மனக்கண் பார்வை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 14, 2023
பார்வையிட்டோர்: 2,210 
 

மகிளாவுக்கு மனம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது. செவிலியர் படிப்பு முடித்து, ஒரு பெரிய மருத்துவ மனையில் வேலை கிடைத்ததால் இன்று முதல் நாள் வேலையில் சேர்ந்து தனது முதல் நோயாளிக்கு சேவை செய்யும் பொருட்டு மருத்துவமனைக்கு செல்வதற்க்காக அதிகாலை நான்கு மணிக்கே கண்விழித்து, புதிதாக எடுத்திருந்த சீருடை அணிந்து, அம்மாவும் ஆசையாக செய்த சிற்றுண்டியை உண்டு உற்ச்சாகமான நிலையில், மதிய உணவை ஒரு டிப்பன் கேரியரில் போட்டு கையில் கொடுத்து வாழ்த்த, அப்பாவையும் முதல் நாள் என்பதால் உடனழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் சென்று காத்திருந்தாள்.

பேருந்து நிறுத்தத்தில் பலர் நின்றும், இருக்கையில் அமர்ந்து கொண்டுமிருந்தனர். பல ஊர்களுக்குச்செல்லும் பேருந்துகள் வந்து நின்று பயணிகளை ஏற்றிச்சென்றன. தான் செல்ல வேண்டிய பேருந்து சீக்கிரம் வந்து விடாதா? எனும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்த இளைஞனின் செயல் பிடிக்கவில்லை.

‘ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவன் தானே? தன் சகோதரிகளையும் இப்படித்தான் பார்ப்பானா? படிக்கும் போது உடன் படித்த பெண்களுடன் இப்படித்தான் நடந்திருப்பானா?’ என அந்த இளைஞன் மீது மிகுந்த வெறுப்பும், ஆத்திரமும் ஏற்பட்டபோது உடல் நடுங்கியது. 

அருகில் இருந்த அப்பாவோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வயதான ஒருவரிடம் நாட்டு நடப்புகளைப்பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்.

பேருந்து வந்து நின்றவுன் எழுந்து செல்லத்தயாரான மகிளாவுக்கு அருகே வந்த அந்த இளைஞன் அவள் சற்றும் எதிர் பாராத விதமாக அவள் தோள் மீது கை வைக்க, “ஐயோ” என அலறியபடி அவனது கையைத் தட்டி விட்டதை அவளது தந்தை பார்த்து விட, உடனே அவன் மீது பாய்ந்து அந்த இளைஞனை அடித்துத்துவைத்தெடுத்து விட்டார். அவரது கால்களைப்பிடித்தபடி இளைஞன் கெஞ்சியும் விடாமல் கோபம் தலைக்கேற அவனருகில் கிடந்த பெரிய பிரம்பு போன்ற ஒரு தடியை எடுத்து அவனது தலையில் அடித்தவர், “நீ போ நான் பார்த்துக்கறேன்” என சொன்னதும் பயத்திலும், பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்திலும் பேருந்திலேறிச்சென்று விட்டாள்.

மருத்துவமனைக்கு சென்று முதல் நாள் வேலையில் சேர வந்திருப்பதைச்சொன்னதும் வயதான செவிலியர் ஒருவர் தலைமை மருத்துவரிடம் அழைத்துச்சென்றார்.

“வாம்மா. வாழ்த்துக்கள். செவிலியர் வேலை சாதாரணமில்லை. உயிருக்கு போராடி வர்றவங்களுக்கு முதலில் பார்த்து மருத்துவ உதவி செய்து காப்பாத்தற முதல் தெய்வங்களே நீங்கதான். நோயாளிகளோட பேசி அவங்களை மன ரீதியாவும் சரிப்படுத்தற வேலை உங்களோடது தான். இதுல ஆண், பெண் மற்றும் வயது வித்தியாசமோ, ஏழை, பணக்காரங்க, படிச்சவங்க, படிக்காதவங்கங்கிற பாகுபாடு கூடாது. முக்கியமா நம்ம எதிரியோ, ரவுடியோ, கொலைகாரனோ, தீவிர வாதியோ அடிபட்டு வந்தாலும் சிகிச்சையளித்தே ஆகனம்” எனக்கூறிய அறிவுரையை ஏற்றுக்கொண்டவள் வேலைக்கான பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் பார்க்கிற வேலையை தலைமை செவிலியர் கொடுக்க அதற்க்கான அறைக்குச்சென்று தனது வேலையைத்தொடங்கினாள்.

சற்று நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது . ஒரு நோயாளியை தள்ளு வண்டியில் வைத்து அவசர சிகிச்சைப்பிரிவிற்கு கொண்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து ரத்த அழுத்தம் பார்க்கிற வேலை வேறு செவிலியருக்கு மாற்றப்பட்டு, மகிளாவுக்கு தலையில் அடிபட்ட நோயாளிக்கு கட்டுப்போடும் வேலை வழங்கப்படவே உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்றப்போகிறோம் என்ற ஆர்வத்தில் நோயாளி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தவளுக்கு அதிர்ச்சியில் ஒரு சில நொடிகள் தனது உடம்பில் ரத்தம் உறைந்து பின் ஓடுவதை உணர முடிந்தது.

பேருந்து நிறுத்தத்தில் தன்னை விழுங்குவது போல் பார்த்ததுமில்லாமல் தன் மீது கை வைத்த அதே துஷ்டன் இங்கே நோயாளியாக. அப்பா அடித்ததில் தலையில் அடிபட்டுள்ளதால் அங்கிருந்த யாரோ அவனை ஆம்புலன்ஸ் மூலமாக இங்கே அனுப்பி வைத்துள்ளனர். இவனுக்கு நான் சிகிச்சையளிப்பதா? கண் விழித்து பார்த்தால் தன்னை அடையாளம் கண்டு கொண்டு தன் மீதும், அப்பா மீதும் காவல் துறையில் தன்னை அடித்ததாக புகார் கொடுத்து விடுவானோ? கொடுக்கட்டும். அவன் தன் மீது கை வைத்ததாகக்கூறி ஒரு வருடம் ஜெயிலில் போட்டு விட வேண்டியதுதான்’ என யோசித்தவளைப்பார்த்த தலைமை செவிலியர், “என்ன யோசிக்கறே? ப்ளட் போயிட்டிருக்கு மருந்து வெச்சு பேண்டேஜ் போட்டு விடு. கண்ணுத்தெரியாத மனுசனை யாரோ மனமிரக்கமில்லாத மிருகங்கள் அடிச்சுப்போட்டிருக்காங்க” என கூறியதைக்கேட்டவுடன் மயக்கமே வருவது போலிருந்தது மகிளாவுக்கு.

உடனே நோயாளியருகில் சென்று மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை ஊசி மூலம் செலுத்தியவள், தலைக்கு நன்றாக பேண்டேஜ் போட்டு வழிந்த ரத்தத்தைக் கட்டுப்படுத்தினாள்.

அப்போது சுற்றிலும் பார்த்த போது அந்த அறையில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியவள் அவனது காலருகே சென்று ‘ஒருவருடைய செயல் பாடுகளைப்பார்த்து இவர் கண்கள் தெரியாதவர் என்பதைக்கூட அறிந்து கொள்ளாமல், தவறாகப்புரிந்து கொண்டு உயிருக்கே ஆபத்து வரும் அளவுக்கு தந்தையைத்தூண்டி அடிக்கச்செய்த பாவியான, மனக்கண் பார்வை இல்லாத என்னை மன்னித்து விடுங்கள்’ என மனதில் நினைத்தபடி அவனது பாதங்களைத்தொட்டவாறு மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள் மகிளா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *