தூக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 7,640 
 

இரவு ஒன்பது மணி. பெங்களூர் சிட்டி ரயில்வே ஸ்டேஷன்.

மைசூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்றது.

ரகுராமன் அவசர அவசரமாக எஸ்-6 ரிசர்வ்டு பெட்டியில் ஏறி அமர்ந்தான்.

கரூரில் உள்ள ரகுராமனின் அக்கா பெண்ணுக்கு நாளை காலை பத்து மணிக்கு நிச்சயதார்த்தம். பெண்ணுக்கு மாமா என்கிற முறையில் இவன் கண்டிப்பாக கரூர் போக வேண்டிய நிர்ப்பந்தம்.

ரயில் கரூரை அடையும்போது விடிகாலை நான்கு மணியாகிவிடும். தான் தூங்கிவிடாது கரூரில் தவறாது இறங்கியாக வேண்டுமே என்கிற கவலை அவனைத் தொற்றிக் கொண்டது. எனினும், டிக்கெட் செக்கிங் செய்ய டி.டி.ஈ வரும்போது அவா¢டம் தன்னை கரூர் வரும் முன் எழுப்பிவிடச் சொல்லலாம் என்று சமாதானமடைந்தான்.

ரயில் கிளம்பி கண்டோன்மெண்ட் ஸ்டேஷனைத் தாண்டி வேகம் பிடித்தது. சக பயணிகள் தூங்குவதற்கு தயாராக, இவனும் தன்னுடைய மிடில் பர்த்தில் ஏறிப் படுத்தான். ரயிலின் தடக், தடக் தாலாட்டில் தூக்கம் கண்களைத் தழுவியது.

ரகுராமனின் பெரிய வீக்னெஸ் தூக்கம். எப்போது நேரம் கிடைத்தாலும் உடனே தூங்கி விடுவான். ரகுராமன் பெங்களூரில் ஒரு த்னியார் கம்பெனியில் மானேஜர். தினமும் கம்பெனி பஸ்ஸில்தான் பயணம். பஸ் ஏறியவுடன், முன் பக்க இரட்டைச் சீட்டின் ஜன்னலோரத்தில் அமர்ந்தவுடன் இரண்டு நிகிடங்களில் தூங்கி விடுவான். போகவர நாற்பது கிலோமீட்டர் தூரத்தையும் தூங்கியே பயணிப்பான்.

சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் மதியம் சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பிறகும் தூங்குவான். அவனுடைய மனைவி, “தூக்கம்தாங்க உங்களுக்கு பெரிய சத்ரு… உடம்பெல்லாம் சோம்பேறித்தனம்” என்று அடிக்கடி திட்டுவாள். அவளின் திட்டலையும் தாலாட்டாக நினைத்து தன் தூக்கத்தை தொடருவான்.

ரகுராமனுக்கு பிடித்த சினிமாப் பாட்டு, ‘தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே’ பிடிக்காத பாட்டு ‘தூங்காதே தம்பி தூங்காதே’. ஆங்கிலத்தில் பிடித்த கதை ‘ரிப்வான் விங்கிள்’. பிடித்த மரம் தூங்கு மூஞ்சி மரம். பிடித்த கேரக்டர் கும்பகர்ணன். கையில் நிறைய பணமிருந்தால் கும்பகர்ணனுக்கு ஒரு கோவில் கட்டி, கோவில் பிரகாரத்தில் தூங்குமூஞ்சி மரங்களை வளர்க்க ஆசை. பத்திரிக்கைகளில் அவ்வப்போது வெளியாகும் ‘அலுவலகத்தில் தூங்குவது’ பற்றிய ஜோக்குகளையெல்லாம் கட்டிங் செய்து வைத்துக் கொண்டு படித்து படித்து ரசிப்பான்.

தூக்கத்தினால் ரகுராமன் இழந்தது ஏராளம். நல்ல சந்தர்ப்பங்களை, நல்ல நண்பர்களை இழந்திருக்கிறான். அவனிடம் யாராவது அவனுடைய தூக்கத்தைப் பற்றி குறை சொன்னால் அவ்வளவுதான் பெரிதாக ஆரம்பித்துவிடுவான், “தூக்கத்தினால் எவ்வளவு நன்மைகள் உண்டு தொ¢யுமா? முதல்ல நம்முடைய உடம்பின் எல்லா அவயங்களுக்கும் ஒய்வு கிடைக்குது. தூங்கும்போது யாருடனும் பேசாமலிருப்பதால், யார்கிட்டயும் வாயைக் கொடுத்து மாட்டிக்க வேண்டாம்…வம்பு தும்பு கிடையாது…

“தூக்கத்துல கலர் கலரா கனவு வந்தா இன்னமும் உசிதம், பைசா செலவு இல்லாம சினிமா பார்த்த உணர்வு கிடைக்கும். கனவுகள் கோர்வையாக இல்லாமல் ஒன்றொன்றுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருக்கும்தான், இல்லேங்கல….ஆனா இப்ப வர்ற தமிழ் சினிமாக்கள் மட்டும் கோர்வையா இருக்கா என்ன? சினிமாவும் திப்பி திப்பியா கனவு மாதிரிதானே இருக்கு… எல்லாத்துக்கும் மேல தூக்கத்தினால் செலவு கிடையாது. சனி, ஞாயிறுகளில் தூங்குவதால், ஷாப்பிங் சென்று கண்டதையும் வாங்கி செலவு செய்ய வேண்டாம். தூங்கிண்டேயிருந்தா, டிரஸ் மாற்றிக் கொண்டு வெளியே சென்று, பஸ்ல இடிச்சுண்டு போறது போன்ற அவஸ்தையெல்லாம் கிடையாது…

“ஒரு நல்ல தூக்கம் போட்டுட்டு, யாராவது கண்ணாடி முன்னால போய் நின்று முகத்தைப் பார்த்திருக்கேளா? பம்னு கன்னெமெல்லாம் உப்பி, ஓய்வெடுத்ததால் நம் கண்களில் ஒரு ஒளி வந்து பார்க்கவே அழகாயிருக்கும்.” என்று அவனை குறை சொன்னபவர்களையே தன் நீண்ட வியாக்கியானத்தினால் தூங்கச் செய்து விடுவான். மேலும், “நான் தூங்கும்போது என்னிடமுள்ள ஒரு நல்ல பழக்கத்தை யாராவது நோட்டீஸ் பண்ணேளா? நான் குறட்டையே விடுவதில்லை, எனனால யாருக்கும் ஒரு தொந்திரவும் கிடையாது” என்று பீற்றிக் கொள்வான்.

தன்னுடைய விடலைப் பருவத்தில், இரவு நேரங்களில் தூங்குவதாக நடித்து, பக்கத்தில் உண்மையாகவே தூங்கிக் கொண்டிருக்கும் அத்தை, மாமா பெண்களின் மேல் காலைப் போட்டு அணைத்துக் கொண்ட ரகசிய கிளு கிளுப்பான அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் அதை வெளியே சொல்ல மாட்டான்.

-0-

மிடில் பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த ரகுராமனை யாரோ உலுக்கி எழுப்ப, எரிச்சலுடன் கண்களைத் திறந்தான்.

டி.டி.ஈ தன் வழுக்கைத் தலையை இவனது முகத்துக்கு அருகே கொண்டுவந்து நிமிர்ந்து பார்த்து, “டிக்கெட் ப்ளீஸ்” என்றார்.

ரகுராமன் கடுப்புடன் தன் ரிஸ்ட் வாட்ச்சில் மணிபார்த்தான். பதினொன்று. டி.டி.ஈ யிடம் எரிச்சலுடன், “ரூல் படி பத்து மணிக்குள்ள உங்க செக்கிங் எல்லாத்தையும் முடிச்சிருக்கணும், ரயில் கிளம்பி ரெண்டு மணி நேரமாச்சு” என்றான்.

“இது எந்த ரூல்னு எனக்குத் தெரியாதுங்க, முதல்ல உங்க டிக்கெட்ட எடுத்துக் காட்டுங்க, அப்புறமா ரூல் புக்க காண்பிங்க” கேலியும், கிண்டலும் குரலில் தொனித்தது. அவரை விரோதத்துடன் பார்த்தபடியே தன் சட்டைப் பையைத் துழாவி டிக்கெட்டை எடுத்துக் காண்பித்தான். சார்ட்டில் டிக் செய்துவிட்டு இவனை முறைத்துவிட்டுப் போனார்.

அப்போதுதான் அவனுக்கு உறைத்தது, அடடா, டி.டி. யிடம் தன்னை கரூரில் எழுப்பச் சொல்லவில்லையே என்று. ‘ஆமாம் அவருக்கு தன் மேல் இருக்கிற கடுப்பில் இது ஒண்ணுதான் கொறச்சல்; என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டு. நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்.
-0-

“சார் பேப்பர், பேப்பர்…கா•பி, கா•பி..” என்கிற கலவையான குரல்களின் சத்தம் கேட்டு முழித்துப் பார்த்தால், சக பயணிகள் பலர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். பொழுது நன்கு விடிந்திருந்தது. ரகுராமன் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். ‘தஞ்சாவூர் சந்திப்பு’ என்ற பெரிய மஞ்சள் போர்டு தெரிந்தது.

ரகுராமனுக்கு தான் கரூர், திருச்சியைத் தாண்டி தஞ்சை வந்து விட்டோம் என்பது உறைக்க, அவசர அவசரமாக தன் பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்க எத்தனிக்கையில், “சார் ஒரு நிமிஷம்” என்றபடி ஒரு அரைப்பக்க பழுப்பு நிற காகிதத்தை டி.டி.ஈ நீட்ட, ரகுராமன் ‘இது என்ன?’ என்பதுபோல் அவரைப் பார்த்தான்.

குரலில் கிண்டல் தொனிக்க, “கரூர் வரை டிக்கெட் வாங்கிட்டு, தஞ்சாவூர் வரை பயணம் செய்ததற்கான டிக்கெட்டும் அபராதமும் சேர்த்து அறனூறு ரூபாய் முதல்ல கட்டிட்டு அப்புறமா வண்டியை விட்டு இறங்குங்க…ரூல் புக்கை பார்க்கணும்னா வாங்க ஸ்டேஷன் மாஸ்டர் ரூமுக்கு” என்றார்.

ரகுராமன் தன்னுடைய அதீத தூக்கத்தினால் ஏற்ப்பட்ட துக்கத்தை அனுஷ்டித்தபடி பர்ஸைத் திறந்து அறனூறு ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டான்.

தஞ்சாவூர் ஸ்டேஷனிலிருந்து தலை தெறிக்க வெளியே ஓடினான், கரூர் பஸ்ஸைப் பிடிப்பதற்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *