(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கடல்….எப்பவும் எனக்குப் பிடித்தமானதாயிருந்தது..! மேகத்தின் வர்ணத்தை உறிஞ்சி, சூரியனின் நெருப்புக் கதிர்களை உள்வாங்கி… நீலப்பளிங்கு மேடையெனப் பரந்து விரிந்து மிதந்தபடி… அங்குமிங்கும் ஓயாமல் அலைவதும் அள்ளுண்டு புரளுவதுமாய், என் வாழ்க்கைக் காலம் முழுவதும் கடல் என்னுள் ஒரு சரித்திரம் போல் வியாபித்திருந்தது! கடலின் அலைகள் என் உணர்வுகளோடு என்றும் இழைந்து கலந்து போயிருந்தன..! இந்துமாக் கடலும் அதன் இணையற்ற தோழமையும் என்னுள்ளிருந்து பிரிக்க முடியாததாகியிருந்தது!
சமுத்திரத்தின் சல்லாபங்கள் எனக்கு மிக நெருங்கிய சொந்தம் போல..! சமுத்திரத்தினுள் உலவும் மனிதர்கள் நானாகவும் அங்கு வாழும் உயிரினங்கள் என் உறவுகள் போலவும்….நான் அதனுள்ளும்… அது என்னுள்ளாகவும் ஆகியிருந்தது…! என் வாழ்விடம், கடலின் கரையிலிருந்து ஊரின் மையம் நோக்கி ஒன்றரை மைல் தொலைவில் இருக்கிறது. ஆனாலும் அதன் ஓசைகள் காலம் முழுவதும் என்னருகில் என்னோடு ஒட்டியபடியே நகர்ந்தது..!
என் ஊரின் மத்தியிலிருக்கும் பிள்ளையார் கோவிலின் வடக்குப்புறப் புல் வீதியில் உலா வருகிற பொழுதுகளிலெல்லாம், சமுத்திரத்தை நோக்கி நகரும் நீண்ட தெருவைத் தழுவியபடியும், நெடுதுயர்ந்த பனைகளின் இடைவெளிகளினூடாகவும் ஓட்டு வீடுகளின் முகடுகளிற்கிடையாகவும் ஓலைக் குடிசைகளை உரசியபடியும் காற்றில் அள்ளுண்டு மிதந்து வரும் கடலலைகளின் ஓசையை வெகுவான லயிப்போடு கேட்டு வந்திருக்கிறேன்.!
இரவின் அமைதியில்…நிலவின் மெல்லொளியில்… நட்சத்திரங்களோடு கண் சிமிட்டியபடியே… என் வீட்டு வராண்டாவோடு ஒட்டியபடி வரிசையாக நிற்கும் பிச்சிப் பூ மரங்களின் கீழ் கால்களைப் பதித்தபடி… சிமெண்டுத் தரையில் அமர்ந்திருந்து… கனவுகளில் மிதந்திருக்கிறேன்! கடலலையின் பேரோசை நகர்ந்து வரும்…! என் வீடு தேடி வானளாவ மிதந்து வரும்..! ஊரைக் கடந்து… ஓ வென்று தாவி வரும்..! விண்ணை உரசுவதாய்…. வந்த வேகத்தில்… வார்த்தைகளைத் தேடிவிட்டுப் பேசாமலே போய் விடும்..! பின்னர் மீண்டும் வரும்… குசாலாய் போகும்..! எதுவோ சொல்வதாய் பாவம் காட்டி விட்டு நீண்ட தூரம் மூச்சுப்பிடித்தபடி ஓடும்..! பின் வராமலே சில நாட்கள் இம்சை பண்ணும்..! அதன் இன்னுமொரு வருகைக்காய் நட்சத்திரங்களோடு சேர்ந்து நானும் காத்திருப்பேன்..!
பின்னர்….ஒரு அமைதியான இரவில்… பௌர்ணமி நிலவின் ஒளியில் மனசு கரைந்திருக்கும் வேளை மெல்லிய கீதங்களோடும் பின் ஆர்ப்பரிப்போடும் அலைகளை அள்ளி வீசியபடி வரும்..! ஆரோகணத்திலும் அவரோகணத்திலுமாய் ஒரு லயத்தோடு வந்து வந்து போகும்…! திடீரென்று நின்று… சில கணங்கள் ரகசியமாய் பேசும்..! என் இனிய தோழியாய்த் தோள்களைத் தழுவும்…! இனிய தோழனாய் இதயத்துள் நுழைந்து …என் உணர்வுகளை முகர்ந்து முத்தமிட்டுப் போகும்..!
நிலவு மிதக்கும் பெருவெளியைத் தாண்டி… முகில்கள் நழுவி வரும் மெல்லிய காற்றில்…என்னை அள்ளிச் சுமந்து, கடல் தழுவும் தேசமெங்கும் உலாச் சென்று பல கதைகள் பேசி வரும்! அற்புதமான அந்த வேளைகளில்… என் துயரங்களை அதனோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். என் சந்தோஷங்களை அதனோடு கிசுகிசுத்திருக்கிறேன்! ரகசியங்களை அதனோடு பரிமாறிக் கொண்டிருக்கிறேன்..!
பள்ளி விடுமுறைக் காலங்கள் அழகானவை! என் தந்தை கடலைப் பார்ப்பதற்காய் எம்மைக் கூட்டிச் செல்வார். கடலின் கரையில் வெள்ளை மணலிற்குள் அவர் அமர்ந்திருந்து கரம் சுண்டலும், மரவள்ளிப் பொரியலும் சுவைத்துக் கொண்டிருக்க…நாங்கள் பட்டாணியைக் கொறித்தவாறே கடலோடு விளையாடுவோம். தொலைவிலிருந்தபடியே கதை பேசிக் கொண்டிருந்த கடலை, நான் வெகுநேரம் அருகில் இருந்து பார்த்திருப்பேன். பின்னர் அதனோடு சேர்ந்து விளையாடுவேன். கடலோடு நடந்து… கடலோடு ஓடி… கடலோடு எழுந்து… பிரிய மனமின்றிப் பிரிந்து போயிருக்கிறேன்..!
கரையிலிருந்து நீர்ப்பரப்பை நோக்கி கால் மைல் தொலைவில் அலைகளுக்கெல்லாம் அணை போட்டது போல கரிய பெரிய முதிரைக் கற்கள் வரிசையாக நீளமாய் குறுக்கறுத்து எழுந்து நிற்கும்! அலைகள் எப்பவும் அவற்றைத் தாவிப் பாய்ந்து கரையைத் தொட்டு விட்டு வீர நடை போட்டு மீளவும் போகும்! பந்தயத்திற்காய் பலரும் ஓடிச் சென்று முதிரைக் கற்களைத் தொட்டு விட்டு வருவதுண்டு! ஆயினும் அதன் ஆழமும் அலையடிப்பின் வேகமும் எனக்கந்த அனுமதியை எப்பவும் பெற்றுத் தந்திருக்கவில்லை. கரையில் நின்று கால்களை நனைக்கப் போய் பலதடவைகள் கடலினுள் சங்கமித்து மீண்டிருக்கிறேன்.
எப்போதாவது கடல் அமைதியாகிக் கிடந்த அசாதாரண பொழுதுகளில் ஏனோ இனம் புரியாத சோகத்தில் தவித்திருக்கிறேன்! ஒரு காலை வேளையில் கடல் எப்படியிருக்கும் என்று பார்ப்பதற்காய் பல தடவைகள் பிரயத்தனப்பட்டிருக்கிறேன்! ஒரு சூரிய உதயத்தில் கடலைப் பார்த்துப் பிரமித்த நிமிடங்கள் பல வருடங்களாய் என்னுள் ஓவியங்களை வரைந்தபடியே இருந்தன! அவை கவிதைகள் ஆயின….கதைகள் ஆயின..! அழகிய சொல்லாடல் ஆயின..!
தகதகவென்று மினுமினுக்கும் கடல் நீர்ப்பரப்பில் எனது ஆயிரம் நினைவுகள் எப்பவும் வரிகளாய்க் கோலமிட்டுக் கிடந்தன! என் கனவுகள் அங்கே படகுகளாய் மிதந்து திரிந்தன..! கடல் என்னுள் கடலாய்ப் பெருக்கெடுக்கும்! கவிதைகள் எழுத வைக்கும்! கதைகள் புனைய வைக்கும்!
பின்னர் ஒரு காலம்… கடலோர வீதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் சமயங்களில் கடலோடு சேர்ந்து கனாக் காண்பதற்காய் ஜன்னல் இருக்கைகளைத் தேடி அது என்னை அமர வைக்கும்! கை கோர்த்தபடியே கதை பேசிக்கொள்ளும். ஆயிரம் காலத்துச் சொந்தமென என்னோடு சேர்ந்து உல்லாசமாய் நகரும்! ஏலேலோ பாடல்கள் காற்று வெளியூடாய் என் காதுகளை உரசிச் செல்ல… பேருந்து நகரும். கடலும் நகரும்..!
என்னுள்ளிருந்த கடல்க் காதல் கடலை விடப் பெரியதாயானது..! அது கடலோரம் வாழ் மக்களை நேசிக்க வைத்தது. கடற் போராளிகளைப் பூஜிக்க வைத்தது! கடலோடு நானும் என்னோடு கடலுமாய் வாழ்வு இரண்டறக் கலந்து கிடந்தது! என் கனவுகளிற்குள் கடல் எப்பவும் உலா வந்தது! கடல் இல்லாத ஒரு புதிய தேசத்தை நான் என்றும் கற்பனை செய்ததில்லை!
ஆயினும் பின்னர் ஒரு காலம் வந்தது….! சொல்லொணாச் சோகங்களைச் சுமந்தபடி அது வந்தது..! எம்மிடமிருந்து கடலினைப் பிடுங்கியெடுக்கச் சாபங்கள் பிறந்தன! இராணுவ வேலிகள் கடலிடமிருந்து எம்மைப் பிரிக்கத் தொடங்கின! அலைகளை மறித்து பீரங்கிக் கப்பல்கள் ஆட்சி நடத்தத் தொடங்கின..! கடலுக்குள்ளிருந்து நெருப்புத் துண்டங்கள் எம் மீது ஏவப்பட்டன..! கடலை நாங்கள் காண முடியாத பெருந்துயரம் எம்மைச் சூழ்ந்து கொண்டது! போரின் ஓசைகள் கடலின் ஓசைகளைக் கொடூரமாய் சிதைக்கத் தொடங்கின..! கடலின் தரிசனம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கேள்விகளேதுமின்றி மறுக்கப்பட்டது..! கடல் எமக்குள் ஆயிரம் கேள்விக்குறிகள் ஆயின..
“எங்கள் கடல்” என்ற நினைப்பைத் தவிர மிகுதி யாவும் கரையத் தொடங்கின..!டலோரக் காற்று மெல்ல..மெல்ல… கண்ணீர்த் துளிகளை வீசத்தொடங்கின…! கடலின் அலைகள் எம்மவர் குருதியைச் சுமந்து கரைகளில் தள்ளின…! கடல் நீரெங்கும் அழியாத சோக காவியங்கள் மிதக்கத் தொடங்கின…!
பின்னர் வந்த காலம்… எமக்கென்றிருந்த எல்லாமும் பிடுங்கியெறிபட்டு… வேரறுபட்டு…..சிதைந்து போன புலம் பெயர் காலமாயிற்று..! சுகமான சரித்திரங்கள் அழிபட்டு …எரிபட்டு நாசமாயிற்று…! பிறிதொரு புதிய தேசம் நோக்கி அநாதைகளான வாழ்வுகள் நகரத் தொடங்கின…! தேசங்கள் புதியவையானாலும் நாம் நாமாகவே நகர்ந்தோம்..அதே கனவுகளைச் சுமந்தபடி… அதே நினைவுகளைக் காவியபடி அதே இலக்குகளோடு நகர்ந்தோம்..!
காலங்கள் நகர… சுமைகள் பெருக… என்னுள் பெருக்கெடுத்திருந்த அழகிய பெருங்கடல் எங்கோ ஒரு மூலையில் அமைதியாகிப் போயிருந்தது..! பின்னர் வந்த காலங்கள்…கடலோரக் காற்றை… கட்டு மரங்களை… நெடிதுயர்ந்த பனைமரங்களை… அதனோடு இணைந்த ஏலேலோ பாடல்களை என்னிடமிருந்து வெகுதூரம் இழுத்துச் சென்றுவிட்டன..! அதன் பின்னர்… ஒரு நாள் வந்தது! அது உலகையே அதிரச் செய்யும் கொடும் கோலத்துடன்… ஆழிப்பேரலையாய் வந்தது! உயிர்த்தாகத்தைச் சுமந்தபடி உலகெங்கும் ஊழிக் கூத்தாடியது..!
கடல்க் கனவுகள் எல்லாம் காவுகொள்ளப்பட்டன..! கடலில் மிதந்த கவிதைகள் எல்லாம் சிதறிப் போயின…! கடலில் கலந்திருந்த அளவிலா சந்தோஷங்கள் எல்லாம் புதைந்தழிந்து போயின..! கடல் முகமிழந்து வடுக்களை சுமந்தபடி கோரமாய் அலைந்தது..! சில சமயங்களில் விஷமத்தனத்துடனும் கள்ளப் பார்வையுடனும் மௌனித்துக் கிடப்பதாய் பாவம் காட்டியது..!
கடல் சூழ்ந்திருக்கும் எனது மண்ணும்… துயர் படிந்திருக்கும் எனது மனிதர்களும்… லைந்து போன கனவுகளையும் புதைந்து போன சந்தோஷங்களையும் இன்னமும் கரையிலிருந்து…தேடியபடியே …! ஆயினும் காலமோ கரைகிறது..!
கடல் ஒரு நாள் அருகில் வரும்… சொல்லாத பல சேதிகளைச் சொல்வதற்காய் தொலைந்து போனவற்றையெல்லாம் அள்ளியெடுத்துக் கொண்டு மீளவும் வரும்..! மிகுந்த அன்போடும் பரிவோடும் எம்மைத் தொட்டுத் தழுவுவதற்காய் “எங்கள் கடல்” என்ற பெயரைச் சுமந்தபடி வரும்..!
என்னுள் உறங்கிக் கிடக்கும் கடல் மீண்டும் விழி அசைத்து இதழ் விரித்து அலைகளை வீசி…நுரைகளைத் தெளித்து… ஆனந்த கீதம் இசைக்கும்! எல்லோரும் ஏதேதோ சொல்கிறார்கள்…! என்னால் ஒன்றை மட்டுமே சொல்ல முடிகிறது… அதையே நம்பவும் முடிகிறது..!
எங்கள் மண்ணில் எங்கள் கடல் இன்னமும் எமக்கான காத்திருப்பில்… மீளவும்.. மீளவும் ஓ..| வென்ற பேரிரைச்சலோடு… அலைகளை வீசியெறிந்தபடி… எதையெதையோ சொல்லத் துடிக்கும் லயத்தோடு அங்கும் இங்கும் அலைந்தபடி..! அது சொல்லும்..! ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும்…!
நானில்லாக் காலத்தின் வலியைச் சொல்லும்…! நெஞ்சு நிறைந்த சோகத்தைச் சொல்லும்….! இன்னும் பிரிவுகளை… இழப்புகளை… துயரத்தினால் இழையப்பட்ட சின்னச் சின்னச் சுகங்களை எல்லாம், கேள்விகள் ஏதுமின்றி… முற்றுப்புள்ளிகளேதுமின்றி… மூச்சு விடாமல் சொல்லும்!
நான் இன்னமும் காத்திருக்கிறேன்…! எனக்கென்றிருந்த இடங்களை இழந்தும்… னக்கேயான காலங்களை இழந்தும்… என்னுடைய மனிதர்களை இழந்தும் இன்னும் நானில்லாத எனது கடலை எண்ணியும்… கடலில்லாத எனது இருப்பை எண்ணியும் நாளும் பொழுதும்… காலத்தைக் கடக்க முடியா வலியோடு என் தேசத்தின் காயங்களைச் சுமந்தபடி காத்திருக்கிறேன்…!
– நிலவுக்குத் தெரியும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2011, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.