிடி, கீழ் வகுப்புக்களிலிருந்தே கணிதத்தில் “கழிவு” என்று பெயர் வாங்கினவன். இவ்வளவு காலமும் இந்தக் குறையினால் அவனுடைய கல்வி பாதிக்கப்படவில்லை. ஆனால்.. இப்போ இந்த வகுப்பிற்கு கணிதம் கட்டாய பாடம். அதாவது அதில் சித்தியெய்தினாலன்றி தராதரம் கிடையாது. அந்நியர்களுடைய சூழ்ச்சிக்காரர்களுடைய நிர்ப்பிரயோசனமான கல்வி முறையைக் கட்டிக் கொள் நாம் ஏன் எமது வாழ்நாளைப் பாழ்படுத்த வேண்டும்? என்று சந்திரன் சிந்தித்தான்.

இந்த மனப்போக்கை மேலும் உறுதிப்படுத்தியது சந்திரனுக்குச் சிறு வயது மகன் அவன் அந்தரங்க உள்ளத்தி ஒளிந்து கொண்டிருந்த ஒரு தியாக உணர்ச்சி. சுயநலங்க தாது தம் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச சேவைக்குப் பலியிடும் தியாக ஆ மாக்களிடம் அவனுக்கு ஒரு எல்லையில்லாத காதல் ஏற்பட்டிருந்தது. காந்தி மகாத்மா அவரை டைய கருத்தை எப்பொழுதோ கவர்ந்துகொண்டுவிட்டார். சந்திரனுடைய குல தெய்வம் காந்தி. அவருடைய உபதேசங்கள் அவனுக்குத் தேவ வாக்காயிருந்தன. அவர் சீவிய சரிக் திரம்தான் அவனுடைய வேதநூல். மகாத்மாவுக்கு மிகவும் இஷ்டமான கீதையைச் சந்திரனும் விரும்பிப் படித்தான்.

தினந்தோறும் சிறிது நூல் நூற்பதை அவன் வழக்கமாக்கிக் கொண்டான். ஜவஹர், சுபாஸ் முதலி தேசத் தொண்டர்களின் உருவப்படங்களும் விவேகானந்தர், இராமகிருஷ்ணர் முதலான தத்துவ ஞானிகளின் படங்களும் அவன் இருக்கும் அறைவை அலங்கரித்தன. இல்லற வாழ்க்கை அவன் அடியோடு வெறுத்திருந்தான் தேச சேவை செய்து சிறைக்குச் செல்லும் பாக்கியம் எப்போது தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.

சந்திரன் மற்றிக்குலேஷன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தானல்லவா? இரண்டு வருடப் படிப்பு முடிந்ததும் பரீட்சைக்குத் அனுமதிப்பவர்களின் தராதரம் அறிவதற்காக ஓர் உப பரீட்சை பள்ளிக்கூடத்தில் நடத்தினார்கள். அதில் திருப்தியில்லாதவர்களைப் பரீட்சைக்கு எழுதியிருந்தான். பள்ளிக்கூடத்திலிருந்து அறிக்கையும் வந்தது; ஆனால்….எல்லாம் வெறும் ஏமாற்றம்….! துயரம்!

இராமநாதர் கேள்விப்பட்டதும் ஆச்சரியப்பட்டார். ஏனெனில் சந்திரனுக்கிருந்த பூரண மான அறிவை அவர் ஏற்கனவே அறிந்திருந்தார். ஆனால் உண்மையான விசயத்தை ஆசிரியர்கள் அனுப்பியிருந்த அறிக்கை சொல்லிற்று. வெகுநேரம் சிந்தனையில் ஆழ்ந் திருந்தார். “ஆமாம்! கணிதம் சரியில்லாவிட்டால் பரீட்சை சரியாகாதுதான். கல்விமுறை அப்படி விசித்திரமாக அமைந்திருக்கிறது. ஆனாலும் என்ன? அப்படி ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. எனக்கும் வயதாகிவிட்டது. உத்தியோகம் பார்ப்பதும் கஷ்டமாய்த்தானி ருக்கிறது. ஆனபடியால் நான் இைைளப்பாறிக் கொண்டு அந்த இடத்தில் சந்திரனை வைத்து விட்டாலென்ன?”

இந்த யோசனைதான் அவருக்குச் சரியாகப்பட்டது. சந்திரனை அழைத்துச் சொன்னார். “தம்பி, நீ இன்னும் மேலே தொடர்ந்து படிப்பது நல்லதல்ல. இந்தக் கேடுகெட்ட கல்விமுறை உன்போன்றவர்களுக்கு வராது. நான் என்னுடைய வேலையிலிருந்து விலகி, உன்னை அதில் நியமிக்க உத்தேசித்திருக்கிறேன். உன்னுடைய இஷ்டம் எப்படி?”

சந்திரனுடைய முகம் சோர்ந்துவிட்டது. அவன் பரீட்சைக்கு அனுமதிக்கப்படாததிற்குக் கூட அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அந்தக் கல்வியினின்றும் விடுபட்டதை நினைத்தே மிகவும் சந்தோசப்பட்டான். ஆனால் இப்போ அவனுடைய மாமனார் சொன்னதைக் கேட் டதும். அவன் உள்ளம் இருளடைந்துவிட்டது. தூக்குத் தண்டனை தீர்க்கப்பட்டவன் விடு தலையடைந்து மீண்டும் அதே தண்டனையில் அகப்படுவதுபோல் சந்திரனுடைய நிலை இருந்தது.

சந்திரனுடைய மனதில் பெரிய பிரச்சினை எழுந்தது. உயிருக்கு உயிரளித்து ரட்சித்தவர் மாமனல்லவா? அவரை மீறி என்று ஒரு மனது சொல்லதையும் இன்னொரு மனது தேசத்திற்காக உழைத்து வாடிச் சிறை சென்ற தியாகிகளை அவன் மனத் திரை கொண்டு வந்து நிறுத்தியது.

உயிர்கொடுத்த தெய்வம் முதலாவது மனது திரும்பத் திரும்ப இடித்துக் கூறியது. சந்தி ரன் வேறுவழியில்லை. “ஆம், இந்த விடயத்தில் மாமாவை மீறப்படாது. செய்த மனம் குன்றி னால் ஐவினைப் பயன் அழிந்துபோகுமல்லவா? இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பொறுப் போம்” என்று தீர்மானித்து உள்ளத்திலெழுந்த குழப்பங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

சந்திரன் புதுப்பதவி ஏற்று ஒழுங்காக உத்தியோகம் பார்த்து வருவது பற்றி இராமநாதர் குடும்பத்திற்கு எல்லையற்ற சந்தோசம். இது விடயத்தில் பூரணமாக நிஷ்களங்கமாக இன்பம் அனுபவித்தது அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு ஆத்மாதான். அது வேறு யாருமல்ல, இராம நாதர் செல்வப் புதல்வி காந்திமதிதான்.

சந்திரனும் காந்திமதியும் ஒன்றாகப் படித்தவர்களல்லவா? ஒரு தாய் பிள்ளைகள் போல வெகு அந்நியோன்யமாய்த்தான் இருந்து வந்தார்கள். இது காலதேவனுக்குப் பொறுக்கவில் லையோ? அவன் ஓடிக் கொண்டிருக்கும் போதே உலக சிருஷ்டியில் எத்தனையோ மாற் றங்களை உண்டாக்கி ஒவ்வொன்றையும் தலைகீழாக்கிவிடுகிறான்.

காந்திமதி படிப்பை நிறுத்தி வீட்டில் தங்கியது முதல் அவள் அத்தானைக் காண்பது வெகு அபூர்வமாயிற்று. அவனைக் காணதிருந்த ஒவ்வொரு நிமிடமும், அவளுடைய பால்ய அன் பினின்றும் மாறுபட்ட ஒருவித உணர்ச்சி வளர்ந்துகொண்டே வந்தது. இது காலதேவனின் விளையாட்டு. காந்திமதியின் இருயத்திலிருந்த சகோதர அன்பைக் காதலாக, என்றென்றும் சிதைந்துபோகாத தூய காதலாக மாற்றிவிட்டான்.

சந்திரனுடைய ஒரு தனிப்பட்ட புறம்பான போக்கைக் கண்டு சிறிது கவரப்பட்டாள் காந்தி மதி, “அவருக்கென்ன மனக் கவலையேயா?” என்று வருந்தினாள். ஆனால் இப்போ, தன்னு டைய தகப்பாரின் சொற்படி ஒழுங்ாக நடந்து வருவதை கண்டு மனம் பூரித்தாள். சந்திரன் உத்தியோகம் ஏற்றதும் “அவர் சரியாக வந்துவிட்டார்!” என்று நினைத்துப் பரமானந்தடைந் தாள்.

மனித சுபாவமே இப்படித்தான். ஒருவனுடைய வெளித் தோற்றத்தைக் கொண்டே எல்லாவற்றையும் முடிவு கட்டிவிடுவார்கள். அவன் அந்தரங்கத்தை ஆராய்ந்து பார்ப்ப தில்லை .

காந்திமதியின் பரிசுத்தமான காதலை சந்திரன் அங்கீகரித்தானா? பரஸ்பரம் அவனும் அவளைக் காதலித்து வந்தானா? அதுதான் இல்லை. சந்திரன் பால்யத்தில் காந்திமதி பேரில் கொண்டுள்ள அதே அன்பு எள்ளளவும் மாற்றமடையாமல் அசைவற்றிருந்தது இராமநாகர் சந்திரன் பால் கொண்டுள்ள அன்பை – இன்னும் கூடுதலாக சந்திரன் காந்திமதிபேரில் வைத்திருந்தான். அதாவது ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஒன்றின்மேல் ஒன்று எவ்வித அன்பு வைத்திருக்குமோ அதேபோல். ஆம்! சகோதரபாசம்தான். அவனுடைய மாசற்ற இருதயத்தில் காதலுக்கு இடமில்லை . ராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் அவன் உள்ளத்தில் குடியிருக்கும்போது காதல் நோய் அவனை என்ன செய்யும்? கருங்கற் பாதையில் விழுந்து சிதறும் மழை நீர்போல் சந்திரனுடைய இருதயத்திற்பட்ட காதலும் சிதறவேண்டியது தான்.

காந்திமதி தன்பேரில் தணியாத காதல் கொண்டுள்ளாளென்பதைச் சந்திரன் அறி வானா? நன்றாக அறிவான். ஆனால் அதை அவன் ஏற்க முடியாதது பற்றி மிகவும் வருந் தினான். அதை அவளிடம் துணிந்து கூறவும் அவனுக்குத் தைரியமில்லை . ஏனெனில் அவ ளுடைய மனம் அதனைத் தாங்காது வெடித்துவிடும் என்பதை அவன் நன்கு அறிவான். இல் லற வாழ்க்கையிலேற்பட்ட வெறுப்பு எவ்வளவு தூரந்தான் அவனுடைய தேகத்தில் செறிந்திருக்கிறது.

“மனக்குரங்கு” என்று வெகு அழகாக ஒருவர் சொல்லிவைத்தார். அரைக் கணமும் சும்மாயிராது. அநாவசியமான விசயங்களிலெல்லாம் தலையிட்டு வீணாக மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கும். எதிர்காலத்தைப் பற்றி வெறுங்கனவு கண்டு பிரமாண்டமான கோட்டைகளையெல்லாம் கட்டி எழுப்பும். இது இயற்கையாக மனித சமுதாயததில் அமைந்த ஒரு குணம். இதற்குப் புறநடைகள் அபூர்வம்.

அப்படியானால் இராமநாதர் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமோ?

சந்திரனுடைய வருங்கால வாழ்க்கையை மனத்தில் சிந்திக்க ஆரம்பித்தார். “சந்திர னுக்கும் வயசாகிவிட்டது. அவனுடைய நடைமுறைகள் ஒன்றிலுஞ் சேராது ஒரு தனி ரகமாயி ருக்கின்றன. கலியாணஞ் செய்து வைத்துவிட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விடும். இதில் என்ன கஷ்டம் ஏற்படப் போகிறது. பெண் முதற்கொண்டு வீட்டிலேயே இருக்கும் பொழுது? ஆமாம், இதில் வீணாகக் காலதாமதஞ் செய்வது நல்லதல்ல” என்று முடிவடைந்தது அவரு டைய ஆலோசனை.

தன்னுடைய மகள் சந்திரன் பேரில் வைத்துள்ள காதலின் மதிப்பை அளவிட்டு அறிந் திருந்தபடியினாலே இவ்வளவு சுலபமாக எல்லாவற்றையும் தீர்மானித்துவிட்டார். சந்திரனு டைய அபிப்பிராயம் எவ்விதம் இருக்குமோ என்று சற்றும் நினைத்தாரில்லை. பாவம் அவரும் அவருடைய மகளுமாகச் சேர்ந்து கட்டிய மனக்கோட்டையை சந்திரன் பொலபொலவென்று இடித்துத் தகர்க்கப் போகிறானென்று அவர்கள் கனவிலும் கருதவில்லையே.

மனிதனுக்கு என்றும் ஒரே நிலையாக இன்பதுன்பங்கள் நிற்பதில்லை. அவனைச் சுற்றி எந்நேரமும் சுகதுக்கங்கள் சுழன்று கொண்டேயிருக்கின்றன. சந்திரன் தனது வாழ்க்கையின் அனுபவத்திலேயே இதனை நன்று அறிந்திருந்தான்.

அரசாங்க சேவையில் அமர்ந்தது முதல் சந்திரனுக்கு மனச்சாந்தி என்பதே கிடையாது. மனத்தை எவ்வளவோ முயன்றும் அடக்கியும் அது வீறிட்டுக் கொண்டு நின்றது. தேசத் தொண்டர்களின் அழைப்பைக் கேட்டு அது துடிதுடித்தது. சந்திரன் பகீரதப் பிரயத்தனப்பட்டே மாமனாரை மீறாது, அவருக்குத் துரோகஞ் செய்யாது மனத்தை அடக்கி ஆள முடிந்தது.

இந்தச் சமயத்தில்தான் அவன் செவிகளில் நாராசம் உருக்கி வாக்கப்பட்டது. அவனு டைய இருதயம் பழுக்கச் காய்ச்சிய இரும்பினால் சுடப்பட்டது. ஆமாம், அப்படிப்பட்ட வேதனை யைக் கொடுக்கும் செய்தி ஒன்று தான் சந்திரனுக்கு அப்போது எட்டியிருந்தது. இராமநாதர் ஒழுங்குபடுத்தி வரும் விவகாத் திட்டந்தான் அது.

சிறு சிறு வெடிப்புகளுடன் காணப்பட்டது எனது ஹிருதயம். இப்போது முற்றாக உடைந்துவிட்டது. அவன் உள்ளத்தில் பெரும் புயல், பேரிடி, சூறாவழி எல்லாம் தோன்றின. சிந்தனைச் சக்கரம் எத்தனையோ படங்களை அவன் மனத்திரையில் காட்டிக் கொண்டி ருந்தது. ஒன்றிலும் மனம் செல்லவில்லை. அவன் திருஷ்டியில் எதிர்ப்படும் ஒவ்வொரு பொருளிலும் வெறுப்புத் தட்டியது.

அன்றிரவு அறையை நன்றாகப் பூட்டிவிட்டு உள்ளே படுத்துக் கொண்டான். அவனுடைய கண்கள் திருதிருவென்று விழித்தபடியே இருந்தன. ஆனால் அவனது மனம் எங்கேயோ சிந்தனை உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.

மறுநாள் விடிய நித்திரையினின்றும் எழும்பி இராமநாதர் வெளியே வந்தார். சந்திர னுடைய அறைக் கதவு திறந்திருந்தது. உள்ளே ஒருவருங் காணப்படவில்லை . இப்படி நடப்பது மிகவும் அசாதாரணமாகையால் சிறிது சந்தேகத்துடன் உள்ளே நுழைத்தார். அங்கு காணப்படாத சில சாமான்கள் அவருடைய சந்கேத்தை இன்னும் ஊர்ஜிதப்படுத்தியது. நெஞ்சு “படபட வென்று வெகு வேகமாக அடித்தது. மேசை மீது விரிக்கப்பட்டிருந்த ஒரு நீண்ட கடதாசியைக் கையிலெடுத்தார். அதில் எழுதியிருந்ததை முற்றாக வாசிக்க அவரால் முடியவில்லை . அவருடைய பார்வையிலும் வேகமாக, அதில் எழுதியிருப்பதை அறிய மனம் துடித்தது. கடிதத்தை மேலும் கீழுமாகப் பார்த்தார். ஒன்றும் விளங்கவில்லை.

இவ்வளவு பதட்டத்தையும் அடக்கிக் கொண்டு, நிதானமாக அவசரப்படாமல் அக்கடி தத்தை வாசித்து முடிப்பதற்கு எவ்வளவோ நேரம் சென்றது. கடிதம் படித்து முடிந்ததும் அவர் முகத்தில் கூத்தாடிய ஏமாற்றமும், துக்கமும் சந்திரன் இராமநாதருக்கு ஏதோ நீண்டவால் நீட்டிவிட்டான் என்று சொல்லின.

சந்திரன் எழுதிவைத்த கடிதம் பின்வருமாறு ஓடியது. அன்பிற் சிறந்த தேவரீர் மாமாவும் அத்தையும் அறிவது.

தாங்கள்தான் எனக்குத் தந்தையும் தாயும். ஆதரவற்று அலைந்து திரிந்தவனை இரட் சித்து தாங்கள் உயிர் கொடுத்தீர்கள். அவன் இப்போது உங்களுக்குப் பெருந்துரோகஞ் செய் திருக்கிறான். அந்த கெட்டநாயை தயவுசெய்து தாங்கள் மன்னிப்பீர்களா, தந்தையை எனது செய்நன்றி கொன்ற உள்ளத்தை தேசத்தொண்டர்களும் தத்துவ ஞானிகளும் பங்கு போட்டுவிட்டனர். அவர்களிடமிருந்து தப்புவதற்கு எனக்குச் சக்தியில்லை.

இல்லற வாழ்க்கையை நான் வெறுக்கிறேன். அந்த மாயவலையில் அகப்பட்டு விடாதே” என்று குருவும் சிஷ்ணாவும் என்னைத் தடை செய்கின்றனர். சேவை செய்வதற்கே இந்த உடம்பின் உற்பத்தி என்று காந்தி மகாத்மாவும் தியாகிகளும் கூவி அழைக்கின்றன இந்த நிலைமையில் தாங்கள் ஒழுங்கு செய்துவரும் விசயம் ஒன்று என்னைப் பிடித்து வெளியே துரத்திவிட்டது நான் என்ன செய்வேன்?

செல்வி காந்திமதியை நான் ஏமாற்றிவிட்டேன். அதை நினைக்க என்னை மன்னிக்க மாட்டாளா? நான் கொண்டுள்ள அன்புக்கும் ஒருகாலமும் சிதைவு கிடையாது.

ஒருகாலத்தில் தங்களிடம் நான் சுத்தமான உள்ளத்துடன் வருவேன். அபிலாசைகள் யாவும் பூர்த்தியாகிதோடு இருப்பனேயாகில் நிச்சயமாகத் ஒருமுறை தரிசிப்பேன். இதை அருள் புரியட்டும்.

இங்ஙனம் தங்கள் நன்றிகெட்ட ஆனால் அன்புள்ள சந்திரன். மனிதனைச் சுற்றி சுகதுக்கங்கள் சுழன்றுகொண்டேயிருக்கின்றவென்று கூறினேனல் லவா? இப்போது இராமநாதர் குடும்பத்திலேயே அதைப் பிரத்தியட்சமாய்ப் பார்க்க முடியாது.

“இன்னுஞ் சொற்ப நாட்களுக்குள் திருமண வைபவம் ஒன்றைப் பார்க்கப் போகிறோம்” என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தார்கள் இராமநாதரும் மனைவியும். காந்திமதியோ ஆனந்த பரவசமாகி இன்பத்தின் சிகரத்தையே அடைந்து அடுத்தாற் போல் அவர்களை வந்து சூழ்ந்த துயர் இருள். சிரிப்பும், சந்தோசமும் நர்த்தனம் புரிந்த அவர்கள் முகங்கள் சோபையற் றுச் சுடுகாடாகிவிட்டது. காந்திமதி முன்னர் எவ்வளவுக்கெவ்வளவு ஆனந்தடைந்தாளோ அவ்வளவுக்கவ்வளவு இப்போது கவலைப்பட்டாள்.

அவன் எந்நேரமும் கண்ணீருங் கம்பலையுமாய் நிற்பதைக் காணக்காண அவளு டைய பெற்றோர்களுக்கு அதிக வேதனையாயிருந்தது.

காந்திமதிக்கு சந்திரனுடைய பிரிவு ஓர் பேரதிர்ச்சியாகவே இருந்தது. தூசு பட்ட கண்கள் போல அவளது மனமும் சுழன்று கலங்கியது. அத்தான் எழுதிய கடிதத்தைப் பார்த்துப் பார்த்து அழுதாள். “ஆமாம்! இல்லறத்தை நானும் வெறுக்கிறேன். அது சூழ்ச்சி வலை” என்று வாய்விட்டுக் குழறினாள்.

இராமநாதர் அன்றைய தினசரியைப் பிரித்தார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டே வந்தார். நாலாம் பக்கத்தைப் புரட்டியதும் அவருடைய பார்வையும் கைகளும் அப் பால் செல்ல மறுத்துவிட்டன. அப்படியே பிரமித்துப்போய் அந்தப் பக்கத்தை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எடுத்துச் சேர்த்துப் படிக்கப் பழகிக் கொண்டிருக்கும் சிறுபிள்ளை கூட அந்நேரத்தில் எத்தனையோ தடவை திருப்பித் திருப்பிப் படித்திருக்கும். ஆனால் இராமநாதர் மட்டும் படித்து முடியவில்லை.

அவருடைய மகள் காந்திமதி அவரைப் போசனத்திற்கு அழைக்க வந்தாள். அப்பா பத்திரிகை படிப்பதில் லயித்திருப்பதைக் கண்டதும் பதில் லயித்திருப்பதைக் கண்டதும் “என்ன விசேஷம் இன்றைய பத்திரிகையில்?” என்று கேட்டாள்.

அப்பொழுதுதான் இராமநாதருக்கு சுய உணர்வு வந்தது. திடுக்குற்று எழுந்தார். “உன் னுடைய அத்தானிருக்கிறானேடி – அடேயப்பா பொல்லாத பேர்வழியாயிருக்கிறானே. இதோ பார்த்தாயா அவன் “போட்டோவை சென்னையில் சத்தியமாக்கிரக இயக்கத்தில் சேர்ந்து அரசினருக்கெதிராகக் கடுமையான ஒரு பிரசங்கத்தைப் பத்திரிகைகள் எல்லாம் பிரமாதமாகப் புகழ்ந்திருக்கின்றவாம். ஆறுமாதம் ஜெயிலுக்கு போய்ச் சேர்ந்துவிட்டான் கடைசியாக” என்று துள்ளிக் குதித்தார் இராமநாதர்.

சந்திரனுடைய “போட்டோவை” பத்திரிகைகளில் பார்த்ததும் அவனை நேரிலேயே கண்டுவிட்டவள் போல் பரவசரமடைந்தாள் காந்திமதி. “அப்பனே! புருஷர்களையே நம்பக் கூடாது. பொல்லாத சுயநலமிகள். தாங்கள் மட்டும் தேசத்திற்குழைத்து “தியாகி” என்று புகழ் பெறலாமாம். ஆண்களுக்குள்ள உரிமை ஏன் எங்களுக்கு – பெண்களுக்கு – மட்டும் கிடையாது? பெண் சமூகம் என்ன அடிமையின் சாகரமா? இருக்கட்டும்; இதற்கு நான் பழிக்குப் பழி வாங்காமல் விடுவேனோ?”

இராமநாதருக்குப் பெரிய ஆச்சரியமாகவிருந்தது. “முந்தநாள் பிறந்த பிள்ளைகளுக்கு இருக்கும் யோசனையும் உயர்ந்த நோக்கங்களும், எங்களுக்கு – கிழக்கட்டைப் பிணங்களா கிய எங்களுக்கு – இன்னும் உதயமாக வில்லையே! சந்திரன் என்றால் பெரிய தேசத்தொண் டாகவும், வேதாந்தியாகவும் வெளிக்கிளம்பிவிட்டான். இங்கே காந்திமதி என்றாலோ, தான் உள்ளம்புடன் நேசித்த ஒருவனையேயன்றி வேறெவனையும் விவாகஞ் செய்வதில்லை யென்று பிடிவாதஞ் செய்கிறாள். சந்திரனைப் போலவே, தானும் பிரமசாரி விரதம் அனுஷ் டித்து பொதுஜன சேவை செய்யப்போகிறாளாம். இவர்களுக்கென்ன இந்த இளம் வயதிலிவ் வளவு விபரீத புத்தி. காலத்தின் கோலமா?” என்று ஓயாது சிந்தித்துக் கொண்டேயிருந்தார். இறுதியில் அவரையுமவருடைய மகளுக்கும் மருமகனுக்கும் தோன்றிய பயித்தியமே பிடித்து விட்டது. ஆம்! பெற்றதாயும் பிறந்த நன்னாடும் நற்றவவானிலும் நனி சிறந்தனவல்லவா?” என்று திரும்பத் திரும்ப உச்சரித்தது. யார் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் கால தேவன் மட்டும் தனது கடமையில் அற்பமும் பிசருவது கிடையாது. அவனும், அவனது நிதான மும் புரவிகளும் எந்நேரமும் வாயுவேகமாகப் பறந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றிற் கிடையில் உலகத்தில்தான் எத்தனை மாற்றங்கள்! எவ்வளவு புதுமைகள்.

ஐந்து வருசங்களுக்கு முன்னே திறம்பட்டிக் காடாயிருந்த திருநெல்வேலிக் கிராமம் இப்போது ஒரு புது எழிலுடன் விளங்குகிறது. அந்தக் கிராமத்துக்கும் மோட்டார் ரதங்களுக்கும் வெகுகாலமாக இருந்து வந்துபெரும்பகை இப்போது ஓய்ந்து சமாதானமாகிவிட்டன. கைத்தொழிலும், கமத்தொழிலும் அவ்வூர்ச சனங்களுக்கு உணவு கொடுக்கும் சாதங்கள். பிர மாண்டமான தொழிற்சாலைகளும் பள்ளிக்கூடங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் பச்சைப் பசேலென்று பரந்து காணப்படும் வயல் வெளிகளும் புத்துணர்ச்சியை நம் மனத்தில் எழுப்பு கின்றன. பனை விருட்சங்களுக்கும் இப்போ நல்ல காலம் பிறந்திருக்கிறதோ? பனைப் பொருட்கள் யாவையும் பதப்படுத்தி நாகரிக பண்டங்களாக்கி, அபிவிருத்தி செய்வதற்குப் புறம்பான தொழிற்சாலை ஒரு பக்கத்தில், பருத்திச்செடி பயிரிட்டு பஞ்செடுத்து நூல் நூற்று நெசவு தொழில் செய்யும் சாலையொன்று வேறொரு பக்கத்தில்.

இவையெல்லாவற்றையும் விட ஒரு அமைதியான, அழகான இடத்தில் அமைந்திருக் கிறது சிறிய ஆச்சிரமம் ஒன்று. ஒவ்வொருநாள் மாலையிலும் அந்த ஆச்சிரமத்திலிருக்கும் மகான் ஒருவர் பிரசங்கஞ் செய்வார். தேசமுன்னேற்றத்தையும் ஆன்மீக முன்னேற்றக்கை யும் தான் முக்கியமாகப் போதிப்பவையாயிருக்கும் அவர் பிரசங்கங்கள். அவற்றைக் கேட்பதற்குத் திரள்திரளாக ஜனங்கள் கூடுவார்கள். இதில் ஒரு விசேசம், அவருடைய போதனைகளைச் சனங்கள் கேட்பதுடன் மட்டும் நிற்கமாட்டார்கள். நடைமுறையிலம் கையாண்டுதான் வருகிறார்கள். அல்லாவிடில் ஐந்து வருடங்களுக்கு முன் ஒப்பற்ற பட்டிக் காடாயிருந்த திருநெல்வேலி இப்போது இவ்வளவு தூரம் முன்னேற்றமடைந்து மற்றைய கிராமங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகயிருக்க முடியுமா?

சுயநலமின்றி பொதுநல ஊழியம் செய்துவரும் அந்த யோகீஸ்வரருடைய சகல காரியங்களையும் கண்ணுங் கருத்துமாக நின்று அவருக்குத் தொண்டு செய்து வருவது ஒரு இளம் பெண். அந்தப் பெண்ணைப் பற்றிய உண்மையான தகவல் ஒன்றும் எவருக்குமே தெரியாது. அவள் அவருடைய சிஷ்யை என்று மட்டுமே தெரியும்.

– ஈழகேசரி – 23.03.1941, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *