பழி உணர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 4,177 
 

கிட்டத்தட்ட ஒரு மாதமாய் தேடிக்கொண்டிருந்த “மாறன்” இதோ என்னெதிரே நின்று கொண்டிருக்கிறான்.

ஆனால் அவன் முகத்தில் என்னை பார்த்தவுடன் வந்திருக்க வேண்டிய மரண பயத்தை பார்க்க முடியாதது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அவனை அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்வதற்காக சிறையிலிருந்து விடுதலையாகி இந்த ஒரு மாதமாய் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுவேன் என்று தெரிந்தும் அவன் என்னை வியப்பாய் பார்த்து நின்று கொண்டிருப்பது எனக்கு ஏமாற்றத்தை தானே கொடுத்து கொண்டிருக்கும்.

“மாறன்”…பல்லை நற நறவென்று கடித்தேன். என்னுடைய பழைய கூட்டாளி. நாங்கள் செய்யாத அடிதடி, கை கால்களைுடைப்பது, இப்படி கணக்கற்ற வேலைகளை செய்து கொண்டிருந்த காலம் அந்த காலம்.

நல்ல போதையில் ஊருக்கு போன என்னை “ஏய்யா புள்ளை புறந்ததை கூட வந்து பார்க்காம, இம்மா நாள் என்னா பண்ணே? கேட்ட லட்சுமியை ஓங்கி அறைந்தவன் ஏண்டி..எனக்கு உன்னை பார்க்கறது, உம் புள்ளைய பார்க்கறதும் தான் வேலையா?

முகத்தில் ஆக்ரோசம் கொப்பளிக்க என்னை எதிர்த்து நின்ற லட்சுமி, இரண்டு நிமிடத்தில் சமாதானமானது போல் முகத்தை வைத்துகொண்டு, என்னைய அடிக்கறதுனால உனக்கு சந்தோசம்னா அடிச்சுட்டு போ..குரலில் அழுகையுடன் சொன்னாள்.

சட்டென அவளின் சரணாகதி எனக்கு அடுத்த கோபத்தை தூண்டி விட உங்கம்மா கிட்ட இருந்து இருநூறு ரூபாய் வாங்கி கொண்டா..

நாங்களே அப்பனை சாக கொடுத்து அன்னாடம் காய்ச்சியா இருக்கோம், இப்ப வந்து எங்க அம்மா கிட்டே பணம் கேட்டு நிக்கறயே.

வாய் கூசாத வார்த்தைகளை வீசியவன், இரு நூறு ரூபாய்க்கு வக்கு இல்லாதவ இனிமேல என் வூட்டுக்கு வந்து என் சம்பாத்தியத்துக்கு நின்ன ! போதையில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தள்ளாடி வெளியே சென்றேன்

மாறா இன்னைக்கு ஒரு பார்ட்டி வந்துட்டு போச்சு, அவங்க காட்டற ஆளை கை கால் ஒரு மாசத்துக்கு வேலை செய்யாத மாதிரி பண்ணனுமாம். தடி எல்லாம் எடுத்து வை. பார்ட்டி நாளைக்கு காட்டறேன்னு சொல்லியிருக்கு..

மாறனிடமிருந்து எந்த பதிலும் வராமல் என்னையே பார்த்து கொண்டிருந்தான். என்னடா புதுசா பார்க்கற மாதிரி பார்த்து கிட்டு இருக்கே. சொல்ற மாதிரி செய் போ..விரட்டினேன்.

எனக்கு என்னமோ நாம செய்யற வேலை சுத்தமா பிடிக்கலை. இது என்ன பிழைப்பு அண்ணே, அடுத்தவனை அடிச்சு அடிச்சு காசு வாங்கி பிழைக்கிறது.

என்னடா ரொம்ப வாய் நீளுது, சொன்ன வேலைய செய்யறதுதான் உன் வேலை புரிஞ்சுதா, போடா போ..நாளைக்கு சாயங்காலம் ரெடியா இரு, பயமா இருந்தா நம்ம ராக்கியண்ணன் காய்ச்சற இடத்துக்கு போய் என் கணக்குல வாங்கி ஊத்திக்க, சொன்னது புரியுதா?

நான் வரலைண்னே, எனக்கு இது பிடிக்கலை, நாளையில இருந்து ஒரு கட்டிட வேலைக்கு வர்றேன்னு சொல்லியிருக்கேன், என்னை விட்டுடு.

ஆத்திரம் தலைக்கேற, அவன் சட்டையை கொத்தாக பற்றினேன். “ராஸ்கல்” என்னடா பெரிய காந்தி மாதிரி பேசிகிட்டிருக்கே, நாளைக்கு நீ என் கூட வர்றே. இல்லை உன்னை “ஆஸ்பத்திரியில நாளைக்கு சேர்த்தற மாதிரி வச்சுறாதே..

அவன் முகம் பயத்துக்கு போனதும் எனக்கு இன்னும் உற்சாகமானது, சொல்றது புரியுதா? சொளையா பத்தாயிரம் இருபதாயிரம் அவனுக கொடுக்கும் போது கசக்குமாடா? போடா போய் சரக்கு போட்டு தூங்கிட்டு நாளைக்கு சாயங்காலம் ரெடியா வந்துடு.

அவன் ஏதோ முணங்கியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

“இவனை” இனி விட்டு வைக்க கூடாது, என்னைக்குன்னாலும் காட்டி கொடுத்துடுவான், மனதுக்குள் கருவிக்கொண்டேன். அடுத்து இவனை முடிச்சுடனும், இல்லை கை கால் வேலை செய்யாத மாதிரி செஞ்டணும்.

என் “கெட்ட நேரம்” மறு நாள் மாலை இருட்டும் வரை காத்திருந்து நடந்து வந்த ஆளை தாக்க அவன் தப்பித்து விட்டான். அது மட்டுமல்ல இவனை அடிக்க சொன்ன பார்ட்டியை விட பெரிய இடத்து பையனாக போய்விட்டான்.

இரவே போலீஸ் வந்து என்னையும், மாறனையும் அள்ளிக்கொண்டு போய் விட்டது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் போலீஸ் கவனிப்பு, அசரவில்லை நான்.

ஆனால் மாறன் அப்ரூவராகி விட்டான். இதுவரை நாங்கள் செய்த எல்லாவற்றை யும் போலீசிடம் ஒப்பிவித்து விட்டான்.

நான் கொஞ்சம் ஏமாந்து விட்டேனோ? ஒரு வேளை இவனே அந்த பார்ட்டியிடம் சொல்லி கொடுத்திருப்பான். “திருந்திட்டேன்னு” சொல்லும் போதே முழிச்சிருக்கணும், அவனை வெளியே அனுப்பிச்சிருக்க கூடாது, ஏமாந்திட்டோம், சே..அவனை….

இனி புலம்பி என்ன பிரயோசனம், “ஏதோ ஏதோ கேசு” போட்டு எல்லாவற்றிற்கும் சேர்த்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் தீட்டி விட்டார்கள்.

நான் சிறைக்கு போனது நாள் முதல், “வெளியே வந்தவுடன்” முதலில் கவனிக்க வேண்டியவன் இந்த மாறன்தான் என்பதை அப்போதே முடிவு செய்து விட்டேன்.

ஒன்பது வருடங்கள் ‘அப்படி இப்படி’ எட்டு வருடங்களாக குறைய வெளியே வந்தவுடன் பழி உணர்ச்சியுடன் இந்த ஒரு மாதமாக “மாறனை” தேடிக் கொண்டிருக் கிறேன்.

நாங்கள் ஒரு காலத்தில் சுற்றி திரிந்த சாராயக்கடை, ஏரியா எதிலுமே அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.

அவன் ஒரு வருசத்துக்குள் ஜெயிலிலிருந்து வந்து விட்டதாகவும், அதன் பின் அந்த இடத்தை விட்டு எங்கோ போனவன், எங்கே போனான் என்றே தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள்.

அவன் எங்குதான் போயிருப்[பான்? அவன் சொந்த ஊர் திருப்பூர் என்று எப்பொழுதோ சொன்ன ஞாபகம்.

திருப்பூருக்கு கிளம்பி விட்டேன். “ராஸ்கல்” எங்கே போனாலும் உன்னை விட மாட்டேன். எட்டு வருடங்கள் என்னை ஜெயிலில் கம்பி எண்ண வைத்து சீரழித்து விட்டவன், அவனை உயிரோடு விடலாமா?

‘நாயாய்’ அலைந்து அலைந்து, திருப்பூரை தாண்டி அது கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இருந்த அந்த ஊரில், ஏழு மணி இருக்கலாம், இருள் பரவி இருந்தது.

கட்டிட வேலை முடிந்து ஆட்கள் வரிசையாய் போய் கொண்டிருந்ததை சுவாரசியமில்லாமல் பார்த்து நின்று கொண்டிருந்தவனுக்கு, ஒருவனின் நடை பழக்கமானது போல் இருக்க இந்த நடை எங்கோ..பார்த்திருக்கிறேனே..நினைக்க நினைக்க “மாறன்” வந்து மனதில் நின்றான்.

உள்ளம் பரபரத்தது. இவனுக்காக எட்டு வருடங்கள் காத்திருந்தது வீணாக வில்லை. இதோ இவனை அடித்து நொறுக்க வேண்டும், மனம் பரபரத்தாலும் அங்கு ஆட்கள் நிறைய இருந்ததால், மெல்ல அவனை குறி வைத்து பின் தொடர ஆரம்பித்தேன்.

நல்ல வாய்ப்பு கண்ணுக்கெட்டின தூரம் யாருமில்லை, சற்று தள்ளி நாலைந்து வீடுகளின் வெளிச்சம் மட்டும் வந்து கொண்டிருந்தது. நிறைய முள் புதர்கள் அங்கங்கு இருட்டு பூதமாய் நின்றிருந்தன.

இதுதான் இதுதான் சரியான சந்தர்ப்பம். “டேய் மாறா” என் குரல் கேட்டதும் ஏதோ யோசனையில் நடந்து கொண்டிருந்தவன் அப்படியே திடுக்கிட்டு திரும்பி பார்த்தான்.

என்னை பார்த்தவுடன் அப்படியே வியப்பாய் பார்த்துக்கொண்டு அசையாமல் நின்று கொண்டிருந்தான்.

அவனுக்காக இடுப்பில் சொருகியிருந்த கத்தியை மெல்ல உருவி எடுத்தவன் மெல்ல மெல்ல அவனை நெருங்கினேன்.

“அப்பா” ஏன் இவ்வளவு லேட்டு? ஸ்கூல் விட்டு வந்து உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேன்..சிறுமி ஒருத்தி அவனை நோக்கி ஓடி வர..

மாசிலாமணி, ஏய் மாசிலாமணி, உங்கப்பாவை பார்க்கறதுக்காக இந்த இருட்டுல கூட ஓடி வந்துட்டயே, இப்ப உன் பின்னாடி என்னையும் ஓடி வர வைக்கிறே..

சலிப்பாய் சொல்லிக்கொண்டு வந்தாலும் அவள் குரலில் மகளை பற்றியும், அவள் கணவனை பற்றிய பெருமையும் எனக்கு தெரியத்தான் செய்தது.

இதுவரை பொங்கி பெருகி உடல் முழுவதும் இருந்த பழி உணர்ச்சி அப்படியே முழுவதுமாய் பாதம் வழியே மண்ணில் வடிவதை உணர முடிந்தது.

கடவுளே, குழந்தை குடும்பமாய் இருக்கிறான், அவனை ஒன்றும் செய்ய கூடாது, அங்கிருந்தே அவனிடம் உதட்டில் கை வைத்து ஒன்றும் சொல்லாதே, நான் போகிறேன், கத்தியை அவன் முன்னாலேயே தூக்கி வீசி அவனை கை எடுத்து வணங்கி விட்டு அங்கிருந்து அந்த இருளுக்குள் ஓடி மறைந்தேன்.

என் மனசு முழுக்க ஒரு வித பரவசம், சத்தியமாக அவனாவது நல்லா இருக்கட்டும். அழகான மனைவி, குழந்தை, அதுவும் ஸ்கூலுக்கு போகும் குழந்தை. போதும் சார், இது போதும் சார், இதுதான் வாழ்க்கை..

இந்நேரம் லட்சுமி என்னிடமிருந்தால் என்னவாகியிருப்பாள்? இல்லை அந்த குழந்தையையாவது ஸ்கூலுக்கு அனுப்பி இருப்பேனா? அவனுக்கு வாழ்க்கைப்பட்டு இவ்வளவு சந்தோசமாக இருக்கிறாள்

மாறன் உண்மையிலேயே மனிதன் தான் சார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *