கடல் அலைகள் குமுறுகின்றன!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 13,965 
 

செக்கல் பொழுது. ஊருக்கு தெற்கேயுள்ள கடலோரச் சுடுகாடும் உறைந்துவிட்டது, கடல் அம்மாறு போட்டுக்கொண்டிருந்தது.

கிராமத்து வயல் எல்லைகளில் நாய்கள் கடல் உறுமிபோல் ஊளையிட்டுக் கேட்டது.

kadalalaigal

மேகத்திரைகள் கொண்டல் பக்க வாட்டாகக் கவிந்து மேற்கு வானம் ஒரே கணவாய் மை நிறமடித்துத் தெரிகிறது. வானத்தில் இடி முழக்கம் மின்னி அதிர்கிறது. செவ்வானம் நிறமழிந்து எங்கும் கருமை கூட்டும் அந்தகாரம்.

கொண்டலடியோடு பெய்த மழையும் வீசிய சுழற்காற்றும் இன்னும் ஓயவில்லை.

‘த்சூ, என்ன குளிரப்பா?’ என்று மண்டா ஏறிய திருக்கைபோல் தேகம் ‘திக்’கிட முற்றத்தில் வந்து நின்று எட்டுத்திக்கும் பார்த்தான் தம்பிமுத்து.

‘சீர்வம்பு இன்னும் சமநிலைப்பட்டு வரேல்ல’ என்று முணுமுணுத்தது வாய். சர்வாங்கம் அசைவற்று நின்றது.

குடிசைக்குள்ளே குறாவிப் படுத்திருக்கின்ற குழந்தைகளைப் பார்த்தான்.

அவர்களின் எக்கிய வயிறுகள் கீழிட்டுத்தாழ, நெஞ்சுப்பாள எலும்புகள் சுறாமுட்களைப்போல் பிறிட்டுப் புடைத்துக்கிடந்தன.

அவன் கண்கள் இரங்கிக் கசிந்தன.

மழை ஓய்வதாக இல்லை.

‘இதென்ன வெள்ளிடி, ஊரவனைப் பிழைக்கவிடாமல் குடாவலையைப் போட்டு மனவலெண்டவன் பக்கத்தாலே கெடுக்கிறானெண்டு பாத்தா இந்த மழைத் தண்ணி வந்து ஒரே மூடமாகப் பிடிச்சுக் கொண்டிருக்கே’ என்று தங்கம்மா தனக்குள் கறுவிக்கொண்டே புருஷனைப் பார்த்தாள்.

அப்போது மாதா கோயில் திருந்தாதி மணியோசை ‘கணீ’ரென்று கேட்டது.

தம்பிமுத்து நெஞ்சிலும் நெற்றியிலும் தொட்டுச்சிலுவை போட்டுச் சொண்டுகளை அருக்கூட்டிக் கொண்டான்.

அப்போது யாரோ தெருவின் படலையில் நின்று கூப்பிடும் அரவம் கேட்டு, நாய் குரைத்துக் கொண்டு ஓடிற்று.

தம்பி முத்து ‘ஆரது’ என்று கேட்டவனாக நடந்தான்.

சிமியோனப்பா வடிக்கலும் நூலுமாகத் தெருவில் நின்றுகொண்டிருந்தார்.

‘உப்பிடி ஆத்துப்பறந்து வாறாய். என்னண்ணை சங்கதி’ என்று கேட்டான் தம்பிமுத்து.

‘சீர் வம்பெண்டு ஒக்கம வீடுகளுக்க அடைஞ்சு கிடக்கிறம். அவன் மனவல் அடைப்பு வலையோட எப்பவோ போட்டானாம். நெடுகக் கண்ணை மூடிக் கொண்டிருந்தால், நாங்கள் சீவிக்கிறேல்லியே?’

‘விளங்கேள, விளப்பமாகச் சொல்லண்ணை’

‘ என்னத்தைச் சொல்றது. ஊர் கூடி நடுக்குறிச்சிக்க கூட்டம் வைச்சு, எல்லாரும் ஒண்டாக் கூடி ஒரு முடிவு எடுத்தாத்தான் மனவலை மட்டந் தட்டலாம்’

‘அதானண்ணை நல்லது’

‘என்ன முடிவு எடுக்கப் போறியள்?’ என்று ஆவலோடு கேட்டாள் தங்கம்மா.

‘கூட்டத்தில பேசின புளுகுதான் தெரியும்’

அப்போது நாய் ‘வெடுக்’கென்று மறுபடியும் வாயோச்சமாகக் குரைத்தது.

தங்கம்மா தெருப்படலையைத் திறந்து பாhத்தாள்.

தெருவோராமாக துரைராசா நின்றான்.

‘அங்க ஆக்களெல்லாம் வந்திட்டடினம். உவே உங்க என்ன செய்து

கொண்டிருக்கினம்?’ என்று துரைராசா சீறுமுரல் மாதிரி எரிந்து விழுந்தான்.

அவன் போட்ட சத்தம் சிமியோனப்பா காதில் விழுந்தது.

‘தம்பி துரைராசா, தம்பிமுத்துவையும் கூட்டிக்கொண்டு வாறன், எல்லோரும் கூடி நில்லுங்கோ’ என்றார் அப்பா.

துரைராசா திரும்பிய கையோடு சிமியோனப்பாவும் தம்பி முத்துவும் புறப்பட்டார்கள்.

அப்போது மழை சாடையாக ஓய்ந்துகொண்டு வந்தது.

சிமியோனப்பாவும் தம்பிமுத்துவும் நடுக்குறிச்சிக் குள்ளே இறங்க முன்பே கூட்டம் தொடங்கிவிட்டது. பத்து எட்டுப்பேரைவிட அநேகமாக எல்லோரும் குழுமிவிட்டார்கள்.

கூட்டத்தின் நடுவே ஒரு கேஸ் லாம்பு. அதைச்சுற்றி வளைத்துக் கொண்டு சிலர் தனக்கு முன்னே உவப்பான கன்னையார் சகிதம் குந்திக் கொண்டார்கள். அயல் வீட்டு அக்கம் பக்கம் பெண்கள் ‘ஒட்டுவியனம்’ கேட்கிற தோரணையில் வேலி வரிச்சுக்கு மறைவில் சள்ளை கட்டி ‘விடுதி’ வைத்து, இரண்டு பெண்களுக்கு நடுவில் ஒரு வெற்றிலைப் பெட்டி வீதம், நாலு ஆறு வெற்றிலைப் பெட்டிகள்; சூழ இருந்தார்கள். ஒரே கண்ட சீருக்குக் கதை.

‘நேரத்தை ஏன் மினைக்கெடுத்திறியள். இனித்துவங்குங்கோவன்’ என்று உசார் கூட்டினார் சிமியோனப்பா.

கூட்டத்தின் கவனத்தைத் திசை திருப்புமுகமாக அடுத்த வீட்டுக் குசினியில் சட்டிபானை தட்டப்படுகிற சத்தம் கேட்டது.

‘ஆ, கொழிஞ்சுபோவான்ர பூனையாக்குமடி?’ என்று அள்ளிப்பிடித்த சேலையும் கிள்ளி எறிந்த தாவணியுமாகத் துள்ளிக் கொண்டு ஓடினாள் பொன்னரியம்.

விளக்கைப் பிடித்துப் பார்த்தாள். பூனை நக்கிய சட்டி, விளமீன் செதில்கள் போல் பளபளத்தது. திட்டும் வசைவுமாக வாய் புறுபுறுத்தது.

‘ஆ இஞ்சால சீர்வம்பு ஒரு பக்கம். அங்கால அவன் மனுவ லின்ற கொடுவாந்திரியம் மறுபக்கம். நாய் பூனைகளும் வீட்டில் கிடக்கிறதைவைச் செடுக்க விடுகுதுகளில்லை’

இந்தச் சங்கடத்துக்குள்ளே கூட்டத்தை நடத்துவதற்குத் தலைவர் தெரிவில் துரைராசாவுக்கும் முத்துராசாவுக்கும் ‘தகறாறு’ என்று மூண்டு நூர்ந்தது.

‘கூட்டம் துவங்கிறதுக்கே இப்புடிக் களைபுளப்படுறீங்கள், எக்கணம் மன வலின்ற சங்கதியை எப்படிப்பேசி முடிக்கப் போறியள்?’ என்று ஆத்திரத்துடன் கேட்டுவிட்டுக் கூட்டத்தில் கண்ணோட்டம்விட்டான் தம்பிமுத்து.

‘சரி சரி, ஒருதரை யொருதர் காச்சமூச்சுப்படாமல் ஏதேன் நல்ல யோசனை சொல்லுங்கோ’ என்று சிமியோனப்பா கூட்டத்தைத் திசை திருப்பினார்.

‘இதில வில்லங்கம் என்னெண்டால், எங்களுக்கை ஒற்றுமை இல்லாததுதான்’ என்று வந்தது ஒரு குரல்.

‘அதையும் இதில பேசித் தீர்ப்பம்’ என்றது மறுகுரல்.

‘கடலில் ஆரும் போய் பிழைக்கலாமெண்டு கவுண்மேந்து சட்டம் வைச்சிருக்கேக்க, நாங்கள் மனவலிட்ட, நீ உந்தக குடாவலையைப் போடாதை’யெண்டு எப்பிடி ஞாயம் கேக்கிறது?’ என்றான் தம்பி முத்து.

‘அப்பவே மனவல் கடலை மறிச்சு அந்தக் குடாவலையைப் போடேக்க சொல்லியிருக்கலாம். இப்ப உழைச்சு உரிசை கண்டிட்டான். பொதுச் சொத்தை தனிய அள்ளுற ஆசை இருக்கே அது செத்தாலும் போகாது. இப்ப ஆளும் மாறி அவன்ர குணமும் மாறிப்போச்சு’ என்ற கருத்தைத் தம்பிமுத்துவே மீண்டும் சொன்னான்.

‘அதுக்கு இனி ஒரு வழிதான் இருக்கு’

‘என்னது’

‘எல்லாருமாச் சேர்ந்து அவன்ர குடாவலையைப் புடுங்கி எறியிறதுதான்’

இப்படி அபிப்பிராயம் வந்த அடுத்த கணமே ஒரு குரல் கமாரிட்டது.

‘டேய், குழப்புங்கோடா கூட்டத்தை’

சூசை அண்ணர் ஆடி அவிழ்ந்த தனது கொண்டையில் கைவைத்தபடி உருக்கொண்டு சன்னதமாடினார்.

‘எடி ஆத்தே, சூசை மனுசனுக்கு என்னவாமடி?’

சிரிப்புக்கும் ஏக்கத்துக்கும் இடையில் பொன்னரியம் கேட்ட ஒலி சிமியோனப்பாவின் காதில் விழுந்தது.

‘சூசை மனவலின்ர கையாள்’ என்று அப்போது ஒரு குரல் கம்பீரித்த போது எல்லோரும் ஓடி முழிசினார்கள்.

‘டேய், டாம் பூள். கெற்றவுட்’ என்று சூசையண்ணரைப் பார்த்துக் கத்தினான். ஹோல்டிங் சிவலை ரத்தனம்.

கொய்க் கிளைமாதிரி கூட்டம் அல்லோலகல் லோலப் பட்டுக் கலைந்தது.

பொழுது பூமிக்குள் உறைந்து கொண்டிருந்தது.

வேலிக் கடப்பில் நின்று சிமியோனப்பா ‘கூய்’ போட்டுக் கூவுகிற குரல் கேட்டுத் தம்பிமுத்து, ‘அண்ணை, இந்தா நான் வெளி;கிட்டிட்டன். நீங்கள் முன்னுக்குத் துறைக்குப் போய் கம்புதடி கம்பாயங்களை எடுத்து வள்ளத்தில வையுங்கோ’ என்ற பறதியாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

‘இம்மட்டு நாளாக மழை காத்தோட வீட்டுக்க கிடந்திட்டு இண்டைக்கென வெளிக்கிட்டிருக்குதுகள். மனவலும் இண்டைக்குப் பாத்துப்போறன். என்ன வில்லங்கமோ?’ என்று ஊர் முழுதும் பேச்சு அடிபட்டது.

‘புள்ள தங்கம்மா, மன வலாக்களும் கமறிக்கொண்டு போ ற ன வையாம். கடலுக்க என்ன கொடுவினை நடக்குமோ தெரியாது’ என்று அடுத்தவீட்டுச் செல்லாச்சிப் பெத்தாச்சி ஈனித்துச் சொன்னதைக் கேட்ட தங்கம்மாவின் நெஞ்சு இடியேறு விழுந்ததுபோல் அதைத்தது.

‘அலை எழும்புற கடல்தான் ஆளையும் விழுங்கும்’ என்று நினைத்து நெஞ்சினுள் துணுக்குற்றாள்.

இரவு மண்டியது. பூமி சிதம்பிக் குளிரடித்தது.

இரவு பத்துமணி. தங்கம்மா விழித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது கொண்டல் பக்கமாக இடி முழக்கம் பூமி அதிர்ந்து கேட்டது. கச்சானுக்குள்ளே மேகம் சிலும்பி வெடித்து மின்னியது. ஓவ்வொரு கடி மின்னலுக்கும் அவள் நெஞ்சு ஒவ்வொரு ஏக்க மூச்சாய் கமறியது.

‘விடிஞ்சு அதுகள் எப்ப கரை வந்து சேரும்? என்று தனக்குள் தவித்துக் கொண்டிருந்தாள்.

தங்கம்மாவின் கண்கள் கயர்க் கட்டின. நித்திரைக்கும் விழிப்பிற்கு மிடையிலான குத்துவிழியில் உறங்கினாள். கோழித்தூக்கம்.

சற்றுவேளையால் கோடித்தெருவில் நாய்கள் அம்மாறு போட்டு

ஊளையிட்டுக் கேட்டு, அவள் சட்டென விழித்தாள்.

‘ஊருக்க கள்ளர் கிள்ளர் உலாவுறாங்களோ?’

என்றாலும், தொழிலுக்குப்போன ஊரவர்களையும் புருஷன் தம்பிமுத்துவையும் நினைத்தே பதைத்துக் கொண்டிருந்தாள்.

நாய்களின் குரைப்பு ஓயவில்லை.

‘இப்ப அடிச்ச காத்துக்கு வளவுக்க ஏதேன் பனங்கங்குமட்டைகள் விழுந்திருக்கும், பொறுக்கியருவம்’ என்று எழுந்து சென்றாள்.

அப்போது தெருப்படலையை யாரோ ‘கடகட’த்துத் தட்டும் சத்தம் கேட்டதும் கால்கள் தரித்தன.

விளக்கை ஏந்திப்பிடித்தவண்ணம், கண்களை கூசிப் பாhத்து, ‘உதாருது?’ என்று நா வறட்டக் கேட்டபடி உற்றுப் பார்த்தாள்.

தம்பிமுத்து தலைப்பாகையை அவிழ்த்து உதறிக் கொண்டு ‘விறுக்’ கென்று உள்ளே வந்தான்.

திருக்கை அடித்தமாதிரி; அவள் தேகம் குல்விட்டது.

‘உதென்ன உந்தக்கோலம்?’

‘த்சூ, சத்தம் போடாதை. மெதுவாய்ப்பேசு’

‘ஏன், என்ன நடந்தது?’

நாங்கள் கடலுக்க வலை படுக்க முந்தியே மனவல் குடா வலையைக் கடலடங்கப் பரப்பிப் போட்டான். எடுக்கச் சொல்லி ஊரவையெல்லாம் சேந்து கேட்டம். மறுத்திட்டுத் துவக்கை எடுத்து நீட்டினான். உடன பொடியள் துவக்கையும் பறிச்சு ஆளுக்கும் செப்பமாக அடிச்சுப் போட்டாங்கள்’

‘கடைசியா என்ன நடந்திருக்கு’

‘காயம் பட்டு விழுந்து போனான். ஆரோ பொலிசுக்கு ஓடினான். நாங்கள் சிமிக்கினாமல் துறைக்கு வந்திட்டம்’

கதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே காகங்கள் கரைந்தன. ஊர் விடிந்து கொண்டு வந்தது.

ழூழூழூ

மனவலின் மருமோன் அந்தோனி கொழும்பிலிருந்து வந்துவிட்டான்’ என்ற செய்தி அடுத்த நாள் ஊர் முழுதும் பரவிவிட்டது.

‘என்ன வெள்ளிடி விழுத்த வந்திருக்கிறானோ?’ என்று ஊர்ப்பெண்கள் பரதவித்துக்கொண்டார்கள். ஆனால், அந்தோனி எந்த வெள்ளிடியும் விழுத்த முடியாது’ என்று துரைராசாவுக்குத் தெரியும்.

ஊரவர்கள் சந்திக்குச் சந்தி கூடி நின்று பயத்தில் இதே பேச்சைக் ‘குசு குசு’த்தது துரைராசாவுக்கு ‘கேந்தி’ யாயிற்ற.

தூரத்தே அந்தோனி செருமியபடி வந்துகொண்டிருந்ததைக் கவனித்த துரைராசா, ‘உந்தச் செருமல் எப்பனும் பிடிக்கேல, ஆள் ஒரு மாதிரிச் ‘செட்டுக்’காட்டிக்கொண்டு வாறார் போலக் கிடக்கு’ என்று சொல்லிய வண்ணம், வேலி ஓரமாக நிலத்தில் ஈர்க்கிலால் கீறிக் கொண்டிருந்தான்.

கூட்டத்தில் நின்ற லூயிஸ் கேட்டான்.

‘தம்பி அந்தோனி கொழும்பால எப்ப வந்தனி?’

kadalalaigal2

நக்கலாகச் சிரித்துக்கொண்டே, ‘வந்தனி போனனி’யெண்டு எங்க தரவளியளைப் பார்த்துச் சொல்லுறதுக்கு, நாங்களெல்லாம் குதிரைக் காறங்களில்லை’ என்றான் அந்தனி.

‘நீ குதிரைக்காரனில்லை. சுரண்டிப் பிழைக்கிற ஒரு பிராணியின்ர அருமை மருமோனென்டது எங்களுக்குத் தெரியும்’

துரைராசா இப்படி மயறி அடித்த மாதிரித் தூக்கி எறிந்து பேசுவான் என்று அந்தோனி எதிர்பாhக்கவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. தும்பி மீன்போல் சிலும்பிக் கொண்டான்.

இந்த இடத்தில் ‘சண்டித்தனம்’ காட்டினால் மனவலின் கதிதான் தனக்கும் கிடைக்கும் என்ற பீதியால் கோபத்தை மறைத்துக் கொண்டு மெல்ல நழுவினான்.

ஒரு வாரமாகிவிட்டது. கடலுக்கு ஒரு மனுவும் போகவில்லை. துறைக் கொட்டிற்காவலுக்கு நின்ற மார்க்குக் கிழவனும் ஊரோடு வந்துவிட்டார். துறைமுகத்திலே கம்புதடிகள், கம்பாயங்கள், வள்ளங்கள் தேடுவாரற்றுக் கிடந்தன.

பொழுது குந்தி உறையில் விழுகிற நேரம் துரைராசா ஆத்துப்பறக்க ஓடிவந்தான்.

‘அப்பா நாளை தொடங்கி தொழிலாளியளிட்ட மனவல் பகுதி வரி எடுக்கப்போறாங்களெண்டு கதையாக் கிடக்கு. நீ கேள்விப்பட்டியா?’

இதைக் கேட்ட சிமியோனப்பாவுக்கு கொண்ட லிடி முழக்கத்துடன் மேகம் பிளந்து கடல் குமுறியடிப்பது போல் நெஞ்சு கமாரிட்டது.

பொத்திக்கொண்டிருந்த வலையையும் நூலையும் அப்படியே கட்டி இறப்பில் செருகிவிட்டுத் தம்பிமுத்து வீட்டைத் தேடி நடந்தார்.

ஆனால் தம்பிமுத்து ஏலவே இந்தச் செய்தி அறிந்து சில ஆட்களோடு நடுக்குறிச்சிக்கு வந்து சேர்ந்து விட்டான்.

எல்லோரும் கடைசியாக அங்கே கூடி விட்டார்கள்.

‘நாயம் பேச ஏலாமல் மனவல் கடைசியில் பழிவேண்டத் துவங்கியிட்டான். இனி உயிர் போனாலும் ஒரு கை பாக்கிறதுதான்’ என்று கடலுறுமிபோல் கத்தினான் துரைராசா.

‘ஆனவாகில வயித்தக்கே உழைகாமல் சாகிறம். இதுக்குள்ள வரியாம் வரி. இனி ஆரைவரிஞ்சி போட்டுக் குடுக்கிறது?’ என்றுகமறினான் தம்பிமுத்து.

சிலுவைராசா அண்ணர் சொன்னார்:

‘செத்தாலும் வரி குடுக்கிறேல்லை. என்ன நடக்குதெண்டு பாப்பம்’

கூட்டத்தில் பெசிய ஒவ்வொருவரும் வரியை எதிர்த்து ஒரே குரலில் பேசுவதைக் கவனித்த சிமியோனப்பாவுக்குக் கடல் பொங்கியதுபோல் நெஞ்சினில் சந்தோஷம் புரைந்தது.

‘இப்படி உறுதியாகக் கடைசி வரை நிண்டால் கவுண் மேந்து ஏஜெண்டு வந்தாலும் எங்களை அசைக்க ஏலாது. உந்தப் புடியைக் கைவிடாதையுங்கோ’

‘அது சரி, வரி எடுக்கிறது கவுண்மேந்துவாயிருக்கேக்க, நாங்கள் எப்பிடி வரியைக்குடுக்காமலிருக்கிறது?’

‘யார் இப்படிக் கேட்டது?’ என்று எல்லோரும் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.

சூசை அண்ணரின் கூட்டாளி தம்பிப்பிள்ளை. ஆமை தலையைச் சுருக்கி இழுத்த மாதிரி மெதுவாகக் குறண்டிப் போயிருந்தான்.

‘அது எங்களுக்குத் தெரியும். நாயத்தை எடுத்துக்காட்டுவம்’

‘நாயத்தைக் கேக்காட்டி?’

‘கேக்காட்டித் தொழிலாளர்கள் எல்லாருமாச் சேர்ந்து வரி குடுக்காத இயக்கத்தை உண்டாக்கிப் போராடுவம்’

‘போராட வெளிக்கிட்டா, எக்கணம் கம்பிதான் எண்ண வேண்டி வரும்’

‘டேய் செத்தாலும் அநியாயத்தை எதிர்த்துப் போராடுறவன்தான்ரா மனுஷன்’ என்று ஆவேசமாகக் கறுமினான் துரைராசா.

இந்தக் கட்டத்தில் கூட்டத்திலே எல்லோரும் ஆரவாரித்தக் கைதட்டினதைக் கண்ட சிமியோனப்பா, ‘துரைராசா சின்னப் பொடியனென்றாலும் அவன் சொல்றதுதான் சரி’ என்று உற்சாகப்படுத்திவிட்டு, தம்பிப்பிள்ளையைப் பார்த்து அமைதியாகக் கேட்டார்:

‘தம்பிப்பிள்ளை, ஒரு பறி றாலுக்கு இருபத்தைஞ்சு சதமாகக் குறைஞ்சது நூறு கூறுக்கு உன்ர நாயப்படி எவ்வளவு தேறும், சொல்லு?’

‘இருவத்தஞ்சு ரூவாய்’

‘அப்ப ஒரு மாதத்துக்கு?’

‘எழு நூத்தியம்பது’

‘ஒரு வருஷத்துக்கு?’

‘அது பங்க பத்தாயிரத்துக்கு வரும்’

‘பத்தாயிரம் இல்லை. ஒன்பதாயிரம் போல வரும்’

‘அது சரி, இதில என்ன இருக்கு?’

‘உதென்ன கேள்வி, குத்தகை எடுத்தது ஆரெண்டு தெரியுமே?’

‘ஓம்’

‘ஆர்’

‘மனவலண்ணன்தான்’

‘இதையும் தெரிஞ்சுகொண்டே கதைச்சனி’

‘மனவல் ஆயிரம் ரூபாய்க்குத் தானே குத்தகை எடுத்தான். மிச்சம் ஆருக்கு அவனுக்குத்தானே?’

‘ஏன் உங்களை எடுக்கவேண்டாமெண்டு ஆர் மறிச்சது?’

‘தின்ன வழியில்லை. குத்தகை எடுக்க ஏலுமா?’ என்று கேட்டார் அப்பா.

தம்பிப் பிள்ளையி;ன் போக்குத் துரைராசாவுக்குத் துப்பரவாகப் பிடிக்கவில்லை.

‘ணேய் அப்பா, இவன் மனவலின்ர கையாள் இவனொட இனி என்ன பேச்சு?’ என்று துள்ளிப் பாய்ந்தான் துரைராசா. பறிக்குள்ளிருந்து வெளிக்கிட்ட கடுக்காய் நண்டுகள்போல் கூட்டத்தில் ‘கலகல’ப்பு நிலவியது.

தம்பிப்பள்ளை கூட்டத்தை விட்டு எழுந்து நடந்தான்.

அன்று ஊர் அடங்கலும் பரபரப்பாயிருந்தது. பெண்கள் நடமாட்டமும் அப்படித்தானிருந்தது.

செக்கல் பொழுதோடு அன்று இரவு ஊர் கூடித் தொழிலுக்குப் புறப்பட்டார்கள்.

பூமி விடிந்து கொண்டு வந்தது.

துறைமுகத்தை நோக்கி வள்ளங்கள் கடலைக் கிழித்து அம்மாறு போட்டச் சீறிக் கொண்டு வருகின்றன. தம்பிமுத்து தோணிக் கடையாலில் நின்று காக்கை தீவு முனங்குக்கு அணியத்தை இலக்குவைத்துக் கம்பைப் போட்டுத் தாங்கிக் கொண்டே கத்தினான்:

‘வடு நீர் வாங்கி இழுக்குது. சவளை எடுத்து ஆளுக்கு ரண்டு கை வலிச்சுவிடுங்கோ’

உடனே வாரிப் பலகையிலிருந்த துரைராசாவும் லூர்த்தையாவும் அம்பாச் சொல்லி வலிக்கத் தொடங்கி விட்டார்கள்:

‘கொண்டைலிலே மழை கறுக்க…

மழை கறுக்க

குமரி கொண்டை தள தளக்க…

தள தளக்க,

கச்சான் மழை வருகுதடா…

வருகுதடா,

மச்சான் ஊண்டிப் போடு கம்பை…

போடு கம்பை,

சுறாமீன் போல் ‘சுர்’ என்று ‘சள சள’த்து இரைந்து வேகமாகப் பாய்கிறது, தோணி. துரைராசாவுக்குக் ‘குஷி’ பிறந்துவிட்டது. ஆதலால், மடத்துக் கரைப் பூரணத்தை நினைத்து அம்பாவை இங்கிலீஷ் மெட்டில் வெளுத்து வாங்கினான்:

‘இங்கிலீசு லேடி எடி – லேடி எடி

வீடி கொண்டு வாடி பிளீஸ் – வாடி பிளீஸ்

நீயும் நானும் கூடி ஒரு – கூடி ஒரு,

‘தம்’அடிப்போம் வாடி – கூடி

வாடி – கூடி’

கூதற் கொடுகலின் விறைப்பு எடுபட்டுவிட்டது.

தம்பி முத்து வள்ளத்தைக் கரையில் தட்டவிட்டு சவளை அடங்க வைத்தபின் சிமியோனப்பாவைப் பார்த்துச் சொன்னான்:

‘அண்ணை துறைமுகத்தைக் கண் குடுத்துப்பார். இண்டைக்கு எக்கணம் ஏதண்டையிலதான் முடியும் போலகிடக்கு’.

சிமியோனப்பா துறைமுகத்தை எகிறிப் பார்த்தார். அங்கே மனவலும் மருமகன் அந்தோனியும் இரண்டு பொலிஸ்காரர்களுடன் எதையோ சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டு நிற்பது தெரிகிறது.

‘தம்பி மனவல் வரி எடுக்கப் பொலிசோட வந்திருக்கிறான்போல தெரியுது. கலவரப்படாதையுங்கோ’

துறைமுகத் தரையில் இறால் பறிக் கூறுகள் வந்து நிறைந்து விட்டன.

துரைராசா இன்னேசப் பெத்தாச்சியின் கடகத்தில் கொட்டிய ஒரு இறால், விலை கூறுதலில் நின்றது.

இன்னேசப் பெத்தாச்சியும் சலோமை ஆச்சியும் இறால் கூறுகளை விலை கூறுவதும், இறாலில் விழுகின்ற மணி இலையான்களை இறகால் கலைப்பதுமாக இருப்பதைப் பொலிஸ்காரர்கள் ‘விடுப்பு’ப் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

சங்கானைச் சின்னாச்சி ஒரு கூறு இறாலைக்கேளா விலைக்குக் கேட்டபோது சலோமையாச்சிக்குக் ‘கோள்வம்’ பற்றிக்கொண்டு வந்துவிட்டது.

வெற்றிலைக் குதம்பல் வாயைப் ‘பொழி’ச்சிட்டுத் தடுக்கை நீக்கித் தப்பிவிட்டு முத்துக் கொறித்துக்கொண்டு சொன்னா:

‘எடிய நாச்சியாரே, தாளம் பூமாதிரிப் பளபளக்கிற றாலை இந்தக் கொடிய விலை கேக்க மனம் வந்துதே. அதுகள் ரா முழுதும் தோஞ்சு விறைச்சுக் காகக் குஞ்சுகளாட்டம் கொடுக்கிக் கொண்டு நிக்குதுகள். நீர் இப்புடி எடுத்துக் கொண்டு போய் மனுஷனுக்கு நல்ல ‘உரிசை’யாய்க் காச்சிக் குடுக்க எண்ணமாக்கும்.’

‘ஆக விண்ணாணம் கொத்தாமல் தாறதெண்டாத்தா, அல்லாட்டி உன்ர சாமானை உன்னோடவைச்சிரு’

‘இதில நிண்டு கொழுத்தாடு பிடியாமல் நீர் போம். என்ர சாமான் என்னோட கிடக்கட்டு’ என்று கேலியாகச் சொல்லிவிட்டு, சலோமையாச்சி சின்னாச்சி கேட்ட விலையைத் தொட்டுக் கூறினா:

‘தார் அஞ்சு ரூவாயாம்’

‘இந்தா அஞ்சரை விடு, றாலை’

கொட்டடிச் சின்னப்பிள்ளை கேட்ட விலையோடு கடகத்தில் கை போட்டாள்.

‘தார் அஞ்சரையாம்?’

‘ஆறு தாறன் விடு’

நாவாந்துறைப் பொன்னம்மா வைத்த விலைக்குத்தான் சம்மதம் வருகிறது.

‘சரி காசை எடு’

நாவாந்துறைப் பொன்னம்மா இறால் கடகத்தைத் தூக்க முன்பே, ‘கிள்ளுறால்’ என்று ஒரு கையும், ‘அள்ளுறால்’ என்று மறு கையுமாக இரண்டு கைகள் ‘கொள்ளுறால்’ எடுத்துக்கொண்டன.

மூன்றாவது கையாக மனவலின் கை நீண்டது.

சலோமை ஆச்சிக்கு விஷயம் புரிந்துவிட்டது. ‘கடுகடு’த்தவாறே கேட்டா:

‘என்னவும் உமக்கு வேணும்?’

‘வரி’

மனவல் சிரித்தார்

இதைக் கவனித்த துரைராசா குழு முரல் மாதிரிச் சீறிக்கொண்டு சொன்னான்:

‘இஞ்ச உமக்கு வரியுமில்லை, கிரியுமில்லை’ துரைராசாவின் ஆவேசத்தைக் கண்ட சனம் ஆரவாரித்துக் கொண்டு கும்பலாகக் கூடிவிட்டது.

உடனே மனவல் கூட்டத்தை விட்டு மெதுவாக நழுவிக் கொண்டார்.

‘தம்பிமாரே, களபுளப்படாதையுங்க, மனவல் போயிட்டான்’என்ற எடுத்துச் சொன்னான் தம்பிமுத்து.

‘போ காட்டி, போ வைப்போம்’ என்றான் துரைராசா.

சற்றத் தூரத்தில் மனவல் பொலிஸ்காரர்களுடன் துறைமுகத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. சிமியோனப்பா பொடியங்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

‘சிமியோனண்ணை, பொலிஸ்காரங்கள் வாறாங்கள். கதையை நிற்பாட்டு’ என்று தம்பிமுத்து சொல்லும் போதே பொலிஸ்காரர்கள் கும்பலுக்குக் கிட்ட நெருங்கி விட்டார்கள்.

ஒரு பொலிஸ்காரன் கேட்டான்:

‘தார் இந்தச் சிமியோன்?’

‘ஏன், அது நான் தான்’

‘தம்பிமுத்து?’

‘அது நான்!’

‘ஒன்ட போர் துரைராசா, என்ன?’

‘ஓம்!’

‘ஒண்ட பேர்?’

‘சிலுவைராசா’

‘நாலு பேரும் பின்னேரம் பொலிசுக்கு வாருங்கோ’

ஒருவரும் வாய்திறந்து பேச வில்லை. ஆளையாள் முழிசிக் கொண்டு நின்றார்கள்.

‘தம்பிமுத்து, நாங்கள் என்ன ஆரையேன் ‘மேடர்’ செய்து போட்டமே பொலிசுக்கு வரமாட்டமெண்டு ஒரு சாவாச் சொல்றதுக்குப் பேந்தேன் நிண்டு முழுசிறியள்?’

வெட்டொன்று துண்டு ரண்டாகச் சொன்ன வரப்பிரகாசம் அப்பா, பொடுகு போல இருந்தாலும் அவர் மீசை அப்போது காற்றில் ‘பட படத்’து ஆடியது.

‘டேய் பண்டி, பிளடி றாஸ்கல்’ என்ற உறுக்கினான் பொலிஸ்.

‘அலோ மிஸ்டர் பொலிஸ், இதில நிக்கிற நாங்கள் ஆரும் வரி குடுக்கமாட்டம். வேணு மெண்டா எல்லாற்றை பேரையும் எழுதிக் கொண்டுபோய் வழக்கை வையும். கோட்டில பார்த்துக் கொள்ளுவம்’ என்றான் ஹோல்டிங் சிவலை ரத்தினம்.

பொலிஸ் எல்லோர் பெயரையும் பதிவு செய்து கொண்டு போய்விட்டது.

அன்று, ‘வழக்குச் செலவுக்காகப் பொது இழுப்பு வைப்பது’ என்று ஊர் கூடி முடிவெடுத்தது.

ஆனால், அடுத்த வாரம் இந்த ஊர் முழுதும் ஒரு செய்தி அடிபடத் தொடங்கியது:

‘வழக்கு வைச்சு ஆக்களை மறியலுக்கு அனுப்பினால், கட்டின குத்தகைக் காசுகையில கடிக்குமெண்டு மனவல் வழக்கை விட்டிட்டான்.’

‘சாச்சா இதுக்குள்ள ஏதோ சூழ்ச்சி இருக்க’ என்று அடித்துச் சொன்னான் சிலுவைராசா.

அப்போது ‘கூய்’ என்ற ஒரு குரல் கேட்டது.

தம்பிமுத்து வேலிக்கடப்படியில் நின்ற பார்த்தான். அசீர்வாதம், சந்தியோ, லூயிஸ் மூன்று பேரும் நிற்பது தெரிந்தது.

‘சீர் வம்பு ஒரு மாதிரி வெளிச்சிருக்கு. செக்கல் வடுப்பேந்த நீருக்கு மடத்துக்கரையால வலை கட்டிப் பிடிச்சுப் பாப்பம் எப்பன் வேளையோட வாருங்கோ’ என்றான் ஆசீர்வாதம்.

‘என்ன தங்கம்மாக்கா இண்டைக்கு வலு உசாராயிருக்கினம்?; என்று பொன்னரியம் தனது புருஷன் சந்தியோவைப் பார்த்து வாயடங்கச் சிரித்தாள். சந்தியோவும் ஆசையோட சிரித்தான். சிரிப்பில் துன்னிய சொக்கை, அறுத்த ஆமைச்சதை போல் துடித்தது.

தம்பிமுத்து வலைபறியைத் தோளில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

தங்கம்மா அவன் பின்னே தெருப்படலை வரை போய் நின்ற, புருஷன் வீதியில் மறையும்வரை இமை கொட்டாமல் பார்த்படியே நின்றாள்.

காக்கைதீவு சுடலையைத் தாண்டி வயல் எல்லை ஓரமாக எல்லோரும் கடற் துறைமுகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.

சோளகக் காற்றுப் ‘புசு புசு’த்து வீசிக்கொண்டிருந்தது.

தூரத்துப் பார்வையிலே துறைமுகத்தில் ஒரு மண்டு புகை கிளம்பிக் காற்றுச் சாய்வாக முகில் விட்டுப் போய்க்கொண்டிருப்பதைக் கவனித்த தம்பிமுத்து, ‘எட்டிவாருங்கோ, துறைக் கொட்டியில புகை மூடம் தெரியுது’ என்று உரத்துக் கத்தினான்.

கெண்டைக் கால்கள் உதறி எடுத்த தாவு ஓட்டம் துறைமுகத்தில் தான் தரித்தது.

ஏற்கனவே போன சிமியோனப்பா துறைமுக வீதியில் அந்தரப் பட்டு ஓடிக்கொண்டிருந்தார்.

அதைக் கண்ட தம்பிமுத்து குரல்கேரக் கத்தினான்.

‘டேய்; பொடியள், சிமியோனண்ணன்; மேற்கே சேரளகத்தைத் தேடி ஓடுகிறார். சுணங்காமல் அங்க முன்னா ஓடுங்கோ’

அவர்கள் அள்ளுப்பட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினார்கள்.

‘அடைக்கல மாதாவே, துறைக் கொட்டில் எரியுதடா!’

தம்பிமுத்து குமுறிக்கொண்டு வலை பறியை இறக்கி வைத்து விட்டுக் குடல் தெறிக்க ஓடினான்.

சோளகக் காற்றுச் சீறியடித்தது: கடல் அலைகள் குமுறிக் கெம்பின.

குறைக் கொட்டில் விளாசி எரிந்து கொண்டிருந்தது.

அப்போது துரைராசா நெஞ்சு விம்மிக் கொண்டு கத்தினான்:

அங்க பாருங்கோ, தம்பிப்பிள்ளை நெருப்பு வைச்சுப்போட்டு வயலுக்கால விழுந்து ஓடுறான். அவனைப் புடியுங்கோ’

சிமியோனப்பா கேருந் தொனியில் சொன்ன பதில் உடைப்பெடுத்த ஆறுபோல் கமாரிட்டது.

‘மக்காள், அஞ்சாதையுங்கோ. அவன் இந்த நெருப்பைக் கொட்டிலுக்கு வைக்கேல, இந்த ஊர் ஏழைச் சனத்தின்ர நெஞ்சில வைச்சிட்டு ஓடுறான். இனி நீங்கள் பதற வேண்டாம். சுரண்டினவனை அழிக்க ஆயத்தம் செய்யவேணும்.

தம்பிமுத்து கண் எறிந்து கடலைப் பார்த்தான்.

கீலங்களாகப் பிளக்கப்பட்ட வள்ளங்கள். கடற் சாதாளையோடு சங்கமித்துக் கரையில் ஒதுங்குண்டு கிடந்தன. உடனே கடலைத் தாவி ஓடினான்.

கால்களை அடி எடுத்து வைத்தபோது அவன் குதிக்காலில் ஏதோ ‘நறுக்’ கிட்டது. கணவாய் போல் சொண்டுகளைக் கோணி, சடலத்தைக் கூனிக் காலைத்தூக்;கிப் பார்த்தான்.

குதிக்காலில் வீதுறு ஓடு குத்திட்டு நின்று இரத்தப் பெருக்கு எடுத்தது.

‘சிமியோனண்ணை, மனவல் கடலுக்கை போத்தல் ஓடுகளையும் போட்டிருக்கிறான்டாண்ணே’ என்று வெம்பிக் குரல் வைத்துக்கொண்டே, அந்த வீதுறு ஓட்டை இடுங்கி எடுத்தான்.

இரத்தம் பிறிட்டுச் சீறியது.

‘அண்ணே, இந்த ரத்தம் சாட்சியாச் சொல்றன்: எங்களுக்கு இந்த மாதிரி அட்டுழியஞ் செய்தவனை இனிக் கடைசிவரை விட்டு வைக்கக் கூடாது’

சிமியோனப்பா தம்பி முத்துவின் முதுகில் தட்டினார்.

தம்பிமுத்து நீ சொன்னது கட்டாயம் நடக்கத்தான் போகுது. தொழிலாளியருக்க இருந்து சூழ்ச்சி செய்தவனும்போயிட்டான் கடைசியில நாங்கள் வெற்றிக்கொடி நாட்டுறது நிச்சயம்!

அப்போது கடல் கொந்தளித்துச் சிறியது. அலைகள் அம்மாறு போட்டுக் குமுறியடித்தக்கொண்டிருந்தன.

தொழிலாளர்களின் அந்த நெஞ்சுகளும் குமுறிக்கொண்டேயிருந்தன.

– அஞ்சலி மாத சஞ்சிகை – மார்ச் 1971 – பிரபல எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர் அவர்களின் சிந்தனையை நிறுத்திய 25ஆவது வருட நினைவு தினத்தையொட்டி (29.08.1926 – 08.12.1995)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *