மீனுக்குள் ஒளிந்திருக்கும் பாடல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 2,613 
 

அவள் ஆற்றங் கரையோரம் வந்து அவனுக்காகக் காத்திருந்தாள்.மாலை ஆறு மணிக்கு வருவதாக அவன் சொல்லி இருந்தான். ஆற்றின் கரும்பச்சை நிறம் மெல்ல மெல்ல கறுப்பாகிக் கொண்டிருந்தது. கரையோரம் வரிசையாக நின்ற தென்னை,சவுக்கு, கற்றா,போகன்விலா மரங்களின் மறைவில் ஒளித்துக் கொண்டிருப்பது போலவும், வெயிலின் வெளிச்சத்துக்குக் கண்கூசும் ஒரு பாதாளச் சிறைக்கைதி போலவும் அவள் தங்கியிருந்த அந்த விடுதி தோன்றியது.

அவளுக்கு அந்த நகரம் புதியது. முதல் தடவை அதைப் பார்க்க நேர்ந்த போது நீரின் நடுவே நிற்பது போல் உணர்ந்தாள். கடலாலும், ஆறாலும் வளைக்கப் பட்ட நீராலான நகரம் போல் அது இருந்தது. கடல் நீரேரிக்கு குறுக்காக ஆங்காங்கே சில,சிறு நிலத் திட்டுகள் பொன்னாலான திமிங்கிலங்களின் முதுகுகள் போல் தெரிந்தன.

இந்த நகரத்துக்கு வரப் போகிறோம் என்று தெரிந்ததுமே அவனுடைய பெயர்தான் அவளுடைய மனதில் உடனே ஒரு நீல மின்னலாக நெளிவு காட்டி ஓடி மறைந்தது. அந்த நகரத்துடன் இணைத்தே அவனுடைய பெயரை ஒரு காலத்தில் அழைத்தார்களாம்..அவளுடைய அப்பா அவனைப் பற்றிக் கதை கதையாக சொல்லி இருக்கிறார்.

கல்லூரிக் காலத்தில் அவன் தனக்கு சீனியர் மட்டுமல்ல, தன்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடகன் எனக் கூறி 70 இல் வெளியான,அவனுடைய பாடல்கள் அடங்கிய எல்.பி. இசைத் தட்டொன்றை அவளிடம் ஒருநாள் அவர் நீட்டினார். அந்த எல்.பி. இசைத் தட்டில் ஒரு பக்கம் எட்டும்,மறு பக்கம் ஆறுமாக மொத்தம் பதினான்கு பாடல்கள் இருந்தன.

அவள் அரைகுறை மனதுடன்தான் அன்று அதைச் சுழல விட்டாள். வெளியே மழை தூறிக் கொண்டிருந்தது. அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாகத் தெரிந்த மரக் கிளையொன்றின் பூ மழைக்கு சிலிர்த்துக் கொண்டது.ப்ரௌன் வர்ண வண்ணத்துப் பூச்சி ஒன்று நிலை கொள்ளாமல் அலைந்து கொண்டிருந்தது. இசைத் தட்டில் முள் பதியும் போது உண்டாகும் கர கரப்பைத் தொடர்ந்து வண்டின் ரீங்காரம் போல் ஓர் ம்காரம் ஒலிக்கத் தொடங்கியது. இருளில் சிறைப்பட்டுக் கிடந்த சொற்களை விடுவித்து,வெளிச்சம் காட்டும் ஒரு முன்னெடுப்பு போல் அது காற்றுவெளியெங்கும் பரவியது. ஆரம்பத்தில் ஓர் ஆலாவாய் மாறி வானில் வட்டமிட ஆரம்பித்த அது, திசை தப்பிய தன் இணையைத் தேடிப் பின் அலையத் தொடங்கியது போல் இருந்தது. இசைத் தட்டு சுழல்கையில் அவன் வானத்தில் வரைந்து சென்ற பாதையின் வழியே மெல்ல மெல்ல அவளும் காற்றில் அள்ளுண்டு ஓர் இறகாய் இழுபட்டு மிதந்து கொண்டிருந்தாள். ஒரு கடற்கரையோரத்தில் இழப்பின் தவிப்பும்,பிரிவின் துயரும் தொடரலைகளாகி அவன் கால்களை நனைத்துக் கொண்டிருப்பதை அருகிலுள்ள ஒரு இடுகாட்டின் பட்டிப் பூவைப் போல் மலர்ந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.ஒவ்வொரு பாடலிலும் மறுபடி,மறுபடி தொட்டிலில் கிடப்பதாகவும்,தான் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவதாகவும் உணர்ந்தாள்..அழிந்து விட்டதாக தான் எண்ணிய காலடித் தடங்கள் சருகுகள் விலகியதும் துலக்கம் பெறும் அதிசயத்தையும்,, நினைவுகளின் சிற்பங்கள் உயிர் பெறும் விந்தையையும், புல்லரிப்பையும் ஒவ்வொரு பாடலூடாகவும் அறிந்தாள்.நெடிதுயர்ந்த மதில் கோட்டையின் பல வாசல்களை அந்தப் பாடல்கள் திறப்பதையும், அவள் உள்ளே காலடி எடுத்து வைத்த மறுகணம் அவை தானாக மூடிக் கொள்வதையும், சிலந்தி வலைகளுக்குள் தான் சிக்கிக் கொள்ளும் சுயவதையின் பரவசத்தையும் உணரத் தொடங்கினாள்.அவனுடைய பாடல்களை உன்னிப்பாகக் கேட்கும் போது எந்த வாத்தியங்களின் பின்னணி ஓசையும் அவனுக்குத் தேவைப் படாதவையே என அவள் எண்ணினாள். இரவுகளில் பெருக்கெடுத்து ஓடும் அந்தக் கானங்களின் தேனாற்றில் அந்த வாத்தியங்களின் பின்னணி இசை என்பது வெறும் மழைத் தூறல்கள் போல் விழுந்து கொண்டிருந்தன.தசவித கமகங்களுடன் அவனுடைய வசீகரமான குரல் ஒலிக்கும் போது அதுவே ஓர் அபூர்வ வாத்தியமாக மாறிப் போயிருந்தது.

அப்போதெல்லாம் எக்கொர்டியன்,பொங்கோஸ் ட்ரம், ஹவாயன் கிட்டார் போன்ற வாத்தியங்களையே இசைக் கச்சேரிகளில் பெரிதும் பயன் படுத்தினார்கள் என அப்பா சொன்னார். தன் ஒவ்வொரு மெல்லிசைக் கச்சேரியையும் ஹரிச்சந்திரா பக்திப் பாடல் ஒன்றுடன்தான் தொடங்குவானாம். ‘ சீர்காழி கோவிந்தராஜனின் ‘விநாயகனே, வெவ் வினையை வேரறுக்க வல்லான்..விநாயகனே வேட்கை தணிவிப்பான் ‘ என்று உச்சஸ்தாயியில் அவன் தொடங்கும் போது சபையில் கூரை மின்விசிறிகளின் ஓசையைத் தவிர வேறெதுவும் கேட்காதாம். அந்தத் தொகையறாவின் பின் ஒரு இடைவெளி விட்டு தோல்கி வாத்திய இசை உற்சாகத்துடன் ஒலிக்க ‘விநாயகனே..வினை தீர்ப்பவனே…என ஹரிச்சந்திரா பாடத் தொடங்குவானாம். அப்போது எழும் ரசிகர்களின் கரகோஷ ஒலி அடுத்த கச்சேரி வரைக்கும் மண்டபத்தை நிறைத்திருக்கும் என அப்பா சிலாகித்துக் கூறுவார்.. கண்களுக்கு எட்டும் தூரம் வரை தென்பட்ட அவனுடைய ஈரம் காயாத காலடித் தடங்களை இசைத்தட்டு சுழலச் சுழல அவள் கண்டாள். அவன் திறந்து வைத்திருந்த வாழ்க்கையின் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் காற்றுக்கு விரிந்து படபடப்பது போல் பாடல்களாக மாறியிருந்தன. அவன் ஊரின் திரைச்சீலை விலகுவதையும், நெய்தலுக்கும், மருதத்துக்கும் நடுவில் இருக்கும் ஒரு சிறு நிலத் துண்டில் அவன் ஒரு சிறு பூச்சி போல் ஊர்வதையும் எங்கோ இருந்து அவள் கண்டாள். அவனது ஒரு பாடலில் திரௌபதை அம்மன் ஆலயத்தின் பறை மேளமும், உடுக்கையும், சிலம்புகளும் அமர்க்களமாக ஒலிக்கின்றன.கோடரிகள் மரங்களைக் கொத்தி மண்ணில் சாய்க்கும் பின்னணி ஓசையுடன் இன்னொரு பாடல் ஒலிக்கின்றது. ஊர்ப பரப்பு குறுகியதாக இருந்த ஒரு காலத்தில் தன் தாத்தாவின் கையைப் பற்றிக் கொண்டு அவன் கடந்து சென்ற முந்திரிக் காடுகளும், சென்று விளையாடிய கடலோர வெம்பு வளவும் இன்னொரு பாடலில் வந்தன. இரவில் இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வரும் போது நள்ளிரவு மோகினியாய் நாசியை வந்து தாக்கும் விளினம்பாலை மரத்தின் வெண்ணிறப் பூக்களின் கிளர்ச்சியூட்டும் மணம் அவனுடைய இன்னொரு பாடல் முழுக்கப் பரவி இருந்தது. பண்டிகை தினங்களின் பரபரப்பும், பட்டாசுச் சத்தங்களும் நிரம்பிய இன்னொரு பாடலை ‘இழந்து போன இளம் பராயத்து சொர்க்கங்கள்’ என்று பாடியிருந்தான்.

அவனுக்கு மிகவும் புகழ் தேடித் தந்த ஒரு பாடல் இது.

முன் பின் தெரியாதவளே என்னிடம் வா…

நெடுங் காலம் காத்திருந்து நான் களைத்து விட்டேன்.

ஒரு விளக்கினைப் போல என்னை எரிக்கின்றேன் பிறர் பார்வைக்கு வெளியே ஒளிர்கின்றேன். என் தாபம் சுடராய் ஒளிர்கிறது எக் கணமும் காற்றில் அணையாது.

உதிர்ந்து குவியும் பூக்களை மறந்து போன ஒரு மரம் நான் என் வேர் உன் நினைவு என் கிளைகளில் உன் நினைவூஞ்சல் பல ஜென்மங்களாக உன் தோட்டத்தில் காத்துக் கிடக்கின்றேன்… நான் தாகத்துடன் தவித்துக் காத்திருக்கும் ஒரு நதி.. படகாக நீ வர வேண்டாம் எனதன்பே,ஒரு பேரலையாய் நீ வா! என்னை அப்படியே அள்ளிச் சுருட்டு.. அழைத்துச் செல்! என்னையும்,என் காதலையும் எங்கனம் நீ மறந்தாய் ?

இன்னொரு பாடலில் அவன் ஒரு பெண்ணின் மீதான வன்மத்தைக் கொட்டியிருந்தான். நெருப்பாலான சொற்களை அந்தப் பாடல் கொண்டிருந்தது. மிகையான வன்மம் கொண்ட அந்தப் பாடலில் அவன் மரபுகளை மீறி எடுத்த எடுப்பிலேயே ஆரோகணத்தின் உச்சிக்குச் சென்று விடுகிறான். அடிபட்ட சிறுத்தையின் உறுமலைப் போல் அவனுடைய குரல் அதில் வெளிப்படுவதைக் கேட்கலாம்.. கிளிப்பிள்ளைப் பாடல்களை அவன் எள்ளி நகையாடுபவனாக இருந்திருக்க வேண்டும். இல்லா விட்டால் இந்த உருக்கமும்,நெருக்கமும், கொதிப்பும், காதலும்,குழைவும்,தவிப்பும்,தத்தளிப்பும் அவன் பாடல்களில் வெளிப்பட்டிரா. அந்தப் பாடகனின் குரல் ஒரு போதும் பாதாளத்திலிருந்து ஒலிப்பதல்ல.இரவுகளின் கண்கள் போல் அந்தப் பாடலும், அவனுடைய குரலும் அவளை நோக்கி எப்போதும் விழித்த படி இருந்தன.

அவன் பாடல்களில் இல்லாத மேலதிகமான பல செய்திகளையும், அவனைப் பற்றியும் அப்பா அவ்வப்போது நிறையவே சொல்லுவார்.. அவர் வெகு சுவாரஸ்யத்துடன் கூறிக் கொண்டே செல்லும் போது சில இடங்களில் பள்ளங்களைக் கடப்பது போல அவர் தாவிச் செல்வார். அவள் அது பற்றி துருவித் துருவி அறிய முற்படும் போது அப்பா புன்னகையுடன் சொல்லுவார். “ஒரு கலைஞனின் படைப்புகளை ரசிப்பதுடன் நின்று கொள்ள வேண்டும். அவனை அதிகம் நெருங்க முயன்றால் கசப்பான அனுபவங்களே மிஞ்சும்” ‘அவன் குழப்பங்களின் கலவை…தேவாங்கு போல் மரத்தில் ஏறி அமர்ந்து உட்கார்ந்து கொண்டு மரப்பட்டை உதிரும் ஓசைக்காக முன்னெச்சரிக்கையுடன் தன் செவிகளை எப்போதும் கூராக்கி வைத்துக் கொண்டிருப்பவன்… அவன் வாழ்க்கையில் எதிர் கொண்ட கசப்புகளும்,ஏமாற்றங்களும் அவனை அவ நம்பிக்கையின் அமிலக் கரைசலுக்குள் வீழ்த்தி உருக்குலைத்து விட்டது ” என்று சுருக்கமாக அவர் சொன்னார்.

அவனுடைய நகரத்துக்குத் தான் செல்லவிருப்பதாக அவள் ஒரு நாள் சொன்ன போது அப்பா திகைப்புடன் உற்றுப் பார்த்தார்…அவர் ஏந்தியிருந்த கிண்ணத்தின் தேநீர் கொஞ்சம் தளும்பியது போல் இருந்தது.

“மிகவும் கவனம் மகளே” என்றார் அப்பா.

“ஏன் அப்பா, மாய மாந்திரீகங்களுகுப் பெயர் போன பகுதி அது என்று பயப் படுகிறீர்களா?” என அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள்.

“மந்திரவாதிகள் எந்த ஊரில்தான் இல்லை..?..அவர்கள் வரவழைத்துக் காட்டும் மாங்காய்கள் எல்லா இடங்களிலுந்தான் காய்த்துக் குலுங்குகின்றன…அதிலும் நீ வேலை பார்க்கும் பத்திரிகையின் முதல் பக்கத்திலேயே ஒவ்வொருநாளும் எவ்வளவு மாங்காய்கள்…” அந்தப் பாடகனையும் தான் அங்கே சந்திக்க முயற்சி செய்யப் போவதாக அவள் சொன்ன போது அப்பாவின் முகத்தில் அவநம்பிக்கையின் பாவனை தோன்றியது.

“அந்த நகரத்தில் அவன் இன்னமும் இருப்பான் என நம்புகிறாயா ?” என அவர் கேட்டார்.

ஆனால் அவன் அந்த நகரத்தில்தான் இன்னமும் சீவித்துக் கொண்டிருப்பான் என அவள் உறுதியாக நம்பினாள் அனர்த்தங்களின் ஆறாவடுக்கள் உள்ள அந்த மண்ணில் அவன் இன்னமும் உயிர் வாழ்வான் எனத் தான் நினைப்பது அவன் மீது கொண்ட அபரிமிதமான பித்தினாலா என அவளுக்குத் தெரியவில்லை. அவன் ஒரு பாடகன் என்ற செய்தி ஒரு பழங் கதையாக அங்கு ஆகி இருந்தது. அவள் வந்ததும் முதலில் விசாரித்தது அவனைப் பற்றித்தான். மீன் வடிவத்தில் கட்டப் பட்ட, கடலோரத் தேவாலயம் ஒன்றிலிருந்த பாதிரியார் ஒருவருக்கு அவனைப் பற்றி சிறிது தெரிந்திருந்தது. ஒரு நத்தார் காலத்தில் கீ போர்ட் வாசிக்க அங்கே கடைசியாக வந்து போனதாகவும்,அதன் பின்பு அவனைத் தான் காணவே இல்லையென்றும், வெளியுலகிலிருந்து அவன் கிட்டத்தட்டத் தன்னைத் துண்டித்துக் கொண்டிருக்க வேண்டுமெனவும் பாதிரியார் சொன்னார். கருநீல நிறம் கொண்ட ஒரு பழைய நாட்குறிப்பு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி அவனுடைய தொடர்பிலக்கத்தை பாதிரியார் கண்டெடுத்துக் கொடுத்தார்.

போனில் அன்று மாலையே அவனைத் தொடர்பு கொணடாள்.எதிர்முனையின் பதிலுக்காகக் காத்திருந்த அந்தக் கணங்கள் அவளுக்கு மிகவும் பதட்டத்தைத் தந்தது. போன் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்து,எது வித பதிலும் கிட்டாமல் போன் தானாக ஓய்ந்து போனது. அவள் மேலும் இரண்டு தடவைகள் முயன்று பார்த்தாள்.பலனில்லை. மிகவும் ஏமாற்றத்துடனும்,சோர்வுடனும் தன் கையிலிருந்த போனைப் பார்த்தாள்.இந்த நகரத்துக்கு வந்ததில் இருந்து ஏமாற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அவள் சந்தித்துப் பேட்டி எடுக்க வேண்டிய அரசியல் பிரமுகர் ஜி.டீ. கூட இன்னமும் சாதகமான பதில் அளிக்கவில்லை. ஆயுதங்களைக் கைவிட்டு விட்டு ஜனநாயக அரசியலுக்கு அண்மையில் திரும்பி இருந்த அவரை சந்திப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. வெளியுலகம் தெரியாத வண்ணம் தார்க் கறுப்புக் கண்ணாடிகள் பொருத்தப் பட்ட வாகனமொன்றில் அவளை அவருடைய சகபாடிகள் வந்து அழைத்துச் சென்றனர். வீதிகளின் வரைபடத்தைத் தவற விட்ட வாகனம் போல் அது சுற்றிக் கொண்டே இருந்தது தற் செயலானதல்ல என்பதை அவள் உடனே புரிந்து கொண்டாள். ஒரே வீதியில் ஐந்தாறு தடவைகள் அந்த வாகனம் சுற்றிச் சுற்றி வருவது அவளுக்கு நன்கு தெரிந்தது.. ஜி.டீ. யின் சகபாடிகள் அவளுடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையை வாங்கி மிகவும் நுணுக்கமாக சோதனையிட்டனர்.கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

அங்கு வேறு யார் யாரை அவள் ஏற்கனவே சந்தித்தாள் என்பதை அறிய அவர்கள் மிகவும் ஆர்வம் காட்டினார்கள். வாகனத்தின் சாரதிக்கு அருகிலிருந்தவனுக்கு அப்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவன் தொடர்ச்சியாக ‘ம்…ம்.ம்.ம் ‘ என்ற படி வந்தான்.

பேசி முடிந்ததும் ” மிஸ்…மன்னிக்கவும்… தோழர் ஜீ.டீ. அவசரமாக வேறோர் இடத்துக்குக் கிளம்பி விட்டார். இன்றைக்கு சந்திப்பது சாத்தியமில்லை….” என்றான்.

“அவரை மறுபடி எப்போது சந்திக்கலாம் ?” என ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல்அவள் கேட்டாள். தனக்குத் தெரியாது என்பதற்கு அடையாளமாக அவன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். “அவருடைய மறு அழைப்பு வரும் வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும் ” கடைசியில் அவளை விடுதியின் நுழை வாயிலில் கொண்டுபோய் இறக்கி விட்டு சென்று விட்டனர். கைக்கெட்டிய பழம் வாய்க்கெட்டாமல் போய் விட்டது போல் அவளுக்கு இருந்தது அவளுக்கு சலிப்பு சலிப்பாக வந்தது.ஒட்டுண்ணித் தாவரங்களின் கொடிகள் தன்னில் படர்ந்து நெரித்துக் கொண்டிருப்பதாக தோன்றியது.அன்றாடம் தொடர் ஓட்டங்களும், பயணங்களும்,ஒரே விதமான வேலையும் அவளை சலிக்க வைத்திருந்தன.பக்கங்களைக் கருப்பு எழுத்துகள் கொண்டு நிரப்பும் ஒரு பெயிண்டர் போல் அவள் தனக்குத் தானே தோற்றமளிக்கத் தொடங்கியிருந்தாள்.

நோயாளிகளுடன் நோயாளியாக டாக்டரின் அழைப்புக்காக வைத்தியசாலைகளின் விறாந்தைகளில் காத்துக் கிடக்க வேண்டி இருந்தது..ஒரு நடிகனை போனில் தொடர்பு கொண்டு அவன் பொன்னான குரலைக் கேட்கும் வரை போதும் போதும் என்றாகி விட்டது.ஜிம்மில் இருந்து பேசுவதாக அவன் சொன்னான். தன் கழிப்பறையில் இருந்து அவன் பேட்டி அளித்தாலும் அதைப் பிரசுரிக்க அவளுடைய பத்திரிகை தயாராக இருந்தது. நீரிழிவு மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே “உணவுக் கட்டுப்பாடு” பற்றி ஒரு டாக்டர் பேட்டி அளிப்பதை,சிரிப்பை மறைத்துக் கொண்டு அவள் ஒலிப் பதிவு செய்ய வேண்டி இருந்தது.. அழகு நிலையங்களுக்கு சென்று அங்குள்ள நிபுணர்கள் தரும் அழகுக் குறிப்புகள் எல்லாம் இப்போது மனப்பாடமாகி இருந்தது. அவள் ஒரு காலத்தில் தன் முன்னே ‘மைக்’குகள் நீட்டப் பட வேண்டுமென்ற கனவில் இருந்தவள். ஆனால் இன்று பிரமுகர்கள் முன்னே மைக்கை நீட்டிப் பிடிக்கும் நிலைமைக்கு காலம் அவளை நகர்த்தி இருந்தது. திடீரென்று பத்திரிகையாளர் சந்திப்பொன்றுக்கு அழைப்பு வரும் போது ஓடிச் செல்ல வேண்டி இருந்தது.. பல்வேறு குணாதிசயங்கள்,முக அமைப்புகள் கொண்ட மனிதர்கள் அங்கே இருப்பார்கள். இன்று சீக்கிரம் கிளம்பலாம் என்றிருக்கும் போது திடீரென்று மாலையில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு அல்லது இலக்கியக் கூட்டத்துக்கு அல்லது ஆன்மீகச் சொற்பொழிவுக்கு அழைப்பு வரும். ஆனால் எவ்வளவுதான் உயிரைக் கொடுத்து வேலை செய்தாலும் கூட அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காத போது அவளுக்குக் கசப்புத்தான் கடைசியில் மிஞ்சியது.. ஆரம்பத்தில் இருந்த துடிப்பை அவள் மெல்ல மெல்ல இழந்து,ஒரு களைப்பு நிலைக்கு வந்து கொண்டிருந்தாள்.அவளை மட்டம் தட்டுவதில் பத்திரிகை ஆசிரியருக்கு உள்ளூர ஒரு சந்தோஷம் இருந்தது. அவள் எழுதும் கட்டுரைகளில் இரண்டு பந்திகளையேனும் பிடுங்கி எறியா விட்டால்,அவருக்குத் தூக்கம் வருவதில்லையோ என அவள் எண்ணினாள்.அப்போதெல்லாம் அவமானத்தின் கறையால் அவள் அவஸ்தைப் பட்டாள். ஒவ்வொரு முறையும் அவளை மட்டம் தட்ட நுட்பமான பல வழி முறைகளை அவர் கண்டு பிடித்துக் கொண்டேயிருந்தார்.

ஜி.டீ. யின் நேர்காணலை எடுக்க முடியுமா என அவர் கேட்ட போது அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டாள்.அவருடைய நேர்காணல் அடுத்த வாரம் வெளியானால் அவள் பத்திரிகையின் பிரதிகள் வழக்கத்துக்கு மாறாக,அதிகமாக விற்கக்.கூடும் என நிர்வாகம் கருதியது…மாயாவி போல் வர்ணிக்கப் பட்ட ஜி.டீ. சிலவேளைகளில் ஒரு ‘பேயின் ‘ நிலைக்கு மாறி ஒரு பெண் பத்திரிகையாளருக்கு இரக்கம் காட்டக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு. அவள் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை பின்னிரவு வரை விழித்திருந்து,,கவனமெடுத்து தயாரித்திருந்தாள். “உங்களைத் துரோகி என்று சொல்கிறார்களே, அதைக் கேட்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது ?” என்பதும் அதில் ஒரு கேள்வி. இதற்கு அவர் புன்னகை மாறாத முகத்துடன் பதிலளிப்பாரா அல்லது இடுப்புப் பட்டியில் சொருகியிருக்கும் கைத் துப்பாக்கியை உருவுவாரா என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியாது. ஒரு குருட்டு நம்பிக்கையுடன் அவரை சந்திக்க கிளம்பி வந்தாள். இப்போது எல்லாமே கை நழுவிப் போய்க் கொண்டிருப்பது போல் இருந்தது.

அவள் இரவு ஆடைகளை அணிந்து கொண்டாள். அறை விளக்குகளை அணைத்தவள்,கண்ணாடி. ஜன்னல் திரைச் சீலையை விலக்கி விட்டு அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். ஆற்றில் ஒளிப்பொட்டுகள் தெரிந்தன.

எல்லா நகரங்களுக்கும் இருப்பதைப் போல அந்த நகரத்துக்கும் ஒரு கதை இருப்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் அமைந்திருந்த அந்தப் பாலத்தையொட்டிய ஆற்றில்,தங்கம் ஒழுகும் முழுநிலாக் காலத்தில்,சப்தங்கள் அடங்கிய பின்னிரவுக் காலங்களில் மீன்கள் பாடித் திரியுமாம்..அந்த இசை பற்றி ஒவ்வொருவரும் வெவ் வேறு மாதிரிசொன்னார்கள். விடுதி மேலாளர் பணத்தை அடுக்கி,அவ்வப்போது எச்சில் தொட்டு சுட்டு விரலால் எண்ணிய படி ‘ அது ஒரு பொய்க் கதை’ என்றார்.அந்த இசை ஒரு மோகினியின் விரகதாபக் குரலை ஒத்தது என தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறினார். காதல் தோல்வியால் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட ஒரு குமரிப் பெண்ணின் ஆவியின் புலம்பல் அது என ஒரு படகோட்டி சொல்லி இருக்கிறான்.

அந்த ஆற்றில் உள்ள ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என வேறு சிலர் கூறியிருக்கிறார்கள். அது வெளிப்படுத்தும் இசை பியானோவின் இனிய சங்கீதத்தை ஒத்தது என ஒரு ஐரோப்பிய உல்லாசப் பயணி வியப்புடன் சொல்லி இருக்கிறான்.. கத்தோலிக்க பாதிரியார் லாங் (Fr. Lang) என்பவர் இந்த மீனிசையை’ ஒலிப்பதிவு செய்து வானொலியில் 1960களில் ஒலிபரப்பியதாகக் கூட ஒரு தகவல் உண்டு.

தனிமையின் அவஸ்தைக்குள் ஏன் இப்படி வந்து அடிக்கடி மாட்டிக் கொள்கிறோம் என அவள் தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

கண்களை மூடிய படி அப்படியே சிறிதுநேரம் இருந்தாள்.தூக்கம் கண்களைக் கவ்வுவது போல் இருந்தது.அவள் கால்கள் ஓர் அத்துவானக் காட்டினுள் அவளை அழைத்துச் சென்று கொண்டிருந்தன. தொலைபேசியின் ஒலி அவளை உலுக்கியது போல் இருந்தது.பதட்டத்துடன் போனைக் காதருகே கொண்டு சென்றாள்.

எதிர்முனையில் ஓர் ஆண் குரல்.

“நீங்கள் காலையில் என்னை அழைத்தீர்களா ?” அவள் சற்றுத் தடுமாறினாள். ” நீங்கள்..? ” ” நான் ஹரிச்சந்திரா…” அவளுடைய சோர்வு இப்போது பறந்து போய் விட்டது போலிருந்தது.

“நீங்கள் யார்? என்னுடைய போன் நம்பரை உங்களுக்கு யார் தந்தார்கள்..” என அவன் கேட்டான்.

அந்தக் குரலில் குழைவு,கனிவு,இனிமை என்று எவையுமே இருக்கவில்லை. மேலதிகாரியின் உத்தியோக தோரணை கொண்டதாக அந்தக் குரல் இருந்தது..குயில் கூட்டுக்குள் இருந்து காகம் துப்பும் பாடல்கள் போல் பதில்கள் வந்து விழுந்தன.

அவள் தன்னைப் பற்றியும்,அவனுடைய பாடல்களைப் பற்றியும் விபரித்துக் கொண்டிருந்த போது அவன் அலட்சியத்துடன் செவி மடுத்துக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.

அவன் கடைசியாகப் பதில் சொன்னான். “அதெல்லாம் ஒரு காலம். நான் இப்போது ஒரு காலிப் பெருங்காய டப்பா…”

அவள் தாழ்ந்தகுரலில் கேட்டாள் “… இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். உங்களை ஒரு தடவை சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்…”

சிறிதுநேர மௌனத்தின் பின் அவன் “…சரி, எங்கே,எப்போது சந்திப்பது ? ” எனக் கேட்டான். அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

இடத்தையும்,நேரத்தையும் தான் பின்னர் தெரியப் படுத்துவதாக மாத்திரம் அப்போது சொன்னாள். ‘சுடுகாட்டைத் தவிர்த்து வேறு இடத்தைத் தெரிவு செய்தால் மிகவும் சந்தோஷமடைவேன் ‘ என்ற அவனுடைய பதில் அவளுக்கு புன்னகையை வரவழைத்தது.

‘நாம் எல்லோரும் ஒரு நாள் சென்றடையும் இடம் அதுதானே…ஆனால் இப்போதைக்கு வேண்டாம் ‘ என்று அவளும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள்.

இறுதியில் மறு நாள் மாலை ஆறு மணிக்கு விடுதியருகே ஆற்றங் கரையோரம் சந்திப்பதாக இருவரும் முடிவெடுத்தார்கள்..

ஒரு பாடல்

அவன் வந்து கொண்டிருந்தான். தூரத்தே சவுக்கு மரங்களுக்கு நடுவே மங்கிய மஞ்சள் மாலை வெளிச்சத்தில் முகம் தெளிவற்ற ஓர் உருவத்தின் நிழல் போல் அது ஆரம்பத்தில் தோன்றியது. மெல்ல மெல்ல அது ‘அவனா’னது.. ஆற்றோரம் இருக்கும் ஒவ்வொரு பெஞ்சையும் பார்த்த படி அவன் வந்து கொண்டிருந்தான்.அவள் அவனை நோக்கிக் கையசைத்த வாறு அவனை நோக்கிச் சென்றாள்.

“நான் ஹரிச்சந்திரா ” என்று அவளுடன் கை குலுக்கிக் கொண்டான். பெஞ்சில் அமருமாறு அவள் கை காட்டினாள்.

“இந்த இடத்தில் அமர்வது அசௌகர்யமாக இருந்தால் விடுதியின் வரவேற்பறையில் உட்கார்ந்து கூட நாம் பேசலாம்” என்றாள்.

“இல்லை.இந்த இடம் எனக்குப் பிடித்திருக்கின்றது. இவ்வளவு உரிமையோடு சொந்தம் கொண்டாடும் காற்று அங்கே இருக்காது….ஆற்றைப் பார்த்த படி பேசிக் கொண்டிருக்கும் போது நாமும் அதன் மீன்களில் ஒன்றாகி விடுகிறோம். ” என்றான்.

அவள் புன்னகைத்தாள்.

“உங்களுக்கு நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதிருக்கலாம் என நீங்கள் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது ஒரு மனக்கணக்கு போட்டு வைத்திருந்தேன்…..அந்த வயதுக்காரர்கள்தான் என் பாடல்களை ஓரளவு ஞாபகம் வைத்திருப்பார்கள்……ஆனால் உங்களை இப்போது பார்க்கும் போது ஒரே ஆச்சரியம். ஜீன்சும் டி ஷேர்ட்டும் அணிந்த ஓர் இளம் பெண் என் பாடல்களை ஞாபகம் வைத்து, இங்கே சந்திக்க வருவாள் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை…..உங்களுக்கு ஓர் இருபத்தைந்து வயதிருக்குமா?…”

“26 வயது..”

“ஓ…. ஒரு வயது முந்திப் பிறந்து விட்டீர்கள்…”- அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவளும் சிரித்துக் கொண்டே சொன்னாள். ” நல்ல பாடல்களுக்கும்,,இசைக்கும் வயசெல்லாம் ஒரு கணக்கா ?.”

“ம்..ம்..இருக்கலாம்…. ஆனால் எனக்கு வயசாகி விட்டது…பழைய நினைவுகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் வயசு….உங்களைப் போல் யாராவது என்னுடைய பாடல்களைப் பற்றிப் பேசும் போது மகிழ்ச்சியும் வருகின்றது…துயரமும் பெருகுகின்றது….பாடியவற்றை எண்ணி மகிழ்ச்சி… பாட இயலாமல் போனதை எண்ணிக் கவலை..காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்து விட்டது.” என்று கூறி அவன் பெருமூச்சு விட்டான்.

“இந்த நகரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ” என்று அவளிடம் கேட்டான்.

” மிக…மிக…” என்றாள் அவள்.

“இந்த நகரத்தைப் பிடிக்காதவர்கள் யார் இருக்கக் கூடும் ?” என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான்.

அடுத்து வந்த நிமிஷங்களில் தன் பக்கத்தில் அவள் இருப்பதையே மறந்தவன் போல் ஆகி விட்டான்.. ஒரு கறுப்பு ரயில் போல் ஆற்றையும் நகரத்தையும் இணைக்கும் அந்தப் பாலத்துடனும், ஆகாயத்துடனும், ஆற்றுடனும் அவன் மாறி மாறிப் பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது..

“அதோ பாருங்கள்.,தாழ்வில் தெரிகின்றதே அந்தப் பழைய பாலம்….அது எவ்வளவு உயிர்ப்புடன் முன்னர் எல்லாம் இருந்தது. புதுப் பாலம் இப்போது வந்ததும் ஒரு கோட்டுக்கு அருகே இடப்பட்ட சிறு புள்ளி போல் பொலிவிழந்து போய் விட்டது..பூத்துக் காய்த்து ஓய்ந்த பெரு மரம் போல….,திருவிழா நடந்து முடிந்த கோயில் பெரு வெளி மாதிரி இப்போது தெரிகிறது. 90 ஆண்டுகளாக இதன் வழியே எவ்வளவு வாகனங்கள் சென்றிருக்கும்.. எவ்வளவு பாதங்கள் பதிந்திருக்கும். இன்றைக்கு எல்லாம் கழுவித் துடைத்தெறியப் பட்டது போல் தனிமையின் இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. இந்தப் பாலத்துக்கும் எனக்கும் அவ்வளவு வித்தியாசமில்லை…….அந்தக் காலத்தில் எனக்கு இந்த நகரத்தின் மீது எவ்வளவு கவர்ச்சி தெரியுமா?…நான் ஒரு கிராமத்தான்…இது என் கனவு நகரம். இந்தப் பாலம்தான் அதன் திறவுகோல்…….என் ஊர் இங்கிருந்து தெற்குப் பக்கமாக 41 கிலோ மீட்டர் தூரம்.இன்றைக்கு அரசியல் பக்க பலங்களுடன் புதுப் புது நகரங்கள் முளைக்கின்றன. ஆனால் இந்த நகரத்தின் புறங் கால் அழகுக்கு அவை ஈடாகுமா?…..அதோ,ஆற்றுக்கு அப்பால் தெரிகிறதே…ஒல்லாந்தர் கோட்டை…அங்கிருந்து எப்போதும் ஒரு பீரங்கி என்னைக் குறி வைத்துக் கொண்டிருப்பதாக அந்த நாட்களில் நான் பீதியடைவேன்… என் சின்ன வயதில் அப்பாவுடன் FORD PERFECT காரில் இந்த நகரத்துக்கு வருவேன்.இன்று போல் வழிப் பயணத்தில் வேடிக்கை பார்க்க அப்போது அவ்வளவு ஊர்களோ, கடைகளின் வரிசைகளோ, கண்ணாடிக் காடசியறைகளோ இருந்ததில்லை. வழி நெடுக முந்திரிக் காடுகள். ஒன்றிரண்டு தாமரைக் குளங்கள்.எப்போதாவது எதிர்ப் படும் வாகனங்கள். அலுப்புடன் நான் அப்படியே தூங்கி விடுவேன்.இந்தக் கறுத்தப் பாலத்தின் குறுக்காக ஆங்காங்கே போடப் பட்டிருக்கும் ‘இரும்புப் பட்டங்கள்’ எழுப்பும் ‘,’சடார்’ என்ற ஒலிதான் தூக்கத்தில் இருக்கும் என்னை எழுப்பி விடும்.பாலம் வந்து விட்டால் இந்த நகரத்தின் வாயிலுக்குள் நுழைந்து விட்டோம் என்று அர்த்தம்.அப்பாவும்,நானும் படப் பித்தர்கள்.மத்தியக் காட்சியும், இரவுக் காட்சியுமாக இரண்டு இரண்டு படங்களாகப் பார்த்துத் திரும்பிய காலம் அது. வாவியின் இரண்டு கரைகளிலும் மூன்று திரையரங்குகள் இருந்தன… பானா,பாவன்னாவில் தொடங்கிய எவ்வளவு படங்கள் பார்த்திருப்போம். சைக்கிளோட்டிச் செல்லும் இளம்பெண்களை என் வாழ்க்கையில் முதன் முதலாக நான் சந்தித்தது இந்த நகரத்தில்தான். இந்த நகரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளின் காலைகள் எவ்வளவு அழகாக இருக்கும்…தேவாலயம் கலைந்து செல்லும் வாலைக்குமரிகளின் அழகே தனி. திமிறிச் செல்லும் குதிரைகள் போல் அவர்கள் இருந்தார்கள். அவன் பேசிக் கொண்டே இருந்தான்.

கிண்ணத்தின் பானம் நுரைத்துவழிவதைப் போல் அந்த ரம்மியமான சூழல் அவனை ஆக்கி இருந்தது. ஆற்றுக்கு அப்பால் நகரம் வர்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. காற்று தத்தித் தவழ்ந்து,சிற்றலைகள் எழுப்பிச் செல்லும் அந்த ஆற்றில் மீனவர்களின் படகுகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன..அந்த பௌர்ணமி தினத்தில் கடல் அலைகளைப் போலவே காற்றுக்கும் குதூகலம் பிறந்திருந்தது. மரங்கள் ஆடி அசைகையில் இலைகள் உதிர்கின்றன. முகத்தில் மோதும் காற்று கிளர்ச்சியை உண்டு பண்ணுகின்றது. சற்றுத் தள்ளி இருக்கும் பெஞ்சில் உள்ள இளைஞர்கள் கைகளைத் தட்டி ஓசை எழுப்பியவாறு பாடுகிறார்கள். அவர்கள் எதிரே பச்சை நிறப் போத்தல்கள் இருக்கின்றன. துரித தாளக் கட்டுகளைக் கொண்ட பாடல்களை மாறி மாறி அவர்கள் பாடுகிறார்கள்.பரிசாரகன் ‘மெனுவை’ நீட்டி குறிப்பெடுக்கத் தயார் நிலையில் நிற்கிறான்.

யாமினி அவன் பேசுவதை எல்லாம் வெகு ஆவலுடன் செவிமடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி போல் ஆகி இருந்தாள்.

“மேலும் சொல்லுங்கள்” என்றாள்.

“அப்படி ஒரு காலத்தில்தான் ஐராவை நான் சந்தித்தேன் ”

ஐரா வைப் பற்றி மேலும் அறிய யாமினி ஆசைப்பட்டாள்.

ஆனால் பதிலளிக்க அவன் அங்கு இல்லை. மறைந்து போயிருந்தான். அவன் வந்ததற்கான எந்தத் தடயமும் இல்லாமல் சிமெண்ட் பெஞ்சின் இடது புறம் வெறுமையாக இருந்தது. பிரமையின் எதிரொலி போல் அவனுடைய சொற்கள் அவளை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறு மணிக்கு வருவதாகச் சொன்ன அவன் இன்னும் வரவில்லை.

இன்னொரு பாடல்

விடுதியின் நுழை வாயிலை அவள் வெறித்துப் பார்த்த படி இருந்தாள். ஆறு மணியாகியும் அவன் இன்னும் வரவில்லை. எதற்காகவோ,யாருக்காகவோ காத்திருந்து,காத்திருந்து காலம் கழிவது ஒரு வதை. நிமிஷங்கள் ஒவ்வொரு சொட்டு நீர்த் துளியாகி இன்னொரு கிரகத்திலிருந்து உச்சந் தலையில் விழுகின்றதைப் போன்ற உபாதை அது. காத்திருத்தலில் கழிந்து கொண்டிருந்த இந்த நேரத்தில் அவள் எவ்வளவோ சித்திரங்களை மனதில் வரைந்து,வரைந்து அழித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு மீசை வைத்துப் பார்க்கிறாள். தாடி வைத்துப் பார்க்கிறாள். தெற்றுப் பல்லைப் பொருத்திப் பார்க்கிறாள். தொப்பியைக் கழற்றியும்,அணிவித்தும் அவதானிக்கின்றாள். நரையோடிய தலை முடியுடனும், முன் வழுக்கையுடனும் அவனைக் காண்கிறாள்.

கண்களை மூடிய நிலையில் அவள் சிமெண்ட் பெஞ்சில் இருந்தாள். சருகுகளை நொறுக்கிக் கொண்டே பாதணிகள் அவளை நெருங்கிக் கொண்டிருக்கும் ஓசை கேட்டதும் கண்களைத் திறந்து அந்தப் பக்கமாகப் பார்த்தாள். அவன் வந்து கொண்டிருந்தான். அவள் எழுந்து அவனை நோக்கிச் சென்றாள்.

கை குலுக்கிக் கொண்டே “நான் யாமினி பரமேசுவரன் ” என்றாள்..

“ஓ…உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி….என் பாடல்களுடன் பரிச்சயமுடைய ஒரு பத்திரிகையாளர் என்றதும் மூக்குக் கண்ணாடி அணிந்த,தலைக்குக் கருஞ் சாயம் பூசிய ஓர் ஆன்ரியை எதிர் பார்த்தேன்…ஆனால் என்ன ஆச்சரியம்… இங்கே ஒரு பச்சிளங் குழந்தை வந்து நிற்கிறது…” என்று அவன் கண் சிமிட்டிய படி சொன்னான்.

“ஒ!…அப்படியா… தள்ளாடும் நடையுடன், ஊன்றுகோலின் உதவியுடன் ஒரு கிழவர் வரப் போகிறார் என்றுதான் நானுங் கூட எண்ணிக் கொண்டிருந்தேன்…” என்று கூறி சிரித்தாள் அவள்.

“உடலுக்குத்தான் வயசு……மனசுக்கல்ல….நான் நித்திய காதலன் ”

அவள் புன்னகைத்தாள். ” வாடகைக்கு விடப் படும் என்ற அறிவிப்புப் பலகையை உங்கள் இதயத்தில் மாட்டி நிரந்தரமாகத் தொங்க விட்டிருக்கிறீர்களோ… என்னவோ…..நல்வாழ்த்துகள்..”

“யாமினி, உங்களைத் தோழி என்று நான் அழைக்கலாமா?”

” உங்கள் வசதி எதுவோ அப்படியே அழையுங்கள்…”

“தோழி..உங்கள் தோற்றம் கேரளத்து சுந்தரிகளை எனக்கு ஞாபகப் படுத்துகிறது….முப்பது வருஷங்களுக்கு முன்னர் நாம் சந்தித்திருந்தால் உங்களைப் பற்றி ஓர் அருமையான பாடலை இயற்றி மேடையில் பாடி இருப்பேன்….”

அவள் புன்முறுவலுடன் கேட்டாள் ” கேரளத்தின் அந்த சுந்தரிகளைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பாடல்கள் இயற்றி மேடைகளில் பாடி விட்டீர்களா ?…”

“தோழி…கிண்டலா? எனக்கு எவ்வளவு ரசிகைகள் இருந்தனர் தெரியுமா?காதல் ரசம் சொட்டச் சொட்ட அவகள் கடிதம் கடிதமாய் எழுதித் தள்ளுவார்கள்….”

“ஓ ! அப்படியா?

“அந்தக் காலத்தில் என் குழுவில் பாட வேண்டுமென்ற ஆசையுடன் ஒருத்தி என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். என்ன செய்யலாம்? அவளுக்குத் தொண்டை இருந்தால்தானே பாட்டு வரும்…கோரஸில் கூட நம்பி விட முடியாது. மாரி காலத் தவளை ஒன்று புகுந்த கதை போல் ஆகி விடும்….ஆட்டம் வராதவள் அரங்கத்தைப் பிழை சொன்ன கதையாக என்னைத் திட்டி விட்டுச் சென்றாள்.வருவோர்,போவோர் எல்லோரிடமும் அவதூறு செய்ய ஆரம்பித்தாள்.”

“என்ன சொன்னாள் ?”

“நான் அவளிடம் குருதட்சிணையாக முத்தமொன்று கேட்டேனாம். ” இதைச் சொல்லி விட்டு அவன் சத்தம் சிரிக்க ஆரம்பித்தான்.

கைகளை அசைத்து,அபிநயித்த படி ஒரு கவிஞனுக்குரிய பாவனையுடன் சொல்லிக் கொண்டே போனான். “காட்டெருமையிடம் முத்தம் கேட்பேன் கள்ளிச் செடியிடம் கேட்பேன் கற் பாறையிடம் கூடக் கேட்பேன் போயும்,போயும் உன்னிடம் கேட்பேனா ”

இதைச் சொல்லி முடித்ததும் கலகலவென்று சிரித்தான்.

“சரி… இதற்கெல்லாம் காது கொடுத்துக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது… ”

“ம்..ம்..என் வாழ்க்கையில் எவ்வளவு பெண்களை சந்தித்திருப்பேன்.. எல்லோரிடமுமா காதலும்,ஈர்ப்பும் வந்து விடும்..?. ”

“உண்மை…”

அரசவையின் செருக்கு மிகுந்த பாகவதன் போல் அவன் இப்போது தோற்றமளித்தான்.. தான் பாடுவதை நிறுத்தி எவ்வளவோ காலமாகி விட்ட போதும் மலை முகடுகளிலும், நதி நீர்ப் பரப்பிலும், வான் மேகங்களிளிலும், கடல் கடந்தும் தன பாடல்கள் அலைந்து கொண்டிருப்பதாக அவன் சொன்னான். தன் வீட்டு செல்லப் பிராணிகள் போல் ரசிகர்கள் இப்போதும் அவனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதாக கூறினான்.

“பின் ஏன் பாடுவதைத் திடீரென நிறுத்திக் கொண்டீர்கள் ? ” என்று கேட்டாள் யாமினி.

“ஐரா…ஐரா…ஐரா…” என்று அவன் மூன்று தடவைகள் சொன்னான்.

“ஐரா வை உனக்குத் தெரியுமா தோழி ? ”

“தெரியும்…. உங்கள் இசைக்குழுவின் முக்கிய பாடகியாக இருந்தவள்.. அவளுடன் சிறிது காலம் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்றும் பின்னர் பிரிந்து விட்டதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.அவள் பாடிய அந்தப் பாடல் கூட ஞாபகம் இருக்கிறது……என் கதவருகே நீ நின்றிருந்தாய்… என் பாடலின் பாதியை நான் மறந்து போயிருந்தேன்.. கடல் அலைகளைப் போல் ஏராளம் சொற்கள் நம்மிடம் இருந்தன… இனிய உரையாடல் எப்போதும் இடை விடாத மழையைப் போன்றது… ஹரி…. இந்த இடத்தில் நீங்கள் குறுக்கிட்டுப் பாடுவீர்கள்… ஒரு மயிலைப் போல தோகை விரிக்கும் மனதைக் கண்டது….. என்ற வரிகளை…”

ஹரி அவளை வியப்புடன் பார்த்தான். ” அப்படியே அந்தப் பாடலை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே…”

அவள் புன்னகைத்தாள்.

கொஞ்ச நேரம் அங்கு மௌனம் நிலவியது.விசைப்படகொன்று வெண்ணிற நீர்ச் சிதறலை இறைத்த படி,கோடிழுத்துக் கொண்டு ஆற்றில் அதிவேகமாகச் சென்றது. பகலுக்கான பிரியாவிடை போல் பறவைகள் இரைந்து பறந்தன.

“அவளும்,நானும் கலந்து கொண்ட கடைசிக் கச்சேரி இன்னமும் ஞாபகம் இருக்கின்றது…அவள் பாடும் போது தன்னை மறந்து விடுவது வழக்கம். மூடியிருக்கும் கண்களுக்குப் பின்னே அவள் எங்கெங்கோ சஞ்சாரம் செய்வது வழக்கம்…ஆனால் அன்று வழமைக்கு மாறாக அவள் கண்கள் சபையை நோக்கி அலைந்து கொண்டிருந்தன…அவள் முகம் ஒரு கட்டத்தில் மலர்ந்தது. அவளுடைய புதுக் காதலன் முதல் வரிசையில் வந்து உட்கார்ந்தான். அன்றையக் கச்சேரியில் நான் மிகவும் தடுமாறினேன். மேடையின் பின்புறம் மறைவில் சென்று ஓரிரு தடவைகள் குடித்தேன். கையின் பின்புறத்தால் கண்ணீரை அடிகடி துடைத்து விட்டுக் கொண்டேன்…..”

அவனை ஆசுவாசப் படுத்தி,இயல்பு நிலைக்கு எங்கனம் கொணர்வது எனப் புரியாமல் யாமினி சங்கடப் பட்டுக் கொண்டிருந்தாள்.

“தோழி… கச்சேரி முடிந்த அன்றைய இரவு அவளுக்கும்,எனக்கும் கடுமையான வாக்குவாதம் மூண்டது.என்னைக் குழந்தைக் குணம் கொண்டவன்… முதிர்ச்சியற்றவன்…இந்த உலகத்துக்கு லாயக்கற்றவன் எனக் கூறிக் கொண்டே இருந்தாள். தந்திரசாலியாய்,சாகசக் காரியாய் வாழ்வதை விட குழந்தையாய், மனமுதிர்ச்சியற்றவனாய் வாழ்வது மேலல்லவா என நான் பதிலுக்குக் கேட்டேன்.சண்டை போட்டுக் கொண்டே,அப்படியே தூங்கி விட்டேன்.அடுத்த நாள் காலையில் நான் எழுந்து பார்த்த போது ஈரம் காயாத அவளுடைய பாத்ரூம் செருப்புகள் மாத்திரம் இருந்தன..அவள் சொல்லாமல்,கொள்ளாமல் போய் விட்டாள்….”

இன்னமும் ஆறாத கொதிநீர்க் குமிழ்களை யாமினி அவனில் கண்டாள்.

இயல்பு நிலைக்கு அவன் வரும் வரை மௌனமாக இருந்தாள். அவன் குரல் உடைந்து போய் இருந்தது.சற்றுத் தயங்கியவாறு கேட்டான்…

“நீங்கள் தனியாகவா வந்தீர்கள்?”

“ஆம்…ஏன் ?..”

“இல்லை..சும்மா கேட்டேன்… தோழர் ஜி.டீ. யை தனியாகவா சந்திக்கப் போகிறீர்கள் ?”

“ஆம்…. ஆனால் இன்னும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.”

” தோழர் ஜி.டீ….. தோழர் ஜி.டீ…..” என்று முணு முணுக்கும் போது அவனுடைய முகம் ஒரு கணம் வன்மம் கொண்டதையும்,மறுகணம் வெளிறியதையும் கண்டாள்.தன்னைச் சூழ எதிரிகள் நிற்கும் ஒரு கற்பனைப் பிராந்தியத்துக்குள் அவன் நுழைந்திருந்தான்.

” தோழர் ஜி.டீ…இன்னமும் ஒரு சாத்தான் போல் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றான்….நான் சொன்னேனே, அந்தக் கடைசிக் கச்சேரிக்கு வந்து முன் வரிசையில் அமர்ந்த ஆசாமி அவன்தான்….அவனைக் கண்டதுந்தான் ஐரா வின் முகத்தில் ஒரு பூரண சந்திரன் அளவு ஒளி குவிந்து வெளிச்சம் பரவியது. அந்தக் குதிரைவீரன் மறுநாள் அவளைக் கவர்ந்து சென்று விட்டான். அதன் பின்.நான் மௌனி ஆகி விட்டேன்.. சவப்பெட்டிக்குள் நானே முடங்கிக் கொண்டு ஆணிகளை அடித்துக் கொண்டேன்….”

ஐரா என்னவானாள் எனக் கேட்க நினைத்து அவள் நிமிர்ந்த போது அவன் மறைந்து போயிருந்தான். கைக் கடிகாரத்தை அவள் பார்த்தாள்.

ஆறு மணிக்கு வருவதாகச் சொன்ன அவன் இன்னமும் வரவில்லை.

மற்றொரு பாடல்

விடுதியின் நுழை வாயிலை அவள் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். ஆறு மணி ஆகி விட்டது. அவன் எந்நேரமும் வரக் கூடும். அல்லது இருண்ட மேகங்கள் மழை பொழியாமல் ஏமாற்றிச் செல்லுவதைப் போல அவனும் இன்றைக்கு வராமலே விடவும் கூடும்.

அவள் நம்பிக்கையைப் பொய்ப்பிக்காமல், மன்னிப்புக் கேட்ட படி பத்து நிமிஷங்கள் தாமதமாக அவன் வந்து சேர்ந்தான்.இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.

“வந்த காரியம் எல்லாம் முடிந்து விட்டதா?”

“மிஸ்டர் ஜி.டீ. இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்….”

“நிச்சயம் உங்களை அழைப்பார்…”

“வாழ்க்கை அதன் பாட்டுக்கு என்னை இழுத்துக் கொண்டு ஓடுகின்றது. அதன் பிடியிலிருந்து நழுவி, நிறுத்தி என்னுடைய திசைக்கு அதை அழைத்துச் செல்ல வேண்டும். என்று என் மனம் அழுது புலம்புகிறது…..மிகவும் களைத்து விட்டேன்…ஓட்டம்..ஓட்டம்..தொடர்ச்சியான ஓட்டம்….ஜி.டீ…யார்?…நான் யார்…? எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம். ? ஆனால் ஒரு மந்திரவாதியைப் பின் தொடர்ந்த சிறுமி போல் இங்கே வந்து நிற்கிறேன்…”

ஹரிச்சந்திரா புன்னகைத்தான்.

“வாழ்க்கையில் ஈடுபாடும் சந்தோஷமும் கொள்ளத் தக்க விதத்தில் ஏதாவது தென் பட்டால் சொல்லுங்கள். ஒரே ஒழுங்கில் எந்த மாற்றமுமில்லாமல் அமைந்த இந்தத் தினசரி வேலைகள் இப்போது சலிப்பைத் தர ஆரம்பித்து விட்டன. ”

“ஆம்.அதுதான் நம்மைப் போன்ற சாமானியர்களின் விதி…. என்னிடம் எவ்வளவோ கனவுகள் இருந்தன.ஆனால் அவை ஈசல்களின் கனவுகளாகவே மரித்தன… இதோ,இங்கே வரிசையாக நிற்கும் அவ்வளவு மரங்களையும் உற்றுப் பாருங்கள்…. அவை நம் உரையாடல்களை ஒட்டுக் கேட்கின்றன.அதோ,வாத்தியங்களை இசைத்துக் கொண்டு சிலர் பாடுகின்றனரே… அவர்கள் வாய்கள்தான் அசைகின்றன… செவிகள் முழுவதும் இங்குதான் இருக்கின்றன. அந்த மேகங்களைப் பாருங்கள்.. முகத்தில் வந்து மோதும் காற்றைக் கவனியுங்கள். அவை நம்மைக் கண்காணிக்கின்றன. எந்த நண்பர்களிடமும் வாய் நனைக்காதீர்கள். அவர்கள் நமக்குத் தரும் பானத்தில் விஷமிருக்கலாம். எந்த நபரிடமும் வாய் திறந்து உங்கள் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நாம் அதிகாரத்தின் கரங்களில் சிக்கிக் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள்….. அவன் பேசிக் கொண்டே போனான்… ஒரு கட்டத்தில் பேச்சொலி மங்கி அவன் வாய் மாத்திரம் அசைந்து கொண்டிருந்தது. பின் அவனும் மாயமாக மறைந்து போய் இருந்தான்… அவள் தனிமையின் வெறுமையுடன் ஆற்றை வெறித்துப் பார்த்தாள் நப்பாசையுடன் விடுதியின் நுழை வாயிலை மறுபடியும் பார்த்தாள்.யாரும் இல்லை.

ஆறு மணிக்கு வருவதாகச் சொன்ன அவன் இன்னமும் வரவில்லை.

மேலுமொரு பாடல்

அவள் கண்களைக் கட்டிப் போட்டு அவன் எந்த மாய வழியில் வந்து சேர்ந்தான் என அவளுக்குப் புரியாமல் இருந்தது.

ஒவ்வொரு பாடல்களுமே தான் பாலூட்டி வளர்த்தகிளிகள்தான் என்று வந்தவுடனயே எடுத்த எடுப்பில் அவன் பேசத் தொடங்கி விட்டான்..கூடு திரும்பாத பச்சைக் கிளிகளைப் போல, ஐரா வைப் போல தன் பாடல்களும் தன்னை விட்டு காததூரம் பறந்து போய் விட்டன என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்தக் குரல் உடைந்து போய் இருந்தது. இறந்தவன் படுத்த கட்டிலின் வெறுமையை தன் தொண்டை இப்போதெல்லாம் நினைவு படுத்துகிறது என அவன் சொன்னான்., பாட முயன்ற போதெல்லாம் மரங்கள் பெருங்காற்றில் முறிந்து விழும் சப்தங்களே கேட்டுக் கொண்டிருப்பதாக அவன் சொன்ன போது அவன் கண்களில் நீர் திரண்டிருந்தது.தன புகழ் பெற்ற பழைய பாடல்களை முணுமுணுக்க முயல்கையில் தானே மறந்து தடுமாறுவதாகவும் போது தன் வீட்டுக்கான வழித் தடத்தை மறந்த புத்தி பேதலித்த ஒருவனைப் போல் ஆகி விடுவதாகவும் அவன் புலம்பினான்.

“நான் ஒரு பழைய பாடகன். என் பாடல்கள் அரதப் பழசு” என விரக்தியுடன் சிரித்தான்.

“பலவந்தமாக என்னை மேடையேற்ற முனைந்த போதெல்லாம் நான் கையெடுத்துக் கும்பிட்டேன்.. “எஜமான்களே…என்னை விட்டு விடுங்கள்…. என் பாடல்கள் நாக்குகளின் கீழே புதைந்து போய் விட்டன. எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் ஒரு தொல்போருளியலாளன் அவற்றை மீளவும் கண்டு பிடிபான். உங்கள் மேடையில் ராஜதந்திரிகள்,அரசியல் சாணக்கியர்கள், தேசப்பிரியர்கள், வித்துவசிரோன்மணிகள் எல்லோரும் கூடி இருக்கிறீர்கள்.உங்கள் மேடை என்னால் சோபை இழந்து விடக் கூடாது. என்னை விட்டு விடுங்கள். நான் எந்தக் காலத்திலும் பாடவே இல்லை…இனியும் பாட மாட்டேன்.இந்த நிலத்தில் எனக்கும் என் நிழலுக்கும் இடமில்லை என்றாலும் கூடப் பரவாயில்லை… இதோ இந்த ஆற்றில் ஒரு படகில் நான் இரவும் பகலுமாக அலைந்து கொண்டிருப்பேன். வேண்டுமென்றால் இந்த நீரேரியின் மீன்களுக்கு நான் என் உடைந்த குரலால் பாடிக் காட்டுவேன். ‘..நந்தவனத்தில் ஓர் ஆண்டி.. அவன் நாலாறுமாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி…….

அவன் பாடிய படியே ஆற்றினுள் இறங்கிக் கொண்டிருந்தான்.

நீரில் தலை மறையும் முன்னர் தெளிவான குரலில் யாமிநியைப் பார்த்து அவன் சொன்னான்…

“ஜி.டீ. இடம் கேட்பதற்கென்று நீங்கள் நிறையக் கேள்விகள் வைத்திருப்பீர்கள்…ஆனால் என் சார்பாக ஒரே ஒரு கேள்வியை மாத்திரம் நீங்கள் கேட்பீர்களா?”

அவள் சம்மதத்துக்கு அடையாளமாகத் தலையை அசைத்தாள்.

“அவனிடம் ஒன்றுக்கு இரண்டு தடவையாக இதைக் கேட்டு விடுங்கள்….அவன் ஏன் என்னைக் கொலை செய்தான்? அவன் ஏன் என்னைக் கொலை செய்தான்?”

அந்தக் குளிர்காற்றிலும் அவளுக்கு வியர்ப்பது போல் இருந்தது.. விரிந்து செல்லும் ஆற்று நீரின் வளையங்களை அவள் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.’அவன் பெரு மூச்சுகளா அவை?’

ஆறு மணிக்கு வருவதாகச் சொன்ன அவன் இன்னும் வரவில்லை.

இறுதிப் பாடல்

அவன் வருவதாகச் சொன்ன ஆறு மணி கடந்து வெகு நேரமாகி இருந்தது. சிமென்ட் பெஞ்சில் தன் அருகே இருந்த அந்த வெற்றிடத்தை அவள் உற்றுப் பார்த்தாள். அவன் வந்து அமர்ந்து,அளவளாவி சென்றது போன்ற இடத்தில் இரண்டு இலைகளின் சருகுகள் கிடந்தன. ஆற்றங் கரையில் கம்பத்தில் கட்டப் பட்டிருந்த படகொன்று காற்றுக்கு அசைந்த இருந்தது. பனிமூட்டத்தில் சிக்கிக் கொண்ட ஒரு மன நிலையில் அவள் இருந்தாள், எதிரே தோன்றுபவை எல்லாம் நிழல்கள் போல் மங்கலாகத் தெரிந்தன. அவன் இனித்தான் வருவானா? அல்லது வந்து போய் விட்டானா? அவளுக்கு அந்த மங்கல் பொழுதில், மாலை மயக்கத்தில் எதுவும் புரியவில்லை.

– காலச்சுவடு, ஜூலை 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *