கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 2,234 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் பார்வை தேயிலைத் தொழிற்சாலையில் லயித்தது.

கிட்டத்தட்ட ஆறு தசாப்த மலையக வரலாற்றை உள்ளடக்கிய ஒரு பழைய கட்டிடம் அது. காலத்திற்குக் காலம் திருத்தங்கள் செய்து வர்ணம் பூசுவதால் அது என்றும் புத்தம் புதியதாகவே காட்சியளிக்கிறது.

மிக நீண்ட நீள்சதுர வடிவமைப்பில் மூன்று மாடி. சுற்றி வளைத்து வரிசையாகச் சாளரங்கள். அனைத்திற்கும் தரமான வெள்ளைப் பூச்சு. தொழிற்சாலை மட்டும் சாம்பல் நிறம். சூழலெங்கும் பச்சைப் போர்வை.

எழில் கொஞ்சும் இந்த நிறப் பொருத்தத்தை ரசிக்க இந்தத் தொழிற் சாலையைச் செதுக்கிய சிற்பி “மகராசன்” வெள்ளைக்காரத்துரை இன்று நாட்டில் இல்லை.

நீண்ட இடைவெளிக்குப் பின் திடீரென்று அந்தப் புதுமை நிகழ்ந்து விட்டது.

நடு இரவில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் அனைத்தும் பளிச்சென்று எரிந்து ஒளி வெள்ளத்தை அள்ளி இறைத்தது.

நானும் வெளியேறினேன் –

தேயிலை அரைக்கும் இயந்திரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் இயங்கி பெருந்தோட்டத்தையே உலுப்பி விட்டிருந்தன. கொழுந்து அதிகமாக வந்த நாட்களிலும் கூட இப்படி இரைச்சலுடன் தொழிற்பட்ட தில்லை! மாலை ஐந்து மணிக்குள் மூன்று இயந்திரங்கள் மட்டுமே செயற்படவேண்டுமென்பது நிர்வாகம் வகுத்த தொழிற்சாலை விதிகளில் ஒன்று.

இவ்வாறெல்லாம் சட்டதிட்டங்கள் இருக்கத்தக்கதாக இது எப்படி நிகழ்ந்தது…?

இயக்குவித்த சக்தி எது…?

இந்த முறையும் ரோதைமுனியா…?

ரோதைமுனிக்கு ஒரு குறையும் வைக்கவில்லையே!

அதுதான் தொழிலாளர்கள் உரிய முறையில் பூஜை செய்து வருகிறார்களே!

தோட்டத் தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் ஊற்றித் துணி செருகிய குப்பி விளக்குகள், தீப்பந்தங்கள், லாந்தர் விளக்குகள், டோர்ச் லைட்டுகளுடன் தோட்டமெங்கும் சிதறித் திரிந்தனர். தோட்டம் அல்லோல கல்லோலப்பட்டது.

கால்மணி நேரமாக நடந்து கொண்டிருந்த இந்தத் திடீர் அனர்த்தத்தில் அனைவரது பார்வையும் தோட்டத்திற்கு மேற்கே, மானாக்காட்டு உச்சியில், தரித்து நின்றது, கண் இமைக்காமல்!

சுமையுடன் தீப்பந்தங்கள் ஏந்திச் செல்லும் இரு உருவங்களைக் கண்டதும்தான், திடீரென்று அவர்களது நம்பிக்கை உயிர்பெற்றது.

“அட கொள்ளி பிசாசுடா…”

“அப்ப இது நிச்சயமாக ரோதைமுனி வேலயாத்தான்…”

ரோதைமுனிக்கும் மானாக்காட்டு தீப்பந்தங்களுக்கும் என்ன தொடர்பு?

“போன முறை முனிவந்து இஸ்ட்டோரைக் கலக்கிய போது, மானாக்காட்டில இப்படித் தீப்பந்தங்கள் இரண்டு தலையில் பெருஞ் சுமையுடன் போனதை மறந்துட்டீங்களாப்பா…?”

ஒரு மூத்த நம்பிக்கையாளர் ஞாபகப்படுத்தினார்.

“ஐயா சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க. ரோதை முனிக்கு ஒவ்வோரு வருசமும் பூஜை வைத்து வழிபடுவது தோட்ட வட்டாரத்தில் பிரசித்தி பெற்றது… அத ஒவ்வொரு வருசமும் தவறாம செய்றோம். அப்படியிருக்க இது ரோதை முனியின் வேலைதான்னு எப்படி நிச்சயமாகச் சொல்றீங்க…?”

மேல் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் கேள்வி எழுப்பினான்.

மண்ணெண்ணெய்த் தீப்பந்த போத்தல்கள், விளக்குகளுடன் உற்சாகமாகக் கிளம்பியிருந்த பயந்தாங்கொள்ளி கும்பல்கள் வந்த வழியே திரும்பி விரைந்தனர்.

இனி லயங்களுக்குள் பம்மிக் கொண்டால் அப்புறம் அவர்கள் வெளியே தலைகாட்ட மாட்டார்கள்.

மானாக்காடு தீப்பந்தங்கள் மறைந்து சில நிமிடங் களில் தொழிற்சாலை மின் விளக்குகளும் அணைந்தன. மின் குளிப்பு முற்றுப் பெற்றது.

இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்த இயந்திரங்களும் “டப்”பென்று நின்றுவிட்டன. எங்கும் இயல்பு நிலை.

அது மழைக்காலம். மூன்று மணித்தியால இடை வெளிக்குப் பின் மீண்டும் வானம் அழுது கொட்டத் தொடங்கியது.

லைட் குடை எதையுமே எடுக்காமல் அவசரத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்து மலை உயரத்தில் அமைந்திருந்த என் “குவார்ட்டசின்” முன் கதவைத் திறந்து உள்ளே செல்வதற்குள் தொப்புத் தொப்பென்று நனைந்து விட்டேன்.

வெளியில் காற்றும் மழையும் கடும் போட்டி. மழைச் சாரல். மின்சாரம் முற்றாகத் தடைபட்டு ஒரே கும்மிருட்டை பிரசவித்திருந்தது.

யன்னலினூடாக எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

ஒருவாறு காற்று மழையை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றது.

உடை மாற்றிக் கொண்டு வந்து, கதவை இலேசாகத் திறந்து தொழிற் சாலையை எட்டிப் பார்த்தேன்.

“பெக்டரி செக்யூரிட்டி ஒபிசர்” பொங்சோ தனது கடமைகளில் மும்முரமாகி யிருக்கிறார் என்பதை பறை சாற்றுவதற்காகத் தொழிற்சாலையின் முகப்பில் மின் மினி போல் ஒரு லாந்தர் வெளிச்சம் மங்கலாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அது என்ன அது? உற்றுப் பார்க்கிறேன். மற்றுமொரு ஒளிக்கீற்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.

புரிந்துவிட்டது. சந்தேகமில்லை. அது பொங்சோவிடமிருக்கும் ஆறுச்சில்லு டோர்ச்லைட்டுத்தான்.

என்ன இருந்தாலும் பொங்சோவின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும்.

அவன் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்கும் மூன்றாவது சுற்று அது. ஆழ்ந்த அவதானப் பரிசீலனை.

படுக்கையில் சாய்ந்தால் ரோதைமுனிக் குழப்பத்தில் பயந்துபோய் நித்திராதேவியும் வரமறுக்கிறாள். அயர்ந்து தூங்க முடியவில்லை.

இந்நேரம் லயங்களில் இயந்திரங்களின் பென்னாம் பெரிய சக்கரங்களைச் சுழற்றி வேகமாக இயக்கிவிடும் ரோதைமுனியின் திருவிளை யாடல்களைப் பற்றித் தொழிலாளர்கள் சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு இரவில் தொழிற்சாலையில் ஒரு பயங்கர ஊசலாட்டம் நடந்தபோது தொழிற்சாலையின் இரவு நேரக் காவலாளிக்கு மூன்று நாள் நடுக்கக் காய்ச்சல் வந்து தொழிற்சாலைப்பக்கத்திற்கே வரவில்லை. பின்னர் அவர் “பயந்தாங் கொள்ளி” பட்டத்துடன் மலை வேலைக்கு மாற்றம் பெற்றுக் கொண்டார்.

அந்த இளம் வயது மாணவன் கிளப்பிவிட்ட சந்தேகம் மனப்பக்குவம் நிறைந்த மூத்த பக்தர்களின் சிந்தனையைத் தொட்டுவிட்டது.

“அந்தப் பொடியன் சொன்னமாதிரி இந்தத் தடவையும் வந்தது நெஜமான ரோதைமுனிதானா?”

“எப்பவும் தொழிற்சாலை வெறிச்சோடிப் போய் கிடக்கும். ஒரு ஈக்குஞ்சுகூட இஸ்ட்டோர் ரோட்டுப் பக்கத்திற்கே வராமல் எங்கும் ஒரு வகைப் பீதி பரவிக் கிடக்கும்… ஆனா ரோதைமுனியைப் பற்றி ஒன்றும் அறியாத இந்த செக்யூரிட்டி ஐயா பொங்சோவைப் பாரு, மொத மொறையா ரோதைமுனியின் திருவிளை யாடல்களைப் பார்த்தும் அச்சம், நடுக்கம், காய்ச்சல் எதுவுமே அவரை நெருங்கல்ல…”

ஒரு சில தொழிலாளர்கள் ஆளுக்காள் கருத்துக்கள் பரிமாறி ரோதை முனியைச் சந்திக்கு இழுக்கும் மர்மத்தை ஆராயத் தொடங்கினர்.

விடிந்து சூரிய உதயத்திற்குப் பின் காற்றுவாக்கில் மற்றுமொரு செய்தி எங்கும் அலைமோதியது.

“அன்று இரண்டு நாட்கள் லீவிலிருந்து கடமைக்குத் திரும்பியிருந்த சீனியர் தொழிற்சாலை அதிகாரிக்கு நடுக்கக் காய்ச்சலாம்…”

சென்ற வருடம் மீப்பிட்டியாவில் பத்து பேர்ச் காணி வாங்கியிருந்தார். வசதியான வீடொன்றைக் கட்டத் திட்டமிட்டு அரைவாசி வேலையும் முடிந்துவிட்ட சந்தர்ப்பத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக எதிர்பாராத விதச் சரிவு – மண்சரிவு ஏற்பட்டதன் விளைவாக கட்டடத்தின் ஒரு பகுதி பாதிப்புக்குள்ளாகி நட்டத்தை ஏற்படுத்திய சோகத்தைச் சுமந்துகொண்டு வந்தவருக்குத்தான் அன்று அவருக்கும் தெரியாமல் தொழிற்சாலைக்கு ரோதைமுனி வந்து குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

பொங்சோவுக்குப் பொறி தட்டியது.

அடையாள அணிவகுப்புக்குச் செல்ல ஆயத்தமாவது போல் மழை, வெயில், பனிமூட்டம், குளிர் அனைத்துக்கும் பொருத்தமான தொப்பி, கனத்த நீட்டுக்கை கம்பளி கோர்ட், களிசான், பூட்ஸ்… என்று சீருடைகளைச் சரிசெய்து கொண்டு கம்பீரமாக நடந்தான். “பழம் நழுவிப் பாலில் விழுமுன்” ஒருவகைப் பாய்ச்சல் நடையுடன் பொங்சோ அந்த சீனியர் தொழிற்சாலை அதிகாரியைச் சந்திக்கச் சென்றான்.

பொங்சோவுக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அவன் தொழிற் கடமைகளைப் பொறுப்பேற்ற முதல் நாள் உரையாடலிலேயே அவர் அவனிடம் ஒரு நாசூக்கான கேள்வி கேட்டிருந்தார்.

“மிஸ்டர் பொங்சோ , டுயூ பிலிவ் இன் திஸ்… ரோதைமுனி…?”

அவனும் ஒருகணம் நிலை தடுமாறிப் போய் நின்றாலும் மிக நிதானமாகச் சொல்லியிருந்தான் –

“தோட்ட மக்களின் நம்பிக்கைகளுக்கு குறிப்பாக ரோதைமுனிவழிபாட்டுக்கு நான் எதிராளி அல்ல…”

வேகமாகச் சென்ற பொங்சோ –

“எப்படி சேர் காய்ச்சல் வந்தது…? லீவிலிருந்த நீங்கதான் இஸ்ட்டோர் பக்கத்துக்கே போகலியே…. உங்களுக்குத்தான் இதில் நம்பிக்கையும் இல்லையே…!” இப்படிக் கேட்கத் தோன்றியது அவனுக்கு. ஆனால் அவரது விகாரமான முகத்தையும், அவரது நிலைமையையும் பார்த்ததும் அவன் மௌனமாக இருந்து விட்டான்.

ரோதைமுனியின் தண்டனையோ என்னவோ!

சற்று நேரம் அவதானித்துவிட்டு மீண்டும் தொழிற்சாலைக்குத் திரும்பினான், அதே உத்தியோகபூர்வமான ராஜநடையுடன்!

“தொரையின் ஐடியா சுப்பர்” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

இரவு நடந்த சம்பவத்தால் நித்திரை குழம்பிப் போயிருந்தாலும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய உந்துதலால் ஆயத்தமாகிப் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தேன்.

மூன்று தசாப்தங்களுக்கு முன், நான் அப்பொழுது தோட்ட அலுவலகத்தில் இலிகிதராக வந்து சேர்ந்த புதிது. அப்பொழுது நான் லிகிதர் ஸ்தானத்தில் மூன்றாவது இடம்.

ஒரு புதன்கிழமை பின்னேரம் என்று நினைக்கிறேன். பெரியதுரை தொழிலாளர்களைச் சந்திக்கும் “ஒப்பிஸ் நாளில்” அடைக்கன் தலைவர் சொன்ன வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வந்தன.

அவர் தோட்ட அலுவலக விறாந்தையில் மணிக் கணக்காக நின்று கொண்டிருப்பார்.

என் மேசைக்கு முன்னால் யன்னல் திறந்தே கிடக்கும். தொழிலாளர்கள் தம் சம்பள விபரங்கள் கேட்டு வருவார்கள். சிவகாமிக்கு இரண்டு ஏக்கர் கொந்தராப்பு போடுவதில் தலைவருடன் பேச வேண்டியிருந்தது.

எனக்கு அடைக்கன் தலைவரோடு பேசுவது மனதுக்கு திருப்தியாக இருக்கும்.

யன்னலுக்குப் பக்கத்தில் வந்து நின்றார்.

“ஐயா வணக்கம்…”

“வணக்கம் தலைவரே… என்ன விசேடம்…?”

“ஒண்ணுமில்லேங்க… மிச்சங் காலமாக விடுபட்டுப் போயிருந்த ரோதை முனி பூஜைய தொடங்கணும்னு ஜனங்க அபிப்பிராயப்படுறாங்க… அதிலும் பொம்பிள ஆளுங்க – இஸ்ட்டோரில் வேலை செய்றவங்க கராரா நிக்கிறாங்க… அதான் தொரகிட்ட பேசியிருந்தேங்க.”

“ரோதைமுனி பூஜையா…?”

“ஆமாங்க… ஒங்களுக்கு தெரியாதுல்ல…”

அன்று அடைக்கன் தலைவர் ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தது இன்றைக்கும் எனக்கு நல்ல ஞாபகம்.

“தோட்டத்து மக்களிடையே காலாதி காலமாக வேரூன்றி வந்துள்ள ஒரு தெய்வ நம்பிக்கைங்க…”

“ரோதை என்பது தேயிலை அரைக்கும் இயந்திர இயக்கத்திற்கு ஒட்டினாப்ல இணைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான சக்கரம். இதில் என்ன விசயம்னா, தேயிலை அரைக்க இரண்டு மூன்று இயந்திரங்கள் பயங்கர இரைச்சலுடன் தொழிற்சாலையில் இயங்கும் பொழுது, ரோதைகள் ரொம்ப வேகமாகச் சுழலுங்களா… அப்ப இயந்திரங்களோடு இயந்திரங்களாக ஆண் பெண் தொழிலாளர்கள் இயங்குவதற்கு முன் கைகால்களில் காயங்கள் ஏற்படாமல், ஆபத்துகளில் இருந்து நீங்குவதற்கும், நிர்வாக உத்தியோகஸ்தர் உட்பட தோட்டத்தில் உள்ள சகலருக்கும் இடைஞ்சல்கள் ஏற்படாம இருப்பதற்கும், “தெய்வமே நீதான் காப்பாற்ற வேண்டும்” என்று தொழிலாளர்கள் இதய சுத்தியுடன் வேண்டிக் கொள்வார்கள். இதுதான் காலப்போக்கில் “ரோதைமுனி” தெய்வம் எங்களைகைவிடாது என்ற திடநம்பிக்கை வேரூன்றி வளர்ச்சியடைந்து ரோதைமுனி வழிபாடு கட்டாயமாகி விட்டிருந்தது. தொழிற்சாலைக்குக் கிட்டே ரோதைமுனிக்கு சிலை வைத்து வருடா வருடம் பூஜைகள் தவறாம நடந்து வந்திருக்கு. பெண் தொழிலாளர்கள் ரொம்ப சிரத்தையோட பக்தியுடன் ஈடுபட்டார்கள்.

“அதாங்க ஐயா… இந்த மாதக் கடைசியில் இருந்தாவது ஆட்டுக்கடா அறுத்து ரோதைமுனி பூஜைய ஆரம்பிக்கலாம்னு பெரிய தொரைய… சந்திச்சி…”

அடைக்கன் தலைவர் மூலமாக என் மனம் மிகவும் தெளிவடைந்தது.

“தொரெ இப்ப வார நேரம்தான்… தொரைய சந்திச்சிட்டு போற நேரம் வந்துட்டுப் போங்க… கொந்தராப்பு விசயமாகவும் பேசவேண்டியிருக்கு…”

“அட சொன்னாப்பில மறந்துட்டேங்க… மாத்தம் எதுவும் இல்ல… சிவகாமிக்கே அந்த கொந்தராப்ப குடுங்க… அவளத்தான் ரோதைமுனி பூஜைக்கும் பொறுப்பு சாட்ட உத்தேசம். பக்தி சிரத்தையோட நேர்மையா ரோதைமுனி பூஜைய நடத்த பொருத்தமான ஆள்…”

நீண்டதூரம் பின்னோக்கிச் சென்ற என் சிந்தனைச் சக்கரத்தை மீண்டும் முன்னோக்கி உருட்டிக் கொண்டு வந்தபோது கைக்கடிகாரம் காலை எட்டுமணிக்கு ஐந்து நிமிடங்கள் இருப்பதைக் காட்டியது.

அலுவலக முன்றலில் ஒரு சிறு கூட்டம் நேற்றிரவு வந்த ரோதைமுனியைப் பற்றித்தான் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

தலைமை இலிகிதர் மூத்தவர். அனுபவம் மிக்கவர். சீனியர் நான். அடுத்து மூன்றாவது, நான்காவது இருவரும் இளையவர்கள். புதிதாக நியமனம் பெற்று வந்தவர்கள். அவர்களுக்கு ரோதைமுனி வரலாற்றைக் கூறியிருந்தேன்.

எங்களுடன் பீல்ட் ஒபிசரும் கருத்துக்கள் தெரிவித்தார்.

“ஐயா, ரெண்டாவது கிளாக்கர் ஐயா, ஒங்ககிட்ட தான் கேக்கிறன். நான் முனி பக்தன். இது முனியின் வேல இல்ல… “மனி” தான் இயக்கியிருப்பான்னு என் மனம் சொல்லுது… நீங்க என்ன சொல்றீங்க…?”

“யாரு? எந்த மனி…?”

“மனின்னா …. மனிதன்தான்…”

எல்லாரும் சிரித்தனர்.

“ஆளுக்காள் நீங்க என்ன சொன்னாலும் புதிய செக்யூரிட்டி ஒபிசர் பொங்சோவின் அறிக்கை வந்த பிறகு தான்… எந்த முடிவும் எடுக்கலாம்.”

தலைமை குமாஸ்தா குறியீடு வைத்துப் பேசி ரோதைமுனி பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்துவிட்டார்.

அப்புறம் அலுவலகக் கடமைகளில் ஈடுபடத் தொடங்கியபோது தொலை பேசியும் அலறிக் கொண்டிருந்தது. மூன்றாவது தடவையாக.

என்னைப் பொறுத்தவரையில் பீல்ட் ஒபிசரின் கருத்தில் சரியான இலக்கை அடைந்திருப்பது போலத் தெரிகிறது.

“சும்மா ரோதைமுனி வந்திருச்சி, ரோதைமுனி இஸ்ட்ரோரைக் கலக்குதுன்னு இயந்திரங்களை இயக்கிப் பூச்சாண்டிக் காட்டிவிட்டு, ஆட்களை லயங்களில் அடைத்துவிட்டு, மனிதன் நடத்தும் நாடகமாக ஏன் இருக்கக்கூடாது…!”

“தொழிற்சாலையிலிருந்து ரகசியமாக “தூள்” களவு போகுது..” என்றொரு குற்றச்சாட்டு தோட்டத் துரையிலிருந்து உத்தியோகத்தர்கள் வரைக்கும் ஒரு கரும் புள்ளி மட்டுமல்ல, பெரிய தலையிடியாகவும் இருந்து வந்துள்ளதுதானே!

துரை கம்பனியுடன் கலந்து ஒரு முடிவு எடுத்திருந்தார்.

அந்தக் கருப்புப் பூனை தோட்ட உத்தியோகத்தருக்குள் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் சந்தேகத்தின் பெயரில் எவரையும் அழைத்து விசாரித்து மனம் புண்படச் செய்ய விருப்பமில்லை துரைக்கு,

தற்காலிகமாகத் தோட்டத்தில் அனைத்துத் துறையிலும், உயர் அதிகாரிகள் தொடக்கம் சுப்பவைசர் வரைக்கும் சகலரது வருடாந்த “போனஸ்” கொடுப்பனவை இடைநிறுத்திவைத்துள்ளார். இரண்டு வருடங்களாக “போனஸ்” இல்லை.

உத்தியோகத்தர்களின் மனப்போக்கும் முற்றிலும் மாறிவிட்டிருந்தது.

தேயிலை கடத்துவது யார்…?

குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் மதிநுட்பம் சாதாரண காவல் தொழிலாளிக்கு இல்லை.

நிர்வாகம் சில முடிவுகளை எடுத்துவிட்டது. அந்த வகையில் முன்னைய தொழிற்சாலை “வாச்மென்” மலை வேலைக்கு பலத்த பாதுகாப்புத் தேவை என்பதை வலியுறுத்தி, செக்யூரிட்டி ஒபிசர் பதவியை உருவாக்கி, பொங்சோவிடம் பாதுகாப்பை ஒப்படைத்து ஆலோசனைகளை வழங்கியிருந்தது.

முன்னைய தொழிற்சாலை காவலாளிக்கு நீட்டுக் குழாய் துப்பாக்கியும் தோட்டாக்களும் வழங்கப்பட்டிருந்தன. அவை அவர்களுக்கு நாய் சுடத்தான் உதவியது. அது ஒரு காலம். ஆனால் இப்பொழுது துப்பாக்கிகள் விநியோகிக்க முடியாத காலகட்டம்.

ஆனால் பொங்சோவுக்கு விஷேடமாக ஒரு கையடக்கத் தொலைபேசி வழங்கப்பட்டிருந்தது.

தொழிற்சாலையிலிருந்து இருநூறு அடி தூரத்தில் ஓர் ஏற்றத்தில் அவனுக்குத் தனி செக்யூரிட்டி குவார்ட்டஸ். முன் கூடத்தின் இரு புறங்களிலும் இரண்டு யன்னல்கள். உட்புறத்தில் நின்று கொண்டே பார்வையைச் செலுத்தினால் தொழிற்சாலையும் சுற்றுப் புறமும் முழுமையாகத் தெரியும்.

ஒரு தொலைநோக்குக் கண்ணாடியின் மூலம் முன்னால் நடக்கும் ஆட்களின் முகங்களைத் தெளிவாக இனங்கண்டு கொள்ள முடியும்.

“பொங்சோ தாய்வழிப் பாட்டனைப் போல் அவரது துப்பறியும் மூளையை அப்படியே கொண்டுவந்து விட்டான்…” என்று பொங்சோவின் குடும்ப வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்களாம்.

அந்தத் துப்புத் துலக்கும் மூளைக்குத்தான் இப்பொழுது வேலை கிடைத்து விட்டதே.

சூழலை, தொழிற்சாலையை, தொழிலாளர்களை, தனிப்பட்ட நபர்களை… போக்குவரத்து விபரங்களைப் பற்றியெல்லாம் மிகுந்த கரிசனையோடு கற்றுவிட்டான்.

வந்து மூன்று மாதங்களில் அவன் சேகரித்து வைத்திருந்த தகவல்கள் அவனுடைய தொழிலுக்குப் போதுமான அளவு கைகொடுத்தது.

மானாக்காட்டு குறுக்குப் பாதையில் இறங்கி அரசாங்கத்தார் ரோட்டில் பத்து நிமிட நடைத்தூரத்தில் கடைத்தெரு (பஜார்).

இரவு தொழிற்சாலை கிடந்து அல்லோல கல்லோலப்பட்ட நேரத்தில், இரண்டு தொழிலாளர்கள் அந்த ஒற்றையடிக் குறுக்குப் பாதை வழியாக ஓட்டமும் நடையுமாகச் சென்றுள்ளார்கள்.

“என்னடா இது எங்கேயோ ஒரு மிஸ்ட்டேக் நடந்து போச்சு… போய்ப் பாருங்கடா…” என்று அந்தக் காவலாளி அனுப்பியிருப்பாரோ…!

போக்குவரத்து லொறியைக் காணாமல் அவர்கள் கதிகலங்கிப் போய் திரும்பும் போதுதான் பொங்சோ விரித்திருந்த வலையில் “கையும் மெய்யுமாக” சிக்கி விட்டார்கள்.

“என்னப்பா… லொறி ஏதும் வந்திருச்சான்னு பார்க்கப் போனீங்களாக்கும்… இன்னக்கி ஒங்க டேட் தவறிப் போச்சோ…? ஒங்கள அனுப்பின ஐயாகிட்ட சொல் லுங்க…. இனிமே அந்த லொறி வராதுண்ணு … அப்படியே வந்தாலும் ஒங்களையும் ஒங்க வீட்டுச் சாமான்களையும் ஏத்திக்கிட்டுப் போகத்தான் வரும்ணு …”

அவர்கள் வெலவெலத்துப் போய் நின்றார்கள்.

“அப்படியே ரெண்டு பேருமா காலையில் ஒன்பது மணிக்கு ஆபிசுக்கு வந்து தொரயக் கண்டுக்கிட்டு போங்க…”

ரோதைமுனி நிகழ்வு நடந்து முடிந்து ஒரு கிழமை ஒடி மறைந்துவிட்டது. எங்கும் அமைதி நிலவினாலும் ஒரு “கசமுச”வும் வைரஸ் காய்ச்சல் போல் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.

ஒரு திங்கள் காலையில் தொலைபேசி சிணுங்கியது.

அது பெரிய துரையிடமிருந்து வந்து ஒரு பணிப்புரை. பெரிய கிளாக்கர் ஐயா செவிமடுத்தார்.

ஒரு சில நிமிடங்களில் எனக்கு அழைப்பு மணி.

நான் அவர் அறைக்குள் நுழைந்தேன்.

“மிஸ்டர் எட்வின். “கம்பளி நியூஸ்” மூலம் விசயம் பாரதூரமாப் போயிருக்கலாம். நாளைக்கு பன்னிரண்டு மணிக்குப் பிறகு கொழுந்தாளுங்க ஆர்ப்பாட்டம் பண்ணப் போறாங்களாம். ‘ரோதைமுனி தெய்வத்தைக் கொச்சைப் படுத்தாதே” என்பதுதான் அவர்களது நோக்கம். எதுக்கும் நாளை மாலை மூன்று மணிக்கு அலுவலகத்தில் சில முக்கிய உத்தியோகத்தர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யச் சொல்றார் தொரே…

பெரியவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு எனது இருப்பிடத்திற்குத் திரும்பினேன்.

நான் ஊகித்தது மிகச் சரி.

ரோதைமுனி குழப்பத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில் சில விபரங்களைத்திரட்டிக்கொண்டு வந்து ஒரு சுற்றுநிருபம் தயாரித்தேன். ஒரு சிலருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.

“நாளைக்கு மூன்று மணிக்கு பெரியாபிசில் தலைமைகள் சந்திப்பு…”

தோட்டத்துப் பெரியதுரை, சின்னத்துரை, தொழிற்சாலை தலைமை அதிகாரி, பீல்ட் ஒபிசர், அலுவலகத் தலைமைப் பீடம், செக்யூரிட்டி ஒபிசர் அனைவருக்கும் அவசர அறிவிப்புக் கொடுத்து உறுதிப்படுத்தியாயிற்று.

இந்நேரத்தில் பீல்ட் ஒபிசர் வியர்க்க விறுவிறுக்க வந்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தின் முழுமையை ஒப்புவித்தார்.

நேற்று முச்சந்தியில் கூடிநின்று பலதும் பத்தும் பேசிக்கொண்டிருந்த பெண் தொழிலாளிகள் மத்தியில் திடீரென்று ஒரு சலசலப்பு.

அம்மாயி வெறிபிடித்தவள் போல் ஓட்டமும் நடையுமாக இவர்களை நோக்கி வந்திருக்கிறாள்.

“அப்புராணி அம்மாயிக்கு எங்கிருந்து வந்தது இந்த வீராப்பு நடை?”

“அம்மாயி யேன் இப்படி வர்ரா…?”

“ஏதோ பிரச்சினையாத்தான் இருக்கும்.”

“கேட்டீங்களாடி இந்தக் கூத்தை… கேட்க ஆளில்லைன்னு நினைச்சிக்கிட்டு அந்தக் காவாலி…”

அம்மாயி சற்று ஆவேசம் தணிந்து சொன்னா,

“பாத்தீங்களாடி… நாங்க எவ்வளவு காலமா ரோதைமுனிய பக்தியோட கும்பிடுரோம்… வருடா வருடம் தவறாம பூஜை நடத்துறோம்…. அப்படியிருந்தும் ரோதைமுனி இஸ்ட்டோருக்கு வந்து அதிருப்தியக் காட்டுதே…! நம்ம பூஜையில என்ன குறைபாடுண்ணு எவ்வளவு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிறோம்… ஆனா இந்தக் காவாலிப் பய ரோதைமுனிவந்திருக்கு, ரோதை முனி வந்திருக்குண்ணு கேவலப்படுத்தி… தூள் களவெடுத்திருக்கிறான். நம்ம ரோதைமுனிய கேவலப் படுத்தியத சும்மா விடக்கூடாது… நாங்க உடனே போய் மாதர் சங்க தலைவிய சந்திச்சி ஆலோசனை கேப்போம்…”

தலைவி எல்லா விசயங்களையும் கேள்விப்பட்டிருந்தாள்.

“தூள் திருடனைப் புடிக்கத்தான் நேற்று இயந்திரங்கள இயக்கியிருக் கிறாங்க… அது குத்தமில்ல. ஆசாமி மாட்டிக்கிட்டாரு… ஆனாலும் இனிமேலும் காவாலிங்க ரோதைமுனிய சந்திக்கு இழுக்காம இருக்க ஒன்னு செய்யுங்க…”

‘“இப்ப கொழுந்து சீசன். பொம்பில ஆளுங்க எப்படியும் கொழுந்து எடுத்தே ஆகணும். இந்த நேரம் பார்த்து அரைநாள் வேலை நிறுத்தம் செஞ்சாலே போதும். நல்ல பாடமாக இருக்கும். இனிமேலும் எவனும் நாங்க வழிபடுற ரோதைமுனி தெய்வத்தக் கொச்சைப்படுத்த வரமாட்டாங்க…”

பகல் பன்னிரண்டு மணிக்கு அனைத்துப் பெண் தொழிலாளிகளும் மலைகளிலிருந்து மளமளவென்று கொழுந்து மடுவத்திற்கு இறங்கி, அரைநாள் கொழுந்தை நிறுத்துக் கொடுத்துவிட்டு, ஆர்ப்பாட்ட வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள்.

சாரி சாரியாக வாசகங்கள் ஏந்திய வண்ணம் அலுவலகப் பாதையிலும், தொழிற்சாலை முன்றலிலும் நின்று இரைச்சலுடன் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

“ரோதைமுனி தெய்வத்தைக் கொச்சைப் படுத்தாதே!”

“ரோதைமுனியை வழிபடுவது எங்கள் உரிமை”

“இனிமேலும் வருடாந்த ரோதைமுனி பூஜைக்கு தோட்டக் கணக்கில் நிதியுதவி வேண்டாம்.”

“சம்பந்தப்பட்ட தூள்க் காவாலியை உடன் வெளியேற்று.”

தோட்டத் தலைமை அலுவலகத்திற்கும், தொழிற்சாலை அதிகாரிகளுக்கும் அரைநாள் ஆர்ப்பாட்ட வேலை நிறுத்தம் மூலம் தமது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னர், தோட்டமெங்கும் வலம் வந்து மாலை நான்கு முப்பதுக்கு முடித்துக் கொண்டனர்.

அலுவலகத்திற்குள்ளே சரியான நேரத்திற்கு கூட்டம் நடைபெற்றது. அழைக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் சமூகமளித்திருந்தார்கள். பெரியதுரை நேரடியாகவே தொடக்கி வைத்தார்.

“குட் ஈவ்னிங் ஸ்டாப், எவ்ரிதிங் வாஸ் எ செட்டப். வி ஹவ் ட்ரெப்ட் தி பிளெக் பட் தொழிலாளர்கள் தவறாக விளங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் ரோதைமுனி தெய்வத்தை கேவலப்படுத்தல்ல என்பதை தொழிலாளர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்.”

பெரியதுரை நிதானமாக ஆங்கிலத்தில் விளக்கமளித்தார்.

ஒப்பிஸ் பையன் கிட்டு எல்லாருக்கும் சூடான மாலை தேநீர் பரிமாறினான்.

பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்ததோடு சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

தலைமை எழுதுநர் பொங்சோவைப் பாராட்டினார். “முள்ளை முள்ளாலே எடுத்துவிட்டார், ஜனங்களுக்கு விளங்கப்படுத்தினா சரி…”

“மிஸ்டர் பொங்சோடு யூ ஹவ் எனித்திங்டு ட்ரிடல் …?”

“நத்திங் சேர்…” என்று கூறினாலும் சில விடயங்களைப் பகிரங்கப் படுத்தினான். நாளைக்கு மஸ்ட்டர் (பெரட்டு கூடும்போது, பீல்ட் ஒப்பிசர் – “நாங்கள் ரோதை முனி தெய்வத்தைக் கொச்சைப்படுத்தவில்லை… தூள் களவெடுக்கிற காவாலியைப் பிடிக்கத்தான் நாங்க சிரமப்பட்டோம் என்ற உண்மையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண் தொழிலாளிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்… ஒரு காலத்தில ரோதை முனி பக்தர் அடைக்கன் தலைவரால் தொடக்கி வைக்கப்பட்ட பூஜைகள் எப்பவும் தொடரும் என்று உறுதி கூற வேண்டும்” என்று பொங்சோ மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டான்.

“அப்ப மிஸ்டர் பொங்சோ, மானாக்காட்டில பிடிபட்ட கொள்ளிப் பிசாசுகள்…?” இது பெக்டரி ஒப்பிசர்.

இந்தக் கேள்விக்கு துரை மறுமொழி கூறினார்.

“சும்மாடு போட்டு சுமை தூக்கிய அந்த இரண்டு கொள்ளி பிசாசுகளுக்கும் மூன்று மாத காலம் வேலை ‘சஸ்பென்டட்’ அதற்குப் பிறகு அவர்களுக்கு மலையில் தான் கவ்வாத்து’, கான்வெட்டு… போன்ற வேலைகள்.”

துரை தண்டனை வழங்கினார்.

சந்திப்பு சுமுகமாக முடிந்தது.

சுகவீனமுற்றிருந்த இரண்டாவது பெக்டரி ஒப்பிசர் வெளியே தலை காட்டவில்லை .

மீப்பிட்டியாவில் மண்சரிவு ஏற்பட்ட பிறகு அதே இடத்தில் வீட்டுக் கட்டிடத்தைத் திருத்தி எழுப்புவதற்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மகனுக்கும், ஏ.எல். வரைக்கும் கற்று வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மகளுக்கும் விருப்பமில்லை. “விற்று விட்டு வேறிடத்தில் பார்க்கலாம்” என்று தீர்மானித்து விட்டார்கள்.

தனது மத்தியதர வாழ்க்கைத் தரத்திலிருந்து படிப்படியாக உயர் தரத்திற்குப் போகக் கண்ணும் கருத்துமாக உழைத்து வந்தவரின் வாழ்க்கையிலும் ‘மண்சரிவு’.

காய்ச்சல் முற்றாகத் தணிந்து விட்டதும், சுக்கிர திசையும் முற்றுப் பெற்றிருந்தது.

“இன்னும் இருபத்து நான்கு மணித்தியாலயத்திற்குள் தமது இராஜினாமா கடிதத்தை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு தோட்ட எல்லையிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.”

சொல்லி வைத்தாற் போல் அந்தப் போக்குவரத்து லொறி அவரது குடும்பத்தையும், சாமான்களையும் ஏற்றிச்செல்ல வந்துகொண்டிருந்த செய்தி (கம்பளி நியூஸ்) காட்டுத் தீப்போல பரவிக்கொண்டிருந்தது.

தாயும் மகளும் லொறியின் முன் இருக்கையில் அமர ‘இவர்’ பின் புறத்திற்குத் தள்ளப்பட்டு, சாமான்களோடு ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

பொதிகளுடன் லொறி மெல்ல அசைந்து கொண்டிருந்தது.

மனச்சுமை சீனியர் தொழிற்சாலை அதிகாரியின் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

– மல்லிகை 42வது ஆண்டு மலர் ஜன-2007

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *