முக்கோண நட்புக்கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 3,830 
 

நாங்க மூன்று பேரும் மூணாவது படிக்குறதுலேந்து நண்பர்கள். நான், கர்ணன், பாலா. பள்ளிகளில் மூணு முட்டாள்கள்னு பேருடுத்தவங்க, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாதப்பவே சந்தோஷப்பட்டவங்க. என்ன அர்த்தமா இருந்தா என்ன?, மூணு பேரும் சேந்து இருக்கோம் அவ்ளோதான் எங்களுக்கு வேணும். எங்களுக்குள் என்ன ஒற்றுமை?, என்ன வேற்றுமைனு?, விவரம் தெரியாதவரை எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் அல்ல, கருத்துகளே இருந்தது இல்ல.

பத்தாவது வந்திருப்போம் அப்போதான், மத்தவங்க எங்கமேல நெறைய திணிச்சாங்க. அது எங்களுக்கு புரிந்தும் புரியாமல் இருந்தது. மத்தவங்களோட பார்வை எங்களுக்கு பிடிக்கல. இருப்பினும் அங்கங்கே சிறு சிறு மாற்றம் எனக்கு புரிந்தது அவனுகளுக்கும் தெரிந்திருக்கும். உதாரணமாக எங்க நட்புக்குள் கட்டமைக்கபடாத வித்தியாச கோணம் இருந்தது.

கிரிக்கெட்டில் பாலாவுக்கு பால்னா கர்ணனுக்கு பேட்னா எனக்கு வேற வழியில்ல ஸ்டேம்புதான். எப்போதும் என்னோட அபிப்பிராயம் இறுதியில்தான் இருக்கும். சினிமான்னா, கர்ணனுக்கு சிவாஜி, கமல் அஜித் ண்ணா பாலாக்கு என்னென்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அப்போ நான் அங்கொன்னும் இங்கொன்னும் படத்த பேர புடிச்சி ரெண்டும் கலந்த மாதிரியும், புதுசா ஒன்னும் சேர்த்து உதாரணமாக, பாக்யராஜ், விஜயகாந்து விக்ரமுன்னு எதாவது இருக்கும். அதாவது மூனும் கெட்டான் கோணமா இருக்கும்.

ஆனால் எது எப்டியோ பள்ளி முடித்துவிட்டோம்.எனக்கு இப்போது பயம் வந்துவிட்டது, கல்லூரி பிரித்துவிடுமோன்னு. இதுவரை எங்கள் நட்பு உடையாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் நாங்கள் எங்களை பக்குவமற்றவர்களாக அடையாளபடுத்திகொண்டது. ஆனால் இப்போது, அது முன்பே நாங்கள் அறிந்திருந்தாலும் முக்கியமாக, பொருளாதாரம், சாதி ஏனைய கிராம பகுப்புகளில் வேறுபட்டவர்கள் என ஊரார்கள் மற்றும் பெற்றோர்களின் எதிப்பை மீறி, எங்களின் வாழ்க்கை தேடல் நோக்கிய கல்லூரி பயணம் பிரித்துவிடுமென்று பயந்தேன். எனக்கு இருவரையும் சமமாக பிடிக்கும், அவர்களுக்கும் என்மேல் அப்படித்தான். ஆனால் அவர்களுக்குள் அந்த புரிதல் குறிப்பாக பத்தாவதில் இருந்து குறைந்திருந்தது.

நான் எப்போதும் பாலம்போல் இருவருக்கும் , இரு கரையும் நகராமல் இருந்ததால்தான் பாலத்திற்கே வேலை. ஒருத்தன் இன்ஜினியரிங், இனோருத்தன் ஆர்ட்ஸ் டிகிரி , நான் டிப்லமோன்னு வீட்டில் விதி எழுதப்பட்டது. இப்போது நான் எவ்வளவு நடித்தாலும் நாங்கள் பிரியாமல் இருக்க மூன்றாவது கோணத்தை பிடித்தாலும் எதுவும் நடக்க வாயப்பில்லை.

அன்று என் நண்பர்கள் எனக்கு ஒன்று புரிய வைத்தனர். இருவரும் சேர்ந்து என்நிலைக்கு போராடி சண்டைபோட்டு அழுது தொழுது மூவரும் DME சேர்ந்தோம். அப்போது புரிந்தது எனக்கு, இதுவரை விட்டுகொடுத்தது நான் மட்டுமல்லன்று. எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை மூவரும் எல்லையை தாண்டி மகிழ்ச்சி அடைந்தோம். விளையாட்டல்ல., ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்து மூன்று வேறுபட்ட சமுதாய மக்களுடன் பயணித்து தொடர்ந்து பத்து வருடங்கள் நண்பர்களாக இருப்பதெல்ல்லாம் மிக சொற்பம். இது விதி புரிந்தவற்கு புரியும்.

கல்லூரியில் நிறைய அனுபவங்கள் காத்திருந்தது. ஒரு நேரத்துல இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து படம் பாக்க தியேட்டருக்கு அழச்சிட்டு போறதே என் முக்கிய வேளைகளில் ஒன்று. முக்கியமாக கல்லூரி அனுபவங்களில் காதலில் யாரும் விழாமல் இருக்க நாங்கள், ஒருவரை ஒருவர் கெடுத்து, வாழ வைக்க பட்ட பாடு அது தனிக்கதை. இதுல அதுக்கு இடமில்ல. மேலும் மூணு பேருக்குள்ளும் ஒரு எழுதபடாத ஒப்பந்தம் போட்டிருந்தோம். அது என்னன்னா முதல்ல காதலோ, கல்யாணமோ யார் பண்றாங்கலோ அவங்கதான் “முதல் முன்னேறுன முட்டாள்” பட்டம் சூடி கொள்ளனும் என்பதே. ஆரியர்ஸ் கூட எங்கள பிரிச்சிட்ட கூடாதுன்னு கவனமா இருந்தோம்.

உண்மையில் எங்களை பார்த்தால் கல்லூரிக்கே பொறாமையாம், நாங்கள் தனித்தனியாக உணர்ந்திருக்கிறோம். ஆனாலும் அவிங்க ரெண்டு பேருக்குள்ள சிறிய முரண்கள் வந்தும் கலைந்துமே இருக்கும். மூன்று வருடம் உருண்டு ஓடியது. கல்லூரியில் ஊட்டி, கொடைக்கானல் டூர் செய்ய ஏற்பாடு செய்யபட்டது.

அதை நோக்கிய ஒரு வார பயணத்தில், மாற்றி, மாற்றி போவோம், வேணாம் , நான் வரல, நீ மட்டும் போ, ன்னு இருக்குற எல்லா கோணத்திலும் பேசி ஒரு வழியாக இறுதியில் மூவரும் சென்றோம். அங்கதான் ஒரு தப்பு பண்ணிட்டோம். ஆமா இதுவரை செய்யாத தவறு. நிறைய போட்டோஸ் எடுத்தோம். ஆனால் தனியாக மூவரும் மட்டும் சேர்ந்தவாறு எடுக்க கூடாது என்பது நட்பு கூற்று அது அன்று ஏனோ மறந்தவண்ணம் நிகழ்ந்து விட்டது.அதனாலோ என்னவோ பின்னாளில் பிரிவும் சேர்ந்தது.

கல்லூரி வாழ்க்கை இனிதே நிறைவுற்றது. இனி வாய்பில்லை. பொருள் தேடி பிரிந்து ஓடித்தான் ஆக வேண்டும் என பக்குவம் புகுத்தபட்டது . பாலா சிங்கப்பூர்ல, கர்ணன் துபாய்ல இருக்கான். நான் இங்க தான் சென்னை, ஓசூர், சுத்திட்டு ஊர்லயே வந்து லோக்கல்ல வேல பாத்து லைட்டா செட்டில் ஆகிட்டேன். காலம் கடந்தது.

என் நண்பர்கள் கணித்ததுபோல் ஏப்ரல் ஒன்று, அன்று எனக்கு திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை ஆறேழு வருடங்கள் ஊருக்கே வராதவர்கள் என் திருமணதிற்கு வருகிறார்கள். அங்கே நட்புக்கு விழா வேண்டியது. அதேபோல் மீண்டும் மூன்று நாட்கள் மூன்று பேரும் பத்து பைசா செலவில்லாத பேச்சுலர் பார்டி கொண்டாடினோம். என்னமோ அவர்களுக்குள் தற்போது ஒரு ஈர்ப்பு புதிதாக காணப்பட்டது. சில நேரம் நான் விலகி நின்றும் பொறாமையும் பட்டேன்.

திருமண ஏற்பாடுகளைவிட, நான் அவர்களுடன் நேரங்களிக்க முயன்றதுதான் அதிகம். அதனால் வீட்டில் திட்டும் வாங்கினேன். அதுவரை இருந்த அவர்கள் நட்பு எதோ அதிகபட்ச முரணுடன் நெருங்கவே சொன்னது. அவர்களின் அதிகபட்ச ஒத்துழைப்புடன் திருமணமும் முடிந்தது.பெண் வீட்டாரின் கண்ணீருக்கும் எங்கள் கண்ணீருக்கும் பட்டிமன்றம் நிகழ்ந்தது. முதலிரவையும் புறக்கணித்து ஏர்போர்ட் போனேன். அது எதோ இனம் புரியாத பிரிவு தவறு செய்ததுபோல் தோன்ற செய்தது.மூவரும் முத்திசையில்.

வீடு திரும்பினேன், புது உறவு அழைத்தது, அவளை பேசவிடாமல் நண்பர்களை பற்றியே பேசி கொண்டிருந்தேன். கண்டிப்பாக அவளுக்கு பிடிக்கவில்லை தான். என் நீண்ட நேர புலம்பலுக்கு பிறகு அவள் அனுமதி வாங்கி என் நண்பர்களை பற்றி கூற விரும்பினாள். பத்தாவதில் பாலா அவளுக்கு காதல் விண்ணப்பம் கொடுத்திருக்கிறான். +2வில் கர்ணன் லவ் சொல்லி இருக்கிறான். சொல்ல விரும்பாமல் சொல்லி சென்றாள். ஏனென்றால் அவளுக்கு அவர்கள் புகழ் பாடுவது பிடிக்கவில்லை போல. இதுல இவங்கள ரிஜெக்ட் பண்ணேன்னு பெருமை வேற.

கொஞ்சம் லேட் ஆனாலும், மிகவும் அதிர்ந்து யோசித்தேன், என்ன இப்படி பண்ணிடாங்கன்னு, ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது, என் டேஸ்டுதான் மட்டமா இருக்குன்னா அவனுங்க டேஸ்டும் அதேமாதிரியா இருக்கும். அவள் என்ன நினைத்து கூறினாலோ, எனக்கு சந்தோசம் சற்று தூக்கலாகவே இருந்தது. என் நண்பர்கள் செலெக்சன் என் மனைவி ஆனது பெருமைதான். பாலாவுக்கும் கர்ணனுக்கும் சிறு வயதில் இல்லாத வேறுபாடு, பின்நாளில் வந்ததற்கு காரணம் இவள்தான் என்றும் புரிந்தது.

அதனால்தான் அவள்தான் என் மனைவியாக போறவள் என்றவுடன் எனக்கு தெரியாமலே மேலும் அவர்களுக்குள் சம்பாசிக்காமலே என்னை சற்று விலக்கி ஒரு புது ஈர்ப்பு அவர்களுக்கிடையே தொடங்கிற்று. எல்லாம் நன்மைக்கே. அடுத்த கட்டமாக இருவருக்கும் திருமணம் அதாவது தனி தனியாக செய்து வைக்க ஊரிலிருந்து வேலை பாக்க வேண்டும் அப்போதான் ரெண்டாவது முட்டாள் யாருன்னு தெரியும்.

ஆமாம் பள்ளி வயதில் சாதி பிரிக்க பார்த்தது, கல்லூரி வயதில் பொருளாதாரம், பிரிக்க பார்த்தது, திருமண வயதில் காதல் பிரிக்க பார்த்தது, மேலும் ஏதும் பிரிக்க பார்க்கலாம், ஆனால் பிரிவினை அற்ற நட்பு வரலாறு சுவாரஸ்யமானதை தாண்டி நெகிழ்வானது. அது நிச்சயமாக என் இறுதிபயணம்வரை தொடரும் ….

“இலக்கணமற்ற உறவின், உயர் ஒழுக்கம் நட்பு”

“சாதி, மதம், பொருளாதாரம், காதல் , இன்னபிற இச்சைகளால் பிரிக்க முடியாத உச்சம்தான் நட்பு” – தேவா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *