காத்தாயி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 27, 2019
பார்வையிட்டோர்: 7,115 
 

ஊருக்குள்ள ரொம்ப ராசியானவன்னு பேரெடுத்தவ காத்தாயி.. அவளைப் பாத்துட்டுப் போனா நடக்காதுன்னு நினைக்கிற காரியங்கூட நடக்கும்ன்னு நம்ப ஆரம்பிச்சாங்க… முக்கியமா எங்கயாச்சும் போகையில காத்தாயி எருக்கொட்டிட்டு எதிரே வந்தாள்ன்னா போறவுகளுக்கு அந்தக் காரியம் அப்பவே முடிஞ்ச மாதிரி சந்தோஷம். பொண்ணு மாப்ளை பேசுறதுன்னா அவளைக் கூட்டிக்கிட்டுத்தான் போவாங்க.

அப்படிப்பட்ட காத்தாயி இன்னைக்கு ஊருக்குள்ள ராசியில்லாதவளா ஆயிட்டா… அன்னைக்கி அவளைப் பாத்துட்டுப் போனா மண்ணெல்லாம் பொண்ணாகும்ன்னு பேசுன சனங்க இன்னைக்கு அவளைப் பாத்துட்டுப் போனா பொச கெட்ட வாய்க்கு போயிலை கிடைக்காதுன்னு பேசிக்கிறாங்க. எங்கயாச்சும் போகும் போது எதிரே அவ வந்துட்டா அம்புட்டுத்தான் வீட்டுக்குத் திரும்பி வந்து ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு போகவும் செய்தாங்க… காத்தாயி எங்கிட்டாச்சும் நிக்கிறாளான்னு பாரு… அவ இல்லாதப்பத்தான் போகணும்ன்னும் பேச ஆரம்பிச்சாங்க… நரம்பில்லாத நாக்கு என்ன வேணுமின்னாலும் பேசும்தானே… அன்னைக்குத் தெய்வமா இருந்தவ இன்னைக்குக் கல்லாத் தெரியக் காரணம் என்னன்னு அவளுக்கு விளங்கவே இல்லை. ​

காத்தாயி ஆளை அசர வைக்கிற அழகு எல்லாம் இல்லை… கிராமத்துல இருட்டுக் கருப்புன்னு சொல்வாங்க அப்படி ஒரு இருட்டுக் கருப்பு அவ… மஞ்சளரச்சிப் பூச்சிக் குளிச்சிட்டு வந்து தலையை அள்ளிக் கட்டிக்கிட்டு நெத்தியில பெரிய அளவுல மீனாட்சி குங்குமம் வச்சி கோபுரக்கரை சேலையை கெரண்டக்கால் தெரிய கட்டி நடந்து வந்தான்னா அந்த மாரியாத்தாவே நடந்து வர்ற மாதிரி இருக்கும். அவளுக்கு உதட்டு மேல மூக்குக்கு கீழ இருக்கிற அந்தப் பருதான் அழகே… எந்த நேரமும் சிரிச்சிக்கிட்டேதான் இருப்பா.

அந்த ஊருக்கு அவள் திருமணமாகி வரும்போது பதினெட்டு வயசு கூட ஆகலை… சின்னப் புள்ளையா சேலையை சுத்திக்கிட்டு திரிவா… அவ புருஷன் ராமசாமிக்கு அப்பல்லாம் ஒரு உருப்படியான வேலை இல்லை. கொஞ்ச நாள் டீக்கடையில இருப்பான்… திடீர்ன்னு பழக்கடையில வேலை பார்ப்பான்… அப்புறம் மாதவனோட பலசரக்கடையில இருப்பான்… நாடு மாறியின்னு கேள்விப்பட்டிருப்பீங்கதானே இவன் வேலைமாறி… ஒரு சின்னப்பிள்ளை பொறுப்பில்லாத புருஷன் கூட குடும்பம் நடத்துற எவ்வளவு கஷ்டம்ன்னு அவ உணர்ந்தாலும் வீட்டுப் பெரியவங்க உணரலை… அவனை நீதான் திருத்தணும்… புருஷனை முந்தானைக்குள்ள முடியத் தெரியணும்டி… சும்மா அவங்கூட படுத்து எந்திரிச்சா பத்தாது… படுக்கும் போது அவனை நம்ம வழிக்கு கொண்டாரணும் அங்கதான் இருக்கு வாழ்க்கையோட சூட்சமம்ன்னு அவ அக்கா சொல்லிக் கொடுத்தா அதை இவ செஞ்சா.

சித்தம் போக்கு சிவம் போக்குன்னு திரிஞ்சவன் அவ மகுடிக்கு ஆட ஆரம்பிச்சான்… ஆடி போயி ஆவணி வந்தா சரியாகும்ன்னு ஜோசியக்காரன் சொல்ற மாதிரி அவ வந்த ஆறு மாசத்துக்குள்ள முத்தையா செட்டியாருக்கிட்ட கணக்கெழுதுற வேலைக்குச் சேந்தான்… அப்புறம் அங்கயே நிலைச்சிட்டான். செட்டியார் உதவியில ரோட்டோரத்துல கிடந்த செல்லையாவோட நாலு ஏக்கரு புஞ்சையை வாங்கினான். செட்டியார் கொடுத்தது போக பத்தாதுக்கு காத்தாயியோட நகையை அடகு வச்சி பணம் கொடுத்தான். அவனுக்கு நகையைக் கொடுக்காதேன்னு எல்லாரும் சொன்னாங்க… ஆனா அவன் மேல் இவ முழு நம்பிக்கை வச்சா… அந்த இடத்துல நாலு வருசத்துல போர் போட்டு வாழை, தென்னை, மா, பலா எல்லாம் வச்சி விவசாயம் பண்ண ஆரம்பிச்சான். நல்ல வசதி, வாய்ப்புன்னு வந்த பின்னாலயும் பழச மறக்காம செட்டியார் வீட்டு வரவு செலவுக் கணக்கை வருசா வருசம் அவன்தான் எழுதிக் கொடுப்பான். எதுவாயிருந்தாலும் காத்தாயிதான் அவனுக்குத் தெய்வம்… அவ சொன்னா தட்டமாட்டான். யோசிச்சிக்கப்பான்னு யாராச்சும் சொன்னா எங்காத்தா சொல்லிட்டா. சரியா நடக்கும் என்பான். அதே மாதிரி நடக்கும். ஊருக்குள்ள மாடி போட்டு முதல்ல வீடு கட்டுனது அவன்தான். உதவாக்கரைப் பயல உசரத்துல உக்கார வச்சிட்டா ராஜாத்தின்னும், அவ அடி எடுத்து வச்ச நேரம்னும் ஊரே காத்தாயியைப் புகழ்ந்துச்சு.

ஒவ்வொரு முறையும் கல்யாணம் தட்டிப் போன சரசுக்கு மாப்பிள்ளை பாக்கப் போகும் போது பார்வதிக்கிட்ட அக்காவ் இந்த மாப்பிள்ளைதான் சரசுக்கு முடியும் பாருன்னு சொன்னா அவ சொன்ன முகூர்த்தமா இல்ல சரசுவுக்கு நல்ல நேரமான்னு தெரியல. அந்த இடம் ஓகே ஆகி, சரசுக்கு கல்யாணம் ஆகி கையில ஒண்ணும் இடுப்புல ஒண்ணுமாக கூட்டிக்கிட்டு ஆத்தாவை பாக்க அடிக்கடி வருவா… வரும்போதெல்லாம் காத்தாயி வீட்டுக்கு வந்து மணிக்கணக்குல பேசிக்கிட்டு இருப்பா… அவளும் இப்ப பேரன் பேத்தி எடுத்துட்டா…

வாத்தியாரு வேலைக்கு இண்டர்வியூ போன சுப்பையாக்கிட்ட, ‘மாப்ள கவலப்படாம போங்க… கண்டிப்பா ஒங்களுக்கு இந்த வேல கெடைக்கும்’ அப்படின்னு சொல்லி மாரியம்மன் கோவில் துணூறைப் நெற்றியில் பூசிவிட்டா, அவ வாய் முகூர்த்தம் அவனுக்கு வாத்தியார் வேலை கிடைச்சதா ஊர்ல பேசிக்கிட்டாங்க. இன்னைக்கு அவன் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டரா இருக்கான். அவன் மகங்கூட ரெண்டு வருசத்துக்கு முன்னாடி காலேசுல வாத்தியாராயிட்டான்.

குழந்தையில்லாத வேலம்மா மகளுக்கு, ஏதோ ஒரு கசாயம் ரெடி பண்ணி மூணு நாளு காலையில வெறும் வயித்துல குடிக்கச் சொல்லி கொடுத்தா… மூணு பயலுகளுக்குப் பின்னே பொண்ணு வேணும்ன்னு இப்ப நாலாவதை சுமந்துக்கிட்டு நிக்கிறா…

அறுவடை சமயத்துல யார் வீட்டுல கருதறுப்புன்னாலும் மொத அரி அவளோட அரியாத்தான் இருக்கும் அந்த வயல்ல பத்து மூடை வர்ற இடத்துல பதினைந்து மூடை வரும்னு நம்பினாங்க. அவளை வீட்ல வந்து கூட்டிக்கிட்டுப் போவாங்க. இதெல்லாமே ராமசாமி இருக்கும் வரைக்கும்தான். அறுபத்தஞ்சு வயசுல தோட்டத்துல வேலை பாத்துக்கிட்டு இருந்தவன் எதோ கடிச்சி நுரை தள்ளி மயங்கிக் கிடக்க, தூக்கிக்கிட்டு பெரியசாமிக்கிட்ட ஓடுனாங்க… முடிஞ்சி போச்சுன்னு சொல்லிட்டாரு. அத்தோட காத்தாயியோட சந்தோஷம் போச்சு… வட்டப் பொட்டு இல்லாத முகம் வசீகரம் இழந்து போச்சு… ராசியானவங்கிற பேருமே ராசியில்லாமப் போச்சு.

மேல வீட்டு சுசீந்திரன் பொண்டாட்டிக்கு வயித்த வலி வந்து கார்ல கூட்டிப் போனப்போ, இவ வீட்டைக் கடக்கும் போது வாசல்ல நின்னு நல்லபடியாப் பொறக்கும் கவலைப்படாம போங்கன்னு கை காட்டினா. குழந்தை இடம் மாறிக் கெடக்குன்னு சொல்லி ஆபரேசன் பண்ணினப்போ குழந்தை பிழைச்சிக்கிச்சு அவ செத்துப்போயிட்டா. காத்தாயிய பாத்துட்டுப் போனதுதான் காரணம் ஊருக்குள்ள பேச ஆரம்பிச்சாங்க… தாலியறுத்தவளா லெட்சணமா வீட்டுக்குள்ள இருக்காளா பாருன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க.

முத்துப்பாண்டிப் பய வீட்டு மாடு முடியாம நின்னப்போ, அவன் பொண்டாட்டி இவகிட்ட வந்து புலம்ப, இவ போயிப் பாத்துட்டு வாழைப்பழம் வாங்கியாரச் சொல்லி கத்தாழையோட ஏதோ பச்சிலை கலந்து வாழைப்பழத்துக்குள்ள வச்சி கொடுத்துட்டு வந்தா… நல்லா பால் கறந்த பசு அன்னைக்கி ராத்திரியே செத்துப் போச்சு… பச்சக்கன்னுக்குட்டி கத்திக்கிட்டே கிடக்கு. இவ மருந்து கொடுக்கலைன்னா மாடு பொழச்சிருக்கும் என்ன மருந்தைக் கொடுத்தாளோன்னு முத்துப்பாண்டி பொண்டாட்டி ஒப்பாரி வச்சா…. அந்த முண்டச்சிய ஏன்டி மருந்து கொடுக்கச் சொன்னே… ஒரு போனு பண்ணியிருந்தா கம்பவுண்டரு வந்திருப்பாருன்னு கனகம் சத்தம் போட்டா.

கண்ணபிரான் மகனுக்கு வீடு கட்ட தச்செஞ்சப்போ, ஊருக்குள்ள எல்லாருக்கும் சொன்னாரு… சரி சொல்லியிருக்காரே போவாம இருக்ககூடாதுன்னு சாமியெல்லாம் கும்பிட்டு பூஜை போட்டதுக்கு அப்புறம்தான் போனா… இவ எதுக்கு ஆட்டிக்கிட்டு இங்க வாறா முண்டச்சி அப்படின்னு பாப்பாத்தி பக்கத்தில இருந்த வீராயிக்கிட்ட சொன்னதை காதுல கேட்டு கண் கலங்கினாள். என்ன ஆச்சோ தெரியலை பாதி வரைக்கும் கட்டுன வீடு மீதியை கட்ட முடியாம கிடக்கு… காத்தாயி கால் வச்சதாலதான் இப்படி ஆச்சின்னு கண்ணபிரான் பொண்டாட்டி கண்டவங்ககிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கா.

எல்லாத்துக்கும் நம்மள முன்னாடி நிக்கச் சொன்ன ஊரு இன்னைக்கு ஒதுக்கிப் பாக்குதேன்னு அவ மனசு வருந்துச்சு… அவளைப் பாக்க வந்த மகன்கிட்ட ‘காலையில வெளிய தெருவ போகும்போது யாராச்சும் என்னய பாத்துட்டுப் போனா… அன்னைக்கு காரியம் வெளங்காமப் போயிருதுன்னு பேசிக்கிறாங்க… சுமங்கலி பொம்பள போனாலே ஆயிரம் பேசுவாங்க… நா அமங்கலி… அவங்க முன்னாடி எதுக்குப் போவணும்ன்னு வெளிய போக யோசிச்சிக்கிட்டு அடக்கிக்கிட்டு வீட்டுக்குள்ள உக்காந்திருக்கேன்… ஆறு மணிக்கு போயிப் பழக்கப்பட்டவ பத்துப் பதினோரு மணி வரைக்கும் அடக்கிக்கிட்டு இருக்க முடியுமா சொல்லு. அந்த தென்ன மரத்துப் பக்கம் ஒரு கக்கூசு கட்டிக் கொடுத்தியன்னா நாம்பாட்டுக்கு அதுல இருந்துப்பேன்னு சொன்னதுக்கு ‘செலவு மேல செலவும்மா… பாக்கலாம்’ என்று சொல்லிச் சென்றவன் நாலஞ்சு மாசமா ஊருப்பக்கம் வரவேயில்லை.

இப்பல்லாம் அவ எந்த நல்லது கெட்டதுக்கும் போறதில்லை. அம்மன் கோவில் திருவிழா அப்பக் கூட வீட்டுக்குள்ளதான் முடங்கிக் கிடப்பா… எல்லாரும் சாமி கும்பிட்டுப் போன பின்னால அங்க போயி ரொம்ப நேரம் ஆத்தாவோட வாசல்ல கிடப்பா… அப்பல்லாம் கண்ணீர் மாலைமாலையா ஒடும். யாருக்கும் கெடுதல் நினைச்சதில்லை. அன்னைக்கி என்னையப் பாத்துட்டு எந்தக் காரியத்தையும் தொடங்கனுமின்னு நின்னவங்க இன்னைக்கி எதிர்ல வராதேன்னு சொல்றாங்க. பேசாம என்னையும் எம்புருஷன் போன இடத்துக்கு போக வச்சிருன்னு புலம்புவா. எப்பவும் போல மாரியத்தா சிரிச்சிக்கிட்டே இருப்பா.

காளியம்மா மகன் சேகருக்கு கல்யாணம். சின்ன வயசுல ஆயா ஆயான்னு இவ முந்தானையை பிடிச்சிக்கிட்டு யார்க்கிட்டயும் போவமாட்டேன்னு அடம் பிடிச்சி இவளுக்கிட்ட கிடந்த பய அவன். இப்பவும் ஊர்ல இருந்து வரும் போது இவளுக்குன்னு தனியா பலகாரமெல்லாம் வாங்கியாந்து கொடுப்பான். இவகிட்டத்தான் வந்து கிடப்பான்… ஒரு தடவை அவனோட அப்பத்தா எப்பப் பாத்தாலும் அங்க என்ன வேலையின்னு கத்துனதுக்கு உன்னோட வேலையைப் பாரு என்னைய அங்க போகாதேன்னு சொல்ல நீயாருன்னு கேட்டுட்டான். போன வாரம் அவளுக்கு சேலை வாங்கிக் கொண்டாந்து கொடுத்து நான் தாலி கட்டுறப்போ நீ இந்தச் சேலையிலதான் வரணும்ன்னு சொல்லிட்டுப் போனான். ஊரே ராசியில்லாதவன்னு சொல்றப்போ நாம அங்க போயி புள்ளையோட கல்யாண வாழ்க்கை சூனியமாயிட்டான்னு நினைச்சி கல்யாணத்துக்கு அவ போகாம மகனையும் மருமகளையும் போகச் சொல்லிட்டா…

தாலி கட்டின பின்னால பொண்ணு மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு ஊர்ல சாமி கும்பிட சில பெருசுங்க வந்தாங்க. காத்தாயி வீட்டு வாசல்ல வேனை நிறுத்தச் சொன்னான் சேகர்.

“எப்பா சாமி கும்பிட்டு வந்திடலாம். மொத மொதல்ல கோயிலுக்குத்தான் போகணும்” என்றாள் வீராயி.

“அப்பத்தா… இதுதான் என்னோட கோவில்… என்னோட சாமி இங்கதான் இருக்கு… எனக்கு இந்த ராசியில எல்லாம் நம்பிக்கை இல்லை” அப்படின்னு சொல்லி பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு இறங்கிட்டான்.

“சொல்லச் சொல்லக் கேக்குதா பாரு… இவனோட ஆத்தா காத்தாயி அம்மா வீட்டுக்கு போக விடாதீக… நாளப்பின்ன ஆசி வாங்கிக்கலாம்ன்னு சொல்லியே விட்டா… இது இப்பத்தான் ஏறிக்கிட்டுப் போகுது… அவ உங்கள நம்பி போகச் சொன்னேன் பாருன்னு நம்மளையில்ல திட்டுவா” என்றாள் பாப்பாத்தி.

சேகரைப் பார்த்ததும் முகமெல்லாம் மலர்ச்சியாக எழுந்தவள், “கோயிலுக்குப் போகாம இங்க எதுக்கு வந்தே… முதல்ல ஆத்தாவோட குங்குமத்தை உம் பொண்டாட்டிக்கு வச்சிவிடு… போ… அப்பறம் இங்க வரலாம்” என்றாள்.

“ஆயா புரியாத சனங்க உன்னைப் புண்படுத்தலாம் நீதான் எனக்கு சாமி. நாங்க நல்லாயிருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டு உங்கையால எங்களுக்கு துணூறு பூசி விடு… நீ வாழ வச்ச குடும்பந்தான் நிறைய இருக்கு… உன்னால கெட்ட குடும்பம்ன்னு எதுவும் இல்லை…” என்று அருகில் நின்றவளிடம் ஜாடை காட்ட, இருவரும் காலில் விழுந்தார்கள்.

“நல்லாயிருப்பீக… பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழ்வீங்க… எந்த குறையும் எம் பிள்ளைகளுக்கு வராது” என்று அவர்களைத் தொட்டுத் தூக்கியவளின் கண்கள் கலங்கி இருந்தன.

‘ம்க்கும் பதினாறு பெத்துட்டாலும், என்ன நடக்கப் போவுதோ தெரியலையே’ பாப்பாத்தியின் காதைக் கடித்தாள் வீராயி.

இன்னைக்கு சேகர் கனரா பேங்கோட குறுந்தங்குடி கிளையில மேனேஜரா இருக்கான்… அவன் பொண்டாட்டி புஷ்பவதி கல்லூரிப் பேராசிரியையா இருக்கா… தேவகோட்டை ஜமீந்தார் நகர்ல ரெண்டு மாடி வீடு கட்டி, ஆசைக்கு ஒண்ணு ஆஸ்திக்கு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோஷமா இருக்கான். அடிக்கடி காத்தாயிய வீட்டுக்கு கூட்டிப் போயிருவான். அவளும் மகன் வீட்டுக்குப் போறாளோ இல்லையோ சேகர் வீட்டுக்கு உடனே கிளம்பிடுவா…

காத்தாயியை இப்பல்லாம் யாரும் ராசியில்லாதவன்னு சொல்றதில்லை… காத்தாயியும் இப்பல்லாம் யாருக்காகவும் பயப்படுவதுமில்லை…

(2016- அக்டோபர் 01 அகல் மின்னிதழில் வெளியான சிறுகதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *