‘ராக்கிங்’

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,268 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரபல்யம் வாய்ந்த அந்த ஆண்கள் கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் முன்னணியில் திகழ்ந்தது. ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து பல மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுவார்கள். தேசியரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களையும் அந்தக் கல்லூரி உருவாக்கியிருந்தது. மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றைப் பேணுவதிலும் அக்கல்லூரி பெயர் பெற்றிருந்தது. ஆனாலும் கடந்த இருவருடங்களில் நடந்த ‘ராக்கிங்’ சம்பவங்கள் அக்கல்லூரியின் பெயரைக் களங்கப்படுத்தியிருந்தன.

மகேந்திரன் ஜீ.சி.ஈ உயர்தர வகுப்பில் சேர்ந்து ஒரு வாரந்தான் ஆகிறது. இந்தச் சில நாட்களில் அவனும் ‘ராக்கிங்’ என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் பகிடி வதைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது.

“டேய், உனக்கு நீந்தத் தெரியுமா?”

ஹொஸ்ரலின் வலதுபுறமாகச் சற்றுத் தொலைவில் நீச்சற் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவன் மகேந்திரனிடம் கேட்டான்.

அன்று பாடசாலை முடிந்தநேரம் அவனது புத்தகங்களைப் பறித்தெடுத்த மாணவர் இருவர் அவற்றைக் ஹொஸ்ரலில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறியதனால் அவன் அங்கு செல்லும்படி நேரிட்டுவிட்டது.

மகேந்திரன் தயக்கத்துடன் தரித்து நின்றான். நீந்தத் தெரியாது என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டினான். மனதைப் பயம் கௌவிக்கொண்டது.

“ஐயோ பாவம், இவனுக்கு நீந்தத் தெரியாதாம்……. வா மச்சான், நீந்தக் கற்றுக் கொடுப்போம்” என்றான் வேறொருவன்.

“நம்ம ஸ்கூல் டிஸிப்பிளின் மாஸ்டர் புண்ணியமூர்த்தியின் மகனுக்கு நீச்சல் தெரியாதென்னா இது நம்ம ஸ்கூலுக்கே அவமானம்.”

“அடடே, இவன் நம்ம புண்ணியமூர்த்தி ஸேரோட மகனா? எனக்குத் தெரியாதே…. அப்புடீன்னா கற்றுக்குடுக்கத்தான் வேணும். இல்லேன்னா ஸேர் கோவிச்சுக்குவாரு.”

அவர்கள் எழுந்து மகேந்திரனை நோக்கி வந்தார்கள். அந்த இடத்தைவிட்டு ஓடிவிடலாமா என ஒருகணம் அவன் யோசித்தான். ஆனாலும் உடனேயே தனது முடிவை மாற்றிக் கொண்டான். இப்போது ஓடினால் அவர்கள் அவனை இலேசில் விட்டுவிட மாட்டார்கள். பகிடி வதைக்கு இடங்கொடுக்கா விட்டால் வதைகளின் உக்கிரம் கூடிவிடும்.

ஒருவன் அருகேவந்து அவனது கைகளைப் பற்றினான். மகேந்திரனது கைகள் நடுங்கின. அவன் அவர்களை முன்னொரு போதும் பார்த்ததில்லை. அவர்கள் இறுதியாண்டு மாணவர்களாக இருக்கவேண்டும்.

“வா……. கொஞ்சநேரம் எங்களோட நீச்சல் அடிக்கலாம்” கைகளைப் பற்றியிருந்தவன் அவனை இழுத்தான்.

மகேந்திரனின் கண்களுக்குள் நீர் முட்டியது. கால்கள் தடுமாறின.

“என்ன பயமா இருக்கா? அப்புடீன்னா நீ நீச்சல் அடிக்கவேணாம். நாங்க நீந்திறத வெளியே நின்னு பார்த்துக்க; பயம் தெளிஞ்சிடும்.”

மகேந்திரன் மறுப்புக் கூறமுடியாமல் அவர்களுடன் சென்றான். நீச்சற் குளத்தின் படிக்கட்டுகளை அடைந்தபோது அவனை அவர்கள் சுற்றிவளைத்துக் கொண்டனர்.

“ஐயோ, பிளீஸ் என்னை ஒண்டும் செய்யாதீங்க…….” மகேந்திரன் மன்றாடியபோது பின்புறத்தில் நின்ற ஒருவன் திடீரென அவனைக் குளத்தில் தள்ளிவிட்டான். சற்றும் எதிர்பாராதவகையில் அவன் ஒரு கணம் தடுமாறி, தடாரெனத் தண்ணீரில் விழுந்து தத்தளித்தான். வாயினுள்ளும் மூக்கினுள்ளும் தண்ணீர் புகுந்ததால் அவனுக்கு மூச்சுத் திணறியது. கைகளையும் கால்களையும் அடித்துத் தரையில் உதைத்து மேலே எழுந்தபோது படிக்கட்டில் நின்றிருந்த இருவர் தண்ணீரில் குதித்து அவனை மீண்டும் உள்ளே அமுக்கினர்.

மகேந்திரன் திணறித் திணறி மேலே எழும்பும் போதெல்லாம் அவர்கள் அவனை உள்ளே தள்ளி அமுக்கிக் கொண்டிருந்தனர். அவன் திணறுவதும் கைகளை மேலே உயர்த்தி ஆட்டுவதும் அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

“மச்சானை நல்லாக் குளிப்பாட்டுங்கடா” என வெளியே நின்ற இருவர் ஆரவாரஞ்செய்து அவர்களை உற்சாகப்படுத்தினர்.

மகேந்திரனின் துடிப்பு அடங்குவதை அவர்கள் கவனிக்க வேயில்லை. அவன் திணறி மேலே எழும்பாதபோதுதான் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அவனைத் தண்ணீரின் மேலே இழுத்தெடுத்தார்கள்.

விளையாட்டாகச் செய்த ராக்கிங் வினையாக முடிந்திருப்பது அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக வேறும் சில மாணவர்களை அவர்கள் இவ்வாறு தண்ணீரில் அமுக்கி ராக்கிங் செய்தார்கள். அப்போதெல்லாம் நடக்காத அசம்பாவிதம் இப்போது நடந்துவிட்டது.

மகேந்திரனின் தலை தொங்கியிருந்தது.

******

ஆசிரியர் புண்ணியமூர்த்தியின் பெயரைச் சொன்னாலே மாணவர்களுக்கு நடுக்கம் ஏற்படும். மாணவர்கள் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டுமென்பதில் அவர் கண்டிப்பானவர். பல இன மாணவர்கள் கல்விகற்கும் அந்தக் கல்லூரியில் மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் அவரது கண்டிப்பு அவசியமானதுதான்.

பத்து வருடங்களாகத் தொடர்ந்து ‘டிஸிப்பிளின்’ மாஸ்டராகக் கடமையாற்றிவரும் புண்ணியமூர்த்திக்குச் சென்ற வருடத்தில் கல்லூரியில் நடந்த சம்பவமொன்று அவரது கடமைக்கு மட்டுமல்லாது சொந்த வாழ்க்கைக்குமே ஒரு சோதனையாக அமைந்துவிட்டது.

கல்லூரியில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களை, பழைய மாணவர்கள் சிலர் ராக்கிங் செய்தனர். அவர்களது செயல்கள் அத்துமீறிப்போயிருந்தன. புதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடிக்கடி பாடசாலைக்கு வந்து தங்களது பிள்ளைகளுக்கு நடந்த கொடுமையான வதைகளை எடுத்துக் கூறினர்.

ஒருநாள் புதிய மாணவனொருவன் கடுமையான ராக்கிங்கிற்கு உள்ளாக நேரிட்டது. வெளியே சாக்கடையில் கிடந்த பழைய தகரப்பேணியில் தண்ணீர் அருந்தும்படி பழைய மாணவர்கள் சிலர் அவனை நிர்ப்பந்தித்தனர். அவன் மறுத்தபோது பலவந்தமாக அவனுக்குத் தண்ணீர் பருக்கினர். ஒருவன் பேணியை வாயில் வைத்து அமுக்க, வேறொருவன் அவனைப் பிடரியில் பிடித்துத் தள்ள, கடைவாயால் தண்ணீர் வழிவதைப் பார்த்த மற்றொருவன் பேணியின் அடிப்புறத்தைப் பலமாக இடித்தான்.

புதிய மாணவனின் உதடுகள் கிழிந்து கன்னம்வரை நீண்ட காயம் ஏற்பட்டதால் அவனை ஆஸ்பத்திரியில் சேர்க்க நேரிட்டது.

கல்லூரியில் நடந்த அந்த ராக்கிங் அத்துமீறல் பற்றிய முறைப்பாடு கல்வித் திணைக்களம்வரை சென்றது.

புண்ணியமூர்த்திதான் அந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தினார். அப்போதுதான் அவருக்கு அந்த அதிர்ச்சியான செய்தி தெரியவந்தது.

அவருடைய மூத்தமகன் சிவனேசனும் வேறு மூன்று மாணவர் களும் சேர்ந்தே அந்தப் புதிய மாணவனுக்குப் பலவந்தமாகச் சாக்கடைத் தண்ணீரைப் புகட்டி, தகரப்பேணியை வாயினுள் புகுத்திக் காயம் ஏற்படுத்தியிருந்தார்கள்.

மாணவர்களின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணு வதற்காக எத்தனை எத்தனையோ மாணவர்களுக்குத் தண்டனைகள் கொடுத்த புண்ணியமூர்த்தி, அன்று தன் மகனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டியேற்பட்டது.

மாணவர்கள் நால்வரையும் உடனே கல்லூரியைவிட்டு நீக்கிவிட வேண்டுமெனவும் வேறுபாடசாலையில் அவர்கள் சேரமுடியாதவாறு சிவப்பு மையினால் குறிப்பெழுதி ‘லீவிங் சேட்டிவிக்கற்’ கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பெழுதினார் புண்ணியமூர்த்தி.

மாணவர்களின் எதிர்காலமே வீணாகிவிட்டது. அவர்களுக்கு இவ்வளவு கடுமையான தண்டனை வழங்கக்கூடாதென அதிபரும் ஆசிரியர்களும் புண்ணியமூர்த்திக்கு எடுத்துக்கூறினர். மாணவர்களின் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணப்பட வேண்டுமானால் அத்தகைய தண்டனை அவர்களுக்குக் கொடுக்கப்படவே வேண்டுமென அவர் திடமாகக் கூறிவிட்டார். விசாரணையின் போது வெளிவந்த, வெளியே சொல்லமுடியாத வேறுதகவல்களும் அவரது திடமான முடிவுக்குக் காரணமாயிருந்தன.

தண்டனை பெற்ற மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் புண்ணியமூர்த்தியிடம் வந்து, தமது பிள்ளைகளின் தண்டனையைக் குறைத்து வேறுபாடசாலையிலாவது சேர்ந்து படிக்க வழி செய்யும்படி மன்றாடினர்.

அவர்களுக்கெல்லாம் புண்ணியமூர்த்தி கூறிய பதில், “என்னுடைய மகனுக்கே நான் இந்தத் தண்டனையை வழங்கியிருக்கிறேன். இதுதான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சரியான தண்டனை; மனச்சாட்சிக்கு மாறாக நான் எதையுமே செய்யமுடியாது.”

ஆனாலும் மனச்சாட்சியின் மறுபக்கம் அவரை வாட்டிக் கொண்டே இருந்தது. அவரது மகன் சிவனேசன் படிப்பிலே சிறந்த மாணவன். அந்தவருடப் பல்கலைக்கழகத் தேர்வில் அவன் கட்டாயம் வைத்தியபீடத்திற்குத் தெரிவுசெய்யப்படுவானென அவனது ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவருக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. அவர் வழங்கிய தண்டனை அவனது எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டது.

அன்று வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி கூறிய வார்த்தைகள் அவரின் நெஞ்சைப் பிழந்தன. “பிள்ளையினுடைய வாழ்க்கையையே நாசமாக்கிப் போட்டீங்களே…. நீங்களும் ஒரு மனுசனா?”

அவர் மௌனம் சாதித்தார். அன்றிலிருந்து அவரது மனைவி அவருடன் கதைப்பதையே நிறுத்திவிட்டாள்.

அவரது இளையமகன் மகேந்திரன் கூறினான், “நீங்கள் ஒரு மனுநீதிகண்ட சோழனப்பா.”

அவன் எப்போதுமே இப்படித்தான், எதையாவது திடீரெனப் பெரிய வார்த்தைகளில் கூறுவான். அவன் ஒரு கவிதைப்பித்து ; எதிர்காலத்தில் தான் ஒரு பெருங்கவிஞனாக வரவேண்டுமென்ற எண்ணம். அதற்காகப் பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டிருப்பான். அவற்றிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுவான்.

மகேந்திரன் எந்த அர்த்தத்தில் அவ்வாறு கூறினான் என்பது அவருக்கு விளங்கவே இல்லை. மனுநீதிச்சோழன் தனது மகனின் தேர்ச்சில்லில் அகப்பட்டு இறந்த பசுக்கன்றுக்காக மகனையே தேர்ச்சில்லில் வைத்து நெரிக்கும்படி கட்டளையிட்டு நீதியை நிலைநாட்டியதைக் கூறுகின்றானா அல்லது ஆறறிவற்ற ஒரு மிருகம் தானாகவே தேர்ச்சில்லில் அகப்பட்டு இறந்ததற்காக பாசமற்ற தந்தையொருவன் தனது மகனைத் தேர்ச்சில்லிலே நெரித்துக் கொன்றதைப்போல நானும் எனது மகனின் எதிர்காலத்தைச் சாகடித்துவிட்டதாகக் கூறுகிறானா?

அவருக்கு எதுவுமே விளங்கவில்லை.

மகேந்திரனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். ராக்கிங் செய்வதாகக் கூறி அவனைத் தண்ணீரில் மூர்ச்சிக்கச் செய்தவர்கள் யார்? எவருமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை. மகேந்திரனுக்கு மூர்ச்சை தெளிந்தால் ஒருவேளை தெரியவரலாம். உயிராபத்தை விளை விக்கக்கூடிய இந்தச் செயலைச் செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்

புண்ணியமூர்த்தி சோர்ந்துபோயிருந்தார். மாணவர்கள் ராக்கிங் செய்வதை மட்டும் நிறுத்தத் தயாராயில்லை. அவர் மாணவனாக இருந்த காலத்தில் ராக்கிங் என்பது பல்கலைக் கழகத்தில் சேரும் புதிய மாணவர்களைப் பல்கலைக்கழக வாழ்க்கைக்குத் தயாராக்கும் ஒரு சிறு விளையாட்டாகவே இருந்தது. ஆனால் இப்போது ராக்கிங் கொடூர வதையாக மாறிவருகிறது. ‘றூம் ராக்கிங்’, ‘கன்டில் ராக்கிங்’, ‘கம்பஸ் கள்ளு’ என்றெல்லாம் புதிய புதிய பெயர்கள்; புதுப்புது வதைகள் பல்கலைக் கழகங்களில் நடக்கும் ராக்கிங் பாடசாலைகளுக்கும் வந்து விட்டது. ராக்கிங் என்ற பெயரில் எவ்வளவு கேவலமான செயல்கள்….. உயிராபத்தான நடவடிக்கைகள்….. புதிய மாணவர்கள் யாவரும் ‘ஸஸ்பென்ரர்’ அணியாமல் பாடசாலைக்கு வரவேண்டுமாம். ராக்கிங் செய்பவர்களின் விசித்திரமான கட்டளை இது.

முதல்நாள் காலை அவர் வகுப்பறைகளைச் சுற்றிப் பார்த்தபோது நடந்த சம்பவமொன்று அவரது நினைவில் வந்தது.

கரும்பலகையில் ஓர் ‘ஐஸ்கிறீம் கோண்’ வரையப்பட்டிருந்தது. புதிய மாணவர்கள் இருவர் பின்புறமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு கரும்பலகையில் வரையப்பட்டிருந்த அந்தச் சித்திரத்தை நாக்கினால் நக்கிக்கொண்டிருந்தனர். புதிய மாணவர்களுக்கு ராக்கிங் செய்பவர்கள் ஐஸ்கிறீம் வழங்கி உபசரிக்கிறார்களாம். வகுப்பறை எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்… கைதட்டல்கள்…

வேறொரு புதிய மாணவன் வலதுகைப் பெருவிரலை நெற்றியிலும் இடதுகைப் பெருவிரலைக் கன்னத்திலும் வைத்துக் கொண்டு சுழன்றுகொண்டிருந்தான். நீண்டநேரமாக அவன் அவ்வாறு சுழன்றதால் தலைசுற்றித் தடுமாறினான். அவனைச் சுற்றிநின்ற ஒருகூட்டம் அவன் சுழல்வதை நிறுத்தும்போதெல்லாம் அவனைச் சுற்றிக்கொண்டிருந்தது. ‘கமோன்… கமோன்…’ சுழற்சியின் வேகத்தை அதிகரிக்கும்படி காட்டுக்கத்தல்.

புண்ணியமூர்த்தி வருவதைக் கண்டதும் அவர்கள் கப்சிப்பென அடங்கிப்போனார்கள்.

கவலை தோய்ந்த முகத்துடன் மகேந்திரனின் கட்டிலருகே புண்ணியமூர்த்தி அமர்ந்திருந்தார். அவரிடம் படித்த மாணவன் ஒருவன் இப்போது அந்த ஆஸ்பத்திரியில் தலைமை டொக்டராகக் கடமைபுரிகின்றான். கல்லூரி மாணவனாக இருந்தபோது அவன் செய்த சுட்டித்தனங்கள் கணக்கிலடங்காதவை. புதிய மாணவன் ஒருவனை ராக்கிங் செய்வதாகக்கூறி அவனது தலையில் அரைவாசிப் பகுதியை மொட்டையாக வழித்ததற்காக அவர் அவனை இரண்டு வாரங்கள் பாடசாலைக்கு வரவேண்டாமென ‘ஸஸ்பென்ட்’ செய்தது இப்போதும் புண்ணியமூர்த்திக்கு நினைவில் இருக்கிறது. அவன்தான் இப்போது மகேந்திரனுக்கு விசேஷ சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறான்.

மகேந்திரனுக்கு நினைவு திரும்பியபோது மெதுவாகக் கண்விழித்தான். அருகே தந்தை கவலையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனது கண்கள் கலங்கின. புண்ணியமூர்த்தி அவனது நெற்றியை ஆதரவாகத் தடவிக்கொடுத்தார். பின்னர் மகனிடம் கேட்டார்.

“யார் உன்னை ராக்கிங் செய்தது ; தண்ணீரில் தள்ளியது யார்?”

மகேந்திரன் யோசித்துப் பார்த்தான். அவனால் அவர்களை அடையாளம் காட்டமுடியும் ! ஆம், ஒருவனை அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. உதடுகள் கிழிந்து கன்னம்வரை நீண்ட காயத்தழும்புகொண்ட ஒருவனை அவனால் அடையாளம் காட்டமுடியும்.

மகேந்திரன் முனகினான்.

“அப்பா…., ஒருவரும் என்னை ராக்கிங் செய்யேல்லை, நான்தான் படியிலிருந்து தவறுதலாக வழுக்கித் தண்ணீரில் விழுந்திட்டன்.”

– சுவடு 1996

– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *