கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 569 
 

தன்னருகே பேரழகு கொண்ட ரம்பை,ஊர்வசி,மேனகை,திலோத்தமை போன்ற தேவதைகளையே மிஞ்சும் அழகு தேவதை அமர்ந்து, கால் பிடித்து விடுவதை உறக்கம் கலைந்து கண்ட இளம் துறவி மத்தியானந்தாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தீயில் சூடுபட்ட விரலை நாம் எவ்வாறு வேகமாக இழுத்துக்கொள்வோமே, அதுபோன்ற உணர்வுடன் துள்ளியெழுந்து அவளை விட்டு தள்ளி நின்றார்!

“இத பாரும்மா,என்னைப்போன்ற பற்றற்ற துறவிகளுக்கு எந்த வித உடல் சுகமும் கூடாது. நான் பல புண்ணிய சேத்திரங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து வந்ததில் இவ்விடத்தில் களைப்பாறினேன். உனது ஸ்பரிசம் பட்டதில் உடல் சுகம் கொண்டது. தொடர்ந்து நீ கை,கால் பிடித்துவிட வேண்டுமென எதிர்பார்க்கிறது. எனது நிலையில் உடல் சுகம் பெறுவதை என்னால் அனுமதிக்க முடியாது”என முடித்தார்!

காசித்தீர்த்தத்தை அவள் மேல் தெளித்து விட்டு மேலும் பேசினார்!

“துறவிகள் சுக,துக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். மூன்று நாட்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கினால் அம்மண்ணின் மீது பற்று வருமென குரு அறிவுறுத்தியபடி நான் இங்கு வந்து மூன்று நாட்கள் முடியப்போவதால் கிளம்பத்தயாராகிவிட்டேன். உன் மனம் சஞ்சலப்பட்டுள்ளது. இவ்வுலக வாழ்வின் மீது ஆசை கொண்டாலும் பேராசை கொள்ளாதே. புலனடக்கம் இல்லையேல் துன்பங்களுக்கு ஆளாக நேரும். தியானம்,யோகா கற்பதால் புலன்களை கட்டுப்படுத்த இயலும். புலனடக்கம் இல்லாதவர்களே கிரக பாதிப்புகளை வெல்ல முடியாமல் அல்லல் படுகின்றனர். “என பேசிய மத்தியானந்தாவின் மதிப்பு மிக்க ஆன்மீக அறிவுரையைக்கேட்டு தான் வந்த நோக்கத்தை மாற்றிக்கொண்டாள் நடிகை ரயி!

பிரபல நடிகையான ரயி கால்சீட் கிடைக்காமல் பட அதிபர்கள் பலர் தவமாய் காத்துக்கிடக்கின்றனர். இந்தியாவில் விரல் விட்டு எண்ணங்கூடிய தொழிலதிபர்களில் ஒருவரான சதானி தன்னிடம் வந்து “துறவியாகப்போன எனது மகனை மீட்டுக்கொடு. இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உன் அழகைக்கண்டு பெண்கள் கூட மயங்கும் போது,எனது மகனும் உனதழகில் மயங்கி,உன் சொல்லைக்கேட்டு,உன்னுடன் வருவான் என நம்புகிறேன். ஒரே மகன் ஒன்பது லட்சங்கோடி சொத்து. துறவியாக போக விடலாமா?” என மத்தியானந்தாவின் தந்தை கெஞ்சிய போது மறுக்க முடியாமல்,தனது மாய வலையில் அவரை வீழ்த்தி மீட்டுவிடலாம் என கருதி,குறிப்பிடும்படியான நான்கு படங்களில் நடிக்கப்பெறும் சம்பளத்தை பெற்றுக்கொண்டு சம்மதித்தவள்,துறவியை தேடி உரிய பாதுகாவலர்களுடன் இருக்குமிடமறிந்து இங்கே வந்தாள்!

முதன்முறையாக தன் அழகைப்பார்க்காமல் ஆன்மாவைப்பார்த்த அவரை பிடித்துப்போனது. தான் வந்த நோக்கத்தை அவரிடம் சொல்லாமல் ஆசி பெற்றுக்கிளம்பினாள் நடிகை ரயி!

‘இளமையும்,அழகும் நிலையற்றது. பதவி,பணம்,பொன்,மண் எதுவுமே ஒரு காலத்தில் நமக்கு பயனற்றுப்போய்விடும்’. எனக்கூறி உலக விசயங்களை புரிய வைத்த அவரிடம் ஆசிபெற்றதிலிருந்து மனம் சாந்தமாக,சலனமற்றிருப்பதை உணர்ந்து கொண்டாள். மனிதர்கள் மட்டுமில்லாமல் அனைத்து ஜீவராசிகளுமே அவளுக்கு ஆத்மாவாக காட்சியளித்தன. நடிப்புக்கு முழுக்கு போட்டவள், தனது அழகை மறைக்க காவி உடையணிந்து வெளியே சென்றாள்!

மத்தியானந்தாவின் தந்தையை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தவள், ஓர் அறக்கட்டளையை தொடங்கச்செய்து அவரது கைகளாலேயே அவரது பெரும் செல்வம் முழுவதையும் கல்வி,மருத்துவம்,உணவு,இருப்பிடம் என வறுமை நிலையிலிருப்போருக்கு உலகம் முழுவதும் சென்று வாழ்வளிக்கச்செய்தாள்.

அவளை இது வரை அழகியாக பார்த்த உலகம் தற்போது அன்னையாக பார்த்தது!

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)