சிவானந்தம் ஒரு ‘ஜீனியஸ்’

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 563 
 

சிவானந்தம் அவர்களை எப்போது எங்கே எதற்காக முதன் முதலில் சந்தித்தேன் என்பது இப்போது எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் அவரைச் சந்தித்ததும், பின்பு அந்தச் சந்திப்பை நான் மறக்க முடியாமற் போனதும் நன்றாக நினைவிருக்கிறது. ‘சிவானந்தம் ஒரு ஜீனியஸ்’ என்பது இங்கே என் ஒருவனுடைய அபிப்பிராயம் மட்டுமில்லை. சிவானந்தத்தைப் பொறுத்த மட்டும் அவர் ‘ஒரு ஜீனியஸ்’ என்பதை ஒப்புக் கொள்ளாதவர்களே கிடையாது. அப்படி ஒப்புக் கொள்வதனால் யாவருக்கும் எந்தவிதமான நஷ்டமுமில்லை. இலாபம் உண்டா இல்லையா என்பது அநாவசியமான ஆராய்ச்சி. நஷ்டமில்லை என்பதுதான் முக்கியம். பிறரைப் புகழ்ந்தாலும் நமக்கு நஷ்டமில்லாமல் புகழ வேண்டும். அதுதான் நவீன யுகத்தில் மிகப் பெரிய தந்திரம். இந்தத் தந்திரம் தெரிந்தவர்கள் அதிகமாக இருக்கிற ஓர் ஊரில்தான் சிவானந்தமும் இருந்தார்… அது எந்த ஊராக இருந்தால் என்ன?

அதோ, ஏழு மைல் இடுப்பொடிய ரிக்ஷா இழுக்க வைத்துவிட்டு காலணாவை எண்ணிக் கொடுக்கும் பணக்காரக்கஞ்சனிடம் சண்டை போடுகிற ரிக்ஷாக்காரனுக்கு ஆதரவாக மூன்றாவது குரல் ஒன்று வியவகாரம் பேச வருகிறதே; – அதுதான் சிவானந்தத்தின் குரல், மேலத் தெருக்கோடியில் தனியாகத் தண்ணீர் எடுக்கச் சென்ற தமயந்தியைப் பார்த்துக் கண்ணை வெட்டித் ‘தன்னந்தனியே போறவளே’ என்ற ட்யூனில் ஸீட்டியடித்த காளையை, ‘நீ அக்கா தங்கச்சியோடப் பொறந்தவன் தானாடா?’ ன்னு அழுத்தமாக ‘டா’ன்னு போட்டு விசாரிக்கிற குரல் இருக்கிறதோ அதுவும் நம்முடைய சிவானந்தம் அவர்களுடையதுதான். தயவும் கருணையும் கிடைக்காமல் வாழக் கஷ்டப் படுகிறவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் சிவானந்தம் ஒரு நம்பிக்கை. அவருடைய சொந்த வாழ்க்கை நம்பிக்கைகள் ஏறத்தாழ இருந்தாலும் மற்றவர்களுக்கு அவர் ஓர் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தார். காலையில் அலுவலகத்திற்குப் போக பஸ் செலவிற்காக எடுத்துவந்த நாலணாவை வழியில் சந்திக்கிற நொண்டி, குருடுகளுக்குப் பிச்சை போட்டுவிட்டு நடந்தே போய்விடுகிற அளவுக்கு வற்றிப்போகாத தயையும், கருணையும் உள்ளவனுக்கு இந்த நூற்றாண்டு வாழ்க்கை ஏற்றதில்லைதான். ஆனாலும் சிவானந்தம் இந்த நூற்றாண்டில்தான் வேறு நூற்றாண்டு மனிதராக இருந்து வந்தார். எங்கே இருந்தார் என்கிறீர்களா? எதிலும் ஒத்துப் போகாத இந்தப் பாழாய்ப் போன தமிழ்நாட்டில் வயிற்றுக்குத் தாளம் போடுகிறவர்களின் கஷ்ட நஷ்டங்களை எடுத்துக் கூற வயிற்றுக்குத் தாளம் போடுகிற நியாய சீலர்கள் சிலரால் நடத்தப்படுகிற ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார் சிவானந்தம். தம்முடைய தைரியத்தையும், நம்பிக்கையையும் முதலாக வைத்து அந்த முதலாகிய மூலதனத்திலிருந்து பல இளைஞர்களை முன்னுக்குக் கொண்டு வந்த உழைப்பாளி அவர். இப்படிப்பட்ட உழைப்பாளி ஒரு சமயம் மிகவும் கஷ்டப்பட்டுத் தெருவில் நிற்கிற நிலைமைக்கு வந்துவிட்டார். மனைவிக்கு டி.பி. படுத்த படுக்கை, இருமல் இயந்திரமாகிவிட்டார் அந்த அம்மையார். பழைய வீடு. மழையில் சுவர்விழுந்துவிட்டது. கலியாணத்துக்கு நிற்கிற வயதில் நாலைந்து பெண்கள். இத்தனை பெரிய குடும்பத்தின் பாரத்தைத் தாங்கிக் கொண்டே காம சுந்தரர் மில் உழைப்பாளிகளின் பிரச்னைகளைப் பற்றியும் ‘கற்பூர விநாயகர் மோட்டார் ஒர்க்ஸ்’ முதலாளியின் பொய்க் கணக்குகள் பற்றியும் பேச்சாலும், எழுத்தாலும் முழக்கி வந்தார் சிவானந்தம். பிறருக்காகக் கவலைப்படாமல் ஒரு நிமிஷம்கூட வாழமுடியாத மனிதர் அவர். தமக்காகக் கவலைப்படவும் அவருக்குத் தெரியாது. இப்படிப்பட்ட மனிதர் பட்டினி கிடக்காமல் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழவேண்டுமென்று பத்துப்பன்னிரண்டு இளைஞர்கள் ஓர் எற்பாடு செய்தார்கள். ஏதோ ‘மணிவிழா’ என்று கொண்டாடுகிறார்களே, அப்படி ஒரு மணி விழாக் கொண்டாடிச் சிவானந்தத்தையும் கௌரவிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள் அவர்கள்.

“அண்ணா ! இப்படியே ஊருக்கு உழைச்சிக்கிட்டிருந்தா நீங்க என்ன ஆகுறது? இந்தத் தேசத்துலே நல்ல நல்ல ஜீனியஸ் (மேதை) எல்லாம் இப்படித்தான் பாழாயிடறாங்க…. சுவத்தை வச்சித்தானே சித்திரம் எழுதணும்…” என்று ஒருவர் சிவானந்தத்திடம் இந்த ஏற்பாட்டை மெல்லப் பிரஸ்தாபித்தார்.

“ஜீனியஸ் எல்லாம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்கிறதுதான் இந்தத் தேசத்திலே வளமுறையானா அதுக்கு நான் மட்டும் விதிவிலக்காயிருக்கணுமா?” என்று சிவானந்தம் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அதுக்கில்லே…. நீங்க நல்லாயிருந்தால்தானே இன்னும் நாலு பொதுக் காரியங்களுக்கு ஓடியாடி உழைக்கலாம்…”

“என்னமோ…? செய்யுங்க… இப்படிச் செய்யிறதினாலே நீங்க என்னை ரொம்பப் பெரிசா அவமானப்படுத்திட மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.”

என்று அவர் குத்தலாகப் பதில் கூறிய விதம் தன்னைக் கொண்டாடுவதையோ பாராட்டுவதையோகூட அவர் எப்படிக் குறைவான ஆவலோடு வரவேற்றார் என்பதைப் புரிய வைத்தது. பொய்யர்களையும், வஞ்சகர்களையும் புகழ்ந்து கொண்டாடுகிற உலக வழக்கத்தைப் பார்த்துப் பார்த்துப் புகழையும், பாராட்டையுமே வெறுக்கத் தொடங்கியிருந்தார் அவர். தம்மைச் சுற்றி வளைய வளைய வரும் இளைஞர்களின் ஆர்வத்தையும், விருப்பத்தையும், புறக்கணிக்க முடியாமல் ஏதோ இதற்கு ஒப்புக் கொண்டிருந்தார் அவர். ஒரு நல்ல நாளாகப் பார்த்து நிதி வசூலைத் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள் அந்த இளைஞர்கள். நிதிவசூல் தொடங்கியது. அந்த ஊரில் பெரிய பணக்காரரான மில் முதலாளி ஒருவரைத் தேடி முதலில் போனார்கள். அவர் எல்லோருக்கும் வெள்ளி டம்ளரில் காப்பிக் கொடுத்துத் தாராளமாக உபசாரம் செய்தார். கடைசியில் ” வந்த காரியம் என்னவோ?” என்று அவர் கேட்டு அவர்கள் பதில் சொல்லியபோது அவருடைய முகமலர்ச்சியே குறைந்து போயிற்று.

“சிவானந்தம் ரொம்பப் பெரிய ஜீனியஸ்! அவரைப் போல பல விஷயங்களிலும் மேதையாயிருக்கிற ஒருவரைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால்… எதுக்கும் நீங்க ‘ஸண்டே ஈவினிங்’ வந்து என்னைப் பாருங்க” என்று நல்ல நூலை நடுவில்

அறுத்துவிட்ட மாதிரி பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார் அந்த மில்’லர். எடுத்த எடுப்பிலேயே ஏற்பட்ட இந்தத் தோல்வியைச் சகித்துக் கொண்டு இரண்டாவதாகப் பல தினசரிப் பத்திரிகைகளுக்கு அதிபராகிய ஒரு பத்திரிகை முதலாளியிடம் சென்றார்கள். சிவானந்தத்தைப் போல் ஒரு ‘எடிட்டர்’ இந்தத் தமிழ்நாட்டிலேயே இல்லை. அவரைப் போல அற்புதமான மேடைப் பேச்சாளாரும் இல்லை; அவரைப் பாராட்ட வேண்டியது அவசியம்தான் ஆனால் அந்தப் பாராட்டு விழாக் கமிட்டிக்கு யாரைத் தலைவராகப் போட்டிருக்கீங்க?’ என்று தேவையில்லாத தொரு கேள்வியைப் போட்டார் பத்திரிகை முதலாளி. பத்திரிகைகளுக்காக வாங்குகிற ‘நியூஸ் பிரிண்ட்’ கோட்டாவை அச்சடித்து விற்பதைவிட வெள்ளைக் காகிதமாகவே விற்பதில் அதிகக் கவலை செலுத்தக் கூடியவர் அவர். மணிவிழாக் குழுவின் தலைவராயிருக்கிற இளைஞர் பெயரைக் கூறியவுடன் அந்தப் பத்திரிகை முதலாளி முகத்தைச் சுளித்தார் சலிப்போடு. அவர்களிடம் கூறலானார். இன்னும் பாப்புலர் மேனாக’ யாராச்சும் ஒருத்தரை பிரஸிடெண்ட்’டாகப் போடுங்க. ஒரு பெரிய விழாவுக்குத் தலைவராயிருக்கிறதுன்னா அதுக்கு ஒரு ‘ஸ்டேட்டஸ்’ வேணாமா?”

“ஸ்டேட்டஸும் பாப்புலாரிட்டியும் இருந்தால் மட்டும் போதுங்களா? ஓடியாடி உழைக்கிறவங்களாகவும் இருக்கணுமே” என்று மனம் பொறுக்காமல் பதில் கூறிவிட்டார் அந்தக் குழுவில் இருந்த இளைஞர் ஒருவர். பத்திரிகை முதலாளி வளைத்து வளைத்துச்சொல்லிய விதத்திலிருந்து தாமே கமிட்டித் தலைவராக இருக்க அவர் ஆசைப்படுவது தெரிந்தது. அதை அப்பட்டமாகச் சொல்ல வெட்கப்பட்டு இப்படிக் கூறினார் வெள்ளைக் காகிதத்தைக் கருப்புப் பணமாக மாற்றுவதில் வல்லவரான அந்தப் பத்திரிகை முதலாளி. தம்மால் பொருளுதவி செய்யமுடியுமா இல்லையா என்பதைக் கூறாமலே சுற்றி வளைத்து வேறு எவை எவையோ தேவையில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டே போனார் அவர்.

முடிவாக ஒரு பயனும் இல்லாமலே அங்கிருந்தும் அவர்கள் வெளியேறும் படி ஆயிற்று. மூன்றாவதாக ஒரு திரைப்பட நடிகரிடம் வசூலுக்குப் போனார்கள். அந்த நடிகர் எல்லோரையும் மிக மிக ஆர்ப்பாட்டமாக வரவேற்றுப் பட்டுறை தைத்த பாங்கான சோபாக்களில் உட்கார வைத்துப் பேசினார். தமக்கு இராப்பகலாக ஓய்வு ஒழிவின்றி ஷூட்டிங் இருப்பதாகவும், தம்மால் எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடிவதில்லை என்றும் கூறினார் அவர். நண்பர்கள் சிவானந்தத்தின் மணிவிழாவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்கள். நடிகர் உடனே ஆரம்பித்து விட்டார். “அவரைப் போன்ற ஜீனியஸ் எல்லாம் இப்பிடிக் குடத்து விளக்காக அடங்கிக் கிடக்கப்படாதுங்க. நல்ல நல்ல நாடகங்களை எல்லாம் அவர் எழுதணும். இன்னும் சொல்லப் போனால் சினிமா உலகத்துக்குக்கூட அந்த மாதிரி ‘ஜீனியஸ்’ களின் சேவை தேவை” என்று அடுக்கினார் அந்தப் பெரும் நடிகர் . கௌரவமான தொகைக்குக் கையெழுத்துப் போட்டு வசூலை அவர்தாம் ஆரம்பித்து வைக்க வேண்டுமென்று கேட்டபோது நடிகர் ‘ஸைலன்ஸ் பிக்சர்’ ஆகிவிட்டார்.

“நாங்க… திரைக்கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து தனியா ஒரு பெருந்தொகை திரட்டி அன்னாருக்கு வழங்கக் கருதியிருக்கிறோம். இந்த நோட்டு இருக்கட்டும்; இதிலே மத்தவங்க மூலமா வசூலாகிற தொகைக்கு முயற்சி செய்யுங்க. திரையுலகத்தைப் பொறுத்த மட்டில் நாங்க எல்லாருமாகச் சேர்ந்து ஏதாச்சும் செய்யிறோம்…” என்று சொல்லி மிகவும் நம்பிக்கையோடு கைகூப்பி விடை கொடுப்பதுபோல் கையை விரித்துவிட்டார் அந்த நடிகர். மூன்று நான்கு பேரிடம் படியேறி இறங்கிய பிறகு இவர்களுக்கு அலுத்துப் போய்விட்டது. சிவானந்தம் அவர்களிடம் இவ்வளவு திறமைகள் இருந்தும் எதற்காக ஒவ்வொருவரும் இப்படிச் சிரித்தபடியே அவருடைய மணிவிழாவைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்று புரியாமல் மருண்டார்கள் அந்த இளைஞர்கள். அன்றைய வசூல் முயற்சி அவ்வளவில் போதும் என்ற அந்தரங்கமான சலிப்போடு நண்பர்கள் ஒரு சிற்றுண்டி விடுதிக்குள் நுழைந்தபோது மிகவும் களைத்துப் பசித்திருந்தனர். காலியாயிருந்த ஒரு மேஜையைச் சுற்றிக் கிடந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சிவானந்தத்தின் துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் பற்றி அவர்கள் பேசிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். அவர்களுக்கு என்ன சாப்பிடுவதற்கு வேண்டும்?’ என்று கேட்பதற்கு வந்த ஓட்டல் பையன் அவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுத் தயங்கி நின்றான். கால்மணி நேரம் கழித்துதான் அவர்கள் இட்லி, வடை, பாத் என்று அவரவர்களுடைய வயிற்றுப் பசிக்குத் தேவையான பண்டங்களை ஓட்டல் பையனிடம் சொல்லி அனுப்பினார்கள். பண்டங்கள் ருசிக்கவில்லை. ஆர்வத்தோடு புறப்பட்டு முயன்ற காரியம் ஆரம்பத்திலேயே சுறுசுறுப்பில்லாமல் துவண்டு போயிற்றே என்ற மனவேதனையில் எல்லாமே கசந்தன. “பணமும் சௌகரியங்கள் உள்ளவர்களைத் தேடி வந்துதான் குவியும் போலிருக்கு அண்ணா சிவானந்தத்தைப் போன்றவர்களுக்காக நாம் முயன்று தேடி அலைந்தாலும் அவை விலகி விலகிப் போய் நம்மை விரட்டுகின்றன” என்று வேதனையோடு கூறினார் ஓர் இளைஞர்..

“துரதிர்ஷ்ட மும் வறுமையுந்தான் நிஜமான ‘ஜீனியஸ்’களின் பக்க பலம் போலிருக்கிறது சார்” என்று வருத்தப்பட்டார் வேறு ஓர் இளைஞர்.

“நாம் இந்த முயற்சியில் இறங்கியிருக்கவே கூடாது. இதனால் சிவானந்தத்துக்கும் மனக்கஷ்டம். நாம் எவ்வளவோ சொல்லியும் அவர் ஒப்புக் கொள்ளாமல் மறுத்தார். கடைசியில் என்னை அதிகமாக அவமானப்படுத்திட மாட்டிங்கன்னு நினைக்கிறேன்’ என்று கூறி இணங்கினார். இப்ப இருக்கிற நிலைமையைப் பார்த்தா…. நமக்கே வேதனையாயிருக்கு…. ‘ மணிவிழா’ என்று… தம்பிடி மணியில்லாமே எதை நடத்தப் போறோம் நாம்?… சும்மா கிடந்தவரைச் சீண்டிவிட்டுவிட்டு.. அவமானப்படுத்தின கதையாத்தான் ஆகப் போறது…” என்றார் இன்னொருவர்.

அவர்கள் சாப்பிட்டுக் கைகழுவி எழுந்தபின் ஓட்டல் பையன் பில்’ கொண்டு வந்து கொடுத்தான்.

அவன் கையில் பில்’ காகித்தோடு அழுக்கடைந்த ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றும் இருந்தது. “சார்! எனக்கு இந்தச் சின்னத் தொகையைக் கொண்டாந்து கொடுக்கவே வெட்கமாயிருக்குது. இன்னிக்கிக் காலையிலே பேப்பர்லே சிவானந்தம் மணிவிழாவைப் பற்றி அறிக்கை பார்த்தேன். பார்த்ததுமே அதுக்கு அஞ்சு ரூபாயாவது கொடுக்கணும்னு எடுத்து வச்சேன். நீங்க பேசினதை எல்லாம் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தேன். அவரோட எழுத்தும் பேச்சும் பலரைத் திருத்தி ஒழுங்குப்படுத்தியிருக்கு… என்னைப் போல இருக்கிறவங்க அவருக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறோம். நீங்க இங்கே சம்பளம் போடறன்னைக்கி வந்தா இதைத் தவிர இன்னும் பதினைஞ்சு ரூபா வசூலுக்கு நான் உறுதி தர முடியும்…” என்று பயபக்தியோடு கூறியவனாக அந்த ஐந்து ரூபாயை நீட்டினான் பையன்.

நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். திடீரென்று யானை பலம் வந்த மாதிரி இருந்தது அவர்களுக்கு .

“அண்ணே! சிவானந்தத்துக்கும் அதிர்ஷ்டம் இருக்குது. ஆனால் அந்த அதிர்ஷ்டமே ரொம்ப ஏழையாயிருக்குது. ‘ஜீனியஸ்’ங்களோட அதிர்ஷ்டம் எப்பவுமே ரொம்ப ஏழையாகத்தான் இருக்கும் போலிருக்கு” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்த அஞ்சு ரூபாயை வசூல் நோட்டில் முதல் பக்கத்தில் எழுதி வரவு வைத்தார் செயலாளராகிய இளைஞர். ராமானந்த பவன் ஸர்வர் நன்கொடை ரூபா. 5’ என்று எழுத்துக்கள் நிறைந்தன அந்தப் பக்கத்தில், ஒரு ஜீனியஸைப் புரிந்து கொண்ட ஏழைப் பையனின் மரியாதை நிறைந்த முதல் நிதியாக வந்து சேர்ந்திருந்தது அந்தத் தொகை.

– தாமரை, மே, 1963, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *