புனித ரமழானிலே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 15, 2022
பார்வையிட்டோர்: 2,951 
 

(1981 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிந்தது. நோன்பு இருபத்தேழாம் நாள். விடிய விடிய பள்ளிவாசலில் சுன்னத்தை ஹயாத்தாக்கிய நான் சுபஹுக்குப் பின்பும் தூங்கவில்லை. அலுவலகம் செல்ல ஆயத்தமாகி, பஸ் ஸ்டான்ட் நோக்கி நடக்கிறேன்.

பாதை முழுவதும் அன்று என்றுமில்லாதவாறு சனங்கள் நிறைந்திருந்தனர். முஸ்லிம் முதலாளி, ஹாஜிமார்களின் பெரிய பெரிய வீட்டு வாசல்களிலும் கேட்டடியிலும் கும்பல் கும்பலாகக் காத்திருந்தனர். அவர்கள் எல்லாரும் முஸ்லிம்கள். தொப்பி, தலைப்பாகை, சால்வை, இப்படியான கோலங்களுடன் பேக் இத்யாதி சாமான்களுடன் ஒரு கூட்டம் வேறொரு புறமிருக்கிறது.

வயது வந்தவர்கள் மட்டுந்தான் இப்படியான கோலங்களுடன் இருக்கிறார்கள் என்பதில்லை . சிறுவர், சிறுமியர் நடுத்தர வயதுடையோரும் நிறைந்திருந்தனர். இக்காட்சிகள் யாவும் அனுதாபத்திற்குப் பதிலாக எனக்கு ஆத்திரத்தையே மூட்டிக்கொண்டிருந்தன.

“குட்மோர்னிங்…”

“வெரி குட்மோர்னிங்.” என்றவாறு திரும்பிப் பார்க்கிறேன். தூக்கிவாரிப்போடுகிறது! தாஸிம் மாஸ்டர் நிற்கிறார்.

“மாஸ்டர், நீங்களா! யாரோ அந்நியன் என்றல்லவா நினைத்தேன். ஸலாம் சொல்லாமல்…. இது என்ன புது சேஷ்டை…?”

“கூல் டவுன்…கூல் டவுன்… கோபம் ஆளைக் கிழவனாக்கிடும். அது சரி, என்ன பெரிய யோசனை?”

“யோசனை இல்லாமலா? இந்தக் கூட்டங்களைப் பாருங்கள். இந்த அவலங்களை எங்கள் சமூகத்தில் மட்டுந்தான் காண முடியும்.” என்று அலுத்துக் கொண்டேன்.”

“இந்தக் காட்சிகள் றமழானின் தத்துவத்தையே மாற்றிவிடுகின்றன. றமழான் மாதம் என்றால் பிச்சைக்கார மாதமா என்ற எண்ணத்தைத்தான் இவை ஏற்படுத்துகின்றன. அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா…உம்மா…என ஏதாவது கூறியபடி வாசல்களில் நிற்பார்கள். வசதியில்லாதவர்கள் “மன்னியுங்கள்” என்றால் திட்டுகளும், வசைகளும் பாடிக்கொண்டு போவார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் நோன்பு பிடிக்க மாட்டார்கள். கேட்டால் சபராளிகளுக்கு நோன்பு வாஜிபில்லை என்பார்கள். இது பிச்சை எடுப்பதற்கு இவர்கள் கூறும் புதிய தத்துவம்.”

“எங்கிருந்து வரும் கூட்டங்களோ தெரியாது. றமழான் மாதமல்லாத ஏனைய மாதங்களில் என்ன செய்கிறார்களோ…? நோன்பு காலங்களில் பிச்சை கேட்கும் கூட்டத்தின் வருமானம் – கிம்பளம் எடுக்காத ஒரு மந்திரியின் சம்பளத்தை விடக் கூடுதலாக இருக்கும். இவர்களுடன் இன்னொரு கூட்டம் இருக்கிறது. அது ஜனாதிபதியின் சம்பளத்தைவிட அதிகம் பெறும், றமழான் மாதத்தில் இவர்களின் பக்தி கூடுதலாக இருக்கும். இவர்கள்தான் பச்சை கஞ்சா தமக்கே என சொந்தம் பாராட்டுகிறவர்கள்.

தம்மை ‘பக்கீர் பாவாக்கள்’ என அழைத்துக் கொள்ளும் அடுத்த பிச்சைக்காரர் கூட்டம். சஹர் காலங்களில் தஹ்ரா அடித்து மக்களை எழுப்பும் தங்களுக்கு, நோன்பு பிடிப்பது கடமையில்லை என வாதிடுவோரும் இருக்கிறார்கள்…புதிய புதிய தத்துவ வித்தகர்கள்…இந்த டெலிவிஷன்’ காலத்திலும் ரபான் அடித்து சஹர் செய்து மக்களை எழுப்புகிறார்கள்.” தாஸீம் மாஸ்டர் கேலியுடன் கூறினார்.

“ஒரு விசேஷம்… றமழான் அல்லாத காலங்களிலும் இவர்கள், கூட்டம் கூட்டமாக வருவார்கள்…. பிச்சை எடுப்பதுதான் இவர்களின் தொழில். இது ஆதாயமான ஒரு தொழில் என்பதை இவர்கள் இன்று கண்டு கொண்டுள்ளனர். இன்னும் சிறிது காலத்தில் இறைவனுக்குக் கொடுக்கும் அந்தஸ்தைப் பணத்துக்கும் கொடுப்பார்கள். விளக்கேற்றி கும்பிட்டாலும் ஆச்சரியமில்லை. இப்லாம் விரும்பாத இந்த நடைமுறை என்று தீருமோ…?” – இவ்வாறு கூறும்போது என்மனம் அழுது கொண்டே இருந்தது.

கால்கள் பஸ்தரிப்பிடத்தை அடைந்தன. தாஸீம் மாஸ்டர் ஸலாம் கூறியபடி பிரிந்து சென்றார்.

என்றும் போல் இன்றும் கூட்டம் இருக்கவில்லை. பஸ்ஸும் வரவில்லை . பிரைவேட் பஸ்ஸாவது வரும் என ஒதுங்கி நின்றேன். சிங்களம், தமிழ், ஆங்கிலம் கலந்த புதுவித மணிப்பிரவாள நடைப் பேச்சு என்னைக் கவர்ந்தது. எங்கள் பகுதி இளம் பொடியங்கள்…. மார்க்கட் சந்தியில் தமக்கே உரித்தான நடையில் பேசிக்கொண்டிருந்தனர்.

“மச்சான், நான் எண்டா நெனக்கவும் இல்ல, எதிர்பார்க்கவுமில்ல…நீ ரோட் லைட் பல்பை உடைத்ததும் நான் பயந்தேன்…கடைசியில் அது தான் எங்களுக்கு சான்ஸ் ஆனது.

“டேகிட் ஈஸி. எதற்கும் பயப்படப்படாதே! நெருப்பெட்டி அடித்து பயமுறுத்தியதும் அந்தக் குட்டி எப்படிப் பயந்தாள். அந்த பொம்பள வந்து பேசினதால எங்கட வேள சிம்பளாகிவிட்ட

பத்து ரூபாவல்ல இருபத்தைந்து ரூபா கொடுத்தாலும் கிடைக்காது மச்சான்…ஜாதி படு. சரக்கென்றால் இப்படித்தான் இருக்க வேணும்… நாலு பேருக்கும், நாலு உருப்படிகள்…சே…இன்று அவங்க எங்க போகப் போகிறாங்களோ? அட்டா…அங்க பாருமடா! மூட்டை கட்டிக் கொண்டு போராங்க…வாங்க..தாரும் பார்க்காம பின்னாலே பளோ பண்ணுவோம்..” அவர்கள் சென்றனர்…

அங்கே…நான்கு பெண்கள்.. ஒருத்தி கொஞ்சம் மூத்தவளாக இருந்தாள், கிழப்பருவம் எனக் கூற முடியாது. சின்னப் பிள்ளைகளையும் கைகளிலே பிடித்துக் கொண்டிருந்தாள். அந்த வீட்டு வாசல் வராண்டாவிலிருந்து அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்படியானால்..? அப்படியானால்….? இவர்கள் இவ்வளவு நேரம் பேசிய ‘சரக்குகள்’ இவர்கள்தானா! பகலில் ஹதியா என்ற பெயரில் பிச்சை….இரவினில் தங்கும் இடங்களில்…? யா அல்லாஹ்! என்ன சோதனை! எமது சமுதாயம் மானத்தையும் விலை கூறத் துணிந்து விட்டதா..? அல்லது மானம்தான் அவர்களை விலைகூற வந்துவிட்டதா…? கொடுமை….இதயம் கனிந்த றமழானே…உன் புனிதம் உலகெல்லாம் எடுத்தோதப்படுகிறது. உலக வழிகாட்டியாம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமே! இஸ்லாம் வெறுப்பவைகளை, ஹலாலாக்கத் துணிகிறார்களே…புனித றமழானே! என் இருதயம் நின்று விடும் போல் இருந்தது….நெஞ்சைப் பிடித்தபடி…அங்கே…சாய்கிறேன்…

– ரமழான் மலர் -1981. ஜூலை, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *