பாத்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 2,830 
 

கோபுரகோவில்மணி ஓசையில், கடவுளை வழிபாட்டுக்கு தயார் செய்துவிட்ட மனிதனின் கைஅசைவு அடிநாதமிட்டது. அந்த பணக்கார கடவுளின் பாதுகாப்பிற்கு, கோவிலை சுற்றிலும் அத்தனை காவலர்கள் பிச்சைகாரர்களாக. ஆனாலென்ன கோயில்வாசலிலே, பெரிய மனதுடன் அனைத்து திருடர்களிடமும் பாரபட்சம் பார்க்காமல் லஞ்சம் பெற்று அனைவரையும் உள்ளே அனுமதித்தனர் அந்த காவலர்கள்.

மூத்த பிச்சைகாரர் ஒருவர் தனது டிபன் பார்சலை நிதானமாக பிரிக்கிறார், அப்போது “அய்யா…!” என்ற குரலுடன், பச்சிலங்குழந்தையை மார்பில் சுமந்தபடி அரைகுறையாக ஒரு கை ஏந்தினாள், அந்த வாலிப பெண் செல்வி. பெரியவர் நிமிர்ந்து, “என்னம்மா…, புது வரவா…? நாட்ல பணக்காரங்க அதிகமாகிட்டே போறாங்க.” னு சொல்லிக்கொண்டே பார்சலை மடித்து கொடுக்கிறார். செல்வி பிச்சை கேட்க முற்படவில்லை என்றாலும் எதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் மனம் மாறி, சந்தேகத்துடன் “அய்யா… உங்களுக்கு? ” என்று தயக்கத்துடன் கேட்டாள். அவர், “எனக்கு பழகிடுச்சு., உனக்கும் பழகிடும் ஆனா குழந்தைக்கு பழக்கிடாதே”, னு சொல்லிவிட்டு பார்சலை கையில் கொடுத்தபடி நடக்கிறார். தான் கேக்க நினைத்ததையே தானே மறந்தவளாய், தனக்கு தெரியாமலே தான் பிச்சைக்காரியாக அறியப்பட்டது நினைத்து, செல்வி சிறிதும் கோபம் கொள்ளாமல், சூழ்நிலையை உணர்ந்து அழாமல் அளவாக கண்ணீர் வடித்து, பெருமித அசட்டு சிரிப்புடன் அந்த பாத்திரத்தை ஏற்றுகொள்கிறாள்.

விதியை ஏற்ற செல்வி, கோவிலை சுற்றி ஆங்காங்கே பிச்சை எடுக்கிறாள். ஒரு நடுத்தர தம்பதி கோவிலில் இருந்து வெளிவரும்போது, அவர்களை நோக்கி “அய்யா” என்ற அதே வார்த்தையுடன் கை ஏந்தினாள் செல்வி. ஆனால் இப்போது அந்த குரல் சற்று பழுத்திருந்தது பிச்சைக்கார தொனியில். அவர் தான் வைத்திருந்த பத்து ரூபாய்களை எண்ணுகிறார், அவர் மனைவி லேசாக பதறி “என்னங்க என்ன பண்றீங்க”னு அதட்டிகொண்டு செல்வியை பார்த்து அசடு வழிகிறாள். அந்த கணவன் “இரு இரு அவசர பட்டு மானத்த வாங்காத” னு கூறிக்கொண்டே தான் வைத்திருந்த பத்து ரூபாய்களில் புதிய பத்துரூபாய் இரண்டை ஆளுக்கொன்றாய் கொடுக்க செய்கிறார். சிறு புரிதல் புன்னகையுடன் வாங்கி செல்கிறாள் செல்வி.

கிலோ கணக்கில் நகைகளை சுமந்துகொண்டு காரில் ஏற முற்படும் பெண்மணியிடம் கையேந்துகிறாள் செல்வி, சற்று வெறுப்புடன் அந்தம்மா நின்று, தன் மணிபர்சில் எதையோ தேடிக்கொண்டு “தேட்ரப்ப கிடைக்காது சனியன்”னு புலம்பி பின் அந்த சனியனை எடுத்து கொடுத்துவிட்டு காரில் ஏறி கிளம்புகிறார். அந்த கிழிந்த செல்லாத நிலையில் உள்ள நூறு ரூபாய் பணத்தை கையில் பிடித்தவாறு கார் சென்ற வழியை ஏறிடுகிறாள்.

சில மாற்ற.., ஏமாற்றங்களை, கடந்து மாலை வேளையில், கோவில் சுவற்றில் சாய்ந்து போன் பேசிகொண்டிருக்கும் இளைஞன் கர்ணனிடம் “அய்யா!”…. என பிச்சை இரக்கிறாள் செல்வி. கர்ணன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு, “கூபிட்றேன் வை” னு சொல்லி போனை வைக்கிறான். செல்வியை ஏற இறங்க பார்த்து “ஏன்க்கா நல்லாதானே இருக்கீங்க, ஏன் பிச்சை எடுக்குறீங்க… அதும் குழந்தைய வச்சு, எதாவது வேலைக்கு போய் பொழைக்கலாம்ல”னு சலிப்பா கூறி பதிலை எதிர்பாத்தவனாய் ஏதும் எத்தனிக்காமல் நிற்கிறான். பெருமூச்சுடன் செல்வி “ என்கிட்டையும் நெறைய பேர் கேப்பாங்கனு நினச்சேன் தம்பி…ஆனா” னு இழுக்கிறாள். கர்ணன் ஒரு மாதிரி ஏகத்தாளமாக பார்த்துவிட்டு “ ஓ! அப்டியா எங்க சொல்லுங்களேன் பாப்போம் உங்க கதைய..”

செல்வி, எனக்கும் சொல்லணும் போலத்தான் இருக்கு ஆனா கதை இல்ல தம்பி.. நெசம். அவள் வேதனையாக சொன்னது இவனுக்கு போட்டியாக தெரிந்தது. கர்ணன், “நீங்க பஸ்டு சொல்லுங்க., கதையா, நெசமானு? நான் சொல்றேன்”. செல்வி தொடர்கிறாள், என் பேரு செல்வி, நான் பொறந்தது தஞ்சாவூர்ல ஒரு கிராமம். நான் +2 படிக்கும்போதே யாரையோ லவ் பண்றேன்னு சொல்லி என் குடும்பமும் சொந்த காரங்களும் சேந்து, நான் லவ் பண்ணேன்னு எனக்கு தெரியுறதுக்கு முன்னாடியே, நிரந்தர குடிகார தாய்மாமனுக்கு என்னை வலுக்கட்டாயமா கட்டி வச்சுடாங்க. இதுல அவங்களுக்கு எனக்கே வாழ்க்கை பிச்சை போட்ட மாறி நெனப்பு வேற… முதலில் சற்று முரண்பட்ட கர்ணன் இப்போ முகம் மாறுகிறான்..செல்வி தொடர்கிறாள் “ஆனா அப்பவும் என் வாழ்க்கைய நான் அவரோட தொடங்கல.. அவரும் வழக்கம் போல குடிச்சிட்டு ஊர் வம்பு இழுத்திட்டு ஜாலியாதான் இருந்தாரு.

மறுபடியும் சொந்தகாரங்களா முடிவு பண்ணி புதுசா ஒரு டெம்போ வாங்கி கொடுத்து, என்னையும் சேத்து எல்லாத்தையும் மூட்ட கட்டி அதுல போட்டு, ஊர்ல இருந்தா உருப்பட மாட்டேன்னு மெட்ராசுக்கு அனுப்பி விட்டாங்க. நானும் புது இடம் புது மனுசங்கன்னு எதோ நல்லா இருந்த மாறித்தான் இருந்துச்சு, மாமனும் கொஞ்சம் திருந்தன மாறி தோணிச்சு, அதனால்தான் நான் தாயாக அவருக்கு அனுமதி கொடுத்தேன்.. கொஞ்சம் நாள் போச்சி மறுபடி வேதாளம் முருங்கை மரம் ஏறிடுச்சு, அந்தாளு இங்க பழக்கம் கிடைக்குற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருந்திருக்கான்., இது தெரியாம நான் மறுபடி ஏமாந்துட்டேன்,

அதுக்கு அப்புறம் சொல்லவே வேணாம், அவருக்கும், வண்டிக்கும் ஹாஸ்பிடல் செலவுக்குமே அவர் சம்பாதிச்சார், ஒரு அக்சிடேன்ட்ல வண்டியும் போச்சு அவரும் போய்ட்டாரு. அப்றமும் நான் இருந்தேன் சாகல..ஏன்னா ஒரே பிரசவத்துல ரெட்ட குழந்த வேற எப்டி சாகுறது…. அப்புறம் ஒரு இடத்துல பாலா என்னைய பாத்து நடந்தது எல்லாம் தெரிஞ்சுகிட்டான், அவன் யார்னா என்னைய சின்ன வயசுல லவ் பன்னான்னு சொன்னங்கல்ல அவன். அவன் கம்பனில வேல வாங்கி கொடுத்தான் நானும் வேற வழி இல்லாம அவன் கூட என் வாழ்க்கைய தொடர்ந்தேன், அதுவும் நிலைக்கல, இன்னைக்கு காலையில எப்டி எனக்கு பிச்சைக்காரி பாத்திரம் கரக்டா இருந்துச்சோ அதுபோல அன்னிக்கு நைட்டு விபச்சாரி பாத்திரமும் கரக்டா செட் ஆயிடுச்சு, அதுக்கு அப்புறம் அங்க எப்டி வேல பாக்குறதுன்னு….. பொறுமை இழந்தவனாய் கர்ணன் “அக்கா… அக்கா… சாரி…. சாரி மன்னிச்சுடுங்க போதும் போதும்” னு மூச்சு வாங்கினான்.

அந்த கேப்பில் செல்வி “ திருடன் ஆகிடகூடாதுன்னு ஆம்பளைங்கள ஏத்துகிட்ட பிச்சைக்காரதனத்தால, விபச்சாரி ஆககூடாதுன்னு பொம்பளைங்கல ஏத்துக்க முடியாதா தம்பி? னு கேள்வியுடன் முடிக்கிறாள். உணர்ச்சிவசத்தின் உச்சம் தொட்டவனாய் கர்ணன் பதறி, ஷர்ட் பாக்கெட், பேன்ட் பாக்கெட் பர்சின் அந்தரங்க சந்து பொந்துகள் அனைத்தையும் துடைத்து இருந்தா பணத்தையெல்லாம் அள்ளி கொடுத்துகொண்டிருக்கும்போதே செல்வி “தம்பி…. வேணாம் தம்பி .. சொன்ன கேளுங்க தம்பி”னு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே … அங்கே நிற்க விரும்பாதவனாய் குற்ற உணர்ச்சியுடன் அந்த குழந்தை தலையை தடவிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான் கர்ணன். செல்வியோ ஏதோ தவறு செய்ததுபோல் உணர்ந்து அங்கேயே குற்றஉணர்வோடு செய்வதறியாமல் அமர்கிறாள்.

மாலைநேரம் சிறு மயக்கத்துடன் கடந்தது. கோவிலுக்கு அருகே ஒரு பெட்ரோல் பங்க் வாசலில் கர்ணன், “சார் சார் பர்ஸ் தொலைஞ்சிடுச்சி, பெட்ரோல் போட மட்டும் நூறு ரூபா கொடுங்க சார்” னு ஒருவர் ஒருவராக கெஞ்சுகிறான்.அந்த பெட்ரோல் போடுபவரிடம் போய், “அண்ணே டெய்லி இங்கதான்னே பெட்ரோல் போட்றேன், ஒரு அம்பது ரூபாய்க்கு பெட்ரோல் போடுன்னே… நாளைக்கு காலைல கொடுத்தர்றேன்” னு மன்றாடுகிறான். அவரவர் வேலையை பார்க்கின்றனர் கர்ணனை யாரும் கண்டுகொள்ளவில்லை.. பின் கலைத்து போய் ஓரமாக உக்காந்து ஏற்கனவே சுவிச் ஆப் போனை வெறுப்புடன் பார்க்கிறான்.

சில நொடிகளுக்கு பிறகு அவனுக்கு பக்கவாட்டில், நூறு ரூபாய் ஒன்று தென்படுகிறது. தன் தசை ஆடி, ஒரு நொடி யோசிக்காமல் அதை சட்டென்று பிடுங்கியவன், பின் தான் யோசிச்சு திரும்பி பார்க்கிறான், அது செல்வியின் கைவசத்திலிருந்து பிடுங்கப்பட்டது என்று உணர்ந்து அதிர்ந்து.., ஒருமாறி, பலமாறி… முகமாறி இறுதியில் புன்னகை மட்டுமே வெளிப்பட்டது. செல்விக்கோ பிச்சை பெறும்போதும், எப்போதும் இல்லாத தெளிவு இப்போது முகத்தில் பிரகாசித்தது.. இருவரும் ஆழமான அர்த்த புன்னகையை மட்டுமே பரிமாறிகொண்டனர். பிறகென்ன வழக்கம்போல் மணியை மட்டும் ஆட்டியது அந்த கோவில் பின்னணி….

பிச்சையிட, பாத்திரம் அறிய முற்பட்டேன், பாத்திரமானேன்…
– தேவா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *