கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 22,829 
 

சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான்.

கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு.

`கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்… இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்’ – தோராயமாக மனசுக்குள் கூட்டிப்பார்த்தான்.

ஒரு தொகையை வைத்துவிட்டு, மீதிப் பணத்தை எடுத்துப் பிரித்து, அண்ட்ராயரின் சைடு பைக்குள்ளும் மேல்சட்டையின் உள் பைக்குள்ளும் மெத்தையாகத் திணித்தான்.
குணவேறுபாடு
`திருவேங்கடத்துக்கு சரக்கு வாங்கப் போகணும். கருவாட்டுக் கடை, காய்கறிக் கடை, மளிகைக் கடை, அரிசிக் கடைகளில் வேலை இருக்கு. வாழைத்தார் ரெண்டு தூக்கணும். நாட்டு வாழை நயஞ்சரக்கு தூக்கணும்னா… வெரசா போகணும். 10 மணிக்கு முன்னாடியே நல்ல அயிட்டங்களை கடைக்காரங்க தூக்கிருவாங்க…’

மணியைப் பார்த்தான் சுனைக்கனி. 9:15. காலை ஏறுவெயில், சுள்ளெனக் காந்தியது. அவனுக்குள் பரபரப்பு. கடையோடு சேர்ந்த வீடு. சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் பூர்ணம்.

‘‘பூர்ணம்… ஏம்மா பூர்ணம்…’’

‘‘என்ன… இந்தா வந்துட்டேன்’’ – வாய் நிறையச் சோற்றுடன் பேசுகிற பேச்சின் சொதசொதப்பு.

‘‘நேரமாச்சு… வாழைத்தாரு நல்ல தாரு எடுக்க முடியாது.’’

‘‘நீங்க புறப்புடுங்க. நான் கடையைப் பாத்துக்கிடுதேன்.’’

‘‘அப்ப சரி…’’

கடையைவிட்டு வெளியே வந்தான். எதிர்வீட்டுத் தாழ்வார நிழலில் TVS XL வண்டி நின்றது.

‘‘வரத்து ஏவாரிகளுக்கு ரூவா எடுத்து வெச்சாச்சா?’’

‘‘ம்… மாதாகோவில்பட்டி முட்டைக்காரர் வருவாரு. பெருசுலே ஆறு அட்டைக… சிறுசுலே அஞ்சு அட்டைக வாங்கு.’’

‘‘சிறு சைஸ் முட்டைக சரியாப் போக மாட்டேங்கு.’’

‘‘நாமதான் பாத்துத் தள்ளிவிடணும். கருவநல்லூர் மிட்டாய்க்கார அண்ணாச்சிகிட்டே தேன்மிட்டாய் பாக்கெட் கூடுதலா ரெண்டு வாங்கு.’’

‘‘திருவேங்கடத்துலே வாங்கவேண்டிய சாமான்க சிட்டையை நீயும் ஒரு பார்வை பார்த்துக்க.’’

‘‘பார்த்துட்டேன். சீரெட்டு ரெண்டு பண்டல் வாங்கணும். வில்ஸ் ஃபில்டர் 12 எழுதிக்கோங்க. கருவாட்டுக் கடைக்குப் போனீகன்னா… வாளைக் கருவாடு வாங்கிட்டு வாங்க.’’

‘‘ம்…’’

வண்டியை எடுத்தான். மடித்த சரக்குகள், அகலமான தூக்குப் பைகள், எண்ணெய் கேன், குட்டிச்சாக்குகள் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டான்.

இந்நேர வரைக்கும் விலகியிருந்த நினைவு வந்து அப்பிக்கொண்டது. கட்டைமுள்ளாக நெஞ்சுக்குள் நிற்கிறது.

`எதிர்லே தட்டுப்படுவாரா… என்ன சொல்ல, எப்படிச் சொல்ல? முகத்துக்கு முகம் பாத்துச் சொல்லிர முடியுமா, வாய் வருமா, நா எழுமா, மனசு துணியுமா?’

`பச்சைப்பிள்ளையின் கழுத்தைத் திருகி வீசி எறிகிற மாதிரியான கொடுங்காரியம் இல்லையா? குரூர நிஜம் என்னென்னா… எப்படியாச்சும் சொல்லித்தான் ஆகணும்.’

`இன்னிக்கு என்ன கிழமை? திங்கள், செவ்வாய் கழிச்சு புதன் பிறந்தவுடன் வந்து நிப்பாரு.வண்டிக்குப் போறப்ப `ஏதாச்சும் லோடு இருக்கா?னு கேப்பாரு.’

` ‘கடலைமிட்டாய் இருக்கா?’னு கேட்டு வந்து நிற்கிற பாலகனின் கழுத்தை அறுத்துப் போட முடியுமா… அவருக்கு என்ன பதில் சொல்ல?’

‘‘வண்டிக்கார அண்ணாச்சி கடைக்கு வந்தார்னா என்னமும் சொல்லவா?’’

‘‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்.’’

பஸ் வந்து வட்டமடித்துத் திரும்பும் காமராஜர் பேருந்து நிலையம் விளிம்பில் இருக்கிற அருஞ்சுனை டிபன் சென்டரில் நின்றான் சுனைக்கனி. ஓர் உளுந்தவடையைப் பிய்த்து வாயில் போட்டு, டீயை அவசர அவசரமாகக் குடித்தான். கொதிக்கிற டீ குடித்து முடித்த வாயில் இருந்து புகை வந்தது.

ஹோட்டல்காரர் துண்டை இடுப்பில் கட்டியிருந்தார்.

‘‘இந்த வாரம் ராசபாளையம் சந்தைக்குப் போவீகளா?’’

‘‘ராசபாளையம் போவேன். சந்தைக்குப் போக மாட்டேன்.’

‘‘ஏன்?’’

‘‘வியாழக்கிழமைதான் சந்தை. நான் வெள்ளி, இல்லாட்டா சனிக்கிழமை போவேன்’’

‘‘இது என்னது… புதுசாயிருக்கு?’’- வியப்போடு கேட்ட ஹோட்டல்காரருக்கு, சுனைக்கனி சிரிப்பால் மழுப்பினான்.

‘‘அது அப்படித்தான். வாழைத்தாரு தூக்கணும். வெரசா போகணும். நான் வர்றேன்’’ பரபரப்பாகத் தெறித்தோடினான்.

எக்ஸ்.எல் வண்டியை ஸ்டார்ட் செய்து, ஸ்டாண்டை எக்கித் தள்ளினான். மடித்துக் கட்டிய கைலியும் அரைக்கைச் சட்டையும் வெயிலிலும் வியர்வைக்கசிவிலும் நசநசத்தன. சாமிநாதபுரம் வழியாக திருவேங்கடம். வண்டி, தெற்குத் தெரு தாண்டி பாலத்தில் இறங்கி ஏறி, தெற்கில் நீண்டுகிடக்கும் அகலமான தார் ரோட்டில் விரைந்தது. ஆக்ஸிலேட்டரை முழுமையாகத் திருகவில்லை. நிதானமாக முறுக்கி, ஒரே சீரான வேகத்தில் வண்டியை ஓட்டினான்.

பரந்துவிரிந்த கரிசல்காட்டுச் சமுத்திரத்தைக் கீறிப் பிளந்துகொண்டு தெற்குப் பக்கம் நீண்டு கிடந்தது தார்ச்சாலை. புத்தம்புதியது.

கரிசல்காட்டு வண்டிப்பாதைக்கு நடுவில் நீளும் குறுகலான ஒற்றையடிப்பாதையில், லோடு கட்டிய சைக்கிளை மிதிக்க முடியாமல் மிதித்து இவன்பட்ட அந்த நாள் சிரமங்கள் நினைவில் உரசிச் சென்றன. அதற்கும் முன்னால்… ஓலையில் கட்டிய மண்டைவெல்லம் சிப்பம் ரெண்டு கட்டிய சாக்கை தலையில் வைத்து சுமந்து, பீடி, சிகரெட் சில்லறைச் சாமான்கள் கிடக்கிற தூக்குப் பையைத் தோளில் போட்டு, கண்மாய்க் காட்டுக்கரைப்பாதையில் நடந்து சீரழிந்து, சரக்கு வாங்கிய அந்தப் பழைய நாட்கள்…

இன்றைக்கு தார்ச்சாலையில் வழுக்கிப் போகிறது எக்ஸ்.எல் வண்டி.

பங்குனி மாத வெயில் தீயாகச் சுட்டது. கன்னத்திலும் இடது கையிலும் வெயில் காந்தியது. கை ரோமங்கள் இடையேயும் நெஞ்சு ரோமங்கள் இடையேயும் வியர்வை நெளிவுக்கோடுகள் முத்து முகத்துடன் இறங்கின.

கரிசல் தரிசில் ரொம்பத் தூரத்தில் செம்மறி ஆடுகள் மேய்ந்தன. எருமைகளும் வெள்ளாடுகளும் வேறோர் இடத்தில் மேய்ந்தன. கருவேலமரத்தில் உச்சியில் ரெண்டு மைனாக்கள். விரித்த சிறகுகளுடன் பறக்கும் பருந்தை விரட்டின கரிச்சான்கள்.

இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை, சுனைக்கனி. இவன் மனசெல்லாம் வேதனையான நினைவுகள், ரணகள யோசனைகள்.வண்டிக்காரத் தேவர் அண்ணாச்சியிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது, எப்படிச் சொல்ல, வருஷக்கணக்கிலான உறவை எப்படி அறுக்க? முகம் முறித்து, தாட்சண்யம் இல்லாமல் சொல்ல முடியுமா?

கிராமத்தில் ஒன்பது கடைகளில் ஒன்றாக இருந்தது, இவன் கடையும். ஒன்பது கடைகளில் பெரிய கடை என்ற நிலைமை உண்டானது, வண்டிக்காரத் தேவர் அண்ணாச்சியால்தானே!
சைக்கிளில் திருவேங்கடம் சென்று, சரக்கு கொள்முதல் பண்ணி, கடையில் விற்கும் வரை ஒன்பதில் ஒன்று.

திருவேங்கடம் எட்டிப்பிடிக்கிற தூரம்தான். கடைக்காரன் போய் வாங்குகிற சரக்குகளை, அதே விலைக்கு நாம் வாங்க முடியுமே என எல்லோரையும் நினைக்கவைக்கும். வசதியுள்ள வீட்டுக்காரர்கள் திருவேங்கடம் போய்விடுகின்றனர்.

`இதுவே… தூரந்தொலைவான ராஜபாளையம் போய் மொத்தமொத்தமாக சரக்குகள் வாங்கி, மூடைக்கணக்குகளில் வண்டி பாரம் ஏற்றிக் கொண்டுவந்தால், விலை குறைவாக சரக்கு தர முடியுமே… வியாபாரத்தைக் கூடுதலாக்கலாமே…’ என யோசித்தான். சுனைக்கனியின் வியாபார மூளை விவரமான திசையில் பயணித்தது.

சுனைக்கனியின் முதல் பார்வை, ராக்குத்தேவர் மீதுதான் விழுந்தது. நல்ல வலுத்த திரேகம். தாட்டியமான தோற்றம். காளை மாடு இருக்கிறது; வண்டியும் இருக்கிறது. நிலம் முக்கால் குறுக்கம் (ஏக்கர்) மட்டுமே. புஞ்சை வேலை இல்லாத நாட்களில் கூலி உழவு, வண்டி பாரத்துக்குத்தான் போவார். ஊர் தவிர வேறு ஒன்றும் தெரியாது. இந்த ஊரே அவரது உலகம். அவரும் அவரது துணைவியார் முத்தக்காவும் மட்டுமே சேர்ந்து கட்டின மண் வீடு; கூரை மேய்ச்சல்.

வீட்டு முற்றத்தில் போய் நின்றான் சுனைக்கனி.

‘‘ஏய் முத்து… கடையிலே பாக்கி ஏதாச்சு வெச்சிருக்கியா?’’

‘‘இல்லியே…’’

‘‘பெறவு… வீட்டு வாசல்லே கடைக்காரன் நிக்கான்?’’

‘‘என்னன்னு நீரே கேளும்… என்ன சுனை, என்னப்பா?’’

‘‘அண்ணாச்சியையும் உங்களையும்தான் பார்க்க வந்தேன். ஒரு முக்கியமான விஷயம்.’’

அவனது அமுங்கிய குரலில் இருந்த தயக்கம், ராக்குவையும் முத்துவையும் ரொம்ப யோசிக்க வைத்தது. கவனத்தைத் தீவிரமாக்கி, இவன் மீது குவித்தார்கள்.

‘‘சொல்லு… என்ன விஷயம்பா?’’

‘‘புஞ்சை வேலை இல்லாத நாள்லே வாடகை வேலைகளுக்குத்தானே போறீக?’’

‘‘ஆமா…’’

‘‘வியாழக்கிழமை வியாழக்கிழமை ராசபாளையம் சந்தைக்கு வண்டி போடுதீகளா? நம்ம கடை, லோடு வண்டிக்கு சரியா வரும். கைக்கணிசமா வாடகை தந்துருதேன்.’’

‘‘ஊரைத் தாண்டுனது இல்லியே நான். அம்ம்ம்ப்ப்புட்டுத் தூரம் எப்படிப் போறது? நமக்கு முடியாதப்பா.’’

‘‘முன்னப்பின்னே கல்யாணம் முடிச்சு வாழ்ந்த பழக்கத்துலேயா அக்காவைக் கல்யாணம் பண்ணுனீக? ஊரைத் தாண்டாத அனுபவம் இல்லாமத்தானே இருந்தீக? முத்தக்காவைக் கைபிடிச்சு, வீடும் காரும் மாடும் தொழிலுமா ஆளாயிடலையா? அப்படித்தான் ராசபாளையமும். எம்புட்டுத் தூரமா இருந்தாலும்… நடக்க நடக்கத் தொலைவு தொலைஞ்சிரும்லே?’’

ராக்கு அசந்துபோனார். `வயசில் சின்னவன்தான். வாய் எம்புட்டு சாதுர்யமாப் பேசுது?’

முத்தக்கா… தயங்கிய ராக்குவை அதட்டினாள்.

‘‘இந்தா… ஏவாரி வயித்துலே பிறந்த ஏவாரிப்புள்ளை எம்புட்டு விவரமாப் பேசுது! அது நீட்டுன எடத்துலே கண்ணை மூடிக்கிட்டுக் குதி.’’

‘‘கெடங்கா இருந்துட்டா?’’

‘‘கெடங்கா இருந்தாலும் தண்ணியுள்ள கிணறாத்தான் இருக்கும். நீந்தத் தெரிஞ்சா குளிச்சிட்டு வந்துரலாம்.’’

பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது.

குணவேறுபாடு2

நீண்ட நெடிய தேக்குவாரிகள் இரண்டு, பார்க்கயிறு, வண்டி மராமத்து வேலைகள் எல்லாம் சுனைக்கனி செலவில்தான் நடந்தன.

சிவலிங்கபுரம், வரண்டாபுரம், நத்தம்பட்டி வழியாக ராஜபாளையம் மாட்டுவண்டி நிறைய மூடை மூடைகளாக வந்து சரக்குகள் இறங்க, ஊரே வியந்து அதிசயிக்க… சுனைக்கனிக்கு வியாபாரம் சுள்ளெனச் சுதாரித்தது. சுற்றுபட்டி கிராமத்து ஆட்கள் எல்லாம் இவன் கடையை நோக்கி வந்தனர்.

செந்தட்டி அய்யனார் கோயிலுக்கு, தேனி பக்கம் இருந்து சாமி கும்பிட வருபவர்களை நைச்சியமாகப் பேசி, ராக்கு இழுத்துக்கொண்டு வந்து சுனைக்கனி கடையில் சேர்த்துவிடுவார். கல்யாண வீடுகள், இழவு வீடுகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றின் சமையல் சாமான் லிஸ்ட்டுகள் சுனைக்கனி கடைக்கே வந்துசேரும்படி செய்வது ராக்குத்தேவருக்கு இயல்பாயிற்று.

ராஜபாளையம் சரக்கு வாங்கும் இடத்திலும் அப்படித்தான் சாக்குகளை உருட்டிச் சுருட்டி, கக்கத்தில் வைத்துக்கொண்டு இவன் வாலைப் பிடித்துக்கொண்டே கடை கடைக்குக் கூடவே வருவார். சரக்குக்குச் சாக்குப் பிடித்து, சுமைகூலிச் செலவு இல்லாமல் ஒவ்வொன்றையும் சுமந்து வண்டி சேர்ப்பார்.

இவன் வாங்கித் தரும் டீ, வடை, வெற்றிலைப்பாக்கு, காலையில் வயிறுமுட்ட தோசை, வடை, பூரி, இட்லி… மதியம் சிங்க விலாஸ் ஹோட்டலில் கறி, மீன், முட்டையுடன் மூச்சுமுட்ட சாப்பாடு… பற்றியே புகழ்பாடுவார். இவனது தாராளமானக் கருணையைச் சொல்லிச் சொல்லி நெக்குருகுவார்.

திரேகத்தில் வியர்வை நெளிவுகள் வரிவரியாக, தார்ப்பாய்ச்சி கட்டிய வேட்டியைச் சுருட்டிச் சுருட்டி செருகியிருக்கிற அழகு. வியர்த்துக் கொட்டுகிற உடம்பில் சகல இடங்களிலும் ஒட்டியிருக்கும் சாக்குத் தூசி.

பெரும் வியாபாரிகள், கிராமங்களில் வாங்கும் விளைபொருட்களை பாரம் ஏற்றி ராஜபாளையத்தில் இறக்குவார்கள். சுனைக்கனியுடன் ஓடி ஓடி சரக்கு வாங்கி, பாரம் ஏற்றி ஊர் கொண்டுவந்து சேர்ப்பார்.

போகும்போதும் வருமானம்; வரும்போதும் வருமானம். கையில் பசை. பையில் நீரோட்டம். முக்கால் குறுக்கம் வைத்திருந்த ராக்கு கையில் இப்போது மூன்று குறுக்கம் புஞ்சை. பம்புசெட் கிணறு. கரிசல் காடு, கூளப்படப்பு, தொழுவம் நிறைய பசுமாடுகள். மண் வீடு, சிமென்ட் வீடாகி…ஓட்டு வீடு ஆயிற்று.

ராக்குவை இப்போது `வண்டிக்காரத் தேவர்’ என மரியாதையோடு மகுடம் சூட்டுகிறது ஊர்.

வண்டிக்காரத் தேவரின் பலமுனை சப்போர்ட்களால் சுனைக்கனி, ஒன்பதில் ஒன்றாக இருக்கவில்லை. ஒன்பதில் பெரியது என ஆகிவிட்டான். சுனைக்கனிக்கு, சரக்கு வியாபாரம் வெகு மும்முரம். கூட்டம் எந்நேரமும் நெரிபுரியாக நிற்கும். சள்ளை பறியும் மொத்த வியாபாரமும் நடந்தன.

‘எனக்கு, உனக்கு’ என ஆள் ஆளுக்கு முண்டுவார்கள். முந்திவிட முட்டுவார்கள். சுனைக்கனியும் அசாத்தியமான திறமைசாலி. அத்தனை கூட்டத்தையும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்பாகச் சமாளிப்பான்.

கூரைவீடு, காரை வீடாகி, மாடியும் வந்துவிட்டது. `கனி நாடார்’ என்று மரியாதை மகுடம் வேறு.

ராஜபாளையத்தில் `எஸ்.ஆர்’ என்ற பலசரக்கு மாளிகைக் கடை. சுனைக்கனி போன்ற கடைக் காரர்கள் கொள்முதல் பண்ணுகிற பெருங்கடை. டோர் டெலிவரி தருவது மாதிரி, லாரிகளில் கடை டெலிவரி தருகிறது.

செவல்பட்டி, ஆலங்குளம், திருவேங்கடம், கலிங்கப்பட்டி என பல ஊர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் லாரி வருகிறது.

ஒருநாள், சுனைக்கனியை எஸ்.ஆர் மடக்கினார்.
குணவேறுபாடு

‘‘என்னய்யா… ராக்கெட் விடுற காலத்துலே மாட்டு வண்டியிலே சரக்கு ஏத்திக்கிட்டு, தைதைன்னு மாட்டைப் பத்திக்கிட்டு… மழை – கிழை வந்தா என்ன பண்ணுவீக?’’

‘‘மழை ஒருதடவை மடக்கி நாசமாக்கிருச்சு. மறுவாரமே கூண்டு பெருசா கட்டியாச்சு. மழைக்குப் பயம் இல்லே.’’

‘‘நான் கேட்டது மாட்டு வண்டியானு?’’

‘‘என்ன செய்ய?’’

‘‘பருத்திவிதை மூடைக, புண்ணாக்கு, மண்டைவெல்லம் மூடைக எல்லா லோடுகளையும் நம்ம கிடங்கிலேயே கொண்டாந்து சேர்த்துருங்க. நம்ம கடையிலே வாங்குற லோடையும் சேர்த்து நம்ம லாரியிலே உம்ம கடைவாசல்லே கொண்டாந்து இறக்கிருவோம்.’’

‘‘நம்ம ஊர்லே நான் ஒரு கடைதானே… லோடு பத்தாதுல்லே?’’

‘‘நான் கொறைஞ்சபட்ச அளவு ஒண்ணு சொல்லுதேன். அந்த லோடைக் குடுத்துருங்க. லாரி வந்துரும். செலவும் பாதியாக் குறையும்; அலைச்சலும் குறையும்.’’

‘‘யோசனை நல்லாத்தான் இருக்கு.’’

‘‘அடுத்த சனிக்கிழமை வந்து சரக்குகளை வாங்கி கிட்டங்கியிலே சேர்த்துட்டு, நம்ம கடையிலேயும் சிட்டையைச் சொல்லிட்டுப் போயிருங்க. லாரியிலே சரக்கு வந்துரும். கடை லோடுமேன்கள் கச்சாத்தைக் குடுத்துட்டு சரக்கை இறக்கிப்போட்டு வந்துருவாங்க.’’

‘‘செவல்பட்டி வந்துட்டு எங்க ஊரா, திருவேங்கடம் வந்துட்டு எங்க ஊரா?’’

‘‘உங்க கடையிலே எறக்கிட்டு திருவேங்கடம் போறாப்ல வெச்சுக்கிடுவோம்.’’

சுனைக்கனிக்குள் கற்பனை கண்டமேனிக்குச் சிறகடித்துப் பறந்தது. நாலா திசைகளிலும் சிறகடிப்புகள்… ஆகாயம் எல்லாம் சிறகுகள்… கனவுச்சிறகுகள். பெருமை பொங்குகிறது.

சைக்கிளில் மிதித்து கடைவாசலில் ஸ்டாண்ட் போட முடியாமல் போட்டு சரக்கு இறக்கிய காலம்.

மாட்டு வண்டி நிறையச் சரக்குகள் இறங்குவதை ஊரே பார்த்து அதிசயித்த அந்த நாட்கள்.

லாரியில் வந்து மூடை மூடைகளாக இறங்கினால், ஊர் பிரமித்து மூச்சுத்திணறிப் போய்விடும். பிளந்த வாயை மூடாது. சுற்றிச்சுற்றி வந்து வேடிக்கை பார்த்து மாய்வார்கள்.

வருடக்கணக்காக பல முனை சப்போர்ட்களால் பாசமும் விசுவாசமும் காட்டிய வண்டிக்காரத் தேவரை என்ன செய்ய?

எஸ்.ஆர் அவனது தயக்கத்தை கலைக்க இப்படிச் சொன்னார்.

‘‘தாலியறுத்தவ தாட்சண்யம் பார்த்தா, வாயும் வவுறுமா சொமந்து சீரழியணும். ஏவாரத்துல தாட்சண்யம் பார்க்கக் கூடாது… பார்க்கிற மாதிரி பாவ்லாதான் பண்ணணும்.’’

அவர் சுலபமாகச் சொல்லிவிட்டார். பாசத்தையும் விசுவாசத்தையும் அறுப்பது அத்தனை சுலபமா? கிராமத்து உறவுப் பண்பாட்டில் முகம் முறித்து தாட்சண்யம் பார்க்காமல் பேசிவிட முடியாதே.

குணவேறுபாடு3

வண்டிக்காரத் தேவரைப் பார்ப்பதற்கே குலை நடுங்குகிறதே. முகத்துக்கு முகமாக, கண்ணுக்குக் கண்ணாக நேரே பார்த்து ‘நிறுத்திக்கிடுவோம்’னு எப்படிச் சொல்ல?

எஸ்.ஆரிடம் சனிக்கிழமை வருவதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டான். பணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டான். தேவரிடம் சொல்லவேண்டியதுதான் பாக்கி.

சொல்வதுதானே மலையாக இருக்கிறது.

கூரை வீட்டு முற்றத்தில் போய் இவன் நின்றது, தயங்கித் தயங்கிக் கேட்டது, அவரைச் சம்மதிக்க வைக்க சாமர்த்தியமாகப் பேசியது எல்லாம் ஞாபகத்தில் சுழன்றன.

`இன்னைக்கு, ‘நிறுத்தும், போதும்’ என்று சொல்ல வாய் வர மாட்டேங்குதே. நன்றிகெட்ட நாச வேலையாக அல்லவா தோன்றுகிறது. கால் மாட்டில் எச்சில் வடிய நிற்கும் பச்சை மதலையின் கழுத்தை அறுத்துப்போடுகிற நம்பிக்கைத் துரோகமாக அல்லவா தோன்றுகிறது?’

குற்றவுணர்ச்சி, கட்டை முள்ளாக நெஞ்சுக்குள் குத்தியது.

எக்ஸ்.எல் வண்டி, திருவேங்கடம் வந்துசேர்ந்துவிட்டது. அரிசிக் கடையில் வண்டியை நிறுத்தினான். கைலியால் வியர்வையைத் துடைத்தான் சுனைக்கனி.

அச்சத்துடன் சுற்றும்முற்றும் பார்த்தான். `வண்டிக்காரத் தேவர் எங்கேயாச்சும் எதிர்ப்பட்டுவிட்டால்?’

ஈரக்குலை பதறியது. மனசு கிடந்து மருகித் தவித்தது. எந்த நிமிடத்திலும் எதிரிலும் வந்து நின்றுவிடுவாரோ என்ற பதற்றம்.

அரிசிக் கடை வேலையை முடித்துவிட்டு பாலசுப்பிரமணியம் பலசரக்குக் கடைக்குப் போனான். வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்தால்….

சற்று தள்ளி… வந்துகொண்டிருந்தார் வண்டிக்காரத் தேவர். தீப்பட்ட நாற்றாகக் கருகினான் இவன். மனநடுக்கம், உள்ளங்கையில் வியர்வை, பயப் படபடப்பு.

அவரும் சோர்வாக இருந்தார்.

‘உடம்புக்குச் சரியில்லியோ?’

முகவாட்டம். இருண்டிருந்தது அவரது முகம்.

‘‘வாங்க அண்ணாச்சி… என்ன இங்கிட்டு?’’ – குரலில் உயிர்வற்றிப்போயிருந்தது சுனைக்கனிக்கு.

‘‘சும்மா… ஒரு சோலியா வந்தேன்’’ – சுரத்தே இல்லாமல் தடுமாறித் தணிந்தது வண்டிக்காரத் தேவர் குரல்.

`விஷயம் அவரது காதுக்குப் போய்விட்டதா? வாய்ப்பே இல்லையே. பூர்ணத்தைத் தவிர வேறு யாரிடமும் மூச்சுவிடவில்லையே.’

‘‘வாங்க சாப்பிடப் போவோம்.’’

வண்டிச் சாவியை பைக்குள் போட்டுக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான் சுனைக்கனி.

ரெண்டு பேரும் டேபிள் முன் சேர்களில் உட்கார்ந்தனர்.

‘‘அண்ணாச்சிக்கு மூணு பரோட்டாவும் ஒரு சிக்கன் ரோஸ்ட்டும்.’’

‘‘உனக்கு?’’

‘‘நான் இப்பத்தான் வீட்ல சாப்பிட்டு வர்றேன்.’’

அவரது முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தடுமாறித் தத்தளித்தான் இவன். இவனது முகத்தையும் பார்க்க முடியாமல் தவித்தார் தேவர்.

சால்னாவில் நனைந்த பரோட்டாவை பிசைந்து பிய்த்து, வாயில் வைத்தார்.

‘‘உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். சொல்ல மாட்டாம மருகிக்கிட்டு வர்றேன்.’’

‘‘என்ன விஷயம் அண்ணாச்சி?’’

‘‘சந்தைக்கு வண்டி போட முடியாத நெருக்கடி…’’

‘‘ஏன் அண்ணாச்சி?’’

‘‘பெரிய தேயிலை கம்பெனி… கூண்டு வண்டிங்கிறதால ஏஜென்ட் என்னைக் குறிவெச்சுட்டார். திங்கள், வியாழன்னு வாரத்துல ரெண்டு நாளு… திருவேங்கடம் வரணும். தேயிலை பார்சல்களையும் பெரிய பெரிய பைகளையும் இறக்கணும். கூட ஏஜென்ட் சாரும் வருவார். வண்டியிலே நம்ம ஊர், அப்பைய நாய்க்கர்பட்டி, வலையப்பட்டி கடைகளுக்கு கூடவே போகணும். திருவேங்கடத்துலே வந்து பஸ் ஏத்திவிடணும்.’’

‘‘இதான் புரோகிராமா?’’

‘‘ஆமாப்பா… ரெண்டு நாள் சோலி. கணிசமா பணமும் தர்றாங்க. கம்பெனிச் சம்பளம்.’’

‘‘ `சரி’னு சொல்லிட்டீகளா?’’

‘‘பத்திரம் எழுதுற மாதிரி ஒப்பந்தம் எழுதி ஸ்டாம்ப் ஒட்டி கைநாட்டு கேட்டாக. என்னையே நம்பி நிக்கிற உன்கிட்டே எப்படிச் சொல்றதுனு தெரியாம மருகிக்கிட்டு நிக்கிறேன்’’

சுனைக்கனிக்குள் விட்டு விலகிய மூச்சுமுட்டல். சுமுகமாக இயல்பான மனத்திணறல். மனசுக்குள் ஆயிரம் வாசல்களும் ஆயிரம் சாளரங்களும் திறந்துகொண்ட மாதிரி காற்றும் வெளிச்ச வெள்ளமும் பாய்ந்தன. மறித்துக்கொண்டு நின்ற மலை, மாயமான மாதிரி ஓர் ஆசுவாசம்.

‘‘உனக்கு மாத்து ஏற்பாடு பண்றதுலே ஏதாச்சும் சிரமம் இருக்குமா, தம்பி?’’

‘‘அண்ணாச்சி… காலம் ஒரு வாசலை அடைச்சா, மறுவாசலை திறந்துவிட்டுரும். அடுத்த வாரத்துல இருந்து சரக்குகளை லாரியிலே கொண்டாந்து இறக்கலாமானு யோசனை ஓடிக்கிட்டிருக்கு.’’
தேவருக்கு முகம் கறுத்தது. சமாளித்துக் கொண்டார்.

‘‘நல்லவேளை… செந்தட்டி அய்யனார்சாமி நல்ல வழி காட்டிட்டார். எனக்கு இப்பத்தான் உசுரு வந்த மாதிரியிருக்கு.’’

அவர் முகம் எல்லாம் அசலான ஒளிப்பெருக்கு. மனதின் பூரிப்பினால் முகம் எல்லாம் பரவுகிற சிரிப்பு; கண்ணோரத்தில் நீர்த்துளி.

‘‘உன்னாலே நான் முன்னேறியிருக்கேன். என்னாலே நீ முன்னேறியிருக்கே. விலகுறப்போ நம் பாசமும் உறவும் அந்துபோகுமோனு பயந்துகிடந்தேன். யாருக்கும் காயம் இல்லாம, ரெண்டு பேரும் விலகுறோம்.’’

சிரித்துப் பேசிச் சமாளிக்கிறார் தேவர்.

‘‘ஆமா… அண்ணன் – தம்பியா என்னைக்கும் இருக்குறதுலே தடை ஒண்ணுமில்லே.’’

சுனைக்கனி குரலில் உயிர்ச்சுனை கசிந்தது. பரோட்டாவைச் சாப்பிட்டுவிட்டு, இலையை வழிக்கிறபோது, அவருக்கு வயிறு நிறைந்திருந்தது.

சுனைக்கனிக்கு, பாரம் இறங்கிய மனநிம்மதி.

‘நம்மளை நம்பி இருக்கிறவனை மோசம் பண்ணிடக் கூடாது’ என்கிற உழைப்பாளிக்கு உரிய வைராக்கியக் குணத்துடன், பாதி மறுப்பும் பாதி தயக்கமுமாகத் தலையை ஆட்டிவிட்டுத் திரும்பியிருந்தார் வண்டிக்காரத் தேவர், சுனைக்கனியின் வியாபாரி மனநிலையைப் புரிந்துகொண்ட தெளிவால்.

`ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டு கைநாட்டு வைத்துவிடவேண்டியதுதான்’ என கோவில்பட்டி பஸ்ஸை எதிர்பார்த்து திருவேங்கடம் பஜாரில் நின்ற அவரின் மனசுக்குள் நினைவுகள் ஓடின. ‘உழைக்கிறவன் குணம் சூரியனைப்போல நிரந்தரமானது; நேர்மையானது. வியாபாரி குணம், நிலவைப்போன்றது; தேயும் குறையும் நிலை இல்லாதது. என்ன இருந்தாலும் வியாபாரி…வியாபாரிதான்.’

– ஏப்ரல் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *