கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 14,991 
 

முன்னுரை

1918 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ப்ளூ புக் மேகஸின் என்னும் பத்திரிக்கையில் மூன்று பகுதியாக வெளி வந்த புதினம் இது. எட்கர் ரைஸ் பர்ரோஸ் என்னும் எழுத்தாளர் எழுதிய கேஸ்பக் என்னும் பழைய உலகத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி எழுதிய மூன்று நூல்கள் கொண்ட தொகுப்பில் இரண்டாவது கதை இது.

கேஸ்பக்கில் சிக்கிய தன் முதலாளியின் மகனை மீட்க வேண்டித் தேடுதல் வேட்டைக்குக் கிளம்பும் ஒரு வேலைக்காரன் அங்கு ஆதி காலத்தில் பூமியில் இருந்த மனிதர்கள் போல நாகரிகம் அடையாத பல்வேறு மனித இனங்களைச் சந்தித்து எவ்வாறு ஊர் திரும்புகிறான் என்பது பற்றிய கதை. ஒவ்வொரு இன மனிதர்களின் பண்புகள் பற்றியும் பழக்க வழக்கங்கள் பற்றியும் விவரித்து இருக்கிறார் ஆசிரியர்.

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

போவன் டைலரின் கையெழுத்தால் ஆன அவன் சரித்திரத்தை அவனது அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுப்பதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு நான் பயணித்து வந்திருந்த போதிலும் மனதில் லேசான சந்தேகம் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது அது உண்மையாக இருக்குமா என்று. கல்லூரி நாட்களில் அவன் அடித்த லூட்டிகள் ஏராளம். அனைவரையும் எளிதில் ஏமாற்றி விடும் சாமர்த்தியசாலி. சாண்டா மாநகாவில் டைலர் நூலகத்தில் அமர்ந்திருக்கும் போது நான் முட்டாள் தனமாய் உணர ஆரம்பித்தேன். நேரடியாகக் கொண்டு வருவதற்குப் பதில் அந்தக் காகிதங்களை எல்லாம் விரைவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கலாமோ என்று நினைத்தேன். பிறர் என்னைப் பார்த்துச் சிரிப்பது எனக்குப் பிடிக்காது. எனக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். அது அடுத்தவர் மேல் இருக்கும் வரை எனக்கும் அது ரொம்பப் பிடிக்கும்.

மூத்த டைலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார் என்று ஒவ்வொரு மணி நேரமும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். கடைசியாக ஹானலூலுவில் இருந்து வந்த நீராவிப் படகு தொரியாதோர் என்று பெயரிட்ட அவரது உலாப்படகு வரும் தேதி குறித்த செய்தியுடன் வந்தது. அந்தச் செய்தி வந்தே கிட்டத்தட்ட 24 மணி நேரங்கள் கடந்து விட்டன. வீட்டில் இருந்த அவரது உதவியாளர் உறுதி அளித்தார் தொரியாதோர் நிச்சயம் குறித்த நேரத்தில் தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கும் என்று. ஏனெனில் கடவுள் செயல் தவிர தன் எஜமானரின் எண்ணத்திற்குத் தடை போடுவது வேறெதுவும் இல்லை என்று உறுதியாகச் சொன்னார் அவரைப் பற்றி நன்றாகத் தனக்குத் தெரியும் என்பதால். தொரியாதோரின் தந்திக் கருவியில் தகவல் அனுப்பும் பகுதியும் தாளிடப் பட்டிருக்கிறது அவசர ஆபத்துச் சமயங்களில் உபயோகப் படுத்த மட்டும் என்பதால். அதனால் வேறெதுவும் செய்வதற்கில்லை காத்திருப்பதை தவிர.

நாங்கள் அந்தக் கட்டுரையில் உள்ள ஆபத்துக்களையும் வினோதமான நிகழ்வுகளையும் பற்றி நீண்ட விவாதம் செய்தோம். அமெரிக்க ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் பணிபுரிய வேண்டி போவன் டைலர் சென்ற அவரது கப்பல் வெடிக்கண்ணியால் வீழ்த்தப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்ததுதான். நானும் நியூ யார்க் அலுவலகத்துக்கு தந்தி அனுப்பி லா ர்யூ என்ற பெயருடைய பெண் பயணம் செய்த செய்தியையும் உறுதிப் படுத்தி விட்டேன். மேலும் காப்பாற்றப் பட்டவர்களின் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை. அது போல அவர்களின் உடல்களும் கிடைக்கவில்லை.

ஆங்கிலேயப் படகினால் அவர்கள் காப்பாற்றப் பட்டதும் சாத்தியமானதுதான். எதிரியின் யூ-33 கப்பலை அவர்கள் கையகப்படுத்தியதும் கூட ஓரளவு நம்பி விடக் கூடியதுதான். பென்சனின் துரோகத்தாலும் ஏமாற்றத்தாலும் அவர்களின் ஆபத்து நிறைந்த பயணமானது தென் பசிபிக் கடலில் தூரத்தில் எங்கோ விட்டு விட்டது உணவு இல்லாமலும் நீர் நஞ்சாக்கப்பட்டும். கற்பனையே செய்ய முடியாத அந்த இடங்களைப் பற்றிய அவனது ஒவ்வொரு நிகழ்வின் விளக்கங்களும் நம்பும்படியாகவே இருந்தன.

கேப்ரோனா என்பது கிட்டத்தட்ட ஒரு கட்டுக்கதை என்றே நம்பப்பட்டு வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மீகாமன் ஒருவர் அதைத் தேடிச் சென்றார். போவனின் கட்டுரையைப் பார்த்தால் அது உண்மையாய் இருக்கும் போல் தெரிகிறது. இருந்தாலும் அவனுக்கும் நமக்கும் நடுவில் பல மைல் தூரத்திற்குக் கடல் பரந்து இருக்கிறது. ஆம் அவன் சொன்னது எங்களை யோசிக்க வைத்தது. அது மிகவும் சாத்தியமற்றது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இருந்தாலும் அங்கிருக்கும் எதுவும் சாத்தியக்கூறுகளுக்கு அப்பாற்பட்டது என்றும் சொல்லி விட முடியாது. அவன் குறிப்பிட்ட கேஸ்பக்கின் வினோதமான மரங்கள் விலங்குகள் ஒரு அடர்த்தியான வெப்பமான வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மிக அதிகமாகச் சூடாக்கப்பட்ட கேஸ்பக்கின் பள்ளத்தாக்குகள் மீசோசோயிக் யுகங்களில் இருந்தது போல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் உலகம் முழுமையும் கூட அப்படி இருந்திருக்கலாம். டைலரின் உதவியாளரும் கேப்ரோனி மற்றும் அவரது கண்டுபிடிப்புகளைப் பற்றியும் கேள்விப் பட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் அவரை முழுமையாக நம்பவில்லை என்றும் தெரிவித்தார். ஒரே ஒரு செய்தி மட்டும்தான் விளக்குவதற்குக் கடினமாக இருக்கிறது. டைலர் சந்தித்த அங்கே இருக்கும் பல்வேறு இனங்களிலும் குழந்தைகளே இல்லை என்று சொன்னது மட்டும்தான். அவனது கட்டுரையில் நம்ப முடியாத ஒன்று அது மட்டும்தான். வளர்ந்தவர்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம்! சாத்தியமற்றது.

பிராட்லி மற்றும் அவனுடன் சென்ற மற்ற ஆங்கில மாலுமிகளுக்கு என்னவாகி இருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்து கொண்டிருந்தோம். அவர்களில் இருவரின் கல்லறைகளை டைலர் கண்டறிந்திருந்தான். இன்னும் எத்தணை பேர் இறந்திருப்பார்கள். லா ர்யூ போன்ற சின்னப் பெண் தன்னுடன் இருந்தவர்களை எல்லாம் இழந்த பின் கேஸ்பக்கின் அந்தக் கொடூரமான உலகில் எப்படித்தான் காலம் தள்ளுகிறாளோ. உதவியாளர், நாப்ஸ் இன்னும் அவளுடன் இருக்கிறதா என்று சந்தேகப்பட்டார். இந்த விசித்திரமான கதையின் உண்மையை அமைதியாக ஒத்துக்கொண்டது போல் நாங்கள் எங்களைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம்.

“நான் ஒரு முட்டாள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனாலும் என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அந்தப் பெண்ணை இப்போது என்னால் காண முடிகிறது. அவளது பக்கத்தில் நாப்ஸ் அமர்ந்து கொண்டு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான விலங்கினங்களின் தொல்லைகளில் இருந்து அவளைக் காத்துக் கொண்டு இருக்கிறது. மனிதக் குரங்கு போன்ற க்ரீமால்ட்டி மனிதர்கள் தங்களது அழுக்கடைந்த குகைகளில் வாழ்வதையும், பெரிய டெரோடாக்ட்டில் பறவைகள் கனமான காற்றில் தங்கள் வவ்வால் போன்ற சிறகுகளை விரித்துப் பறப்பதையும், பனியுகத்திற்கு முன் தோன்றிய காடுகளின் கனத்த இருளில் பிரமாண்ட டினோசார்கள் தங்களது பெருத்த உடம்பை ஆட்டிக் கொண்டு செல்வதையும், தந்தையிடம் இருந்து மகனுக்கு வாய் மொழியாகவே சொல்லப்பட்டு எழுதப்படாத மனிதனின் சரித்திரம் முடியும் வரைக்கும் பரப்பப்பட்ட ஆதி மனிதனின் கற்பனைப் பாத்திரம் என்று அறிவியல் நமக்கு சொல்லிக் கொடுக்கும் வரை கட்டுக்கதை என்றே நம்பி இருந்த ட்ராகன்களையும் என்னால் முழுமையாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது” என்று விளக்கினார் உதவியாளர்.

“மிகவும் ஆச்சர்யமான விஷயம் இது, உண்மையாக இருக்கு பட்சத்தில்.” என்று பதில் அளித்தேன். “ஒருவேளை அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். டைலர் லா ர்யூ அவர்களைச் சுற்றி ஆபத்துகள் எப்போதும் நிறைந்திருக்கும். பிராட்லியும் அவனது சில கூட்டாளிகளும் கூட உயிரோடு இருக்கலாம். போவனும் அந்தப் பெண்ணும் மீதி இருக்கும் மாலுமிகளைக் கண்டு பிடித்திருப்பார்கள் என்றே நம்பத் தோன்றுகிறது. இறுதியாக போவனுக்குத் தெரிந்து ஆறு பேர் இருந்திருக்கிறார்கள் பிராட்லி, ஓல்சன், வில்சன், விட்லி, ப்ராடி மற்றும் சிங்க்ளர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தால் ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கும். இல்லையென்றால் ரொம்ப காலம் தாக்குப்பிடிப்பது சிரமம்.”

“அந்த ஜெர்மன் கைதிகள் மட்டும் யூ-33 – ஐக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். போவன் அவர்களை நம்பி இருக்கக் கூடாது. வான் ஸ்சோன்வர்ட்ஸ் ஒருவேளை இந்நேரம் வெற்றிகரமாகத் தப்பித்துக் கீல் நகரை அடைந்து இந்த நிமிடத்தில் கூட பெருமையோடு இரும்புச் சிலுவைகளைச் சுமந்து கொண்டும் இருக்கலாம். கேஸ்பக்கில் எண்ணெய்க் கிணற்றில் இருந்து பெருவாரியாகக் கிடைத்த பின் நீரும் தேவையான உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு அந்தச் செங்குத்தான மலைப் பாறைகளைத் தாண்டி அவர்கள் தப்பித்துச் செல்வது மிகவும் எளிதாகி விட்டது அவர்களுக்கு.”

“எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை.” என்றார் உதவியாளர். “ஆனால் சில நேரம் அவர்கள் கைகளில் ஒப்படைத்து விட வேண்டியதாய் இருக்கிறது”

“ஆம்” என்று நான் உறுமினேன். “அவர்களிடம் ஒப்படைப்பதை விட சந்தோசம் வேறெதுவும் கிடையாது!” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது தொலைபேசி ஒலித்தது.

உதவியாளர் எடுத்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவரது முகம் வெளிறியது தாடை கீழே இறங்கியது. “அடக் கடவுளே” என்று சொல்லிக் கொண்டே தொலைபேசி முனையை வைத்தார் மந்திரித்து விட்டது போல். “அப்படி இருக்காது”

“என்ன” என்று கேட்டேன்.

“திரு.டைலர் அவர்கள் இறந்து விட்டார்” என்று சோகமான குரலில் சொன்னார். “அவர் நேற்று கடலில் திடீரென்று இறந்து விட்டார்”

அடுத்த பத்து நாட்களும் டைலரின் உடலை அடக்கம் செய்வதிலும் அவரது மகனைத் தேடும் பணிக்குத் தயார் செய்வதிலும் கழிந்தன. இறந்த டைலரின் உதவியாளரான திரு. டாம் பில்லிங்ஸ்தான் அனைத்தையும் செய்தார். அவர் வேகமானவர், ஆற்றல் மிக்கவர். வேலையை ஆரம்பிப்பதிலும் முடிவெடுப்பதிலும் மிகவும் திறமையானவர். இது போன்ற வேகமான இளைஞனை இதுவரை நான் பார்த்தது இல்லை. அவர் வக்கீல்கள் நீதி மன்றங்கள் அனைத்தையும் கையாண்ட விதம் என்பது ஒரு சிற்பி களி மண்ணில் இருந்து உருவங்களை எளிதாக வடிப்பது போல் இருந்தது. போவன் டைலருடன் கல்லூரியில் கூடப் படித்தவர் அவர். தேவாலயத்தில் ஒரு சகோதரனாகவும் இருந்தவர். ஆனால் அதற்கு முன் டைலரின் பெரிய மாட்டுப் பண்ணைகளில் ஏழை மாடு மேய்ப்பவராக இருந்தார். மூத்த டைலர் தனது ஆயிரக்கணக்கான வேலைக்காரர்களில் இருந்து இவரைப் பொருக்கி எடுத்து உருவாக்கினார். இல்லை, டைலர் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பின் அவர் தன்னையே உருவாக்கினார் என்றும் சொல்லலாம். இளைய டைலரும் தன தந்தையைப் போலவே பிறரைக் கணிக்கும் ஆற்றல் பெற்றவராதலால் பில்லிங்க்ஸைத் தன் நண்பனாக்கிக் கொண்டார். அந்த இருவரின் நட்பு அவ்வளவு ஆழமானதாக இருந்ததால் தன் நாட்டுக் கொடியை விட டைலருக்காக உயிரைக் கொடுக்கும் அளவு தன் நண்பனை மதித்தார். இருந்தாலும் பில்லிங்ஸ் துதி பாடுபவராக என்றைக்கும் இருந்ததில்லை. நான் பொதுவாக யாரையும் அதிகமாக புகழ்வதில்லை. ஆனால் இந்த பில்லிங்ஸ் நான் சந்தித்த மனிதர்களிலேயே சாதாரணமாக ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேனோ அதற்கு மிக அருகில் வந்து நிற்கிறார். டைலர் தன் மகனைக் கல்லூரிக்கு அனுப்பு முன் நீதிநெறி என்ற சொல் பற்றி அறிந்திருக்க மாட்டார். இருந்தாலும் அவர் தன் வாழ்வில் ஒரு அமெரிக்க நன்மகன் பயன்படுத்த வேண்டிய நீதி நெறிகளில் ஒன்றைக் கூட தாண்டி இருக்க மாட்டார்.

பத்து நாட்கள் கழித்து திரு.டைலரின் உடல் தொரியாதோரில் வந்து சேர்ந்தவுடன் நாங்கள் பசிபிக் கடலில் கேப்ரோனாவைத் தேடி புறப்பட்டோம். மீகாமன் மற்றும் தொரியாதோரின் குழுவினரையும் சேர்த்து நாங்கள் அதில் 40 பேர் இருந்தோம். வெல்லவே முடியாத பில்லிங்ஸ்தான் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தார். கேப்ரோனவைத் தேடிய எங்கள் பயணம் நீண்ட நெடியதாய் சுவாரஸ்யமில்லாததாய் இருந்தது. ஏனெனில் உதவியாளர் தேடி எடுத்து வந்த அந்தப் பழைய வரை படம் துல்லியமானதாக இருக்கவில்லை. ஒரு வழியாக அதன் இறுக்கமான பெருஞ்சுவர்கள் கடலின் பனி மொத்தத்தில் இருந்து எட்டிப் பார்த்தவுடன் எங்கள் மனதில் ஒரு கேள்வி. நாங்கள் வந்த இடம் தெற்கு பசிபிக் கடலா இல்லை அண்டார்க்டிகாவா என்று. ஏனெனில் அங்கு பனிமலைகள் மிகுந்திருந்தன. கடுங் குளிராய் இருந்தது.

பயணம் முழுவதும் கேப்ரோனாவை அடைந்த பின் கேஸ்பக்கில் எப்படி நுழைவது என்ற கேள்வியை மட்டும் உறுதியாகத் தவிர்த்து வந்தார். போவன் டைலரின் கூற்றுப்படி ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. பூமிக்கடியில் ஓடும் கேஸ்பக்கின் அந்த ஆற்றின் முகத்துவாரம்தான் உட்புக முடியாத செங்குத்தான பாறைகளைத் தாண்டிய பள்ளத்தாக்கிற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதற்கான ஒரே வழி. டைலர் தன் கூட்டாளிகளுடன் உள்ளே செல்ல முடிந்ததென்றால் அவர்களிடம் இருந்த நீர்மூழ்கிக் கப்பல்தான் காரணம். ஆனால் தொரியாதோரால் நீரில் மூழ்கிச் செல்லவும் முடியும் அந்த மலைகளைத் தாண்டி மேலே பறக்கவும் முடியும். ஜிம்மி ஹாலிஸ் மற்றும் காலின் ஷார்ட் இருவரும் வெகு நேரமாய் வெட்டியாய் விவாதம் செய்து கொண்டே வந்தார்கள் இந்தத் தடைகளைத் தாண்டுவது எப்படி என்று வித விதமான கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் பில்லிங்ஸ் எதைத் தெரிவு செய்வார் என்று கேலிக்கிடமான பந்தயம் வைத்தார்கள். கேப்ரோனா பற்றிப் பேச்சு வளர ஆரம்பித்ததும் பில்லிங்ஸ் அனைவரையும் கூப்பிட்டார்.

“இதைப் பற்றிப் பேசுவதே வீண்.” என்றார் அவர். “அந்தத் தீவைக் கண்டுபிடிக்கும் வரை. அதன் கரையை அடைந்து முழுவதும் ஆராய்ந்து பார்க்கும் வரையில் நாம் சொல்லக் கூடியதெல்லாம் வெறும் அனுமானங்கள் மட்டுமே. டைலரின் கட்டுரையில் இருந்து கேப்ரோனாவின் கடற்கரையைப் பற்றி ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஒரு படத்தை வரைந்து வைத்திருந்தனர். அதில் எந்த இருவரது படங்களும் ஒத்துப் போவதற்கான வாய்ப்பு மிகவும் கம்மியே. அதே போல் அதில் எதுவும் நாம் கண்டுபிடிக்கப் போகும் கேப்ரோனாவின் கடற்கரையை ஒத்திருக்கவும் வாய்ப்பே இல்லை. என்னைப் பொறுத்தவரை அந்த மலைப்பாதைகளைக் கடப்பதற்கு என்னிடம் மூன்று திட்டங்கள் இருக்கின்றன. அதைச் செயல்படுத்தத் தேவையான அனைத்துப் பொருட்களும் இந்தப் படகின் சரக்கு அறையிலேயே இருக்கின்றன. மின் துளைக் கருவி ஒன்று உள்ளது. அதே போல் நிறைய நீர் புகா கம்பி வடங்களும் இருக்கின்றன. கரையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் தொரியாதோரை நிறுத்திய பின் அங்கிருந்து மலைப் பாறைகளின் மேல் வரை செல்லுமளவு அவைகள் இருக்கின்றன. அரை இன்ச் அளவுள்ள இரும்புக் கம்பிகள் இருக்கின்றன. அதை வைத்து ஏணியமைத்து அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் சென்று விடலாம். அது மிகவும் நீண்ட கடினமான அபாயகரமான வேலைதான் ஓட்டை போட்டு ஏணியின் கம்பிகளை எல்லாம் மாட்டி கீழிருந்து மேலே செல்வது. இருந்தாலும் சாத்தியமே.

“என்னிடம் உயிர் காக்கும் பீரங்கி ஒன்று இருக்கிறது. அதை வைத்து ஒரு இரும்புக் கம்பியை மேலே அனுப்பலாம். ஆனால் அதற்கு யாராவது மேலே இருக்க வேண்டும். ஏனெனில் அதன் கொக்கி சரியாக பாறையின் இடுக்கில் மாட்டாமல் சரிந்து விழுந்து விடலாம்.”

“மூன்றாவது திட்டம்தான் சரியாக வரும் என்று நினைக்கிறேன். நாம் கிளம்பும்போது படகில் ஏற்றி வைத்த கனமான பெட்டிகள் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். உனக்குத் தெரியும் என்று எனக்கும் தெரியும். ஏனெனில் அவைகளில் என்ன இருக்கிறது என்று நீ கேட்டாய். ஒவ்வொரு பெட்டியிலும் பெரிய H என்ற எழுத்து இருப்பதைப் பற்றியும் நீ கருத்து சொல்லி இருந்தாய். அந்தப் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் நீர் மேல் செல்லும் விமானங்களின் பாகங்கள் இருக்கின்றன. போவனின் கட்டுரையில் சொல்லப்பட்ட கடற்கரையில், அதாவது அந்த மனிதக் குரங்கு போன்று இருந்த உயிரினத்தின் உடல் இருந்த கடற்கரையில், அதை ஒன்று சேர்க்கலாம் என்று எண்ணுகிறேன் தேவையான அளவு இடம் இருக்கும் பட்சத்தில். இல்லையென்றால் நமது படகின் மேல் தளத்தில் அதை ஒழுங்கு படுத்தி பக்கவாட்டில் இருந்து கீழே இறக்கலாம். அதன் பின் நான் கயிறு மற்றும் கப்பியை எடுத்துக்கொண்டு மலை உச்சிக்கு செல்வேன். அதன் பின் மற்றவர்களை எல்லாம் மேலே ஏற்றுவது மிகவும் சுலபம். இல்லையேல் நான் பலமுறை திரும்ப வந்து அனைவரையும் தடுப்புச் சுவர் தாண்டி உள்ள பள்ளத்தாக்கிற்குக் கூட்டிச் செல்லவும் முடியும். இதெல்லாம் எனது முதல் வேவுப் பணியைப் பொறுத்தே இருக்கிறது.

அன்று மத்தியானம் நாங்கள் கேப்ரோனாவின் உயர்ந்த மலைகளைச் சுற்றி மெதுவாகப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தோம்.

“இப்பொழுது பாருங்கள்.” என்று சொன்னார் பில்லிங்ஸ் நாங்கள் தலையை உயர்த்தி ஆயிரம் அடிகள் உயர்ந்து நின்று கொண்டிருக்கும் அந்த மலைகளை எங்கள் கண்களால் அளந்து கொண்டிருக்கும்போது. “இதையெல்லாம் தாண்டுவதற்கு நாம் கற்பனை செய்து வைத்திருந்த யோசனைகள் எல்லாம் எவ்வளவு வீண் என்று இப்போதாவது புரிகிறதா.” என்று சொல்லியபடியே அவனது கட்டை விரலை நீட்டி மலையை அளந்தான். “அதன் மேல் ஏணி அமைத்து ஏறுவதற்குப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும். இவ்வளவு உயரம் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை நான். நமது பீரங்கி அந்த மலைத் தொடர்களில் இருக்கும் மிகச் சிறு உயரத்தில் இருக்கும் மலையில் பாதியைக் கூட தொட முடியாது. நீர் விமானத்தைத் தவிர வேறு எந்த திட்டத்தைப் பற்றியும் பேசுவது வீண். அந்தக் கடற்கரையைக் கண்டுபிடித்து உடன் வேலையை ஆரம்பித்து விட வேண்டியதுதான்.

மறுநாள் பின் காலைப் பொழுதில் கண்காணிப்பாளர் ஒரு மைல் தூரத்தில் அலை ஒன்று வருவதாகக் குறிப்பிட்டார். நாங்கள் அதை நெருங்கிக் கொண்டிருக்கும் போது குறுகிய அந்த கடற்கரையில் மோதி அது உடைந்து கொண்டிருந்தது. சிறிய படகைக் கீழிறக்கி 5 பேர் இறங்கினோம். அப்போது பனி போல் குளிர்ந்த நீரில் மூழ்க வேண்டி இருந்தது. அப்படி மூழ்கும் நேரத்தில் சில எலும்புகளைக் காண நேர்ந்தது. அவைகள் பரிணாமத்தில் மனிதக் குரங்குகளின் மேலும் மனிதர்களுக்குக் கீழும் இருப்பது போல் தோன்றியது. மலையின் அடிவாரத்தில் அவைகள் கிடைத்தன. பில்லிங்க்ஸும் திருப்தி அடைந்தான் மற்றவர்கள் போல். இதுதான் போவன் குறிப்பிட்டிருந்த கடற்கரை என்று. விமானத்தைக் கட்டுவதற்கும் நிறைய இடம் இருந்தது.

முடிவு ஒன்று எடுத்து விட்டபடியால் செயல்படுத்த யோசிக்கவேயில்லை. அதனால் H என்று குறியிடப்பட்டிருந்த அந்தப் பெரிய பெட்டிகளை எல்லாம் மத்தியானத்திற்குள் இறக்கி விட்டோம். அவைகளைப் பிரிப்பதற்கு மும்முரமாக இறங்கி விட்டோம். இரண்டு நாட்களில் அதைத் தயார் செய்து ஒழுங்கு படுத்தி விட்டோம். அதில் கப்பி கயிறு உணவு நீர் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் ஏற்றி விட்டோம். அதன் பின் ஒவ்வொருவரும் தான்தான் அவருடன் செல்ல வேண்டும் என்று கெஞ்சினோம். ஆனால் அவர் யாரையும் கூட்டிச் செல்லவில்லை. அதுதான் பில்லிங்ஸ். ஒரு மனிதனால் செய்ய முடிந்த ஆபத்தான அல்லது கடினமான வேலை இருந்தால் அதைத் தானே செய்து விடுவார். அவருக்கு உதவி தேவைப்பட்டால் கூட யாரும் ஆர்வமுள்ளவர்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. அந்த வேலையைத் திறம்படச் செய்யும் ஆட்களை அவரே தெரிவு செய்து அழைத்துச் செல்வார். தன்னார்வ சேவை அமைப்புகளின் அடிப்படையே தவறு என்று சொல்லக்கூடியவர். ஒட்டு மொத்தக் குழுவின் திடத்தையும் விசுவாசத்தையும் பலவீனப்படுத்தி விடும் என்ற நம்பிக்கை உள்ளவர்.

நீரின் எல்லை வரை நாங்கள் அந்த விமானத்தைத் தள்ளிக் கொண்டு சென்றோம். பில்லிங்ஸ் விமானி இருக்கையைப் பொருத்தினார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று மனதைத் திடப்படுத்திக்கொள்ள ஒரு கணம் தயங்கி நின்றார். ஜிம்மி ஹாலிஸ் ஆயுதங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தார். கைத்துப்பாக்கி சுழல் துப்பாக்கி போக விமானத்தின் முன் புறம் ஒரு இயந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் குண்டுகளும் சரியாய் இருந்தன. கேஸ்பக்கின் ஆபத்துக்கள் பற்றி போவன் எழுதி இருந்த குறிப்புகள் நாங்கள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு உதவியாய் இருந்தன.

ஒருவழியாக எல்லாம் தயாராகி விட்டது. விசைப்பொறி இயக்கப்பட்டது. கடலில் விமானத்தைத் தள்ளினோம். சிறிது நேரத்தில் அது கடலில் வழித்துக் கொண்டு சென்றது. அதன் பின் கடல் பரப்பில் இருந்து மெதுவாக மேலே எழுந்தது. அதன் பின் ஒரு அகலமான திருகுசுருள் போன்று சுழன்று வேகமாகப் பறக்க ஆரம்பித்தது. எங்களுக்கு மேல் நீண்ட உயரத்தில் ஒரு வட்டமிட்டது. அதன் பின் மலை உச்சியைத் தாண்டி மறைந்து விட்டது. நாங்கள் அமைதியாக அந்த மலை உச்சியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது ஹாலிஸ் தலைமைப் பொறுப்பில் இருந்தான். அடிக்கடி தனது கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

“கடவுளே.” என்று விளித்தான் ஷார்ட். “அவரிடமிருந்து இப்பொழுதெல்லாம் செய்தி வந்திருக்க வேண்டுமே”

ஹாலிஸ் பதற்றத்துடன் சிரித்தான். “அவர் சென்று பத்தே நிமிடங்கள்தான் ஆகிறது” என்று அறிவித்தான்.

“ஒரு மணி நேரம் ஆனது போல் இருக்கிறது” என்று மறித்தான் ஷார்ட். “என்ன அது. நீ கேட்டாயா. அவர் சுடுகிறார். இயந்திர துப்பாக்கியின் சத்தம். கடவுளே. இங்கே நாம் பல்லாயிரம் மைல் தொலைவில் இருக்கும் பாட்டிகள் போல் உதவ முடியாமல் இருக்கிறோம். நம்மால் எதுவும் செய்ய இயலாது. என்ன நடக்கிறதென்றும் தெரியாது. ஏன் அவர் நம்மில் ஒருவரைக் கூட அழைத்துச் செல்லவில்லை”

ஆம், அது இயந்திர துப்பாக்கியேதான். ஒரு நிமிடமாவது தொடர்ந்து கேட்டோம். அதன் பின் அமைதியானது. அது நடந்து 2 வாரங்கள் ஆகி விட்டன. அன்று முதல் பில்லிங்ஸிடம் இருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

– தொடரும்

– Translation of the book ‘The People That Time Forgot’ by Edgar Rice Burroughs – November 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *