கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 1,646 
 

அந்த நண்பனின் மரணம் இன்று வரை என்னை பாதிக்கிறது.அவன் மரணம் அடைந்து ஒரு நாற்பது ஆண்டுகள் இருக்கலாம்.நானும் எனது கடைசி காலத்தில் வாழ்கிறேன். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ உறவும் நட்பும் மரணித்துவிட்டார்கள்.ஆனால் யாருடைய இறப்பும் எனக்கு தினசரி மனதில் வந்துபோவதில்லை.என் பெற்றோர்,கூடப்பிறந்தவர்கள் மரணங்கள் கூட எப்போதாவது வந்துபோகும்.அவர்கள் சம்மந்தப்பட்ட விடயங்கள் வரும்போது அவர்களை நினைத்து வருந்துவேன்.

ஆனால் இந்த நண்பனின் மரணம் தினம் தினம் வந்து ஒரு ஐந்து நிமிடமாவது வேலைகளுக்கிடையில்,சாப்பிடும்போது,தூங்கமுயலும் போது, பிரயாணத்தின் போது, முக்கியமாக யாருடைய இறப்புக்காவது போகும்போது, என் கண் முன்னால் வந்து என்னை பதட்டப்பட வைத்துவிட்டு போகும்..

எனக்கு மரணத்தை பற்றிய பயம் இல்லை. ஆனால் அந்த நண்பனின் மரணம் தினம் என்னை கொஞ்சநேரம் பயமுறுத்திவிட்டு செல்லும்..

என் நெருங்கிய கூட்டாளி டும்பு தான். எல்லோரும் மறந்துவிட்ட விஷயம் அவன் இயற் பெயர்தான். டும்பு என்ற பெயர் எப்படி வந்தது என்று யாருக்கும் ஞாபகம் இல்லை.அவனை அந்த பெயரில் அழைத்ததில் அவனுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. யாரோடும் அவன் அதற்காக சண்டை போட்டதில்லை.. முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தோம்.. அரபி பள்ளியிலும் ஒன்றாக ஓதினோம். டும்புவின் வாப்பாவுக்கு கொழும்பில் வியாபாரம். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார். ஊர்வரும்காலங்களில் டும்பு வெளிநாட்டு சாக்லேட்,மிட்டாய் கொண்டுவருவான். அது ஒரு இனிமையான காலமாக இருக்கும். அப்போது நைலான் துணி அறிமுகமான காலம். டும்புக்கு அவன் வாப்பா நைலான் சட்டை கொண்டுவந்திருந்தார். அந்த சட்டை ஜோப்பில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நோட்டு வெளியே தெரிந்தது. வாட்டர் பூச்சி என்று தண்ணீரில் இட்டு புத்தகத்தில் ஒட்டக்கூடிய அழகிய படங்கள் அவன் வாப்பா கொண்டுவந்திருந்தார். சாக்லேட், மிட்டாய், வாட்டர் பூச்சி ஆகியவை எனக்கு மட்டுமே தருவான்.. நண்பர்களுக்கு இதனால் எங்கள் மேல் கோபமும் பொறாமையும் கொண்டு, எங்களை பற்றிய பிராதுகள் ஆசிரியரிடத்தும், ஆலிம்ஷாவிடமும் சொல்வார்கள். “சார் ரெண்டுபேரும் பேசிக்கிட்டே இருக்காங்க”, “ஆலிம்ஷா ஓதாமல் சாப்புட்டுக்குட்டு இருக்குராங்க”ன்னு பிராதுகள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சிலநேரங்களில் ஆசிரியர்களும் ஆலிம்ஷாக்களும் எங்களை இடத்தை மாற்றி பிரித்துவைப்பதுமுண்டு. ஆனால் மற்றநேரங்களில் நாங்’கள் இணைபிரியாது இருப்போம். எனக்கு வாழ்கையில் முதல் கூட்டாளி என்றால் டும்புதான்.

அந்த நட்பு ஆரம்பப்பள்ளியிலிருந்து உயர்நிலை பள்ளியிலும் தொடர்ந்தது. உயர்நிலைப்பள்ளி மேலத்தெருவில், ஊரின் மற்றொரு ஓரத்தில் இருந்தது.சுமார் இரண்டு மைல் தொலைவில் இருந்தது.நடந்துதான் போவோம்..வாகன வசதிகள் இல்லாத காலம். பகலைக்கு உணவு இடைவேளையில் அந்த ஒரு மணி இடைவெளியில்,வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு வேகவேகமாக திரும்பி பள்ளிக்கு போகவேண்டும். டும்பு வரும்வழியில் இருக்கும் மீன் கடைத்தெருவில் மீன்வாங்குவான். கொக்குபிள்ளை காக்கா கடையில்தான் அதிகம் வாங்குவான். காரணம் விலைகுறைவான சிறிய மீண்கள் அவரிடம்தான் இருக்கும்,

“காக்கா அந்த பெரிய கூத்துக்கு எவ்வளவு ? என்று பேரம் ஆரம்பிக்கும், டும்புவின் பெரியகுடும்பத்திற்கு அந்த பெரிய கூறு போதுமானதுதான்.அந்த வயதில் குடும்பத்திற்கு தேவையான மீனின் அளவை தீர்மானிப்பது அவன்தான்.உம்மா கொடுத்துவிட்ட ஒரு ரூபாயில் எப்படியும் அரையனா கமிசன் வைத்துவிடுவான். அதில் கடலை மிட்டாய்,குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவான்..இதுபோன்ற பழக்கம்தான் அவனின் வாழ்க்கையையே மாற்றிபோட்டது.

கொக்குபிள்ளை காக்கா ‘அது ஒன்னேகாருவா,சின்னகூத்தவேங்கிட்டுபோ முக்கா ரூவாதே,. வாங்கிட்டு போ” என்பார்.சின்னகூறு பத்தாது பெரியகூரே முக்காருவாக்கி தாங்க காக்க சீதேவி என்பான்.சீதேவி என்ற வார்த்தை அவரை சிறிது கரைத்திருக்கும்.மேலும் அவன் தினமும் அவரிடமே மீன் வாங்கும் வழக்கம் இருப்பதால், அவனுக்கு சலுகை உண்டு.

சரி ஒரு ருவா குடுத்துட்டு வேங்கிட்டுபோ என்பார்.

உம்மா திட்டுவாங்க. முக்காருவாக்கி தாங்க என்பான்.

சிறிதுநேரம் பதில் சொல்லாமல் வேறு வியாபாரத்தை கவணிப்பார். டும்புக்கு நேரம் ஓடிக்கொண்டிருக்கும். உம்மா வீட்டில் மீனாக்க எல்லா கரச்சி வச்சி மீனுக்கு காத்திக்கிட்டிருபாங்க.வேகமா போவனும்.மீனாக்கி உண்டுட்டு ஸ்கூலுக்கு போவனும். ரெண்டுமணிக்கு ஸ்கூலிலே இல்லேனா வெள்ளகந்தசாமி சாறு கிட்டே கம்பாலே அடிகெடெக்கும்..அதுக்கு முன்னாடி மணியடிக்கிரதுக்குள்ள போவனும். இந்த பதைபதைப்பில்

“ஸ்கூலுக்கு போவணு காக்கா”ன்னு கெஞ்சிக்கிட்டிருப்பான். அவன் கெஞ்சலுக்கு இறங்கி அரையணா காசை அவனிடம்தூக்கி எறிந்து,

“சரி சரி ஒருரூவாய தா” என்பார்.

கொக்குபிள்ளை காக்கா உட்கார்திருப்பது,ஒரு குட்டியானை உட்கார்ந்திருப்பதுபோல் இருக்கும். பெண்களின் மார்பு போன்ற அவரின் சட்டை போடாத உடம்பு,சில குறும்புக்காரர்களின் கேலிக்கு ஆளாகும்.

காக்கா “அந்த மேக்கூத்துக்கு என்னவெல” என்று இரட்டை அர்த்தத்தில் கேட்பார்கள். காக்காவுக்கு கோபம்வந்தால் கெட்டவார்தைக்கு பஞ்சமிருக்காது. கேலியை புரிந்துகொண்டு கெட்டவார்தையோடு “போடா போயி ஒங்க ஆத்தாட்ட கேளு”ம்பார்.

அவனுக்கு தேவை அந்த அரையணாதான். அதுகிடைத்த மகிழ்ச்சியில் ஒரு ருவாயை கொடுத்துட்டு பெரிய மீண்கூத்தை வாங்கிட்டு வருவான். நான் இதற்கிடையில் அவசரப்படுத்திக்கொண்டிருப்பேன்..

நான் “ஏண்டா கமிசன் வக்கிறியே ஒங்கும்மாக்கு தெரிஞ்சா அடிக்கமாட்டாங்க ?”என்றால்

“போடா அதுலா தெரியாது, அதுலேதே கிக்கே” என்பான்.

வீட்டில் உம்மா வாசலில் எனக்காக,பார்த்துக்கொண்டிருப்பார். ஏண்டா இவ்வளவு நேரம்,சீக்கிரம் உண்டுட்டு போடா.என்னிடமிருந்து பதில் வராது. டும்புவோடு மீன்கடைக்கு போனது உம்மாக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. அவசரம் அவசரமாக அள்ளிப்போட்டுட்டு ஸ்கூலுக்கு பறப்பேன். இதற்கிடையில் உம்மாவின் ஆவலாதிகள் ஏதும் காதில் ஏறாது. “டும்பு பயலோட சேராதன்னா கேக்ராப்புல இல்லே..அவனோட சேந்தா வீனாத்த போவா” என்பார். மீதியிருக்கும் சில நிமிசத்துல ஸ்கூலுக்கு போயாகனும். தெருமுனையில் உம்மாவின் உபதேசத்தையும் மீறி டும்புக்காக காத்துக்கிட்டிருப்பேன்.

டும்புவின் உம்மா ரெடியாக இருக்கும் கரைசலில் மீனை போட்டு ஆக்கிமுடிக்க ஐந்து நிமிடம்தான்.அவனும் அவசரமாக அள்ளிப்போடுவான். தெருமுனையில் நான் காத்துக்கொண்டிருப்பேன். வழக்கம்போல்” நேரமாச்சி வா மணி அடிக்கிரதுக்குள்ள போயிருவம்” என்று ஓட்டமும் நடையுமாக பள்ளியை நெருங்கும்போது மணி சத்தம் கேட்கும். சிலநாட்கள் இந்த பந்தயம் தோற்றுவிடும். அப்போது இருவருக்கும் வெள்ளகந்தசாமி சாரின் பிரம்புக்கு வேலை வந்துவிடும். இந்த விஷயம்எங்க உம்மாவின் காதுக்குபோக அதிக நாள் செல்லவில்லை. உம்மாவும் மாற்று ஏற்பாடு செய்தார். மேலத்தேருவிலே இருக்கும் ஒன்றுவிட்ட கண்ணும்மா(பாட்டி) வீட்டில் பகல் சோறு சாப்பிட ஏற்பாடானது. புதுவீட்டும்மா என்று அழைக்கப்பட்ட கண்ணும்மா அந்த வயதிலும் தனியாகத்தான் அந்த வீட்டில் இருந்தார். அவருடைய மகனும் மற்றவர்களும் குடும்பங்களோடு மெட்ராசில் இருந்தார்கள்.நல்லநாள், பெரியநாள் விடுமுறை காலங்களில் ஊர்வருவார்கள். மகன் மெட்ராசில் பிரபலமான தொழிலதிபர். துணைக்கு பக்கத்திலிருக்கும் பன்னாட்டார் தெருவிலிருந்து இன்னாசி தினம் வந்து வீட்டுவேலைகள் செய்துகொடுத்துவிட்டு போவாள். ஆனாலும் அடுப்பங்கரையில் ஆக்குவதெல்லாம் புதுவீட்டும்மாதான்.

உணவு இடைவேளையில் இப்போது நேரத்தை துரத்தும் வேலை இல்லை என்றாலும், வேறு சிக்கல் வந்தது. புதுவீட்டும்மா வீட்டுக்கு வந்ததும் கேட்கும் முதல்கேள்வி ஏண்டா தொழுதியா என்பதுதான். இல்லை என்றதும் போய் முதலில் பள்ளிவாசலில் தொழுதுட்டுத்த வருணும் என்று அனுப்புவார். பின்னர் பள்ளிவிட்டு நேராக பக்கத்தில் இருந்த புதுப்பள்ளியில்போய் தொழுதுவிட்டு சாப்பிட வருவேன். புதுவீட்டும்மா ஒரு பூனை வளர்ப்பார். அந்த பூனைமேல் எனக்கு பயம். சாப்பிடும் போது பக்கத்தில் வந்துவிடும். பயத்தோடு அருவருப்பாகவும் இருக்கும். அது சோறு சாப்பிடாது மீண் முள்ளை மட்டும் சாப்பிடும்.சாப்பிட்டுபோடும் முள்ளை சாப்பிடும்போது அதன் தொண்டையில் சிலவேளை சிக்கின்கொண்டு அதை திரும்ப வெளியில் கக்கி சாப்பிடும். பயத்தோடு அருவருப்பாகவும் இருக்கும். புதுவீட்டும்மா கேட்கும் மற்றோருகேள்வி ஏண்டா தொப்பி போடல என்பது. தொப்பிதான் முஸ்லிமுக்கு அடையாளம் என்பார். அவருக்காக புத்தகப்பையில் ஒரு கருப்பு ஜின்னா தொப்பி எப்போதும் இருக்கும். புதுப்பள்ளியில் தொழும்போதும்,புதுவீட்டும்மா வீட்டுக்கு போகும்போதும், மட்டும் அது தலையில் ஏறும். அநேகமாக ஊரில் எல்லோருமே தொப்பிதான் போட்டிருப்பார்கள்’ தொப்பியை பார்த்தே அவரின் அந்தஸ்து மற்றும் விபரங்கள் விளங்கும். பொதுவாக கொழும்பு சபராளிகள் துருக்கி தொப்பி அணிந்திருப்பார்கள். சிகப்பு கலரில் நீண்ட சைசில் கருப்பு பின் குஞ்சத்துடன் இருக்கும். இந்தியாவில் இருப்பவர்கள் ஜின்னா தொப்பி என்று சொல்லப்படும் பர் தொப்பிகள் அணிந்திருப்பார்கள். சிங்கப்பூர், மலேயா, சபராளிகள் நீலநிற வெல்வெட் தொப்பி அணிந்திருப்பார்கள்.

ஒருநாள் பகல் சாப்பாட்டிற்கு புதுப்பள்ளியில் தொழுதுவிட்டு,புதுவீட்டும்மா வீட்டிற்கு வரும்போது,,டும்பு வீட்டிற்கு சாப்பிடபோகாமல் எதிரே வந்துகொண்டிருந்தான். “ஏன்டா ஊட்டுக்குபோவலே’” என்றதற்கு மீன்காசு தோழஞ்சிருச்சி” ஊட்டுக்குபோனா உம்மா அடிப்பாங்க “ என்றான்.சரி வா என்று இருவரும் புதுஊட்டும்மா வீட்டுற்கு போனோம். புதுவீடும்மா இருவரையும் பார்த்ததும் “இது யாரு” என்று கேட்டார். “ என் தோழம,ஊட்டுக்கு சாப்புடபோவ லேட்டாபோச்சி” என்றேன்.

“நீ யாரு மவன்டா?” என்றார் புதுஊட்டும்மா.”மம்மதுபாத்துமா மவன் ” என்றான் டும்பு. “நீ தெனமு கெழக்குதெருக்கு போய்தே சாப்டுட்டு வரியா “என்றார்.டும்பு தலையை ஆட்டினான். “தெனமு நீயு எங்கூட்ல சாப்புடு. நீ வேற யாருமில்ல,எங்க பெரிய கண்ணுவாப்பா வீட்டு பேரன்த உங்கம்மாவும் தூரத்து சொந்தக்காரிதே” என்றார் புதுஊட்டும்மா.”

ஏன்டா தொப்பி போடலே,தொப்பிதே இஸ்லாத்துக்கு சங்கை” என்றார் அவனிடம் டும்புவும் “நாளைக்கி போட்டுக்குட்டு வர்றே “ என்றான்.பின்னர் இருவரும் புதுவீட்டும்மா வீட்டிலேயே பகல் சாப்பாடு சாப்பிட்டோம். சொந்தக்காரர்கள் என்பதால் டும்புவின் உம்மாவும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

இணைபிரியாத எங்கள், பிரியவேண்டிய காலங்களும் வந்தது. செகண்ட் பார்மிலிருந்து(ஏழாம் வகுப்பு) ‘தேர்டு’ பார்முக்கு(எட்டாம் வகுப்பு )போனபோது, தந்தையின் நிர்பந்தம் காரணமாக,நான் திருச்சிக்கு போகவேண்டியதாயிற்று.

அப்போது பிரிந்ததுதான்.விடுமுறைகளில் ஊர்வரும்போது பார்த்துக்கொண்டு எங்கள் நட்பு தொடரும்.அப்போதுதான் அவனுக்கிருந்த அந்த குணம் எனக்கு தெரிந்தது.மற்ற நண்பர்கள் சொன்னபோது நான் நம்பவே இல்லை.நான் ஒருமுறை அவனிடமே கேட்டேன்.

ஏண்டா நீ வீடுகளுக்கு வெளியே இருக்குற வாசல் பல்புகளை கலாவங்குரியாமே என்றேன்.அவன் சிரித்துக்கொண்டே.இல்லடா சும்மா கிக்டா என்றான்.நீ இப்படி நடந்துக்குட்டா இனிமே உன்கூட நான் பேச மாட்டேன் என்றேன்.இல்லடா இனிமே செய்யமாட்டேன் என்றான்.

ஆனால் அவன் விட்டதாக தெரியவில்லை. அடுத்த விடுமுறைகளில் வந்தபோது,மற்றவர்கள்,அவன் இன்னும் பல்பு திருடத்தான் செய்கிறான் என்று சொன்னார்கள்.

அவனிடம் கேட்டபோது, இப்போதுல்லாம் இல்லடா என்றான். அவன் பொய் சொல்கிறான் என்பது அடுத்தமுறை வந்தபோது தெரிந்தது.

அவன் பெரியதனக்காரர் வீட்டில் நகையை திருடிவிட்டான் என்று டும்புவை போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டதாக சொன்னார்கள்.

கேட்டு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் ஊரில் அப்போது ஒரு வாரம்தான் இருந்தேன்.நான் போகும் வரை அவனை விடவில்லை.

அடுத்தமுறை ஒரு ஆறுமாதம் கழித்து வந்தபோது கேள்விப்பட்டது இன்னும் அதிர்ச்சியாக இஐன்தது.

அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவிப்பதாக சொன்னார்கள். மேலும் அவன் இன்னொரு பெரிய சேதத்தையும்,அடிதாங்க முடியாமல் செய்ததுதான் அவன் வாழ்கையை தலை கீழாக புரட்டிப்போட்டது.

போலீசின் அடி தாங்க முடியாமல் குற்றத்தை ஒப்புக்கொண்டு,திருடிய நகையை உம்மாவிடம்தான் கொடுத்தேன் என்று சொல்லி இருக்கிறான்.

போலீஸ் அவன் உம்மாவை ஸ்டேசனுக்கு அழைத்துப்போய், அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். ஒரு நல்ல குடும்பத்துப்பெண்ணை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டுபோய் அடித்தது,ஜமாத்தாருக்கு தெரிந்து,தெருவே திரண்டு போய் அவன் தாயை மீட்டு வந்தார்கள்.

அவன் தாய் இனி அவன் எனக்கு பிள்ளை இல்லை.இந்த அவமானத்தை என்னைக்கும் நான் மன்னிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.அவன் கூடப்பிறந்த சகோதரர்களும்,சகோதரிகளும்கூட இனி அவனுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தலை முழிகிவிட்டார்கள்.

அடுத்த முறை சில ஆண்டுகளுக்கு பின், கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஊர்வந்தபோதுதான் அவனை திரும்ப பார்த்தேன். இப்போது தெருவில் இருந்த வாலிபர் சங்கத்தை கூட்டிக்கொண்டிருந்தான்.

என்னடா என்றவுடன் அழுதுகொண்டே ஓடிவந்து கட்டிப்பிடித்தான்.கொஞ்சநேரம் பேச்சு வராமல் ஓ என ஊளை சத்தத்தோடுஅழுதுகொண்டு கட்டிக்கொண்டான்.

அவனை ஆறுதல் படுத்தி அமைதியான பின் என்னடா நடந்தது என்றேன்.

அவனால் சரியாக பேச முடியவில்லை. குளரிக்குளரி பேசினான்.

எனக்கு சரியாக விளங்கவில்லை. முற்றிலும் தன்னிலைக்கு அவன் வந்த பிறகு என்னடா நடந்தது என்றேன்.

என்ன நீ நம்புறியா? என்றான். அவன் பேசியது கஷ்டப்பட்டுதான் விளங்கியது.

நான் நம்புறேண்டா என்றேன்.

சத்தியமா நான் திருடலேடா. சின்ன வயசுல நான் வீட்டு வாசல்ல இருக்குற பல்பை திருடி வித்து தீம்பண்டம் வேங்கி திம்பேண்டா.அதுகூட நீ சொன்னப்புறம் அதை உட்டுட்டேண்டா.திருடன்னு பேர் வாங்கிட்டேன்.இந்த நகைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லட.நகை கானாபோன அன்னக்கி.அவங்க வீட்டுக்கு நான் உம்மா குடுத்துவுட்ட இடியப்பத்ததான் குடுக்கப்போனேன்.அவங்க போலீஸ்ல நான்தான் வந்தேன்.ஏற்கனவே திருட்டுப்பயன்னு சொல்லிட்டாங்க.என்ன கூட்டிக்கிட்டு போய் அடி அடின்னு அடிச்சி,யாருட்ட குடுத்தே சொல்லு.இல்லாட்டா தலகீழா கட்டி தோல உரிச்சிருவோம்னாங்க.எனக்கு வேற வழி தெரியாம உம்மாட்ட குடுத்தேன்னு சொல்லிட்டேன்.எங்க உம்மாவ என் கண்முன்னாலே போட்டு அடிச்சாங்க.என்று தொடர்ந்து பேசமுடியாமல் வினோதமான குரலில் அழுதான்.

அதுக்கு பொறவு என்ன வீட்டுக்குள்ள எடுக்கல்ல.அவங்க செஞ்சது நாயம் தான்.நான் திருடலையே தவிர,என் தாய மாட்டிவிட்டது பெரிய பாவம்..நா செத்தே போயிருந்தாலும் அப்படி சொல்லி இருக்ககூடாது.இப்போ என் கூடப்பொறந்தவங்க கூட பேசுறது இல்லே.நான் அநாதை ஆயிட்டேன் என்றான்.

எல்லாமே அவன் குளரலில் இருந்து நான் புரிந்துகொண்டவை. போலீஸ் அடித்த அடியில் உடல் முழுதும் பாதிப்புகள்.நடைபிணமாக இருந்தான்.

சரி இப்போ எங்கே இருக்குறே என்றேன்.இப்போ சங்கம்தான் எனக்கு இருப்பு.இங்கே வர்றவாங்க பெரும்பாலும் சீட்டாடத்தான் வர்றாங்க,அவங்களுக்கு பீடி சிகரெட் வாங்கி கொடுப்பேன்.சிலபேர் ராத்ரியிலே கள்ளு,சாராயம் வாங்கி கேப்பாங்க.வாங்கிக்கொண்டு வருவேன்.அவங்க கொடுக்குற காசுலதான் வாழுறேன் என்றான். அடிக்கடி போலீஸ்ல யாரும் பெரிய தலைவர்கள் வந்தா தடுப்பு நடவடிக்கைன்னு பிடிச்சுக்குட்டு போயி ரெண்டுநாள் வச்சிக்கிட்டு அனுப்புவாங்க.இப்போ ஜமாத்தார் போலீஸ்ல சொல்லி என்ன சந்தேக லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்க..

சரியாக பேசமுடியாமல் நடக்கமுடியாமல் அவன் அந்த சங்க கட்டிடத்தில் தனிமையில் கிடப்பதை நினைத்தபோது எனக்கு வயிற்றில் என்னவோ செய்தது.

பிறகு மற்ற நண்பர்கள் சொன்னதிலிருந்து,அந்த நகையை எடுத்தது,அவர்கள் வீட்டுக்குள்ளேயே உள்ள ஆள்தான் என்றும்,அவர்கள் அப்படியே மறைத்துவிட்டார்கள் என்றும்.தெரிந்துகொண்டேன்.

விதி எவ்வளவு கொடியது நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் வாழ்க்கையின் கடைசியில் ஒரு அனாதைபோல் மறித்துப்போனது கொடுமை.

ஆம் அடுத்தமுறை நான் ஊர் வந்தபோது

என் தாயார் இன்னக்கி காலையிலே அவன் ஆஸ்பத்திரியிலே மவுத்தாயிட்டானாம் என்றார்கள்.

சுகமில்லாமல் காய்ச்சலில் மூன்று நாள் கிடந்திருக்கிறான்.பிறகு சங்கத்து வாலிபர்கள் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள்.காய்ச்சலில் போய்விட்டானாம்.மரணத்துக்கு ஒரு காரணம்.

நான் சங்கத்துக்கு போனேன். அவன் வீட்டுக்கு கொண்டுபோக அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை.சங்கத்தில் கூட அவன் சகோதரர்களோ,உறவினர்களோ வரவில்லை.சங்கத்து வாலிபர்கள் மையத்தை குளிப்பாட்டி ஆலிம்சாவை கூப்பிட்டு சடங்குகள் செய்து,யாரும் சமீபத்தில் விளையாடாத அந்த டேபிள்டென்னிஸ் மேஜையில் கபன் துணி போர்த்தி படுக்கவைத்திருந்தார்கள்.

நண்பனின் முகத்தை பார்த்தேன்.அமைதியாக இருந்தது.இப்போதுதான் அவனுக்கு அமைதி கிட்டியது போலும். நெற்றியில் முகர்ந்து போய் வா நண்பா என்றேன்.

கடைசிவரை அந்த தாய் வரவே இல்லை.

அல்லா அவனை மன்னிப்பான் நிச்சயம்…

– கணையாழி, ஜனவரி-23

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *