பிரிவதற்குத்தானே உறவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 4,352 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏதோவொரு விரக்தியான மனப்போக்கில், தண்டவாளக் கட்டைகளில் கால்களைப் பதியப் பதிய வைத்து நடந்து கொண்டிருந்தான் கருணாகரன். வானத்தில் கவிந்திருந்த மேகக்கூட்டங்கள் மத்தியில், மேற்குத் திசையில் மாலைச் சூரியன் கருமஞ்சள் நிறத்தில், கவலையால் கலங்கியிருப்பது போல மினுங்கிக் கொண்டிருந்தான். கடற்கரையில் சாய்ந்து வளர்ந்திருந்த ஒற்றைத் தென்னை மரம் மேல் காற்றில் மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தது. நீலத் திரைகள் மெதுவாக கரையை வருடிக் கொண்டிருந்தன. தண்டவாளக் கரையிலிருக்கும் கல்லில் தன்னை மறந்து முணுமுணுத்துக் கொண்டிருக்கும் நீலச்சேலை கட்டியிருக்கும் பைத்தியக்காரி அன்றும் அவ்வாறே முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.

தன்னை மறந்து நடந்துகொண்டிருந்த கருணாகரன் பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது போல, கரிய புகையைக் கக்கிக்கொண்டு தூரத்தில் விரைந்து வந்து கொண்டிருந்தது. றெயில் . தன்னையறியாமலே கையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் சரியாக 4.46. அவன் மீண்டும் பின்னால் திரும்பிப் பார்த்தான். றெயில் அவனை முந்தி, அவன் நடந்து கொண்டிருந்த இரும்புப் பாதைக்கு, அருகிலுள்ள பாதை யால் அவன் சென்று கொண்டிருந்த திசையை நோக்கியே ஓடியது.

வழக்கமாகவே நிகழும் இந்த நிகழ்ச்சியை நினைத்து அவன் மனத்துள் சிரித்துக்கொண்டான்.

எப்போதாவது சூரியன் கவலையால் கலங்கியிருப்பது போல் இராமல் பிரகாசமாக மினுங்கிக் கொண்டிருப்பான். அல்லது மேகங்களால் ஒரேயடியாக மூடப்பட்டு முற்றாக மறைந்திருப்பான். எப்போதாவது தென்னை மரம் ஆடா மல் அசையாமல் அமைதியாக இருக்கும். எப்போதாவது கடல் நீர்ச்சலனமாக இருக்கும். எப்போதாவது, தண்டவாளக் கல்லில் இருக்கும் பைத்தியக்காரி அதிலிருக்க மாட்டாள். எப்போதாவது றெயில் நேரம் பிந்தி வரும். எப்போதாவது அவள் வரமாட்டாள்.

அவளின் நினைவு வந்ததும், கருணாகரன் தலையை நிமிர்த்தி தூரத்தில் தெரியும் ஸ்டேசனைப் பார்க்கலானான்.

அவனை முந்திச் சென்ற றெயில் அதில் நின்று விட்டு, மீண்டும் புகையைக் கக்கிக்கொண்டு புறப்படுவதற் காயத்தமாகக் கூவியது. ஸ்டேஷன் பிளாட்போம் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. அவன் கண்கள் அம்மனிதக் கூட்டத்தில் அவளையே தேடி அலைந்தன.

தன் மனப்போக்கை நினைத்து அவன் சிரித்துக் கொண்டான். இந்த இயந்திரமான வாழ்வின் – இயந்திரச் சுருதியான சில அனுபவங்கள் – கதிரவனின் மறைவும் வரவும், காலையும் மாலையுமாய்ப் புலர அந்த அனுபவங்கள் நாவிலும் பொழுதிலும் அதே உப்புச் சப்பற்ற பழக்கங்களாயும் வழக்கங்களாகியும் ஆகிவிடும் அந்தப் போக்கை நினைத்து அவன் சிரித்தான்.

வழக்கமாக காலை ஐந்து மணியளவில் துயிலுணர்ந்து வழக்கமான காலைக் கடன்களைக் கழித்து, அல்லோல் கல்லோலமாக, அவசரம் அவசரமாக ஒவ்வீசுக்கு புறப் படும் அன்றாட நிகழ்ச்சியை அவன் எண்ணினான். சைவக் கடையின் ஒரு மூலையில் ஒரே கதிரையிலிருந்து வழக்க மாகச் சாப்பிடும் காலைச் சாப்பாட்டை எண்ணினான். கடையிலிருந்து ஸ்டேசனுக்குப் போகும் பாதையில், ஐந் தாவது வீட்டில், கீழ்ப்பகுதி ஜன்னலை மூடியிருக்கும் பச்சை நிறச் சீலைக்கு மேலாய், வட்டமாய், கவர்ச்சியாய் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற அந்தப் பெண்ணின் ஏக்கம் ததும்பும் விழிகளை அவன் நினைத் தான். அப்பால் வீதிக்கரையில் தன் றிச்சோ வண்டிலைச் சரித்துவிட்டு, அதில் கண்களை மூடிக்கொண்டு சாய்ந் திருக்கும் றிச்சோக்காரக் கிழவனின் தோற்றத்தை அவன் எண்ணினான். தூக்கமுடியாத சுமையாக. ஏராளமான புத்தகங்களை தம் மார்போடு சார்த்திய வண்ணமாக ஏந்திக் கொண்டு, தூய வெள்ளை நிற உடையுடன் கலகலவென ஏதோ கதைத்துக்கொண்டு, பாடசாலை சேர்விஸ் வஸ்சுக்காக விரைந்து செல்லும் அந்த இரு இளம் பெண் களையும் நினைத்துப் பார்த்தான். ஸ்டேசன் பிளட் போமில் ஏதோவோர் நிரந்தரமான சோகம் குடிகொண்ட பெரிய விழிகளுடன் கூடிய அந்தப் பெண்ணையும், மொத்தமான சனக்கும்பலையும் எண்ணினான்.

வாரத்தில் ஒருநாள் ஓய்வுநாள் தவிர்ந்த மற்றைய ஆறு நாட் காலைப் பொழுதுகளிலும், நிரந்தரமாகிவிட்ட இந்தச் சம்பவங்களை ஏனோ அவன் மனது அசை போட்டுப் பார்த்தது.

ஸ்டேசன் பிளாட்போமில் தெரிந்த மனிதத் தலைகள் கலைந்துவிட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவர் அலைந்து திரிந்தார்கள். அந்த ஸ்டேசனில் கணநேரச் சலசலப்பை ஏற்படுத்தி உயிர் துடிக்கச் செய்த றெயில் அப்பால் ஓடி மறைந்தது.

அவன் ஸ்டேசனைப் பார்த்துக்கொண்டே நடந்தான்

ஸ்டேசன் பிளாட்போமை விட்டிறங்கி, அவனை எதிர்நோக்கி , பூப்போட்ட வெள்ளை நிற வொயில் சாரி அணிந்த அவள் வந்துகொண்டிருந்தாள். தூரத்தில், மங்கலாய் அவளைக் கண்ட போதும், அது அவள் தான் – என உணர்ந்து கொண்ட கருணாகரனின் கண்கள் ஒரு பரவசத்தில் மின்னின.

தன்னுள் ஒரு குதூகலம் நிரம்பி வழிவதை அவன் உணர்ந்துகொண்டான். அவன் நினையாமலே – அவனை அறியாமலே ஏதோவோர் இன்ப முகிழ்ச்சி அவன் உட லில் ஊடுருவி நிற்பதாக அவன் உணர்ந்தான். தான் ஒரு புதிய மனிதனாக, சற்றுமுன் தண்டவாளத்தில் நடந்த போது ஏற்பட்ட விரக்திகளுக்கு அப்பாற்பட்ட மனி தனாக – உருமாறிவிட்டது போன்ற ஓர் உணர்ச்சியில் அவன் நினைக்கலானான்.

வழக்கமாக மாலை நேரத்தில் அவளைக் காணும் போது, இத்தகையதோர் பரவச உணர்ச்சி தன்னில் ஏன் ஏற்படுகிறது என அவன் சிந்திக்கலானான், இயந்திர இயக்கம் போன்ற வாழ்வின், இயந்திர சலனங்களாக அசையாமல் அவளின் சந்திப்பில் மட்டும் ஏன் ஓர் உயிர்த்துடிப்பு, உணர்ச்சி ஏற்படுகிறதென்று அவன் அறிய முயன்றான்.

பெண்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவனுக்கு அப்படியான உணர்ச்சிகள் ஏற்படுகிறதென்றும் கூற முடியாதிருக்கிறது. ஜன்னல் நிலைக்குமேல் தெரியும் பெண்ணின் முகத்தையும், பள்ளிக்கூடம் போகும் பெண்களையும், ஸ்டேசன் பிளாட்போமின் சோக விழிகளுடன் கூடிய பெண்ணையும் அவன் எப்போதும் சந்திப்பான்.

வாரத்தில் ஓரிரு நாட்களாவது, ஒரு குறிப்பிட்ட ஸ்டேசனில் இறங்கும் அழகிய கிராமியப் பெண்ணை றெயிலில் சந்திப்பான். றெயிலால் இறங்கியதும் ஒவ் வீசுக்கு அவசரமாகச் செல்லும் வழியில், லிப்ஸ்டிக்’ பூசிய, ஒரு கையில் அழகுப்பையுடன் மறு கையால் தன் சங்கிலியின் பதக்கத்தை தூக்கிச் சுழற்றும் அழகியையும் சந்திப்பான். மாலையில் ஸ்டேசனுக்குத் திரும்பும் வழி யில் நீண்ட பஸ் கியூவில் நின்று, அவனைப் பார்த்து அறிமுகமான புன்னகை காட்டும், சின்னப் பெண்ணை யும் சந்திப்பான். அவர்களின் சந்திப்பு உணர்ச்சிகளும் உயிர்த் துடிப்புமற்றதாய் – வெறும் நாளாந்த இயக்கங் களாக இருக்கும் போது, இவளது சந்திப்பில் மட்டும் ஏன் ஓர் இன்பம் ஏற்படுகின்றதென்பது அவனுக்கு விளங்க வில்லை.

வழக்கமாக, மாலையில், இந்த நேரத்தில் அந்த ரெயிலில் வந்திறங்கி தன் இருப்பிடத்தை நோக்கிச் செல் லும் அவளும், அடுத்த ரெயிலைப் பிடிப்பதற்காக அந்த ஸ்டேசனை நோக்கிச் செல்லும் அவனும், ஒருவரை யொருவர் எதிர்பட்டு சந்தித்துப் பிரியும் தறுவாயில், அவனும் அவளும் ஒருவரையொருவர் நிமிர்ந்து பார்க்கும் போது, அந்த ஒரு கணம் அவர்கள் கண்கள் சந்தித்துத் தழுவும் போது – அந்த உணர்ச்சியில் அவன் புல்லரித்து நிற்கும் போது, அவளும் அது போன்றதோர் ஆனந்தத் தில் மூழ்குகின்றாளென்பதையும் அவன் அறிந்து கொண்டான்.

இத்தனைக்கும், அவன் அங்கு மாற்றலாகி வந்திருக்கும் நான்கைந்து மாதங்களிலும், ஒவ்வொரு மாலையிலும் அவ ளைச் சந்தித்து பரவசமுற்ற போதும், அவனோ அவளோ வாய்திறந்து ஒருவரோடடொருவர் பேசியதில்லை. தம்மை மறந்து சிரித்ததுமில்லை.

அந்த ஒரு கணநேரக் கண்களின் சந்திப்பில், அவர்களின் கண்கள் விரிந்து சிரித்திருக்கலாம்; ஒரு கோடி கதைகளைப் பேசியிருக்கலாம்.

அந்தக் கண்களின் சந்திப்பைத் தவிர, அவர்களி டம் வேறு எவ்வித தொடர்புகளோ, உறவுகளோ இருக்கவில்லை.

அப்படியாயின் அந்தக் கண்களின் சந்திப்புத்தான் அவர்களது தொடர்பா? அதுதான் அவர்களை உணர்ச்சி வசப்பட வைக்கும் உறவா? அப்படியான ஓர் உறவுக்கும், இப்படியான ஒரு சக்தி உண்டா?

சில கணநேரத்தில் மனதில் கிளர்ந்து விஸ்வரூபம் கொண்ட எண்ணச் சிதறல்களுடன் அவன் நடந்தான். ஸ்டேசனில் ஒரு றெயில் கூவியது.

அவன் சென்று கொண்டிருந்த பாதையில், அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது ஒரு ‘குட்ஸ்’ வண்டி. அவள் அடுத்த பாதையால் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவனும் , றெயில் வந்து கொண்டி ருந்த தான் சென்ற பாதையை விட்டு, அவள் வந்து கொண்டிருந்த பாதையினூடாக நடக்கலானான்.

‘குட்ஸ்’ வண்டி அந்த ஸ்டேசனில் நில்லாமல் விரைந்து அவனைக் கடந்து அவளையும் கடந்து சென்றது. அவனைக் கடந்து அப்பால் சென்ற றெயில் கூவவே, அவன் திடீரென்று பின்னால் திரும்பிப் பார்த்தான். கிட் டத்தட்ட அவனுக்கு நூறு யாருக்கு அப்பால் வந்து கொண்டிருந்த அவளும் நிமிர்ந்து பார்த்தாள். பின்னால் திரும்பிய அவன், அது தன்னைக் கடந்து சென்ற குட்ஸ் வண்டியின் கூவலென்று அறிந்ததும் முன்னால் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவர்கள் ஒருவரையொருவர் பார்ப்பதை அவர்களே உணர்ந்து கொண்டனர்.

அவள் தான் அவனைப் பார்க்கவில்லை என்பதைப் போல, சாவகாசமாக அப்பால் திரும்பி நீலக்கடலலை களைப் பார்க்கலானாள்.

அவன் அவளையே பார்த்துக்கொண்டு நடந்தான் மேகத்திரையில் மறைந்து நின்ற கதிரவனின் மெல்லிய ஒளியலைகளில், நீலக்கடலில் பட்டுத் தெறித்த பிரதி பலிப்பில், அவள் ஒய்யாரமாக மிதந்து வந்து கொண் டிருந்தாள். மெதுவாக ஊதிய இளங்காற்றில் அவள் கன்னத்து மயிர்களும், அவள் அணிந்திருந்த சேலையின் தலைப்பும் நெளிந்து வளைந்தன. ஒரு தேவதை போல அவள் அவன் கண்களுக்குத் தென்பட்டாள். மோகன மான உணர்வலைகளால் அவன் பீடிக்கப்பட்டிருந்தான். நளினமான கற்பனைகள் அவன் மனத்திலுதித்தன.

ஓர் உணர்ச்சிபூர்வமான கவிஞனுக்குரிய மனக்கிறக் கத்துடன் அவன் பெண்களைப் பற்றி சிந்தித்தான். சின்னஞ்சிறு குழந்தைகளையும் காந்தக் கவர்ச்சி காட்டும் செழுமையான அங்கங்கள் கொண்ட இளம் பெண்களை யும் புதுமை மயக்கில் புதுப் பொலிவு காட்டும் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த பெண்களையும், ஓரிரு குழந்தைகளைப் பெற்று தாய்மையெனும் தெய்வ உருவைப் பெற்ற பெண்களையும் நரைமயிருடன் காதில் கடுக் கண்கள் அசைந்தாட தம் பேரக் குழந்தைகளை மடியில் தூக்கிவைத்து, ஒரே ஒரு ஊரிலே கதை சொல்லும் பாட் டிக் கிழவிகளையும் பற்றி அவன் எண்ணினான்.

பெண்ணின் ஒவ்வொரு பருவங்களிலும் அவள் எப்படி இருந்திருப்பாள் – இருப்பாளென அவன் கற்பனை செய்து பார்க்கலானான்.

அவன் கண்களுக்கு முன்னால் தெரிந்த அவள் உருவம் சிறுத்தது. பாவாடை கட்டிய சின்னஞ் சிறிய சிறுமி யொருத்தி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

வழவழவென்ற செழிப்பில் அவள் உருண்டை முகமும் அந்த முகத்தில் பதிந்த நீலமணி போன்ற குறுகுறுத்த கண்களும், சிறிய அழகிய செவ்வாயும், அதில் நிரந்தரமாகி விட்ட இளம் சிரிப்பும்…

அவள் இப்போது வெள்ளை வொயில் சாறி அணிந்த பருவப் பெண்ணாய் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கையில் ஓர் அழகுப் பையுடன் அன்னப் பதுமையென மெதுவாக பவ்வியமாக அவள் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அடிக்கொரு தடவை நீலக்கடலையும், அவனையும் நிமிர்ந்து பார்க்கும் அவள், பெரும்பாலும் நிலத்தைப் பார்த்த வண்ணமே வந்து கொண்டிருந்தாள்.

கருணாகரன் அவளைப் பற்றிக் கனவு கண்டான்.

அவளைத் தன் வாழ்வுத் துணைவியாக்கி, மனைவாழ்வில் ஆரம்பத்தில் புதுமை மயக்கில் பொலியும் அவளது புதிய தோற்றத்தையும், அவளும் தானும் அனுபவிக்கப் போகும் இன்ப வாழ்வினையும், அவளுடன் பொய்மையான ஊடல் கொண்டு தான் பிணங்குவதாக வும் அவன் கற்பனை செய்து பார்த்தான். தன் வாழ்வில் ஏற்படப் போகும் இன்ப துன்பங்கள், சுகதுக்கங்கள், பூரிப்புக்கள் சோகங்கள் யாவற்றிலும் அவளும் பங்கு கொண்டு – அவளுடன் வாழ்ந்தால் எப்படி இருக்கு மென்ற நினைவிலேயே அந்த நினைவேயொரு இனிய அனுபவமாக அவன் அமிழ்ந்தித் திளைத்தான். அவளுடன் தான் குடும்பம் நடத்த போகும் போது பிறக்கும் பிள்ளைகளைப் பற்றியும் –அப்போது அவளுக்கு ஏற்படப் போகும் தாய்மைப் பூரிப்பைப் பற்றியும் – தனது பிள்ளைகளுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளைப் பற்றியும் – அவள் அவர்களுக்குப் பாட்டியாய் கதை சொல்லும் இலாவகத்தைப் பற்றியும் அவன் எண்ணினான்.

அவனுக்குப் பின்னால், அவன் போக வேண்டிய றெயில் இரைந்து வந்து கொண்டிருந்தது. இனிய நினைவு களின் மயக்கத்தில் கற்பனை உலகில் சஞ்சரித்தவனாக வந்து கொண்டிருந்த அவன் றெயில் வருவதை உணர வில்லை .

அவனுக்கு முன்னால் கிட்டத்தட்ட இருபத்தைந்து யார் தூரத்தில் வந்து கொண்டிருந்த அவள், அவனை எச்சரிப்பது போல் பார்த்துக்கொண்டே அடுத்த லைனுக்கு செல்லலானாள்.

அவள் பார்த்த பார்வையின் அர்த்தத்தை உணர வேண்டியவனாக பின்னே பார்த்த அவன், தன்னை அண்மி வந்து கொண்டிருக்கும், தான் செல்ல வேண்டிய றெயிலைக் கண்டு ஒரு கணம் துணுக்குற்றான். திடீரென ஸ்டேசனைப் பார்க்கலானான்.

அவன் ஓடினால், றெயிலைப் பிடிக்கக் கூடிய தூரத்தி லேயே ஸ்டேசன் இருந்தது .

ஆனால், அவன் ஸ்டேசனைப் பார்க்கும் போது, அவளையும் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவர்கள் பார்வையின் மோதலில், அவள் பார்வையி லிருந்த ஏதோவொரு சக்தி அவனை ஓடவிடாது தடுப்பது போல உணர்ந்த அவன், ஓடவா- விடவா என்று தத்தளித்தான். ஏதோ தீர்மானத்துக்கு வந்தவன் மாதிரி மிக மெதுவாக நடக்கலானான்.

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.

அன்னப்பதுமையென நடக்கும் அவள் நடையில் அன்று ஒரு தொய்யலான சோர்வு தென்படுவதை அவன் அவதானித்தான். அவளும் மிக அண்மையில் வரவே குறுகுறுப்பாக உற்றுப் பார்க்கலானான். உண்மையில், அவள் ஏதோ தவிர்க்கமுடியாத சோகத்தால் பீடிக்கப்பட்டவள் போலவே தென்பட்டாள். அவள் எதற்காக கவலைப்படுகிறாள் என்று அறிய வேண்டும் போல அவன் மனம் தவித்தது.

தன் சிந்தனைப் போக்கை நினைத்து அவன் மனத்தில் சிரித்துக் கொண்டான். தன் இயந்திர வாழ்க்கையில், சில கணங்களின் சந்திப்பில், ஏதோ இனம் தெரியாத கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறாள் என்பதற்காக – யாரோ எவரோ என்றறியாத ஒரு பெண்ணை அடித்தளமாக வைத்து, காதல் வாழ்வு, ஊடல், சந்ததிப்பெருக்கம் என்றெல்லாம் கோட்டை கட்டினேனே என்றெண்ணி விரக்தி மேலிடச் சிரித்துக்கொண்டான்.

அவன் போகவேண்டிய றெயில், கூவிக்கொண்டே ஸ்டேசனை விட்டுப் புறப்பட்டது.

அதை அவன் கவனிக்காதவன் மாதிரி, அல்லது கவனித்தும் அலட்சியம் செய்பவன் மாதிரி மிகச் சாதார ணமாக நடக்கலானான்.

அவள் அவனை அண்மினாள். ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவரையொருவர் பிரிந்து, எதிரெதிராகச் செல்லும் தறுவாயில் – வழக்கமாகவே அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நிமிர்ந்து பார்க்கும் அந்த அணுகலில் அவள் சற்றுத் தயங்கி நின்றாள்.

அவனும் நடப்பது போல நின்றான்.

அவள் நிலத்தைப் பார்த்துக்கொண்டு மலங்க மலங்க விழித்தாள். அழகுப் பையை வைத்திருந்த வலது கையின் விரல்களையும், இடது கையின் விரல்களையும் சேர்த்துப் பிசைந்தாள். நின்றதற்கு நாணியவள் போல. தொடர்ந்து நடக்க முற்பட்டாள்.

இயற்கையிலேயே சற்றுக் கூச்ச சுபாவமுள்ள அவன் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தான். கொஞ்சம் துணிவை வரவழைத்துக்கொண்டு, நாத்தழுதழுக்க மெதுவாகக் கேட்டான்…

“உங்களுக்கு என்ன வேணும்”

அவள் ஒரு வினாடி மௌனமாக நின்றாள்.

என்ன கேட்கின்றேனென்று அறியாமலே, தான் கேட்டுவிட்ட கேள்வியை , அவன் மறுபடியும் தன் மனத் தில் சொல்லிப்பார்த்து, தான் தவறு செய்து விட்டவன் போலத் தவித்தான்.

“நான் நாளையிலிருந்து எனது சொந்த ஊருக்கு மாற்றலாகிச் செல்கின்றேன்…”

அவள் வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்ட அவன் முகம் ஏன் அப்படி மாறவேண்டும்? அந்த மாற் றத்தை மறைப்பவன் போல அவன் சொன்னான் “உங் களுக்கு என் நல்வாழ்த்துக்கள்”

அவளின் முகமும் அர்த்தமற்ற வாழ்வின் சோகங்களை உணர்ந்த அவளின் நிலையைப் பிரதிபலிப்பது போல மாறியிருந்தது.

அவள் அவனை நோக்கி கரங்களை அசைத்தாள்.

அவனும் பதிலுக்கு கரம் அசைத்தான்.

அவர்கள் ஒருவரையொருவர், பிரிந்து, எதிரெதிராகத் தம்தம் வழியே சென்றனர். ஒரே ஒரு முறை மட்டும் சொல்லி வைத்தாற்போல, ஒரே நேரத்தில் இருவரும் ஒருங்கே திரும்பி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அவன் செல்லவேண்டிய அடுத்த றெயிலும் அவனைக் கடந்து ஸ்டேசனில் நின்றது. அவன் அதைப் பிடிக்க வேண்டுமென்று ஓடவுமில்லை. ஓட வேண்டுமென்று தவிக் கவுமில்லை .

அவன் தனக்குள் சிந்தனையில் மூழ்கியிருந்தான். அர்த்தமற்ற வாழ்விலும் ஓர் அழகு இருப்பதுபோல, சோகம் மிகுந்த வாழ்விலும் ஒரு சுவை இருப்பது போல அவனுக்குப் பட்டது.

வெறும் பார்வையினால் ஏற்பட்ட உணர்ச்சித் துடிப்பு களினால் உருவான அவளின் உறவு இவ்வளவு சீக்கிரத்தில் அறுந்துவிடுமென அவன் நினைக்கவில்லை. இவ்வளவு சோகத்தைத் தருமெனவும் அவன் எதிர்பார்க்கவில்லை. ‘மனித மனங்களிடையே உணர்ச்சிகளுக்கிடையே ஏற்படும் உறவுகள் ஏதோவொரு காலத்தில் பிரிவதற்குத் தானே ஏற்படுகின்றன’ என்று கூறி மனத்தைத் தேற்றிக் கொண்டான் அவன்.

நாளைக்கும், அவன் தண்டவாளக் கட்டைகளில் நடப்பான்; சூரியன் மினுங்கிக்கொண்டிருப்பான்; தென்னைமரம் காற்றில் அசைந்தாடும்; நீலக்கடலலைகள் கரையைத் தழுவிச் செல்லும்; கல்லிலிருக்கும் பைத்தியக்காரி தன்னை மறந்து முணுமுணுத்துக் கொண்டிருப்பாள்; றெயில் சரியான நேரத்திற்கு வரும்.

ஆனால், நிச்சயமாக அவள் வரமாட்டாள்.

– 1969, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *