மாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2022
பார்வையிட்டோர்: 2,732 
 

(1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மங்களநாயகி தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் கந்தசாமிக்கு ஓய்வு பெற இன்னும் ஒரு வாரந்தான் இருந்தது. அவர் நினைத்திருந்தால் லீவில் நின்று கடைசி நாள் பாடாசாலைக்கு வந்து பொறுப்பை உரியவரிடம் கொடுத்திருக்கலாம்.

மலரிலே அமர்ந்து தேனைச் சுவைக்கும் வண்டு மலரிலுள்ள தேனின் கடைசித் துளியை உறிஞ்சும் வரை, அதைவிட்டு நீங்காதது போல அவரும் தமது அதிகாரத்தை இறுதி நாள் வரை சுவைத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தால் நாள் தவறாது பாடசாலைக்கு வந்தார்.

ஆனால் இந்தக் காலத்தில் அதிகாரம் என்பது முட்படுக்கை என்பதையும் அவர் அறிந்துதான் இருந்தார். அதிலும் பாடசாலை ஒன்றின் அதிபராய் அமர்ந்து நிர்வாகத்தை நடத்துவது போலச் சிரமமான காரியம் இல்லை .

அன்றுங் கூடப் பாடசாலைக்கு வந்த அரை மணித்தியாலத்தில் பிரச்சினை ஒன்றுக்குக் கந்தசாமி முகம் கொடுக்க நேரிட்டது. ஏதோ இயக்கமாம். பிரசாரப் புத்தகங்கள் விற்கவேண்டுமாம். இப்பொழுதுதான் பூனைமீசை அரும்பிக் கொண்டிருக்கும் இளைஞர் இருவர் வந்திருந் தார்கள். “தம்பிமாரே, இது சின்னப் பள்ளிக்கூடம். பிள்ளைகள் வசதி குறைந்தவர்கள். வேணுமெண்டால் எல்லாரின் சார்பிலும் நான் ஒரு புத்தகம் வாங்கிறன். தயவு செய்து வகுப்புகளுக்கை போய் வாத்திமாரையும் பிள்ளைகளையும் குழப்பாதையுங்கோ” என்று அவர் அவர் களின் காலில் விழாத குறையாய் மன்றாடிய போதிலும் அவர்கள் கேட்பதாயில்லை.

தாங்கள் சொல்வதைக் கேட்காததையிட்டு மிகுந்த கோபமாக அந்த இளைஞர்கள் பேசினார்கள். கந்தசாமி தமது கோபத்தை அடக்கிக் கொண்டு நந்தனுக்கு வழிவிட்ட நந்தி போல அவர்களின் கோரிக்கைகளுக்கு இறுதியில் இணங்கவே வேண்டியதாயிற்று.

சிறிய பள்ளிக்கூடந்தான். மாணவர் தொகை ஐந்நூறுக்கும் குறைவுதான். முதலாந்தரம் தொடக்கம் பதினோராந்தரம் வரைதான் வகுப்புக்கள். ஆசிரியர் தொகையும் இருபதுக்குள். ஆனால் பிரச்சினைகளோ தலைக்குமேல். ஆசிரியர்களுக்குள் இரு கன்னைகள். மாணவரிடையே ஒழுங்கும் கட்டுப்பாடும் போற்றத்தக்கதா யில்லை. அடிக்கடி பாடசாலைப் பொருள்கள் சிறுச்சிறு அளவிலே களவாடப்பட்டுக் கொண்டிருந்தன. ஹர்த்தால்கள் ஊர்வலங்களில் திடீர்திடீரென்று பாடசாலை மூடப்பட வேண்டிய நிர்ப்பந்தம், மேலிடக் கெடுபிடிகள், பெற்றோர் பழைய மாணவர், ஊராரின் அநாவசியத் தலையீடுகள்.

இவற்றிலிருந்து இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை கிடைப்பதையிட்டு ஆறுதலும் மகிழ்ச்சியும் அடைய வேண்டிய நிலையிலும் மனத்தில் ஓர் உறுத்தலும் கந்தாசாமிக்கு இருந்ததற்கு நியாயம் இல்லாமல் இல்லை.

அவர் தமது முப்பத்தைந்து வருட சேவையிலே பள்ளிக்கூடமே உலகம் என்று இருந்துவிட்டார். அதிலும் அதிபராய்ப் பணியாற்றிய அவர் தமக்கென ஓர் ‘படிமத்தையும்’ தம்மளவில் ஏற்படுத்திக் கொண்டார். “அதிபர் கந்தசாமியா? அவர் மிகவும் கடுமையானவர். ஆசிரியர்கள் அவரைக் கண்டால் நடுங்குவார்கள்” என்பது தான் அந்தப் ‘படிமம்’

ஓய்வு பெற்றதும் இந்தப் படிமமும்’ தன்னால் கழன்று போய்விடும் என்று அவர் மிகுதியும் அஞ்சினார். தம்மால் அதிகாரம் செய்யப்பட்டவர்கள் தம்மைக் கண்டால் அலட்சியமாகக் கிள்ளுக்கீரை போல் நடத்துவார்களே என்று அவர் நினைத்து நினைத்துத் தம்முள் ஒடுங்கிப் போனார்.

நிர்வாகம் என்பது மேலுள்ளவருக்குக் கீழுள்ளவர் அடங்கி நடத்தலுக்கான சூழ்நிலையை உருவாக்குவதே என்ற கருதுகோளையாக்கி அந்த விதியைச் செயற்படுத்தி வந்தவருக்கு, எதிர்காலம் எப்படி அமையும் என்ற சிந்தனை அண்மைக் காலத்திலேதான் ஏற்பட்டிருக்கிறது. காலம் கடந்த கழிவிரக்கம்!

ஆனால் கந்தசாமியின் உள்ளத்தைக் கழிவிரக்கம் முற்றாக ஆக்கிரமித்தது என்றும் சொல்வதிற்கில்லை. இந்த நிமிஷத்திலும் தமது வீம்பை நிறைவேற்றி விட்டதான குரூர திருப்தி ஒன்று அவரை ஆட்கொண்டு ஆட்டிப் படைப்பதை அவர் மட்டுமே அறிவார்.

கந்தசாமிக்குப் பின் மங்களநாயகி தழிழ்க்கலவன் பாடசாலையின் புதிய அதிபர் யார் என்பதை நிருணயிக்கும் உரிமை தற்காலிகமாய் அவரின் கையிலேதான் இருந்தது. கல்வித் திணைக்களம் நிரந்தர அதிபர் ஒருவரை அனுப்ப வாய்ப்பில்லாது போனமையால், தமக்குப் பின் பாடசாலையில் கடமைபுரியும் அதிபராக யாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்க வேண்டியவர் கந்தசாமிதாம்.

பாடசாலையின் சேவை மூப்புக் காரணமாக ஒருவரை அதிபராக்குவதானால் அந்த அதிபர் முத்துச்சாமியாகத்தான் இருப்பார்; இருந்திருக்க வேண்டும். ஆனால் கந்தசாமியைப் பொறுத்த வரையில் முடிவு வேறாயிருந்தது.

முத்துச்சாமி வெளியிடங்களிலே பத்தாண்டுகளுக்கு மேல் உதவியாசிரியராயிருந்தவர். இந்தப் பாடசாலையிலே கடந்த பதினெட்டு வருடங்களாக உதவி ஆசிரியராயி ருக்கிறார். பயிற்சி பெற்ற முதலாம் தர ஆசிரியர், பழைய ஆங்கில எஸ்.எஸ்.ஸி, பால பண்டிதர். தமிழ், கணிதம் ஆகிய பாடங்களைக் க.பொ.த. வகுப்பிற்குக் கற்பித்துத் திறமையான பெறுபேறுகளைப் பெற்றுத் தருபவர்.

இருப்பினும் முத்துச்சாமிக்கு எந்தவித பொறுப்பி னையும் அளிக்கக் கந்தசாமி தயராயில்லை, சட்டங்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டு நேர்மையிலிருந்து அணுவ ளவும் தவறாது கடமை வீரராக முத்துச்சாமி விளங்கிய தால் வந்த வினை! திறமையான ஆசிரியர் என்பதால் மாணவரிடையே வீரவணக்கத்திற்கு உரியவராய்ச் செல்வாக்குடன் விளங்கும் முத்துச்சாமி மீது அவருக்கு ஒருவகையான பொறாமையுணர்ச்சி இருந்துவந்தது.

தமது அதிகாரத்தைக் கேட்டுக் கேள்வி இல்லாது அங்கீகரிக்கும் ஒருவர்தாம் கந்தசாமிக்கு வேண்டியிருந்தார். அந்தத் தேவையை நிறைவு செய்த செல்வநாயகத்தின் மீது அவரின் கடைக்கண் பார்வை விழுந்ததில் ஆச்சரியம் இல்லை, வார்த்தைக்கு வார்த்தை ‘சேர்’ போட்டுக் கொண்டு முன்னாலும் பின்னாலும் வாலைக் குழைத்து(?)க் கொண்டு திரிந்த செல்வநாயகத்தைக் கந்தசாமி தமது மெய் காப்பாளராக ஆக்கிக் கொண்டார்.

வேதவல்லி அரசாங்க அதிபர் ஒருவரின் சகோதரி. ஆனால் அந்த உயர்வுச் சிக்கல்தான் அவளின் துணிச் சலுக்குக் காரணம் என்று சொல்ல முடியாது. வீட்டில் அவள் பெற்ற சுதந்திர உணர்வினை வெளியிலும் வளர் த்துக் கொண்டு தனக்குச் சரி என்று பட்டதை எவருக்கும் அஞ்சாது சொல்லும் வீராங்கனைத்தனமே அவளை அன்றும் அவ்வாறு சொல்ல வைத்தது.

அசிரியர் கூட்டம் ஒன்றில் கந்தசாமி தமக்கு ஏற்பட்ட கோபத்தை அடக்கிக் கொண்டது ஆச்சரியந்தான். “மிஸ் வேதவல்லி, இது எனது நிர்வாக விஷயம் எனக்குச் சரியானதைச் செய்திருக்கிறேன். தயவு செய்து இதுபற்றி விவாதிக்க வேண்டாம். அடுத்த விஷயத்துக்குப் போவோம்” என்று அவர் அழுத்தம் திருத்தமாகச் சொன்னபின் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.

கந்தசாமி அன்று மேற்கொண்ட முடிவின் பலனை அவர் தொடர்ந்து அனுபவிக்க வேண்டியதாயிற்று. ஆசிரியர் களிடையே இரு கன்னைகள் ஏற்பட்டு அடிக்கடி தமது நெற்றிக்கண்ணைத் திறப்பதும் அவரின் வழக்கமாயின. கந்தசாமியின் ஆதிக்கக் கரங்களிலே எங்கோ ஓர் இடத்தில் ஊனம் ஏற்பட்டுவிட்டது.

ஆசிரியர் கூட்டங்களில் இந்த ஊனத்தின் அடையாள ங்கள் வெளிப்படலாயின. முத்துச்சாமி அதிபரை அடிக்கடி இடைமறித்துக் குறுக்குக் கேள்விகள் கேட்பதும் கிண்டல் பண்ணுவதும் சகஜமாயின. இடையிடையே வேதவல்லியின் பக்கவாத்தியமும் வாசிக்கப்படுவதுண்டு.

எல்லாரையும் அடக்கி ஆண்டு வந்த அவரால் முத்துச்சாமியையும் வேதவல்லியையும் அடக்கியாள்வது இயலாது போயிற்று. முத்துச்சாமி அவரின் சிவப்புக் கோடுகளுக்கு அகப்படாது, பாடக்குறிப்பு, பாடப்பதிவு, பயிற்சித்திருத்தம் என்பவற்றையும் ஒழுங்காகச் செய்து வந்ததால் அவரைத் தமது சூழ்ச்சிக்குள் அகப்படுத்த முடியாது கந்தசாமி தத்தளித்தார்.

வேதவல்லியோ சில நாள்களில் நேரம் பிந்தி வருவாள். அடிக்கடி லீவில் நிற்பாள். அதிபர் கந்தசாமி ஏதாவது சொன்னால் “வேணுமெண்டால் அரை நாள் லீவு போடுங்கோ” என்றும் “எனக்கு உரிமையான லீவு நான் எடுக்கிறன். வகுப்பு வேலை பாதிச்சால் கேளுங்கோ” என்றும் அவரை எதிர்த்துப் பேசுவாள்.

ஆசிரியர் யாராவது “நீங்கள் மிஸ் வேதவல்லிக்கு இடம் கொடுக்கிறியள்” என்று சாடை மாடையாகச் சொன்னால் சொன்னவர்பாடுதான் ஆபத்து “உவளுக்கு முப்பத்தைந்து வயசுக்கு மேலை. இன்னும் கலியாணம் முடிக்கவில்லை. ஹிஸ்டீரியா பிடிச்சிட்டுது. அதுதான் சத்தம் போடுறாள். உங்களுக்கென்ன? நீங்கள் கடமையைச் சரியாகச் செய்யுங்கோ. எனக்கு என்ரை கடமை தெரியும்” என்று கந்தசாமி சத்தம் போடுவார்.” வேதவல்லி அரசாங்க அதிபரின் ககோதரி. அவளோடை மோதினால் எனக்குத்தான்

ஆபத்து. அதனாலைதான் நான் பேசாமல் இருக்கிறன் என்று தமது தாழ்வுச் சிக்கலை அவர் சொல்வரா?

ஆனால், இருவருக்கும் குழிபறிக்கக் கந்தசாமி பின்னணியில் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

முத்துச்சாமி தாரமிழந்தவர். நாற்பத்தாறு வயது. அவர் பத்தாம், பதினோராம் வகுப்பு மாணவிகளோடு சரசமாடுவதாகவும் பின்னேர வகுப்புக்கள், லீவுக்கால வகுப்புக்கள் என்று வைத்துச் சல்லபாம் புரிவதாகவும் மொட்டைக் கடிதங்கள் அதிபரூடாக முத்துச்சாமிக்கு வரத் தொடங்கின. ஒருநாள் கந்தசாமி அவரை அழைத்து உபதேசம் செய்ய முற்பட்டு, முத்துச்சாமி அவரை அடிக்கக் கையோங்கி, ஆண் ஆசிரியர்களால் விலக்குப் பிடிக்கப் பட்டது தனிக்கதை.

இன்னொரு நாள் கந்தசாமி வகுப்புக்களை மேற்பார்வை செய்யச் சென்ற பொழுது ஆசிரியர் அறையில் முத்துச்சாமியும் வேதவல்லியும் உரையாடிக் கொண்டிருந் தார்கள். கந்தசாமியைக் கண்டும் காணதவர் போல அவர்களின் கதை தொடர்ந்தது. அவர்களுக்கு அது பாடவிடுப்பு நேரம்.

கந்தசாமிக்குப் புதியதொரு வாய்ப்புக் கிடைத்து விட்டது. அவர் செல்வநாயகத்தின் காதில் குசுகுசுக்க அது சக ஆசிரிய, ஆசிரியைகளிடையே பரவ, அதனால் அவர்களிருவருக்கும் பெரிய தலையிறக்கம் உண்டாகும் என்று கந்தசாமி எதிர்பார்த்தார். ஆனால், அவரின் ஏவுகணை விண்வெளிக்கு ஏறாமலே தரை தட்டிவிட்டது.

முத்துச்சாமி வேதவல்லியை நோக்கிச் சொன்னார். “மிஸ் வேதவல்லி அற்பத்தனமாக உவங்கள் பேசிறத்துக்கு நீங்கள் வருத்தப்படமாட்டியள் எண்டுதான் நினைக்கிறன். நாங்கள் சின்னப்பிள்ளையள் அல்ல”

“சீ! அவங்கள் என்னத்தையும் பேசட்டும். அப்படித் தான் இருந்தால் என்ன? ஆர் எங்களைத் தடுக்கிறது.?” என்றாள் வேதவல்லி.

முத்துச்சாமி முதலில் திகைத்தார். பிறகு ஆச்சரிய மடைந்தார். இறுதியில் ஆனந்தப்பட்டார்.

யாரோ ஒருவர் திட்டமிட்டு அநியாயமாக இட்ட நச்சுவிதை, தனது நச்சுத்தன்மையை இழந்து இனிய மலர்களையும் கனியையும் வழங்கும் அழகிய தருவாக வளர முடியுமா?

வளரத் தொடங்கி விட்டது. அமைதியாக கௌரவ மாக, மிக்க பெருந்தன்மையுடன்.

இந்த நிலையிலேதான் அதிபர் கந்தசாமியின் முடியிறக்கம் அண்மி வந்தது. வட்டாரக் கல்வியதிகாரியின் ஆலோசனையும் மீறி, சுற்றிவர முணுமுணுப்புக்களாகவும் குசுகுசுப்புக்களாகவும் எழுந்த எதிர்க்கருத்துக்களையும் பொருட்படுத்தாது செல்வநாயகத்தை அதிபராகப் பரிந்துரைத்து, திணைக்களத்தின் அங்கீகாரமும் பெற்று அவரின் கைகளில் பொறுப்புக்களை அதிபர் கந்தசாமி அளிக்கவிருக்கிறார்.

அந்தநாளும் வந்தது. தமது அதிபர் ஆசனத்தில் இருந்து கந்தசாமி எழுந்திருந்து அதற்குப் பிரியாவிடை. அளிக்க இன்னும் சில நிமிஷங்களே இருந்தன.

“எப்படியோ இண்டு வரைக்கும் இந்தப் பாரத்தைச் சுமந்திட்டன். இனி உம்மடைபாடு. உமக்கு நான் சொல்லக் கூடிய ஆலோசனை இதுதான். எப்படியாவது முத்துச்சாமி யையும் வேதவல்லியையும். மாற்றிப் போடும். மற்ற வாத்தி மார் பசுக்களைப் போலை. உமக்கு எந்தக் கஷ்டமும் வராது. அவை உம்மோடை ஓத்துழைப்பினம்.”

இவ்வாறு கந்தசாமி சொன்ன பொழுது செல்வநாயகம் தமது வழக்கமான போலிப் பணிவுச் சிரிப் புடன் “உங்கடை அனுபவமோ திறமையோ எனக்கு இல்லை. நீங்கள் சொன்ன படி செய்யிறன் சேர். அடிக்கடி உங்களிட்டை வந்து ஆலோசனை கேட்டுத் தொந்தரவு தருவன். போயிட்டு வாருங்கோ சேர்” என்று கூறிக் கைகூப்பினார்.

“இவனிட்டைப் பொறுப்பை அளிச்சிட்டன். முத்துச் சாமியிலை உள்ள கோபத்தாலை மட்டும் நான் இவனை அதிபராக்கேல்லை. அவனிட்டைப் பொறுப்பைக் குடுத்தால் கணக்குவழக்குக் கேட்பான். தளபாடங்கள் குறையு தென்பான். இதெல்லாம் தொந்தரவு தானே? என்ர பென்சனு க்கும் பழுது வரலாம். இப்ப இவனைப் பசையடிச்ச ஒப்புக் குடுத்திட்டான்; இனி இவன்பாடு; திணைக்களம் பாடு” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி கந்தசாமி அதிபர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்.

“எவ்வளவோ யூனியராயிருந்தும் இவரை வால்பிடிக்கிற மாதிரி நடிச்சு இண்டைக்கு அதிபரும் ஆயிட்டன். பாவம்! பதவி போச்சுதெண்டு மனிசன் பெருமூச்சு விடுகிறார். இவர் சொன்ன மாதிரி நடந்தால் என்பாடு அதோகெதி தான். முத்துச்சாமியையோ வேதவல்லியையோ நான் மாற்றப் போவதில்லை. முத்துச்சாமி கெட்டிக்காரன். அவனை உப அதிபராக்கினால் கூடின ஒத்துழைப்பும் கிடைக்கும்; பாடசாலையும் முன்னுக்கு வரும். வேதவல்லி யும் நல்லவள். அவளை அணைத்துக் கொண்டு போனால் பள்ளிக்கூட வளர்ச்சிக்கு எதுவும் செய்வாள். இவையைக் கருவியாகக் கொண்டு அதிபர் பதவியை நிரந்தரமாக்கிக் கொள்ள வேணும் பார்பபம்’ என்ற வகையிலே செல்வநாயகத்தின் சிந்தனை ஓடிற்று.

– அமிர்தகங்கை (தை 1986), சொக்கன் சிறுகதைகள், வெளியீடு: நயினை கி.கிருபானந்தா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *