மயிலோவியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 4,479 
 

ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பிற்குச் சேர்க்கைக்காக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்கள் ரகுவும் அவனுடைய அப்பாவும். விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து கொண்டிருந்தார் அப்பா. ஆசிரியர்கள் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பள்ளிக்கூடமே பியூன் ஆறுமுகம் இல்லையென்றால் நடக்காது என்பதுபோல் ரொம்பவும் பரப்பரப்பாகக் காணப்பட்டது. அவ்வவ்போது தலைமையாசிரியரின் அறைக்குள்ளே யார்யாரோ சென்று வந்து கொண்டிருந்தார்கள். ரகுவின் தலைக்கு மேலே காற்றாடி வேகமாய்ச் சுழன்று கொண்டிருந்தது. அப்படியிருந்தும் அவனுக்குக் கைக்கால்கள் வியர்த்துக் கொட்டின. உடம்பெல்லாம் சுடுகின்ற மாதிரி தோன்றிற்று. தன்னுடைய வலதுகையை எடுத்துக் கழுத்திலும் நெற்றியிலும் வைத்துப்பார்த்தான். கொஞ்சமாய்ச் சுடுவதுபோல்தான் தெரிந்தது அவனுக்கு.

ஊரிலே சின்னதாய் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தான். ஆறாம் வகுப்புக்குப் பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்க வருகிறான். புதுத்துணி, புது நண்பர்கள், புது இடம், குறிப்பா சைக்கிளில் பள்ளிக்கூடம் போகலாம். இதெல்லாம் ரகுவை வானில் மிதக்க செய்தது. ஐஞ்சாவது படிக்கும்போதே ரகுவின் அப்பா அவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். ரகுவும் எங்குச் சென்றாலும் சைக்கிளில்தான் செல்வான். பள்ளியில் சேர்க்க அப்பா அழைத்தபோது காலையில் சாப்பிடகூட இல்லை. ஆசையாய் அப்பாவுடன் ஒட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டான். சுவரோரமாய்ப் போடப்பட்டிருந்த வரிசையான நாற்காலியில்தான் சிறுவன் ரகு அமர்ந்திருந்தான். அந்த இடத்தில் இருக்கும் கோப்புகளும் வானுயர விட்டங்களும் அந்த விட்டங்களின்மேல் உள்ள விள்ளைகூரைகளும் மிடுக்கான மனிதர்களின் நடமாட்டமும் ரகுவை என்னவோ செய்ததுபோல் இருந்தன. மூஞ்சை உம்மென்று வைத்திருந்தான். காற்றாடி சுற்றிய போதிலும் வியர்வைத்துளிகள் அங்கும் இங்கும் அவனின் உடம்பில் பரவியிருந்தன. கொஞ்சநேரத்திற்குப் பிறகு வயிற்றை முட்டிக்கொண்டு ஒன்னுக்கு வந்தது. பக்கத்தில் இருந்த அப்பாவை நைசாக ஆட்காட்டி விரலைக்கொண்டு சுரண்டினான். அவர் என்ன என்பது போல் பார்த்தார். ஆட்காட்டி விரலை நேராகத் தூக்கிக்காண்பித்தான். அப்பாவும் புரிந்து கொண்டு கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.

ரகுவிற்கு அப்பாடா என்றிருந்தது. ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து வந்தாகிவிட்டது. அப்பா வேண்டுமானால் அலுவலகத்திற்குச் செல்லட்டும். கொஞ்சநேரம் இங்கையே இருந்துவிட்டு போக வேண்டியதுதான் என்று நினைத்தான். தன்னுடைய பேண்ட் ஜிப்பை அவிழ்த்துக்கொண்டே கழிவறையின் உள்ளே நுழைந்தான். உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வரிசையாகத் தன்னைப்போலவே சேர்க்கைக்கு வந்த மாணவர்கள் ஒவ்வொரு கழிவறை கூண்டிலும் நின்றுகொண்டிருந்தார்கள்.

“அடப்பாவிகளா! நான்தான் பயந்துக்கிட்டு இங்க வந்தன்னா.. அத்தனைபேருமே இங்க வந்து என்னடா பன்னிட்டு இருக்கீங்க…” என்று மனதால் நினைத்துக்கொண்டு இன்னும் உள்ளே சென்றான்.

ஒரு பையலும் கூண்டைவிட்டு வெளியே வருதற்கு இல்லை. எல்லோருமே நின்ற இடத்திலேயே நின்று கொண்டு இருந்தார்கள். ரகுவிற்கு முட்டிக்கொண்டு வந்தது.

“டே அவசரம் டா… யாராவது கொஞ்சம் தள்ளி நில்லுங்கடா” என்றான் ரகு.

எவனும் திரும்பி பார்க்காமலே நின்று கொண்டிருந்தார்கள். மீண்டும் சத்தமாய், ”ஹெட்மாஸ்டர் வர்ராருடா…” என்றான் ரகு.

இப்போது அனைத்துப் பயலுகளும் ரகுவைத் திரும்பிப்பார்த்தார்கள்.

”முதல்ல ஜிப்ப போடுங்க“ என்று சொல்லிக்கொண்டே கூண்டில் ஏறி ஒன்னுக்குப் போனான்.

“எங்கடா ஹெட்மாஸ்டரு” என்றான் மூர்த்தி

”அட்மிஷன் போட உங்க அப்பா உங்களளெல்லம் கூப்பிட்டுகிட்டு இருக்கிறாரு. நீங்களெல்லாம் இங்க என்ன பண்ணீட்டு இருங்கீங்க” என்றான் ரகு.

அனைத்து மாணவர்களும் கழிவறையை விட்டு ஓட்டம் பிடித்தார்கள். மூர்த்தி மட்டும் ரகுவின் மூஞ்சை நின்னுப் பாத்திட்டுப் போனான்.

அந்த வருடம் ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களின் சேர்க்கை சென்ற வருடத்தைக் காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ரகுவும் மூர்த்தியும் ஒரே வகுப்பில்தான் போடப்பட்டிருந்தார்கள். இவர்களோடுக் கண்ணனும் மணியும் சங்கரும் சேர்ந்து கொண்டார்கள். ஐவரும் பஞ்சபாண்டவர்கள்ன்னு கூட சொல்லலாம். எப்போதும் ஒன்றாய்த்தான் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு பி பிரிவுன்னாவே வாலு பசங்கதான். எப்பவுமே சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். பீரியட் முடிஞ்சாலும் கத்துவானுங்க.. ஆரமிச்சாலும் கத்துவானுங்க.. பாடம் நடத்தும்போது நடுநடுவே கேள்விகளும் அடிக்கடி கேட்டுட்டே இருப்பானுங்க.. எப்பவும் பேச்சும் சத்தமும் சிரிப்பும் கும்மாளுமாய்த்தான் இருக்கும். இதனால் வகுப்பு ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்க்கிட்ட புகார் சொல்ல ஆரமிச்சாங்க.

“பசங்களா அவனுங்க… எல்லாம் குரங்குங்க… வாலு பசங்க… அடக்கவே முடியல சார்” என்று தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தார் ஆசிரியர் ஒருவர்.

“சின்னப்பசங்க.. குழந்தைங்க.. இளங்கன்று பயம் அறியாது.. அப்படித்தான் இருப்பார்கள். நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று சொல்லிவிட்டு தலைமை ஆசிரியர் அந்த வகுப்புக்கு மட்டும் கண்டிப்பான ஆசிரியராகப் பார்த்துப் போட்டார்.

ஆறாம் வகுப்பு பி பிரிவுல ரகுதான் லீடர். அந்த வகுப்பே அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. வகுப்பு மாணவர்களை அந்தளவிற்குத் தன்னுடைய சொல்பேச்சுக்குக்கீழ் வைத்திருந்தான். லீடர் பதவிக்குச் ஒருசில மாணவர்கள் முன்வந்தார்கள். அனைவரையும் பின்னுக்குத் தள்ளி போட்டியிட்டவர்களையும் சேர்த்து கைத்தூக்கவைத்து இவனே லீடரும் ஆயிட்டான். இதற்கு காரணம் இவன் வைத்திருந்த விளையாட்டுத்தான்.

ஒரு வெள்ளைத்தாளில் சின்னசின்னதாய்க் கோடுகள் வரிசையாய்ப் போடவேண்டும். அதேபோல மூன்றுமுறை போடவேண்டும். இப்பொழுது இரண்டிரண்டாய்க் கோடுகளை அடித்துக்கொள்ள வேண்டும். மீதி கோடுகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். ஒன்றோ அல்லது பூஜ்ஜியமாகவோ வரும். இதேபோல் மற்ற இரண்டு வரிசைகளிலும் அடித்து மீதத்தைக் குறிக்க வேண்டும். உதாரணமாக பூஜ்ஜியம் ஒன்று ஒன்று என வருவதாக வைத்துக் கொள்ளலாம். ரகுவிடம் சார்ட் பேப்பர் ஒன்று இருந்தது. அவற்றில் பூஜ்ஜியம் ஒன்று ஒன்றுக்கு என்ன என்று பார்த்தால் புத்திசாலி, விளையாட்டு வீரன், டாக்டர், வக்கில் என்பது போன்ற ஏதாவது ஒன்று இருக்கும். இதை பார்த்த சிறுவர்களும் ‘ஹை’ என்று குதிப்பார்கள். இதை வைத்துத்தான் ரகு எல்லோரையும் மடக்கினான். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு ரகுவோடு சமரசம் பேசி மற்ற மாணவர்களும் ஒத்தும் போனார்கள்.

பள்ளி ஆரமித்து இரண்டு மாதங்களுக்குப்பின் ஆறாம் வகுப்பு பி பிரிவுக்குப் புதியதாக ஒரு மாணவன் வந்து சேர்ந்தான். பியூன் ஆறுமுகம்தான் அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது தமிழ் வகுப்பில் திருக்குறள் மனப்பாடமாகச் சொல்லவில்லை என்று ஆசிரியர் மாணவர்களை குச்சியால் அடித்துக்கொண்டிருந்தார். வந்த மாணவன் அமைதியாக நின்று கொண்டிருந்தான். குண்டான உடம்பு. சிரித்த முகம். வெண்மையான தோற்றம். மொத்தத்தில் அமுல்பேபி போல் இருந்தான். சரவணன் என்று தன்னுடைய பெயரை வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அடுத்த நாளிலிருந்து மாணவர்கள் ஒவ்வொருவராய் சரவணன் பக்கமாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். சரவணன் எல்லோரிடமும் சிரித்துச்சிரித்துப் பேசினான். எதற்கும் மனம் கலங்கி அழாதவனாய் இருந்தான். தான் வைத்திருந்த காசில் நண்பர்களுக்கு இடைவேளையின் போது நிறைய திண்பண்டங்களை வாங்கி கொடுத்தான். தன்னுடைய மதிய உணவை பிற மாணவர்களுக்கும் கொடுத்து ஆறாம் வகுப்பு பி பிரிவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துக்கொண்டான் சரவணன்.

ரகுவிற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் சுத்தமாகச் சரவணனின் போக்குப் பிடிக்கவில்லை. ரகுவின் நண்பர்கள் வகுப்பு மாணவர்களிடம், “யாரும் சரவணனிடம் பேசக்கூடாது என்று கட்டளை போட்டார்கள். ஆனால் அவர்கள் யாரும் இவர்கள் சொல்வதை கேட்பதாக இல்லை.

அன்று கணிதப்பாடம் நடந்து கொண்டிருந்தது. பெண் ஆசிரியை ஒருவர் பின்னம் பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பாடம் நடத்தும் வேளையில் சரவணன் ஏதோ சிரித்துக்கொண்டிருப்பதை ஆசிரியர் பார்த்துவிட்டார்.

“டே சரவணா… என்னாடா அங்க சிரிப்பு. இங்க வா…” என்றுக் குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டார் ஆசிரியர். அரைக்கால் டவுசரோடு பயந்தபடியே கரும்பலகைக்கு முன்னால் வந்து நின்றான் சரவணன்.

“சிரிச்சிட்டு இருந்தல்ல… இந்தா சாக்பீஸ்… போர்டுல இருக்குற பின்ன கணக்கை போடு” என்றார். சாக்பீஸ கையில் வாங்கிட்டு அப்படியே நின்னிட்டு இருந்தான். சரவணனுக்கு போர்டுல இருக்குற பின்ன கணக்கைப் பார்த்தவுடனே தலைச்சுற்றுவது போல் இருந்தது.

கொஞ்சநேரத்தில் சரவணனின் முட்டிக்கால்களுக்குக் கீழ் குச்சியால் அடி விழுந்து கொண்டிருந்தது. குனிந்து கைகளால் எவ்வளவோ தடுத்துப் பார்த்தான். ஆனால் அடி மட்டும் விழுந்து கொண்டே இருந்தது. ஆசிரியரும் மாற்றிமாற்றி அடித்துக்கொண்டேயிருந்தார். இப்போது சரவணன் வகுப்பிலேயே ஓட ஆரமித்தான். போர்டுக்கு எதிர்புறம் உள்ள மூலையில் நின்று கொண்டான். ஆசிரியரும் அவனை அடிப்பதற்காகக் குச்சியை எடுத்துக்கொண்டு ஓடினார். சரவணன் அதற்குள் வலது பக்கமாய் ஓடிவந்து மீண்டும் போர்டுகிட்ட வந்து நின்னான். இப்போது ஆசிரியரும் இவனும் எதிர்புறமுமாய் நின்றார்கள்.

“டே நில்லுடா.. என்ன ஓட வைக்காதடா..” என்றார் ஆசிரியர்.

“டீச்சர் முடிஞ்சா என்ன புடிங்க” இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடியாடினான் சரவணன். ரகுவிற்குச் சரவணனைப் பிடித்துக்கொடுத்து டீச்சரிடம் அடிவாங்கி வைக்க வேண்டுமென்று பிடிக்க ஓடிவந்தான். சரவணனோ யாரிடமும் மாட்டாமல் சுற்றிச்சுற்றி வந்தான். சிறிது நேரத்திற்கு மேலாக அவனால் ஓட முடியவில்லை. சோர்ந்து போயிவிட்டான். வகுப்பு மாணவர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டான் சரவணன். பெல்லும் அடித்தது. பீரியடும் முடிந்தது.

ஒரு ஆங்கில வகுப்பின்போது மாணவர்கள் போர்டில் இருப்பதைப் பார்த்து எழுதிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர் ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்துக்கொண்டு வந்தார். சரவணனின் நோட்டையும் பார்த்தார். நோட்டை கையில் வாங்கிக்கொண்டார். கோழிக்கால் கிறுக்கினார் போன்று இருந்தது. அவனுடைய கையெழுத்தை அவனாலயே திருப்பி படிக்க முடியாது. அந்தளவிற்குக் கையெழுத்துப் படுமோசமாக இருந்தது. சரவணனிடம் நோட்டை காண்பித்து,

“தம்பி இது என்ன கையெழுத்து” என்றார்.

“இங்கிலிஸ் எழுதறன் சார்” என்றான்.

பக்கத்தில் இருந்த ரகுவின் நோட்டை காண்பித்து, ”அப்போ இதற்கு பேர் என்ன? என்று கேட்டார்” ஆசிரியர்.

கையில் வாங்கி பார்த்தான். ரகுவின் கையெழுத்து அழகாய் முத்துக்கள் பதித்தது போன்று இருந்தது. சரவணன் வழிந்தான். ஆசிரியர் கோபமானார். சரவணனைப் பிடித்து முதுகை வளைத்து ஓங்கி ஒரு அடி போட்டார். ப்ளார் என்று சத்தம் வந்தது. சரவணனின் கையில் வைத்திருந்த ரகுவின் நோட்டு ஒருப்பக்கமாய்ப் போய் விழுந்தது. அடிவாங்கி நிமிர்ந்த சரவணன்,

“வலிக்கலையே… வலிக்கலையே எனக்கு” சிரித்துக் கொண்டே சொன்னான்.

“அடிச்ச எனக்கே கை வலிக்குது. இவன் வலிக்கலன்னு சொல்றானே!“ என்று சொல்லிவிட்டு அவரும் சிரித்து விட்டார்.

அன்று மதிய சாப்பாட்டு வேளையில், ”டே.. சரவண குண்டா… இங்க வாடா..” என்றான் ரகு. “சொல்லுடா லீடரு” என்று புருவத்தை மேலே தூக்கிக்கேட்டான் சரவணன்.

“வாத்தியாரு அந்த அடி அடிக்கிறாரு. உனக்கு வலிக்கவே இல்லையாடா..” என்றான் மணி.

“என்னது வலியா.. இதுக்கு முன்னால நான் படிச்ச ஸ்கூல்ல நான் நல்லா எழுதலன்னு என்னை மரத்துல கட்டி தலைகீழா தொங்க விட்டுடாங்க.. அதையே தாங்கிட்டேன். இதெல்லாம் ஒரு விஷியமா” என்று சர்வசாதாரணமாய்ச் சொன்னான் சரவணன்.

“என்னது தலைகீழா தொங்கவிட்டாங்களா” என்றான் கண்ணன்

“ஆமாம்! அதுவும் டிரஸ்ஸே இல்லாம” என்று சொல்லிவிட்டு சரவணன் தன்குண்டு உடம்பு குழுங்க தலையை ஆட்டிக்கொண்டு ஒருகையில் டிபன் பாக்ஸ்சும் இன்னொரு கையில் ரொட்டித்துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே சென்றான். ரகுவும் அவனது நண்பர்களும் வாயைப்பிளந்தார்கள்.

வருடாவருடம் போலவே நவம்பர் பதினான்காம் தேதி ‘குழந்தைகள் தினம்’ கொண்டாட தலைமை ஆசிரியர் முடிவு செய்திருந்தார். அதன்படி போட்டிகளும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. வெற்றிப்பெற்றவர்கள் ‘குழந்தைகள் தினத்தன்று’ கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆறாம் வகுப்பு பி பிரிவிலும் மாணவர்கள் தங்களது பெயரினை ஒவ்வொரு போட்டியிலும் பதிவு செய்தனர். பேச்சுப்போட்டியிலும் கவிதைப்போட்டியிலும் ரகு தன்னுடைய பெயரைப் பதிவு செய்தான். ஓவியப்போட்டியில் யாருமே பெயர்க்கொடுக்க முன்வராதபோது சரவணன் மட்டும் தன்னுடைய பெயரைக் கொடுத்தான். ஓவிய ஆசிரியர் சரவணனை ஒருமாதிரியாகப் பார்த்தார். அவனால் ஓவியம் சரியாக வரைய முடியுமா எனச் சந்தேகித்தார்.

“டே சரவணா! உனக்கு கயெழுத்தே சரியா வராது. அப்புறம் எப்படி ஓவியம் சரியா வரைவ?” என்றான் சங்கர்.

“அதெல்லாம் எங்க அப்பா இருக்கிறாருடா.. அவரு பாத்துப்பாரு” என்றான் சரவணன்.

அன்றைய ஓவியப்பீரியடில் ஆசிரியர் வகுப்புக்கு வந்தார். ”போட்டிக்கு எல்லோரும் தயாராகிட்டீங்களா? உங்க திறமைக்கு ஒரு வாய்ப்பு. உங்களுக்கு என்ன வருமோ அதை சிறப்பா செய்யுங்க. உங்க மேலயே நீங்க முதல்ல நம்பிக்கை வையுங்க. நீங்களெல்லாம் இந்தப் பள்ளிக்குப் புதுசு. அதனால ‘குழந்தைகள் தினம்’ நிகழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. விழா ரொம்பமும் பிரமாதமாக நடக்கும். வெற்றிப்பெற்ற மாணவர்களை மேடையில் பேச சொல்லுவாங்க. பரிசும் பதக்கமும் உங்க பெற்றோர்களைக்கொண்டு கொடுக்கச்சொல்லி அசத்துவாங்க. அப்புறம், ஓவியக்கண்காட்சியும் நடக்கும். நீங்க வரைகின்ற ஓவியங்களைக் கண்காட்சியில் வைக்கப்படும். அந்த ஓவியம் பக்கத்தில் நீங்களும் நின்று பார்வையாளராகிய மாணவர்களுக்கும் பெற்றொர்களுக்கும் விளக்கம் தரலாம். கடைசியா உங்க அனைவருக்கும் சாப்பாடு போடுவாங்க” என்றார்.

ஓவியப்போட்டி நடைபெறும் நாளும் வந்தது. எல்லோரும் சார்ட்டும் பென்சிலும் இரப்பருமாக அறையினுள்ளே நுழைந்தார்கள். சரவணனும் ஓவியப்போட்டிக்குச் சென்றிருந்தான். போட்டியும் முடிந்தது.

அப்போது ஓவிய ஆசிரியர் சரவணனின் வகுப்பிற்கு வந்திருந்தார். சரவணனை அழைத்து,

“டே தம்பி இந்த ஓவியத்தை நீயா வரைஞ்ச?” என்றார் ஓவிய ஆசிரியர்.

“ஆமாம் சார்! நான்தான் வரைஞன்” என்றான் சரவணன்.

ஆசிரியரால் நம்ப முடியவில்லை. ஆனாலும் உன்னுடைய ஓவியம்தான் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார். சரவணன் எப்போதும் போலவே வழிந்துகொண்டிருந்தான்.

சரவணனின் ஓவியத்தை மாணவர்களிடம் காட்டினார். ஒரு வெள்ளை சார்ட்டில் மயிலை ஓவியமாக வரைந்திருந்தான். துள்ளி ஆடும் மயிலானது ஓவியமாய் இல்லாமல் நிஜத்தில் பார்ப்பது போன்று தோகைவிரித்து ஆடுவது போல் இருந்தது. அனைவரும் ரசித்துத் சரவணனைப் பாராட்டினார்கள். ரகுவிற்கும்கூட மயில் ஓவியத்தைப் பார்த்து அசந்துதான் போனான். ஆனாலும் ரகுவிற்குச் சரவணன் வரைந்த ஓவியம் அழகாய் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஓவியத்தை அவனுடைய அப்பாதான் வரைந்து கொடுத்திருக்க வேணடும். அதைத்தான் எப்படியோ மாற்றி கொடுத்திருக்கிறான் என்று நினைத்தான். சரவணனை மற்ற மாணவர்கள் பாராட்ட பாராட்ட ரகுவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. எப்படியாவது சரவணனின் மயில் ஓவியத்தை ஓவியக்கண்காட்சியில் வைக்கவிடக் கூடாது என்று எண்ணினான்.

ஓவியக்கண்காட்சியில் முதல் நாளன்று மாணவர்கள் அனைவரும் தங்களது ஓவியத்தை அறையில் சரியான இடமாய்ப் பார்த்து வைத்துக்கொண்டிருந்தார்கள். சரவணனுக்கு உதவ ரகுவும் அவனின் நண்பர்களும் உடனிருந்தனர். அப்போது சரவணனின் மயில் ஓவிய சார்ட்டுக்குப் பக்கத்தில் பாட்டிலில் தண்ணீர் குடிக்கின்ற மாதிரியும் கைத்தவறி ஓவியத்தில் விழுகின்ற மாதிரியும் ரகு பார்த்துக்கொண்டான். ரகு நினைத்த மாதிரியே தண்ணீர் முழுவதுமாய் சார்ட்டில் ஊற்றியது. சார்ட் நனைந்து ஓவியம் அழிந்து கொஞ்ச நேரத்திலே நைந்தும் போனது. நடந்தது விபத்துப் போலவே அமைந்தும்விட்டது. சரவணன் கண்கள் சிவக்க தேம்பிதேம்பி அழுதான்.

சரவணன் அழுவதை அன்றுதான் ரகுவும் மற்ற மாணவர்களும் பார்த்தார்கள். ரகுவிற்கு தான் தப்பு செய்துவிட்டோமோ என்று மனதார வருந்தினான். ஓவிய ஆசிரியர்தான் சரவணனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

“அழுவாத… நீதான வரைஞ்ச.. இன்னும் நமக்கு காலைவரை நேரம் இருக்கு. அதுக்குள்ள அதேமாதிரி இன்னொன்னு வரைஞ்சிடு” என்றார் ஓவிய ஆசிரியர். சார்ட்டும் பென்சிலும் சரவணனிடம் கொடுக்கப்பட்டது. வெறும் சார்ட்டையையே பார்த்துக்கொண்டிருந்தான். தேம்பல் இன்னும் நிக்கவில்லை. கண்கள் நிறைய கண்ணீருடன் முகமெல்லாம் வியர்த்துக் காணப்பட்டான்.

ரகுவின் நண்பர்கள் அனைவரும், “சரவணா… உன்னால முடியும்! முடியும்! வரைடா… நாங்கெல்லாம் இருக்கோம் என்று உற்சாகப்படுத்தினார்கள். ரகு மட்டும் மனஅழுத்தத்துடன் சரவணனையே பார்த்துக்கொண்டிருந்தான். சரவணன் பென்சிலால் கோடிட்டான் வரைந்தான் மேலும்கீழும் இழுத்தான் வட்டமிட்டான். கொஞ்சநேரத்தில் மீண்டும் முன்னைப்போலவே அழகான மயில் ஓவியம் வந்துவிட்டது. சின்ன வயதில் இப்படியொரு திறமையா என்று ஆச்சரியப்பட்டார் ஓவிய ஆசிரியர். ரகு ஓடிச்சென்று சரவணனை இறுகக்கட்டிக்கொண்டான்.

“நண்பா… நீ நல்லவண்டா… திறமையானவண்டா.. உன்னை போல ஒருத்தன் எங்களுக்கு நண்பனா கிடைச்சது சந்தோசம்டா.. என்னை மன்னிச்சிருடா.. நான் வேணுமின்னுதான் ஓவியத்து மேல தண்ணீர் ஊற்றினேன். என்னை மன்னிசிருடா நண்பா..” என்று ரகு சரவணனின் காலில் விழுந்தான்.

”டே ரகு நீ என்னோட பிரண்டுடா… நீ போயி என் கால்ல விழுற..“ என்று ரகுவைத் தூக்கி கட்டிப்பிடித்துக்கொண்டான் சரவணன். மாணவர்களும் ஒன்றாய்க் கூடி கூச்சலிட்டனர். ஓவிய ஆசிரியர் இந்தச் சின்னப் பசங்களின் அன்பைப் பார்த்து வியந்துபோனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *