மனிதத்தை உணர்ந்த தருணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 3,338 
 

பொதுநலன் விரும்பும் நல்ல மனிதர் ஒருவர் அதிகாலை வேளையில் தன்னுடைய அவசர வேலையாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வீட்டில் இருந்து கிளம்பினார். தெருமுனையைத் தாண்டிச் செல்லும்போது அந்தக் குறுகலானச் சந்தில் இருந்த ஒரு வீட்டின் வெளியே அந்த காட்சியைக் காண்கிறார்.

சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற மாற்றுத்திறனாளி மனிதர் ஒருவர், “தான் தங்கியிருந்த வீட்டின் எதிரே உள்ள சிறிய கழிவுநீர் ஓடை ஒன்றில் தடுமாறி விழுந்து கிடந்தார்”. ஒற்றைத் துணியை மட்டும் போர்த்திக்கொண்டு அவர் வீட்டின் நடையைத் தாண்டி இறங்கியிருப்பார்ப் போலத் தெரிகிறது, ஏனெனில் “அந்தச் சீலைத் துணியும் , நீளப் பாய்ச்சலில் வீட்டின் வாசலில் இருந்து கழிவுநீர் ஓடை வரை வேகத்தடைப் போல நீண்டுக் கிடந்தது”.

அதிகாலையின் அரை வெளிச்சத்தில் லேசான மலைச்சாரலில் , தரையில் கையூன்றி அமர்ந்த நிலையில் நிர்வாணமாகக் கிடந்த அவரை “இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தூக்கிவிட இறங்கினார் அந்த நல்ல மனிதர். அதற்கு முன் ரோட்டில் கிடந்த அந்தத் துணியை வலித்து எடுத்து , அவர் மீது போற்றி விட்டுத் தூக்கலாம் என்ற எண்ணத்தில் துணியைக் கையில் எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றதும் உதவி கோரும் மனிதரை உற்றுக் கவனித்தார் “. கூர்ந்து கவனித்ததன் கணநேரக் கணிப்பில் அவர் வெளியே வந்ததன் நோக்கத்தை இவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது .

ஆம் , “அவசரத்தில் காலைக் கடனைக் கழிக்க வெளியே வந்த அந்த மனிதர் எழுந்திருக்கும் போதுதான் கால் இடறி கீழே விழுந்திருக்கிறார்” . ‘முதுகு, கை உட்பட உடலின் சில பாகங்களில் கழிவுநீர் சேற்றுடன் கூடிய மலமும் ஒட்டியிருந்ததைப்’ பார்த்ததும் முகம் சுளித்து அருவருப்புற்று கீழே கிடந்தவரைத் தூக்கி விட முற்படாமல் துணியை மட்டும் போர்த்திவிட்டுச் சென்றார் அந்த நல்ல மனிதர்.

இருந்தும் அவர் மனம் கேட்கவில்லை ‘நல்ல மனிதர் அல்லவா!!’ . “நடுங்கும் குளிரில் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாரே” என்று நினைத்தவாறே சிறிது தூரம் மெதுவாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஒருவன் வந்தான். அவன் யார் என்றால் எல்லா ஊரிலும் இவனைப் போல ஒன்றிரண்டு பேர் இருப்பர். “வேலை வெட்டிக்கு ஒழுங்காகச் செல்லாமல் ‘மது ,புகை’ பழக்கங்களினால் தன்னையும் கெடுத்துக் கொண்டு தன் குடும்பத்திற்கும் பாரமாக, அடிதடிச் சண்டைகளில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக வாழும் ரகத்தைச் சேர்ந்தவன். இவனெல்லாம் எதுக்கு இன்னும் உசுரோட இருக்கான்.?, நாட்டுல நல்ல நல்லவனுக்கு எல்லாம் சாவு வருது இவனுக்கு வரமாட்டேங்குதே..?” என்று ஊர் மக்களால் புகழக்கூடிய அளவிற்கு சிறப்பு வாய்ந்தவன். அவனைக் கண்டதும் இந்த நல்ல மனிதர் நடந்ததைச் சொன்னார். அதைக் கேட்டு அவன் உடனே “அதான் ஊர்க்காரங்க எல்லாம் அவனுக்கு சாப்பாடு துணிமணி எல்லாம் கொடுக்குறாங்க இல்ல!! சாப்புட்டுட்டு ஒரு இடத்தில கிடந்தா என்னவாம்.?” என்று சொன்ன மறுகணமே வறியவர் கிடந்த இடம் நோக்கி விரைந்தான்.

நடுங்கும் குளிரில் அலங்கோலமாகத் தரையில் கிடக்கும் இயலாதவரைப் பார்த்ததும் அவன் உடனே “ஒரு கையையும் பிடித்து,இன்னொரு கையால் அவரின் இடுப்பையும் பக்கவாட்டில் பிடித்துத் தூக்கினான்” . ஊர்க்காரர்களால் ‘வெட்கம் ,மானம் ,சூடு சொரணை’ இல்லாதவன் என்று சொல்லப்பட்டனுக்கு அருவருப்பும் இல்லை என்பதை அந்த நல்ல மனிதர் உணர்ந்துகொண்டார். “அப்படியே லாவகமாக நகர்த்திக் கொண்டு இயலாதவரை அவரின் வீட்டுக்குள் கிடத்திவிட்டு சென்றான்”.

இப்போதுதான் மனக்குமுறல்கள் ஏதுமின்றி அந்த நல்ல மனிதர் நிம்மதி அடைந்தார். அத்துடன் ஒரு நிதர்சனத்தையும் உணர்ந்துகொண்டார். அவரின் நினைவில் “மகான் ஆதிசங்கரரின் வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றதாகச் சொல்வார்கள், ஆதிசங்கரர் ஞானம் அடையும் சமயத்தில் அவரைப் பரிசோதிப்பதற்காக இறைவன் இப்படி ஒரு சோதனையை நிகழ்த்தியதாகச் சொல்வதும் உண்டு”.

“விஷச் செடிகள் என்றும், கொடும்பாவிகள் என்றும், களையப்பட வேண்டியவர்கள் என்றும்” நாம் சிலரை அவர்களின் செய்கையைப் பொருத்து மதிப்பிடுவதும் உண்டு. ‘ஆயினும் இறைவன் ஏன் இவர்களை நிம்மதியாக அலைய விடுகிறான்.?’ என்ற கேள்வியும் நமக்குள் எழும். இறைவனின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு செயலுக்கானக் காரணத்தைக் கொண்டுதான் இருக்கின்றன என்ற உண்மையை இந்த சம்பவத்தின் மூலம் அந்த நல்ல மனிதர் உணர்ந்தார். என்னதான் தான் நல்ல மனிதராக, உதவும் மனப்பான்மையுடன் இருந்தாலும் ‘அருவருப்பு’ என்ற குணமானது தக்கச் சமயத்தில் வறியவருக்கு அந்த உதவியை செய்ய முடியாமல் தடுத்தது. அதேசமயம் மற்ற எல்லா விஷயங்களிலும் கெட்டவனாகக் கருதப்படுபவனால் அந்த உதவியை சுலபமாகச் செய்ய முடிந்தது. அவனைத் தவிர்த்து வேறு யாரேனும் சாமானியர் ஒருவர் அந்த இடத்தில் வந்திருந்தால் கூட நம்மைப் போல அந்த உதவியைச் செய்யாமல் சென்றிருப்பார் என்பதும் அவருக்கு தெரியும். அந்த நல்ல மனிதர் ஒரு கெட்டவனிடமும் “மனிதத்தை உணர்ந்த தருணம்” அது.

இந்தக் கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நியதி என்னவென்றால் “ஒருவரை அவரின் ஒரு சில செய்கைகளின் மூலம் நாம் அவரை இப்படித்தான் என மதிப்பிட்டு அடையாளப்படுத்தி விட முடியும், ஆனால் அவர் வாழவேத் தகுதியற்றவர் என யாரையும் ஒதுக்கிவிட முடியாது” . தேவையற்றது எனக் கருதி நாம் எரியும் “சிறு துரும்பும் கூட பல் குத்த உதவும்” அதுபோலத் தேவையற்றவர்களாக நாம் கருதும் சில மனிதர்களும் கூட இதுபோன்ற சிலத் தேவைகளுக்கு பயன்படத்தான் செய்வர். “மனிதர்கள் எல்லோருக்குள்ளும் உள்ள மனிதத்தைக் காக்க , நாம் புனிதம் காக்கும் மகான் ஆகவேண்டிய அவசியமில்லை” அவர்களை புரிந்து கொண்டாலே போதும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *