கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 12,112 
 

(பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினத்தை (29.8.1926 – 08.12.1995) முன்னிட்டு)

நாட்டுப் பிரச்சினையளப்பற்றி வந்த பழைய பேப்பர்ச் செய்தியளிருந்தாத் தட்டிப் பாத்திட்டு எனக்கும் தா. நானும் இப்ப வாற செய்தியளைப் படிச்சுப் போட்டு உனக்குத்தாறன்.

‘இந்த நாளையப் பிரச்சனைகளை வச்சு எழுதின கதை’களெண்டு சிலவேளை ரண்டு பேருக்குமே பரிசு கிடைக்கலாம்…

‘என்ராப்பா உப்பிடிக் களைச்சு விழுந்து ஓடிவாறாய்?’

‘வீடியோக் கடை பூட்டப் போறாங்கள். எடுத்த ‘கெசட்’டுகளைக் குடுத்துப்போட்டு, வேற படங்கள் எடுக்கப்போறன்’

‘வீடியோ’க் கடைக்கெண்டா, நானும் வாறன்’

‘கெதியா வா. எக்கணம் எட்டரைக்குப் பூட்டப்போறான்’

‘இலங்கைப் பிரச்சினை எப்பிடி, ஏதும் கேள்விப்பட்டியே?’

‘அதைப்பற்றிக் கதைச்சா விசர்வரும். வேற கதை இருந்தாப் பறை’

‘எத்தின ‘கெசட்’ எடுத்தனி?’

‘மூண்டு’

‘இண்டைக்குக் குடுக்காட்டி என்ன?’

‘ஏன். நீ பாக்கப்போறியே?’

‘சும்மா’ ஒருக்காப் பாப்பம்’

‘மூண்டையும் என்னெண்டு ஒரு நாளில பாக்கப்போறாய்?’

‘இது, நான் எடுக்கேல, என்ர பக்கத்து ‘றூம் மேட்’ முந்தநாள் பாத்திட்டு நேத்துத் தந்தது. ராத்திரியே நானும் மனிசியும் பாத்திட்டம். இண்டைக்குக் குடுக்கப்போறன். ஒருநாள் பிந்திக்குடுத்தால் ஒவ்வொண்டுக்கும் அய்வஞ்சு ‘பிறாங்’ கூடக் குடுக்க வேணும். வேணுமெண்டா நீ எடுத்துக்கொண்டு போயிற்று நாளைக்கு அய்வஞ்சு பிறாங் கூடப் போட்டுக் ‘கெசட்’டுகளைத் திருப்பிக் குடு’

‘அப்ப, உதில நில்;;, நான் போய் வேற படக் ‘கெசட்’ ரண்டு எடுத்தாறன்’

‘சிவாஜியோ எம்ஜியாரோ திறம் நடிகன்?’

‘எம்ஜியார்தான்!’

‘எம்ஜியார் சிவாஜியின்ர ஒரு வசனத்துக்குக் காணுமே?’

‘உனக்கு விசர். ஏம்ஜியாற்ர ஒரு கம்பு வீச்சுக்குச் சிவாஜி கிட்ட வருவானே?’

‘சிவாஜியின்ர வாள் விச்சுக்கு எம்ஜியார் வகை சொல்வானே?’

‘அப்பிடிப் பாக்கிறெண்டா, சத்தியராஜைப் போல சண்டைக் காட்சியள்ல ‘துவள்’ பறக்க ஆரால முடியும்?’

‘ஏன் கமலகாசன் என்ன குறைஞ்சவனே?’

‘கமலகாசன் காதல் காட்சிகிள்லதான் திறமா நடிப்பான்’

‘அதுக்கும் தோதான சோடி கிடைச்சால்தான் நல்லா நடிப்பான்’

‘ஏன். சிறீதேவியும் கமலகாசனும் சோக்காத்தானே நடிச்சது?’

‘சிறிதேவியின்ர கதைய விடு. அவள் இப்ப ஹிந்திக்காறரோட நடிக்கிறாள்’

‘அப்பிடிப் பாத்தா, ஜெயலலிதா கெட்டிக்காறி’

‘ஜெயலலிதா கெட்டிக்காறியெண்டு எனக்கு அப்பவே தெரியும்’

‘எதைக் கொண்டு சொல்லுறாய்?’

‘எம்ஜியாரோடையும் சிவாஜியோடயும் கோசு போகாமல் நடிச்சது ஜெயலலிதாதான்’

‘சரியடாப்பா, இதைப் பேந்து பறைவம். இப்ப நேரஞ்செண்டுபோச்சு, படக்கடை பூட்டப்போறான்’

‘என்ன, போனோடன எடுத்துக் கொண்டு வாறாய்?’

‘அக்காவின்ர புருஷன் கடையில அந்தக் ‘கெசட்’டை திருப்பிக் குடுத்துப்போட்டு வேற புதுக் ‘கெசட்’ அஞ்சு ஏடுக்க நிண்டார். காய், குடுக்கப்போன ‘கெசட்’டை நான் அப்பிடியே வேண்டிக் கொண்டந்திட்டன். வேணுமெண்டா நீ இதில ரண்டைக் கொண்டு போ. இப்பிடி ஆளையாள் மாறி எடுத்தமெண்டா, காசு குறையும்;; படமும் பாக்கிறதாப்போம்’

‘கொத்தார் ஒண்டடியா ஏன் அஞ்சு ‘கெசட்’ எடுக்கிறார்?’

‘காய், அவுட்டப்பரிசில இருக்கிறவர். ஆளுக்காள் மாறி ஒரு நாளைக்குள்ள பாத்து முடிச்சிடுவினம்’

‘உண்ணாணயெடாப்பா அநியாயம் சொல்லப் படாது, எங்கட சனங்கள் இலங்கையில இருக்கேக்கயும் கலை உள்ளங்கொண்டவைதான்; அகதியளா இஞ்ச வந்தும் கலை உள்ளத்தோடதான் இருக்குதுகள்’

‘நாவூறு படக்கூடாது. தமிழன் எங்க – எதில கோசு போனவன்’

‘பின்ன என்ன, அதை ஒருக்காச் சொல்ல வேணுமே?’

‘அது சரி, தாருந்த கலைச்சங்கம் வைச்சு நடத்திறது?’

‘எட கோதாரி, உனக்கு இன்னும் தெரியாதே? அவங்கள் கலைச்சேவைக்கெண்டே பிறந்தவங்கள். எங்க போனாலும் அவங்கட கெட்டித்தனத்தைப் பற்றித்தானே சனங்கள் பறையிது. ஐரோப்பாவில் தமிழாக்களின்ர புகழ் கொடி கட்டிப் பறக்கிறதும் அவங்களாலதான்’

‘உண்ணாண நீ சொல்றது உண்மைதான். அந்தக்காலத்திலயும் எங்கட ஆக்கள் இந்தியாவிலிருந்து பெரிய மோளம் சின்ன மோளச் ‘செற்’றுகளைக் கொண்டு வந்து கோயில்களில ‘சதிர்க்கச்சேரி’ நடத்தி யாழ்ப்பாணத்தில கலைச்சேவை செய்தவே, வெளிநாடுகள்ல அகதிகளா வந்திருந்தும், அதுபோல இந்தியாவிலிருந்து சினிமா நடிக நடிகையளையும் பாட்டுக்காறரையும் கொண்டு வந்து. சோக்கான ‘இன்னிசை இரவும், பாட்டுக்குப் பாட்டுப் போட்டியும் நடத்தி, தங்கப் பதக்கம் பரிசும் குடுக்கினம்’

‘உதுக்கெல்லாம் காசெங்கால?’

‘என்னெண்டு தெரியேல் ஆனா அவங்களிட்ட காசு தூள் பறக்குது’

‘கெட்டிக்காறங்கள். தமிழ்த் தொண்டு, கலைத்தொண்டு. கடவுள்த் தொண்டு, கோயில்த் தொண்டென்டு சேவை செய்யிறவையக் கடவுள் கடைசிவரையிலும் கை விடார்’

‘ஐரோப்பாவில் எங்கால தமிழ்க் கடவுள்?’

‘இல்லாட்டி, நாங்கள் ஒரு தமிழ்க் கடவுளை உண்டாக்கலாம்தானே? இஸ்ரேல்க்காற வேதக் கடவுள் தமிழ்ப் பகுதியில் வரலாமெண்டா, ஏன் தமிழ்பகுதியில இருக்கிற எங்கட கடவுள் பிரான்சில வரக்கூடாது?’

‘இதென்ரா மச்சான் இதுகும் ஒரு பகிடியே?’

‘உனக்கு ஒரு இழவும் தெரியாது, இலங்கையிலிருந்து அகதியளா வந்தவேயும், ‘இமிக்கிரண்’டாயிருக்கிறவேயும் சேந்து ஒரு தமிழ்க் கடவுள் உண்டாக்கியிருக்கினம். தமிழ்க்கோயில் கட்டி அதுக்கெண்டு ஒரு சங்கம் வைச்சு, காசு சேர்த்து நாள் தவறாமல் பூசை செய்யினம். லண்டன், அமெரிக்காவிலயும் இப்பிடி முந்தியே கட்டி வைச்சிருக்கினம். இதை அறிஞ்ச சிங்களப்பிள்ளையள், தாங்களும் ஆமுத்துருமாரைக் கூப்பிட்டு விகாரையள் கட்டி எழுப்புகினம். இவையள் இஞ்சால பூசை வைச்சுக் கொண்டாட அங்கால அவங்களும் இவேக்குக் கோசு போகாமல், ‘புத்தஞ்சரணங்கச்சாமி, சங்கஞ்சரணங்கச்சாமி, தம்மஞ்சரணங்கச்சாமி;’ யெண்டு பவித்தாரங்கள் சொல்லிப் பூசை செய்யினம்’

‘இந்தத் தொண்டு போதாதெண்டு ‘கும்பலுக்க கோவிந்தா’வெண்ட கணக்கா இன்னொரு தொண்டும் நடக்குது’

‘அதென்னடாப்பா புதுத் தொண்டு?’

‘லண்டன், ஜேர்மனி, கனடா, நோர்வே, சுவிஸ் இப்படியான வெளிநாடுகளிலயும் கலை இலக்கியச் சேவை செய்தவை வீடு வாசல், கார், ரீவி, றேடியோ வேண்டினதோட களைச்சுப் போட்டினமெண்டு அறிஞ்ச இவேயும் அவேக்குக் கோசு போகாமல் இலக்கியச் சங்கம் உண்டாக்கித் தமிழுக்குத் தொண்டு செய்யினம். கருத்தோ கொள்கையோ இல்லாட்டியும் தமிழுக்குத் தொண்டு செய்யிறதோட தவிச்ச முயலுக்குத் தண்ணி வாக்கிற சாடை அகதியளாயிருக்கிறவேயின்ர நலனைப் பாதுகாக்க நல்லாக் கயிட்டப்படுகினம். இப்பிடியெல்லாம் கலைக்கும், தமிழுக்கும், கடவுளுக்கும், கோயிலுக்கும் தொண்டு செய்யிற ‘தியாகி’யளின்ர ‘கியாதி’ உலகமெல்லாம் பரவுறதைப் பாத்து மற்றவே பொறாமையில, ‘உதெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுக’ளெண்டு கேலி பண்ணித் திரியினம்’

‘அதாரது அப்பிடிச் சொல்ற பேயன்கள்?’

‘அவேதான் சமுதாய முன்னேற்றக் கலை இலக்கியக்காறர்’

‘அவேயின்ர முன்னேற்றமும் மண்ணாங்கட்டியும்’

‘ஆனா மச்சான், அவங்கள் சொல்றதிலயும் கன நாயமிருக்கு: நாங்களல்லோ வேணுமெண்டு அவங்கட நாயத்தை மறைக்கிறனாங்கள்’

‘அவங்களில என்ன நாயத்தைக் கண்டு போட்டாய்?’

‘நீ கோவிக்காதை. நான் சும்மா பகிடிக்குச் சொன்னனான்’

‘அதுதான் பாத்தன். எடுத்ததுக்கெல்லாம் மாக்ஸியம், லெனிசியம், கம்மூனிசம், அந்த இஸம் இந்த இஸமெண்டு கத்துறதுதான் அவேக்கு முழு நேர வேலை. சவுந்தரராஜன், யேசுதாசன், அல்லது பாட்டுக்குப் பாட்டுப் படிக்கிற சினிமாப் பாட்டுக் காறரைப் போல சனங்கள் மத்தியில உவையால புகழ் பெற ஏலுமே? இஞ்ச பார், இண்டைக்கும் ‘பொம்மை’யில் கலைத்தொண்டு செய்யிறவேயப்பற்றித் தான் விளம்பரம் போட்டிருக்கு. இப்பிடியெல்லாம் வெளிநாடுகளிலயும் தமிழ்க்கலை வளர்க்கிறது தமிழருக்குப் பெருமைதானே? இது இந்த மொக்குக்கழுதையளுக்கு விளங்காது. இந்தமாதிரிக் கலை, கடவுள், கோயிலெண்டு தொண்டு செய்;ய இவையெல்லாம் குடுத்துவைக்கவேணும்’

‘எனக்கொரு சந்தேகம் மச்சான்’

‘என்ராப்பா அது. இருந்தாப்போல…….?’

‘அப்புடியில்ல, கொஞ்ச நாளா மனதுக்க குடையிது’

‘சரி, விளப்பமாச் சொல்லன்?’

‘இலங்கையில் உப்பிடியான தொண்டு செய்த சனங்கள்தானே பெருவாரியாக அழிஞ்சது. அப்ப இந்தக்கடவுளும் கோயிலும் எங்கே போனது?’

‘ம்……………?’

‘என்ன மச்சான் முழுசிறாய்?’

‘நான் நினைக்கிறன். அப்பிடியெல்லாம் தொண்டு செய்தவேயில கடவுள் ஆக நேசம் வச்சபடியால் சரியான கஷ்டத்தைக் குடுத்து அவையப் பரலோகத்துக்குக் கூப்பிட்டுத் தன்னோட வைச்சிருக்கிறார்….’

‘எட அப்பிடியே…..? நீ சரியான விண்ணன் தான்ராப்பா. இந்தப் பெரிய சங்கதியளக் கூட வலு சுளுவாகக் கண்டுபிடிச்சிருக்கிறாய். டார்வின் உன்னட்ட பிச்சை எடுக்கவேணும்’

‘பின்ன, நான் என்ன சும்மா லேசுப்பட்ட ஆளெண்டே நினைச்சனி?’

‘அப்ப, நான் கடன் பட்டெண்டாலும் கலைச்சங்கம் நாளைக்கு நடத்திற இன்னிசையிரவுக்கும், வாற ஞாயிற்றுக்கிழமை கோமாளியளின்ர கலை விழாவுக்கும் கட்டாயம் போறதுதான்’

‘அப்பிடியெண்டா, எனக்கும் சேத்து ‘வீடியோ’க் கடையில பத்து ‘டிக்கேற்’ எடு அப்பிடி எடுத்தா ஒரு ‘டிக்கேற்’ காசு கழிவு’

‘எட மச்சான், பாட்டுக்குப் பாட்டுப் போட்டியில் நாங்களும் கலப்பமோ?’

‘இதுவும் ஒரு பகிடியே? கட்டாயம் கலக்கிறதுதூன். வாற படங்கள் ஒண்டும் விடாமல் ஒழுங்காப் பாத்துப் பழகின எங்களுக்கு உதென்ன பெரிய காரியமே?’

‘ஒரு ‘றிகேஷல்’ பாப்பம் நான் முதல் எழுத்துச் சொல்றன். நீ ‘டக்’கெண்டு பாட்டைத் துவக்கு’

‘சரி, கேள்?’

‘ஆ….. ‘

‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்?’

‘சரி, நி…..’

‘நினைத்தேன் வந்தாய் நூறு வயசு’

‘கா…………’

‘கால்கள் ஏறுது மேலே’

‘நீ….’

‘நீ ஒரு காதல் சங்கீதம்’

‘ ‘வெறிகுட்’ உண்ணாணை மச்சான் நீ கட்டாயம் தங்கப்பரிசு தட்டத்தான் போறாய். ‘கலைஞ’னெண்ட பேரும் புகழும் எடுக்கப் போறாய்’

‘அப்பிடியெண்டா, நாங்களும் ஒரு கலைச்சங்கம் துவங்குவமோ?’

‘ஓம் மச்சான். அச்சா ஐடியா’

‘அப்ப, தமிழ்ச் சினிமாப் படங்கள்ல வாற முழுப்பாட்டையும் ஒங்கா மனப்பாடம் பண்ணுவம். அப்பதான் சங்கீத ஞானம் வரும்;;;; மூளையும் விருத்தியடையும். பிறகு பாட்டும் எழுதலாம், நாடகமும் போடலாம்’

‘நாடகமோ?’

‘ஏன், போட ஏலாதோ?’

‘நீ யோசிக்கிறது எனக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான படங்கள் பாத்துத் தள்ளுறம். அதில ஒரு கதைய அப்பிடியே எடுத்து நாடகமாகப் போடுவம்…’

‘ஏன், இப்பிடிச் செய்தால் என்ன?’

‘என்ராப்பா அது?’

‘எழுத்தாளிரிட்ட நல்ல ஒரு கதை எடுத்து நாடகமாக்கினால் நல்லதுதானே?’

‘உண்ணாணை உனக்கு விசர்’

‘ஏன், ‘அது சரியில்ல’யெண்டுறியோ?’

‘பின்ன என்ன, நாங்கள் மாயிறது. அவங்கள் பேரெடுக்கிறதே?’

‘அவங்களும் மாய்ச்சல்பட்டுத்தானே எழுதிறவங்கள்?’

‘அவங்களத் தொடுத்தா எங்கட எண்ணம் ‘பிளாங்’காய்ப் போயிடும்’

‘அதுவும் சரிதான்….’

‘நாங்கள் செய்யிறதும் கலைத் தொண்டுதானே.’

‘அது சரி’

‘அப்ப, நான் போட்டு வாறன். பிறகு றூமில சந்திப்பம்’

‘ஓமோம் படக் ‘கெசட்’டுகள் கவனம். பத்திரமாக் கொண்டு வந்து குடுத்துப்போடு’

‘ ‘ஓகே’…. இனி இதுகள்தானே எங்கட சீவியம்’

‘உதென்ன, கையில சுறுட்டி வைச்சிருக்கிறாய்?’

‘பேசும் படம், பொம்மை, தமிழ்ச் சினிமா’

‘நீ சரியானஆள்தான்ராப்பா…. படிச்சுப்போட்டுத் தா, ஒருக்காப் பாப்பம்’

‘இதுகள்ல நான் அவ்வளவு ‘இன்ரஸ்ற்’ இல்ல. என்ர மனிசிக்காறி படிக்கிறதுக்காக எடுக்குறனான்’

‘பறவாயில்ல. அவ படிச்ச பிறகு தாவன். ஏன்ர மனிசிக்காறியும் பாக்கட்டன்’

‘அதுக்கென்ன பொம்புளயளும் இதுகளைப் படிச்சாத்தானே ‘பொச்சம்’ தீரும். அப்ப நான் பேந்து சந்திக்கிறன்’

‘மச்சான், கதையோட கதையா ஒரு முக்கிய விஷயம்’

‘என்ராப்பா, போகவிட்டுப் புறத்தால கூப்பிடுறாய் என்னெண்டு சொல்லு?’

‘நாங்கள் துவக்கப்போற கலைச்சங்கத்தைப் பற்றி ‘நோட்டீஸ்’ அடிக்கிறதோட, விளக்கமா இலங்கைப் பத்திரிகைகளுக்கும் ‘விளம்பரம்’ குடு’

‘இப்ப என்ன அவசரம்? சங்கத்தைத் துவக்கிப்போட்டு விளம்பரத்தை விளப்பமாகக் குடுப்பம்’

‘இதின்ர ‘உள்சங்கதி’ உனக்கு விளங்கேல’

‘அதென்ன உள்ச் சங்கதி?’

‘முதல்ல எங்கட குடும்ப ஆக்களை அங்கத்துவமாகச் சேத்துப்போட்டு, பிறகு எங்கட சொல்லைக் கேட்டு நடக்கிறவையப் பாத்துச் சேர்ப்பம். மிச்சத்தைப் பேந்து ஆறுதலாச் சொல்றன். இப்ப நீ விளம்பரத்தைக்குடு’

‘சும்மா சொல்லக்கூடாது உண்ணாணை மச்சான் நீ வலு கெட்டிக்காறன்தான்’

‘எனக்குந்த ‘முகஸ்துதி’யொண்டும் பிடிக்காது. சரி மறந்து போகாதை இண்டைக்கே விளம்பரத்தைக் குடுத்துப்போடு’

‘ஓக் கே’

‘மச்சான், ஒரு வில்லங்கம், நேத்துக்குடுத்தித் தலை சுத்துது’

‘ஏன், ஏதும் வித்தியாசமாய்ப் பாவிச்சனியே?’

‘அதொண்டுமில்ல, நேத்து ஒரு எழுத்தாளர் சங்கத்தால கடிதமொண்டு வந்திருக்கு’

‘ஏன்ராப்பா, ஏதும் கொழுவல் கிழுவல் – குடுக்கல் வாங்கலே?’

‘அப்பிடியொண்டுமில்ல, ‘சிறுகதைப் போட்டி’ யொண்டு நடத்துகினமாம். எப்பிடியெண்டாலும் ‘தெண்டிச்சு’ ஒரு கதை எழுதிக் கூடிய கெதியில அனுப்பட்டாம்’

‘அதுக்கேன் தலை சுத்துவான்?’

‘உதுவும் ஒரு கேள்வியே? ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினோவுடன் என்னையும் எழுத்தாளனெண்டு மதிச்சுக் கடிதம் அனுப்பியிருக்கினம். எனக்கோ ஒரு இழவும் தெரியாது. அதுதான் விஷயம்’

‘எனக்குக் கதைகிதை எழுதத் தெரியாதெண்டு உடன பதில் எழுதிப் போடன். பேந்தேன் கிடந்து முழுசிறாய்?’

‘சிறுகதைப் போட்டியெண்டா, பொதுவாக அறிவித்தலல்லோ போடுறது, தனிப்பட்டவேக்கு கடிதம் எழுதிறேல்லயே?’

‘அதுதானே? ஆனா, பத்திரிகையில் விளம்பரமும் போட்டிருக்கினம்’

‘பேந்தேன் தனிப்பட்ட முறையில கடிதம் போடுவான்?’

‘அந்தச் சங்கத்தில இருக்கிற ஆளொருத்தர் எனக்கு வேண்டியவர். ஏன், அவேயின்ர கூட்டத்துலயும் ‘தனிப்பட்டவேக்கும் கடிதம் அனுப்புற’மெண்டு வாய் தடுமாறிச் சொன்னதை நீ கவனிக்கேலயாக்கும்?’

‘நான் வடிவாக் கவனிச்சனான்’

‘அது கிடக்க பரிசுத் தொகை எவ்வளவு?’

‘மூவாயிரம் பிராங்’

‘எட, ‘பேய்க்’ காசு என்ன? அப்பிடியெண்டா நானும் கதை எழுதப் போறன்’

‘அது கெட்டுது போ. என்ர தலைச் சுத்து ஆறேல்ல. அதுக்கிடையில நீ ஒரு பக்கத்தால..’

‘ஏன். கதை எழுதுறது என்ன பெரிய வேலையே?’ இதுவரையில ஒரு தொகைப் படக் கெசட்டுகள் பாத்திட்டம். பிறகு கதைக்கென்ன பஞ்சம், எழுதித் தள்ளுறதுதானே? பேந்தேன் மண்டையைப் போட்டு உடைப்பான்?’

‘எட அறுப்பே, நான் இதுகளை இம்மட்டு நேரமா யோசிக்கேல மச்சான்’

‘அவே, எழுதிறவேய முன்னுக்குக் கொண்டுவர யோசிக்கினம். எழுத்தாளரைப்பற்றி யோசித்திருந்தா, ஏன் உனக்குக் கடிதம் எழுதப்போகினம்? இந்தச் சின்ன விஷயம்கூட உனக்கு விளங்கேல’
‘பரிசு கிடைக்காட்டிலும் காரியமில்லை. ‘கலைச்சங்கம் நடத்திறவே சரக்குள்ளவங்க’ளெண்டு; மதிச்சிட்டாங்களே, அது பெரிய வெற்றிதானே?’

‘அப்ப. இனி நாங்கள் ராப்பகலாகவும் இன்னிசை நிகழ்ச்சிகளை நம்பி நடத்தலாம்…’

‘நாங்கள் கலைச்சங்கம், நடத்திய பாட்டுக்குப் பாட்டுப் போட்டி வச்சுப் பரிசு குடுக்கேக்க, ‘எட, நெடுகலும்; கேட்டுச் சவுத்துப்போன பிற்போக்குச சினிமாப்பாட்டுக்குத் தங்கச்சங்கிலி மோதிரம் குடுக்கிறாங்க’ளெண்டு எங்களைக் கிண்டல் பண்ணினவேயின்ர வாயளை மூட இதுதான் நல்ல சந்தர்ப்பம். ஆனபடியா, நீயும் கதை எழுதி அனுப்பு, நாம் எழுதி அனுப்புறன். ஆருக்குப் பரிசு கிடைக்குதோ அதை ரண்டாப் புறிச்சு எடுப்பம்’

‘நாட்டுப் பிரச்சனையளப்பற்றி வந்த பழைய பேப்பர்ச் செய்திகளிலிருந்தாத் தட்டிப் பாத்திட்டு எனக்கும் தா. நானும் இப்ப வாற செய்தியளைப் படிச்சுப் பாத்திட்டு உனக்குத் தாறன். ‘இந்த நாளயப் பிரச்சினைகளை வச்சு எழுதின கதை’களெண்டு சிலவேளை ரண்டு பேருக்குமே பரிசு கிடைக்கலாம்…’

‘எனக்குத் தனிப்பட்ட முறையில கடிதம் எழுதினபடியால், நான் நினைக்கிறன், எனக்கு எப்பிடியும் முதல் பரிசு கிடைக்கும். உனக்கு ரண்டாம் மூண்டாம் பரிசு கிடைச்சாலும் பரவாயில்லை. ‘பேய்க்’காசு. பிறகு, புறிச்சு எடுப்பம்’

‘அப்ப, ‘பேப்பர் நியூஸ்க் கட்டிங்’குகளை மறக்காமல் தேடி எடுத்துப் படிச்சுப்போட்டு எனக்குத் திருப்பித்தா, என்ன?’

‘நாங்கள் ஒரு மோட்டுவேலை செய்துபோட்டம். சினிமாச் செய்தி விளம்பரப் பேப்பர்களைச் சேத்து வச்ச மாதிரி நாட்டுப் பிரச்சனையள் வந்த ‘பேப்பர்க் கட்டிங்’குகளையும் சேத்து வைச்சிருக்கலாம். அதுகள்ல எங்களுக்கு ‘இன்ரெஸ்ற்’ இல்லாமல் போட்டுது….’

‘போன சவத்தை விட்டிட்டு, இனி வாறதைக் கவனிப்பம். தேடி எடுத்துப் படிச்சாப் போச்சு….’

‘ஓக்கே ……ஓக்கே….’

(பாரீஸ் ‘ஓசை’ சஞ்சிகையில் 1990 வெளிவந்தது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *