திரைக்குப் பின்னால்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 3,181 
 

ஸ்டெல்லாவின் நீண்ட விரல்கள் என் கேசத்தைப் பூப்போல் நீவிவிடுவதை என்னால் உணர முடிகிறது…

ஏதோ ஒரு ‘டிரான்ஸ்‘ என்று சொல்வார்களே அதில் நான் என்னை கரைத்துக் கொண்டிருந்தேன்..

“மேடம்..உங்க முடி எவ்வளவு அழகு தெரியுமா…??”

ஒவ்வொரு முறையும் என் தலையை வாரிவிடும் போது அவள் இந்த வார்த்தைகளை சொல்லாமல் இருந்ததே இல்லை..

அவளுடைய மழலைத் தமிழில் அதைக் கேட்கும்போது எனக்கு வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு..

உண்மையிலையே எனக்கு நல்ல அடர்ந்த அலைஅலையான கூந்தல் தான்..இடுப்பு வரை தொங்கும்.

எனக்கு அழகு என்று சொல்லிக் கொள்ள , பெருமைப்படவைக்கும் ஒரே சாதனம்..

நான் பொதுவாகவே அழகு நிலையங்களுக்கு போவதில் அவ்வளவாக விருப்பம் காட்டுவதில்லை..

எனது தோழி ரேஷ்மா புதிதாக ஒரு அழகு நிலையம் திறக்கப்போவதாயும் நான் அவசியம் வரவேண்டும் என்று வற்புறுத்தியதாலும் ஒரு நாள் அதற்குள் நுழைந்தேன்..

நான் சென்ற சமயம் ரேஷ்மா அங்கு இல்லை..

பளிங்கு பொம்மை போல ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க பெண், ‘ ப்ளீஸ் கம் ‘ என்று இனிமையாக வரவேற்றாள்..

“ரேஷ்மா…?”

“மேடம் ஒரு பர்சனல் வேலையா வெளியே போயிருக்காங்க..நீங்க அவுங்க ஃபிரண்ட் தானே.. முதல் நாள் உங்களப் பாத்த நினைவு இருக்கு….!! என் பெயர் ஸ்டெல்லா…!!”

அவள் முடியைத் தூக்கி ஒரு சிறிய குதிரைவால் போல போட்டிருந்தாள்..ஓரிரு கேசக் கற்றைகள் அடங்காமல் முன்னால் விழுந்து அடம் பிடித்தது.. சிரிக்கும்போது கண்கள் மின்னல் கீற்றாக ஒளிர்ந்தது…

சுழல் நாற்காலியில் அமரச் செய்தாள்..

“ஃபேசியல்..?? ஹேர் கட்?” என்று அடிக்கிக் கொண்டே போனாள்..

“தலைமுடியை ட்ரிம் பண்ணி கலர் பண்ணனும்…”

முதன்முதலில் ஸ்டெல்லாவின் நீண்ட பிங்க் நெயில் பாலிஷ் அணிந்த விரல்கள் என் கேசத்தை மயில் இறகால் வருடுவது போல நீவி விட்டது..

அப்போதுதான் முதன்முறையாக, ‘ உங்க முடி எத்தனை அழகு..?? நரைமுடி கொஞ்சம் கொஞ்சம் எட்டிப் பாக்குது…ஹேர் வாஷ் பண்ணிக்கிறீங்களா…??”

“வேணாம்.ஸ்டெல்லா…!! வீட்ல நல்லா ஷாம்பூ போட்டு குளிச்சிட்டுத்தான் வந்தேன்…!!!”

“ஓக்கே…!! நார்மல் பிளாக் தானே.!!”

“எனக்கு முன்னால் சில பத்திரிகைகளைப் போட்டுவிட்டு ,

“காஃபி ஆர் டீ ?” என்றாள்..

ஒரு காஃபி குடிக்கலாமென்று தோன்றியது..

“இதோ! அஞ்சு நிமிஷம்!” என்று சிட்டாய் பறந்தாள்..

எனக்கு பக்கத்தில் ஒரு இளம்பெண்..கோழித்தூவல் மாதிரி விதவிதமான நிறங்களில் முடிக்கற்றைகள்.. நீளமும் குட்டையுமாய் ஒழுங்கின்றி தொங்கிக் கொண்டிருந்தது..

அவள் அதை அவ்வப்போது பின்னுக்குத் தள்ளிய வண்ணம் முன்னாலிருந்த கண்ணாடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..

“வாங்க..உள்ள போகலாம்..!! என்று மற்றோரு பெண் அவளை அடுத்த அறைக்கு கூட்டிக் கொண்டு போனாள்…

இவ்வளவு அழகான பெண்ணுக்கு என்ன ஒப்பனை வேண்டும்..?? இயற்கையே வாரி வாரி குடுத்திருக்கிறதே..??

முடியை ஏன் இவ்வளவு அலங்கோலம் செய்து கொள்கிறார்கள்..??

நான் அழகுநிலையங்களுக்கு செல்லாததற்கு இதுவும் ஒரு காரணம்..இத்தகைய பெண்களைப்பார்த்தால் மனது என்னவோ வேதனை செய்யும்…

‘நம்மை அழகாக வைத்துக் கொண்டால் அதுவே நமது உள்ளத்துக்கு புத்துணர்ச்சி தரும்’ என்று மனோதத்துவ நிபுணர்கள் வேறு அடிக்கடி கூறிக்கொண்டே இருக்கிறார்களே!!!

உண்மையிலையே நான் ஸ்டெல்லாவிடம் வந்து விட்டு போகும் நாட்களில் ஒரு உற்சாக மனநிலைக்கு வருவதை உணர்ந்திருக்கிறேன்..!!!

சாதாரண பெண்ணாக இருந்த என்னை ஒரு தேவதையைப் போல மாற்றி விட்டதாகத் தோன்றும்.

அந்தப் பெண்ணும் அதே மனநிலையில்தான் இருந்திருக்க வேண்டும்…

இந்த அறுபது வயதில் எதற்கு இந்த ஒப்பனைகள் என்று நினைத்திருந்த என்னை மாற்றியதே ஸ்டெல்லாவின் கனிவான புன்சிரிப்பும் , உபசரிப்பும் தான்…!!!!

இப்போதெல்லாம் தேவி பார்லரில் நுழையும்போதே கண்கள் ஸ்டெல்லாவைத் தேட ஆரம்பிக்கும்.

“ஸ்டெல்லா இன்னொரு கஸ்டமர அட்டெண்ட் பண்ணிட்டிருக்கா..ஜோஸஃபின் ஃப்ரீயா இருக்கா..வரச் சொல்லட்டுமா…??”

“வேண்டாம்மா.. நான் வெயிட் பண்றேன்..”

ஸ்டெல்லாவுக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராகத்தான் வந்திருந்தேன்..

எனக்கு ஒரு சுவாரசியமான சம்பவம் நினைவுக்கு வந்தது..

***

நாலைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு அலுவலக மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக தென்னாப்ரிக்க நாடான ஜோகன்னஸ்பர்க் நகரில் பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது..

என்னுடைய தோழி வற்பறுத்தியதால் அங்குள்ள ஒரு அழகு நிலையத்திற்கு சென்றேன்..

பொதுவாகவே ஆப்பிரிக்க இனத்தவர் தங்களை அழகு படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள்….

நல்ல அழுத்தமான மஞ்சள், நீலம்,பச்சை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் உடைகளை விரும்பி அணிவார்கள்.. அதில் அவர்கள் நிறம் மிகுந்த எடுப்பாகத் தெரியும்….

அவர்களுடைய சுருண்ட அடர்த்தியான கேசம் ஒரு ஸ்பிரிங் போல அடங்கியிருக்கும்..

அவர்களுக்கு அதை நினைத்து கர்வமும் அதேசமயம் ஒரு எரிச்சலும் உண்டாவதை கவனித்திருக்கிறேன்..

“உங்களுக்கு இருப்பது போல நீண்ட, சீரான முடியிருந்தால் விதவிதமான அலங்காரங்கள் செய்து கொள்ளலாமே!!” என்று ஒரு முறை ஆப்பிரிக்க பெண்ணொருத்தி அங்கலாய்த்து கொண்டாள்..

சிலர் ‘ஹெட் கியர்’ எனும் தலைக்கட்டை அணிவதும் உண்டு..

ஆனாலும் அந்த சுருண்ட முடியை நன்றாக பிரித்து சின்ன சின்ன பின்னலாக்கி அதில் மணிகள் கோர்த்து மிகவும் நேர்த்தியாக அலங்காரம் செய்து கொள்வார்கள்….

இரண்டு மாதங்கள் கூட கலையாமல் இருக்கும்.இதற்காகவே தனி அழகு நிலையங்கள் செயல்படுகின்றன..

சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆனாலும் பொறுமையாகக் காத்திருந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் பெண்களை நான் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்.. அதுவும் சிறுமிகள் இந்த அலங்காரத்தில் மிகவும் அழகாகத் தெரிவார்கள்…

நான் சென்ற பார்லர் இந்த வகையைச் சேர்ந்ததல்ல.வெளி நாட்டு பயணிகளைக் கவரும் வண்ணம் மிக நாகரீகமாக அமைக்கப்பட்ட ஒரு மஸாஜ் சென்டர்..

உள்ளே நுழையும்போதே ஒரு தியான நிலையத்துக்குள் நுழைவது போன்ற பரவசம்..

புத்த மத தியான இசை ஒலி நாடாாவில் மெலிதாக இசைத்துக் கொண்டிருந்தது….

ஊசி விழுந்தாலும் கேட்காத அமைதி…

வெள்ளையுடையில் வெண்முத்துமாலையுடன், முத்தைப் பழிக்கும் பற்களைக் காட்டி அழகிய புன்சிரிப்பைச் சிந்தியபடி அவள் என் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்..

“குட்மார்னிங்… ஐ யம் பியாட்ரிஸ்” என்று அறிமுகப்படுத்தினர் கொண்டாள்…

நிறைய அறைகள் தடுப்புப் பலகையால் பிரிக்கப்பட்டிருந்தது..

பெரிய வெண்ணிற படுக்கை விரிப்புகளுடன் விசாலமான கட்டில்கள்…

எனக்கு ஒரு இளநீல நிற அங்கியைக் கொடுத்து அணிந்து வரச் சொன்னாள்..

அடுத்த ஒரு மணிநேரமும் என்னுடைய கேசம் அவள் கைகளில்….ஒரு குழந்தையைப் போல…

அடிக்கடி” ஆர் யூ கம்ஃபர்டபிள்? வலித்தால் சொல்லுங்கள்..!

என்று கூறியபடியே அவள் மஸாஜ் செய்தது இதுவரை வாழ்நாளில் நான் அனுபவித்திராத ஒரு மோனநிலைக்கு என்னை அழைத்துச் சென்றது..

அறையிலிருந்து வெளியே வந்தபோது நான் பதினைந்து வயது பெண்ணின் உற்சாகத்தில் இருந்தேன்..

வெளியில் போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமரப்போனவளை ஒரு இனிமையான ஆண் குரல் கவனத்தை திருப்பியது..

இனிமையான ஆண் குரல் என்றேன் அல்லவா…?? ஆம்… பெண்ணின் குரலில் உள்ள அதே கனிவு, பரிவு…!!

ஒரு இருபது வயது மதிக்கத்தக்க ஆப்ரிக்க இளைஞன்..

“மேடம்.. விரல் நகங்களை அழகு படுத்திக் கொள்ள விருப்பமா ??” என்று கேட்டான்..

கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை..?? இந்த இளைஞன் இங்கு எப்படி?

அவனது புன்முறுவல் பூத்த முகம் என்னை அறியாமல் சரி என்று சொல்ல வைத்தது..

“இங்கே அமருங்கள்…!!! எனக்கு முன்னால் இருந்த மேசையில் பத்து விரல்களையும் பிரித்து வைக்கும்படி வடிவமைத்த நீண்ட பிளாஸ்டிக் தடுப்பில் எனது விரல்களைப் பிடித்து, பிரித்து மென்மையாக வைத்தான்..

ஒவ்வோரு விரலையும் பஞ்சால் சுத்தம் செய்து பாலீஷ் போட்டு முடியும் வரை அவனும் நானும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம பந்தத்தில் இணைக்கப்பட்டது போல உணர்ந்தோம்..

இந்தியாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தான்..

சிறுவயது முதலே அழகுக் கலை நிபுணனாக வரவேண்டும் என்று கனவு கண்டதாயும் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாயும் கூறினான்..

‘கூறினாள்’ என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும்…

அவனுடைய குடும்பத்தார் அவனை நன்றாக புரிந்து கொண்டிருப்பதாயும், தான் பார்க்கும் வேலை அவர்களுக்கும் பெருமையாகவே இருப்பதாயும் சொன்னான்…

எல்லா பெற்றோர்களும் இதுபோல குழந்தைகளின் மனதை புரிந்து கொண்டுவிட்டால்..?

எனக்கு வீட்டுக்குப் போகவே மனமில்லை..அவனை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது போலத் தோன்றியது….

***

சிறிது நாட்களாக அழகு நிலையம் செல்ல நேரமே கிடைக்கவில்லை..

வரிசையாக விருந்தினர்கள்..!!!!

அம்மா கீழே விழுந்து இடுப்பு எலும்பை முறித்துக் கொண்டு படுத்த படுக்கையானதால் வேலை நெட்டி முறித்தது..

ஆறுமாத இடைவெளிக்கப்புறம் தேவி ப்யூட்டி பார்லரில் நுழைந்தேன்..

அதிசயமாய் ரேஷ்மா உட்கார்ந்திருந்தாள்…

கண்களை சுற்றும் முற்றும் சுழல விட்டபடி,

“ஹலோ.. ரேஷ்மா..” என்றேன்..

ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தேன்..

“என்ன..?? யாமினி…!! ? ஸ்டெல்லாவத்தானே தேடற?”

“ஆமா.. ரேஷ்மா…உள்ள இருக்காளா..?”

“அவ ஊருக்கு போய் பதினைந்து நாளாச்சு…!!”

“ஊருக்கா….?”

“ஆமாம்..மணிலா போய்ட்டா..அவளோட புருஷன் இறந்துட்டான்..!!

“என்ன ரேஷ்மா…அவளுக்கு கல்யாணம் ஆயிடிச்சா…??”

“கல்யாணம் ஆகி ஒண்ணில்ல..மூணு குழந்தைங்க. பத்து, எட்டு, இரண்டு வயசில… மூணும் பொண்ணுங்க…!!”

என்னால் நம்பவே முடியவில்லை..

இவ்வளவு நாட்கள் பழகியும் அவள் தனது பர்சனல் விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதில்லை…

எப்போதுமே சிரித்துக் கொண்டும், ஜோக்கடித்துக்கொண்டும் இருக்கும் பெண்ணுக்கு என்ன கவலை இருக்கமுடியுமென்று அலட்சியமாய் இருந்த என்மேல் எனக்கு முதல்முறையாக கோபம் வந்தது..

ஸ்டெல்லா பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள்..

அவளுடைய அம்மா ஒரு இரவு விடுதியில் நடனம் ஆடி தனது ஆறு குழந்தைகளையும் வளர்த்தாக வேண்டிய நிர்பந்தம்..

அவளது தொழிலில் மானத்துடன் வாழ்வது எத்தனை பெரிய சவாலாக இருந்தது என்பதை பதிமூன்று வயது ஸ்டெல்லா புரிந்து கொண்டு விட்டாள்..

கண்ட நேரங்களில் வந்து கதவைத் தட்டும் ஆண்களின் பசிக்கு சிலசமயங்களில் அவள் இரையாக வேண்டியிருந்தது..

இரண்டு முறை கருக்கலைப்பும் செய்தவள், ஒரு நாள் குடும்பத்தை உதறிவிட்டு வெளியேறினாள்..

ஒரு சிநேகிதியுடன் தங்கிக் கொண்டு ஒரு உணவு விடுதியில் பாத்திரங்கள் கழுவும் வேலே செயது கொண்டே பள்ளிப்படிப்பை முடித்து விட்டாள்..

அப்போது அவளுக்கு பழக்கமானான் நோயல்….!!

அவன் ஒரு அழகுக்கலை நிறுவனத்தில் முடி திருத்துபவனாய் வேலை பார்த்தான்..

ஆரம்பத்தில் உதவியாளராய்ச் சேர்ந்த ஸ்டெல்லா தனது திறமையால் படிப்படியாக முன்னேறி அங்கு ஒரு நிரந்தர அழகுக் கலை நிபுணராக பணிபுரிய ஆரம்பித்தாள்…

நோயலுடன் இரண்டு வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே ஸ்டேல்லா வாழ்வின் வசந்த காலம்..

அதுவும் வறண்ட பாலைவனத்தில் தெரிந்த கானல் நீர் என்பதை அவள் விரைவிலேயே புரிந்து கொண்டு விட்டாள்..

நோயல் போதைப் பொருளுக்கு அடிமையானவன் என்பதை மற்றவர்கள் சொன்னபோது அப்போதிருந்த மனநிலையில் அவளுக்கு உறைக்கவேயில்லை.

வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள்.. இருவரின் ஊதியமும் பிரவுன் சுகராகவும் , ஹெராயினாகவும் கரைந்து போன போதும் , ஆசை ஆசையாய் வளர்க்க எண்ணிய குழந்தைகளின் வாழ்க்கை தெருவில் வந்ததும் ஸ்டெல்லாவை ஒரு தீர்மானம் எடுக்க வைத்தது..

இந்தியாவின் அழகு நிலையங்கள் வெளிநாட்டு அழகுக்கலை நிபுணர்களை இருகரம் நீட்டி வரவேற்ற காலம்..

மூன்று குழந்தைகளையும் நோயலின் தாயாரின் மேற்பார்வையில் விட்டுவிட்டு மும்பைக்கு விமானம் ஏறினாள்..

ஒரு வருடம் அவள் உழைப்பில் அந்த அழகு நிலையத்தின் பெயர் ஊருக்கே தெரிந்ததும்.
மொத்தமாக ஊதியம் தருவதாக கூறிய உரிமையாளர் கடைசியில் கையில் தந்ததென்னவோ ஐயாயிரம் ரூபாயும் மணிலா திரும்ப விமான டிக்கெட்டும்..

இடிந்து போனாள் ஸ்டெல்லா.. அப்போது கை குடுத்து தூக்கி விட்டவள் தான் ரேஷ்மா..

ஒரு மாதம் ஓடிவிட்டது.. எனக்கு ஸ்டெல்லா இல்லாத அழகு நிலையத்திற்கு போவதை நினைத்துக்கூட பார்க்க பிடிக்கவில்லை..

ரேஷ்மா காட்டிய ஒரு புகைப்படம் என் நெஞ்சத்தை அரித்து கொண்டிருந்தது..

அதில் ஸ்டெல்லாவின் மூன்று குழந்தைகளும் கசங்கிய , அழுக்குப் படிந்த உடையுடன் ,வாரப்படாத கலைந்த தலைமுடியுடன்…!!!

தினம் இரவு படுக்கையில் கண்ணை மூடினால் அந்த மூன்று பிஞ்சு முகங்கள்..!!!

ஒரு முடி நீட்டிக் கொண்டிருந்தாலும் கூட ஸ்டெல்லா என்னை விடமாட்டாள்..

“போதும்…!ஸ்டெல்லா..விடு…!!. நல்லாத்தானே இருக்கு…!!”

“இல்ல.. மேடம்..எனக்கு திருப்த்தியா இல்ல..நீங்க இந்த சலூன விட்டுப் போகும்போது” யாரு முடி வெட்டினான்னு பாக்குறவுங்க ஆச்சரியமா கேட்கணும்…”

இப்படி பார்த்து பார்த்து என்னை அழகு படுத்தும் ஸ்டெல்லாவின் குழந்தைகள் ….?

***

ஒரு மாதம் போயிருக்கும்…

ரேஷ்மா தான் ஃபோனில்..

“யாமினி.. உன் ஸ்டெல்லா வந்தாச்சு.. வந்ததும் உன்னப் பத்திதான் விசாரிச்சா…”

“இரண்டு நாள்ல வரேன் ரேஷ்மா..!!”

ஸ்டெல்லா அப்படியே என்னைக் கட்டிக் கொண்டாள்.. என் கையில் ஒரு அன்பளிப்பைத் திணித்தாள்..

“உங்களுக்காக கொண்டுவந்திருக்கேன் மேடம்…!!! என்னோட ட்ரீம் ஹவுஸ்…”

ஒரு அழகிய மர வீடு.. அதில் அப்பா, அம்மா, பெண் மற்றும் ஒரு நாய்க்குட்டி…!!

இருவர் கண்ணிலிருந்தும் சொல்லி வைத்தது மாதிரி இரண்டு சொட்டு கண்ணீர்..ஒரே நேரத்தில்….!!!

“ஸ்டெல்லா.. கேள்விப்பட்டேன் ரொம்ப சாரி…!!”

“நோ…நோ.. மேடம்.. இப்போ நான் மிகவும் மகிழ்ச்சியா இருக்கேன்.சிலர் நமது வாழ்க்கையிலிருந்து விலகுவது துக்கத்தை விட அதிக நிம்மதியை ஏற்படுத்துவது ஒரு கசப்பான உண்மை..

நான் இப்போ ரொம்பவே சுதந்திரமா இருப்பதை மறுக்க முடியாது.. இனிமேல் எனக்கும் என் குழந்தைகளுக்கும் மட்டுமான உலகம்… யாருக்கும் அதில் தலையிட உரிமையில்லை..

***

நாம் அன்றாடம் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம்..

‘ஆகா..!! இருந்தால் இவர்களைப் போல வாழவேண்டும்… வசீகரிக்கும் புன்சிரிப்புடன்…மிகவும் அழகாக உடை உடுத்தி…

செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சியை வாரி இறைக்கும் இவர்களில் பலர் திரைக்கு முன்னால் வேடமணிந்து நம்மை மகிழ்விக்க பிறந்தவர்கள்..!

திரைக்குப் பின்னால் இவர்களுக்கு மற்றோரு வேடம் இருக்கிறது..வேடமில்லை..அதுதான் நிஜம்..

அதை அவர்கள் எல்லோருக்கும் காட்ட வேண்டிய கட்டாயமில்லை..

ஸ்டெல்லாவாக முன்வந்து என்றைக்கு அவள் வாழ்வின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறாளோ அதுவரை நான் காத்திருப்பேன்..

அதுதான் நியாயம்..அதுதான் நான் அவளுக்கு தரும் மரியாதை…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *