பாசிக்குடாப் பாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 1,662 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தீவைப்பு, கொலை, கொள்ளை. தமிழ் வர்த்தகர்கள் வேறாக விற்பனை நிலையத்தை தயாரிதுக் கொண்டிருக்கும் வேளை. சமாதானம் பற்றிப் பேசும் இவ்வேளையில், வாழைச்சேனை நிகழ்வு நியாயமானதா இல்லையா எனப்பலரும் பலவாறு பேசுகிறார்கள். முடிவு எல்லோராலும் ஏதோ ஒரு வகையான சுயநலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் பாசிக்குடா இரவு பகல் என்றில்லாமல் நிரம்பி வழிகின்றது. பொலநறுவையில் இருந்து பாசிக்குடாவிற்கு நேரடி பஸ்சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாரம் ஒரு பிரேதம் தரும் பாசிக்குடா எனவும் பத்திரிக்கைச் செய்தி இப்போது வருவது வழக்கம். முரண்பாடுகளுக்கு மத்தியில் எதிர்கால ஏகாந்தத்தைப்பற்றியும் சிலர் சிந்திக்கத் தவறவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் பாசிக்குடாக் கடற்கரையிலுள்ள பாலைமரமொன்று இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ள ஒரு சூழலை நமக்கு தருகின்றது.

இப்போது எனக்கு இரவும் பகலும் கிராக்கி வந்துவிட்டது. தம்பி வேப்பை மரத்திற்கும் அப்படித்தான், ஆனால் புதிய மிலேனியத்தின் முதல் கோடையில் இருந்த ஒரு நிலையினை உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன். இவ்வாறு பாலைமரம் தனது கதையினை ஆரம்பிக்கிறது.

அப்பா எங்களை நட்டவர், பார்ப்பவர், பாதுகாப்பவர் எல்லாம் அவரே. தினமும் கடலுக்கு மீன்பிடிக்கப் போவார். அன்றொருநாள் கடும் கச்சான் வீசியது. மணலை வாரி இறைத்தது. அப்பா முக்கி முக்கித் தோணியை இழுத்துக்களைத்து நிற்கிறார், வெறும் வலை உள்ளே சுருண்டு கிடக்கிறது.

எங்கட குடிலுக்கு மேலால நான் நின்று பார்க்கிறேன். அம்மா கச்சானுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு தோணியைப்பார்த்து பெரு மூச்சு விடுகிறா கச்சான் அடிக்கத்துவங்கித்தா நாம காயிறதானே. ம்…

பதினைந்து வருடங்களுக்கு முன்பிருந்த கல்குடாவும், பாசிக்குடாவும் 2003 ல் இல்லை . வெறும் பற்றைக் காடுகள், ராவணன்மீசைப்புல், தகரப்பற்றை, நொச்சிப்பற்றை மட்டும்தான். கடற்கரையில மருந்துக்குக் கூட சிப்பிகள் இல்லை. எல்லாம் சுண்ணாம்புக் கொட்டுக்குப் போகிறது.

இப்பொழுது கல்குடாவின் வருமானம் வெறும் உள்ளுர்ச் சமாச்சாரம், மூன்று பக்கமும் கடல் அதுவும் மீன்பிடிக்கடல். இறால், மீன் என்று வள்ளங்களில் கரைக்கு வந்தாலும் அவை கல்குடாக்காரருக்கு வாய்க்கு வராது. எங்கு தான் போகிறதோ?

அங்கு அப்பொழுது சமுர்த்திமுத்திரையும், சுண்ணாம்பும், வடியும் தான் வருமானம் மூச்சு விடமுடியாது புகை. கடற்கரையில் வீச்சுத்தொழில் இல்லை. பயிர் செய்ய நிலம் இல்லை. சனங்களுக்கு பச்சைகாட்டவாவது மரங்கள் இல்லை. எல்லாம் ஒன்றுக்கு இரண்டு இலாபம் உழைக்கும் சுண்ணாம்புச்சூளையிலும், வடிக்கும் தொழிலிலும் முதலாகி விட்டது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தவர் இப்பொது நீரிலும் நிலத்திலும் சுண்ணக்கல் தோண்டி, காட்டையும் அழித்துக் களைப்பிற்கு வடித்து குடித்து, வளைந்த முதுகுடன் தலைகள் பரட்டையாகி அனேகமானோர் பழுத்த வெள்ளரிப்பழம் போல் வெடிக்கும் தறுவாயில் உள்ளனர். ஆண்களும் பெண்களும் வயது வித்தியாசமின்றி அதில் சங்கமம்.

அப்பா புத்தியாக ஒரு வேல செஞ்சாரு வேப்பையடியில் ஒரு வயிரவர் சாமிட பந்தலப் போட்டாரு. சனம் அவனச் சீண்டுறதே இல்லை.

பயம் சாமிட பயம். எனக்கும் அவனுக்கும் இடையில் ஒரு சின்ன வேலி. மச்சமென்டா எனக்கடியிலதான் அப்பா சாப்பிடுவார். இல்லாட்டி அவனுக்குக் கீழதான்.

இன்டைக்குச் சனிதானே. சுருட்டுத்துண்டோட எனக்குக்கிட்ட வந்தவரு தம்பியைப் பார்த்து ஒரு குட்டுக்குட்டினாரு. என்னிலையும் ஒருதட்டுத்தட்டினாரு. எண்ட மேல்ல இருந்த அந்தப்பெரிய வெட்டுக்காயத்தை ஒரு தரம் தடவிப்பார்த்தாரு. அவருடைய வலக்கண்ணுக்கு பக்கத்திலையும் ஒருக்காத் தொட்டுப்பார்த்தாரு.

ஐஞ்சி வரிசமிருக்கும் வடிய அடிச்சுத்துக் கோடாலியோட வந்தான் பாலன். ஒரு வெட்டு விழுந்தது. குடிலுக்க படுத்துக்கிடந்த அப்பா பாஞ்சி வந்தார். டேய் நாயே ஏண்டா வெட்றா எண்ட புள்ளய! என்று கத்தினாரு. அதற்கு முந்தி என்னில் இரண்டாம் வெட்டு வெட்டியாச்சி. அடுத்தகொத்துக்கு முந்தி இடையில பூந்தாரு அப்பா, கோடாலி சொட்டுச் சறுக்கித்து. இல்லாட்டி அவர்ர தல, மூள எல்லாம் எனக்குக்கீழதான்.

கரையில் நிண்ட ஊராக்கள் ஓடிவந்து பாலன இழுத்துப் போய்த்தாங்க. அப்பாவுக்கு சின்னாசுபத்திரியில் மருந்தில்லாம, பெரியாசுபத்திரிக்கு அம்புலஞ்சில போனதாம். அம்மா மண்ண அள்ளி அள்ளித் திட்டினா.

அண்டயில இருந்து நான் பெரியாள்! இப்ப அது பழைய கதை. அதோட நான் கொஞ்சம் பெரிசாகித்தன். போனமுற ஒள்ளுப்பம் பழுத்தனான். சரியான மாக்கட். பழைய விதானையார் இன்னும் சாகல, நேத்து அப்பாட்டச் சொன்னாரு இது பழுத்தா ஆருக்கும் கொடுக்கப்படா. நான்வருவன் விலையப்பத்திக் கவலப்படாத, இனிப்பழுத்தா முழுதையும் வாங்குவன். எனக்குச் சரியான சந்தோசம் நான் உழைக்கத்தொடங்கித்தன்.

பொழுது உச்சிக்கு வந்திடும் போல, என்ன பொடிச்சி, ஹாசியார் வாறெண்டார் காணல்ல எண்டு அப்பா கேட்டுத்து நிக்கக் கொள்ள’ நீலம், வெள்ள எண்டு நிறத்தோட பள்ளிப் புள்ளயளும் வாத்திமாரும் வந்தாங்க. ம்….. என்னமும் கிடைக்குமாக்கும். எண்டுத்து அப்பா குடிலுக்க போய்த்தார். போன வருசத்தில இருந்து குளிக்கிறத்திற்கு கொஞ்சம் கொஞ்சம் சனம் வருகுது. நாளைக்கு ஞாயிறு அப்பாக்குப் பறவால்ல. இண்டைக்குப் பள்ளிப்புள்ளயள் மட்டும் தான்போல.

வெள்ளிவிசிலெடுத்து ஊண்டி அடிச்சார் பெரிய சேர். புள்ளையள்ர சத்தம் அப்படியே அடங்கியது, அவர் கதைச்சார். பிள்ளைகள் நமது பிரதேசத்தின் சகல பாடசாலைகளிலும் இருந்து சாரணர்களும் சாரண தலைவர்களும் நீச்சல் பயிற்சிக்கு வந்துள்ளோம். அணித்தலைவர்கள் துருப்புக்களை ஒன்று படுத்துவதற்கு முன்னர் சூழலிலுள்ள மரங்களை இனம் காணுங்கள் என்றார்.

தம்பி வேப்பய எல்லாருக்கும் தெரியும். என்னையும் சிலபேர் சொன்னாங்க. ஒரு சேர் தகரப்பற்றையைப்பற்றிச் சொல்லிப்போட்டு தகரப்பிஞ்ச சாப்பிட்டுக்காட்டினார். இப்ப ஆருக்கு இதெல்லாம் தெரியும். குஞ்சு மீனப்போட்டு அம்மா சுண்டிக் குடுத்தா, அப்பா சோக்காத்தின்னுவார்.

புள்ளையளப்பார்த்து சேர் சொன்னார் பிள்ளைகள் இங்க பாருங்க, இந்த அப்புவும் அம்மாவும் இல்லாட்டால் நமக்கு வகுப்புவைக்க நிழலும் இருந்திருக்காது. நீங்களும் சூழலக் காக்கபோராட வேண்டும். அப்பொழுது தான் பழைய சூழல நீங்க காணலாம். புறகு சொன்னார், சரி பிள்ளைகள் சாப்பாடு, தண்ணி, உடுப்பு, சைக்கிள், காசு, கொப்பி, எல்லாம் பத்திரம். உங்கட வகுப்புகளில் சாப்பாடுகளைக் களவெடுக்குமே காகம். அதுவும் ஸ்கூள் வேக் சிப்பத் திறக்கிற காகங்களும் வந்திருக்கும். வீட்டில் இருந்து கொண்டு வந்த சாப்பாடுகள நீங்கள் உண்டால் தான் முழுப்பயன்.

ரெண்டு சேர்மார் குளிக்கல்ல, புள்ளயள் சந்தோசமாகக் ஒரு மணித்தியாலம் கும்மாளம் அடிச்சாங்க விசிலடிச்சவுடன் விருப்பமில்லாம வந்தாங்க. எல்லோரும் சாப்பிட வாங்கோ என்றார் ஆசிரியர். அப்பாவின் செருமல்சத்தம் குடிலுக்க கேட்டது. மச்சம் கொணந்திருத்தா வேப்பைக்குக்கீழ போப்படாது எண்டு சொன்னார்.

பொடியனுகள் தெரியும்தானே. சிரிச்சானுகள். வாத்தியார் மெள்ள முறைச்சார். சாரணர் சத்தியம் பிரமாணம் தெரியும் தானே என்று கச்சான் காத்துக்கு மேலாக உரத்துச் சொன்னார். எல்லாரும் சாப்பிட்டுத்து தண்ணியும் குடிச்சாங்க. ஐஸ்கிறீம் நானாட பாடும் பரவால்ல. ஊருக்குள்ள சரியான பஞ்சம் அடிக்குது. புள்ளையள் எல்லாரும் ஐஸ்கிறீம் தின்னுறானுகள்.

குடத்தில் இருந்த சிரட்டையை எடுத்து அப்பா தண்ணி குடிச்சித்து வாயில் விழுந்த மண்ணை எடுத்தார். விசில் சத்தம் கேட்டது. புறகும் புள்ளையள் கடலுக்குள் பாஞ்சார்கள். கட்டிப்பிரண்டு துள்ளிக்குதிச்சி ஓடினாங்க.

பிச்சித்தேங்கா, எண்ணக்கலன், மட்டைகள், புன்னங்கட்டைகள் எல்லாம் போட்டு மிதக்கப்பழகினாங்க சிலர் டியூப் வச்சிருந்தாங்க. அரைமணித்தியாலம் செல்ல, வந்து வெளிக்கிட்டாங்க.

இண்டைக்கு ஹாசியார் வரமாட்டாரோ? எண்டு சொல்லித்து அம்மா தண்ணிச்சிரட்டையக் குடத்தில வெச்சா. இனிவரமாட்டார் என்று அப்பா அடிவகுத்தில தாளம் போட்டார். இரண்டு நாய்கள் உறுமிக்கொண்டு புரண்டன. கச்சான் காத்து துாள்கிளப்பியது. புள்ளைகள் எதிர்காத்தில இருந்து சாப்பிடகொள்ள மண்கொட்டினதால, அவங்க எறிஞ்ச இடியப்பப் பர்சலுக்கே நாய்கள் கட்டிப்புரண்டன.

ஒரே வரிசையாப் போங்கோ என்று சொல்லித்து ஒரு சேர் முன்னுக்குப்போக பின்னால அவனுகள் துள்ளிக் குதிச்சி நெளிஞ்சி பாஞ்சி போனானுகள். இந்தக்கூத்து எனக்கெண்டா நல்ல விருப்பம்.

ஏன் இன்னும் பெரிய சேரும் சின்னச் சேரும் நிற்கிறாங்க? சின்னச்சேர் நல்லவர் போல, அதென்ன ஹாசியார் ஹாசியார் என்று அடிக்கடிச் சொல்லுறீங்க என்று அவர் அப்பாட்ட கேட்டார்.

ஓட்டமாவடியில் இருந்து பெரிய ஹாஜியார் அடிக்கடி குடும்பத்தோட கார்ல வருவார். நாங்க குடிலக்குடுத்தா அவர் சம்பா அரிசி கோழி இறச்சி எல்லாம் கொணந்து ஆக்கிச் சாப்பிட்டுட்டு, மிச்சம் வைச்சா எங்களுக்கு ரெண்டு நாளைக்குப் போதும். இண்டைக்கு வாறெண்டவர் என்னமோ, ஏதோ எண்டார் அப்பா .

சின்னச்சேர் பெரிய சேரப் பார்த்து, சேர் சேர் நாம இந்த இடத்தில வகுப்பு வைச்சிருக்கம். இன்னும் இங்கு வரவேண்டியுள்ளது. அவர்களுக்கு நாம ஏதாவது செய்யவேண்டும் என்டார். அது சரிதான் ஆனா…….. நாம கணக்குக் காட்டுவது கஷ்டம் இல்லையா.

ஏன் சேர் பிள்ளைகளின் தேநீர்க்காசு இருக்குத்தானே. காற்றடித்ததால மாணவர்களை நாம் தேநீர்வைக்கும் பயிற்சிக்கு அழைக்கவில்லை தானே. அந்தக்காசில ஒரு தொகையைக் கொடுக்கலாம் தானே. நான் சாட்சிதானே சேர் குடுங்கோ. என்றார் சின்னசேர். சரி, பிள்ளைகள் சிலருக்கு சைக்கிளும் இல்லை, அவர்களும் பஸ்காசு கொடுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு ஐம்பது குடுத்தார். ஹாஜியார் வராட்டியும் ஆசிரியர் வந்தார்.

எனக்குச் சரியான சந்தோசம். நானும் தம்பியும் இண்டைக்கு ஐப்பது ரூபா உழைச்சம்.

– மறைமுகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஏப்ரல் 2003, கலாச்சாரப் பேரவை பிரதேச செயலகம், வாழைச்சேனை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *