சாக்ரடீஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 3,747 
 

(இதற்கு முந்தைய ‘பதிவிரதை’ காந்தாரி கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

இன்றைய இந்து சமுதாயத்தில் பெரிய கொடுமையாக இருப்பது வரதட்சிணை வாங்கும், கொடுக்கும் வழக்கமாகும்.

இதில் விந்தை என்னவென்றால் சாஸ்திரங்களில் வரதட்சிணை கொடுப்பது பற்றி எந்த விதியும் இல்லை! அதைவிடப் பெரிய விந்தை என்னவென்றால் தமிழ் இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் ஆண்கள்தான் பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துள்ளனர்.

மனுதர்ம சாஸ்திரம் எழுதப்பட்ட காலத்திலும் இந்த வழக்கம் இருந்தது. பெண்ணின் அப்பா வரதட்சிணை வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் பெண்ணை விற்பதற்குச் சமமாகிவிடும் என்று சாடுகிறார். ஒரு துளிக்கூட வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் அது அசுரர் திருமணமாகிவிடும் என்றும் கூறுகிறார் மனு.

பெண்களே பெற்றுவந்த இந்த வரதட்சிணை எப்படி தலைகீழாக மாறியது? இது ஆராய்ச்சி செய்யவேண்டிய விஷயம்.

தமிழ் மன்னர்கள் மூவேந்தரும், குறுநில மன்னர்களின் பெண்களை மணக்க முயன்றபோது பெண்களுக்கு நிறைய பணம் கொடுத்ததை சங்க இலக்கியப் பாடல்கள் வர்ணிக்கின்றன.

இதோ ஆயர் முறைமையைப் பாடும் குரவைக் கூத்தாடும் தலைவி, “கூடிக்கொல்லும் தன்மையுடைய ஏற்றின் கொம்புகளுக்கு அஞ்சுகிறவனை ஆயமகள் மறு பிறப்பிலும் விரும்பமாட்டாள்..” (கலி 103: 63-64) என்கிறாள்.

“அஞ்சாதவராய் உயிரைத் துறந்து கொலைத் தொழிலையுடைய ஏற்றை வருத்தித் தழுவதற்கு நெஞ்சில்லாதவர்கள் ஆயமகளிர் தோளை அடைவது அரிதிலும் அரிது..” (கலி 103: 65-66).

ஆயமகளிர் ஆயரின் வீரத்தையே தம் ‘காதலுக்கு விலையாக’ மதித்தனர். அவர்களின் மறநெஞ்சின் மாண்பு மிகப் பெரியதேயாகும்.

ஒரு சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பையும், மரியாதையையும் கொண்டு அது எவ்வளவு நாகரீக முன்னேற்றம் உடையது என்று அளந்துவிடலாம்.

இந்த வகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மற்ற நாகரீகங்களை ஒப்பிடுகையில் இந்திய நாகரீகம் முன்னேறியிருந்தது என்று துணிந்து கூறலாம்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தாத பண்டைய சமுதாயம் எதுவும் இல்லை. எல்லா நாகரீகங்களிலும் 99 சதவிகித அரசர்களையும், ஒரு சதவிகித அரசிகளையும் காண்கிறோம். கவிஞர்கள் முதல் மருத்துவர்கள் வரை, எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான்.

ரிக் வேதத்திலும், சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் பெண் கவிஞர்கள் எண்ணிக்கை கூட வேறு எந்த சமுதாயத்திலும் இல்லை.

குழந்தைகளைப் பெறுவதும் அவர்களை ஆரோக்கியமாக நற்பண்புகளுடன் வளர்ப்பதும் பெண்களின் கடமையாக இருந்தது. இல்லத்தரசி என்பதே அவளுடைய முக்கியத் தொழில். ஒரு ஒளவையாரும், ஆண்டாளும், காரைக்கால் அம்மையாரும், கங்காதேவியும், மீராபாயும், ஜானாபாயும் விதிவிலக்குகளாவர். “மனைக்கு விளக்காகிய வாணுதல் (புறம் 314) “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (குறுந்தொகை 135) என்பன இலக்கியச் சான்றுகள்.

போருக்குச் செல்லுதல், வேட்டையாடுதல், நிலத்தை உழுது பயிர் செய்தல், ஆயுதங்களை உருவாக்கும் இரும்பாலை நடத்துதல் போன்ற தொழில்களில் எல்லாம் ஆண்களை மட்டுமே காண்கிறோம். தர்மயுத்தம் (அறப்போர்) நடத்தும் மன்னன் பெண்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு முரசுகொட்டி அறிவித்த பின்னரே போர் நடத்துவான். (புறம் 9 நெட்டிமையார் பாடல்). கண்ணகி மதுரையை எரித்தபோதும் பசு, பத்தினி, பார்ப்பனர் ஆகியோரை விடுத்து மற்றவர்களை எரிக்கும்படி அக்னி தேவனுக்கு உத்தரவிடுகிறாள்.

ராமாயணத்தில் தசரதனுக்கும், சம்பரனுக்கும் நடந்த யுத்தத்தில் தேரோட்டிச் சென்று தசரதன் உயிரைக் காத்த கைகேயி, முல்லைப்பாட்டில் மன்னனுடன் பாசறைக்குச் சென்ற (முல்லை வரி 45-49) மகளிர் விதிவிலக்குகள். பொதுவாக வீரமகன்களை உருவாக்குவது மட்டுமே அவர்கள் பொறுப்பு, வீரப்போரில் ஈடுபடுவது அல்ல.

ஆயினும் இரண்டாயிரம் ஆண்டு பாரத வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேரடியாக ஆட்சிபுரிந்த அரசிகளைப் பற்றி கேள்விப் படுகிறோம். மதுரையில் மீனாட்சி அரசாட்சி செய்ததும், பட்டாபிஷேகம் செய்து கொண்டதும், இன்றுவரை ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை வதம் செய்த தேவியின் உருவத்தையும், ஓவியத்தையும் இந்தியா முழுதும் காணலாம். (எல்லோரா, மகாபலிபுரம் சிற்பங்கள்).

இவைகளை புராணம் என்று ஒதுக்கி விட்டாலும் கல்வெட்டுகள், சாசனங்கள் மூலம் பல ராணிகளை அறிகிறோம்.

சந்திரகுப்த விக்கிரமாதித்தனின் மகளான பிரபாவதிதேவி தன் கணவன் (வாகடக வம்ச மன்னன்) இளவயதில் இறந்ததால் அரசு கட்டில் ஏறினாள். குஜராத்தை சகரர்களிடமிருந்து வெல்வதில் தகப்பனுக்குத் துணை புரிந்தாள்.

ஹர்ஷனுடைய ஆட்சியில் அவன் சகோதரி ராஜ்யஸ்ரீ முக்கிய பங்காற்றினாள். ராஜராஜ சோழனுக்கு அவன் தமக்கை குந்தவை ஆலோசகராக இருந்து ஆட்சியை வழிநடத்தினாள். ஜயசிம்மனின் சகோதரி அக்காதேவி (கிபி 1025) ஆட்சிப்பொறுப்பிலும், போரிலும், முற்றுகையிலும் பங்கேற்றாள். காகதிய வம்சத்தரசி ராணி மங்கம்மாளும், மீனாட்சியும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தனர்.

சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த விஜயபட்டாரிகாவும், காஷ்மீரத்தைச் சேர்ந்த சுகந்தாவும், தித்தாவும் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தனர். சாளுக்கியர் ஆட்சியில் அக்காதேவி தவிர, சோமேஸ்வரரின் ராணி மைலாதேவி (கிபி 1080) ஆறாவது விக்கிரமாதித்தனின் முதல்ராணி லேட்சுமிதேவி (கிபி 1100) ஆகியோர் தீவிர பங்கேற்றனர்.

ரஜபுதனத்தில் அரசர் சமர்சீ இறந்தவுடன் அவனது மனைவி கூர்மாதேவி (கிபி 1195) ஆண்டாள். ராணாசங்காவின் மனைவி மர்னாவதி தனது வீராவேச உரையில் அனைவரையும் ஊக்குவித்தாள். அவனது மற்றொரு மனைவியான ஜவஹர்பாய் போரிட்டு களத்திலேயே மாண்டாள்.

மராட்டியர் வரலாற்றுக் கோலாப்பூர் தாராபையும், சித்தூர் அகல்யாபாயும் போர்க்களத்தில் பெரும் பங்காற்றினார். ரஜபுனத்துப் பெண்கள் தங்கள் கணவர்கள் போருக்குச் சென்றபோது நெற்றியில் ரத்தத்திலகமிட்டு வழியனுப்பினர். கணவன் இறந்துவிட்டால், மாற்றான் வசம் சிக்காமல் தீயில்பாய்ந்து உயிர்த்தியாகம் செய்தனர்.

அலாவுதீன் கில்ஜியிடமிருந்து தப்பிப்பதற்காக சித்தூர் ராணிபத்மினி தன் நூற்றுக்கணக்கான தோழிகளுடன் தீப்புகுந்து உயிரைத் தியாகம் செய்த வரலாறு உலகறிந்த ஒன்று. இவ்வாறு தீப்பாய்ந்து உயிர்த்தியாகம் செய்த பெண்களின் கைச்சுவடுகள் பதித்த கல்வெட்டுகளை நாடு முழுதும் காணலாம். .

இந்தியப் பெண்களைவிட மேல்நாட்டுப் பெண்கள் கூடுதல் சுதந்திரத்துடன் வாழ்வது உண்மைதான். ஆனால் இந்தியப் பெண்களைவிட இன்பமான மகிழ்ச்சியான குடும்பவாழ்வு வாழ்கிறார்களா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அங்கு விவாகரத்தும், தனிமையாக வாழ்வதும் அதிகம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. கற்பழிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. பலபிரமுகர்கள் குடும்பத்தில் விவாகரத்து நடந்தபின்னர் பத்திரிகையில் வெளியாகும் குற்றச்சாட்டுகளைப் படித்தால் அங்கும் பெண்களின்நிலை அவலநிலை என்பதை யாவரும் உணர்வர். இது இன்றைய நிலை.

ஆதிகாலத்தை எடுத்துக்கொண்டால் நிச்சயமாக இந்தியப் பெண்களின் நிலை உயர்வுதான். மேலைநாட்டவர்களால் பெரிதும் புகழப்படும் கிரேக்க நாகரீகத்தில்கூட பெண்களைப் பற்றிய உயர்வான கருத்துகள் இல்லை.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் பெண்களை இரண்டாந்தர பிரஜைகளாகவே வர்ணித்துள்ளனர். ஏனைய மத நூல்கள்கூட பெண்களை இழித்தே பேசுகின்றன. சங்க இலக்கிய காலம் போலவோ, ரிக்வேத காலம் போலவோ முப்பது பெண் கவிஞர்கள் வேறு எங்கும் இருந்தது இல்லை.

ஆக்ஸ்போர்ட் அகராதி ஆண்களை உறுதியானவர்கள் என்று வர்ணிக்கிறது. ஷேக்ஸ்பியர்கூட “பலவீனமே உன்பெயர்தான் பெண்மையோ?” என்றார். அலெக்ஸாண்டர்போப் எனும் பிரபல கவிஞன் ஒவ்வொரு பெண்ணும் இருதயத்தில் மிகவும் மோசம் என்றான். ஷெரிடன் என்ற கவிஞன் பெண்களை இழித்துரைத்து, சிந்தனை சரியில்லை என்றான்.

பெரும் தத்துவ ஞானியான வர்ஜில் பெண்களை எப்போதும் சஞ்சல புத்தியுள்ளவர்கள்; மாறிக்கொண்டே இருப்பார்கள் என்று எழுதினான். செயின்ட்அகஸ்டின் என்ற புனிதர் பெண் என்ற பிராணிக்கு நிலைத்தபுத்தி இல்லை; உறுதியான முடிவும் எடுப்பதில்லை என்றார்.

ஆல்பிரட் டென்னிஸன் என்ற பெரும் கவிஞன் பெண்கள் அடுப்பூதத்தான் பிறந்தார்கள்; ஆணையிடப் பிறந்தவன் ஆண்; அடிபணியப் பிறந்தவள் பெண்; ஆணுக்காகத்தான் இறைவன் பெண்களைப் படைத்தான் என்றான்.

புனிததாமஸ், ஆண்கள்தான் மேதாவிகள், அவர்களிடையே பல வகைகளைக் காணமுடியும் என்றார்.

கிரேக்க அறிஞன் சாக்ரடீஸின் மனைவி ஒரு மஹா முசுடு; எல்லார் முன்னிலையிலும் சாக்ரடீஸை அவள் திட்டுவாளாம். ஆனால் சாக்ரடீஸ் சிறிதும் அசராமல் அமைதியாக தனது சமூகப்பணியை தொடர்ந்து செய்தாராம். மனைவிக்கு ஆத்திரம் வந்து அவர் தலையில் வாளிநிறைய தண்ணீரை ஊற்றினாளாம். “இதுவரை இடி இடித்தது; இப்போது மழை பெய்கிறது…” என்றாராம் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸின் சீடர் பிளேட்டோ தன்னை சுதந்திர மனிதனாகப் படைத்ததற்கும்; தன்னை ஆணாகப் படைத்ததற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். பிளேட்டோவின் சீடர் அரிஸ்டாட்டில் பெண்கள் இயற்கையாகவே குறைபாடு உடையவர்கள்; மனைவிகள் எப்போதும் ஆணுடன் இருக்க அழைக்கப்பட்ட தொல்லைகள்… என்றார்.

பெண்களிடம் மனதைப் பறிகொடுத்துவிடாதே என்று பைபிள் எச்சரிக்கிறது. ஆடம் என்ற ஆணின் விலாஎலும்பை உடைத்து உருவாக்கப்பட்டவள்தான் பெண் என்றும் பைபிள் (GENESIS) கூறுகிறது. எப்படி யேசுபிரான் ஆண்கள் அனைவருக்கும் மேம்பட்டவரோ, அப்படியே பெண்கள் அனைவரையும்விட ஆண் மேலானவன் என்பது கிறிஸ்துவமதத் துணிபு. ஆதாமை ADAM ஆசைகாட்டி மோசம் செய்தவள் ஏவாள் EVE என்றும், மனிதகுலம் அழிவடைய இதுவே காரணம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.

குரானும், பைபிளும் கடவுளை ஆணாக மட்டுமே பார்க்கின்றன.

இந்து மதத்தில் பெண்களைப்பற்றி உயர்வான கருத்துக்களும், தாழ்வான கருத்துக்களும் உள்ளன. ஆனால் ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் சந்நியாசிகள் மட்டுமே தாழ்வான கருத்துகளைக் கூறியிருக்கிறார்கள். அதையும் மண், பெண், பொன் என்ற மூன்று ஆசைகளுடன் சேர்த்தே இழித்துரைப்பார்கள். இந்து சன்யாசிகளுக்கும், மேல்நாட்டு ஆன்மீகவாதிகளுக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய வேறுபாடு என்னவெனில், பெண்ணாசையை இழிக்கும் அதே இந்து சன்யாசி ஏராளமான இடத்தில் பெண் தெய்வங்களையும், தாயையும் பெரிதும் புகழ்ந்துரைப்பார்கள்.

பெண்களைப்பற்றி எச்சரிக்கும் ஆதிசங்கரர் ஸ்லோகங்களை, வெள்ளைக்கார அறிஞர்கள், அவர் ஆயிரக்கணக்கான ஸ்லோகங்களில் பெண் தெய்வத்தையும், தாயன்பையும் புகழ்ந்துரைப்பதை மறைத்துவிடுவார்கள்.

பெண்ணே எல்லாத் தீமைகளுக்கும் மூலகாரணம் என்றான் சாக்ரடீஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *