மனிதத்துடன் சமயோசிதமும் சேர்ந்தால்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 2, 2021
பார்வையிட்டோர்: 4,634 
 

காலை பதினோறு மணி தனது வேலை நேரத்திற்கு நடுவே , தனது கைச் செலவுகளுக்கான பணத்தை எடுக்க ஏடிஎம் மையத்திற்குள் வந்தான் விஷ்ணு. தனது ஏடிஎம் கார்டை மெஷினுக்குள் சொருகிவிட்டு, தானியங்கி விசைப்பலகையின் நம்பர் பொத்தான்களை விரல்களால் தேய்த்தவாரே “தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது, இப்போதையத் தேவைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்” என்று சில வினாடிகள் வேகமாக யோசித்த வண்ணம் ஒரு சிறியத் தொகையை உறுதி செய்து, மெஷினில் வெளிவந்தப் பணத்தை கையில் எடுத்து விட்டுத் திரும்பினான் . எடுத்தப் பணத்தை பணப்பையில் வைத்து விட்டு அதனை பாக்கெட்டில் திணித்துக் கொண்டு இருக்கும்போது, பணத்தைச் சரி பார்த்துக் கொள்வதற்காக எல்லா ஏடிஎம் மையங்களிலும் உள்பக்கச் சுவரோடு ஒட்டினாற்போல் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய அகலமுள்ள அந்த மேஜையில் ஒரு ‘காகித மடக்கு’ இருப்பதைக் கண்டான் .

அந்தக் காகிதம் மடக்கை பார்ப்பதற்கு கொத்தாக இருந்த சில்லரை நாணயங்களை, மொத்தமாக காகிதத்தில் பொதிந்து வைத்திருப்பதைப் போல விஷ்ணுவுக்குள் தோன்றியது. உடனே அதைக் கையில் எடுத்தான். உள்ளங்கையில் சற்றுப் பெரிதாக இருந்த அந்தக் காகித மடக்கில் சில்லறை நாணயங்களை வைத்துப் பொதிந்தது போன்ற எடை இல்லை . அதில் மூன்றில் ஒரு பங்கு எடைதான் இருக்கிறது என்பதை அவண் அனுமானித்தான் . அந்த மடக்கைப் பிரித்துப் பார்த்த அவனுக்குள் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது .

கனமான இரண்டு காகிதத் தாள்களுக்கு மத்தியில் , அதிகவிலை மதிப்புள்ள நீளமான தங்கச் சங்கிலி ஒன்று காகிதத்தில் வைத்து மடக்க ஏற்றவாறு சுருக்கி வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதே.! என்பதால் ஏற்பட்ட அதிர்ச்சி அல்ல. “ஏனெனில் அவன் திருடனும் இல்லை, அதனைப் பார்த்ததும் அவனுக்குள் திருட்டு எண்ணமும் எழவில்லை”. கிடைப்பதை வைத்து சமுதாயத்தில் சிறப்பாக வாழக் கற்றுக்கொண்ட தன்மானம் உள்ள சாமானிய இளைஞனில் அவனும் ஒருவன் .

“ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த நபர் ஏதோ ஒரு அவசர காரியத்திற்காக வெளியே எடுத்து வந்த தங்கச்சங்கிலியை ‘அவசரத்திலும், பரபரப்பிலும்’ மறந்து இங்கே விட்டுச் சென்றிருக்கிறார்” என்பதை விஷ்ணு கணித்தான் . அவ்வளவு துல்லியமாக எப்படி கணித்தான்.? “வசதியான குடும்பத்துத் தங்கச் சங்கிலி வாசற்படி தாண்டாது . வெளியே வரும்போது அவர்களின் கழுத்தில் இருக்கும், வீட்டினுள் இருந்தால் பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக இருக்கும். ஒருபோதும் தனியாக எடுத்து காகிதத் தாளில் வைத்து மடக்கும் அளவிற்கு இருக்காது”. என்பதை சரியாக யூகித்தான் .

“சற்று நேரத்திற்கு முன்புதான் இந்தத் தங்கச்சங்கிலியை உரிமையாளர் இங்கு தவறவிட்டிருக்கக்கூடும், அவர்களுக்குப் பின் யாரும் ஏடிஎம் மையத்திற்குள் வராததால் நம் கையில் கிடைத்திருக்கிறது. காவல் நிலையத்திற்குச் சென்று கொடுத்தால் நம்மையும் விலாவாரியாக விசாரித்து , அவர்களும் நகைத் தொலைந்துவிட்டது எனப் புகார் அளித்திருந்தால் மட்டுமே அவர்கள் கையில் கிடைப்பது சாத்தியம் . அதற்கு ஒன்றிரண்டு நாட்கள் கூட ஆகலாம். நானே இப்போது வேலை நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறேன் , காவல் நிலையம் சென்று நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதேசமயம் தவறவிட்டவர்கள் கையில் விரைவில் ஒப்படைக்கவும் வேண்டும், இந்த இரண்டும் ஒருசேர நடக்க என்ன வழிகள் இருக்கிறது”. என அந்தச் சிறிய மேஜையின் மீது விரல்களால் தாளம் தட்டிக்கொண்டேத் தீவிரமாக யோசிக்கலானான் விஷ்ணு.

“தண்டோரா அடித்தும் சொல்ல முடியாது, அதேசமயம் தவறவிட்டவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என வேறு ஒருவரிடத்தும் கொடுத்து விட்டுச் செல்லவும் முடியாது”. ஏடிஎம் மையத்திற்குள் நின்ற அந்தச் சிலநிமிட நேரத்தில் அவனுக்குள் ஒரு புதிய யோசனைத் தோன்றியது . “நகையின் உரிமையாளர் நகையைத் தவற விட்டதை இந்நேரம் அறிந்திருந்தால் , நகையை எங்கிருந்து எடுத்து வந்தாரோ அந்தத் தொடக்கம் முதலேத் தேடிக் கொண்டுவருவார் . எங்கும் கிடைக்காத பட்சத்தில் இங்கே வருவார், இங்கேயோ கண்காணிப்பு கேமரா உள்ளது . இதனைக் கருத்தில் கொண்டு ஏடிஎம் மையத்தைச் சார்ந்த அருகிலுள்ள வங்கியில் போய் விசாரிப்பார். அந்நேரம் அவருக்குச் சொந்தமான தங்கச்சங்கிலி என்னிடம் உள்ளது தெரியவரும் , என்னைத் தேட முயற்சித்தோ அல்லது தவறாக நினைத்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோ, ஏற்கனவே நேரத்தை விரயமாக்கி கொண்டிருக்கும் அவரின் மனக்குமுறல்களை அதிகமாக்காமல் , கேமராவில் என்னை பார்த்தவுடனேயே என்னைத் தொடர்பு கொள்ளும் படிக்கு நம்முடைய கைபேசி எண்ணை வங்கிக்கும் அவருக்கும் தெரியும் படியாகச் செய்ய வேண்டும்” என்ற முடிவை எடுத்தான் .

உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்காகப் பாதி அளவுப் பிரித்து விரிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலி இருந்த அந்தக் காகித மடக்கை, பழைய மாதிரியே மடக்கினான். தானியங்கி இயந்திரம் வெளியேத் தள்ளிய துண்டு சீட்டின் பின்பக்கம் எதுவும் எழுதப்படாத வெள்ளை பரப்பில், தன்னுடைய கைபேசி எண் தெளிவாகத் தெரியும்படி இரண்டு வரிசைகளில் 5,5 எண்களாக மொத்தம் உள்ளப் பத்து எண்களையும் பெரிதாக எழுதினான் . அதை அப்படியே கொண்டுப்போய் ஒரு பக்கக் கேமராவின் முன்னே காண்பித்தான் , கூடவே அந்தக் காகித மடக்கையும் காண்பித்தான். நகையைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்ட விஷ்ணு, தன்னுடைய அவசர வேலையைப் பார்க்க ஏடிஎம் மையத்தை விட்டு வெளியேறினான்.

விஷ்ணு எதிர்பார்த்தபடியே சரியாக ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. வங்கியிலிருந்து மேலாளர் பேசுவதாகச் சொன்னார் . அருகில் நின்று கொண்டிருந்த நகையின் உரிமையாளர் பற்றிய விவரங்களை விஷ்ணுவிடம் மேலாளர் சொல்லிக் கொண்டிருக்கையில், “தங்கச் சங்கிலி என்று சொல்கிறார், குறிப்பிடத்தக்க வேறு ஏதேனும் அடையாளங்கள் உள்ளதா.?” என விஷ்ணு மேலாளர் மூலமாக நகையைத் தவறவிட்டவரிடம் கேட்க, “ஆம் அதில் குறிப்பிட்டத் தெய்வத்தின் படம் பொறித்த நாணயம் ஒன்று தொங்கிக் கொண்டிருப்பதை” உடனே பதிலாகச் சொன்னார் . இந்த நகை அவருடையது தான் என உறுதிப்படுத்திக் கொண்ட விஷ்ணு “இன்னும் பத்து நிமிடத்தில் நான் வங்கிக்கு வந்து நகையை ஒப்படைக்கிறேன் ” எனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

விஷ்ணு வந்து நகையை ஒப்படைத்ததும் “அதனை தவறவிட்ட நகையின் உரிமையாளருக்கு போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது” நிம்மதிப் பெருமூச்சு விட்டார். உடனே தன்னுடைய கைப்பையில் இருந்து ஐநூறு ரூபாய் பணத்தை எடுத்து விஷ்ணுவிடம் கொடுத்து நன்றியும் தெரிவித்தார் . அதனை வாங்க மறுத்த விஷ்ணுவை வங்கியில் உள்ள அனைவரும் சேர்ந்துப் பாராட்டினர் . ஆம், தக்கச் சமயத்தில் விஷ்ணுவுக்குள் தோன்றிய சமயோசித புத்தியால், “நேரமும், அலைச்சலும்” விரையம் இல்லாமல் தவறவிட்ட இரண்டு மணி நேரத்திற்குள் நகைத் திருப்பிக் கிடைத்ததை எல்லோரும் வியந்து பேசினர்.

இந்தச் சம்பவத்தை ஒரு சாதாரணமான நற்செயலாகக் கருதி விட்டுவிடாமல் , பலருக்கும் முன் மாதிரியாக இருக்கும் பொருட்டு விஷ்ணுவின் இந்தப் புதிய முயற்சியை எல்லோரும் அறியும்படி செய்யவேண்டுமென வங்கி நிர்வாகம் முடிவெடுத்தது. வங்கியின் மூலம் ‘பத்திரிகைகள், ஊடகங்கள்’ பலவற்றுக்கும் இது செய்தியாகத் தரப்பட்டது . காவல்துறை உயர் அதிகாரிகளில் தொடங்கிப் பலதரப்பு சான்றோர்களிடம் இருந்தும் விஷ்ணுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. அந்த ஒரு நாளுக்குள்ளே இந்தப் பரபரப்புச் செய்தியானது தலைமைச் செயலகத்துக்கும் தெரியவர சுதந்திர தினத்தன்று முதலமைச்சரிடம் நற்செயல் புரிந்ததற்கான விருதினைப் பெறுவதற்காக பரிந்துரை செய்யப்படும் அளவிற்கு விஷ்ணுவின் புகழ் வளர்ந்தது.

நற்செயல் புரிய வேண்டும் என்ற நல்லெண்ணம், மனிதராகப் பிறந்து மனிதநேயத்துடன் வாழும் அனைத்து மக்களுக்கும் உரித்தானதாகும். அந்த வாய்ப்பு அமையும் சமயத்தில் கூடவே புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டால் அது நம்மை எங்கோ உயர்த்தும் என்பதற்கு இந்த சிறுகதை ஒரு சான்றாகும். “மனிதத்துடன் சமயோசிதமும் சேர்ந்தால் நிச்சயம் அது மாபெரும் வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை “.

Print Friendly, PDF & Email

0 thoughts on “மனிதத்துடன் சமயோசிதமும் சேர்ந்தால்…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *