கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 1,680 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாழா அவளது செல்லப் பெயர். நல்ல தேஸ். கட்டுக்குலையாத அமைப்பு. நான்கு குழந்தைகளின் தாயான பின்பும் அந்த உடல் வாகு ஆண்டவன் கொடுத்த வரம்.

சிறிய புன்முறுவலுடன் அவளின் குரல் தெளிவாக, ஆனால் மெதுவாக ஒலித்தது. “ம்……..ம்ம்… எங்க சொல்லுங்க! என்னப் பார்த்துச் சொல்லுங்க!….ம்… ஏன் சொல்ல மாட்டீங்க.” நந்தனை அவள் பார்த்தபடியே நின்றாள். நிலை குலைந்த நந்தன் தலை குனிந்து மெதுவாகச் சொன்னான் “நான் ஏன் இந்த உலகத்தில் இருக்க வேண்டும் என்றுதான் அடிக்கடி நினைக்கிறேன்” அவன் தொடர்ந்தான் “என்னுடைய முயற்சியில் தனித்து நின்றுதானே குருவி சேர்க்கிறாப்போல கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துத்தானே இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.”

“ஆ…. ஆஹா……… அப்படியா அப்ப நான் ஒன்றுமே இல்லையா? அப்ப சரி….. என்னத் தனியேவிட்டுப் பார்க்கிறீங்களா?”’ என்ற யாழாவைத் திரை போட்ட கண்களால் பார்த்தான் நந்தன். யாழா தொடர்ந்தாள் “இதோ பாருங்க நான் உங்க பின்னால மோட்டார் சைக்கிளில் இருந்ததால்தானே உங்கட வாடிக்கையாளர்கள் எல்லோருமே நாள் தவறாமல் ஒழுங்காகக் காசையெல்லாம் தருகிறார்கள் என்று நீங்க சொல்லலையா? என்ர முகத்தப் பார்த்து, இல்லை என்று சொல்லுங்க பார்ப்பம்” என்றாள், நந்தன் காதைச் சொறிந்தான்.

அவளுடைய ராசி திருமணத்தின் பின்பு காசு புரண்டது. பெரியதொருவீடு கட்டி முடித்தார்கள். சமூக அந்தஸ்த்தும் ஓரளவு கிட்டியது. வியாபாரம் சூடுபிடித்தது. வீடு கலகலப்பாகியது. .

வீட்டின்முன் அழகிய பூந்தோட்டம் ஒன்றை யாழா அமைத்தாள். கணவனுக்குச் சமைப்பது பிள்ளைகளைப் பராமரிப்பது பூந்தோட்டம் அழகு படுத்துவது என வாழ்ந்தாள். சில காலம் செல்ல வீட்டிற்கு வியாபாரம் சம்பந்தமாகப் பலரும் வரவேண்டிய நிலை ஏற்பட்டது. நந்தன் வெளியூர் செல்லும் நேரங்களில் வரும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியோகமான வட்டவடிவானதொரு கொட்டிலை அமைத்தாள் யாழா. கொட்டிலைச் சுற்றியிருந்த அழகிய குறோட்டன் செடிகளும், தென்னை மரங்களின் நிழலும், திராட்சைக் கொடிகளும் மாலை வேளைகளில் வனப்பான சூழல் ஒன்றை உருவாக்கித் தந்தது. –~–

யாழாவின் கைவண்ணம் வரும் வாடிக்கையாளர்களின் வாழ்த்துக்களைப் பெறத் தவறவில்லை. மாளிகையின் ராணி போல் அவள் இருந்தாள். வெளியில் செல்வதில்லை, வெயில் இல்லை, நான்கு குழந்தைகளின் பின்பும் அவள் மிகவும் அழகியாகவே இருந்தாள். வீட்டின் பராமரிப்பும் அவளை உயர்த்திக் காட்டியது. நந்தனை விடவும் கவர்ச்சிமிக்க வாடிக்கையாளர்களும் அங்கு வந்து சென்றனர். பூந்தோட்டத்தில் இருந்த கொட்டிலில் ஆற அமர இருந்து யாழாவும் அவர்களை சளைக்காமல் ஆதரிப்பாள்.

இப்பொழுது யாழாவுக்கு நந்தன் இல்லாமலேயே வாழ முடிந்தது. தேவையான அத்தனையும் வீடுதேடி வந்தன.

நந்தனுக்கும் யாழாவுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் தேடி வந்தது. பிள்ளைகள் பாடசாலைகளில் கற்கின்றார்கள். குழந்தைகள் இவளுடைய அழகுதான். நந்தனுக்கு பிள்ளைகளின் கவலைதான் பெரிதாக இருந்தது. அதுமட்டுமல்ல அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு அத்திவாரம் கட்டிக்கொண்டிருக்கும் வேளையில்…… அவன் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் இருந்தான்.

“சரி ஒன்று சொல்லட்டுமா யாழா” என்றான் நந்தன். “என்ன என்ன!: விரைவாகச் சொல்லுங்கோ உங்களது முடிவில்தான் நமது இருவரது எதிர்காலமும் தங்கியுள்ளது. அதற்காகவேதான் காத்திருக்கிறேன்” என்றாள் யாழா.

“கஸ்டமான விடயம்தான் ஆனால் வியாபார உலகத்தில் இது ஏற்க வேண்டியதாகவும் மாறிப்போச்சு. என்னமோ யாழா இங்கு, அதுதான், இந்த வீட்டில் பிள்ளைகள் பிள்ளைகளாக வளரணும். என்ன சரியா? என்னுடைய பிள்ளைகள் கொஞ்சக் காலமாவது நன்றாக வளரட்டும்”

“குழந்தைகளை இப்ப நீங்களே பார்க்கிறீங்க. காசைப் புரட்டிட்டாப் போதும் . நாம கனடாவுக்குப் போயிட்டா நம்ம குழந்தைகளை, அரசாங்கமே பார்த்துக் கொள்ளும். . உங்களுக்குத் தெரியுமா? ரீச்சர் அடித்தாலும் தாய் அடித்தாலும் கனடாவில் ஒன்று தான். இரண்டு பேருமே கம்பிதான் எண்ணணும், அவ்வளவு சுதந்திரம்;; நீங்க வியாபாரத்தக் கவனிங்கோ நான், மற்றதெல்லாம் பார்த்துக் கொள்வேன் யாழா தொடர்ந்தாள்.

கொஞ்சக் காலம் இப்படிப் போன பிறகு எல்லாம் சரி வந்திடும். நீங்க கவலைப்படாமப் போங்க, இப்ப அங்க உங்களுடைய கொள்முதல் சரக்கு வந்திருக்கும், இல்லையா? என்று அவனைத் தட்டிக்கொடுத்தாள் யாழா.

அவன் போவதையே பார்த்துக் கொண்டு நின்றாள். அவளின் பிள்ளைகள் ரீவி பார்க்கிறார்கள். ஆலோசனைக்காக தோழியிடம் செல்கிறாள் யாழா.

– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *