ஓர் இளைஞனின் புன்னகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2022
பார்வையிட்டோர்: 6,171 
 

நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில ஏழு மணிக்கு அவர் வீட்டில கொண்டாடிட்டு கிளம்பிடுவார். அதுக்குள்ள பாத்திட்டு ஒரு ஸ்டேட்மண்ட் வாங்கிடுங்க. போட்டோ நிறைய எடுக்கணும்.”

பிறந்த நாள் கொண்டாடும் தலைவர் அரசியல்வாதி மட்டுமல்ல. நிருபர் கலாதரன் வேலை பார்க்கும் பத்திரிகையின் புதிய முதலாளியும் அவர்தான். ஆகவே அந்தக் கோரிக்கையை இலேசாக எடுத்துக்கொள்ள முடியாது.

குளித்துச் சாப்பிட்டு மோட்டார் சைக்கிளைக் கிளப்பி பிரதான சாலைக்கு வருவதற்குள் மணி 6.40. இருபது நிமிடங்களுக்குள் தலைவர் வீட்டுக்குப் போக வேண்டும். போக்குவரத்து நெரிசலில் சாலையில் புகையும் சூடும் பறக்கிறது. வண்டியோட்டிகள் முகங்கள் கோபத்தால் சிவந்து கிடக்கின்றன. இடையில் புகுந்து மோட்டார் சைக்கிளில் முந்துபவர்களை எரிச்சலோடு பார்க்கிறார்கள்.

கோபமும் எரிச்சலும் நகர வாழ்க்கையோடு கூடப் பிறந்தவை போலிருக்கிறது. காலையில் கண் விழித்து சாலையில் கால் வைத்தவுடனேயே அது தொடங்கிவிடுகிறது. விலைகள் ஏறிவிட்டன. என்ன பொருள் வாங்கினாலும் ஜி.எஸ்.டி. என்று 6% பிடுங்கிக்கொள்கிறார்கள். வேலை செய்யும் பத்திரிகையில் சம்பளத்தை 6% கூட்டிக் கொடுங்கள் என்று கேட்க முடியவில்லை. ஏற்கனவே கொடுத்து வந்த டாக்ஸி செலவையும் நிறுத்திவிட்டார்கள். புதிய நிர்வாகம் வந்ததிலிருந்து எல்லாச் சம்பளமும் தாமதம் வேறு. ஒரு மாதம் தாமதமாகக் கூடத் தருகிறார்கள். எல்லாம் கேட்டால் பத்திரிகை நட்டத்தில் ஓடுகிறதாம். ஏன் நட்டத்தில் ஓடாது? புதிய முதலாளி ஆளும் கட்சிக்கு ஆதரவானஅரசியல்வாதி. அவருடைய புகழ் பாடும் பத்திரிகையாக அதை மாற்றிவிட்டார். அதனால் வாங்கிப் படிப்பவர்கள் தொகை குறைந்து விட்டது. பொதுவாகவே ஆளும் கட்சிக்கு ஆதரவான பத்திரிகைகள் வாங்குவோர் குறைந்துவிட்டார்கள். மலாய், ஆங்கிலப் பத்திரிகைகள் கூடத் தடுமாறுகின்றன. விளம்பரங்கள் வருவதும் குறைந்து விட்டது.

மரண அறிவிப்பும் கருமாதியும்தான் இப்போது தமிழ்ப் பத்திரிகைகளுக்கு முக்கிய வருமானம். செத்தவர்கள் வாழ்க!

எடிட்டர் கூட இப்போதெல்லாம் அலுவலகத்துக்கு வரும்போதே கோபத்தோடும் எரிச்சலோடும்தான் வருகிறார். அவருக்கும் சம்பளப் பிரச்சினைதான். ஒரு மாதம் சம்பளம் வரவில்லையென்றால் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்தான் எப்படிச் சமாளிப்பார்.

ஆனால் எடிட்டருக்கு உள்ள பிரச்சினைகள் இன்னும் பெரியவை.

“என்ன மேன் எளுதுறாங்க செய்தி உன் ஆளுங்க? கொஞ்சம் உறைப்பு வேண்டாம்? நான் எதுக்காக இந்தப் பத்திரிகைய இவ்வளவு பணம் போட்டு வாங்கினேன்? சும்மா பொளுதுபோக்கவா?”

“சார்! முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு சாதகமாத்தான் எழுதுறோம். ஆனா பத்திரிகைன்னா கொஞ்சம் நடுநிலையும் இருக்கணும். அப்பத்தான் அதில ஒரு நம்பகத் தன்மை வரும்!”

“என்னா அது நம்பகத் தன்மை?”

“அதுதான் சார், கிரெடிபிலிட்டி”

“கிரெடிபிலிட்டி, மை ஃபூட்! எந்தப் பத்திரிகையிலிருக்கு கிரெடிபிலிட்டி? வாசகனை நம்ம பக்கம் திருப்புறதுக்காகத்தானய்யா பத்திரிகை? நாம் சொல்றத அவன் நம்பணும். அதுதான் கிரெடிபிலிட்டி! அத நாம்தான் உற்பத்தி பண்ணனும். பாருங்க அந்த ஆளு பத்திரிகையில இதுக்கின்னே ரிட்டையரான ஒரு பழைய ஆள இழுத்துப்போட்டு வச்சிருக்காங்க! இல்லாததெல்லாத்தையும் திரிச்சி எவ்வளவு அழகான தமிழ்ல எழுதுறாரு, பார்த்தீங்களா?”

“வாசகர்கள் அத நம்பறதில்ல சார். அவங்களுக்கு அந்த மொழி ஒரு கிளர்ச்சிக்காக. அதுக்காகத்தான் வாங்குறாங்க!

“வாங்குறாங்கள்ள? படிக்கிறாங்கள்ள? அதுதான் இம்போர்டண்ட். படிச்சிக்கிட்டே இருந்தா நம்புவாங்க. அப்படி எழுதக் கத்துக்கிங்க எல்லாரும். இல்லன்னா, அதே ஆள கூப்பிட்டு இன்னொரு ஐநூறு வெள்ளி சம்பளத்தக் கூட்டிக் கொடுத்து உங்க எடத்தில கொண்டு உக்கார வச்சிடுவேன்!”

எடிட்டர் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு நிற்பார். அப்புறம் ஏன் காலையிலேயே கோபமும் எரிச்சலும் வராமல் இருக்கும்?

புதிய உரிமையாளர் வந்ததிலிருந்து அவரைத் துரத்திக்கொண்டு ஓடுவதே கலாதரன் போன்ற நிருபர்களுக்கு வேலையாகப் போய்விட்டது. அவர் வாய்ச் சொற்களைப் பொன்மொழியாக்கிப் போடவேண்டியிருந்தது. அவருக்கோ தமிழ் சரியாக வராது. அவர் சொல்வதைத் திருத்தி, கூட்டிக் குறைத்து மெருகூட்டிப் போட்டால்தான் தமிழ் போல வரும். அதையும் கேள்வி கேட்பார். “இதுக்கு என்னா மேன் மீனிங்?” என்று ஒவ்வொரு நாளும் கேட்பார். இரண்டாம் வகுப்பு மாணவனுக்குச் சொல்வது போல் சொல்ல வேண்டும்.”ஏன் இவ்வளவு டிஃபிகல்ட் வார்த்தையெல்லாம் போட்றிங்க? யாருக்குப் புரியும்?”

ஏற்கனவே பத்திரிக்கையின் தமிழ் அடிமட்டத்தில்தான் இருக்கிறது. இன்னும் எளிமைப் படுத்தினால் பள்ளிக்கூடப் பிள்ளைகள் படிக்கும் பத்திரிகையாகிப் போய்விடும். ஆனால் தமிழ் தெரியாத தலைவர் தம்மையே அளவுகோலாக வைத்துப் பேசுகிறார்.

அவருக்கு அரசியலில் மலை போல் இலக்குகள் உண்டு. ஆளும் கட்சித் தலைவர்களுக்கு அணுக்கமாக இருந்து, இந்தியர்களின் ஓட்டுக்களையெல்லாம் திரட்டும் தகுதி தனக்கு மட்டுமே உண்டு என்று நம்பவைத்துக் காசு பார்த்துக்கொண்டிருந்தார். ஆளும் கூட்டணியின் பழமையான இந்தியர் கட்சி உட்கட்சிச் சண்டையில் சீரழிந்து கிடப்பதால் இப்போது பிரதமரை அணுகி நான்தான் இந்தியர் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ள பல பேர் தோன்றியிருந்தார்கள். அவர்களுக்குத் தகுதியிருக்கிறது என்று காட்டிக்கொள்ள ஆளுக்கொரு தமிழ்ப் பத்திரிகையும் கையில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.

“இந்த சிறிய சமுகத்துக்கு இத்தனை கட்சிகளும் பத்திரிகைகளும் தேவையா?” என ஆளும் கட்சியே கேலி பண்ணும் அளவுக்கு கட்சிகளும் பத்திரிகைகளும் தோன்றியிருந்தன. ஆனாலும் இதில் எந்தக் கட்சியின் மேல் பணம் கட்டுவது என்று தெரியாமல் எல்லாக் கட்சிகளின் மீதும் பணம் கட்டிக்கொண்டிருந்தார் பிரதமர். அவருக்கென்ன? அவருக்கு எண்ணைய்க் கிணறு நாடுகளிலிருந்து பில்லியன் கணக்கில் நன்கொடைகள் வந்துகொண்டிருந்தன. எண்ணெய்ப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துக் கொண்டிருந்தார். தன் சமுகம் தன்னைக் காப்பாற்றாது என்று நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் ஓர் ஐந்தாறு விழுக்காட்டு வாக்குகள் இந்த வக்கற்ற இந்திய சமுகத்திடமிருந்து வந்தால் தம் கட்சி பிழைக்கலாம் என்ற நப்பாசையில் ‘நம்பிக்கெய், நம்பிக்கெய்’ என்று முழங்கிக்கொண்டிருந்தார்.

கலாதரன் தலைவர் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தார். இன்னும் பத்து நிமிடங்களில் போய்விடலாம். ஆனால் இப்படி அரக்கப்பரக்கப் போவதும் அங்கே காத்துக்கொண்டு தவம் கிடப்பதுவும் வந்தவுடன் அவர் சொல்லப்போகும் பொன் மொழிகளை எழுதிக்கோண்டு போவதும் அவருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தன.

எஸ்.பி.எம். முடித்துவிட்டு இரண்டாம் கிரேட் வாங்கி, தமிழில் உள்ள ஆர்வத்தால் அதில் மட்டும் ‘ஏ’ வாங்கி, மேல்படிப்புக்குப் போக குடும்ப நிலைமை அனுமதிக்காத நிலையில் வார மாத இதழ்களுக்குக் கதைகளும் கட்டுரைகளும் எழுதிப் பேர் வாங்கிய உற்சாகத்தில் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து அதுவே வாழ்க்கையாகி இப்போது பத்தாண்டுகள் ஓடிவிட்டன. பல பத்திரிகைகளில் இருந்து புரண்டாகி விட்டது. இப்போது இந்தப் பத்திரிகையில் மூன்றாண்டுகள். அதற்குள் பத்திரிகை மூன்று கைகள் மாறிவிட்டது. எல்லாம் அரசியல்வாதிகள்தான். ஆளாளுக்கு வேறு தொழிலும் வியாபாரமும் செய்து பணம் நிறையச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். அது போதவில்லை. அரசியல் அதிகாரமும் பதவிகளும் வேண்டும். அவர்களுக்குத் தமிழார்வம் ஏதும் இல்லை. ஆனால் தங்கள் தலைமைத்துவத்திற்காகக் குதிரை ஏற வசதியான ‘தமிழர்கள்’ சமுகத்தின் மேல் ஆர்வம் உண்டு. அதற்கு இடம் கொடுப்பது போல் இந்தத் தமிழ்ச் சமுகம் துண்டு துண்டாகப் பிளவு பட்டுக் கிடக்கிறது. பல குதிரைகள். பல சேணங்கள். இதைப் பார்க்கப் பார்க்க அரசியலில் புறம்போக்கில் இருப்பவர்களுக்கெல்லாம் தலைவர்கள் ஆகவேண்டும் என்ற ஆசை பொங்கி நிற்கிறது.

***

ஏழு ஐந்துக்கு தலைவர் வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் தலைவர் இன்னும் கீழே வரவில்லை. அந்தக் காலையிலேயே கட்சித் தொண்டர்கள் காத்திருந்தார்கள். மாலைகளும் கேக்கும் பொன்னாடைகளும் காத்துக்கொண்டிருந்தன.

அவரவர்களுக்குப் பல கோரிக்கைகள். பல காரியங்கள் ஆகவேண்டியிருந்தன. ஒருவருக்குக் கட்சிக் கிளையொன்று அமைக்க அனுமதி வேண்டும். தன் மச்சானுக்கு அதில் தலைமைப் பதவி வேண்டும். அவருக்குச் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. இப்போதுள்ள இந்தியர் கட்சி பலவீனமாக இருப்பதால், நம்ம கட்சி கிளையமைத்தால் பழைய கட்சியை உடைக்கலாம். பிரதமரிடம் மானியம் பெற்றுக் கொடுத்தால் போதும். இந்தியர் ஓட்டுக்களைத் திரட்டித் தருவோம். ‘தலைவர்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க!’ என்று கலாதரனைக் கேட்டுக்கொண்டார். கலாதரன் தலையாட்டிவிட்டுச் சும்மா இருந்தார்.

கலாதரனுடைய கைப்பேசி சிணுங்கியது. அழைத்தவர் பேரைப் பார்த்தார். சிவசாமி. சமுகத் தொண்டர். போலித் தொண்டரல்ல. உண்மைத் தொண்டர். தொண்டு செய்து வாழ்வைப் பறிகொடுத்தவர். ஆனால் சேவையை விடவில்லை.

“வணக்கம் சிவா. என்ன விஷயம்?” என்றார் கலாதரன்.

“வணக்கம் கலா! இந்தக் கம்போங் சிமி விஷயம் தெரியும்தானே?”

“ஆமாம் கம்போங் சிமி. நம்ம இந்திய ஜனங்கள வெளியேத்த நோட்டீஸ் கொடுத்திருக்காங்கள, அவங்கதானே?”

“ஆமா கலா. ஏற்கனவே பலமுறை வீடுகள இடிக்க அந்த மேம்பாட்டு நிறுவனம் வந்தப்ப தடுத்து நிறுத்தியிருக்கிறோம். எல்லாருமே நம்ம இந்திய மக்கள். இருபது வருஷங்களுக்கு மேலா அங்க குடியிருக்காங்க. குடியிருக்கிற ஜனங்களுக்கு மாற்று இடம் கொடுக்கிறதா மாநில அரசே கடிதம் கொடுத்திருக்கு. ஆனா அது ஒண்ணும் நடக்கில. இழுத்தடிக்கிறாங்க. இன்னைக்கு இடிக்க வர்ராங்களாம். இன்னும் பத்தே நிமிஷத்தில இயந்திரங்களோட மாநகர் காவல் படையும் வருதாம். அநியாயம் கலாதரன். நான் தொண்டர்களோட போறேன் இப்ப. நீங்க கேமராவோட வாங்க கலா!” என்றார்.

இந்த விஷயத்துக்கு அவர் பத்திரிகை மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறது. அது முன்னர் இருந்த உரிமையாளர் காலத்தில். இப்போதுள்ள உரிமையாளர் மாநகர மன்றத்துடன் உறவுள்ளவர். அவருக்கு அங்கு சில பதவிகளும் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆகவே இந்த கம்போங் சிமி விவகாரத்தில் அதிகம் தலையிட வேண்டாமெனச் சொல்லி வைத்திருக்கிறார்.

“சிவா, இப்ப முடியாது. தலைவர் வீட்டில இருக்கேன். இன்னைக்கு அவருக்குப் பிறந்த நாள். அத நாந்தான் கவர் பண்ணனும். இப்ப நான் வர முடியாதே!”

“இப்படிச் சொன்னா எப்படி கலாதரன்? உங்க பத்திரிகைதான் இந்த விவகாரத்தில இத்தனை நாள் ஆதரவா இருந்தாங்க. குறிப்பா நீங்களும் உங்க எடிட்டரும். மற்ற பத்திரிகைகளுக்கு இதில் அக்கறையே இல்ல. பத்திரிகை ஆதரவு இல்லன்னா இந்த மக்களக் காப்பாத்த முடியாது கலாதரன். உங்க தலைவர் புதுசா என்ன சொல்லப் போறாரு? எல்லாம் எப்போதும் சொல்கிற அரசாங்க ஆதரவுச் சுலோகம்தான! இங்க வாங்க. உண்மையான இந்திய ஜனங்கள் சேதி இங்கதான் இருக்கு. அவங்க வாழ்க்கைய புல்டோசர் வச்சிப் பொதைக்கப் போறாங்க!”

அவர் சொல்வதில் உள்ள உண்மை கலாதரனுக்குப் புரிந்தது. தலைவர் அன்றாட அரசாங்க ஆதரவுச் செய்திகளைத்தான் வெவ்வேறு சொற்களில் சொல்லுவார். சில சமயங்களில் “நீயே எழுதிக்கைய்யா!” என்று விட்டுவிடுவதும் உண்டு. அதற்காகவா இங்கு காத்துக் கிடக்க வேண்டும்? மக்கள் சுரண்டப்படும் இடங்களிலில்க்தான் பத்திரிகையாளன் இருக்க வேண்டும். அங்குதான் அவன் எழுத்து உயிர்பெறுகிறது. அங்குதான் அவன் வீரனாகிறான். இந்தப் பிறந்தநாள் விழாவில் அவன் அடிமை. எழுத்துக் கூலி.

“சிவா! நான் முடிஞ்சதச் செய்றேன். நீங்க போங்க!” என்று கைப்பேசியை முடக்கினார். எழுந்து தன் மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தவாறே ஆசிரியர் எண்ணைக் கூப்பிட்டார். ஆசிரியர் வீட்டில்தான் இருப்பார். இரவு வெகுநேரம் இருந்து வேலை செய்ததால் காலையில்தான் கொஞ்சம் அலுத்துத் தூங்குவார். ஆனால் அதை யோசித்துப் பயனில்லை.

ஆசிரியரின் கைப்பேசி அடித்து அடித்து அலுத்து ஒய்ந்தது. கலாதரன் கைப்பேசியைப் பைக்குள் வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை உதைத்து எழுப்பினார். கைப்பேசி அடித்தது. ஆசிரியர்.

“என்ன கலாதரன் காலையிலேயே?”

“மன்னிக்கணும் சார். நான் தலைவர் வீட்டிலதான் இவ்வளவு நேரம் இருந்தேன். அவர் இன்னும் இறங்கில. இதுக்கிடையில நம்ம கம்போங் சிமியில ஜனங்கள் வீடுகள உடைக்க புல்டோசர் வருதாம். சிவசாமி போன் பண்ணினார். நான் அங்க போறதா முடிவு பண்ணிப் புறப்பட்டுட்டேன்!”

ஆசிரியர் பதைத்துப் போனார். “ஐயோ, என்னப்பா இப்படிப் பண்ணிட்ட? அவரு நேத்து படிச்சுப் படிச்சு சொன்னாரே! பிறந்த நாளாச்சே! முதல் பக்கத்தில செய்தி வரணுமே! அப்புறம் ரொம்ப கோவப்படுவாரே!”

கலாதரன் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார். அப்புறம் பேசினார். “நீங்க சொல்லுங்க சார். நமக்கு எது முக்கியம்? நீங்க சொல்ற மாதிரி நான் செய்றேன்!”

“வேற நிருபர ஏற்பாடு செய்ய முடியாதா?”

“இப்ப நேரம் இல்ல சார். இன்னும் பத்து நிமிஷத்தில புல்டோசர் அங்க இறங்கப் போவுது. இன்னொரு ஆள ஏற்பாடு பன்ணி அனுப்புறதுக்குள்ள நிலைமை கைமீறிப் போயிடும்!”

ஆசிரியர் பெருமூச்சு விடுவது கேட்டது. அப்புறம் பேசினார். “ம்… சரி. நீ கம்போங் சிமிக்கே போ. என்ன பிரச்சினை வந்தாலும் பிறகு பாத்துக்குவோம்!”

***

மறுநாள் ஆசிரியர் காலையிலேயே அலுவலகம் வந்து காத்திருந்தார். கலாதரனும் வந்திருந்தார். இருவருக்கும் அன்று காலை அலுவலகத்தில் இருக்க வேண்டுமென முதலாளி உத்தரவு.

அன்றைய நாளிதழ் மேசையில் கிடந்தது. “கம்போங் சிமி வீடுகள் பகுதி உடைப்பு. தடுத்தது மக்கள் அலை” என்ற தலைப்பில் கலாதரனின் படங்கள் செய்தியுடன் முதல் பக்கத்தில் வந்திருந்தது.

குடியிருப்புவாசிகளும் சிவசாமியின் தலைமையில் அவர் கொண்டுவந்திருந்த தொண்டர்களும் புல்டோசரின் முன் அணிவகுத்துப் படுத்திருந்தார்கள். மாநகர் மன்றக் காவல் படை சீருடை அணிந்து அணிவகுத்துச் செயலற்று நின்றிருந்தது. அடுத்தடுத்த படங்களில் எதிர்க் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சச்சரவில் ஈடுபட்டிருந்தார்கள். ஒன்றிரண்டு வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டிருந்தன.

9 மணிக்குத் தலைவர் படியேறி அலுவலகத்துக்கு வந்தார். அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருந்தது. ஆசிரியர் நின்றிருக்க அவர் நாற்காலியில் தலைவர் அமர்ந்தார்.

“பாரு மேன்! இதுவே ராணுவமா இருந்தா உங்க ரெண்டு பேரையும் கோர்ட் மார்ஷியல் பண்ணி சுட்டுத் தள்ளியிருப்பேன்!’

பேசாமல் இருந்தார்கள்.

“யாருடைய பணத்தில இந்த பத்திரிகை நடக்குது மேன்? யார் உங்களுக்குச் சம்பளம் தர்ரது? கொஞ்சமாவது லொயல்டி வேணாம்?”

மௌனம்.

“சொல்லு மேன்!”

ஆசிரியர் தலை தூக்கிப் பார்த்தார். “நாங்கள் விசுவாசம் உள்ளவங்கதான் சார்!” என்றார்.

“இதுவா விசுவாசம்? இந்த கம்போங் சிமி விவகாரத்தில தலையிட வேணாம்னு சொல்லியிருந்தேன். அதுவும் என் பிறந்த நாள் அன்னைக்கு அதை விட்டுட்டு அங்கே போய் இத்தன பெரிசு படுத்தியிருக்கிங்க! என் காலுக்குக் கீழே இருக்கிற கார்பெட்ட இழுத்து என்னை கவிக்குறதுக்குப் பேர் விசுவாசமா? இல்ல மேன். அதுக்குப் பேர் துரோகம்.”

கலாதரன் மனதுக்குள் நினைத்தார். சில பத்திரிகை ஆசிரியர்களுக்கு ‘டத்தோ’ பட்டம் கிடைக்கிறது. இங்கேயோ துரோகப் பட்டம்தான் கிடைக்கிறது.

ஆசிரியர் மீண்டும் குரலை உயர்த்தாமல் பேசினார். “அதுக்குப் பேர் விசுவாசம்தான் சார்! ஆனால் விசுவாசம் உங்களுக்கல்ல. உங்க அற்ப முதலீட்டுக்கல்ல. இந்தப் பத்திரிகையையும் அதில் உழைக்கிற எங்களையும் நம்பியிருக்கிற சமுகத்துக்கு!”

கலாதரன் மிகப் பெருமிதத்துடன் ஆசிரியரை ஏறிட்டுப் பார்த்தார். அவர் இதழ்களில் ஒரு சின்னப் புன்னகை மலர்ந்தது.

தலைவருக்கு மூசுமூசுவென்று இளைத்தது. கொஞ்ச நேரம் தரையையும் கொஞ்ச நேரம் சீலிங்கையும் பார்த்தார். அப்புறம் பேசினார்: “இதோ பாரு மேன்! இன்னைக்குக் காலையில எந்திருச்ச போது இந்த நிருபர் கலாதரனை சீட்டுக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்ப வேணும்கிற முடிவோட வந்தேன். ஆனா இப்பத்தான் தெரியுது. இவன் சின்னவன். இந்தத் துரோகத்துக்குக் காரணம் இவன் இல்ல. நீதான் ஏவிவிட்டவன். ஆகவே…!”

ஆசிரியர் தன் மேசை டிராவரைத் திறந்து கைவிட்டு ஓர் உரையை எடுத்தார். “உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் சார்! இதோ இருக்கு வேலை விலகல் கடிதம்!”

கொஞ்சம் அதிர்ச்சியடைந்திருந்தாலும் உரையைக் கைநீட்டி வாங்கினார். அதனைத் திறக்காமலேயே மேசை மேல் வீசினார்.

“ம்… ரொம்ப ரோஷக்காரன் இல்ல! சரி மேன். போ. காச விட்டெறிஞ்சா உன் நாக்காலியில உக்கார்ரதுக்கு பத்து பேர் வருவாங்க! நீ தெருவிலதான் நிக்கப் போற! வேற எந்தப் பத்திரிகை உன்னை வேலைக்கு எடுக்கும்னு பார்க்கிறேன்.”

“உங்ககிட்ட வேல செய்றத விடத் தெருவில நிக்கிறது மேல்தான் சார். தெருதான் ஒரு பத்திரிகைக்காரனோட தாய் வீடு. அங்கிருந்துதான் வரும் செய்திச் சீதனங்கள்!”

“ஓ அவ்வளவு திமிரா? உனக்கு ஒரு காசு நான் குடுக்க மாட்டேன். சம்பள பாக்கியெல்லாம் கிடையாது. கெட் அவுட்!”

“சம்பள பாக்கியையும் இழப்பீட்டையும் சட்டப்படி எப்படி வாங்கிக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும். இந்த நாட்டில இன்னமும் சட்டத்துக்குக் கொஞ்சம் மதிப்பு மிச்சம் இருக்கு. நீதி மொத்தமா அழிஞ்சு போகல! நாங்க பாத்துக்குவோம்!”

தலைவர் கலாதரனைப் பார்த்து முறைத்தார். “அப்புறம் நீ மட்டும் ஏன் மேன் நிக்கிற? உனக்கு ரோஷம் இருந்தா நீயும் ஒரு ராஜினாமா கொடுத்திட்டுப் போக வேண்டியதுதான?” என்றார்.

கலாதரன் அவரை ஏறிட்டு நோக்கினார். “நீங்க ஆசிரியர் கொடுத்த கவரப் பிரிச்சிப் படிச்சிங்கன்னா உங்களுக்கு விவரம் தெரியும்!” என்றார்.

அவரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு உரையைப் பிரித்தார் தலைவர். ஒரு பிரபல வழக்கறிஞர் நிறுவனம் தயாரித்துத் தந்திருந்த வேலை விலகல், உரிமைகள் கோறல் கடிதத்தில் ஆசிரியரும் அதன் கீழ் நிருபர்களும் அலுவலர்களும் அச்சுப் பணியாளர்களும் வரிசையாகக் கையெழுத்துப் போட்டிருந்தார்கள்.

“என்ன மேன் இது? என்ன இது?” என்றார்.

“நாங்க அத்தனை பேரும் விலகிக்கிறோம் சார். நீங்க எங்களுக்குச் சேர வேண்டிய பாக்கிகளைக் கொடுத்திட்டு உங்களுக்கு விருப்பமான வாடகை ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி நடத்திக்கலாம்!’ என்றார்.

“தெருவில நிப்பிங்க மேன்! பிச்சை எடுப்பிங்க!” கத்தினார்.

“அப்படித்தான் மிந்தி ஒரு இளைஞனை ஒரு முதலாளி தெருவில் நிறுத்தினார். பின்னால் அவன்தான் இந்த நாட்டில தமிழ்ப் பத்திரிகைகளோட சக்தி என்னென்னு காட்டினான். அவனுடைய பட்டறையில புடம் போடப்பட்ட பலர் இன்னமும் இருக்கிறோம். அவனுடைய வழியில ஒரு புதிய சமுதாயப் பத்திரிகைய ஆரம்பிக்கப் போறோம்! ஏற்கனவே லைசன்ஸ் எல்லாம் எடுத்துத்தான் வச்சிருக்கோம்”

ஆசிரியர் கலாதரனின் கையைப் பற்றிக்கொண்டு வெளியில் நடந்தார். அந்தக் கையின் இறுக்கத்தில் கட்டுப்படுவது கலாதரனுக்குச் சம்மதமாகவே இருந்தது.

வெளியில் அலுவலகத்தின் முன் ஒரு கூட்டம் கூடியிருந்தது. அதில் சென்று இருவரும் சேர்ந்து கொண்டார்கள். கலாதரன் தலைநிமிர்ந்து பார்த்தபோது பத்திரிகை அலுவலக முகப்பு பேனரிலிருந்து அந்த இளைஞர் புன்னகை புரிந்துகொண்டிருந்தார்.

– 2015 டிசம்பர் ‘கணையாழி’ மலேசியச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *