விபூதிக்காப்பு – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 6,607 
 

சிவன் கோவில் ஸ்பீக்கரில் ‘திருநீற்றுப்பதிக’ சொற்பொழிவு ஒலித்துக் கொண்டிருந்தது.

“திருநீற்றுப் பதிகம் என்பது கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும். இதனால் மன்னர் நோய் நீங்கி நலம் பெற்றார்” என்றார் ஆன்மீகப் பேச்சாளர்.

“அப்ப… ஐந்து வருஷம் டாக்டருக்குப் படிக்கிறது வேஸ்டா” நாத்திகப் பேச்சாளர் நடேசன் நண்பரிடம் நக்கலாகப் பேசிச் சிரித்தார்.

“மீட்டிங் துவக்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. இங்கே இருந்து டவுனுக்கு 15 நிமிஷத்துல போயிடலாம். இன்னும் என்னென்ன கப்ஸா விடறாங்கன்னு அரைமணிநேரம் கேட்டால்

பகுத்தறிவுப் கூட்டத்தில் பேச சப்ஜெக்ட் கிடைக்குமே” என்றார் நடேசன்.

கோவிலுக்கு அருகே இருந்த நந்தவனத்தில் சொற்பொழிவை காதில் வாங்கியபடி உலாத்திக்கொண்டே செழிப்பாய் அடர்ந்து வளர்ந்து பூத்துக் குலுங்கிய மல்லிகை, முல்லை, மகிழம்பூ, பாரிஜாதம், புன்னை, சரக்கொன்றை, இருவாட்சி, இட்லிப்பூ, பொன்னரளி, நந்தியாவட்டை, செம்பருத்தி, பன்னீர் மரம், வில்வ மரம்.. என ஒவ்வொன்றையும் ரசிப்பதும் ஆன்மீகச் சொற்பொழிவாளரின் பேச்சை நக்கல் செய்வதுமாய் இருந்தார் நடேசன்.

நடேசனின் எள்ளலைக் கேட்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் நண்பர்.

“ஏதோ முதுகுல ஊருது பாருங்க..” பரபரப்பாக சட்டையை கழற்றினார் நடேசன்.

“முதுகு பூரா தடிச்சிருக்கே..” பதற்றத்துடன் சட்டையை வாங்கி நன்கு உதறினார் நண்பர்.

முதுகிலிருந்து தோள்பட்டை, உள்ளங்கை, புறங்கை,நெஞ்சு, வயிறு, இடுப்பு, தொடை, முகம்…… என உடல் முழுவதும் நமைச்சல் தீ போல் பரவியது.

துடித்தார் நடேசன்.

கோவில் தர்மகர்த்தா வீட்டு முற்றத்து ஓரம் நடேசன் கையில் யாரோ மிளகும் உப்பும் கொடுத்து “வாயிலே போட்டுக்கோங்க ” என்றார்கள்.

கண்விழித்தபோது விபூதிக் காப்பிட்ட சிலையாய் இருந்தார் நடேசன். உடம்பிலிருந்த தடிப்பும் நெருப்பாய் எரிந்த எரிச்சலும் முழுமையாக அடங்கி இருந்ததை நடேசனால் உணர முடிந்தது.

“உடம்பு சரியில்லைன்னு சொல்லி மீட்டிங்கை கேன்ஸல் பண்ணிட்டேன்” என்றார் நண்பர்.

திருநீற்றுப் பதிகச் சொற்பொழிவு நடேசன் காதில் இப்போது பலமாய் விழுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *