கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 12,257 
 

(1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக் கதை நிகழ்ந்த காலத்தில் பிரும்மதேசம் (பர்மா) ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படவில்லை. அப்பொழுது அதற்குத் தனியாக ராஜாவும், ராணியும் இருந்தனர். மந்திரி, பிரதானி சதுரங்கசேனை யாவும் இருந்தன. அவர்கள் தங்கள் நாட்டைத் தாங்களே ஆட்சி புரிந்தார்கள்.

மாண்டலே அதற்குத் தலைநகராக இருந்தது. ஆனால் ராஜவம்சத்தைச் சேர்ந்த பலர் தேசத்தின் வெவ்வேறு நகரங்களில் வசித்துவந்தனர். அவர்களில் ஒருவன் வெகு நாட்களுக்கு முன்பே பெகுவுக்குத் தெற்கே ஐந்து குரோச தூரத்தில் இமேதின் என்ற கிராமத்தில் குடியேறி வசித்து வந்தான்.

அவனுக்கு பெரிய மாளிகை இருந்தது. உத்தியான வனம் இருந்தது. போதுமான ஆஸ்தி இருந்தது. அவன் ஒரு பெரிய ஜமீன்தாரனாக விளங்கினான். திடீரென்று ஒருநாள் பரலோகத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந் தது. அப்பொழுது அவன் தன் நண்பனை அழைத்து, “அப்பா, பாகோ! உன் மகனுக்கு என் மகளை மணம் செய்து கொடுக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அந்தச் சுபகாரியத்தை என் கண்களால் காணக் கொடுத்து வைக்கவில்லை. மாசோயேயை விட்டுவிட்டுச் செல்கிறேன். கவனித்துக்கொள்!” என்றான்.

“இதைவிட அதிகமாக ஒன்றும் சொல்லவேண்டிய தில்லை, அது அவசியமும் இல்லை” என்று அவன் எண்ணி னான். பாகோ, அவனுடைய பால்ய நண்பன். ஒரு சமயம் அவனும் பணக்காரனாக இருந்தான். ஆனால் கோயில் கட்டியதாலும், பிக்ஷக்களுக்கு ஏராளமாக அன்ன தானம் செய்ததாலும் தன் சொத்துக்கள் யாவற்றையும் அவன் இழந்தான். அது மாத்திரமல்ல; கடன்காரனும் ஆனான். ஆயினும் அவனிடம் தன் மகளை ஒப்பிக்க இவன் சற்றும் தயங்கவில்லை. தவிர வாழ்க்கையில் இது ஒரு பொன்னான தருணம் என்றும் கருதினான். ஆகையால் பயமின்றித் தன் மகளை அவனிடம் ஒப்பித்து விட்டுச் சென்றான்.

ஆனால், பாகோ இந்தப் பாரத்தை அதிக நாள் சுமக்க வில்லை. அவனுக்கும் யமலோகத்திலிருந்து ‘ஸம்மன்’ வந்து விட்டது. அந்த உத்தரவைச் சிரமேல் தரித்து வருஷச் சக்கரம் பூராவும் சுழலும் முன்பே அவன் இவ்வுலக வாழ்வை நீத்தான்.

ஏழைமையடைந்த இந்தத் தர்மாத்மாவிடம் கிராமத்து ஜனங்கள் மிகுந்த பக்தியும் மதிப்பும் வைத்திருந்தனர். ஆகையால் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவனுடைய மரண விழாவைக் கொண்டாடினார்கன்.

பாகோவின் சவத்தைப் புஷ்ப மாலைகளாலும் சந்தனத் தாலும் அலங்கரித்துக் கட்டிலில் வைத்தார்கள். அதன் முன் வேடிக்கைகள், ஆடல்பாடல், விருந்து முதலிய ஆர்ப்பாட்டங்கள் இரவு பகல் இடைவிடாது நடந்தன. இவைகளுக்கு ஒரு முடிவே இல்லையோ என்று கூடத் தோன்றியது.

பித்ருசோகத்தின் மிகுதியால் இந்த ஆனந்தத்தி லிருந்து சற்று ஒதுங்கி இருக்க விரும்பினான் பாதின். ஆகையால், ஜனசந்தடியற்ற இடத்தில் ஒரு மரத்தடியில் சென்றமர்ந்து அழலானான். திடீரென்று திரும்பிப் பார்த் தான். மாசோயே பின்னால் நின்று கொண்டிருந்தாள். அவள் பேசாமல் அவன் கண்களைத் துடைத்துவிட்டு அவனருகே அமர்ந்தாள். பிறகு அவன் கையைத் தன் கையில் எடுத் துக்கொண்டு, “அப்பா – என்னவோ இறந்துவிட்டார். ஆனால் உன்னுடைய மாசோயே உயிருடன் இருக்கிறாள்; கவலைப்படாதே!” என்றாள்.

2

பாதின் சித்திரம் எழுதுவான்; தான் எழுதிய கடைசிப் படத்தை ஒரு வியாபாரியின் மூலம் ராஜாவின் தர்பாருக்கு அனுப்பினான். ராஜா சந்தோஷத்துடன் அதை வாங்கிக்கொண்டு விலையுயர்ந்த மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்தான்.

சந்தோஷத்தின் மிகுதியால் மாசோயேயின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. அவள் அவன் அருகே வந்து நின்றுகொண்டு இனிய குரலில், “பாதின், நீ உலகத் தில் சிறந்த சைத்திரிகனாக ஆகிவிடுவாய்!” என்றாள்.

பாதின் சிரித்தான். “அப்படியானால், தந்தையின் கடனைத் தீர்த்துவிடுவேன் என்று தோன்றுகிறது!” என்றான்.

மாசோயேயின் தந்தையிடமும் பாதினின் தந்தை கடன் வாங்கி இருந்தான். ஆகையால் இந்த வார்த்தை களைக்கேட்டு அவள் லஜ்ஜையடைந்தாள். “நீ அடிக்கடி இப்படிச் சொன்னால் இனி நான் உன்னிடம் வரமாட்டேன் ” என்றாள்.

பாதின் மௌனமானான்; ஆனால் தந்தையின் கடனைத் தீர்க்காவிட்டால் தனக்கு விடுதலை கிடைக்காது என்பதை எண்ணியபோது அவனை அறியாமல் அவன் உள்ளம் குமுறலாயிற்று.

பாதின் நாளுக்குநாள் அதிகமாக உழைக்கலானான். புத்தருடைய வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்து அதைச் சித்திரமாகத் தீட்டலானான். அன்று பூராவும் தலைநிமிர்ந்து பார்க்கக்கூட அவனுக்கு நேரமில்லை .

பிரதி தினமும் வருவதைப்போல் மாசோயே அன்றும் வந்தாள். பாதின் தூங்கும் அறை, அவன் சாப்பிடும் அறை, அவன் சித்திரம் எழுதும் அறை யாவற்றையும் சுத்தம் செய்து சாமான்களையெல்லாம் சரியாக எடுத்து வைத்து ஒழுங்கு செய்துவிட்டு அவள் போவது வழக்கம். இந்த வேலைகளை யெல்லாம் வேலைக்காரர்களிடம்விட அவளுக்கு இஷ்டமில்லை.

எதிரே ஒரு நிலைக்கண்ணாடி இருந்தது. அதில் பாதி னின் பிரதிபிம்பம் தெரிந்தது. மாசோயே வெகு நேரம் வரையில் கண் கொட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு, “பாதின்! நீ என்னைப்போல் பெண்ணாக இருந்திருந்தால் இதற்குள் இந்தத் தேசத்தின் ராணியாகி இருப்பாய்!” என்றாள்.

பாதின் தலை நிமிர்ந்து சிரித்துக்கொண்டே, “ஏன்? என்ன விஷயம், சொல்லேன்!” என்றான்.

“ராஜா உன்னை மணந்து கொண்டு சிம்மாதனத்தில் ஏற்றிவைப்பான். அவனுக்கு அநேக ராணிகள் இருக்கிறார்கள். ஆயினும் இம்மாதிரியான நிறம், தலைமயீர், இவ்வளவு அழகான முகம், இவைகள் அவர்களில் யாருக் காவது இருக்கிறதா?” என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் தன் வேலையைக் கவனிக்கலானாள்.

தான் மாண்டலேயில் சித்திரம் எழுதக் கற்றுக் கொண்டபொழுது தன்னைப்பற்றி இப்படிப் பலர் சொன்னது பாதினுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் அவன் சிரித்துக் கொண்டு “அழகைத் திருடிக்கொள்ள ஏதாவது வழியிருந்தால் நீ என்னைத் தள்ளிவிட்டு ராஜாவின் பக்கத்தில் சென்று அமர்ந்துவிடுவாய்!” என்றான்.

இந்த வார்த்தைகளுக்கு மாசோயே யாதொரு பதிலும் கூறவில்லை. ஆனால் தனக்குள், “நீ பெண்களைப்போல் துர்ப்பலமானவன். பெண்களைப்போல் மென்மையான வன். பெண்களைப்போல் அழகு வாய்ந்தவன். உன்னுடைய சௌந்தரியத்திற்கு ஓர் எல்லையே கிடையாது!” என்று சொல்லிக்கொண்டாள்.

இந்த அழகின் முன் அவள் தன்னை மிகவும் துச்சமாக மதிக்கலானாள்.

3

பிரதி வருஷமும் வசந்தகால ஆரம்பத்தில் அந்த இமேதின் கிராமத்தில் குதிரைப் பந்தயம் வெகு தடபுட லாக நடப்பது வழக்கம். அன்று அதே பந்தயத்திற்காக வெளி மைதானத்தில் ஏராளமாக ஜனங்கள் கூடியிருந்தார்கள்.

மாசோயே மெள்ள மெள்ளப் பாதினின் பக்கத்தில் வந்து நின்றாள். அவன் தன் முழுக் கவனத்தையும் ஓவியம் தீட்டுவதில் செலுத்தி இருந்தான். ஆகையால், அவள் வந்ததைக் கூடக் கவனிக்கவில்லை.

“நான் வந்திருக்கிறேன், சற்றுத் தலை நிமிர்ந்து பார்!” என்றாள் மாசோயே.

பாதின் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். பிறகு ஆச் சரியத்துடன், “என்ன இன்றைக்குப் பிரமாதமாக அலங் காரம் செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

“பேஷ்! இன்று நமது கிராமத்தில் குதிரைப் பந்தயம் என்பது உனக்குத் தெரியவே தெரியாது போல் இருக்கிறது. ஜயிப்பவர்கள் எனக்கு மாலையிடுவார்கள்!”

“அப்படியா? நான் ஒன்றையும் கேள்விப்பட வில்லையே?” என்று சொல்லிவிட்டு அவன் மறுபடியும் சலாகையை எடுக்கக் கையை நீட்டினான்; இதற்குள் மாசோயே அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “இல்லை, இல்லை, உனக்குத் தெரியும். நீ எழுந்திரு. எவ்வளவு தாமதம் செய்கிறாய்?” என்றாள்.

இருவருக்கும் சமவயதுதான். பாதின் நாலைந்து மாதம் பெரியவனாக இருப்பான். ஆனால் குழந்தை பருவத்தி லிருந்து பத்தொன்பது வயது வரையில் இப்படியே கழித்து விட்டார்கள். விளையாடினார்கள், விவாதித்தார்கள், சண்டை போட்டுக்கொண்டார்கள். ஒருவருக் கொருவர் அன்பும் கொண்டார்கள்.

எதிரே இருந்த கண்ணாடியில் இருவருடைய முகங்களும் அப்பொழுது மலர்ந்த ரோஜா மலர்கள் போல் காட்சியளித்தன. பாதின் அவைகளைக் காட்டி, “இதோ, இதைப் பார்!” என்றான்.

மாசோயே கண நேரம் மௌனமாகத் திருப்தியற்ற பார்வையுடன் அந்த இரண்டு முகங்களையும் பார்த்தாள். தானும் மிகுந்த அழகுடன் இருப்பதாக அன்று தான் அவளுக்குத் தெரிந்தது. ஆவேசத்தினால் அவள் இரு கண்களும் குவிந்தன. அவள் மெதுவாகக் காதோடு, “நான் சந்திரனின் களங்கம்” என்றாள்.

பாதின் அவள் முகத்தை இன்னும் அருகே இழுத்துக் கொண்டு, “இல்லை, நீ சந்திரனின் களங்கமல்ல. நீ எதற்கும் களங்கம் அல்ல. நீ சந்திரனின் சந்திரிகை. ஒருதரம் நன்றாகப் பார்!” என்றான்.

ஆனால் மாசோயேக்குக் கண்ணைத் திறக்கத் தைரியம் வரவில்லை. அவள் முன் போலவே கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.

இப்படியே சில விநாடிகள் கழிந்தன. ஆனால் அதே சமயம் ஆண் பெண் இருபாலாரும் அடங்கிய பெரிய கூட்டம் ஒன்று ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும், தெரு வழியே சென்றது. உற்சவத்தில் கலந்துகொள்ளச் சென்றதுபோலும். மாசோயே படபடப்புடன் எழுந்து நின்று, “புறப்படு, நேரமாகிவிட்டது!” என்றாள்.

“மாசோயே! நான் வருவதென்பது முடியாத காரியம்!”

“ஏன்?”

“இந்தச் சித்திரத்தை ஐந்து தினங்களுக்குள் முடித் துத் தருவதாக வாக்களித் திருக்கிறேன்!”

“வாக்கை நிறைவேற்றாவிட்டால்?”

“அவன் மாண்டலே சென்று விடுவான். சித்திரத்தை வாங்கிக் கொள்ளவும் மாட்டான். பணம் கொடுக்கவும் மாட்டான்!”

பணத்தைப்பற்றிப் பிரஸ்தாபிக்கும் போதெல்லாம் மாசோயே மனக்கஷ்டமும் லஜ்ஜையும் அடைவாள். ஆகையால் அவள் கோபத்துடன் “இருக்கட்டும், அதற் காக இம்மாதிரி ஓய்வின்றி உழைக்க உன்னை நான் விட மாட்டேன்!” என்றாள்.

பாதின் இதற்குப் பதில் சொல்லவில்லை. ஆனால் தந்தையின் கடன் நினைவுக்கு வந்ததும் அவன் முகத்தில் வருத்தத்தின் சாயை படர்ந்தது. மாசோயே இதைக் கவ னிக்காமல் இல்லை. ஆகையால் “சித்திரத்தை எனக்கு விற்றுவிடு, நான் இரட்டிப்பு விலை கொடுக்கிறேன்!” என்றாள்.

இந்த விஷயத்தில் பாதினுக்குச் சந்தேகமில்லை. அவன் சிரித்துக்கொண்டே, “ஆனால் இதை நீ என்ன செய்வாய்?” என்று கேட்டான்.

மாசோயே கழுத்தில் இருந்த மணிமாலையைக் காட்டி “இதிலுள்ள முத்துக்களாலும், கெம்புகளாலும் இதை அலங்கரிப்பேன். பிறகு இதைப் படுக்கை அறையில் என் கண் எதிரில் தெரியும்படி மாட்டிவைப்பேன்!” என்றாள்.

“அதன் பிறகு என்ன செய்வாய்?”

“அதன் பிறகு, நன்றாக நிலவு விரிந்த இரவில் திறந் திருக்கும் ஜன்னல் வழியாக அதன் சந்திரிகை, தூங்கிக் கொண்டிருக்கும் உன் முகத்தின்மீது விளையாடும்போது.”

“அதன் பிறகு?”

“அதன் பிறகு உன் தூக்கத்தைக் கலைத்து-”

வார்த்தை முடிவடையவில்லை. இதற்குள் கீழே காத்துக்கொண்டிருந்த மாசோயேயின் வண்டிக்காரனின் குரல் கேட்டது.

பாதின் பதட்டத்துடன், “இதன் பிறகு உள்ள விஷயங்களைப் பிறகு கேட்டுக்கொள்ளுகிறேன். இப்பொழுது வேண்டாம். உனக்கு நேரமாகிவிட்டது. நீ சீக்கிரம் போ!” என்றான்.

ஆனால் இம்மாதிரி நேரம் கழிவதைப்பற்றி மாசோயேக்குச் சற்றும் கவலையே கிடையாது. அவள் இன்னும் நன்றாக உட்கார்ந்துகொண்டு, “என் மனம் சரியாக இல்லை. நான் போகப் போவதில்லை!” என்றாள்.

“போகப் போவதில்லையா? வாக்குக் கொடுத்திருக்கிறாயே? எல்லோரும் உற்சாகத்துடன் தலை நிமிர்ந்து உன் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்பதை மறந்துவிட்டாயா?”

மாசோயே பலமாகத் தலையை அசைத்து, “எதிர்பார்க்கட்டும். வாக்குத் தவறுவதில் எனக்கு லஜ்ஜை ஒன்றும் இல்லை. நான் போகவில்லை!” என்றாள்.

“சிவ! சிவா! இம்மாதிரி எங்காவது உண்டா?”

“அப்படியானால் நீயும் வா!”

“வர முடியுமானால் அவசியம் வருவேன். ஆனால் எனக்காக நீ வாக்குத் தவறும்படி விடமாட்டேன். தாமதம் செய்யாதே, போ!”

அவனுடைய கம்பீரமான முகத்தையும், சாந்தமும் திடமும் நிறைந்த வார்த்தையையும் கண்டு மாசோயே எழுந்து நின்றாள். அபிமானத்தினால் அவள் முகம் வாடியது. “நீ உன் சௌகரியத்திற்காக என்னை அப்புறப் படுத்த விரும்புகிறாய். நான் போகிறேன். ஆனால் இனி மேல் உன்னிடம் வரமாட்டேன்!” என்றாள்.

கணத்திற்குள் பாதினின் திடமான கடமை, அன்பு என்னும் ஜலத்தில் ஆழ்ந்து விட்டது. அவன் அவளைத் தன்னருகே இழுத்துச் சிரித்துக்கொண்டே, “மாசோயே! இப்படிக் கடுமையான பிரதிக்ஞை ஒன்றையும் செய்யாதே. இதன் பலன் என்ன ஆகும் என்பது எனக்குத் தெரியும்: ஆனால் இனிமேல் தாமதம் செய்தால் காரியம் நடவாது, செல்!” என்றான்.

மாசோயே முன்போலவே கடுகடுத்த முகத்துடன் “நான் இல்லாவிட்டால், உன்னுடைய ஊண், உடை, விஷயம் முதல், தூங்கும் விஷயம்வரையில் நீ எவ்வளவு சிரமப்படுவாய் என்பது, எனக்குத் தெரியும். அந்த நிலை மையை என்னால் சகிக்கமுடியாது. ஆகையால்தான் நீ என்னை இன்று இதைவிட்டுப் போகச் சொல்லுகிறாய்!” என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பாராமலே வேகமாக வெளியே சென்று விட்டாள்.

4

பிற்பகலில் மாசோயேயின் அலங்காரம் செய்த மாட்டுவண்டி மைதானத்திற்குள் பிரவேசித்தது. ஜனங்கள் ஆரவாரம் செய்தார்கள்.

அவள் யுவதி, அழகி, விவாகமாகாதவள், தவிர நிறையச் செல்வம் படைத்தவள். மனிதர்களின் யௌவன ராஜ்யத்தில் அவளுக்கு உயர்ந்த ஸ்தானம் உண்டு. ஆகையால் இங்கும் அவளுக்குக் கௌரவமான ஆசனம் கிடைத்தது, இன்று அவள் மாலை கொடுக்கப் போகிறாள். பிறகு எல்லோருக்கும் முன்னிலையில் எந்தப் பாக்கியசாலி அவள் கழுத்தில் மாலையிடுகிறானோ அவன் அதிர்ஷ்டத்தைக் கண்டு உலகமே பொறாமை அடையப்போகிறது.

சிவப்பு வர்ணமுள்ள ஆடைகள் அணிந்து, அலங்கரிக்கப்பட்ட குதிரைகளின் மேல் ஏறி நின்ற வீரர்கள் தங்கள் உற்சாகத்தையும் சஞ்சலத்தையும் சிரமத்துடன் அடக்கிக் கொண்டார்கள்.. இன்று அவர்களைப் பார்க்கும் போது உலகில் அவர்களால் செய்யக்கூடாத காரியம் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது.

மெள்ளச் சமயம் நெருங்கியது. தங்கள் அதிர்ஷ்டத் தைப் பரீக்ஷிக்கவந்த அவர்கள் ஒரு வரிசையாக வந்து நின் றார்கள். மணி ஓசை கேட்டதும் உயிரைத் துச்சமாக மதித்து அவர்கள் தங்கள் குதிரையுடன் பறந்தார்கள்.

இது வீரச்செயல், யுத்தத்தின் அம்சம். மாசோ யேயின் தந்தை பாட்டன் எல்லோரும் வீரர்கள். போர் புரிவது தான் அவர்களுடைய தொழில். அவள் பெண்ணாக இருந்தாலும் அவளுடைய மூதாதையர்களின் வீர ரத்தம் அவள் நரம்புகளில் ஓடிக்கொண்டிருந்தது. ஆகையால் வெற்றியடைந்தவனைத் தன் முழுமனத்துடன் புகழா மல் இருக்க அவளால் முடியவில்லை.

அடுத்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு யுவன் முகம் சிவக்க வேர்வை வழிய, கைநடுங்க அவளுக்கு வெற்றி மாலையை அணிவித்தான். அப்பொழுது மற்ற ஸ்திரீகளுக்கு இதைக்கண்டு பொறாமை ஏற்படாமல் இல்லை. திரும்பும்போது மாசோயே அவனைத் தன் வண்டியிலேயே ஏற்றிக்கொண்டாள். தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு தழதழத்த குரலில், “உன் விஷயத்தைப்பற்றி மிகவும் பயந்து விட்டேன். அவ்வளவு பெரிய சுவரைத் தாண்டும்போது கால் வழுக்கிவிடப் போகிறதே என்று கூட எண்ணினேன்!” என்றாள்.

வாலிபன் விநயத்துடன் தலை குனிந்தான். ஆனால் இந்த ஒப்புயர்வற்ற வீரனுடன் ஸாதுவும் சாமர்த்தியம் அற்றவனுமான சைத்திரிகன் பாதினை ஒப்பிட்டுப் பார்க் காமல் இருக்க அவளால் முடியவில்லை.

இந்த யுவனின் பெயர் போகின். இவனும் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவன், செல்வவந்தன், தவிர அவளுக்கு எட்டிய உறவு என்பதும் அவன் வார்த்தையினின்றும் வெளியாயிற்று. அன்று மாசோயே அநேகரைச் சாப்பிட அழைத்திருந்தாள். அவர்களும் இன்னும் தொலைவி லிருந்து வந்தவர்களும் வண்டியின் பின்னால் வந்துகொண் டிருந்தனர். அவர்களுடைய கூட்டத்தினால் ஏற்பட்ட புழுதி வானத்தைத் திரையிட்டது. அவர்களுடைய சங் கீதம் அந்த மாலை நேரத்தில் திசையைக் கிடுகிடுக்கச் செய்தது.

இந்தப் பயங்கரமான ஜனக்கூட்டம் பாதின் வீட்டு வாசல் வழியாகச் செல்லும்போது அவன் சில நிமிஷங்கள் தன் வேலையை நிறுத்திவிட்டு ஜன்னலருகே வந்து நின்று கொண்டு பேசாமல் பார்க்கலானான்.

இந்த விருந்துக்கு மறுநாள் மாசோயே பாதினிடம், “நேற்றுச் சாயங்காலவேளை மிகுந்த ஆனந்தத்துடன் கழிந்தது. தயைவைத்து வெகுபேர் வந்திருந்தனர். உனக்கு நேரமில்லை. ஆகையால் நீ மாத்திரம் வர வில்லை!” என்றாள்.

அந்தச் சித்திரத்தை முடித்துவிட வேண்டுமென்று அவன் முழுமனத்துடன் வேலையில் முனைந்திருந்தான். ஆகையால் தலை நிமிராமலே, “நல்லதாயிற்று!” என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் வேலையைக் கவனிக்கலானான்.

மாசோயே ஆச்சரியத்தினால் ஸ்தம்பித்துப்போனாள். வேலைத் தொந்தரவினால் முதல் நாள் கொண்டாட்டத்தில் பாதின் கலந்துகொள்ளவில்லை. ஆகையால் அவனுடன் வெகுநேரம் வரையில் பேசவேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவள் வந்திருந்தாள். ஆனால் இங்கே அதற்கு நேர்மாறாக இருந்தது. தனியாகப் பிரலாபிக்கலாம். ஆனால் தனியாக அளவளாவிப் பேசமுடியுமா? ஆகையால் அவள் செயலற்று உட்கார்ந்திருந்தாள். எதிர்த் தரப்பின் அசட்டையையும் மௌனத்தையும் குலைத்து உள்ளே பிரவேசிக்கமுடியும் என்ற நம்பிக்கை கூட அவளுக்கு ஏற்படவில்லை. தினசரி அவள் செய்துவிட்டுப் போகும் வேலைகள் அப்படியே கிடந்தன. எதையும் செய்ய அவளுக்குப் பிடிக்கவில்லை, இம்மாதிரியே வெகு நேரம் கழிந்தது. பாதின் ஒருமுறைகூட அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. நேற் றைய விஷயத்தில் தனக்குச் சற்றும் ஆர்வமில்லாதவனைப் போலும் தனக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லா தவனைப் போலும் காணப்பட்டான்.

வெகுநேரம் வரையில் ஒன்றும் தோன்றாமல் லஜ்ஜையுடன் உட்கார்ந்திருந்தாள் மாசோயே. கடைசியில் களைப்புடன் எழுந்திருந்து, மிருதுவான குரலில், “சரி, நான் போய் வருகிறேன்!”. என்றாள்.

பாதின் சித்திரத்தில் கவனம் செலுத்தியபடியே “சரி, போய்வா!” என்றான்.

போகும்பொழுது ‘இந்த மனிதனின் உள்ளக் கிடக்கை எனக்கு விளங்கிவிட்டது’ என்று எண்ணினாள் மாசோயே. ‘ கேட்போமா’ என்று ஒருமுறை எண்ணினாள். ஆனால் வாய் திறந்து கேட்கமுடியவில்லை. பேசாமல் போய்விட்டாள்.

வீட்டுக்குச் சென்றாள். அங்கே போகின் உட்கார்ந் திருந்தான். முதல் நாள் இரவு நடந்த விருந்தைப் பாராட்டிவிட்டுப் போகவே அவன் வந்திருந்தான். வந் திருந்த அதிதியை மாசோயே உபசரித்தாள்.

அவன் முதலில் மாசோயேயின் ஐசுவரியத்தைப் பற்றிப் பேசினான். பிறகு அவள் வம்சத்தைப் பற்றியும் அவள் தந்தையின் கீர்த்தியைப்பற்றியும் அவருக்கு அரண் மனையில் இருந்த செல்வாக்கைப் பற்றியும் பேசினான். இன்னும் ஏதேதோ பேசினான்.

இவைகளில் சிலவற்றை அவள் கவனத்துடன் கேட்டாள். சிலவற்றிற்குச் செவிசாய்க்கவே இல்லை. ஆனால் அவன் குதிரை சவாரி செய்யும் வீரன் மாத்திரமல்ல; மிகுந்த கபடனும்கூட. மாசோயேயின் இந்த அலட்சியத்தை அவன் அறிந்து கொண்டான். மாண்டலேயின் ராஜ குடும்பத்தைப்பற்றி முதலில் பேச்சை ஆரம்பித்தான். பிறகு அவளுடைய அழகைப்பற்றி வர்ணிக்கலானான். அடிக்கடி அவளுடைய அழகையும் யௌவனத்தையும் புகழ்ந்து பாடலானான். இவைகளையெல்லாம் கேட்கும்போது அவளுக்கு லஜ்ஜையாகத்தான் இருந்தது. ஆயினும் இவைகளால் ஒரு விதமான ஆனந்தத்தையும் கௌரவத்தையும் அவள் அனுபவிக்காமல் இல்லை.

சம்பாஷணை முடிந்தபிறகு போகின் விடைபெற்றுக் கொண்டான். அப்பொழுது அன்றிரவும் அவனைச் சாப்பிட வரும்படி அழைத்தாள் மாசோயே.

ஆனால் அவன் சென்ற பிறகு அவனுடைய பேச்சு வார்த்தைகளை எண்ணி எண்ணி அவள் மனம் புண்பட்டது. அவனை விருந்துக்கு ஏன் அழைத்தோம் என்ற வருத்தமும் ஏற்பட்டது. அவள் உடனே வேலைக்காரனை அழைத்து இன்னும் சில நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அழைப்பு அனுப்பினாள். குறிப்பிட்ட நேரத்தில் விருந்தினர் யாவரும் வந்து சேர்ந்தனர். அன்றும் சிரிப்பு, வேடிக்கை, ஆடல், பாடல் யாவும் நடைபெற்றன. இவைகளெல்லாம் முடிவடையும்போது இரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

களைப்பும் சோர்வும் அடைந்து மாசோயே படுக்கைக் குச் சென்றாள். ஆனால் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. இவ்வளவு நேரம் வரையில் யாருடன் அவள் பொழுதைக் கழித்தாளோ அவர்களில் ஒருவராவது அவள் நினைவுக்கு வரவில்லை. நடந்த நிகழ்ச்சிகள் யாவும் ஏதோ கழிந்த யுகத்தில் நடந்தவைபோலும், ரஸமற்றனவாகவுமே அவ ளுக்குத் தோன்றின. திரும்பத் திரும்ப அவள் மனத் திற்கு ஒரே ஒரு மனிதனைப்பற்றிய நினைவுதான் எழுந் தது. அவன் அவளுடைய உத்யானவனத்தின் ஒரு மூலை யில் உள்ள ஜன சந்தடியற்ற ஒரு வீட்டில் இருந்தான்: அன்றைய இந்த ஆர்ப்பாட்டங்களில் எதுவும் அவன் செவிகள் வரை எட்டவே இல்லை.

5

வெகுநாள் பழக்கத்தின் காரணமாய் பொழுது விடிந்ததும் மாசோயேயின் மனம் பாதினின் பக்கம் விரைந்தது. அவள் அவனுடைய அறைக்குச் சென்று அமர்ந்தாள். வழக்கம்போல அன்றும் அவன் ‘வா’ என்று சொல்லி மரியாதை தெரிவித்துவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கலானான். இந்த மனிதன் மௌனமாகத் தன் அருகே அமர்ந்திருந்தாலும் நம்மைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டான் என்று தோன்றியது மாசோயேவுக்கு. வெகுநேரம் வரையில் என்ன பேசுவ தென்று அவளுக்குத் தோன்றவில்லை. பிறகு சங்கோசத்தை விட்டுவிட்டு, “இன்னும் வேலை எவ்வளவு பாக்கி இருக்கிறது?” என்று கேட்டாள்.

“நிறைய இருக்கிறது!”

“அப்படியானால் இந்த இரண்டு நாட்களாக என்ன செய்தாய்?”

பாதின் இதற்குப் பதில் சொல்லாமல் புகைச் சுருட்டு கள் நிறைந்த பெட்டியை அவள் முன் நீட்டி, “இந்தச் சாராய நாற்றத்தை என்னால் சகிக்க முடியவில்லை” என்றான்.

மாசோயே இந்த ஜாடையை அறிந்துகொண்டாள். அவள் ஆத்திரத்துடன் தடாலென்று பெட்டியைத் தட்டி விட்டு விட்டு “நான் அதிகாலையில் சுருட்டுப் பிடிப்ப தில்லை. சாராய நாற்றத்தை ஒளிக்கவும் முயற்சிப்பதில்லை. நான் அப்படி அற்பத்தனமான குலத்தில் பிறந்தவளும் அல்ல!” என்றாள்.

பாதின் தலை நிமிர்ந்து சாந்தமான குரலில், “ஒரு வேளை அது உன் ஆடைகளில் சிந்திவிட்டதோ என்னமோ? சாராய நாற்றத்தைப்பற்றி நான் இட்டுக் கட்டிப் பேசவில்லை!” என்றான்.

மாசோயே மின்னலைப்போல் எழுந்து நின்றாள் “நீ மகா மோசக்காரன்; பொறாமைக்காரன். ஆகையால்தான் என்னைக் காரணமின்றி இம்மாதிரி அவமானம் செய்தாய். நல்லது! இனி என் துணி நாற்றம் உன் வீட்டில் ஒரு நாளும் வராதபடி செய்துவிடுகிறேன்!” என்று கூறிவிட் டுப் பதிலை எதிர்பார்க்காமலே வேகமாக அவ்விடம் விட்டு அவள் செல்லலானாள். இதற்குள் பாதின் அவளை அழைத்துத் தணிவான குரலில், “இதுவரையில் ஒருவரும் என்னை மோசக்காரனென்றோ பொறாமைக்காரனென்றோ சொன்னது கிடையாது. நீ ஒரேயடியாய்ப் படுவீழ்ச்சியின் மார்க்கத்தில் சென்று கொண்டிருக்கிறாய். ஆகையால் உன்னைச் சற்று ஜாக்கிரதைப் படுத்தினேன்!” என்றான்.

மாசோயே திரும்பி நின்றாள், “நான் படுவீழ்ச்சியின் மார்க்கத்திலா சென்று கொண்டிருக்கிறேன்?” என்று கேட்டாள்.

“எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது!”

“நல்லது; உன்னுடைய புத்திமதியை நீயே வைத் துக்கொள். என் தந்தை எனக்குச் சாபத்தை வைத்து விட்டுச் செல்லவில்லை. நிறைய ஆசிகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். என்னுடன் உனக்கு ஒத்துக்கொள்ளாது!” என்று சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள். ஆனால் பாதின் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டான். எந்தக் காரணத்தை முன்னிட்டாவது ஒருவர் மற்றவருடைய உள்ளத்தை இவ்வாறு தாக்கமுடியுமா? நீண்ட நாளைய அன்பு இம்மாதிரி ஒரே நாளில் விஷமாக மாறிவிடுமா? இவைகளை அவனால் யோசிக்கவே முடியவில்லை.

மாசோயே வீட்டுக்கு வந்து பார்த்தாள். போகின் உட்கார்ந்திருந்தான். அவளைக் கண்டதும் மரியாதையாக எழுந்து நின்று இனிமையாகப் புன்னகை செய்தான்.

அவன் புன்னகையைக் கண்டு மாசோயேயின் புருவங்கள் அவளை அறியாமல் விரிந்தன. “ஏன் ஏதாவது முக்கியமான வேலையாக வந்தீர்களா?” என்று கேட்டாள்.

“இல்லை, அப்படி முக்கியமான வேலை ஒன்றும்–”

“சரிதான், அப்படியானால் இப்பொழுது எனக்கு அவகாசமில்லை!” என்று சொல்லிவிட்டு மாசோயே படி ஏறி மாடிக்குச் செல்லலானாள்.

முதல் நாள் இரவு நடந்த சம்பவங்களை எண்ணிப் போகின் மூளை குழம்பிப் போனான். ஆனாலும் வேலைக்காரன் கையில் ஒரு ரூபாயை வைத்து அழுத்திவிட்டுச் ‘சீட்டி’ அடித்துக்கொண்டே அவன் வெளியே சென்று விட்டான்.

6

சிறு வயதிலிருந்து ஒரு நிமிஷம்கூட ஒருவரை ஒரு வர் பிரிந்ததில்லை. ஆனால் விதியின் கூத்தினால் ஒரு மாத மாக ஒருவரை ஒருவர் முகாலோபனம் கூடச் செய்து கொள்ளவில்லை..

மாசோயே தனக்குள் ‘இது நல்லதாயிற்று.இவ்வளவு நாட்கள் வரையில் என்னைப் பிணித்திருந்த மோகவலை அறுந்து சிதறிவிட்டது.இனி அவனுக்கும் எனக்கும் துளிக் கூடச் சம்பந்தமில்லை’ என்று எண்ணித் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவள் பணக்காரப் பெண். தந்தை இருக்கும்போதே இம்மாதிரிக் காரியங்களைச் செய்யவிரும் பினாள். ஆனால் அடக்கமும், கண்டிப்பான குணமும் உள்ள பாதினின் கோபத்திற்குப் பயந்தே பேசாமல் இருந்தாள். ஆனால் இன்று அவள் சுதந்திரமானவள். அவள் தனக்குத் தானே யஜமானி. ஒருவருக்கும் அவள் பதில் சொல்ல வேண்டியதில்லை. இந்த ஒரு விஷயத்தைவைத்துக்கொண்டு தான் இரவு பகலாக அவள் தன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தாள். ஆனால் ஒரு நாளாவது அவள் தன் உள்ளத்தின் ரகசிய அறையின் கதவைத் திறந்து அங்கே என்ன இருக்கிறது என்று பார்க்கவே இல்லை. பார்த் திருந்தால் பார்க்க முடியுமானால் அவள் தனக்குத்தானே அடங்கியிருப்பாள். அந்த ரகசியமான ஏகாந்த அறையில் இரவு பகலாக இருவரும் எதிர் எதிராக உட்கார்ந்திருக்கிறார்கள். இருவர் கண்களிலும் கண்ணீ ர் வழிகிறது. இருவரும் மௌனமாக இருக்கிறார்கள்.

தன் வாழ்க்கையில் எழுந்த இந்தச் சோகச் சித்திரம் அவள் மனக்கண் முன் தென்படவில்லை. ஆகையால் அவள் வீட்டில் அடிக்கடி ஆடல்பாடல்கள் நடக்கலாயின.

தோல்வியின் வெட்கம். அவளைத் தரையோடு தரையாக்கி விடவில்லை.

ஆனால் இன்றையதினம் மட்டும் ஏன் அப்படிக் கழியவில்லை.

ஒவ்வொரு வருஷமும் தன்னுடைய பிறந்த நாளை அவள் தடபுடலாகக் கொண்டாடுவது வழக்கம். அன்று பெரியவிருந்து நடப்பதுண்டு. இந்த வருஷமும் அந்த வைபவம் மிகுந்த ஆடம்பரத்துடன் ஆரம்பமாயிற்று. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வந்து கலந்து கொண்டார்கள். ஆனால் அவளுக்கு ஒரு வேலையிலும் மனம் கொள்ளவில்லை. காலையில் இருந்தே இவைகளெல்லாம் ‘வீண், வீண் சிரமம்’ என்றே அவளுக்குத் தோன்றின. இவ்வளவு தினங்களுக்குப் பிறகுதான் ‘அவனும் உலகத்தில் மற்றவர்களைப்போல் மனிதன் தான். அவனுக்கும் பொறாமை உண்டு. நமது வீட்டில் நடக்கும் இந்தத் தடபுடல்களெல்லாம் அவன் காதுகள் வரை எட்டாவா? இதனால் அவன் வேலைகள் ஒன்றும் தடைப்படாவா?’ என்று எண்ணலானாள்.

“ஒருவேளை அவன் தன் சலாகையை எறிந்து விட்டுச் சிறிதுநேரம் பேசாமல் உட்கார்ந்திருப்பான். சற்றுச் சஞ் சலமடைந்து வீட்டிலேயே குறுக்கும் நெடுக்கும் நடப்பான். இரவு முழுவதும் தூக்கமின்றிப் படுக்கையில் கிடந்து புரண்டு மனம் கொதிப்பான். சரி. இவைகளைப் பற்றி நமக்கென்ன?” என்று எண்ணி ஒருவாறு மனம் தெளிந்தாள் மாசோயே.

மாசோயே கற்பனையிலேயே ஒருவிதமான ஆனந்தத்தை அனுபவித்து வந்தாள். ஆனால் இன்று திடீரென்று ‘அவைகளில் ஒன்றும் இல்லை. எல்லாம் பொய், ஏமாற்றம்’ என்றே தோன்றின. துர்ப்பலமான பாதினின் தேகம் அசைக்க முடியாத மலையாக ஆகிவிட்டது. எந்தப் புயலும் அதைத் துளி கூட அசைக்க முடியவில்லை..

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வேண்டிய ஏற் பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டுதான் இருந்தன. போகின் தான் சகல காரியங்களையும் இருந்து நடத்தினான். இதைக் கண்ட சிலர் ரகசியமாக ‘இவனே ஒரு நாள் இந்த வீட்டுக்கு எஜமானன் ஆவான். அந்த நாள் இன்னும் அதிக தூரத்தில் இல்லை’ என்று பேசிக்கொண்டார்கள்.

கிராமத்திலுள்ள ஸ்திரீ புருஷர்கள் வீடு நிறைய வந்து கூடி இருந்தார்கள். நாற்புறமும் ஒரே சந்தோஷ ஆரவாரமாக இருந்தது. ஆனால் மாசோயே மட்டும் வெறுப்புடனும் மனச் சோர்வுடனும் காணப்பட்டாள். அவள் முகத்தில் வருத்தத்தின் சாயை நடமாடியது. இந்த வருத்தம் வெளி மனிதர்கள் ஒருவருக்கும் தென்படா வீட் டாலும் வீட்டிலுள்ள பழைய வேலைக்காரர்கள் இரண் டொருவருக்குத் தெரியாமல் இல்லை. ‘இவர்களெல்லாம் எதற்கு? இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிரதி வருஷமும் ஒருவன் வருவான். மௌனமாக இவள் கழுத்தில் மாலையிட்டு இவளை ஆசீர்வதிப்பான். இன்று அந்த மனிதன் வரவில்லை. மாலையும் இல்லை. ஆசீர்வாத மும் இல்லை! ஏன் இப்படி?’ என்று எண்ணினார்கள்.

மாசோயேயின் தந்தைக்கு ஒரு நண்பர் இருந்தார். அந்தக் கிழவர் வந்து, “அம்மா குழந்தாய்? எங்கே இன்று அவனைக் காணவில்லையே?” என்று கேட்டார். அந்தக் கிழவரின் வீடு அடுத்த கிராமத்தில் இருந்தது. பாதினுக்கும் மாசோயேயுக்கும் உள்ள மனவருத்தம் அவருக்குத் தெரியாது. இங்கே வந்த பிறகுதான் வேலைக் காரர்கள் மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டார். அதனால் தான் கேட்டார்.

மாசோயே வெறுப்புடன், “அவனைப் பார்க்கவேண்டு மானால் அவன் வீட்டுக்குச் செல்வதுதானே? இங்கே ஏன் வந்தீர்கள்?” என்றாள்.

“நல்லது, செல்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே அந்தக் கிழவர் செல்லலானார். போகும்போது தனக்குள், “ அவனை மாத்திரம் பார்க்க வரவில்லை. உங்கள் இருவரை யும் சேர்ந்தாற் போல் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேன் !” என்று சொல்லிக்கொண்டார்.

கிழவரின் மனோபாவம் மாசோயேயுக்குத் தெரியாமல் இல்லை. அப்பொழுது முதல் ஒருவிதமான சங்கடத்துட னேயே அவள் நேரம் கழியலாயிற்று. திடீரென்று விளக்கமற்ற ஒரு குரலைக் கேட்டுத் தலைநிமிர்ந்து பார்த் தாள். பாதின் எதிரே நின்று கொண்டிருந்தான். மின்ன லால் தாக்கப்பட்டதைப்போல் இருந்தது அவளுக்கு. ஆனால் கணப்பொழுதில் தன்னைச் சமாளித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு மறுபக்கம் சென்றாள்.

சற்று நேரத்திற்குப் பிறகு கிழவர் வந்தார். “குழந்தாய்! எப்படியாவது இருக்கட்டும். பாதின் உன்னுடைய விருந்தாளி. அவனுடன் ஒரு வார்த்தை பேசினால் என்ன?” என்று கேட்டார்.

“அவனை அழைத்து வரும்படி நான் உங்களிடம் சொன்னேனா?”

“இது என் தவறுதான்!” என்று சொல்லிவிட்டு அவர் செல்லலானார். இதற்குள் மாசோயே அவரை அழைத்து, “சரி என்னைத் தவிர இங்கே இன்னும் அநேகர் இருக்கிறார்களே. அவர்களுடன் பேசுவது தானே?” என்றாள்.

“பேசலாம். ஆனால் இனி அதற்கு அவசியமில்லை. அவன் சென்று விட்டான்!”

மாசோயே ஒருகணம் ஒன்றும் தோன்றாமல் நின்றாள். பிறகு, “என் பாக்கியம்! இல்லாவிட்டால் நீங்களாவது அவனைச் சாப்பிடச் சொல்லியிருக்கலாமே!” என்றாள்.

‘இல்லை, நான் அவ்வளவு வெட்கம் கெட்டவனல்ல!’ என்று சொல்லிவிட்டுக் கிழவர் கோபத்துடன் அவ்விடம் விட்டுச் சென்றார்.

7

இந்த அவமானத்தினால் பாதினின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ஆனால் அவன் ஒருவரையும் குறைகூறவில்லை. தன்னையே வெறுத்துக்கொண்டு “ நல்ல தாயிற்று, என்போன்ற வெட்கம் கெட்டவனுக்கு இது அவசியம் தான் !” என்று சொல்லிக்கொண்டான். அ ஆனால் இந்த அவசியம் அன்று இரவோடு தீர்ந்து விடவில்லை. இதைவிட இன்னும் கடுமையான அவமா னத்தை அடைய வேண்டுமென்று அவன் தலையில் எழுதி யிருந்தது, இது அவனுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தெரிந்தது. அந்த அவமானம் அவன் ஆயுள் வரை மறக்க முடியாமல் கரை கடந்ததாக இருந்தது. – ம இந்தக் கதையின் ஆரம்பத்தில் கூறிய அந்த யசோ தரையின் சித்திரம் எழுதிப் பூர்த்தியாயிற்று. ஒரு மாதத் திற்கு மேலாகச் சிரமப்பட்டு அதை எழுதி முடித்தான், அன்று காலை நேரம் முழுவதும் இந்த ஆனந்தத்திலேயே கழிந்தது.

சித்திரம் அரசன் தர்பாருக்குப் போகப் போகிறது. அதை வாங்குபவனும் தகவல் தெரிந்து பணத்துடன் வந் தான். ஆனால் சித்திரத்தின் மேல் இருந்த துணியை அகற் றியதும் அவன் திடுக்கிட்டுவிட்டான். அவன் சிறந்த ரசிகன். வெகுநேரம் வரையில் கண்கொட்டாமல் சித்திரத்தையே பார்த்துவிட்டு முடிவில் வருத்தமான குரலில் “இந்தச் சித்திரத்தை நான் அரசனுக்குக் கொடுக்கமுடியாது?” என்றான்.

பயத்தினாலும் ஆச்சரியத்தினாலும் நிலைகுலைந்தவனாய் “ஏன்?” என்றான் பாதின்.

“ஏனென்றால் நான் இந்த முகத்தை அறிவேன். மனிதர்கள் முகத்தை வைத்துத் தேவதைகளின் படத்தை எழுதுவது தேவர்களை அவமதிப்பதாகும். இந்த விஷயம் வெளிக்குத் தெரிந்தால் அரசன் என் முகத்தைக்கூடப் பார்க்க மாட்டான்!” என்று கூறிவிட்டு பாதினின் வருத்தம் தேங்கிய கண்களைச் சற்று நேரம் பார்த்து. விட்டுப் புன்னகையுடன், “கொஞ்சம் கவனித்துப் பார்த்தாயானால் இது யார் என்பது உனக்கே விளங்கும். இந்தச் சித்திரம் விற்பனையாகாது!” என்றான்.

பாதினின் கண்களினின்று முன் இருந்த இருள் விலக ஆரம்பித்து அந்தக் கனவான் சென்ற பிறகும் அவன் ஒன் றும் தோன்றாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அவன் கண்களினின்றும் கண்ணீர் பெருகியது. அவன் இவ்வளவு நாட்களாக மிகுந்த சிரமத்துடன், தன் உள்ளத்தில் குவிந்திருந்த சௌந்தர்யத்தை யெல்லாம் திரட்டி எழுதிய படம் புத்தரின் வாழ்க்கையில் வரும் யசோதரையினுடையதல்ல. அவன் காதலி மாசோயேயின் படமாகத்தான் இருந்தது.

அவன் கண்களைத் துடைத்துக்கொண்டே தனக்குள், “கடவுளே! என்னை இப்படியா சோதிக்கவேண்டும்? நான் உன்னை என்ன செய்தேன்!” என்று சொல்லிக் கொண்டான்.

8

போகின் தைரியத்துடன், “தேவரும் உன்னைக் கண்டு பிரியப்படுவார். நான் என்ன மனிதன் தானே ;” என்றான்.

மாசோயே அசட்டையாக, “ஆனால் என்னிடம் அசட் டையாக இருப்பவர்கள் தேவர்களிலும் உயர்ந்தவர்களல் லவா?” என்று கூறி இந்த விஷயத்தை மேற்கொண்டு வளர்க்காமல், “ தர்பாரில் உனக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு என்று கேள்விப்பட்டேன், எனக்காக ஒருகாரியம் செய்வாயா? சீக்கிரம்?” என்றாள்.

போகின் உற்சாகத்துடன், “என்ன வேலை?” என்றான்.

“ஒரு மனிதன் எனக்கு நிறைய ரூபாய் கொடுக்க வேண்டும். அவன் கொடுக்கவில்லை. இதற்கு தஸ்தா வேஜும் ஒன்றும் இல்லை. இதை வசூல் செய்ய ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?”

“ஆஹா! நிச்சயம்! நான் அரசாங்க உத்தியோகஸ் தன் என்பது உனக்குத் தெரியாதா?” என்று கூறி அவன் சிரித்தான்.

இந்தச் சிரிப்பிலேயே பதில் ஸ்பஷ்டமாக வெளியா யிற்று. மாசோயே பதட்டத்துடன் அவன் கையை அமுக்கி “அப்படியானால் ஏதாவது வழி செய், இன்றைக்கே. இனி ஒரு நாள் கூடத் தாமதம் செய்ய எனக்கு இஷ்டமில்லை!” என்றாள்.

போகின் தலையை அசைத்துச் “சரி, செய்கிறேன்!” என்றான்.

இது சாதாரணமான கடன். இதைப்பற்றி ஒருவரும் நினைத்ததே இல்லை. ஆனால் அரசாங்க உத்தியோகஸ்த னின் வாய் வார்த்தையைக் கேட்டு மாசோயேயின் உடல் முழுவதும் படபடப்பினால் துடித்தது. அவள் தனது இருபுருவங்களும் விரிய இதைப்பற்றிய பூர்வ விருத்தாந் தங்களைக் கூறிவிட்டு, “நான் ஒரு தம்படிகூட விடப் போவதில்லை. அட்டை எப்படி ரத்தத்தை உறிஞ்சுகிறதோ அதைப்போல் சகலத்தையும் உறிஞ்சிவிட வேண்டும். இன்றைக்கே! இப்பொழுதே!” என்றாள்.

இந்த விஷயமாகப் போகினுக்கு அதிகமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது அவள் நினைப்பதற்கும் மீறிய விஷயம். அவன் தன்னுடைய சந்தோஷத்தையும் ஆவலையும் ஒருவாறு அடக்கிக்கொண்டு, “அரசாங்கச் சட்டம் ஒருவாரம் அவகாசம் கொடுக்கவேண்டும் என்று இருக்கிறது. அதுவரையில் எப்படியாவது தைரியத்துடன் இருங்கள். அதன் பிறகு எப்படி விருப்பமோ, எவ்வளவு வேண்டுமோ ரத்தத்தைக் குடிக்கலாம். நான் தடுக்க மாட்டேன்!” என்றான்.

“நல்லது, சரி, நீங்கள் சென்று வாருங்கள் ” என்று கூறி அவனைக் கழித்துக் கட்டிவிட்டு மாசோயே மேலே செல்லலானாள்.

கடின சித்தமுள்ள இந்தப் பெண்ணினிடம் போகி னுக்கு அளவு கடந்த ஆசை. ஆகையால், அவளுடைய அசட்டைகளை யெல்லாம் அவன் ஒன்றும் சொல்லாமல் சகித்துக்கொண்டு வந்தான். இன்றும் அப்படியே சகித் துக்கொண்டான். ஆனால் வீடு திரும்பும்போது அவன் மனம் சந்தோஷமடைய ஆரம்பித்தது. ‘ இனி யாதொரு பயமும் இல்லை. என் வெற்றியின் மார்க்கம் சீர்பட இனி அதிகத் தாமதமாகாது. இது உண்மை , அதிகத் தாமத மாகாது. என்று எண்ணினான். எவ்வளவு சீக்கிரத்தில் கடவுள் என்னென்ன ஆச்சரியங்களைச் செய்துவிடுகிறார், என்பதை அவனால் கற்பனை கூடச் செய்யமுடியவில்லை.

9

கடன்காரரின் சம்மன் வந்தது. அதைக் கையில் வைத்துக்கொண்டு. வெகுநேரம் பாதின் பேசாமால் உட்கார்ந்திருந்தான். இப்படி நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவன் ஆச்சரியப்பட வில்லை. அதிக அவகாசம் இல்லை. சீக்கிரம் ஏதாவது செய்தாக வேண்டும்.

ஒருநாள் கோபத்தில் இவனுடைய தந்தையின் வீண் செலவைப்பற்றி மாசோயே கேலி செய்தாள். அதை அவன் மறக்கவும் இல்லை. அவளை மன்னிக்கவும் இல்லை. ஆகையால் அவளிடம் இன்னும் அவகாசம்கேட்டு அதிக அவமானத்தைச் சம்பாதித்துக் கொள்ளவும் அவன் விரும்பவில்லை. அதைப்பற்றி நினைக்கவும் இல்லை. அவன் நினைத்ததெல்லாம் தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் கொடுத்துவிட்டால் தன் தந்தையின் கடன் அடைந்து விடுமா என்பது தான். அந்தக் கிராமத்திலேயே ஒரு லேவாதேவிக்காரன் இருந்தான். மறுநாள் காலையிலேயே பாதின் அவனிடம் சென்றான். ரகசியமாகத் தன் சொத் துக்களை யெல்லாம் விற்றுவிடுவதாகச் சொன்னான். அவன் கொடுக்கிறேன் என்று சொன்ன ரூபாய் கடனைத் தீர்க்கப் போதுமானதாக இருந்தது. பணத்தைப்பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அகாரணமாய் ஒரு மனிதன் அவ மானம் அடைந்தால் அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட அதிர்ச்சி ஏற்படும் என்பது இன்று அவனுக்கு வந்த கடுமையான ஜுரத்திலிருந்து தெரிந்தது. – பகல் பொழுது கழிந்து இரவும் கழிந்தது. அவனுக் குத் தெரியவே இல்லை. நினைவு வந்ததும் கவனித்தான். அன்று தான் தவணையின் கடைசித் தினம்.

அன்று கடைசித்தினம், மாசோயே தன் அறையில் ஒரு மூலையில் தனியாக உட்கார்ந்து ஏதோ கற்பனையில் ஆழ்ந்திருந்தாள். அவளுடைய அகங்காரம் ஒவ்வொரு கணமும் குலைந்து எதிரியின் அகங்காரத்தை அதிகரித்தது மன்றி அவனுக்கு உயர்ந்த ஸ்தானத்தையும் அளித்து வந்தது. அவளுடைய அந்தத் திமிரான அகம்பாவம் அவன் காலடியில் வீழ்ந்து மண்ணோடு மண்ணாகப் போகிறது. இதில் சற்றும் சந்தேகமே இல்லை.

அதேசமயம் வேலைக்காரன் மேலேவந்து பாதின் வந்திருப்பதாகத் தெரிவித்தான். மாசோயே தனக்குத் தானே ஒரு கொடும் சிரிப்புச் சிரித்துக் கொண்டு, “ தெரியும்!” என்றாள். அவளும் அவனைத்தான் எதிர் பார்த்திருந்தாள்.

மாசோயே கீழே இறங்கிவந்ததும் பாதின் எழுந்து நின்றான். ஆனால் அவன் முகத்தைக் கண்டதும் அவள் மார்பின் ரத்தம் உலர்ந்துவிட்டது. அவள் ரூபாய் வேண்டு மென்று விரும்பவில்லை. பணத்தின் மேல் அவளுக்குத் துளியும் ஆசையில்லை. ஆனால் ரூபாயின் மூலம் எப்படிப் பட்ட கொடுமையை இழைக்கலாம் என்பதை இன்று தான் அவள் நேரில் கண்டாள். பாதின் தான் முதலில் பேசினான். “ஏழு நாள் தவணையில் இன்றுதான் கடைசி நாள். ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றான்.

அடடா! உயிர் போனாலும் மனிதர்கள் கர்வத்தை விடுவதில்லை. இல்லாவிட்டால் மாசோயேயின் வாயிலிருந்து ஏன் இம்மாதிரியான பதில் வெளிவருகிறது. “நான் இந்தக் கொஞ்சம் ரூபாயை விரும்பவில்லை. கடன் முழுவதையும் தீர்க்க வேண்டும் என்று சொல்ல வில்லையா?” என்றாள்.

பாதினின் வறண்ட முகத்தில் சிரிப்பு நிறைந்தது. “வாஸ்தவம்! கடன் முழுவதையும் தீர்க்கத்தான் ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன்!” என்றான்.

“எல்லாவற்றிற்குமா? எங்கே சம்பாதித்தாய்?”

“நாளைக்குத் தெரிந்து கொள்ளுவாய். அந்தப் பெட்டியில் ரூபாய் இருக்கிறது. யாரையாவது விட்டு எண்ணி வைக்கச் சொல்!”

வண்டிக்காரன் வாசற்படிக்கு வெளியே இருந்த படியே, “இன்னும் எவ்வளவு நேரமாகும்? அதிக நேரம் தாமதம் செய்தால் இரவு பெகுவில் தங்கவும் இடம் கிடைக்காது!” என்றான்.

மாசோயே எட்டிப் பார்த்தாள். தெருவில் பெட்டி, படுக்கை முதலிய சாமான்கள் ஏற்றிய வண்டி ஒன்று நின்றிருந்தது. பயத்தினால் அவள் முகம் கணத்திற்குள் வெளுத்துவிட்டது. வருத்தத்துடன் அவள் ஆயிரம் கேள்விகள் கேட்கலானாள். “பெகுவுக்கு எதற்காகப் போகிறாய்? வண்டி யாருடையது? எங்கிருந்து இவ் வளவு ரூபாய் கிடைத்தது? ஏன் மௌமாக இருக்கிறாய்? நாளைக்கு எப்படித் தெரியும்? இன்று நீ பேசும்போது-”

பேசிக்கொண்டே அவள் தன்னை மறந்து அவன் அருகேவந்து அவன் கையைப் பற்றிக்கொண்டாள். பிறகு அவன் கையை விட்டுவிட்டு அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு, “அடடா! கடுமையான ஜுரம் வந்திருக்கிறதே! அதுதான் கேட்டேன்! ஏன் முகம் இப்படி வெளுத்துவிட்டது?” என்றாள்.

பாதின் தன்னை விடுவித்துக்கொண்டு சாந்தமாக இனிய குரலில், “உட்காரு!” என்று கூறினான். அவனும் உட்கார்ந்தான். பிறகு, “நான் மாண்டலே செல்கிறேன். இன்று கடைசியாக நீ என்னுடைய வற்புறுத்தலைக் கேட்பாயா?” என்றான்.

மாசோயே தலையசைத்துக் ‘கேட்கிறேன்’ என்று தெரிவித்தாள். பாதின் சற்று அமரிக்கையடைந்து, “என்னுடைய கடைசி வார்த்தை என்னவென்றால் யாராவது ஒரு சிறந்த வரனாகப் பார்த்துச் சீக்கிரம் மணம் செய்துகொள், என்பதுதான். இப்படியே கன்னிப் பெண்ணாக அதிக நாள் இருக்கவேண்டாம். இன்னும் ஒரு விஷயம்-” இதைக் கூறிவிட்டு அவன் சற்றுநேரம் மௌனமாக இருந்தான். பிறகு இன்னும் மிருதுவான குரலில், “இன்னும் ஒரு வார்த்தை; நீ நெடுநாள் வரையில் அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மறக்க வேண்டாம். நாணத்தைப் போலவே கர்வமும் பெண்களுக்கு அழகைத் தரக்கூடியதுதான். ஆனால் அளவுக்கு மிஞ்சி விட்டால்-” என்றான்.

அவன் வார்த்தையை முடிப்பதற்குள் மாசோயே அதைரியமடைந்து அவனை இடைமறித்து, “இவை களெல்லாவற்றையும் இன்னொரு நாளைக்குக் கேட்டுக் கொள்ளுகிறேன். உனக்கு ரூபாய் எங்கிருந்து கிடைத்தது? அதைச் சொல்!” என்றாள்.

பாதின் சிரித்தான். “இதை ஏன் கேட்கிறாய்? என்னுடைய விஷயங்களில் உனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?” என்றான்.

“ரூபாய் எங்கிருந்து கிடைத்தது?”

பாதின் கூட்டி விழுங்கிக்கொண்டு கீழும் மேலும் பார்த்துக்கொண்டே தயக்கத்துடன், தந்தையின் கடனை அவர் சொத்தைக்கொண்டே தீர்த்துவிட்டேன். இல்லாவிட்டால் என்னிடம் என்ன இருக்கிறது?” என்றான்.

“உன் பூந்தோட்டத்தை விற்றுவிட்டாயா?”

“அது தந்தையினுடையதுதானே!”

“உன்னுடைய புஸ்தகங்களெல்லாம்?”

“இனிமேல் புஸ்தகங்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறேன்? தவிர, அவைகளும் அவருடையது தானே!”

மாசோயே ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு “போகட்டும் நல்லதாயிற்று. மேலே சென்று படுத்துத் தூங்கு. வா! என்றாள்.

“இன்று நான் சென்றே ஆகவேண்டும்!”

“இந்த ஜுரத்துடனா? உன்னை இந்த நிலைமையில் விட்டுவிடுவேன் என்று உண்மையிலேயே நீ நம்பு கிறாயா?” என்று சொல்லி அருகேவந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். இந்தத் தடவை பாதின் ஆச்சரியத் துடன் மா சோயேயின் முகத்தைப் பார்த்தான். ஒரு நாழிகைக்குள் அவள் முகமே மாறிவிட்டது. அவள் முகத்தில் கர்வம், நிராசை, துவேஷம் இவைகளின் சின்னம் கூட இல்லை. பயமும் அன்பும் குடிகொண்டிருந்தன. அந்த முகம் அவனை மந்திரத்தால் கட்டுப்பட்டவனைப் போல் ஆக்கிவிட்டது. அவன் பேசாமல் அவளைத் தொடர்ந்து மேலே சென்றான்.

அவனைப் படுக்கையில் படுக்கவைத்து மாசோயே அவனருகே அமர்ந்து, திருப்தியும் கண்ணீரும் நிறைந்த கண்களுடன் அவன் முகத்தைப் பார்த்து, “நீ ஏதோ கொஞ்சம் ரூபாய் கொண்டுவந்து விட்டதனால் உன் கடன் அடைந்துவிடும் என்று எண்ணினாயா? மாண்டலே செல்லும் எண்ணத்தை விட்டுவிடு. என் உத்தரவு இல்லாமல் இந்த வீட்டைவிட்டு வெளியே சென்றால் நான் இந்த மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன். நீ எனக்கு எவ்வளவோ வருத்தத்தைக் கொடுத்துவிட்டாய். இனி என்னால் சகிக்க முடியாது. இதை உன்னிடம் நிச்சயமாகச் சொல்லி வைக்கிறேன்” என்றாள்.

பாதின் ஒன்றும் சொல்லவில்லை. போர்வையை இழுத்துப் போர்த்துக்கொண்டு புரண்டு படுத்துத் தூங்கலானான்.

– நாலு கதைகள், சரத் சந்திரர், மொழி பெயர்த்தவர்: அ.கி.ஜயராமன், முதற் பதிப்பு: 1946, ஜோதி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *