யோகம் இருக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 1,300 
 

தன் ஊரைக் கடந்து, யாழ்ப்பாணடவுனுக்கு இட்டுச் செல்லும் அந்த கொழும்புத் துறை வீதியில் ஏறுவதற்குள், அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

“சீ என்ன சாதிச் சனங் கள்ளப்பா இதுகள்” என எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு ஒழுங்கை முடக்கிலும் நின்று அவன் எப்பொழுது வீட்டைவிட்டு வெளிக்கிடுவான் நாவைச் சுழற்றிச் சாட்டையாய் வீசலா மெனக் காத்திருந்தது மாதிரி.

“என்ன தம்பி! கன நாள் லீவோ?” – “ஊரிலே தான் நிக்கிறாய் எண்டு கேள்வி. ஆனா, வெளியிலை தலைக்கறுப்பையே காணன்”- “இனி ஊரோடை தான் தங்கிறதோ?” இந்த சொடுக்கல்களிடையே, அவன் அடிபட்ட நாயாய் “விர்” ரென்று, தன் ஊரைக் கடந்து வந்திருக்கின்றான்.

சற்று முன் “என்ன தம்பி! பிழைப்பெல்லாம் எப்பிடி?” என் பிழைப்பில் அழுத்தம் கொடுத்துக் கேட்டுப் போனானே, அந்த சிவராசா! அவனிடம், சைக்கிள் சீற்றின் இரு புறமும் பிதுங்கி வழியும் அந்த சதையைப் பிடித்து உலுக்கி ”இது மட்டும் நேர்மையாகச் சம்பாதித்ததா?” என கேட்டிருக்க வேண்டுமென்று ஒரு கணம் கிளர்ந்து மடிந்த ஆவேசத்தில் நினைத்துக் கொண்டான்.

எதடா! தங்கள் ஊர்க்காரனெருவன், நல்ல உத்தியோகத்திலிருக்கிறான், என்று பெருமைப்பட வேண்டாம்! அவன் வந்து நொந்துகிடக்கும் பொழுது இப்படி நக்கல் பேச்சுகளால், குத்திக் காட்டாமலாவது இருக்கத் தெரியாதா? எல்லோருக்கும், தான் உத்தியோகம் பார்த்தபொழுது எரிச்சல். இப்பொழுது பரம சந்தோஷம்.

அகன்று, நீண்டு வந்த கொழும்புத் துறை வீதி, அடிக்கடி அவனின் கவனத்தைக் கோரி நின்றது. அங்கு மிங்குமாய் பறக்கும் ஸ்கூர்ட்டர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடக்கும் கார்கள். வரப்போகும் நகரத்தின் சுறுசுறுப்பினைக் கோடிகாட்டி நின்றன.

ஒரு மினி, மாக்ஸி, மிடிக் கதம்பம், கைகளில் நோட்ஸ் புத்தகங்களுடன் அவனைக் கடந்து சென்றது. யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விட்டாலும், இந்த ரியூட்டறிகளுக்கு ஒய்வே இல்லை.

சட்டென்று அவன் கண்கள் தடுக்கப்பட்டு நின்றன. எதிர்ப்புறத்தில், ஸ்கூட்டர் ஒன்றின் மேல் மிதந்து வரும் முகம். ஐயோ! தன்னோடு யூனிவஸிற்றியில் படித்தவன்; பின்பு, வவுனியாக் காட்டில் எங்கோ ஒரு பள்ளிக்கூடத்தில் டெம்பரரி டீச்சராகத் தன்னோடு வேலை செய்தவன்; கண்டு விட்டால் ஏதாவது கேட்கப் போகிறான், பாவி! அவன் பயந்தது போலவே ஸ்கூட்டரில் வந்தவன் அவனைக் கண்டுவிட்டான். கையை உயர்த்தி இறக்கிவிட்டு, ஸ்கூட்டரையும் நிறுத்திக் கொண்டான்.

அகப்பட்டாயிற்று! “ஹலோ! கண்டு கன காலம்! இப்போ ஸி.ஏ.எஸ். ஒபிஸரல்லா? எங்கே போஸ்டிங்?” உண்மையாகத்தான் கேட்கிறானா? அல்லது வேண்டுமென்றே தன்னை ஆழம் பார்கிறானா? தான் ஸி.ஏ. ஏஸ் ஒபிஸர் என்பது தெரிந்த இவனுக்கு, மற்றதும் தெரியாமலா இருக்கும்?

எண்ணத்திற்குத் தொடர்பில்லாத ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு கிழக்கு மாகாணத்தில் ஒரு பட்டிக் காட்டுப் பகுதியின் பெயரைச் சொன்னான். அங்கு தான் ஏ.ஜி.ஏ ஆக இருப்பதாக, கிழக்கு மாகாணத்தில் முன்பு வேலை பார்த்தது நல்லதாகிப் போய்விட்டது. அதனால் தான் அப்பகுதியிலுள்ள கிராமப் பகுதிகளின் பெயர்களும் தெரிந்திருக்கின்றன. தான், கடைசியாக வேலை பார்த்த இடத்தைச் சொன்னால், நாளைக்குப்

பேப்பரில் வந்து, ஊர் சிரிக்கும்பொழுது இவன் தெரிந்து கொண்டு விடமாட்டானா?

“ஓ! சந்தோஷம். அப்ப எப்பிடி மற்றப் புதினங்கள்?” சிறிது நேர விசாரிப்பின் பின் “அப்ப வாறன்” என்று சொல்லி, வந்தவன் விடைபெற்றுக் கொண்டான். இவன் படித்தவன்; பட்டினவாசி; தெரிந்திருந்தாலும் தெரியாதது மாதிரிப் பாவனை காட்டி சுகம் விசாரிக்கும் இங்கிதம் அறிந்தவன். எங்கள் ஊர்ச்சனம் போலவா? அன்று வவுனியா, ஆசிக் குளத்தில், தன்னோடு இருந்தபொழுது ஆசிரிய வேலையை நிரந்தரமாக்க யாரைப் பிடிப்பது என்று ஒடித்திரிந்தவன், இவன் ஸ்கூட்டரில் போகிறான். இப்பொழுதும் டீச்சராகத்தான் இருப்பானோ, அல்லது மிடில் ஈஸ்ற் என்று எங்கேயும் போய் உழைத்து வந்திருப்பானோ? அப்பொழுதான், அவனைப் பற்றித் தான் ஒப்புக்குக் கூட ஒன்றும்கேட்காதது தெரிந்தது. இங்கிலிஷ் மீடியத்தில் படித்தவன், வெளிநாடுகளுக்குப் போய் அள்ளிக் கொண்டு வந்திருப்பான்.

எல்லோரும் ஸ்கூட்டரில் போகிறார்கள். தான் ஒரு ஏ.ஜி.ஏ. ஐயாவின் பழைய “லொடக் லொடக்” சைக்கிளில் தானே போகிறேன். லஞ்சம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். அப்படி வாங்கியிருந்தால் தான் கோட்டை கட்டியிருப்பேனே!

அவன் தன்னால் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்ட மனைவியின் சீதன வீட்டை நினைத்துக் கொண்டான். கோட்டை மாதிரித்தானா? என்ன செய்வது, நகுலா வீடு பழைய பற்ரன் எனச் சொல்லி, வீட்டைத் திருத்த வேண்டுமென்று விடாப் பிடியாக நின்றாள். கை வைத்த பொழுது, அது இவ்வளவு காசை விழுங்கும் என்று நினைக்கவில்லை.

முதலில் அவன் ஐயாவின் கடனை அடைக்க வேண்டியிருந்தது. துவக்கத்தில், பயந்து பயந்து கொண்டு லஞ்சம் வாங்கிய காலத்தில், எத்தனையோ “சான்ஸ்’களை வெறும், பயத்தினால் இழந்திருக்கிறான். அதற்காகப் பின்பு அங்கலாய்த்திருகிறான். பிறகு பழகி விட்டது. யார் யாரிடம் இவ்வளவு இவ்வளவு தொகை வாங்க வேண்டுமென்று ‘சார்ட் தயாரித்து வைத்தது.

தங்கைக்கு “டொனேஷன்’ கொடுத்து நல்ல உத்தியோக மாப்பிள்ளையாகப் பார்த்தான். வீடு, கட்டிக் கொடுத்தான் காசிற்குத்தேவை, எப்பொழுதுமே இருந்து வந்தது. அவன் அந்தக் கலையில் தீவிரமாக முன்னேறி விட்டிருந்தான். தான் ஒரு சாதாரணமானவன். உலக இயல்புகளுக்கு உட்பட்டவன்; தகழியின் கேசவப்பிள்ளை மாதிரி. இயற்கையைத் தானே தகழி’யும் எழுதியிருக்கிறார்.

அவன் கண்முன், அவனால் அத்தாட்சிப்படுத்தப் பட்ட பல கள்ளக் காணி உயில்கள் மிதந்தன. ஒரு நாள், இப்படியான உயில்கள் அறுபதை அவன் அங்கீகரித்திருக்கிறான். அரசாங்கக் காணிகளை தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக இந்த கள்ள உறுதிப் பத்திரங்கள் காட்டின. இவற்றைக்காட்டி அரசுக்குச் சொந்தமான காடுகளிலுள்ள மரங்களைத் தறித்துக் கொண்டு போனார்கள். லொறி லொறியாக சம்பாதித்தார்கள். லட்சம் லட்சமாக இதற்கு அனுமதித்த அவனுக்குக் கிடைத்ததோ ஆயிரம், இரண்டாயிரம்!

இந்த ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டவன், ஐம்பது, இருபத்தைந்துகளுக்கு கூட ஆசைப்பட்டான்; அவனின் ‘சார்ட்’ எல்லோரையும் உள்ளடக்கியிருந்தது.

அந்த சம்பவத்தை – இதுவரை ஆயிரத்தெட்டுத் தரம் நினைத்து அது நடந்திராவிட்டால் என எண்ணி மாய்ந்து கொண்ட சம்பவம், அதை நினைத்துக் கொண்டான்.

அந்தக் கிராமவாசி உண்மையிலே இயலாதவன் போலத்தான் தோற்றமளித்தான். சமூக சேவைத் திணைக்களம் வழங்கும் மானியத் தொகைக்கு விண்ணபிக்க வேண்டிய எல்லாப் பத்திரங்களும் அவனிடம் இருந்தன. அந்தப் பகுதி கிராம சேவகரும், அவ் விண்ணப்பத்தை ஏற்கச் சொல்லி முறையாகச் சிபார்சுக் கையெழுத்திட்டிருந்தார். அவன் ஐயப்பட ஒன்றும் இல்லை.

விண்ணப்பப் பத்திரங்களை நீட்டிய கை வேறு ஒன்றையும் நீட்டாதது, அவனுக்கு எரிச்சலூட்டியது. “என்னப்பா! சும்மாயிருந்து கொண்டு தருமப்பணம் வாங்க ஆசை. அதுக்காக ஒண்டும் குடுக்க மனமில்லை” என்று சிடுசிடுத்தான்.

“கொண்டு வந்திருக்கிறன் ஐயா!” என்று சொல்லி, அந்தக் கிழவன் அவசரமாக மடியை அவிழ்த்து சில கசங்கிய நோட்டுகளை அவனிடம் நீட்ட அவன் வாங்க….

தடாலெனத் தள்ளு கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ள வந்தவர்கள் – லஞ்சத் தடுப்பு உத்தியோகத்தர்களாம்.

அவன் பிடிபட்டு விட்டான், கையும் மெய்யுமாக, பிறகு என்ன! இரண்டு நாள்களில் மேலிடத்தில் இருந்து செய்தி வந்தது. அவனை பதவியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்திருப்பதாக.

இரவோடு இரவாக, குவார்ட்டாஸ் வீட்டை ஒழித்து, சாமான்களை லொறியில் ஏற்றிவிட்டு, மனைவி, குழந்தைகளோடு, தானும் கிளம்பி விட்டான்.

மனைவியின் ஊராகிய ஆனைக்கோட்டையில் நெடுநாள் தங்கியிருக்க முடியாது. பெண் எடுத்த ஊரில் பரிசுகெட முடியுமா?

அவளை விட்டு விட்டு, பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டான். வெளியில் தலைகாட்ட விருப்பமில்லை. *கண் மண் தெரியாமல் வாங்கினான். அம்பிட்டுட்டான்” ஊர்ச்சனம், இவ்வாறு கதைப்பதாகப் பிரமை.

எத்தனை நாள், வீட்டில் முடங்கிக் கிடப்பதென்ற நினைவில், இன்று லைப்ரரிக்கு போய் வர துணிந்தது, பெரிய பிழையாகிவிட்டது.

சுண்டுக்குளி பெண்கள் பாடசாலையைத் தாண்டி, சென். யோன்ஸ் கல்லூரியை நோக்கிச் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. பாடசாலை விடுமுறைக் காலமிது. அவை எல்லாம், மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தன. இல்லாவிட்டால் பள்ளிக்கூடம், மூடும் நேரமாகிய பின்னேரம் மூன்றரை மணிக்கு தெரு அமளிப்படும்; சுண்டுக்குளி மாணவிகளும் சென். யோன்ஸ் மாணவர்களுமாக, அவனும் அப்படித்தான் கவலையற்ற மாணவனாய், எதிர்ப்பக்கத்திலிருந்து வரும் சுண்டுக் குளிப் பெட்டைகளோடு, கள்ளமில்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டு இத் தெருவில் திரிந்திருக்கின்றான். அவர்களில் சிலரைக் கொண்டு தன் நோட்ஸ்க்களை எழுதுவித்திருக்கின்றான். பாடசாலையிலும்சரி, யூனிவஸிற்றியிலும் சரி, அவனிடம் நோட்ஸை வாங்கிப் போய் முத்துமுத்தான கையெழுத்தில், நேர்த்தியாக நோட்ஸ் எழுதிக் கொடுக்க அவனுக்குச் சில பெண்களிருந்தனர். ஒரு சுண்டுக்குளிப் பெட்டையின் ஞாபகம் கூட கமலாசனியோ, என்னவோ, கூர் நாடியும், அழகான மூக்கும் அகன்ற கண்களுமாய்…

அது ஒரு இனிய காலம்! எதிர்படுபவற்றையெல்லாம் சுவையாக நோக்கும் புத்திளமை. இப்பொழுது, அவை எல்லாம் எங்கே? அருமையானவற்றை எல்லாம் இழந்து விட்ட சோகம் நெஞ்சைக் கப்பி பிடித்தது மாதிரி “ஏன், ஸி.ஏ.எஸ் பரீட்சை எடுத்தேன், பாஸ் பண்ணினேன்” என்றிருந்தது.

இப்பொழுதோ, படித்தவன், பழகியவன், எங்கே எதிர்ப்படுகிறான் என்று பயந்து செத்துக் கொண்டு….

யாழ் நகரின் அகன்ற பெரும் சாலை, அடர்ந்த சாலை ஒர மரங்கள், சுப்பிரமணியம் பூங்கா. ஒன்றுமே உறைக்கவில்லை.

லைப்ரரி வாசல், வீணையும் கையுமான சரஸ்வதி சிலையும், சுற்றுப் புல்வெளியும் பளிச்சென தெரிந்தன. கேற்றைக் கடந்து உள்ளே நுழையும் பொழுது, லாவகமாக சைக்கிளை ஒடித்துத் திருப்பி “விர்ரென்று” லைப்ரரிக்கு வந்து நடையும் குதியுமாக லைப்ரரி வாசலை மிதித்த பழைய நாட்களின் நினைவு ஓடி வந்தது.

சைக்கிளை ஒரமாக நிறுத்தி, உள்ளே நுழைந்தான். அவ்வளவு சன நடமாட்டமில்லை. ஆனாலும் மகஸின் செக்‌ஷனுக்கு போக விருப்பமில்லை. பள்ளிக்கூட விடுமுறை நாட்கள். தெரிந்தவர்கள் அதற்குள் இருக்கக் கூடும். திருப்பி ரெபரன்ஸ் செக்‌ஷனுக்குப்போக படி ஏறினான். அங்கு சோதனைக்குப் படிக்கும் மாணவர்களை விட வேறு ஒருவருமிருக்க மாட்டார்கள் என்ற நினைப்பு.

மேலே இருந்து யாரோ வருவது கண்டு படித்திருப்பத்தில் தயங்கியவன், நிமிர்ந்து பார்த்த கண்கள் மருண்டன. இவன்… யூனிவஸிற்றியில் படித்த காலத்தில் இருவருமே கட்சி கட்டிக்கொண்டு எதிரணியில் நின்றவர்கள்; ஏட்டியும் போட்டியும், சொல்லடியும், கூழ்முட்டை அடியுமாக…

“ஒ” ஒரு இதழ்க் குவிப்பு ஏளனமா? கூடவே ஒரு “ஹலோ”வுடன் அவனைத் தாக்கிய ஒரு நமட்டுச்சிரிப்பு. அவனுக்கு மேல் எல்லாம் ஏதோ ஊர்வதுபோல பதிலுக்கு “ஹலோ”வை முணுமுணுத்தவாறு அவன் நகர்ந்து கொண்டான். இறங்கியவனின் அந்த எல்லாம் அறிந்த சிரிப்பு…. “என்னப்பா! மார்க்ஸியவாதியே. லஞ்சமும் ஊழலும் முதாலாளித்துவ அம்சமாயிற்றே” என்று கேட்டுச் சிரிப்பது போல.

மேலே வந்தவன், உள்ளே போய் ஒரு சீற்றில் அமர்ந்து கொண்டு விட்டான் மனம் படபடத்துக் கொண்டிருந்தது. சொல்லால், பார்வையால், கேட்காமல் வெறும் சிரிப்பால் மட்டும் நையாண்டி பண்ணிவிட்டுப் போய் விட்டான்.

அவன் தலை குனிந்தவாறு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருந்தான். ஏதோ ஒரு நினைவு; இந்த பாவனை மிகவும் பழக்கப்பட்டதாக…

ஒபிஸின் தள்ளு கதவின் கீழே வெளியே நிற்கும் கால்களைக் கண்டதும், அவன் இவ்வாறுதான் தன்னை “பிஸி’யாக்கிக் கொள்வான். அவனை, எவ்வாறு, தம்மைக் கவனிக்கச் செய்ய வேண்டும் என்பது வருபவர்களுக்கு அனேகமாகத் தெரிந்திருக்கும். ரெடியாகத் தான் கொண்டு வந்திருப்பார்கள்.

அவனுக்கு எரிச்சலாக இருந்தது. எதை மறந்து சிறிது இருக்கலாமென எண்ணி வெளியில் புறப்பட்டானோ அதுவே அவன் நினைவை உலுக்கி ஆட்டுகிறது.

‘ஏன் வந்தோம்’ என்று எண்ணம் எழுந்தபின்பு அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. எழுந்து விட்டான்.

வெளியே வரும்பொழுது எதிரே கேட்போர் கூட்டத்தில் ஆட்களின் தலைகள். ஏதோ கருத்தரங்கோ பேச்சோ அரக்க பரக்க மேலே ஏறிவந்த பொழுது இதைக் கவனிக்கவில்லை. இப்பொழுது, எந்த நேரத்திலும், பேச்சு முடிந்து, கதவைக் திறந்து கொண்டு மக்கள் வெளியே வரக்கூடும். தாமதிக்க, தாமதிக்க எதிர்ப்படுபவர்களே அதிகமாகும். யாழ்ப்பாணத்தானுக்கு தன் பாட்டுக்கு. தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போகத்தெரியாது.

அவன் கீழே இறங்கி விட்டான். கண்ணாடி ஊடாகத் தெரிந்த மகஷின் செக்‌ஷனில் அதிக ஆட்களில்லை. ஆனாலும் வேண்டாம். அவன் வெளியே வந்தான். சைக்கிளை எடுப்பதும், தாவி அதில் ஏறுவதும் ஏதோ தன்னியக்கமாக நடைபெறுவது போல.

மீண்டும் வந்த வழியே போக விரும்பவில்லை. கரைப்பாதையாகப் போனால் நல்லது. ஆஸ்பத்திரி விதிக்கும் போகவேண்டும். ஒரு அலுவல்.

கோபுர மணிக்கூடு, எப்பொழுதும் போல் அசையாமல் நின்றது. செல்வாவின் நினைவுத்துTபி பளிச்சென்று வெள்ளைவெளேராய் எழுந்து நின்றது. “சே! மனிதனுக்கு எத்தனையோ பிரச்சனைகள், அவற்றைத்தீர்க்க வழியில்லை. அதற்கு நடுவே இந்த நினைவுச் சின்னங்களும் சிலைகளும் புதிது புதிதாக. புதிதாக முளைத்து விட்டிருந்த அவற்றை ஒருவித வெறுப்புடன் பார்த்தான். இவை அமைக்கச் செலவான காசைக்கொண்டு எத்தனையோ ஏழைகளை உயர்த்த பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கலாம்.

மேலே நினைப்பதற்குள், தனக்குள் இருந்து கொண்டிருந்த தன் ஒரு பகுதியே தன்னை விசித்திரமாக பார்ப்பது போன்று. ஏழைகள் பாட்டாளிகள், திட்டங்கள் என்றும் வெளியில் பேசலாம். எழுதலாம் உன்மனதில் தப்பித்தவறி நினைத்து விட்டால், இப்படி ஒரு வினோத அனுபவம்.

அவன், ரோட்டில் கவனம் செலுத்த முற்பட்டான். சந்தடி குறைந்த முற்றவெளி மறைந்து கொண்டு வந்தது. வீரசிங்கம் மண்டபமும், எதிரே பதினொரு சிறுதூண்களும். தூண்கள் விழுந்து கிடக்கவில்லை.

தபால் கந்தோரைக் கடக்கும் நேரம் பெடலைச் சுழற்றி வந்த கால்கள் தடக் என நின்றன. சைக்கிள் சங்கிலி அறுந்து, பாதி ரோட்டிலும், பாதி சைக்கிளிலுமாகத் தொங்கியது. எதிலும் எரிச்சல் எரிச்சலாக வரும் நேரம். சைக்கிள், வேறு வாங்கிக்கட்டி மொத்தமாகத் தருகிறது.

இதை உருட்டிக்கொண்டு போய், எங்கேயாவது ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையில் தள்ளிவிடவேண்டும். சைக்கிளில் கூட ஆத்திரத்தைக் காட்ட முடியாத கையேலாத்தனம்.

தெரிந்த ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையில், சைக்கிளைக் கொடுத்துவிட்டு, கடையை விட்டு வெளியே வந்தான்.

அவனைக் கட்ந்து சென்ற ஒரு கார், பின்பு தள்ளிப்போய் நின்றது.

கதவைத் திறந்து கொண்டு இறங்கியவன், நாவுக்கரசன், பிஸினஸ்மன். தருணம் பார்த்து அரசியலிலும் புகுந்திருக்கிறான். ஆளும் கட்சியின் மாவட்டச் செயலர் இப்பொழுது.

தன் முன் எதிர்படுபவர்கள் எல்லாரும் கவலையற்று, திரியும் பொழுது தான் மட்டும் எல்லாவற்றாலும் புறக்கணிக்கப்பட்டு அனாதரவாய் நிற்பது போன்ற சகிக்க முடியாத உணர்ச்சியில் கண்களில் நீர் கசிந்து விடும் போலிருந்தது.

‘எங்கே டி.ஆர்.ஒ.? கிளிநொச்சியிலா? அவன் மறுத்து தான் கடைசியாக வேலை பார்த்த ஊரின் பெயரைச் சொன்னான். “இப்ப. இல்லை . இன்ரடிக்ஸனில் நிற்கிறன்” அடைத்துக்கொண்டு வ்ரும் தன் குரலைக்கேட்க என்னவோ மாதிரி இருந்தது. குரலை சரி செய்து கொண்டான். “ஒருத்தனட்டை இருபத்தைஞ்சு ரூபா வாங்கினதை ‘பிறைபறி ஒபிஸேஸ் கண்டு விட்டாங்கள்.”

அவனுக்கே விளக்கவில்லை. இதை எல்லாம், ஏன் இவனிடம் சொல்லி அழுதேன் என்று. நண்பனின் குரலில் இருந்த தன் ஈர்ப்பு, இப்படி அவனைப் பேச வைத்ததா?

‘என்னடாப்பா, ஒரு ஸி.ஏ.எஸ். ஒபிஸர், இப்படியா நடுரோட்டிலை நடந்து கொண்டு. அவன் கையைப் பிடித்துக் கொண்டான்.

“இல்லை, சைக்கிளிலை வந்தனான். செயின் அறுந்துப்போச்சு, ஒட்டக் குடுத்திட்டு வாறன்”

“நல்லதாப்போச்சு, வா காரிலை ஏறு. உன்னை கொழும்புத்துறையிலே விட்டு விட்டுப்போறன்”

“இல்லை. எனக்கு வேறை வேலையுமிருக்கு. நான்”

“ஏறடா காரிலை. அதுகளை எல்லாம் போற வழியிலை பார்த்துக்கொண்டு போகலாம்” வந்தவன் இழுத்தான். அவன் இழுபட்டான். அவனின் கரிசனத்தோடு கூடிய வற்புறுத்தலை ஏற்கவேண்டும் போலிருந்தது.

தனித்தனியாக முன்சீற்றுகள்; புது மொடல் சிறுகார், யாழ்ப்பாணத்துத் தெருக்களிலும் குலுக்கல், நலுங்கலின்றி மெத் என்று சென்றது.

அந்தக்காலத்தில் சென். யோன்ஸ் கல்லூரியில்தன்னோடு படிக்கும் பொழுதே இந்த நாவுக்கரசன், ஒரு ஷோக்குப் பேர் வழி! படிப்பை மூளையிலே ஏற இந்த ஷோக்கு தனம் விடவில்லை. ஆனாலும் இவன் நல்லவன் தன், நண்பர்களுக்கு உதவுபவன்.

திரும்பிய நாவுக்கரசன், அவனைப் பார்த்தான். “இதுவா விஷயம்? இதுக்காகவா. ஆள் இப்படிச் சோர்ந்துபோனது மாதிரி இருக்கிறாய்?” என்று சிரித்தான்.

“கண்ணாலை பாத்திட்டாங்கள்”

“அட! அதுக்கு என்னப்பா! சாட்சி சொல்ல வரக்கை, இவங்களை கேள்விகள் போட்டு விசாரிக்கிற மாதிரியிலை எல்லாம் இருக்கு அந்த வவனிக்குளத்து அப்போதிகரியை, அந்தக் கட்சி ஒக்கனேஸர் விடுவிக்கேல்லையா? உனக்குத் தெரியாது? எல்லாத்தையும் சரிப்படுத்தி விடலாம்”

“அதோடை, கிண்டினா, வேறையும் எத்தனையோ பிரச்சனைகள் வரும். கிறவுண் லாண்டிலை கள்ள உறுதி காட்டி, மரம் தறிச்சிருக்கிறாங்கள். மீன் பிடி கொப்பரேஷனோடு. எல்லாத்துக்குமா, ‘இன்கொயறி’ வைக்கப்போகிறார்களாம்”

“இன்கொயறி பெரிய இன்கொயறி. மினிஸ்டர், சமரசிங்கா தானே. அவன் என்றை பெஸ்ட் பிரறண்டு. பிடிக்கிற மாதிரிப்பிடிச்சா. இதை அமுக்கி விடலாம் இது எல்லாம் சிம்பிளடா மச்சான்; என்னை நம்பு, நான் செய்து தாறன்”

கார் நழுவி ஓடிக்கொண்டிருந்தது அவன் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நாவுக்கரசன் லேசானவன் அல்ல. சக்தி வாய்ந்தவன் என்பது அவனுக்குத் தெரியும்.

மனம், லேசாகிக் கொண்டு வந்தது. இதுவரை எதிர்ப்பட்டு, சிரிப்பால், சொற்களால் தன்னை துருவியவர்களை அவன் மறந்து கொண்டிருந்தான். இன்று, வெளியில் புறப்பட்டது, எவ்வளவு நல்லதாகப் போய்விட்டது. இல்லாவிட்டால், இந்த நாவுக்கரசனைச் சந்தித்திருக்க முடியுமா? இவன் நினைவுதான் தனக்கு வந்திருக்குமா? ஏதோ ஒருவித யோகம் தான் இன்று இவனை சந்திக்க வைத்திருக்கிறது.

காரின் கண்ணாடிக் கதவினூடே யாழ்நகர், தன் பாட்டுக்கு தன் வேலையைப் பார்த்துக்கொண்டு சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *