நிழலில் வெளிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,845 
 

குளித்துவிட்டு சீருடையை அணிந்ததும் கண்ணாடியில் பார்த்தேன். “ச்சே! நானா இது?!” என் தோற்றத்தைப் பார்க்க பிடிக்காமல் கண்ணாடியிலிருந்து பார்வையை விலக்கிக்கொண்டேன். வகுப்பாசிரியரும் இயற்பியல் பாடம் போதிப்பவருமான கே. எஸ். என்கிற சுப்பிரமணியன் சார் மீது ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இதுக்கொல்லாம் அவர்தான் முதல் காரணம். நடந்து முடிந்த பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வியுற்ற நான் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலியே இருந்தேன். இயற்பியல் ஆசிரியர் தான் எங்க வீடு தேடிவந்து

“தோல்வியோட அனுபவங்கள்தான் நிரந்தர வெற்றியைத் தரும். உடனடி தேர்வெழுதினால் தேர்ச்சி பெற்று விடுவாய். நீ பள்ளிக்கூடம் வா சிவா!” நல்ல விதமாக பேசி என்னை பள்ளிக்கூடம் அழைத்துப் போனார். என்னைப் பார்த்த தலைமையாசிரியர் என்னுடைய ஒன்சைடு கட்டிங் ஹேர்ஸ்டைலயும், பிட்னஸ் சட்டையையும் சரி பண்ணிட்டு வரச் சொன்னார். நான் கண்டுகொள்ளவேயில்லை. என் அப்பாவிடம் அலைபேசியில் தகவல் கொடுத்தார்.

“என் பேச்சைக் கேட்கமாட்டான். நீங்களே சொல்லுங்க சார்” என்று என் அப்பா கூறிவிட்டதால், முடிதிருத்துபவரை பள்ளிக்கே வரவழைத்து மொட்டையடிச்ச மாதிரி என் ஹேர்கட்டிங்கை ஒட்டவெட்டிட்டு, என் சட்டையையும் பிரிச்சுவிட்டுடாங்க. அடுத்தநாள் பள்ளிக்கூடம் போக மாட்டேனென்று வீட்டிலியே இருந்தேன்.

“நான் தான் படிக்காம கொத்தனார் வேலை செஞ்சுகிட்டு கஷ்டபடறேன். நீயாவது படிச்சு நல்ல வேலைக்கு போப்பா.” என்று என் அப்பா அழுதார்.

பல்லைக்கடித்துக்கொண்டு பள்ளிக்கூடம் போனால், என் நண்பர்கள் என்னை கேலியும் கிண்டலுமாக பார்க்கிறார்கள்.

பின்ன என்ன பண்ணுவாங்க கிட்டதட்ட சேது படத்துல வர்ற சேது மாதிரியில்லை இருக்குது.

கோபத்தின் உச்சத்தில் தலைமையாசிரியரையும், இயற்பியல் ஆசிரியரையும் நினைத்துக்கொண்டு சுவரில் ஓங்கிக்குத்தினேன்.

“என்னாடா சத்தம்! சாப்பாடு ரெடியாயிடிச்சு சாப்பிட வா” சொல்லிக்கொண்டு அம்மா வந்தாங்க.

பதில் பேசாமல் சீருடையைக் கழட்டி வீசிவிட்டு, வேறு பனியனைப் போட்டுக்கொண்டு, வண்டி சாவியை எடுத்துக்கொண்டு விருட்டென்று வெளியேறினேன்.

“பள்ளிக்கூடம் போவலயாடா…! வண்டியை எடுத்துக்கிட்டு எங்கடா கிளம்பற! நானும், அப்பாவும் வேலைக்கு போவணும்டா! டேய் சிவா! சிவா…!” பின்னாடியே வந்த அம்மாவின் குரல் என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடங்கிவிட்டது.

எங்கள் ஊரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள பக்கத்து டவுனுக்கு சென்று, ஜாலியா சுத்திட்டு புதுப்படம் பார்க்கனுமென்று வண்டியில் பறந்தேன்.

எவ்வித சலனமுமின்றி திண்ணையில் அமர்ந்திருந்த அப்பாவின் முகம் நினைவுக்கு வந்தது. ஏதாவது வாயை திறந்தால் கோபத்தில் ஏதாவது செய்துவிடுவேன் என்கிற பயம். அப்படியே இருக்கட்டும்

பதினைந்து நிமிடத்தில் டவுனை நெருங்கிவிட்டேன். திருப்பத்தில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துவிட்டேன். முன், பின் வாகனக்காரர்கள் அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவந்து தூக்கினார்கள்.

நல்லவேளை பலமாக அடியேதும் படவில்லை. லேசான சிராய்ப்பு மட்டும் தான்.

“பார்த்து போ தம்பி!” என்று கூறிவிட்டு சிறிது நேரத்தில் நின்றவர்கள் கிளம்பிவிட்டனர்.

“தம்பி நில்லு! காயத்தை காட்டு!” என்ற குரல் கேட்டு திரும்பிப்பார்த்தேன்.

கையில் தண்ணீர் பாட்டிலும், மருந்தும் வைத்திருந்த பெரியவர் ஒருவர் என்னை நோக்கி வந்தார்.

“பெருசா காயமில்லைங்க. நான் கிளம்பறேன்.” என்று கூறியபடியே நான் வண்டியை எடுத்தபோது

“தம்பி கொஞ்சநேரம் இருப்பா! பதட்டதுல வண்டி ஓட்டக்கூடாது. இந்த நிழல்ல வந்து உட்காரு”. பிடிவாதமாக அந்த பெரியவர் என்னை மரத்தடியிலிருந்த பலகையின் மீது அமரவைத்துவிட்டு, அவருடன் வந்த நபரிடம் “டீயும், சூடா சாப்பிட என்ன இருந்தாலும் வாங்கிட்டு வாங்க” என்று அனுப்பிவைத்தார்.

எனக்கு அந்த நேரத்தில் டீ தேவைப்பட்டதால் அமைதியாக இருந்தேன்.

“தம்பி! உன் பேர் என்ன? என்ன பண்ற?” அந்த பெரியவர் கேட்டார். என்ன சொல்வதென்று புரியாமல் அமைதியாக இருந்தேன்.

“தம்பி…! உன்கிட்டதானே கேட்கிறேன்…!” பெரியவர் பிடிவாதமாக கேட்டார்.

“என் பேரு சிவா. சோர்வா இருக்கு அப்புறம் பேசறேன்.” கண்மூடி தலை குனிந்தபடி சமாளித்தேன்.

டீக்கடை பக்கத்திலேயே இருந்ததால், வாங்கச் சென்றவர் சிறிது நேரத்திக்குள் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.

டீயும், மெதுவடையையும் என்னிடம் கொடுத்தார். ” உங்களுக்கு…?” குடிப்பதற்கு முன் கேட்டேன். நாங்க இப்பதான்பா குடிச்சுட்டு வந்தோம். நீ குடி!.

டீ குடித்தபடியே அவர்களைப் பார்த்தேன். வாங்கி வந்து கொடுத்தவர் சற்று தள்ளி போன் பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பெரியவர் மட்டும் காகிததாளில் சுருட்டியிருந்த வடையை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். எனக்கு ஏதோபோல் இருந்தது. “எடுத்துக்கோங்க….” அவரிடம் நீட்டினேன்.

சுதாரித்துத் தன்னிலைக்கு வந்தவராய் வேண்டாம்பா!. வேண்டாம்! நீ சாப்பிடு!. நான் அந்த தாள்ள இருக்கிற படத்தையும், படத்துல ஓவியரோட அடையாளமா இருக்கிற ‘சாமி’ங்கிற இலட்சினையையும் தான் பார்த்தேன்.

வடையிலிருந்த எண்ணை படிந்த தாளிலிருந்தா படத்தையும், இலட்சினையையும் நானும் பார்த்தேன். கிராமத்தின் இயற்கை காட்சி தத்ரூபமாக இருந்தது.

ஒருவேளை இவர் ஓவியமோ….! என் எண்ணத்தைப் புரிந்துக்கொண்டவராய் “தம்பி சிவா! இந்த ஓவியம் என் மாணவன் வரைஞ்சது.” “நீங்க வாத்தியாரா…?”

“ஆமாம்பா கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற தமிழாசிரியர். என் பேரு ஐயாசாமி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் எங்கிட்ட படிச்ச மாதேஷ்ங்கிற் மாணவன் பண்ணாத சேட்டையேயில்லைனு சொல்லலாம். ஆசிரியர் யாரையுமே மதிக்கமாட்டான். ஒருநாள் தனியா கூப்பிட்டுக் கண்டிச்சேன். அடுத்த நாளே பள்ளியின் சுவர் முகப்புப் பகுதியில் திருவோடு ஏந்திக்கிட்டு பிச்சை எடுக்கிற மாதிரி ஒரு படம் வரைந்து ஐயா….! சாமி….ன்னு எழுதிவச்சிருந்தான். அதுக்காக நான் வருத்தப்படலை. அவங்கிட்டயிருந்த திறமை என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். மாவட்ட அளவில் நடைப்பெற்ற ஓவியப்போட்டியில கலந்துக்கவச்சேன். பரிசும் வாங்கினான். தொடர்ந்து அவனை ஊக்கப்படுத்தினேன். அவங்கிட்ட மாற்றம் வந்தது படிப்பிலயும் தேர்ச்சி பெற்றான். பள்ளியை முடிச்சிட்டுப் போனாலும் நான் அவனை தொடர்புகொண்டு ஓவியத்தில முறையான பயிற்சி எடுக்க வச்சேன். அவனும் பயிற்சிப்பெற்று நாளடைவில் சிறந்த ஓவியராயிட்டான். எனக்கு நன்றி செலுத்தும் விதமாக என் பேருல இருக்கிற ‘சாமி’யை அவன் ஓவியத்துக்கு அடையாள இலட்ச்சினையா வச்சிருக்கான்.” அவர் சொன்னதும் எனக்குள்ளும் மாற்றம் நிகழ்ந்த து,

“வடையைச் சாப்பிடுபா! அப்படியே வச்சிருக்கியே..! சாப்பிட்டுக் கிளம்பு நாங்களும் கிளம்பறோம்.”

என் அக இருளைப்போக்கி அறிவுவெளிச்சத்தைக் கொடுத்த தமிழாசிரியருக்கு இருகரம் கூப்பி நன்றி செலுத்தினேன்.

புத்தருக்கு போதி மரத்தடி என்றால் எனக்கு இந்த புன்னை மரத்தடி,

நேரா வீட்டுக்கு போயிட்டு பிறகு பள்ளிக்கூடம் போவேன். சிறுவயதிலுருந்தே எனக்கு பழக்கப்பட்ட கட்டுமான பணி தொடர்பா மேற்படிப்பு படிச்சு, சிறந்த கட்டமைப்பு பொறியியலானாகி என் பெற்றோரைப் பெருமைபடுத்துவேன். காலத்திற்கும் நிலைத்து நிற்கும் கட்டடங்களை எழுப்பி இந்திய வரலாறில் இடம்பிடிப்பேன்.

தெளிந்த எண்ண ஓட்டத்தோடும் தீர்க்கமான முடிவோடும் அங்கிருந்து புறப்பட்டேன்.

சுபம்

இரா. சென்னம்மாள் வெங்கடேசன், அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, தேவபாண்டலம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *