கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2023
பார்வையிட்டோர்: 1,122 
 

(1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எந்த விதமான செயல் பாடுகளுடனும் தொடர்பில்லாமல் தானும் குடும்பமும் தன்னுடைய உத்தியோகமும் என்று கொழும்பில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த லோகன், அனியாயமாகப் பூசா முகாமுக்குக் கொண்டு செல்லப் பட்டான். யாரோ ஒருவன் இவனுடைய அறைக்கு அடுத்த அறையில் இருந்து படையினரால் பிடிபட்டதைத் தொடர்ந்து, லோகனும், அன்று பகல் பன்னிரெண்டு மணியளவில் அவனுடைய அலுவலகத்தில் இருந்து அழைத்துச் செல்லப் பட்டான். கொழும்பில் சில நாட்களாக ஓரிரு பொலிஸ் நிலையங்களில் வைத்து விசாரிக்கப் பட்டு இறுதியாகவே லோகன் பூசா முகாமுக்கு அனுப்பப் பட்டான்.

உணவு, படுக்கை, இருக்கை என்று தங்களுடைய வாழ்நாளையே கழிப்பதற்கு எத்தனையோ தமிழ் இளைஞர்கள், அவர்களுக்காக அமைக்கப் பட்ட கூடுகளில் அடைக்கப் பட்டிருந்தார்கள். பரந்துபட்ட இடங்களில் வாழ்ந்த தமிழ் இளைஞர்களே இப்படி அடைக்கப் பட்ட கம்பிக் கட்டுக்குள்ளேயே லோகனும் கொண்டு வந்து தள்ளப் பட்டான். கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களுக்கென்றே விஷேசமாகப் பூசாவில் அமைக்கப் பட்ட முகாமே அது. தடித்த கம்பி வலைகளால் அந்த முகாம் அமைக்கப் பட்டிருந்த போதிலும் சுற்றிவர இராணுவ வீரர்கள் காவல் புரிந்தனர். எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லாமல் இந்த நகர லோகத்துக்குள் தள்ளப் பட்டதற்குத் தனது விதியை நோவதைத் தவிர லோகனுக்கு வேறொன்றும் தெரியவில்லை.

கொண்டு வந்து தள்ளிய ஓரிரு நாட்களுக்கு அந்தச் சூழலையும் அங்குள்ள நடைமுறைகளையும் தாங்கிக் கொள்வது லோகனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

‘லோகன், லோகன், அடே அழுத் கொட்டி கையில் கத்தரிக்கோலுடன் இராணுவப் பாபர் வந்து, சடைத்து வளர்ந்திருந்த லோகனின் முடியை கால் இஞ்சி அளவிற்குக் கத்தரித்து விட்டுப் போனான். இவனைப் போலவே எல்லோருடைய தலைமுடியும் ஒரே அளவிற்கே கத்தரிக்கப் பட்டிருந்தது. சுற்றி வரச் சும்மா காவலில் நிற்கும் இராணுவத்தினர்கள் கம்பி வலைக்குள்ளால் துவக்கைக் காட்டிப் பயமுறுத்தி எந்த நேரமும் அவர்களுடைய பாஷையில் திட்டுவார்கள். லோகன் முதலான, கொழும்பில் வாழ்ந்த ஒரு சிலரைத் தவிர அங்கு அடைக்கப் பட்டிருந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று விளங்காவிட்டாலும், துவக்கைக் காட்டிப் பயமுறுத்துவது உயிர் பிரிவது போன்ற வேதனையைத் தந்தது.

காலையில் எட்டு மணிவரை தூங்கலாம். ஒன்பது மணிக்குள் எழுந்து ஒருவாளி தண்ணீரால் மட்டும் குளிப்போ, முழுக்கோ, வேறு ஏதாவது காலைக் கடன்களைச் செய்து முடித்துவிட வேண்டும். பின் கால் றாத்தல் பாண், பிற்பகல் இரண்டு மணிபோல் அரை வயிற்றுக்குப் போதுமான மதிய உணவு, மாலை ஆறு மணிபோல் மீண்டும் பருப்புக் கறியுடன் சோறு. பாண் கொடுக்கும் வேளையில் சீனி இல்லாத தேநீர். இப்படியே அந்த முகாமில் அடைத்து வைத்திருக்கும் இளைஞர்களுடைய உயிரை உடலில் ஒட்டியிருப்பதற்காக இராணுவத்தினரால் வழங்கப் பட்டது. ஒழுங்கான குளிப்பு முழுக்கு இல்லாமையினால் எல்லோருடைய உடலும், மாற்றிக் கட்ட வேறு துணியில்லாமையினால் எல்லோருடைய உடையும் துர்நாற்றத்தைப் பரப்பத் தொடங்கியது.

ஆரம்பத்தில் லோகனுக்கும் இந்தத் துர்நாற்றம் சகிக்க முடியாததாக இருந்த போதிலும், நாட்பட நாட்பட பழக்கப்பட்டு விட்டது. எல்லா இளைஞர்களும் அவர்கள் அங்கு தங்கியிருக்கும் கால மூப்பின் படி சொறி, சிரங்கு நோய்க்கு உட்பட்டார்கள். எல்லோரும் எந்த நேரமும் சொறிந்து கொட்டிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சுகாதார வசதியின்மையால் தனக்கும் சிரங்கு வருவதை லோகன் எதிர்பார்த்தான். சிரங்கு வந்து சொறிந்தால் என்ன, உயிர்தான் பிரிந்து போனாலும் இப்போ அவன் கவலைப்படுவதற்கில்லை. அவனுடைய ஒரேயொரு மகன், ஆசிரியையான மனைவி எல்லோரைம் நினைத்துக் கண்ணீர் விடுவதைத் தவிர வேறொன்றும் அவனால் செய்ய முடியவில்லை. கண்ணீரும் எத்தனை நாளுக்குத்தான் அவனுடைய கண்ணில் ஊறும். அங்குள்ளவர்களுடைய சோக வரலாறுகளையெல்லாம் அவன் கேட்டறிந்தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி இளைஞர்களே என்றாலும் சம்பந்தப் பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்று காலை எட்டு மணி வழமைக்கு மாறாகக் காவலில் நின்ற இராணுவ வீரர்கள் அன்பொழுகக் கதைத்தார்கள்.

‘தம்பிகளே நீங்கள் எல்லோரும் இந்த ரீயைக் குடிச்சிற்று போய், வேண்டிய அளவிற்குத் தண்ணியை எடுத்தக் குளியுங்கோ’

இப்படி ஒரு இராணுவ வீரர் தமிழில் கூறியதைக் கேட்டதும் எல்லா இளைஞர்களும் ஒவ்வொருவருடைய முகத்தைப் பார்த்து அதிசயத்து நின்றார்கள். இராணுவ வீரர்களுக்கு முன்னால் யாராவது கதைத்தால் கடும் தண்டனைக் குள்ளாக வேண்டும், என்பது அவர்களுக்குத் தெரியும்.

தலையில் குளித்து விட்டு தலையைத் துவட்டிக் கொண்டு வந்த இளைஞர்கள் எல்லோருக்கும் புதிய சறமும். சேட்டும் கொடுக்கப் பட்டது. அவர்களுடைய பழைய நெளிந்த கோப்பையில் இடியப்பமும், இறைச்சிக் கறியும் காலை உணவாக கொடுக்கப் பட்டது.

வருடக் கணக்காக இருக்கும் பலருக்கு இன்றைய விசேஷம் ஓரளவு புரிந்து விட்டாலும் லோகனுக்குப் பெரும் அதிசயமாகவே இருந்தது. லோகனைப் போன்ற அந்த முகாமுக்குப் புதியவர்கள் இன்று தங்களுக்கு விடுதலை என்று பேசிக் கொண்டார்கள். மீண்டும் அதே இராணுவ வீரருடைய குரல் கனிவாக ஒலித்தது.

‘இன்னைக்கு நம்ம பாதுகாப்பு அமைச்சர் இந்த முகாமுக்கு உங்களைப் பார்க்க வருகிறார். நீங்கள் எல்லாரும் வரிசையாக நிண்டு கும்பிட்டு வரவேற்க வேணும். அப்பத்தான் உங்களுக்குக் கெதியில விடுதலை கிடைக்கும்.’

‘மினிஸ்டர் வருவதைப் படம் பிடிச்சு ரீ.வியில காட்டுவாங்க. அதோட எங்களையும் காட்டுவாங்க. அதை நம்மட அம்மா, அப்பா. சகோதரர்கள் எல்லாரும் பாப்பினம்.’

லோகனுக்குப் பக்கத்தில் நின்ற சதா, காதோடு காதாகக் கூறினான்.

‘உங்களுக்கு இங்க உள்ள வசதியை மந்திரி கேட்டா ஒரு குறையும் இல்லை எண்டு சொல்ல வேணும். ஏதாவது மாறிச் சொன்னீங்க…. ஒவ்வொருவரா நிப்பாட்டிச் சுட்டுப் போடுவன்.’

நீண்ட நேரமாக அன்பொழுகக் கதைத்த அந்த இராணுவ வீரன் இறுதியில் பயமுறுத்திக் கர்ச்சித்து விட்டுச் சென்றான்.

பாதுகாப்பு மந்திரி வந்து போன நிகழ்வுகளை ரீ.வியில் படம் எடுத்து முடிந்த பின் மீண்டும் பழைய பல்லவி தான்.

‘எங்களை விட்டால் என்ன விடாவிட்டால் என்ன கிழமைக்கு ஒரு தடவையாவது மந்திரியார் இந்த முகாமுக்கு வந்து போகவேணும்’

லோகன் முகாம் நண்பன் சதாவுக்குக் கூறினான்.

இன்று புதிதாக லோகன் இருக்கும் கம்பிக் கூட்டிற்குள் நால்வர் கொண்டுவந்து தள்ளப் பட்டார்கள். லோகள் உட்பட எல்லோருடைய கண்களும் அவர்களைப் பரிதாபமாக வரவேற்றது. இந்த நால்வரில் ஒருவர் விசித்திரமாகவராகக் காணப்பட்டார். அவருடைய தலைமுடி, உடுத்திருந்த சறம், அதை இறுக்கியிருந்த அகன்ற பெல்ற், அதற்குக் கீழ் சுற்றப் பட்டிருந்த கிழிந்த ரீசேட் என்பனவெல்லாம் யாரோ ஒரு அப்பாவித் தொழிலாளியைக் கொண்டு வந்து விட்டார்கள் என்ற எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

வந்த அந்த மனிதனும் அந்தப் பூசா முகாமுக்கு நன்கு பழக்கப் பட்டவர்போல், லோகனுக்குப் பக்கத்தில் இருந்த சிறிய இடைவெளி கொண்ட சீமெந்து நிலத்தைத் தனது வாயால் ஊதித் துப்பரவு செய்துவிட்டு கையைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டான்.

இப்போ லோகனுடைய மூளை அதிகமாக வேலை செய்யத் தொடங்கியது. இதயமும் படபடத்தது. தன் மீது சுமத்தப் பட்ட குற்றச் சாட்டைத் துருவி ஆராய்வதற்கே ரகசியப் பொலிஸ் ஒருவர் இப்படிக் கைதி வேடத்தில் வந்து தனக்கருகிலேயே இடம் பிடித்ததுள்ளார் என்று எண்ணினான். இதனால் அந்த மனிதனுடன் பேச்சுக் கொடுக்காமல் இருந்து, அவருடைய நடவடிக்கைகளை லோகன் அவதானிக்கத் தொடங்கினான். இந்தப் புதிய விசித்திர மனிதனும் எல்லாக் கைதிகளைப் போலவே நடத்தப் பட்டான். மாதங்கள் நகர அந்த மனிதனில் ஏற்பட்ட பயம் லோகனுடைய மனதில் குறையத் தொடங்கியது. எல்லோரையும் போலவே அவனுடன் லோகனும் பழகத் தொடங்கினான். அவனுடைய பெயர், தொழில், ஏன் எப்படிக் கைது செய்யப் பட்டான் எல்லாவற்றையும் கேட்கத் தொடங்கினான்.

‘முத்து நீங்க எங்க கைது செய்யப் பட்டீங்க? உங்கள் மீதுள்ள குற்றச் சாட்டு என்ன?’

முத்துவைப் பற்றி அறிய அதிக ஆர்வம் கொண்ட லோகன் முத்துவின் காதோடு காதாகத் தனது பேட்டியை ஆரம்பித்தான்.

‘நானும் வந்து இப்போ ரண்டு மாசமாகுது, நீங்க மட்டும் இவங்களில் இருந்து வித்தியாசமா இருக்கிறீங்க சரி, ஏண்ட கதையைக் கேளுங்க’

முத்து பெருமூச்சுடன் தனது சோகக் கதையைக் கூறத் தொடங்கினான்.

‘ஏண்ட பேர் முத்து. அதுதான் இந்த ஆமிக்காரங்க கூப்பிடும் போது விளங்குதே. அம்மா, அப்பா எனக்கு யாருன்னு தெரியாது. சின்ன வயசில நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டன். இதால வீடு நிலம், சொத்து, உறவு என்று ஒண்ணும் கெடையாது. இன்னும் சொன்னா நமக்கு ஒரு நாடே கிடையாது. பெரிய அனியாயம் என்னன்னா இந்த நாடு பிரிச்சுத் தா என்னு கேக்கிறவங்களில ஒருவனா என்னையும் நினைச்சு இங்க கொண்ணந்து அடைச்சு வைச்சிருக்கிறானுங்க’

இப்படி முத்து கூறியதை லோகன் அதிசயத்துடன் நோக்கி மேலும் கூறும்படி தூண்டினான்.

‘இப்படி அடைச்சு வைச்சிருக்கிறதில் எனக்கொரு நட்டமும் இல்லை. கொஞ்ச வசதிக் குறைவு அவ்வளவுதான். என்ர தொழில், நான் ஒரு பாம்பாட்டி. நான் இந்தப் பாம்புகளைப் புடிச்சு பல்லைப் புடுங்கி அடைச்சு வைச்ச பாவத்துக்குப் போல இப்ப என்னப் புடிச்சி அடைச்சு வைச்சிருக்கிறாங்க. அந்தப் பாம்புகளைப் பட்டினி போட்டு என்ர மகுடிய ஊதி ஆடவச்சனே….. அந்தத் தப்புக்காக இப்ப நான் பட்டினி கெடக்கிறன்’

முத்துவின் கதை எல்லோருக்கும் பரிதாபமாகவே இருந்தது. அவன் பேச்சு உச்சரிப்பு மலையகப் பகுதி மக்களின் பேச்சுத் தமிழாக இருந்தது.

‘நான் ஒரு நாள் வவுனியாவில் வெய்யிலெல்லாம் அலைஞ்சு களைச்சுப் போய் என்ர பாம்புப் பெட்டி, மூட்ட முடிச்சு எல்லாத்தையும் ஒரு மரத்துக்குக் கீழ வச்சிட்டு அசந்து தூங்கிவிட்டன். முழிச்சுப் பார்க்கிறப் போ ஆமிக்காரங்க சுத்திக்கிட்டு நிண்டாங்க. அப்புறம் ஏண்ட பாம்புப் பெட்டி, மகுடி, முடிச்சு எல்லாத்தையும் எடுத்து வீசிட்டு என்னை அவங்கட ஜீப் வண்டியில் ஏத்தி எங்கெங்கெல்லாம் கொண்டுபோய் என்னென்ன வெல்லாம் கேட்டு, அடிச்சு ஒதைச்சுக் கடைசியா இங்க கொண்ணாந்து தள்ளியிட்டாங்க’

முத்து ஒரே மூச்சில் இப்படிக் கூறிக் கொண்டு, தனது முதுகில் உள்ள அடிபட்ட தழும்புகளை எல்லோருக்கும் காட்டினான்.

‘ச்சொக்…… ச்சொக்’

இப்படி லோகனின் இதழ்கள் குவிந்து ஓசையை எழுப்பிய போதும், சிந்தனை தன்னுடைய முதுகு, கால் தழும்புகளிலேயே ஒன்றி இருந்தது.

அன்று இரவு பன்னிரண்டு மணியாகியும் லோகனுக்கு நித்திரை வர மறுத்தது. அந்தக் கம்பிக் கூடு பம்பாட்டியின் பாம்புப் பெட்டியாகவே அவனுக்குத் தெரிந்தது. வெறும் சீமெந்து நிலத்தில் நெளியும் மனித உடல்கள், பல்லுப் பிடுங்கிய பாம்புகளைப் போல் காட்சியளித்தது. விரக்தியின் விளிம்பில் உழலும் லோகனின் மனதில் பல கேள்விகளும் அதற்கான பதில்களும் பிறந்தன.

‘நாங்கள் எல்லாம் பல்லுப் பிடுங்கிய, வயிறு ஒட்டிய, நெளியும் பாம்புகள்’ என்றார் பாம்பாட்டியார்.

‘ஓஹோ…. அதுதான் பாம்பாட்டியார் என்று எல்லாருக்கும் தெரியுமே. ஒரு மாதத்திற்கு முந்தி வந்திற்றுப் போனாரே மந்திரியார், அவர் ஊதுற மகுடிக்குத்தானே நாங்க ஆடுறம்’

லோகனுக்கு நித்திரை பறந்தது. பதில்கள் சிந்தனை கொள்ளத் தொடங்கியது.

‘நம்ம மந்திரியாரும் அவருடைய கூட்டமும் உலக அரங்கில் எங்களைப் போல பல்லுப் பிடுங்கப் பட்டு பட்டினியோட நெளியும் பாம்புகள் தான்.’

“அப்பிடியெண்டால் இவங்களுக்கு மகுடி ஊதி ஆட்டுகிறது ஆரு?’

திடீரென முத்துவின் ஞாபகம் வரவே லோகன் எழுந்து அவனைப் பார்த்தான். நன்றாகக் குறட்டை விட்டு அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

– இதழ் 224 – செப்-ஒக் 1989, மல்லிகைச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2002, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *